Showing posts with label கட்டுரைகள். Show all posts
Showing posts with label கட்டுரைகள். Show all posts

Wednesday, March 17, 2021

1996 உலகக்கிண்ண வெற்றியின் பின்னான 25 ஆண்டுகளில் இனங்களுக்கிடையிலான ஒற்றுமையில் ஆற்றிய வகிபாகம் பற்றிய ஒரு பார்வை

 



1996ம் ஆண்டு உலகக்கிண்ண கிரிக்கட் போட்டியில் சம்பியன் பட்டம் வென்ற இலங்கை அணி அதன் 25வது வருட நிறைவை  இன்று கொண்டாடுகின்றது. இலங்கை நாட்டின் வரலாற்றில் முக்கியமான தருணமாக இந்த உலகக்கிண்ண வெற்றி பார்க்கப்படுவதில் எவ்வித சந்தேத்திற்கும் இடமில்லை. 

இனமுரண்பாடுகளால் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கின்ற இலங்கையில் அனைவரையும் பலவித வேற்றுமைகளுக்கு மத்தியில்  ஒன்றிணைக்கும் அரிய விடயமாக கிரிக்கட் போட்டிகள் பல சந்தர்ப்பங்களில் அமைந்திருந்ததை மறுக்கமுடியாது

இலங்கையின் ஆயுதப்படையினருடனும் பதவியில் இருந்த அரசாங்கங்களுடன் மூர்க்கமாக மோதிக்கொண்ட விடுதலைப்புலிகள் கூட இலங்கை கிரிக்கட் அணியின் தீவிர ரசிகர்களாக இருந்திருக்கின்றனர் என்பதை நான் இரு தடவைகள் நேரிலேயே கண்ணுற்றிருக்கின்றேன்.  இலங்கையில்  நீண்டநாட்கள் தொடர்ச்சியாக போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்த காலப்பகுதியான 2002ம் ஆண்டு முதல் 2006 ஆண்டு காலப்பகுதியில் சக்தி டீவியில் நான் பணியாற்றிய காலப்பகுதி 2005ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் நிறைவிற்கு வந்துவிட்டது. சக்தி டீவிக்கு செய்திசேகரிப்பதற்காக  நான்கு தடவைகள் வன்னிக்கு செல்லக்கிடைத்தது. அப்படியாக சென்ற ஒரு தருணத்தில் கிளிநொச்சியில் சமாதான செயலகம் அமைந்துள்ள  பகுதிக்கு அருகே விடுதலைப்புலிகளின் அங்கத்தவர்கள் இலங்கை கிரிக்கட் அணி வேறு சர்தேச அணியொன்றுடன் மோதும் போட்டியைப் பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் இலங்கை அணியினர் சிறப்பாக செயற்படும் சந்தர்ப்பங்களின் மகிழ்வுணர்வை வெளிப்படுத்தியதை அவதானித்தேன். அப்போது நீங்கள் இலங்கைப் படைகளுக்கு எதிராக மோதுகின்றீர்கள் . ஆனால் இலங்கை கிரிக்கட் அணியை ரசிக்கின்றீர்கள் என்பது வெளிபடையாக தெரிகின்றது.  அதற்கு அவர்கள் கிரிக்கட்டை அரசியலுக்கு அப்பாற்பட்டதாக வெறுமனே விளையாட்டாக நோக்கியமையே காரணமாக இருந்தது என்பதை அவர்களுடனான கலந்துரையாடல்களின் போது உணர்ந்துகொண்டேன். 



இதேவிதமான இன்னுமொரு தடவையும்  நேரில் அவதானித்திருக்கின்றேன். 2004ம் ஆண்டு  சுனாமிக்கு பின்னர் 2005ம் ஆண்டு மே மாதம் தொடக்கம் 2006ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை வேர்லட் விஷன் நிறுவனத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான சிறுவர் பாதுகாப்பு அதிகாரியாக கடமையாற்றியபோதே இது நிகழ்ந்தது.  கொழும்பில் இருந்து மட்டக்களப்பிற்கு சிறுவர்களது நலன்களை கவனிக்கும் விடயத்திற்கு பொறுப்பானவராக சென்றதால் விடுதலைப்புலிகளின் கடிதத்தலைப்பில் ஒரு அழைப்பு வந்தது. இராணுவக் கட்டுப்பாடற்ற வெல்லாவெளிப்பிரதேசத்திற்கு சென்று அவர்களைச் சந்திக்க வேண்டும்.  யார் எதைப் போட்டுக்கொடுத்தார்களோ என்ற நினைப்போடு அவர்களது பிரதேசத்திற்கு சென்றேன். அப்போது நான் பார்த்த காட்சி  முன்னர் வன்னியில்பார்த்ததை நினைவிற்கு கொண்டுவந்தது. இலங்கை அணிவிளையாடும் கிரிக்கட் போட்டியை அவர்கள் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர். அப்போது உடனே அவர்களிடம் என்ன இலங்கை அணியின் போட்டியைப் பார்க்கின்றீர்கள் ரசிகர்கின்றீர்கள் ஆதரிக்கின்றீர்கள் என ஆர்வத்தோடு கேள்வி எழுப்பினேன்.  அவர்களும் சிரித்துக்கொண்டு இலங்கை அணியை ரசிப்பதை ஏற்றுக்கொண்டனர்.  போர் நிறுத்தமாக இருந்ததால் அவர்கள் இலங்கை அணியை ஆதரித்து ரசித்தார்களா இல்லை ஆரம்பமுதலே அப்படித்தானா என்பது எனக்குள் இருந்த கேள்வியாக இருந்தது. 

இலங்கை சுதந்திரம் பெற்ற காலப்பகுதி முதலாக சிறுபான்மை மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டும் நசுக்கப்பட்டும் வருகின்ற காரணத்தால் இலங்கை அணி 1996ல் ஈட்டிய சரித்திர வெற்றியை அனைவரும் ஒருமித்து கொண்டாடினரா என்பது கேள்விக்குரியதாகும். அதிலும் விளையாட்டு என்பது அரசியலுக்கு அப்பாற்பட்டது எனக் கூறப்படுகின்ற காரணத்தால் அரசியலைத் தாண்டி இலங்கையின் கிரிக்கட் வெற்றியை சிறுபான்மையின மக்கள் ஒட்டுமொத்தமாக கொண்டாடினரா எனக் கேட்டால் அதற்குப் பதில் இல்லை என்பதாகவே வரும். சுதந்திரம் கிடைத்தது முதலான காலப்பகுதியில் இலங்கையில் வாழும் மக்கள் அனைவரும் இலங்கையரே என்ற பொது அடையாளத்தை வளர்ப்பதற்கு ஆட்சியாளர்கள் தவறியமையும் தமது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக மக்களை இன ரீதியாக மத ரீதியாக மொழி ரீதியாக பிரித்தாண்டமையுமே இதற்கான காரணங்களாகும். 


தேசிய அணி வெற்றி பெற்ற சந்தர்ப்பங்களில் சிறுபான்மை மக்கள் ஆதரித்தார்கள் என்பதற்காகவோ சிறுபான்மை மக்களது பிரதிநிதிகள் தேசிய அணியில் இடம்பிடித்தார்கள் என்பதற்காகவோ தேசிய அணி மீது தீவிர பற்றுடைய சிறுபான்மையினத்தைச் சேர்ந்த மக்களும் உள்ளனர் என்பதற்காகவோ அரசியல் ரீதியாக கட்டவிழ்த்துவிடப்படும் பாரபட்சங்களும் அநீதிகளும் ஒடுக்குமுறைகளும் இல்லாமல் போகுமென்று எவரேனும் நம்பினால் அவர்கள் யதார்த்தத்தை உணராதவர்களாகவே கருதப்படவேண்டும். தேசிய அணிக்கு ஆதரவு என்று இரத்தத்திலேயே உடலில் எழுதிவைத்தாலும் இங்குள்ள அரசியல்வாதிகளும் இனவாதிகளும் தமக்கு தேவையான நேரத்தில் இனவாதத்தையும் மதவாதத்தையும் ஏவிவிட வல்லவர்கள் என்பதை உணர நீண்ட நாட்கள் பின்னோக்கிநகர வேண்டியதில்லை. 

25 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கை அணி உலக சம்பியன் ஆனபோது அவ்வணியில் முத்தையா முரளிதரன் இடம்பெற்றிருந்ததை சிறுபான்மையினர் குறிப்பாக தமிழ் மக்கள்  மகிழ்வுடன் வரவேற்றிருந்தனர் . அதனைக் கொண்டாடியவர்களும் உண்டு. ஆனால் அதற்குப்பின்னர் வந்த 25 ஆண்டு காலப்பகுதியில் சிறுபான்மை இனத்தவரில் இருந்து எத்தனை பேருக்கு இலங்கை அணியில் வாய்ப்புக்கிடைத்துள்ளது என்றால் ஏமாற்றமே மிகுதியாகும்.  முத்தையா முரளிதரன் தவிர இலங்கை அணியில் ரஸல் ஆர்னோல்ட் 1997ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை  பத்தாண்டுகள் இடம்பெற்றிருந்தார். திலக்கரத்ன முதியான்ஸலாகே தில்ஷான் அன்றேல் திலக்கரத்ன தில்ஷான் என இன்று அறியப்படும் தில்ஷான் 1999ம் ஆண்டுமுதல் 2016ம் ஆண்டு வரை இலங்கை  தேசிய அணியில் இடம்பெற்றிருந்தார். தில்ஷானின்  ஆரம்ப பெயர் துவான் மொஹமட் தில்ஷான் என்றபோதும் அவர் தன்னை ஒரு சிறுபான்மை இனத்தவராக அன்றி தாயாரின் பெயர் வழியே பெரும்பான்மை இனத்தவராக  அடையாளப்படுத்தப்படுகின்றார். அவரைத்தவிர சுராஜ் ரன்தீவ் இலங்கை அணிக்காக 2012 முதல் 2016 வரை விளையாடியிருந்தார். இவரது ஆரம்ப பெயர் மொஹமட் மர்சூக் மொஹமட் சுராஜ் என்பதாகும். இவரும் ஒரு சிறுபான்மை இனத்தவராக அன்றி  பெரும்பான்மை இனத்தவராக  அடையாளப்படுத்தப்படுகின்றார்.

இவர்களைத்தவிர 2004 ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இலங்கைத் தேசிய அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி சகல துறை வீரர் பர்வீஸ் மஹ்ருப் பல போட்டிகளில் விளையாடியிருந்தார். நவீட் நவாஸ் ஒரு டெஸ்ட் போட்டியில் இலங்கைக்காக பங்களாதேஷிற்கு எதிராக 2002ல் ஒரு போட்டியில் விளையாடி 99 ஓட்டங்களை எடுத்த போதும் அதன் பின்னர் ஒருபோட்டியில் கூட விளையாடவில்லை.

2008ம் ஆண்டு முதல் இலங்கை தேசிய அணிக்காக விளையாடிவரும் அஞ்சலோ மத்தியுஸின் தந்தை ட்ரெவர் மத்தியூஸ் தமிழர் என்றபோதிலும் அஞ்சலோ தன்னை தமிழாக அடையாளம் காண்பிப்பதில்லை. இதற்கு அவர் மருதானை புனித சூசையப்பர் கல்லூரியில் சிங்கள மொழியில் கல்விகற்றமை காரணமாக இருக்கக்கூடும். 

இவர்களைத்தவிர 1996ம் ஆண்டு உலகக்கிண்ணத்திற்கு பின்னர் வந்த காலப்பகுதியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய தமிழ் முஸ்லிம் இனங்களைச் சேர்ந்தவர்கள் என்று பார்த்தால் பிரதீப் ஜெயப்பிரகாஷ்தரன் மட்டும்தான் . ரோயல் கல்லூரியின் பழைய மாணவரான பிரதீப் 2005ம் ஆண்டில் ஒரே ஒரு சர்வதேச ஒருநாள் போட்டியில் பங்கேற்று ஒரு விக்கட்டை கைப்பற்றியிருந்தார். அவரைத்தவிர  சர்வதேச போட்டிகளை நெருங்கிவந்த சிறுபான்மை இனத்தவர் என்று பார்த்தால் 2019ம் ஆண்டில் தென் ஆபிரிக்க அணிக்கெதிரான இலங்கை டெஸ்ற் குழாமில் இடம்பிடித்த மொஹமட் சிராஸைக்குறிப்பிடலாம். 

ஏறத்தாழ 22 மில்லியன் சனத்தொகையைக் கொண்ட இலங்கையில் சிறுபான்மை மக்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 25 சதவீதத்திற்கு அதிகமாக இருப்பினும் இலங்கை தேசிய கிரிக்கட் அணியில் அவர்களது பிரசன்னம் என்பது கடந்த 25 வருட காலத்தில் மிகவும் குறைவாக இருப்பதைப் புரிந்துகொள்ளமுடியும். ஆனால் ஏறத்தாழ 1450 மில்லியன் சனத்தொகையைக் கொண்ட இந்தியாவில் கடந்த 25 ஆண்டுகாலப்பகுதியில் எத்தனை சிறுபான்மை இனத்தவர்கள் தேசிய கிரிக்கட் அணியில் இடம்பெற்றிருக்கின்றார்கள் எனப்பார்க்கின்றபோது நாம் எங்கிருக்கின்றோம் என்பது புலனாகும். மொஹமட் அஸாருதீன் தொடக்கம்  ஷஹீர் கான், முனாப்  பட்டேல், மொஹமட் ஷமி ,மொஹமட் சிராஜ், லக்ஸ்மிபதி பாலாஜி,  சுப்ரமணியம் பத்ரினாத் ,ஹேமங் பதானி ,ரவிச்சந்திரன் அஷ்வின் ரி.நடராஜன் ,முரளி கார்த்திக் ,முரளி விஜய், வொஷிங்டன் சுந்தர் , சஞ்சு சம்ஸன், ஸ்ரீசாந்த் என எண்ணிலடங்கா வீரர்கள் நாம் பார்க்கும் காலத்திலேயே விளையாடியிருக்கிறார்கள். தற்போதைய இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு வீரர் எனினும் இடம்பெறுவதைக் காணமுடியும். இது எதனைக் காண்பிக்கின்றது. 



