Sep 22 2014 // ஆசிரியர் தலையங்கம்
2013 செப்டெம்பரில் நடைபெற்ற வடமாகாண சபைத் தேர்தலின் போதே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசு, போரின் பின்னர் முதற்தடவையாக மிக மோசமான தேர்தல் தோல்வியை சந்தித்திருந்தது. அதன் பின்னர் நடைபெற்ற தேர்தல்களில் அரசின் வாக்குவங்கி வீழ்ச்சியை நோக்கிப் பயணிப்பதைத் காணக்கூடியதாக இருக்கின்றது. தற்போது வெளியாகியிருக்கும் ஊவா மாகாணசபைத் தேர்தல் முடிவுகள் இதை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.
குறிப்பாக தமிழ் மக்களின் உரிமைக்குரலுக்கு செவிசாய்க்காது, அபிவிருத்தியயை முன்னிலைப்படுத்தி வடக்கு மாகாணசபைத் தேர்தலுக்கான பரப்புரையை கூட்டணி அரசு முன்னெடுத்தது. இதனால், உரிமையா? சலுகையா? என்ற வாதம் எழுந்தது. இந்நிலையில், அரசின் அபிவிருத்தி வலைக்குள் சிக்காது, உரிமையை முன்னிறுத்தி தேர்தலில் களமிறங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து தமது ஆணித்தரமான நிலைப்பாட்டை தமிழ் மக்கள் வெளிப்படுத்தினர்.
இவ்வாறு வடக்குத்தேர்தல் முடிவடைந்து அதாவது அரசு படுதோல்வியைச் சந்தித்து சரியாக ஒருவருடம் கழிந்துள்ள நிலையிலேயே ஊவா மாகாண சபைத் தேர்தலும் நடைபெற்று முடிந்துள்ளது. மேல் மற்றும் தென்மாகாண சபைத் தேர்தல்களின்போது 17 ஆசனங் களைப் பறிகொடுத்த கூட்டணி அரசுக்கு ஊவாத் தேர்தல் முடிவுகளும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றே சுட்டிக்காட்டப்படுகின்றது.
போர் வெற்றியின் உச்சச் செல்வாக்கைப் பயன்படுத்தி 2009ஆம் ஆண்டு ஊவாத் தேர்தலில் 68.32 சதவீத வாக்குகளைப் பெற்று மூன்றில் இரண்டு அறுதிப் பெரும்பா ன்மையை பெற்ற ஆளுங்கட்சி, இம் முறைத் தேர்தலில் 48.79 சதவீத வாக்குகளையே பெற்றமையானது அதன் வீழ்ச்சியைத் தெளிவாகப் புலப் படுத்துகின்றது.
மேல் மாகாண சபைத் தேர்தலின்போது ஏற்பட்ட பின்னடைவை ஓர் எச்சரிக்கையாக கருதி தனது போக்கை கூட்டணி அரசு மறுபரிசீலனை செய்யாத தாலேயே ஊவா மக்களின் செல்வாக்கையும் இன்று வெகுமாக இழந்துள்ளது.
போருக்குப் பின்னர் எதிர்பார்த்த பொருளாதார பிரதிலாபங்கள் சாதாரண மக்களுக்கு கிடைக்காத நிலை யில், அன்றாட வாழ்க்கையைக் கொண்டுநடத்துவதே பெரும் திண்டாட்டமாக மாறிவருவது அரசின் வீழ்ச்சியில் தாக்கம் செலுத்திய முக்கிய காரணிகளில் ஒன்றாக இருந்தாலும் அரசின் அணுகுமுறைகளில் மக்கள் கணிசமான அளவில் நம்பிக்கை இழக்கத்தொடங் கியிருப்பதன் வெளிப்பாடே இந்தத் தேர்தல் முடிவு களாகும்.
