Pages

Friday, March 27, 2009

வாழ்க்கைத் தடம் இப்படி மாறுமென....


வாழ்க்கைத் தடம் இப்படி மாறுமென நான் கனவில் கூட நினைத்தும் பார்த்ததில்லை ஆனால் திரும்பிப்பார்க்கும் போது நான் கடந்து வந்த பாதை மிகவும் புதிரானது மட்டுமல்ல சுவாரசியமானதாகவிருக்கின்றது .
பாடசாலைக்காலத்தில் எத்தனையெத்தனையோ மாணவர்கள் என்னிலும் மிகுந்த அறிவுபடைத்தவர்களாய் தமிழ் மொழியில் சிறந்துவிளங்கினர் பலரை நான் பார்த்து வியந்திருக்கின்றேன் அவர்களோடு பேசவேண்டும் என்று ஆவல்கொண்டிருக்கின்றேன் அவர்களோடு பழக வேண்டும் என ஏங்கியிருக்கின்றேன்.

ஆனால் கால ஓட்டத்தில் பலர் இருந்த இடம்தெரியாமல் அடையாளத்தை தொலைத்துவிட்டதை கண்டு உண்மையாய் கவலை கொண்டிருக்கின்றேன் மேலும் சிலர் பொருளாதார சுகங்களுக்காக தமது திறமைகளே அடகுவைத்து துறைகளை மாற்றிக்கொண்டதையும் அவதானித்திருக்கின்றேன் .

தமிழ் என்றும் மக்களென்றும் பாடசாலைகளில் பறைதட்டியவர்கள் மக்களுக்கு சேவையாற்ற மிகவும் தேவைமிக்க காலகட்டத்தில் பசுமை வேண்டி வெளிநாடுகளில் புகலிடம் தேடிக்கொண்டதையும் குறிப்பிட்டே ஆகவேண்டும் ( உயிர் அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் தஞ்சமடைந்தோரை இங்கே சுட்டிக்காட்டவில்லை ).

ஒரு காலகட்டத்தில் வெளிநாட்டுக்கு சென்றே ஆகவேண்டும் என வெறியாயிருந்த என் வாழ்வோ எப்படி மாறிப்போனதென நினைக்கும் போது இறைவனின் சித்தம் என்பது இதுதானோ என எண்ணத்தோன்றுகின்றது .

மாபெரும் ஆற்றல் படைத்தவர்களெல்லாம் மாற்றுத்துறைகளை நாடிச்சென்றுவிட்டநிலையில் பாமரனான என்னை இறைவன் தமிழ் மக்கள் தம் வரலாற்றில் மிகுந்த இன்னல்களை அனுபவிக்கும் காலகட்டத்தில் தனித்துவமான ஊடகத்துறை பணியாற்ற தேர்ந்தெடுத்தமையை எண்ணி இறைவனுக்கு நன்றி நவில்கின்றேன் .
தனித்துவம் என்கின்ற போது நான் ஏனைய ஊடகவியலாளர்களுக்கு மேலானவன் என்று அர்த்தம் கொண்டு கூறவில்லை மாறாக மிகவும் நெருக்கடியான இந்தக்காலப்பகுதியில் இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கும் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களுக்கும் ஏககாலத்தில் தொலைக்காட்சி செய்தியாளனாகவும் பத்திரிகை எழுத்தாளராகவும் பணியாற்றுகின்ற பாக்கியத்தையே தனித்துவமான ஊடகத்துறைப்பணி என இங்கே நான் குறிப்பிடுகின்றேன் .
இப்படியாக என் ஊடகத்துறைப்பணி தேடலுடன் தொடர்ந்துகொண்டிருக்கின்றது

தனிப்பட்ட வாழ்வில் எனது தாயின் அன்பும் ஆதரவும் ஊக்கமுமே இந்த அளவிற்கு என்னை மனிதனாக ஆக்கியிருக்கின்றது எனது தாய் ஏனைய மக்கள் தொடர்பில் காண்பிக்கும் பாசமும் பரிவுமே என்னை எமது மக்களுக்காக சேவைசெய்ய ஊந்தியது என்றால் மிகையாகாது எந்தச்சூழ்நிலையிலும் கலங்கிடாத என்தாயவளின் அஞ்சா நெஞ்சம் சந்தேகமில்லாத இறைபக்தி இவை என் வாழ்க்கையை செம்மைப்படுத்தியதில் முக்கிய பங்காற்றத்தவறவில்லை
என் தந்தை இறந்து பல ஆண்டுகள் கடந்து விட்டாலும் அவர் எனக்குள் விதைத்த அறிவு விருட்சமே இன்றும் என்னை வளர்த்துக்கொண்டுள்ளது தந்தை ஓர் அறிவுபெட்டகம் அவர்தம் தமிழும் ஆங்கிலமும் அபரிமிதமானது பிள்ளைகள் வளர்ந்து ஒளிவிசும் காலத்தில் அவர் இல்லாதது பெரும் குறையே !
எனது சகோதரர்களின் பக்கபலம் எனக்கு எப்போதுமே ஊந்துசக்தியாகவே இருந்து ஊக்கப்படுத்திவருகின்றதை மறுப்பதற்கில்லை

தாய்வழி உறவினர்களின் ஆரம்பகால உதவிகளும் தந்தைவழி உறவினர்களின் இக்கால உதவிகளும் தாம் எமது குடும்பம் குலையாமல் இன்றுவரை நின்றுநிலைக்க வழிகோலின அதை எந்தச்சூழ்நிலையிலும் நான் நன்றியோடு நினைவுகூருவேன் .

இறுதியாக இல்லை இல்லை இனியதாக ஒன்றைக்கூறுவதென்றால் அது என் அன்புமனைவியவளின் அன்பும் அரவணைப்பும் ஊக்குவிப்புமே என் வாழ்வில் இன்றுள்ள புத்துணர்ச்சிக்கும் மலர்ச்சிக்கும் காரணமாகும்

அவள் ஒரு அன்புப்பொக்கிஷமாக என்னை ஆட்கொண்டு நிற்பதால் இந்த உலகையே என் அன்பால் ஆட்கொண்டு விடமுடியும் மக்களுக்காக அளவற்ற சேவைகளை ஊடகத்துறைப்பணியால் ஆற்றமுடியும் என்ற நம்பிக்கை எனக்குள் நிறைந்துநிற்கின்றது

No comments:

Post a Comment