தேசிய அணியில் பங்கேற்கும் தகுதி  இலங்கையிலுள்ள தமிழ் முஸ்லிம் வீரர்களுக்கு இல்லை என்பதையா அன்றேல் அவர்கள் பங்கேற்பதற்கு தேவையான வசதி வாய்ப்புக்கள் ஏற்படுத்திக்கொடுக்கப்படாமையையா இது காண்பிக்கின்றது . போதிய வசதிகள் இல்லாத வட கிழக்கு பகுதிகளில் வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்படவேண்டும் . அதுமட்டுமன்றி வீரர்கள் முதற்தர தேசிய மட்ட போட்டிகளில் பங்கேற்பதற்கான வாய்ப்புக்கள் ஏற்படுத்திக்கொடுக்கப்படவேண்டும். கடந்தாண்டு வடக்கைச்சேர்ந்த விஜயகாந்த் வியாஸ்காந்த் லங்கா பிரிமியர் லீக் போட்டிகளில் ஜெவ்னா ஸ்டாலியன்ஸ் அணிக்காக விளையாடியபோது அதற்கு தமிழ் மக்கள் மத்தியில் இருந்து பெரும் வரவேற்புக் கிடைத்தது. வாய்ப்புக்கள் உருவாக்கப்படும் போதே இப்படியான பங்கேற்பு சாத்தியமானது. இன்னமும் பல வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்படும் போதே இன்னமும் அதிகமானவர்கள் தேசிய அளவிலும் அதனைத் தாண்டி சர்வதேச அளவிலும் பிரகாசிக்க முடியும். அனைவரும் விளையாடலாம் என்பது சமத்துவம் .ஆனால் அனைவரும் விளையாடும் வகையில் வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதே சிறுபான்மையினர் மேலும் அதிகமாக தேசிய அணிக்கு தெரிவாக வழிகோலும் . 





சனத்தொகையில் எண்ணிக்கைக்கு சமனாக தமக்கு தேசிய அணியில் பிரதிநிதித்துவம் கிடைக்கவேண்டும் என்பது இலங்கையிலுள்ள சிறுபான்மை மக்களின் எண்ணமல்ல. மாறாக தமது பிரதிநிதிகளும் கூட திறமையை வெளிப்படுத்தி தேசிய அணிக்கு தெரிவாகக்கூடிய வாய்ப்புக்கள் உருவாக்கப்படவேண்டும் என்பதே அவர்களது உள்ளுணர்வாகும். 


ஆக்கம்: அருண் ஆரோக்கியநாதர்.

Monday, March 8, 2021

"கறுப்பு ஞாயிறு" நீதியைப் பெற்றுத்தருமா?

 



ஈஸ்டர் தாக்குதல் நடந்த முதல் சில நாட்களில் கத்தோலிக்க பேராயர் கர்த்தினால் மல்கம் ரஞ்சித் செயற்பட்ட விதமே இந்த நாட்டில் பாரிய இரத்தக்களரியைத் தடுத்து நிறுத்தியது என்பதை எவரும் மறுக்க முடியாது. ஆனால் தாக்குதல்களின் முன்னரும் சில வாரங்களின் பின்னரும் அவர் செயற்பட்ட விதம் தொடர்பாக குறிப்பாக அவரது அரசியல் தெரிவுகள் தொடர்பாக நாட்டிலே கத்தோலிக்கர்கள் உள்ளடங்கலாக பலருக்கும் கேள்விகள் எழுந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. 



இலங்கையில் நாடளாவிய ரீதியில் கத்தோலிக்க ​தேவாலயங்களில் நேற்று  (07) கறுப்பு ஞாயிறு அனுஷ்டிக்கப்பட்டது

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அமைதியான முறையில் கத்தோலிக்க தேவாலயங்களில் எதிர்ப்பு நடவடிக்கைகளும் இடம்பெற்றன.

ஏப்ரல் 21 தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை நிலைநாட்ட வலியுறுத்தி, கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை விடுத்த வேண்டுகோளுக்கு அமைய நேற்றைய தினம் கறுப்பு ஞாயிறு தினமாக கடைப்பிடிக்கப்படுகின்றது.



நாட்டிலுள்ள கத்தோலிக்க தேவாலயங்கள் அனைத்திலும் கறுப்புக் கொடி ஏற்றப்பட்டு விசுவாசிகள் அனைவரும் கறுப்பு நிற ஆடையுடன் திருப்பலிகளில் கலந்துகொண்டனர்.

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் நேற்று  கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.



இதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்துவெளியிட்ட கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை,

"தாக்குதலின் பின்னணியில் யார் செயற்பட்டுள்ளனர் என்பதை அறிந்துகொள்ளவே இந்த ஆணைக்குழுவின் மூலம் நாம் எதிர்பார்த்தோம். எனினும் அது தொடர்பில் ஆணைக்குழு எந்தளவிற்கு செயற்பட்டுள்ளது என்பது எமக்குத் தெரியாது. ஆகவே ஆணைக்குழுவின் அறிக்கை முழுமையமற்றது என்பதால் தொடர்ந்தும் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை சேகரித்து தாக்குதலை உண்மையாக வழிநடத்தியவர்கள் யார் என்பதை வௌிக்கொணரவே நாம் முயற்சிக்கின்றோம். ஏனெனில் மக்கள் இதனையே எதிர்பார்க்கின்றனர்."என  தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் உண்மையிலேயே நன்மைபெற்றவர்கள் யார்? தாக்குதலுக்கு யார் தூண்டுகோலாக அமைந்தது?  போன்ற கேள்விகளை எழுப்பும் போது இதற்குப் பின்னணியிலுள்ளவர்கள் யார்  என்பதை ஊகிக்க மேதைகள் தேவையில்லை என்பதை சாதாரண பொதுமக்களுடனான உரையாடல்களின் போது உணர்ந்துகொள்ள முடிந்தது. 

 ஆணைக்குழுக்கள் என்பது பலதடவைகளில் கண்துடைப்பு நாடகங்களுக்கு துணைபோகும் பொறிமுறையாகவே அமைந்திருக்கின்றன என்பது இலங்கையின் கடந்த கால வரலாற்றை அவதானித்தவர்களுக்குத் தெரியும்.

அவ்வாறான ஆணைக்குழுக்கள் காலத்தை இழுத்தடிக்கும் செயற்பாடுகளாக அமைந்தனவே தவிர ஒரு பிரச்சனைக்கோ   விடயத்திற்கோ தீர்வாக அமையவில்லை.



அப்படியிருக்க ஆணைக்குழுக்கள் மீது முழுமையாக நம்பிக்கை வைத்து நீதியை கர்த்தினால் மல்கம் ரஞ்சித் உள்ளிட்ட தரப்பினர் உண்மையிலேயே எதிர்பார்த்திருப்பின் அது கானல் நீராகவே முடியும். 

இழைக்கப்பட்ட அநீதிக்காக நீதியைத் தேடுபவர்கள் தாம் விரும்பிய ஆட்சியாளர்கள் வரும் போது ஒருவிதமாகவும் தமக்கு விருப்பமில்லாத ஆட்சியாளர்கள் இருக்கும் போது வேறுவிதமாகவும் செயற்படுமிடத்து நீதிக்கான அவர்களின் வேட்கை என்பது கேள்விக்குட்படுத்தப்படும்.

 ஈஸ்டர் தாக்குதல் நடந்த முதல் சில நாட்களில் கத்தோலிக்க பேராயர் கர்த்தினால் மல்கம் ரஞ்சித் செயற்பட்ட விதமே இந்த நாட்டில் பாரிய இரத்தக்களரியைத் தடுத்து நிறுத்தியது என்பதை எவரும் மறுக்க முடியாது. ஆனால் தாக்குதல்களின் முன்னரும் சில வாரங்களின் பின்னரும் அவர் செயற்பட்ட விதம் தொடர்பாக குறிப்பாக அவரது அரசியல் தெரிவுகள் தொடர்பாக நாட்டிலே கத்தோலிக்கர்கள் உள்ளடங்கலாக பலருக்கும் கேள்விகள் எழுந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. 



சொந்த விருப்பு வெறுப்புக்களைத் தாண்டி சமூகத்தின் தலைவர்கள் பாதிக்கப்பட்ட தமது சமூகத்திற்காக இடைவிடாமல் நீதிக்கான போராட்டத்தை தளராது முன்னெடுக்கும் போதே பொறுப்புக்கூற வேண்டும் என்ற எண்ணம் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் ஏற்படும். இல்லையேல் இவர்கள் எமது ஆட்கள் இவர்களைச் சமாளித்துவிடமுடியும் என்ற எண்ணத்தில் தமது ஆட்சி அதிகாரத்தை வலுப்படுத்தேவே நடவடிக்கை எடுப்பார்களே தவிர நீதியை வழங்க நடவடிக்கை எடுக்க மாட்டார்கள். 

வடக்கு கிழக்கில் போர்க்காலத்தில் இழைக்கப்பட்ட பாரிய மனித உரிமை மீறல்கள் போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களின் போது அதற்காக வடக்கு கிழக்கைச் சேர்ந்த கத்தோலிக்க ஆயர்களும் குருக்களும் ஓங்கிக்குரல்கொடுத்த போது கர்த்தினால் மல்கம் ரஞ்சித், அவர்களுக்கு ஆதரவாக குரல்கொடுத்தாரா? வடக்கு கிழக்கு சிறுபான்மை மக்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றபோதும் நசுக்கப்படுகின்றபோதும் எத்தனை தடவை கொழும்பைத்தலைமையகமாகக் கொண்ட இலங்கையின் கத்தோலிக்க திருச்சபை குரல்கொடுத்திருக்கின்றது அன்றேல் ஆதரவுக்கரம் நீட்டியிருக்கின்றது என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும். 

அநீதி என்பது இலங்கையின் வடக்கு கிழக்கில் நிகழ்த்தப்பட்டாலோ தெற்கில் நிகழ்த்தப்பட்டாலோ அதற்கு எதிராக குரல் கொடுக்கவும் நீதியைக் கோரவும் இனியேனும் கத்தோலிக்க திருச்சபை  இன மொழி பேதம் பாராது ஒரு குடையின் கீழ் முன்வரவேண்டும். அப்போதுதான் நீதிக்கான கோரிக்கையை ஆட்சியளார்களால் தட்டிக்கழிக்க முடியாத நிலை ஏற்படும் .


ஆக்கம் : அருண் ஆரோக்கியநாதர்.

Tuesday, March 2, 2021

ஜெனீவாவில் இந்தியாவின் ஆதரவு ஏன் இலங்கைக்கு எளிதாக கிடைக்கமாட்டாது?




ஜெனிவா உட்பட சர்வதேச அரங்குகளில் தனிப்பட்ட நாடுகளுக்கு எதிரான தீர்மானங்களின் போது நடுநிலைமை வகிப்பது இந்தியாவின் நிலைப்பாடாக இருந்துவருகின்றபோதும் இலங்கை விடயத்தில் அது மாறுபாடான நிலைப்பாட்டை எடுத்திருப்பதை வரலாறு உணர்த்துகின்றது. 2009ம் ஆண்டு இலங்கைக்கு சார்பாக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் போது சார்பாக வாக்களித்த இந்தியா 2012 மற்றும் 2013 ஆண்டுகளில் இலங்கைக்கு எதிராக வாக்களித்திருந்தது. 2014ல் வாக்களிப்பில் இந்தியா பங்கேற்றிருக்கவில்லை .  2021ல் அதன் நிலைப்பாடு எப்படியிருக்கும் என்பது இன்னமும் தெளிவற்றதாகவே உள்ளது. தமிழ்நாட்டில்  மாநில தேர்தல்கள் நடைபெற இருக்கின்ற நிலையிலும் இலங்கையில் இந்தியாவின் புவிசார் அரசியல் அபிலாஷைகள் பின்னடைவைச் சந்தித்துவரும் நிலையிலும் இந்தியாவிற்கு முன்பாக உள்ள தெரிவுகள் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக இருக்க முடியாது. ஒன்று பிரித்தானியா தலைமையிலான மேற்கு நாடுகள் கொண்டுவரும் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிப்பது இல்லையேல் 2014ம் ஆண்டில் செய்ததைப் போன்று நடுவுநிலைமை வகிப்பதே இந்தியாவிற்குள்ள தெரிவுகளாக இருக்க முடியும் .

இந்தியா கடந்த வருடங்களில் எவ்வாறு ஜெனிவாவில் வாக்களித்திருந்தது?



ஜெனிவாவில் கொண்டுவரப்படவுள்ள புதிய தீர்மானத்திற்கு எதிராக நாடுகளை அணிசேர்க்கும் முனைப்பை இலங்கை அரசாங்கம் தீவிரப்படுத்தியுள்ளது. இதில் இந்தியாவின் ஆதரவைப் பெறுவதற்கு அரசாங்கம் பகிரதப்பிரயத்தனத்தை மேற்கொண்டுவருகின்றது.

ஒரு மாதத்திற்கு முன்பாக கொழும்புத் துறைமுகத்தின் கிழக்குமுனையத்தை அபிவிருத்திசெய்வது தொடர்பாக இந்தியாவுடன் செய்துகொண்ட உடன்படிக்கையை ஒருதலைப்பட்சமாக இரத்துச்செய்திருந்த இலங்கை அரசாங்கம்  ஜெனிவாவில் வாக்கெடுப்பு நெருங்கும் நிலையில் மேற்குமுனையத்தை வழங்குவதற்கு  ஒப்புதல் அளித்திருக்கின்றது. 

பாரிய சர்ச்சையின் பின்னர், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை வௌிநாட்டவர் கைப்பற்றுவதை நிறுத்திய போதும் துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத்தை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது

35 வருடங்களில் அபிவிருத்தி செய்து, நடைமுறைப்படுத்தி மீள கையளித்தல் அடிப்படையில் கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்வதற்காக இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

புதிய தீர்மானமொன்றைக் கொண்டுவரப்போவதை இலங்கை தொடர்பாக ஜெனீவாவில் செயற்படும் பிரித்தானியா தலைமையிலான பிரதான நாடுகள் குழு ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் தீர்மானத்தில் ஆரம்ப வரைவும் தற்போது வெளியாகி பல்வேறு வாதப்பிரதிவாதங்களை உருவாக்கிவிட்டுள்ளது. 

இந்த நிலையில், இலங்கைக்கு ஆதரவாகவே ஜெனிவாவில் இந்தியா வாக்களிக்கும் என அண்மையில் வெளிவிவகார செயலாளர் ஒய்வுபெற்ற அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே கருத்துவெளியிட்டிருந்தார். இலங்கையை இந்தியா கைவிடக்கூடாது என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தார். 





