Pages

Thursday, December 31, 2020

சமூக வலைத்தளங்கள் மூலம் பணம் பறிக்கும் கும்பல் தொடர்பாக பொலிஸார் எச்சரிக்கை

 



Facebook, Whatsapp போன்ற  சமூக வலைத்தளங்கள் மூலம் செய்திகளை அனுப்புவதன் ஊடாக பண மோசடியில் ஈடுபடுவோரிடம் அவதானமாக செயற்படுமாறு பொதுமக்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

பரிசுத் தொகை அல்லது பரிசுப் பொருட்கள் வழங்குவதாக இன்றைய தினம் (31) சமூக வலைத்தளங்கள் ஊடாக கூறப்படும் செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதேநேரம், தீர்மானம் மிக்கதான இன்றைய நாளில், வௌிநாடுகளிலுள்ள நண்பர்கள் புதுவருட பரிசுப் பொதிகளை அனப்பியுள்ளதாக, பரிசுப் பொதிகளை அனுப்புவதற்கு எதிர்பார்த்துள்ளதாக அல்லது குறிப்பிட்ட இடங்களில் பரிசுப் பொதிகள் வைக்கப்பட்டுள்ளதாக கூறி பணத்தை வைப்பிலிடுமாறு Facebook, Whatsapp, Viber, imo ஆகிய சமூக வலைத்தளங்கள் ஊடாக செய்திகள் கிடைக்கலாம் என பிரதி பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.



இவ்வாறான செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் அறிமுகம் இல்லாதவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு பணத்தை வைப்பிலிடுவதை தவிர்க்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சுற்றுலா விசாக்கள் மூலம் நாட்டிற்கு வருகை தந்துள்ள வௌிநாட்டவர்கள் இவ்வாறான செயல்களில் ஈடுபடுவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சுற்றுலா விசாக்களில் வருகை தந்து இவ்வாறான பண மோசடி செயல்களில் ஈடுபட்ட நைஜீரிய பிரஜைகள் 24 பேர் கடந்த காலத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நைஜீரிய பிரஜை ஒருவர் சமூக வலைத்தளத்தினூடாக பெண் ஒருவரிடம் இருந்து கிட்டத்தட்ட 3 கோடி பணத்தை மோசடி செய்த சம்பவம் ஒன்று கடந்த வாரத்தில் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சந்தேக நபர்களிடம் சிக்காது இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.



No comments:

Post a Comment