ஒட்டுமொத்த அரச இயந்திரத்தை ஊவாவில் குவித்தும், அரச வளங்களை கட்டுக்கடங்காது பயன் படுத்தியும் ஜனாதிபதி உட்பட அமைச்சர்கள் மையமிட்டும் கடைசி நேரத்தில் வறட்சி நிவாரணங்கள், வாழ்வா தாரக்கடன்கள் அரச நியமனங்களை அள்ளிக்கொடுத்தும் மக்களின் அமோக ஆதரவைப் பெற முடியவில்லை என்கிறபோது மக்கள் மத்தியில் அரசின் செயற்பாடுகள் தொடர்பில் எந்தளவிற்கு வெறுப்புணர்வு தலை தூங்கியுள்ளதென்பதைப் புரிந்துகொள்ளமுடிகின்றது.
போர் வெற்றியைக் காண்பித்தே காலங்கடத் திவிடலாம் என்ற கனவு இருந்தால் இனிமேல் அது பலிக் காது என்பதை இந்தத் தேர்தல் நன்கு வெளிப் படுத்தியுள்ளது.
முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவும் மக்கள் மத்தியில் போரில் தாம் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பை நினைவூட்டுவதற்காக தன்னை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தற்கொலைத்தாக்குதலின் போது தான் பயணித்த குண்டுகள் துளைத்த காரையே பிரசார மேடைகளுக்கு கொண்டு சென்று கடும் பிரசாரங்களை முன்னெடுத்தும் ஊவா மாகாணத்தில் அவரது ஜன நாயகக் கட்சிக்கு ஒட்டுமொத்தமாக வெறுமனே ஆறாயிரம் வாக்கு களே அளிக்கப்பட்டுள்ளமை இதற்கு ஒரு சான்றாகும்.
ஐக்கிய தேசியக் கட்சியினுடைய மீளெழுச்சி ஒன்று பட்டால் சாத்தியமே என்பதை இந்தத் தேர்தல் முடிவுகள் வெள்ளிடைமலையாக்கியுள்ளன.
கடந்த ஊவாத் தேர்தலில் மிகவும் குறைவாக 21.06 சதவீத வாக்குகளையே பெற்றிருந்த ஐக்கிய தேசிக்கட்சி இம்முறை அரசுக்கு சவாலாக 38.31 சதவீத வாக்கு களைப் பெற்றுள்ளதிலிருந்து மீண்டுமாக ஆட்சிப் பலத்தைப் பெறும் அதன் கனவு நடைமுறைச் சாத்திய மானதே என்ற நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது.
சரியான திட்டமிடலும் உண்மையான ஒற்றுமையும் கட்சியில் நிலவும் இடத்து அடுத்துவரும் தேர்தல்களில் அரசுக்கு சவால் விடுப்பதுடன் நின்றுவிடாது மாற்றத் தையும் நிகழ்த்திக்காட்டலாம் என்பது நிதர்சனம்.
இந்தத் தேர்தல் ஐக்கிய தேசிக் கட்சியின் எழுச்சி மட்டுமன்றி, அநுர குமார திஸாநாயக்கவின் தலைமை யிலான ஜே.வி.பியின் எழுச்சியாகவும் பார்க்கப்பட வேண்டும்.
ஊவாவின் மொத்த ஆசனங்கள் 34இல் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசு பெற்ற 19 ஆசனங்களையும் ஐக்கிய தேசியக் கட்சி பெற்ற 13 ஆசனங்களுடனும் ஜேவிபி பெற்ற 2 ஆசனங்கள் குறைவாக தெரிந்தாலும் கடந்த தேர்தல்களில் அந்தக் கட்சி அடைந்த பின்னடைவுகளுடன ஒப்பிட்டுப்பார்க் கையில் உண்மையிலேயே ஜே.வி.பி. எழுச்சிபெற் றுள்ளதை உணர்ந்துகொள்ளமுடியும்.
ஐக்கியக் தேசியக் கட்சியும் ஜேவிபியும் இணைந்து கொண்டால் எதிர்காலத்தில் வரும் தேர்தல்களில் அரசுக்கு சிம்மசொர்ப்பமான விளங்கமுடியும் என்ற செய்தியையும் இத்தேர்தல் முடிவுகள் எடுத்துரைக்கின்றன.