இலங்கை இறுதி நேரத்தில் இவ்வாறான நகர்வுகளை மேற்கொண்டிருக்கின்ற போது,ஜெனீவாவில் இலங்கைக்கு இந்தியாவின் ஆதரவு என்பது வெறுமனே தட்டிலேவைத்து தாரைவார்க்கப்படமாட்டாது என இந்தியாவின் முன்னணி ஒன்லைன் ஊடகங்களிலொன்றாக திகழும் Wireரின் இராஜதந்திர விவகாரத்திற்கு பொறுப்பான ஆசிரியர்  தேவிரூபா மித்ரா தெரிவித்துள்ளார் .

ஜெனிவாவிற்கான இந்தியத்தூதுவர் இந்திரா மணி பாண்டே 46வது தொடரின் ஆரம்பத்தில் ஆற்றிய உரையைச் சுட்டிக்காட்டியுள்ள அவர் இது இறுதிவரை ஜெனிவாவில் அனைத்துதெரிவுகளையும் இந்தியா கொண்டிருக்கும் என்பதைக் கோடிட்டுக்காட்டுவதாக சுட்டிக்காட்டியுள்ளார். 

'தமிழர்களின் நியாயமான விருப்பங்களை நிறைவேற்றுவது இலங்கையின் சிறந்த நலன்களுக்கானது என்பதை இந்தியா பரிந்துரைக்கிறது' என ஜெனிவாவிற்கான இந்தியாவின் பிரதிநிதி இந்திரா மணி பாண்டே தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசியலமைப்பின் 13-வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துவது இந்தியாவின் விருப்பம் என இந்தியா தெரிவித்துள்ளது.

'இலங்கை தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் அறிக்கை மற்றும் அவரது உரையின்போது தெரிவிக்கப்பட்ட கருத்துகளை இந்தியா கவனத்தில் கொண்டுள்ளது.

இலங்கையுடன் நெருங்கிய நட்பு நாடென்ற வகையிலும் பக்கத்து நாடு என்ற நோக்குடனும் இந்தியா தொடர்ந்தும் உறுதிப்பாடுடன் இலங்கை விஷயத்தில் முன்னின்று செயற்படுகின்றது.

எவ்வாறாயினும் இலங்கை தொடர்பான இந்தியாவின் தொடர்ச்சியான நிலைப்பாடானது முக்கிய இரு தூண்களில் உள்ளது.

1. இலங்கையின் ஒற்றுமை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான ஆதரவு

2. சமத்துவம், நீதிஇ அமைதி, கௌரவத்திற்கான இலங்கைத் தமிழர்களின் விருப்பங்களுக்கு உறுதியளித்தல்

ஆகிய இரு பிராதன தூண்களை மையப்படுத்தியதாகவே எமது நிலைப்பாடு உள்ளது. இவை தவிர வேறு தேர்வுகள் இல்லை.

அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு உட்பட தமிழ்ச் சமூகத்தின் உரிமைகளை மதிப்பதுஇ இலங்கை ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் நேரடியாகப் பங்களிப்பு செய்யும் என்பதை உறுதியாக நம்புகிறோம். எனவே, தமிழ்ச் சமூகத்தின் நியாயமான விருப்பங்களை நிறைவேற்றுவது இலங்கையின் சிறந்த நலன்களுக்கானது என்பதையே இந்தியா பரிந்துரைக்கிறது.

நல்லிணக்கச் செயல்முறை மற்றும் இலங்கை அரசியலமைப்பின் 13-வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துவது உள்ளிட்ட இத்தகைய விருப்பங்களுக்குத் தீர்வு காண தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க இலங்கையைக் கேட்டுக்கொள்கிறோம்.'

என ஜெனிவாவிற்கான இந்தியத்தூதுவர் தெரிவித்திருந்தமையை சுட்டிக்காட்டியுள்ள தேவிரூபா மித்ரா  இது எளிதாக இந்தியாவின் ஆதரவு இலங்கைக்கு கிட்டமாட்டாது என்பதைக் கோடிகாட்டுவதாகவும் தெரிவித்துள்ளார். 

இந்தியா எதிர்வரும் தீர்மானத்தின் மீதான வாக்களிப்பில் எப்படி தனது நிலைப்பாட்டை எடுக்கும் என்பது தொடர்பாக இதுவரை அறிவிக்கப்படவில்லை. ஆனால் அனைத்து தெரிவுகளையும் தமக்கு முன்பாக இந்தியா வைத்துள்ளதென்பது தெளிவாகின்றது என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். 

ஜெனிவா உட்பட சர்வதேச அரங்குகளில் தனிப்பட்ட நாடுகளுக்கு எதிரான தீர்மானங்களின் போது நடுநிலைமை வகிப்பது இந்தியாவின் நிலைப்பாடாக இருந்துவருகின்றபோதும் இலங்கை விடயத்தில் அது மாறுபாடான நிலைப்பாட்டை எடுத்திருப்பதை வரலாறு உணர்த்துகின்றது. 2009ம் ஆண்டு இலங்கைக்கு சார்பாக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் போது சார்பாக வாக்களித்த இந்தியா 2012 மற்றும் 2013 ஆண்டுகளில் இலங்கைக்கு எதிராக வாக்களித்திருந்தது. 2014ல் வாக்களிப்பில் இந்தியா பங்கேற்றிருக்கவில்லை . என்ற நிலையில் 2021ல் அதன் நிலைப்பாடு எப்படியிருக்கும் என்பது இன்னமும் தெளிவற்றதாகவே உள்ளது. தமிழ்நாட்டில்  மாநில தேர்தல்கள் நடைபெற இருக்கின்ற நிலையிலும் இலங்கையில் இந்தியாவின் புவிசார் அரசியல் அபிலாஷைகள் பின்னடைவைச் சந்தித்துவரும் நிலையிலும் இந்தியாவிற்கு முன்பாக உள்ள தெரிவுகள் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக இருக்க முடியாது. ஒன்று பிரித்தானியா தலைமையிலான மேற்கு நாடுகள் கொண்டுவரும் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிப்பது இல்லையேல் 2014ம் ஆண்டில் செய்ததைப் போன்று நடுவுநிலைமை வகிப்பதே இந்தியாவிற்குள்ள தெரிவுகளாக இருக்க முடியும் .

ஆக்கம் : அருண் ஆரோக்கியநாதர்.

Sunday, February 28, 2021

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை இனி இலங்கை மறக்கவேண்டியது தானா? ஒப்பந்தத்தை சீனாவால் 198 ஆண்டுகளுக்கு நீடிக்க முடியும்!

 




முன்னாள் அரசாங்கம் இழைத்த தவறுகாரணமாக 99 வருடகால குத்தகைக்கு சீனாவிற்கு வழங்கப்பட்ட ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா 198 ஆண்டுகளுக்கு நீடிக்க கூடும் என இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவை மேற்கோள் காட்டி சீனாவின் South China Morning Post பத்திரிகை செய்திவெளியிட்டுள்ளது.  



துறைமுக ஒப்பந்தத்தை இலங்கை அரசாங்கம் மீள்பார்வைக்குட்படுத்துகின்றது என வெளியான தகவல்களையடுத்தே இலங்கை வெளிவிவகார அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளதாகவும்  அந்தச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவிடம்பெற்ற கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கு வழியின்றி முன்னைய மைத்திரி-ரணில் 'நல்லாட்சி' அரசாங்கம்  ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிற்கு 99வருட குத்தகைக்கு வழங்கும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது. 

2019ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஜனாதிபதியாகப் பதவியேற்ற கோட்டாபய ராஜபக்ஸ தாம் ஆட்சிக்கு வந்து சில நாட்களில் தமது மூத்த சகோதரர் மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக இருந்தபோது ஆரம்பிக்கப்பட்ட ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பாக 2017ல் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை மீள் பார்வைக்குட்படுத்தப்போவதாக அறிவித்திருந்தபோதும் சீனத் தரப்பினர் வெளிப்படுத்திய எதிர்ப்பை அடுத்து ஒப்பந்தத்தை மீள்பார்வைக்குட்படுத்தும் திட்டமில்லை என சில நாட்களிலேயே கூறியிருந்தார். 



இருந்தபோதும் பெப்ரவரி 6ம்திகதி சிலோன் டுடே பத்திரிகைக்கு வழங்கியிருந்த நேர்காணலில் ஜனாதிபதி கோட்டாபய ஹம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தத்தை மீள்பார்வைக்குட்படுத்தவுள்ளதாக துறைமுக அதிகார சபையின் தலைவர் ஜெனரல் தயா ரத்னாயக்க தெரிவித்திருந்தார். 

இந்தத் துறைமுகத்தில் இருந்து இலங்கை எதனையுமே பெற்றுக்கொள்ளவில்லை என கூறியிருந்த தயா ரத்னாயக்க சீன அதிகாரிகளோடு நடத்திய பல சுற்று கலந்துரையாடல்களை அடுத்து சீனாவின் கட்டுப்பாட்டின் கீழுள்ள பகுதியிலிருந்த கடற்படைத்தளத்தையும் வேறிடத்திற்கு மாற்றிவிட்டதாக சுட்டிக்காட்டியிருந்தார். 



நேற்று பெப்ரவரி 20ம்திகதி சனிக்கிழமை சிலோன் டுடே பத்திரிகைக்கு  கருத்துவெளியிட்டுள்ள வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன "முன்னைய அரசாங்கம்,  2015ம் ஆண்டு பதவிக்கு வந்ததையடுத்து ஹம்பாந்தோட்டை ஒப்பந்தத்தை இரத்துச்செய்தபின் கடனைக் கட்டவழியின்றி மீண்டும் சீனாவுடன் 2017ல் ஒப்பந்தம் செய்துகொண்டபோது   99 வருட நீண்டகால குத்தகைக்கு வழங்கியது மட்டுமன்றி  அந்த தவணை முடிந்தவுடன் மேலும் 99வருடங்களுக்கு குத்தகைய புதுப்பிக்கக்கூடியவாறான சரத்தையும் ஒப்பந்தத்தில் உள்ளடக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் ஒப்பந்தத்தில் மாற்றம் செய்ய உத்தேசித்துள்ளமை பற்றி வெளிவிவகார அமைச்சர் எதனையும் குறிப்பிடவில்லை.

இதனிடையே ஹம்பாந்தோட்டை ஒப்பந்தம் மீள்பார்வைக்குட்படுத்தப்பட்டுள்ளதான செய்திகளை சீனா மறுத்துள்ளது. புதன்கிழமை பேசிய சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் வாங் வென்பின் துறைமுக நடவடிக்கைகள் விஸ்தரிக்கப்பட்டுவருவதாக தெரிவித்துள்ளார்.

இருநாடுகளுக்கும் இடையே இடம்பெற்ற சமநிலையான தன்னார்வ பேச்சுக்களின் விளைவாகவே இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதாக கூறியுள்ள சீன வெளிவிவகார பேச்சாளர் இந்துசமுத்திரத்தின் போக்குவரத்து கைத்தொழில் மற்றும் இடவசதியேற்படுத்தல் கேந்திர ஸ்தானமாக துறைமுகத்தை மாற்றுவதே நோக்கம் எனச் சுட்டிக்காட்டியிருந்தார். 



சீனாவின் சர்ச்சைக்குரிய ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை அன்றேல் பட்டுப்பாதை திட்டத்தில் ஹம்பாந்தோட்டை முக்கியஸ்தானத்தைப் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

இலங்கையின் தென் முனையில் அமைந்துள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகம் தெற்காசியாவின் முக்கியமான கடற்பாதைகளுக்கு அருகே அமைந்துள்ளமையால் எதிர்காலத்தில் முக்கியமான கடற்போக்குவரத்து கேந்திரமுனையமாக அமைவதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது. 

புவிசார் அரசியலில் செல்வாக்குச்செலுத்துவதற்காக சீனா கடன்பொறி இராஜதந்திரத்தின் கீழ் இந்துசமுத்திரத்தில் கேந்திர முக்கியத்துவமுள்ள இலங்கையிலுள்ள இடங்களை கையகப்படுத்துவதான சர்வதேச அவதானத்திற்கும்  குற்றச்சாட்டுகளுக்கும் ஹம்பாந்தோட்டை துறைமுகம் இலக்காகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

மூலம்: South China Morning Post

https://www.scmp.com/news/china/diplomacy/article/3122975/mistake-china-can-extend-hambantota-port-lease-198-years-sri

தமிழாக்கம்: அருண் ஆரோக்கியநாதர்


Saturday, February 27, 2021

இலங்கை – பாகிஸ்தான் நட்புறவு: இந்தியாவிற்கு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் ?

 




பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பிப்ரவரி 23, 24 திகதிகளில் இலங்கைக்கு விஜயம் செய்த நேரத்தில் அவரின் நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கான அழைப்பை ரத்து செய்ததால் சர்ச்சைகள் கிளம்பியது. ஆனால் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு முன்பை காட்டிலும் அதிக வலுவுடையதாகவே இருக்கிறது. எனவே இந்த ரத்து அவர்களின் நீண்ட, நிலையான உறவில் எந்த பாதிப்பினையும் ஏற்படுத்தவில்லை.

தெற்காசியாவில் பாகிஸ்தான் இலங்கையின் இரண்டாவது மிகப்பெரிய வர்த்தக கூட்டாளி நாடாகும். பிப்ரவரி 18ஆம் திகதி அன்று இம்ரான்கான் வருகைக்கு முன்பு வர்த்தகச் செயலாளர்கள் மட்ட பேச்சுவார்த்தைகளின் போது இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகத்தில் உள்ள தொழில்நுட்ப சிக்கல்களை தீர்க்க ஒரு கூட்டு செயற்குழுவை மீண்டும் செயல்படுத்த முடிவு செய்துள்ளதாக டான் (Dawn) பத்திரிக்கை செய்தி வெளியிட்டிருந்தது.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான சுதந்திரமான வர்த்தக ஒப்பந்தம் 2005ஆம் ஆண்டிலிருந்து நடைமுறையில் உள்ளது. இலங்கைக்கு பாகிஸ்தான் ஜவுளி மற்றும் சிமெண்ட் பொருட்களை ஏற்றுமதி செய்கிறது. அதேபோன்று இலங்கை பாகிஸ்தானுக்கு தேயிலை, இரப்பர் மற்றும் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி செய்கிறது. கடந்த காலங்களில் பாகிஸ்தான் அதனுடைய பண்டைய புத்த தொடர்புகளையும் தளங்களையும் முன்னிலைப்படுத்தி இலங்கையுடன் ஒரு கலாச்சார இணைப்பில் பணியாற்ற முயன்றது.



