Pages

Wednesday, August 20, 2014

மறுதலிப்புக்களால் நல்லிணக்கத்தை அடையமுடியாது




இம்மாத இறுதியில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமையாளர் பதவியிலிருந்து விடைபெற்றுச்செல்லும்  நவநீதம்பிள்ளை அம்மையார் கடந்த வார முற்பகுதியில் ரொய்டர்ஸ் செய்திஸ்தாபனத்திற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்த விடயங்கள் இலங்கை அரசிற்கு பெரும் அசௌகரியத்தைக் கொடுத்துள்ளமை வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட அறிக்கை கோடிட்டுக்காண்பிக்கின்றது.

' இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான ஏராளமான விடயங்கள் இலங்கைக்கு வெளியே உள்ளன. இதனால் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளாமலேயே ஐ.நா.விசாரணைக்குழுவால் சிறப்பான முறையில் விசாரணைகளை முன்னெடுக்க முடியும்.' என விடைபெறவுள்ள மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை ரொய்டர்ஸுக்கு வழங்கிய நேர்காணலில் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதற்கு பதிலடியாக வெளிவிவகார அமைச்சு விடுத்த அறிக்கையில் விசாரணைகள் ஆரம்பக்கட்டத்திலுள்ள நிலையில் நவநீதம்பிள்ளை முன்கூட்டியே இலங்கை தொடர்பில் நடுத்தீர்ப்பு வழங்கிவிட்டதாகவும் விசாரணையின் போக்கை தனக்கு விருப்பமான போக்கிலேயே மாற்றமுனைவதாகவும் கடுமையாக குற்றஞ்சாட்டியிருந்தது. நவநீதம்பிள்ளை ஆரம்பமுதலே இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டிருந்தாக தெரிவித்திருந்த வெளிவிவகார அமைச்சு புதிய ஆணையாளராக பொறுப்பேற்கவிருக்கும் இளவரசர் செயீத் மீது நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

ஆனால் இலங்கை அரசாங்கம் இன்னமும் சில மாதங்களில் புதிய ஆணையாளர் செயீத் மீதும் 'பக்கச்சார்பாக பாரபட்டமாக செயற்படுகின்றார், ஒருதலைப்பட்டமாக நடந்துகொள்கின்றார், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கண்டுகொள்ளாமல் செயற்படுகின்றார், ஒரு இனவாதி' போன்ற இன்னோரன்ன விமர்சனங்களையும் குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்தால் ஆச்சரிப்படுவதற்கில்லை.

நவநீதம்பிள்ளைக்கு முன்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளராக இருந்த லூயிஸ் ஆர்பர் அம்மையாரும் இலங்கை அரசாங்கத்தின் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்த நிலையில் புதிய ஆணையாளர் செயீத்தும் இலங்கை அரசின் கடுஞ்சொற்கணைகளை எதிர்கொள்ளும் நாள் வெகுதூரத்திலில்லை.

' 'உலகில் பயங்கரவாத்திற்கு முடிவுகட்டிய ஒரேநாடு இலங்கை, 'பயங்கரவாதத்திலிருந்து இந்த நாட்டிற்கு விடுதலைபெற்றுத்தந்தது ராஜபக்ஸ அரசாங்கமே' 'மக்களெல்லாம் யுத்த பயமின்றி சுதந்திரமாக வாழ்கின்றனர்' 'நாட்டில் அபிவிருத்தி சிறப்பாக நடக்கின்றது' 'இலங்கையின்  புதிய நெடுஞ்சாலைகள் விமானநிலையம் துறைமுகம் அற்புதமாகவுள்ளன' 'சட்டத்தின் ஆட்சியில் ஆசியாவிலேயே இலங்கை முன்னிலையில் திகழ்கின்றது' 'ஊடக சுதந்திரம் இந்த நாட்டில் சிறப்பாகவுள்ளது' போன்ற வார்த்தைகளையே அரசாங்கம் கேட்கவிரும்புகின்றது. அதற்கு மாற்றாக கருத்துக்களை வெளியிடுபவர்கள் நாட்டின் முன்னேற்றத்தை தாங்கிக்கொள்ள முடியாதவர்கள் என்பதுடன் நின்றுவிடாது துரோகிகளாவும் அடையாளப்படுத்தப்படும் நிலை உள்ளது.

அரசு தான் கேட்க விரும்பும் விடயங்களையே காலங்கடந்து நியமித்துள்ள விசாரணைக்குழுவிலும் எதிர்பார்கின்றதா? அப்படி எதிர்பார்க்கும் இடத்து உண்மைகள் உள்நாட்டுப்பொறிமுறையிலிருந்து வெளிவர வாய்ப்பில்லை.  இதனையே காணமல்போனோர் விசாரணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம ' காணமல்போனோரின் எண்ணிக்கை மிகைப்படுத்தப்பட்டுள்ளது' எனத் தெரிவித்த கருத்தும் உறுதிப்படுத்திநிற்கின்றது. உண்மைகளை முறையாக தேடிக்கண்டறியும்  அக்கறையோ ஆர்வமோ இல்லாத நிலையிலும் பிறர் வெளியிடும் கருத்துக்களில் பொதிந்துள்ள உண்மைகளை ஏற்றுக்கொள்ளாமல் மறுதலிப்பதாலும் நிரந்தர நல்லிணக்கத்தை அடைந்துவிடமுடியாது

No comments:

Post a Comment