இலங்கை மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான இருதரப்பு உறவுக்கு மிகவும் வலுவான தூணாக அமைந்தது பாதுகாப்பு. ஐ.பி.கே.ஃஎப் பணியில் இருந்து இந்தியா 1990ல் வெளியேறிய பிறகு இலங்கை ராணுவத்திற்கு எந்த விதமான பாதுகாப்பு ஆதரவினையும் வழங்க வில்லை. இருப்பினும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் உளவுத்துறை உதவிகளை வழங்கியது. இறுதிகட்ட போரின்போது தேவைப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் போன்றவற்றிற்காக இலங்கை பாகிஸ்தானை நாடியது. போர் விமான விமானிகளுக்கு பயிற்சி அளிக்கவும் பாகிஸ்தானின் ஆதரவை நாடியது. அப்போது இலங்கையின் பாதுகாப்புச் செயலாளராக இருந்த அன்றைய அதிபர் கோத்தபாய ராஜபக்‌ஷே 2008ஆம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு வருகை புரிந்து போருக்கான ராணுவ பொருட்கள் வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

உதகை வெலிங்டனில் உள்ள தேசிய பாதுகாப்பு  மற்றும் பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரியில் பயிற்சிக்காக இலங்கை ராணுவ அதிகாரிகள் இந்தியாவுக்கு வருவது போல (ஜனாதிபதி ராஜபக்‌ஷே ஒரு பழைய மாணவர்)இ அவர்கள் பாகிஸ்தான் ராணுவ கல்விக்கூடங்களுக்கு செல்கிறார்கள். இந்த மாத தொடக்கத்தில்இ பாகிஸ்தானின் பல நாடுகளின் கடற்படைப் பயிற்சியான அமன் -21 இல் இலங்கை பங்கேற்றது.

1971ம் ஆண்டு போரின் போது பாகிஸ்தானின் போர் விமானங்கள் எரிபொருளை இலங்கையில் நிரப்பின. இலங்கைக்கான பாகிஸ்தானின் தூதர்கள் பெரும்பாலும் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் தான். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பாகிஸ்தானுக்கான இலங்கை உயர் ஆணையர்களும் ராணுவ வீரர்களாகவே இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

2006 ஆம் ஆண்டு கொழும்புவில் இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஆணையர் முகமது வாலி அலுவலகம் விடுதலைப்புலிகளால் தாக்கப்பட்டது. அவர் முன்னாள் உளவுத் துறை தலைவரும் கூட. அவர் அந்த தாக்குதலில் இருந்து உயிர் தப்பினார் இருப்பினும் அந்த தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர்.  இம்ரான் கானின் வருகை பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு வழி வகுத்தது. பாதுகாப்பு துறையில் 50 மில்லியன் அமெரிக்க டாலர்கள் உதவி என்பது தலைப்பு செய்திகளாக இருந்தன.



கண்டியின் பேராதெனியபல்கலைக்கழகத்தில் ஆசிய கலாச்சாரம் மற்றும் நாகரீகம் தொடர்பாக பாகிஸ்தான் ஒரு மையத்தை உருவாக்க உள்ளது. நாடாளுமன்ற உரை ரத்து செய்யப்பட்ட பின்பும் கூட, அங்கிருக்கும் ஒரு விளையாட்டு அரங்கிற்கு இம்ரான் கானின் பெயர் சூட்டப்பட்டு இரு நாடுகளுக்கும் இடையேயான கிரிக்கெட் தொடர்பை வெளிப்படுத்தினர்.

உறுதியான விளைவுகளை தவிர பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இந்த வருகை மிகவும் முக்கியமானது. இம்ரான் கான் பிரதமராக பதவியேற்ற பிறகு இது இரண்டாவது சுற்றுப்பயணம் ஆகும்.  கடந்த நவம்பர் மாதத்தில் அவர் ஆப்கானிஸ்தானுக்கு சென்றார். இறுதியாக இலங்கைக்கு வந்த பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப். பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் முயற்சியில் இந்தியாவின் பங்கு சிறப்பாக இருந்தபோதிலும் இஸ்லாமாபாத்திற்கு அண்டை நாடுகளின் நட்புறவு இருக்கிறது என்பதை உறுதி செய்தது அந்த வருகை. தொற்று நோய் பரவலுக்கு பிறகு இலங்கைக்கு விஜயம் செய்த முதல் அரசாங்க தலைவர் இம்ரான்கான். அவர் கொழும்பு பொறுத்தவரையில் இந்த வருகை சர்வதேச அரங்கில் முக்கியமான நிகழ்வாக கருதப்படுகிறது.

கொரோனா வைரஸால் உயிரிழந்த இஸ்லாமியர்களின் உடல்களை இலங்கை அரசு அப்புறப்படுத்திய விதம் இஸ்லாமிய நாடுகளை திகைப்பிற்கு ஆளாக்கியது. அடக்கம் நடைபெறவில்லை. ஆனால் அனைத்து உடல்களும் தகனம் செய்யப்பட்டன. இந்த விதி இலங்கையில் பெரும் புயலை உருவாக்கியது. இஸ்லாமியர்களை துன்புறுத்த அரசு இந்த முறையை பயன்படுத்துகிறது என்று தலைவர்கள் நம்பினார்கள்.



இலங்கையின் மக்கள்தொகையில் சுமார் 11 சதவீதத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள், கடந்த பத்தாண்டுகளில் சிங்கள புத்த பெரும்பான்மையினருடன் பதட்டமான உறவைக் கொண்டிருந்தனர். கலவரங்கள் சில வருடங்களுக்கு ஒருமுறை அமைதியைக் குலைக்கும். ஐ.எஸ்.ஐ.எஸ் உறுப்பினர்களாக இருப்பதாகக் கூறும் ஆண்கள் மற்றும் பெண்கள் குழுவினரால் நடத்தப்பட்ட ஈஸ்டர் 2019 குண்டுவெடிப்பின் பின்னர் பதட்டங்கள் அதிகரித்தன. ஒரு இஸ்லாமிய நாட்டின் தலைவர் இலங்கைக்கு வருவது நல்ல விதமாக பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே கொழும்பு துறைமுகத்தில் கிழக்கு கண்டெய்னர் தீர்ப்பாயம் அமைக்கும் முத்தரப்பு ஒப்பந்தத்தில் இருந்து திடீரென இலங்கை, இந்தியா மற்றும் ஜப்பானை வெளியேற்றியது. மேலும் சீன நிறுவனம் ஒன்றுக்கு புதுப்பிக்கத்தக்க ஆற்றலை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் ஒப்பந்தம் ஒன்றை இலங்கை வழங்கியுள்ளது. இதனால் அதிருப்தியில் இருக்கும் இந்தியாவை மேலும் எதிர்க்க இலங்கை விரும்பவில்லை என்பதால் இலங்கை நாடாளுமன்றத்தில் காஷ்மீர் விவகாரம் குறித்து இம்ரான் கான் பேசலாம் என்ற யூகமே அவரின் உரையை ரத்து செய்ய காரணமாக இருந்தது என்று ஒரு தரப்பு தெரிவிக்கின்றது.



இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே நல்ல உறவை சமநிலையில் வைத்துக் கொள்ள இலங்கை கற்றிருக்கிறது. வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதற்காக சீனா பாகிஸ்தான் பொருளாதார அமைப்பை பயன்படுத்திக் கொள்ள கான் தனது வட்டாரத்திற்கு அழைப்பு விடுத்தது எந்தவொரு எதிர்வினையையும் வெளிப்படுத்தவில்லை, குறைந்தபட்சம் பொதுவில் இல்லை எந்தவிதமான எதிர்ப்பும் வெளியாகவில்லை.

இலங்கையின் மிக நெருங்கிய நட்பு நாடாக இருக்கும் நிலையிலும், கொழும்புவில் பாகிஸ்தானை எதிரியாக இந்தியா கருதவில்லை. கானின் விமானம் இந்திய பரப்பில் பறக்க டெல்லி அனுமதி வழங்கியது. சமீபத்தில் எல்.ஓ.சியில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தினால் கூட இந்த அனுமதி வழங்கப்பட்டிருக்கலாம். அல்லது போர்நிறுத்தம் தொடர்பான உடனடி இந்தியா-பாகிஸ்தான் ஒப்பந்தம் இல்லாமல் கூட அனுமதி வழங்கப்பட்டிருக்கலாம்.

அவ்வப்போது, இந்திய பாதுகாப்பு அமைப்பு முஸ்லிம்களை தீவிரமயமாக்குவதில் பாகிஸ்தானின் பங்கு குறித்து கவலை தெரிவித்துள்ளது – குறிப்பாக கிழக்கு இலங்கையில். அங்கு சில புதிய மசூதிகளை எழுப்ப்ப மேற்கு ஆசிய நாடுகளிலிருந்து நிதி வழங்கப்பட்டுள்ளது. இது இந்தியாவிலும் விளைவுகளை ஏற்படுத்தக் கூடும்.


நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ் 

இந்தக் கட்டுரை முதலில் இந்தியன் எக்ஸ்பிரஸில் பிரசுரமானது. மக்களுக்கு  அறிவூட்டும் நன்நோக்குடன் குளோப்தமிழில் மீள்பிரசுரிக்கப்படுகின்றது. 

Saturday, February 20, 2021

ஜெனிவா இலங்கையில் நிகழ்த்தும் ஆச்சரியங்கள்!

ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 46வது கூட்டத்தொடர் எதிர்வரும் திங்கட்கிழமை ( பெப்ரவரி 22ம் திகதி)  ஆரம்பமாகவுள்ள நிலையில் இம்முறை அமர்வுகள் எவ்வாறு அமையப்போகின்றன என்ற கேள்விகள் மக்கள் முன்பாக காணப்படுகின்றன. 

மனித உரிமைப் பேரவையினூடாக எதனையும் செய்யமுடியாது என நம்பிக்கையிழக்க வைக்கும் கருத்துக்களை கடந்த காலத்தில் கூறியவர்களே தற்போது புருவங்களை உயர்த்தும் அளவிற்கு  46வது அமர்விற்கு முன்பாக இலங்கையில் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன.

                                  உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.எச் .எம்.டி. நவாஸ்


ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்சேல் பாச்லேட் அம்மையார் இலங்கை தொடர்பான அறிக்கையை இலங்கை அரசாங்கத்தின் பதிலுக்காக அனுப்பிவைத்திருந்த நிலையில் கடந்த ஜனவரி மாத பிற்பகுதியில் நிலைமையின் பாரதூரத்தை உணர்ந்து உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.எச் .எம்.டி. நவாஸ் தலைமையில் மூவரடங்கிய ஆணைக்குழுவை இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரிப்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நியமித்திருந்தார். மனித உரிமைப்பேரவையின் 46வது அமர்வு ஆரம்பமாவதற்கு ஒரு மாத காலப்பகுதியிருந்த நிலையில் இந்த நியமனம் அமைந்திருந்தது. மைத்திரி-ரணில் காலத்தில் எதிர்க்கட்சியாக இருந்தபோதும் பின்னர் ஜனாதிபதித் தேர்தல் பொதுத்தேர்தல் பிரசாரத்தின் போதும் போர்க்குற்றச்சாட்டுக்களை முற்றாக நிராகரித்து வந்த அரசாங்கம் பொறுப்புக்கூறலைப்பற்றியோ நல்லிணக்கத்தைப் பற்றியோ துளிகூட கவலைப்படாத தற்போதைய அரசாங்கம், திடுதிடுப்பென ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்தமை எதிர்வரும் அமர்வு தொடர்பாகவும் கடந்த ஜனவரி மாதம் 27ம்திகதி ஐநா மனித உரிமைகள் ஆணையாளாரால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்ட அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பாகவும் அரசாங்கம் கொண்டுள்ள கவலைகளை புலப்படுத்துகின்றன. 


                                               சக்திக சத்குமார

சில வாரங்களுக்கு முன்பாக புனைக்கதை  எழுத்தாளர் சக்திக சத்குமார விடுதலை செய்யப்பட்டிருந்தார்.  சத்குமார எழுதிய புனைக்கதையானது புத்தமத்திற்கு இழுக்கையும் அபகீர்த்தியையும் கொண்டுவருவதான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் கைதுசெய்யப்டிருந்த சத்குமார பலமாதங்களாக சிறையில் வாடியிருந்தார். 



ஜெனிவா அமர்வுகளுக்கு சில நாட்கள் இருகைiயில் அவர்  விடுவிக்கப்பட்டாரென்றால்  கடந்த பத்துமாதங்களாக நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படாதிருந்த வழக்கறிஞர் ஹிஜாஸ் ஹிஸ்புல்லா நேற்றுமுன்தினம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டிருந்தார். இதற்குப் பின்னாலும் எதிர்வரும் ஜெனிவா அமர்வுதான் காரணம் என்பதில் சந்தேகத்திற்கிடமில்லை.



போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக நம்பகரமான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள இராணுவ அதிகாரிகள் மீது பயணத்தடை , சொத்துக்கள் முடக்கம் ,வெளிநாடுகளில் வழக்குத்தொடரல் போன்ற கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்ற அச்சத்தால் ஆட்கொள்ளப்பட்டிருக்கும் அரசாங்கம் ஜெனிவாவில் புதிய தீர்மானத்தை தடுப்பதற்கும் இல்லாவிடின் நீர்த்துப் போகச் செய்யகடுமையான முயற்சிகளை எடுத்துவருகின்றது.  ஏற்கனவே தமிழ்க்கட்சிகளாலும் மனித உரிமை ஆர்வலர்களாலும் கண்துடைப்பு ஏமாற்று முயற்சி காலத்தை இழுத்தடிக்கும் செயல் என வர்ணிக்கப்பட்ட நவாஸ் தலைமையிலான ஆணைக்குழு போன்றோ சக்திக சத்குமார, ஹிஜாஸ் ஹிஸ்புல்லா போன்றோ இன்னமும் எத்தனை  நகர்வுகள்  நடாத்தப்படவுள்ளதோ?

Thursday, February 18, 2021

தொற்றுநோய் காலத்தில் பற்றாக்குறையில் மஞ்சள் :விவசாயிகள் நிலைதான் என்ன?

 




மன்னார், இலங்கை – தோட்ட உபகரணங்கள், நாய் மற்றும் பூனை ஆகியவற்றால் சூழ்ந்துள்ள சஞ்சோன் சலமோன் துரம், நுண்ணுயிரிகள் பற்றிய தனது புத்தகங்களைத் தூசு தட்டுகிறார். வீடு அமைதியாக இருக்கிறது; பல மாதங்களுக்கு முன்பு தனது மனைவியை இழந்த 76 வயதான அவரும் இறக்க விரும்பினார்.

ஆனால் மஞ்சள் குமிழ்கள் அவரது காப்பாளனாகி விட்டன. அவர் கோப்பிப் பயிர்ச் செய்கையில் ஈடுபடுகின்ற அதே வேளை, எண்ணிக்கையில் அதிகரித்து வரும் வீட்டுத் தோட்டக்காரர்களைப் போல, சமீபத்தில் இஞ்சி போன்ற தாவரத்தையும் (தனது தோட்டத்தில்) சேர்த்தார்.

பலா மரங்கள் மற்றும் நெல் வயல்கள் நிரம்பிய நாட்டின் தொலை வடக்கின் நீட்சியாகவுள்ள இப்பிரதேசம் வறட்சி காரணமாக ஆண்டுதோறும் வறண்டு போகிறது. ஆனால் மண்ணின் பச்சை முளைகளாகவுள்ள புதிய மஞ்சள் செடிகள் இந்த மிதமான மண்டலத்திற்கு உகந்தவையாகவும் சலமோனின் தோட்டத்தின் நிழல் பகுதியில் செழித்தும் வளர்கின்றன. 'வாற வருசம் நான் ஒரு ஏக்கர் செய்யலாம் என்று யோசிக்கிறன்' என எரியும் வெயிலிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள கசங்கிய வெள்ளை தொப்பியை அணிந்திருந்த அவர் கூறுகிறார்.

ஏனைய இலட்சியமுள்ள தோட்டக்காரர்களும் இதனை பின்பற்றுவார்கள் என்று இலங்கை அரசாங்கம் நம்புகிறது. பல இலங்கை மக்களின் உணவு மற்றும் சடங்குகளில் இன்றியமையாததாகக் கருதப்படும் மஞ்சளின் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக அதிகாரிகள் 2019 டிசம்பரில் அதன் இறக்குமதிக்குத் தடை விதித்தனர். இந்தத் தடை புதிதாக பயிர்ச்செய்கை ஆரம்பித்துள்ள தோட்டக்காரர்களிடையே ஆர்வத்தைத் தூண்டியுள்ளதுடன், மஞ்சளுக்குப் பற்றாக்குறை ஒன்றையும் ஏற்படுத்தி கடத்தலுக்கும் மதிப்புமிக்க செடியின் விலையைக் கூட்டவும் வழி கோலியுள்ளது.

இந்த (கொரோனாவைரஸ்) தொற்றுநோய் காலத்தில் மஞ்சளின் தேவை மேலும் அதிகரித்துள்ளது. பல இலங்கையர்கள் அதன் துடிப்பான செம்மஞ்சள் வேரை வீட்டு வைத்தியமாகவும், நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதற்கும், நோய்களைத் தடுப்பதற்கும் பயன்படுத்துகின்றனர். ஆனால் அதைப் பணப் பயிராக மாற்றுவதற்கான அரசாங்கத்தின் முயற்சி ஒரு கடினமான யதார்த்தத்தை சந்திக்கிறது: விவசாயிகளால் கேள்வியைத் தக்க வைத்துக் கொள்ள முடியாமல் மஞ்சளுக்காக நாடு தவழ்கிறது.

இந்தப் புகைப்படத்தை பிடித்தவர்:வெற்றிச்செல்வி சந்திரகலா, ஜிபிஜே, ஸ்ரீ லங்கா

சஞ்சோன் சலமோன் துரம் வடக்கு இலங்கையில் உள்ள தனது மஞ்சள் செடிகளுக்குள் இருக்கிறார். அவரைப் போன்ற ஆர்வமுள்ள தோட்டக்காரர்களின் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக மஞ்சள் இறக்குமதியை செய்ய அரசாங்கம் தடை விதித்துள்ளது.


வீட்டுத் தோட்டங்களில் மஞ்சள் வளர்ப்பதில் மக்களின் 'வலுவான ஆர்வம்' குறித்து அதிகாரிகள் பந்தயம் கட்டுவதைப் போல அதிகமாக நம்பியுள்ளதாக ஏற்றுமதி விவசாயத்துறைப் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ஏ.பி.ஹீன்கெண்டா கூறுகிறார். 'ஜனவரி முதல் மே வரை பெரிய அளவிலான பயிர்ச் செய்கையுடன் ... {வீட்டுத் தோட்டக்காரர்கள்} 2021 ஆம் ஆண்டின் இறுதிக்குள் தன்னிறைவு அடைய எங்களுக்கு உதவ வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்.'

2019 ஆம் ஆண்டில் மஞ்சள் இறக்குமதிக்காக அரசாங்கம் 1.2 பில்லியன் இலங்கை ரூபாயை (சுமார் 6.4 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) செலவிட்டது. 2020 ஆம் ஆண்டில், தடையின் காரணமாக, நாடு எதையும் இறக்குமதி செய்யவில்லை.

இலங்கை தனது சொந்த தேவைகளைப் பூர்த்தி செய்ய ஆண்டுக்கு சுமார் 6,000 மெட்ரிக் தொன் மஞ்சளை உற்பத்தி செய்ய வேண்டும் என்று ஹீன்கெண்டா கூறுகிறார். நாடு தற்போது அந்தத் தொகையில் மூன்றில் ஒரு பங்கையே உற்பத்தி செய்கிறது.

மஞ்சள் இலங்கை சமுதாயத்துடன், குறிப்பாக தமிழ் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்துடன் பிணைந்துள்ளது. மஞ்சள் இல்லாத சமையலறைகளே இல்லை. மக்கள் அரைதத மஞ்சளை ஒரு தொற்று விரட்டியாகத் தமது மேனிகளுக்குப் பூசுகின்றனர். அதன் தூளைக் கறிகளில் சேர்க்கின்றனர். வீடுகளுக்கும் வீட்டைச் சுற்றியும் தொற்று நீக்கியாகத் தெளிக்கிறார்கள்.

அம்மை மற்றும் சரும நோய்களைக் குணப்படுத்த இலங்கையர்கள் ஒரு தீர்வாக அரைத்த மஞ்சளைப் பயன்படுத்துகின்றனர். சிலர் மஞ்சள் தூளை சூடான எண்ணெய்யில் கலந்து பாதிக்கப்பட்ட விரல் நகங்கள் அல்லது பிற காயங்களுக்குப் பயன்படுத்துகிறார்கள். மற்றவர்கள் காய்கறிகளைக் கழுவுவதற்கும், மசாலாவாகப் பயன்படுத்தி உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் போது உடம்பை வெது வெதுப்பாக வைத்திருக்கப் பயன்படுத்துவர். கோயில்களிலும், பிற மத நிகழ்வுகளிலும் இந்துக்கள் மஞ்சள் நீரில் தங்களைத் தூய்மைப்படுத்துகிறார்கள்.

விலை அதிகரிப்பு மஞ்சள் விற்பனையை ஒரு கிலோவுக்கு (2.2 இறாத்தல்கள்) 750 ரூபாய்க்கு (சுமார் 4 அமெரிக்க டாலர்கள்) கட்டுப் படுத்த அரசாங்கத்திற்கு வழி வகுத்தது. ஆனால் அது மக்கள் தமது வீடுகள் தோறும் பூக்கன்றுகள் வளர்ப்பதைப் போலவே மஞ்சள் செடிகளையும் வளர்ப்பதைத் தடுக்கவில்லை.

இந்தப் புகைப்படத்தை பிடித்தவர்:வெற்றிச்செல்வி சந்திரகலா, ஜிபிஜே, ஸ்ரீ லங்கா

தீவின் வடக்கே மன்னாரில் உள்ள ஒரு பண்ணையில் மஞ்சள் பயிர்ச் செய்கையில் ரெனில் லூஜியா உதவுகிறார். மஞ்சள் இலங்கையின் உணவு மற்றும் சடங்குகளுடன் ஒருங்கிணைந்ததாகும். நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான ஒரு தீர்வாக இது தொற்றுநோயின் போது இன்னும் பிரபலமாகியுள்ளது.

மதனவேந்தன் சந்திராவின் வேயப்பட்ட கூரையுடனான திறந்தவெளி வீட்டிற்கு அடுத்ததாக உள்ள சிறிய தோட்டத்தில் சுமார் 50 மஞ்சள் கன்றுகள் மண்ணிலிருந்து வெளிவந்து எட்டிப் பார்க்கின்றன. இரண்டு சிறுமிகளின் தாயான அவர் கன்று ஒன்றைத் தலா 70 ரூபாய்க்கு (0.37 அமெரிக்க டாலர்கள்) விற்கிறார்.

“மஞ்சள் மலரின் வாசனை நன்றாக உள்ளது. நான் தோட்டத்திற்குள் நடந்து செல்லும்போது அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது,” என்று முகத்தில் ஒளிரும் பெருமையுடன் அவள் கூறுகிறாள். சந்திரா மஞ்சள் செடியை மாத்திரம் வளர்க்கும் தோட்டத்துடன் ஒரு வீட்டைக் கட்ட வேண்டும் என்று கனவு காண்கிறாள்.

ஆனால் சந்திரா போன்றவர்களின் முயற்சிகளால் பற்றாக்குறையை இன்னும் ஈடுசெய்ய முடியவில்லை. கஞ்சா கடத்தல் நடவடிக்கைகளுக்காக முன்பு கடற்கரையில் ரோந்து சென்ற அதிகாரிகள் இப்போது மஞ்சள் கடத்தல்களை மடக்கக் காத்திருக்கின்றனர்.

இந்தியாவில் இருந்து மன்னார் வளைகுடாவுக்கான மஞ்சள் கடத்தல், குறிப்பாக மன்னாரில், பரவலாக இடம்பெறுகிறது. அக்டோபர் மாதம் கடலோரப் பகுதிகளில் 6,000 கிலோ கிராம் (13,227 இறாத்தல்கள்) உலர்ந்த மஞ்சளை இலங்கை கடற்படை கைப்பற்றியது. செப்டம்பர் விசாரணைகளில் 3,000 கிலோகிராம் (6,614 இறாத்தல்கள்) கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தப் புகைப்படத்தை பிடித்தவர்:வெற்றிச்செல்வி சந்திரகலா, ஜிபிஜே, ஸ்ரீ லங்கா

மஞ்சள் செடிகளை விற்பனை செய்வதால் வாழ்வாதாரத்தை அமைத்துக் கொள்ளலாம் என மதனவேந்தன் சந்திரா நம்புகிறார். இலங்கை இறக்குமதியைத் தடுத்த பின்னர் மஞ்சளுக்கான கேள்வி அதிகரித்துள்ளது. நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள தனது திறந்தவெளி வீட்டிற்கு வெளியே அவள் அவற்றை வளர்க்கிறாள்.

விற்பனையாளர்கள் கலப்படம் செய்து உற்பத்தி செய்யப்பட்ட மஞ்சள் தூளை தரமானதாகக் காட்டி விற்பனை செய்கின்றனர். இலங்கை நுகர்வோர் அதிகார சபை கடந்த ஆண்டு ஏராளமான வர்த்தகர்களிடமிருந்து கலப்படம் செய்யப்பட்ட மஞ்சளைக் கைப்பற்றியதுடன்இ சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

மக்களில் சிலர் அரசாங்கத்தின் தன்னிறைவு வாக்குறுதி பற்றி சந்தேகம் கொண்டுள்ளனர். 'மஞ்சள் பயிர்ச்செய்கை எங்கள் பகுதிக்குப் புதிது' என மன்னார் விவசாயி மரியாராஜா நிக்சன் கூறுகிறார். 'அவசரமாக இறக்குமதியை தடை செய்ய வேண்டிய அவசியமில்லை'.

இலங்கை அதன் முக்கிய மூலப்பொருட்களில் ஒன்றுக்காக அடுத்தவர்களை நம்பியிருப்பதை நிறுத்த வேண்டும் என்று அரசாங்கம் வாதிடுகிறது. பயிற்சி அளிப்பதன் மூலமும்இ நூற்றுக்கணக்கான நாற்றுகளைக் கொண்ட பைகளைக் குறைந்த விலையில் வழங்குவதன் மூலமும் மக்கள் இத்தாவரத்தை வளர்ப்பதை எளிதாக்குவதாக அதிகாரிகள் கூறுகிறார்கள்.

' அநேகமான வீடுகளில் 100 இற்கு 95 வீடுகளி;ல் ஒன்றாக மஞ்சள் இருக்கிறது. அவ்வாறு பார்த்தால் ஏறக்குறைய 20000-25000 வரையான நாற்றுகள் உள்ளன' என்று வடக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தின் தோட்டக்கலை விவசாய பாடத்திட்ட அதிகாரியான இருதயநாதன் அல்ஜின் குரூஸ் கூறுகிறார். 'பலசரக்குக் கடைகளில் மஞ்சள் தட்டுப்பாடு ஏற்பட்ட நாட்களிலேயே மக்கள் பயிரிடலில் ஆர்வம் காட்டத் தொடங்கி விட்டார்கள். எதிர்காலத்தில் குடிசைக் கைத்தொழிலாக மாறஏ வாய்ப்பு இருக்கிறது.'

இலங்கை மஞ்சளின் எதிர்காலம் குறித்து பந்தயம் கட்டும் சீமாம்பிள்ளை ஜெயபாலனையும் இந்த ஆர்வம் பிடித்திருக்கிறது.

அருட்தந்தை ஜெயபாலன் அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த 14 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்குகிற ஒரு பயிற்சி பண்ணையை மன்னாரில் நடத்தி வருகிறார். இந்தப் பண்ணையில் வாழைப்பழங்கள், கொய்யா மற்றும் மாதுளை ஆகியவை நிறைந்துள்ளன. மஞ்சள் செடிகள் இப்போது மா மரங்களின் நிழலில் வளர்கின்றன.

'நாங்கள் கவலைப்படவில்லை' என்று (இறக்குமதித்) தடையை ஆதரிக்கும் ஜெயபாலன் கூறுகிறார். 'மற்றவர்களில் தங்கியிருப்பதால் நாடு வளர்ச்சியுராது.'


இந்தக் செய்திக் கட்டுரையை இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள மன்னார் நகரத்தை மையமாகக் கொண்ட வெற்றிச்செல்வி சந்திரகலா குளோபல் பிரஸ் ஜேர்னலுக்காக எழுதியுள்ளார். இந்த ஆக்கத்தின் முழு உரிமை குளோபல் பிரஸ் நிறுவனத்திற்குரியது.  அதிகமான மக்களை தரமான இந்த ஆக்கம் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் குளோப் தமிழ் இந்த ஆக்கத்தை மீள் பிரசுரம் செய்துள்ளது. 


Monday, February 15, 2021

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை பின்னணி தொடர்பான சர்ச்சைகள்…?



பொத்துவில் தொடங்கி பொலிகண்டிரை பேரணி, சற்றும் எதிர்பாராத வகையில் பெருந்திரளான மக்கள் ஒன்றுதிரள்வதற்கு காரணமானது. பொத்துவிலில் விரல்விட்டு எண்ணக் கூடிய நிலையிலிருந்த பேரணி, பொலிகண்டியில் பல்லாயிரக்கணக்கானவர்களோடு நிறைவுற்றது. 2009இற்கு பின்னர் இடம்பெற்ற ஜனநாயக எதிர்ப்பு நடவடிக்கைகளோடு ஒப்பிட்டால் இது உச்சமானது. ஆனால் பேரணி மெதுவாக நகரத் தொடங்கிய போது  கூடவே, இதன் உரிமையாளர்கள் தொடர்பான கேள்விகளும் சர்ச்சைகளும் இணைந்துகொண்டது. இவ்வாறான நிகழ்வுகள் இடம்பெறும் போது இது ஓரளவு எதிர்பார்க்கக் கூடிய ஒன்றும்தான். 

இந்த ஏற்பாட்டிற்கு பின்னால் சிவில் சமூக அமைப்புக்கள் இருப்பதாக கூறிக்கொண்டாலும் கூட, ஒரு குறிப்பிட்ட கட்டம் வரைக்கும், சிவில் சமூக தலைவர்களின் பெயர்களே வெளியில் வரவில்லை. இந்த இடத்தில்தான் பிரச்சினை கருக்கொண்டது. திருகோணமலையில் பிரச்சினை வெளியில் முகம்காட்டியது. திருகோணமலை சிவின் கோவிலடியில் இடம்பெற்ற ஆதரவுக் கூட்டத்தின் போது, சிவில் சமூக அமைப்புக்களின் சார்பில் பேசிய கத்தோலிக்க மதகுரு எழில் - பேரணியுடன் நிழலாக தொடரும் பிரச்சினைகளை போட்டுடைத்தார். தமிழ் இனம் காலம்காலமாக வரலாற்றில் எட்டப்பர்களை சந்தித்து வருவதாகவும் நேற்றைய தினம் (முதல் நாள் பேரணியில்)  ஒரு கட்சியின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள், போராட்டத்தை திசைதிருப்ப முற்பட்டதை வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இதன் போது, அங்கு நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்தின், சாணக்கியன் ஆகியோர் பிரச்சன்னமாகியிருந்தனர். 

குறித்த மதகுருவின் கருத்து மறைமுகமாக சுமந்திரனும் சாணக்கியனும் புதிய எட்டப்பர்களாக தொழிற்படுவதான ஒரு காட்சியை உருவாக்கியது. உண்மையில் இவ்வாறான அபிப்பிராயங்கள்; அவ்வாறானதொரு இடத்திற்கு பொருத்தமானதல்ல. அவை பொறுப்பற்ற வார்த்தைகள்தான்.  இதனைத் தொடர்ந்தே பொத்துவில் தொடங்கி பொலிகண்டிவரை – பேரணியின் உரிமையாளர்கள் யார்? என்னும் சர்ச்சைகள் எட்டிப்பார்த்தன. அதாவது, சிவில் சமூகமென்று கூறிக்கொண்டாலும் கூட, உண்மையில் கூட்டமைப்பே இதற்கு பின்னால் இருப்பதாக, குறிப்பாக சுமந்திரன் இருப்பதான ஒரு அபிப்பிராயம் வெளியில் வந்தது. இதன் உண்மை பொய்க்கு அப்பால், நிகழ்வின் முடிவில், பேசுகின்ற போது, பொத்துவிலில் இந்த நிகழ்வை ஆரம்பித்தவர்கள் முடித்துவைக்கின்றோம். இடையில் வந்தவர்கள் போய்விட்டார்கள் ஆனாலும் நாங்கள் ஒற்றுமையை பேணிப்பாதுகாக்க வேண்டுமென்று, சுமந்திரன் பேசியிருந்தார். இதன் பொருள் என்னவென்பதில் தெளிவில்லை. ஏற்பாட்டாளர்கள் என்போரும் இது தொடர்பில் இதுவரையில் வாய்திறக்கவில்லை. 

ஆனால் ஒரு விடயம் வெள்ளிடைமலை. அதாவது, பொத்துவிலில் பேரணி ஆரம்பிக்கும் போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சாணக்கியன் ராஜபுத்திர ராசமாணிக்கம் ஆகியோர் அங்கு பிரசன்னமாகியிருந்தனர். அதே போன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினரான சட்டத்தரணி சுகாசும் பங்குகொண்டிருந்தார். பேரணி, கிழக்கின் நகரங்களை ஊடறுத்துச் சென்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சுமந்திரன் மற்றும் சாணக்கியன் ஆகியோர், முக்கிய பங்கு வகித்ததாகவே கூறப்படுகின்றது. குறிப்பாக பொத்துவிலில் இந்த பேரணியை ஆரம்பித்த போது, பொலிசார் சில தடைகளை ஏற்படுத்த முயற்சித்திருந்தனர். பொலிசாரின் தடையுத்தரவை மீறியும் செல்லலாம் என்பதற்கான வழியை அவர்களே திறந்துவிட்டதாகவும் ஒரு வேளை அவர்கள் அந்த இடத்தில் பின்வாங்கியிருந்தால் இந்தப் பேரணியின் முடிவு வேறுவிதமாகவும் அமைந்திருக்கலாம் என்றும் ஒரு கருத்துண்டு. தான் வரும்வரையில் பேரணியை ஆரம்பிக்காமல் காத்திருந்ததா சில தினங்களுக்கு முன்னர் ஒரு நேர்காணலில் சுமந்திரன் குறிப்பிட்டிருந்தார். இவ்வாறானதொரு பின்னணியில்தான், குறித்த சூழலில், பேரணியை முழுமையாக வழிடந்தும் பொறுப்பும் அவர்களிடம் சென்றது. இது இயல்பான ஒன்றுதான்.  ஒரு குறிப்பிட்ட நெருக்கடியின் போது, எவர் நெருக்கடியை எதிர்கொள்ளும் பொறுப்பை ஏற்கின்றாரோ அல்லது அதற்கான ஆத்மபலத்தை வழங்குகின்றாரோ – அவர்களிடம் இயல்பாகவே தலைமை சென்றுவிடும்.  பேரணி, கிழக்கின் பல நகரங்களை ஊடறுத்துச் சென்ற ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும், சுமந்திரனும் சாணக்கியனுமே முன்னிலையில் தெரிந்தனர். குறிப்பாக முஸ்லிம்களின் ஆதரவை பெறுவதில் இவர்களின் பங்களிப்பே முதன்மையானது. ஏனெனில் சிவில் சமூகமாக தங்களை அடையாளப்படுத்தியிருந்த எவருமே முஸ்லிம்களின் ஆதரவை பெறக் கூடிய தகுதிநிலையில் இருந்திருக்கவில்லை. மேலும் வடக்கு கிழக்கு சிவில் சமூகம் என்பதில் முஸ்லிம் சிவில் சமூக அமைப்புக்களோ அல்லது மதத் தலைவர்களோ உள்வாங்கப்பட்டிருக்கவுமில்லை. ஆரம்பத்தில் பேரணி தொடர்பில் பல்வேறு இடங்களிலும் சுமந்திரனே உரையாற்றியிருந்தார்.

இது ஒருவிதமான சர்ச்சையென்றால் இந்தப் பேரணி மெதுவாக நகர்ந்துகொண்டிந்த போதுஇ பறிதொரு சர்ச்சையும் மெதுவாக கண்சிமிட்டியது. இது மிகவும் பழகிப்போன சர்ச்சைதான். இதுவும் எதிர்பார்க்கக் கூடிய ஒற்றே! இப்போதும் இந்த சர்ச்சை ஆங்காங்கே எட்டிப்பார்ப்பதால் இந்த முடிச்சையும் அவிழ்ப்பது நல்லதே! 

இந்த நிகழ்விற்காக வடக்கு மற்றும் கிழக்கிற்கான இணைப்பாளர்களாக இருவர் நியமிக்கப்பட்டிருந்தனர். வடக்கிற்கு இணைப்பாளராக நியமிக்கப்பட்டவர் எஸ்.சி.சி.இளங்கோவன். கிழக்கிற்கான இணைப்பாளராக நியமிக்கப்பட்டவர் சீலன் என்று அழைக்கப்படும் எஸ்.சிவயோகநாதன். இது ஏற்கனவே ஊடகங்களிலும் வெளியாகிருந்தது. 

இந்த இடத்திலிருந்துதான் சர்ச்சையும் கருக்கொண்டது.  இளங்கோவன்  சந்திரகாசனின் புதல்வர். அதாவது, தமிழரசு கட்சியின் தந்தையான எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் பேரன். சந்திரகாசனின் ஆரம்பகாலம் தொடர்பில் ஒரு சர்ச்சையுண்டு. தமிழ் இயக்கங்களுக்கு இந்தியா பயிற்சி வழங்கிய காலத்தில்இ இந்திய உளவுத்துறையான றோவிற்கும் தமிழ் இயக்கங்களுக்கும் இடையிலான தொடர்பாளராக,அவர் செயற்பட்டதாக கூறப்படுவதுண்டு. இது தொடர்பில் அன்ரன் பாலசிங்கம் தனது போரும் சமாதானமும் நூலிலும் பதிவு செய்திருக்கின்றார்.  ஆனால் அண்மையில் பேராசிரியர் சூரியநாராயணன் வெளியிட்டிருக்கும் ஹக்சர் : இந்தியாவின் இலங்கை தொடர்பான கொள்கை என்னும் நூலில் - பலரும் வெளியில் கூறுவதுபோன்று, சந்திரகாசனுக்கும் றோவிற்கும் எவ்வித தொடர்புமில்லை - உயர்மட்ட தகவல்களின்படி இவ்வாறான ஒருவர் தொடர்பில் இருந்ததாக எவ்வித தகவல்களும் இல்லையென்று வாதிட்டிருக்கின்றார். ஆனால் ஒரு தகவல் பொதுவெளியில் பதிவு செய்யப்பட்டுவிட்டால் பின்னர் அதனையே பலரும் நம்புவதுண்டு. இதில் பிறிதொரு நெருடலான பக்கமும் சிலரிடமுண்டு. அதாவதுஇ குறித்த இளங்கோவனும் சிவயோகநாதனும் ஏற்கனவே தொடர்பிலிருப்பவர்கள்.  கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது, இளங்கோவன் கூட்டமைப்பு சார்பில், திருகோணமலையில் போட்டியிடுவதற்கு முயற்சித்திருந்தார். ஆனாலும் சம்பந்தன் போட்டியிடும் முடிவை அறிவித்த நிலையில் ஒதுங்கிக்கொண்டார். 



இளங்கோவன் வடக்கிற்கான இணைப்பாளராக செயற்பட்டதை அடிப்படையாகக் கொண்டுதான்இ இதற்கு பின்னால் இந்தியா இருப்பதான ஒரு அப்பிராயத்தையும் சிலர் கூறமுற்பட்டனர். என்னுடன், ஒரு புலம்பெயர் நன்பர் இது தொடர்பில் வாதிட்டார். நான் அதற்கான வாய்ப்புக்கள் இல்லையென்றேன். ஆனால் அவரோ இல்லை - இதற்கு பின்னால் அவர்கள்தான் இருக்கின்றனர். இருந்தாலும் உங்களை போன்றவர்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றார். பொதுவாக வடக்கு கிழக்கில் இடம்பெறும் பல்வேறு விடயங்களையும் இந்திய உளவுத்துறையோடு தொடர்புபடுத்தும் ஒரு போக்கொன்று நீண்டகாலாகவே இருந்து வருகின்றது. இதற்கு யாழ்ப்பாணத்தை மையப்படுத்தி இயங்கும் சில அரசியல்வாதிகளின் பிரச்சாரங்களும் ஒரு காரணம். ஏற்கனவே இவ்வாறான கட்டுக்கதைகளுக்கு பழக்கப்பட்டவர்கள்இ கிழக்கு கொள்கலன் முனைய விவகாரத்தில் ஏற்பட்ட நெருக்கடியை மனதில்கொண்டே, இவ்வாறானதொரு ஊகத்தை விழுங்கியிருக்கின்றனர்.  

உண்மையில் எந்தவொரு வெளித்தரப்பும் இலகுவில் அடையாளம் காணக் கூடியவர்களை முன்னிலைப்படுத்தி, ஒரு போதுமே இவ்வாறான நடவடிக்கைகளை திட்டமிடாது. உண்மையில் இந்தப் பேரணி நன்கு திட்டமிட்டுஇ குறுகிய கால, நீண்டகால நோக்கங்களை துல்லியமாக ஆராய்ந்து மேற்கொண்டதொரு நடவடிக்கையுமல்ல. இந்தப் பேரணியை பொறுத்தவரையில்இ இது நாங்களும் ஒன்றை செய்ய வேண்டுமென்னும் உத்வேகத்தில் மேலெழுந்த விடயமேயன்றி, இதற்கு வேறு பரிமாணங்கள் இல்லை. இதில் புலம்பெயர் குழுக்கள் சிலவற்றின் தலையீடுகளும் இருந்திருக்கலாம். ஏனெனில் பொலிகண்டியில் வாசிக்கப்பட்ட பிரகடனத்தில் சர்வதேச கண்காணிப்புடன் கூடிய பொதுசன வாக்கெடுப்பு தொடர்பிலும் வலியுறுத்தப்பட்டிருக்கின்றது. இவ்வாறான கோரிக்கைகள் சிவில் சமூகமென்று தங்களை அடையாளப்படுத்துபவர்களின் சொந்த புத்தியின் வெளிப்பாடாக இருக்க வாய்ப்பில்லை. ஒரு வேளை சிலர் கூறுவது போன்று இந்தியா இதற்கு பின்னாலிருப்பது உண்மையெனின் இவ்வாறான விடயங்கள் நிச்சயம் இதில் இடம்பெற்றிருக்காது. உண்மையில் பொதுசன வாக்கெடுப்பு தொடர்பான கோரிக்கை நாடுகடந்த தமிழீழ அரசாங்கமாக தங்களை அடையாளப்படுத்துபவர்கள் நீண்டகாலமாக முன்வைத்துவரும் கோரிக்கையாகும். சுமந்திரன் தனது நாடாளுமன்ற உரையில் இந்தக் கோரிக்கையை தவிர்த்திருந்தார் இதனடிப்படையிலேயே கஜேந்திரகுமார் போராட்டத்தை சுமந்திரன் கொச்சைப்படுத்திவிட்டதாக குற்றம் சாட்டியிருக்கின்றார். ஆனால் இது தொடர்பிலும் சிவில் சமூகமென்பவர்கள் வாய்திறக்கவில்லை. 

வடக்கு கிழக்கை பொறுத்தவரையில் சிவில் சமூக அமைப்புக்கள் என்று தெளிவாக வரையறுக்கக் கூடிய நிலையில் எந்தவொரு அமைப்போ அல்லது அமைப்புக்களின் ஒன்றியமோ இல்லை. இந்த நிகழ்விற்கு வடக்கு கிழக்கு சிவில் சமூகம் தலைமையேற்றிருப்பதாக கூறிக்கொண்டாலும் கூட, உண்மையில் அவ்வாறானதொரு கட்டமைக்கப்பட்ட அமைப்பு வடிவமொன்று இல்லை. ஒவ்வொரு மாவட்டங்களிலும் அரசுசாரா நிறுவன செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள், அரசியல் விடயங்களில் ஆர்வமுள்ள தனிநபர்கள், அவ்வாறான தனிநபர்களோடு இணைந்திருக்கும் சிறிய குழுவினர் என்னும் அடிப்படையில்தான் இவ்வாறான சிவில் சமூக செயற்பாடுகள் அடையாளப்படுத்தப்படுகின்றன. இந்த பேரணிக்கான ஏற்பாட்டின் போதும் இதுதான் நடந்திருக்கின்றது. இந்த நிகழ்விற்கான ஏற்பாடுகளில் முன்னின்று செயற்பட்டவர்களாக கூறப்படும் எவருமே குறித்த மாவட்டங்களின் வலுவான அமைப்புக்களை கொண்டிருப்பவர்கள் அல்லர். உதாரணமாக சிவில் சமூக அமைப்புக்களின் ஒன்றியம் என்னும் பெயரிலேயே திருகோணமலையில் ஒரு அறிக்கை வாசிக்கப்பட்டது. ஆனால் ஒழுங்குபடுத்தப்பட்ட அவ்வாறானதொரு சிவில் சமூக அமைப்பு திருகோணமலையில் இல்லை. இறுதியாக இடம்பெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் போது, சிவில் சமூக அமைப்புக்களின் கூட்டமைப்பு என்னும் பெயரிலேயே ஒரு குழுவினர் தேர்தலில் போட்டியிட்டிருந்தனர். உண்மையில் தமிழ் சூழலை பொறுத்தவரையில்இ சிவில் சமூகம் என்னும் சொல் ஒரு உடனடி உணவு போன்றது. எவர் வேண்டுமானாலும் தங்களை உடனடியாகவே சிவில் சமூகமாக்கிக்கொள்ளலாம். வடக்கு கிழக்கை பொறுத்தவரையில், அரசியல் கட்சிகளை ஒரு புள்ளியில் இணைப்பது, கல்லில் நாருரிக்கும் செயற்பாடு என்பதாலேயே, வெளியில் காண்பிப்பதற்கு ஒரு முகம் தேவைப்படுகின்றது. அந்த முகம்தான். சிவில் சமூகம். 2009இற்கு பின்னர் இடம்பெற்ற இவ்வாறான அனைத்து நிகழ்வுகளின் போதும் அரசியல்வாதிகளின் பங்களிப்பே முதன்மையாக இருந்தது. இந்த யதார்த்தத்தை புறம்தள்ளி எந்தவொரு நிகழ்வையும் முன்னெடுக்க முடியாது. சிவில் சமூகக் குழுக்கள் என்போரும், அரசியல் கட்சிகளும் இணைந்து சில விடயங்களை முன்னெடுக்கும் போது, அரசியல்வாதிகள் சில இடங்களில் அதிகம் தலைநீட்டுவதற்கான வாய்ப்புக்கள் உண்டு. அதனை முற்றிலுமாக தவிர்ப்பதும் கடினமானது. ஏனெனில் இவ்வாறான நிகழ்வுகளின் போது அரசியல்வாதிகளே சிவில் சமூகமென்று அழைக்கப்படுவர்களுக்கான பாதுகாப்ப கவசமாக இருக்கின்றனர். 

இந்த சர்ச்சைகளுக்கெல்லாம் அப்பால்இ தமிழ் மக்கள் தங்களுக்குள் அடங்கிக்கிடந்த உணர்வை வெளிப்படுத்துவதற்கான ஒரு களமாக இதனை பயன்படுத்திக்கொண்டனர் என்பதில் எந்தவொரு சர்ச்சையுமில்லை. தமிழ் மக்களை பொறுத்தவரையில் இயல்பாகவே ராஜபக்சக்களின் அரசாங்கத்தை எதிர்க்கின்றனர். அண்மைக்காலமாக அரசாங்கம் கடைப்பிடித்துவருகின்ற மேலாதிக்க போக்குகள் அவர்கள் மத்தியில் மேலும் எதிர்புணர்வை ஏற்படுத்தியிருக்கின்றது. இவ்வாறான சூழலில்தான் இந்த நிகழ்வு திட்டமிடப்பட்டிருந்தது. அதிலும் பொத்துவிலில் கடும் மழையையும் பொருட்படுத்தாது. பொலிசாரின் தடைகளையும் உடைத்துக் கொண்டு பேரணி முன்னேறிவருகின்றது – அதனுடன் மக்கள் அணிதிரளுகின்றனர் - என்னும் செய்தியும் அடித்தள மக்களை தூண்டியது. ஏதிர்பாராத வகையில் மக்கள் அணிதிரண்டனர். கவனிக்க அர உத்தியோக மத்தியதர வர்க்கமல்ல.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில்இ இலங்கையின் மீது மீண்டுமொரு புதிய பிரேரணையொன்றை கொண்டுவரவுள்ளதாக கூறப்படும் நிலையிலேயேஇ இந்த எதிர்ப்பு பேரணி இடம்பெற்றிருக்கின்றது. இந்த ஏற்பாட்டில் பிரதான பங்குவகித்தவராக கருதப்படும் வேலன் சுவாமி என்பவர் இதனை வெளிப்படையாகவே தெரிவித்திருக்கின்றார். அதாவது, கடந்த மாதம் பிரதான மூன்று கட்சிகளும் இணைந்து மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளருக்கு அனுப்பிய அறிக்கைக்கு வலுச்சேர்க்கும் வகையிலேயே தாம் இதனை திட்டமிட்டதாகவும் ஆனால் தாங்கள் இந்தளவு மக்கள் திரளுவார்களென்று உண்மையிலேயே எதிர்பார்க்கவில்லையென்றும் அவர் தெரிவித்திருக்கின்றார். இந்த நிகழ்வை உற்று நோக்கும் ஒருவருக்கு இது தெளிவாகவே விளங்கும். ஆனால் இவ்வாறான எதிர்ப்பு பேரணிகளால் குறித்த பிரேரணையின் உள்ளடக்கத்தில் மாற்றங்களை ஏற்படுத்த முடியுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் நீதிக்கான பயணத்தில் தமிழ் மக்கள் நம்பிக்கையிழந்துவிடவில்லை - இப்போதும் உறுதியுடன்தான் இருக்கின்றனர் என்பதை காண்பிப்பதில், இந்தப் பேரணிக்கு  ஒரு முக்கியத்துவம் உண்டு.  

அதே வேளை, இந்த பேரணி புலம்பெயர் நாடுகளிலுள்ள செயற்பாட்டாளர்கள் மத்தியில் ஒரு வகையான உற்சாக மனோநிலையை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்த இடத்தில்தான் ஆபத்தும் வந்து சேர்கின்றது. இந்த பேரணிக்கு ஆதரவு தெரிவித்திருக்கும் புலம்பெயர் குழுக்கள் - தங்களின் ஆதரவை காட்சிப்படுத்தும் போது புலிக்கொடிகளுடன் தங்களை அடையாளப்படுத்தியிருக்கின்றனர். இது எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும். உண்மையில் இதனால் தென்னிலங்கையே நன்மையடையும். அதே வேளை பேரணியின் போதும் சில விடயங்கள்  இடம்பெற்றிருக்கின்றன. அவை தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். இந்தப் பேரணிஇ கிழக்கில் ஒரு விதமாகவும் வடக்கில் வேறொரு விதமாகவும் இடம்பெற்றிருக்கின்றது. இந்தப் பேரணியின் போதுஇ யாழ்ப்பாணத்தில் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டிருக்கின்றது. அதே போன்று விடுதலைப் புலிகளின் முதலாவது கரும்புலி உறுப்பினரான மில்லருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டிருக்கின்றது. இவைகள் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான களம் இதுவல்ல. சிவில் சமூகத்தின் ஏற்பாட்டில்இ மக்கள் தன்னிச்சையாக எழுச்சியுற்றனர் - என்னும் செய்தியை சொல்வதே ஏற்பாட்டாளர்களின் நோக்கமெனின், இவ்வாறான அடையாளப்படுத்தல்கள் தவிர்க்கப்பட்டிக்க வேண்டும். கிழக்கில் முஸ்லிம் மக்கள் பெருமளவிற்கு இதற்கு ஆதரவு வழங்கியிருந்தனர். அதே போன்று வவுணியா மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளிலும் முஸ்லிம் மக்கள் பெருமளவில் ஆதரவு வழங்கியிருந்தனர். எதிர்காலத்தில்இ இவ்வாறான ஜனநாயக எதிர்ப்புக்களின் போது, முஸ்லிம்களையும் இணைத்துக் கொண்டு செல்லும் நோக்கம் இருப்பின், சுலோகங்களிலும் அடையாளப்படுத்தல்களிலும் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும். வெளிப்படுத்த முயலும் செய்தியில் கவனம் செலுத்த வேண்டுமேயன்றி, சுய அடயாளப்படுத்தல்களில் அல்ல. முதல் பார்வையில் பொத்துவில் தொடங்கி பொலிகண்டிவரை – மக்களை பெருந்திரளாக்கியதில், எதிர்பாராத வெற்றியை கொடுத்திருக்கின்றது. இரண்டாவது பார்வையில் பேரணியின் போது இடம்பெற்ற சில விடயங்கள் அதன் தோல்வியாகவும் இருக்கின்றது. எந்தவொரு எழுச்சியினதும்இ முழுமையான வெற்றியானது, அதன் இறுதி அடைவினால்தான் தங்கியிருக்கின்றது. 

கட்டுரை ஆக்கம் யதீந்திரா 

Thursday, February 11, 2021

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை; ஒரு புதிய நம்பிக்கை!

 


இந்தப் பேரணியை தென் இலங்கை பெரும் அச்சுறுத்தலாக பார்க்கின்றது. அதேவேளை, வடக்கு – கிழக்கிலுள்ள ராஜபக்ஷ ஆதரவு அணிகள், தங்களின் எதிர்கால இருப்பினை அசைக்கும் ஒன்றாக உணர்கின்றன. அதனால் பெரும் பரப்புரைகளை பேரணிக்கு எதிராக இன்று வரை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக, பிரதேசவாதம், முஸ்லிம்கள் மீதான காழ்ப்பு உள்ளிட்ட விடயங்களை பிரதானப்படுத்தி, பேரணியை மலினப்படுத்திவிட அந்தத் தரப்புக்கள் முயல்கின்றன. அதற்கான சாட்சிகள் சமூக ஊடகங்களில் கொட்டிக் கிடக்கின்றன.


நீண்ட நாட்களுக்குப் பின்னர், தமிழ்த் தேசியத் தரப்புக்கள் எல்லாமும் ஒரு போராட்டத்தினை நோக்கி திரண்டன; அல்லது திரளும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது என்றால், அது பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான இந்தப் பேரணியை நோக்கித்தான் என்று சொல்ல முடியும். தமிழ்த் தேசியத் தரப்புக்கள் அனைத்தினதும் ஒரே இலக்கு, 'தமிழின உரிமை மீட்பும்' நீதிக் கோரிக்கையும்'தான். இதனை அடைவது சார்ந்து ஒவ்வொரு தரப்பும் ஒவ்வொரு பாதையைக் கொண்டிருப்பதாக சொல்கின்றன. ஆனால், அந்தப் பாதைகளும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்ததுதான். எந்தவொரு தமிழ்த் தேசியத் தரப்பும், பாரிய முரண்பாடுள்ள பாதையை கொண்டிருக்கவில்லை. கிட்டத்தட்ட 90 வீதமான எண்ணப்பாடுகளும், அதுசார் போக்கும் ஒரே மாதிரியானதுதான். மீதியுள்ள 10 வீதமான விடயம், கட்சி அரசியல், தேர்தல் வெற்றி தோல்வி, பூகோள அணுகுமுறை, எதிர்காலத்தை கணித்தல் உள்ளிட்ட விடயங்கள் சார்ந்து மாறுபடுகின்றன.



இதனால், தமிழ்த் தேசிய அடிப்படையும், கொள்கைசார் நிலைப்பாடுகளும் பெரியளவில் மாறுவதில்லை. அல்லது மாற்றுவதற்கு யாராவது முயற்சித்தாலும் அதன் பாரம்பரியம் அதனை அனுமதிப்பதில்லை. தமிழ்த் தேசிய அடிப்படையும், அதுசார் போராட்டமும் ஒரே நாளில் தோற்றம் பெற்ற ஒன்றல்ல. அது பௌத்த சிங்கள பேரினவாத சிந்தனைகளுக்கு எதிராக முளைத்த ஒன்றுஇ அது கடந்த 80 ஆண்டுகளாக தலைமுறை தலைமுறையாக தமிழ் மக்களிடம் கடத்தப்பட்டு வந்திருக்கின்றது. அதுவொரு வாழ்கை நெறியாக மாறிவிட்டது. அதனால்தான், தமிழ்த் தேசியம் என்பது ஒரு பாரம்பரியமாக தமிழ் மக்களிடம் மாறிவிட்டது. தாயகத்திலும் தாயகத்தோடு தொடர்பில் இருக்கின்ற எந்தத் தேசத்திலும் அந்தப் பாரம்பரியத்தின் வேர்களும் விழுதுகளும் நீண்டிருக்கின்றன. அப்படியான நிலையில், ஒரு பாரம்பரிய அரசியல் வடிவத்துக்கு மாற்றாக அல்லது எதிராக புதிய அரசியல் வடிவமோ, அதுசார் சிந்தனையோ தமிழ் மக்களிடம் எழுச்சி பெறுவதற்கு வாய்ப்பில்லை.



கடந்த பொதுத் தேர்தலில் ராஜபக்ஷ ஆதரவுத் தரப்புக்கள் வடக்கு – கிழக்கில் கணிசமான வெற்றியைப் பெற்றன. 'பிரபாகரன் மண்ணை வென்றுவிட்டோம்' என்று கொக்கரிக்கும் அளவுக்கு ராஜபக்ஷ ஆதரவுத் தரப்புக்களுக்கு அந்த வெற்றி தெம்பை அளித்தது. தமிழ்த் தேசியக் கட்சிகள் பின்னடைவைச் சந்தித்து நின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாற்று சக்திகளாக தங்களை முன்னிறுத்திய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகிய கட்சிகளினாலும் கூட யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தைத் தாண்டி வெற்றிபெற முடியவில்லை. யாழ்ப்பாணத்துக்கு வெளியே, அவர்களால் சில ஆயிரம் வாக்குகளை மாத்திரமே பெற முடிந்தது. ஆனால், அந்தப் பகுதிகளில் கூட்டமைப்புக்கு அடுத்த நிலைகளில் ராஜபக்ஷ ஆதரவுக் கட்சிகள் வந்து நின்றன. அதுவும் அம்பாறையில், கருணா அம்மான் சுயேட்சையாக நின்று கூட்டமைப்பினைத் தாண்டி வாக்குகளைப் பெற்றார். அதனால், அங்கு தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டது.

இந்தப் பின்னணியில்தான், தமிழ்த் தேசிய அரசியல் என்கிற பாரம்பரியத்தின் மீதான அச்சுறுத்தல் உணரப்பட்டது. தமக்குள் முரண்பட்டுக் கொண்டாலும் தமிழ்த் தேசிய அரசியலை மக்களிடம் பேணுவது என்பது தவிர்க்க முடியாதது என்கிற கடப்பாடு, தமிழ்த் தேசிய கட்சிகளுக்கும் அதன் இணக்க தரப்புக்களுக்கும் ஏற்பட்டன. அதுதான், பொது வேலைத் திட்டங்களில் கீழ் இணங்கி வேலை செய்யவும் வைத்தன. அதன் ஆரம்பமாக ஜெனீவா அமர்வுகள் தொடர்பிலான பொது ஆவணம், அனைத்து தமிழ்த் தேசியக் கட்சிகள், தரப்புக்களின் இணக்கத்தோடு வெளிவந்தது. அதன் அடுத்த கட்டமாக பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான பேரணி அமைந்திருக்கின்றது.



இந்தப் பேரணியை தென் இலங்கை பெரும் அச்சுறுத்தலாக பார்க்கின்றது. அதேவேளை, வடக்கு – கிழக்கிலுள்ள ராஜபக்ஷ ஆதரவு அணிகள், தங்களின் எதிர்கால இருப்பினை அசைக்கும் ஒன்றாக உணர்கின்றன. அதனால் பெரும் பரப்புரைகளை பேரணிக்கு எதிராக இன்று வரை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக, பிரதேசவாதம், முஸ்லிம்கள் மீதான காழ்ப்பு உள்ளிட்ட விடயங்களை பிரதானப்படுத்தி, பேரணியை மலினப்படுத்திவிட அந்தத் தரப்புக்கள் முயல்கின்றன. அதற்கான சாட்சிகள் சமூக ஊடகங்களில் கொட்டிக் கிடக்கின்றன.



பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான பேரணியை 'கரும்புலிகள் பேரணி, வெளிநாட்டுப் புலிகளின் காசில் முளைத்த பேரணி, சுமந்திரனின் புலிப்படலம், கூட்டமைப்பின் சதி..' இப்படி பல்வேறுபட்ட பெயர்களைக் கொண்டு தென் இலங்கை அரசியல்வாதிகளும், ஊடகங்களும் அடையாளப்படுத்துகின்றன. ஜனநாயக வழிப் போராட்டமொன்றை நோக்கி தமிழ் – முஸ்லிம் மக்கள் ஒருங்கிணைவதை தென் இலங்கையினால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. பல தொலைக்காட்சிகளில் அரசியல்வாதிகளைக் காட்டிலும், சிங்கள ஊடகவியலாளர்கள் (என்கிற போர்வையில்) பலரும் இனவாதத்தைக் கக்கிக் கொண்டிருக்கிறார்கள். பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான பேரணியில் முன்வைக்கப்பட்ட பத்துக் கோரிக்கைகளில் ஒன்றுகூட இலங்கையின் எந்தத் தரப்புக்கும் அச்சுறுத்தலானது அல்ல. மாறாக, அனைத்து மக்களையும் சமமாக நோக்குமாறும், பறிக்கப்படுகின்ற தமிழ் – முஸ்லிம் மக்களின் உரிமைகளை மீள வழங்குமாறும், ஏற்கனவே நிகழ்த்தப்பட்ட குற்றங்களுக்கு நீதி வழங்குமாறும் கோருவதாகும். அந்தக் கோரிக்கைகளில் தென் இலங்கை அரசியல்வாதிகளும், ஊடகங்களும், அவர்களின் ஏவல் தரப்புக்களும் சொல்வது மாதிரியாக இலங்கையின் இறையாண்மைக்கோ, ஒற்றுமைக்கோ அச்சுறுத்தலான விடயங்கள் ஏதுமில்லை.



ஆயிரக்கணக்கானோரைக் கூட்டி சுதந்திர தினம் உள்ளிட்ட அரச நிகழ்வுகளை நடத்துவதற்கும், அரசியல் நிகழ்வுகளை நடத்துவதற்கும் 'கொவிட்- 19' காலத்து விதிகளின் கீழ், தென் இலங்கையில் எந்தவித தடையும் இல்லை. ஆனால், அந்த விதிகளின் கீழ், வடக்கு –கிழக்கில் ஜனநாயகப் போராட்டங்களை நடத்துவதற்கும், நினைவேந்தலை நடத்துவதற்கும் தடை விதிக்கப்படும் என்றால், அதனை கேள்விக்குள்ளாக்க வேண்டும். அப்படியான விடயத்தை சுமந்திரனோ, சாணக்கியனோ, கஜேந்திரகுமாரோ அல்லது யாரோ ஒரு அரசியல்வாதி செய்தால், அதனை நாட்டின் ஒருங்கிணைவுக்கே அச்சுறுத்தலான ஒன்றாக முன்னிறுத்தி பேசுவதற்கு தென் இலங்கை தயாராக இருக்கின்றது. சுமந்திரனுக்கு வழங்கப்பட்ட விசேட அதிரடிப்படைப் பாதுகாப்பினை மீளப்பெற்றுவிட்டு, அதனை ஊடகங்களில் தோன்றி பெரிய சாதனையாக சொல்லும் அளவுக்கு, பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான பேரணி, ஆட்சியாளர்களுக்கு எரிச்சலை உண்டு பண்ணியிருக்கின்றது.



உரிமைப் போராட்டங்கள் எந்தவொரு மக்கள் கூட்டத்துக்கும் எதிராக முன்னெடுக்கப்பட வேண்டியதில்லை. மாறாக, அதிகாரங்களைப் பறிக்கின்றஇ அத்துமீறுகின்ற தரப்புக்களுக்கு எதிராகவே முன்னெடுக்கப்பட வேண்டியது. தமிழ்த் தேசியப் போராட்டமும், அதன் வழியாகவே பயணித்திருக்கின்றது. அதுவும், சகோதர இனங்களுடனான முரண்பாடுகளை முடித்துக் கொண்டு, அடுத்த கட்டப் பயணங்களைக் குறித்து அக்கறை கொண்டிருக்கின்றது. பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான பேரணியில், முஸ்லிம் மக்களின் பங்களிப்பு என்பது கணிசமானது. கடந்த முப்பது ஆண்டுகளில் இப்போதுதான் அந்த அற்புதம் நிகழ்ந்திருக்கின்றது. அந்த அற்புதத்தின் உண்மையை, அதன் உண்மையான வடிவங்களினூடாக சிங்கள மக்களிடமும் கொண்டு சேர்க்க வேண்டும்.



நியாயமான போராட்ட வடிவங்கள் மீது புலிச்சாயம் பூசுவது தென் இலங்கை அரசியல்வாதிகளுக்கும், ஊடகங்களுக்கும் வழக்கமான பணி. ஆனால், அதனைத் தாண்டி சிங்கள மக்களோடு பேசும் அளவுக்கான கட்டங்களை நோக்கி தமிழ்த் தேசிய அரசியலும், அதன் சக்திகளும் பயணிக்க வேண்டும். மற்றவர்களை திருப்திப்படுத்துவது போராட்டத்தின் நோக்கமாக இருக்க வேண்டியதில்லை. ஆனால், போராட்டம் குறித்த தெளிவை வழங்க வேண்டியது போராட்டக்காரர்களின் கடமை. அதுதான், போராட்டத்தின் அடர்த்தியை, நியாயப்பாடுகளை பேணுவதற்கு உதவும்.



பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான பேரணி, தமிழ்த் தேசியத் தரப்புக்களை ஒரே புள்ளியில் திரட்டியமை, ஜனநாயகப் போராட்டங்கள் மீது இளைஞர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தியமை, முஸ்லிம் மக்களை போராட்டத்தின் பங்காளிகள் ஆக்கியமை என்று பல்வேறு முன்மாதிரிகளைக் காட்டியிருக்கின்றது. அதுபோல, பேரணியின் முடிவிடச் சர்ச்சை, ஏற்பாட்டுக்குழுவுக்குள் காணப்பட்ட சலசலப்புக்கள் என்று குறைபாடுகளும் வெளிப்பட்டன. ஆனால், அந்தக் குறைபாடுகளைத் தாண்டி நின்று நம்பிக்கை கொள்ளும் அளவுக்கான செய்தியை பொத்துவில் முதல் பொலிகண்டி வரையில் நடந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் சொல்லியிருக்கிறார்கள். அது பெரிய வெற்றியே!



 இந்தக் கட்டுரையை எழுதிய சுயாதீன ஊடகவியலாளர் புருஜோத்தமன் தங்கமயில்  அவர்களுக்கு நன்றிகள் உரித்தாகுக.

படங்கள் : ஊடகவியலாளர்கள் குமணன்,  ஸ்டாலின், தமிழ் மதி மற்றும் டுவிட்டரில் பகிர்ந்துகொண்ட அனைவருக்கும் நன்றிகள் 

=======================================================================





=========================================================================

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரணி ஆரம்பத்த தொடக்கத்தில் இலங்கையின் சுதந்திர தினத்தன்று ( 04.02.2021) பிரசுரமான புருஜோத்தமனின் கட்டுரை 


---------------------------------------------------------xxxx--------------------------------------------------------

சுதந்திரம் பறிக்கப்பட்ட நாளில் விடுதலைக்காக திரள்தல்!


இலங்கையின் 73வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகின்றது. முதல் ஒன்றிரண்டு சுதந்திர தினங்களுக்குப் பின்னரான அனைத்து சுதந்திர தினங்களும், அதுசார் நிகழ்ச்சிகளும் ‘ஒரே இனம், ஒரே மதம், ஒரே தேசியம்’ என்கிற பௌத்த சிங்கள பேரினவாத நிகழ்ச்சி நிரலின் போக்கிலேயே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

நாட்டிலுள்ள தமிழர்கள், முஸ்லிம்கள் உள்ளிட்ட இன, மத சிறுபான்மை சமூகங்கள் இலங்கையின் சுதந்திர தினங்களோடு தங்களைப் பொருத்திப் பார்ப்பதற்கான கட்டங்கள் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன. சுதந்திரம் என்கிற சொல்லின் அர்த்தமும் அதுசார் ஆன்மாவும் இலங்கையிலுள்ள சிறுபான்மைச் சமூகங்களிடமிருந்து தென் இலங்கையால் பறிக்கப்பட்டிருக்கின்றன. தமிழ், முஸ்லிம் மக்களுக்கு மட்டுமல்ல, பௌத்தர்கள் அல்லாத சிங்களவர்களின் நிலையும் இன்றைக்கு கிட்டத்தட்ட அதுதான். இந்த நாட்டில் சுதந்திரத்தினை உணர்ந்து கொள்ள வேண்டுமானால் நீங்கள், பௌத்த சிங்களவர்களாக வேண்டும். பௌத்தத்தை முன்னிறுத்தியதே இந்த நாட்டின் ஆட்சியும், அரசியலும், அதுசார் உரிமைகளும்.



இலங்கையின் மேற்குக் கரைகளில், குறிப்பாக புத்தளம் தொடங்கி நீர்கொழும்பு வரை வாழ்ந்த தமிழ் மக்களின் தொண்ணூறு வீதமானவர்கள் சிங்களவர்களாக கரைந்துவிட்டார்கள். அவர்களின் பட்டானும் முப்பாட்டனும் தமிழர்களாக, கத்தோலிக்கர்களாக வாழ்ந்த வாழ்க்கை மறக்கப்பட்டுவிட்டது. தனிச் சிங்களவர்களுக்கான அடையாளங்களுக்காக பாரம்பரிய மொழியை மாத்திரமல்ல, தாங்கள் சார்ந்திருந்த கத்தோலிக்க மதத்தையும் விட்டு விலகுவதற்கு அந்த மக்கள் தயாராகிவிட்டார்கள். தென் இலங்கையின் பல தமிழ், முஸ்லிம் கிராமங்கள் இப்படி தனிச் சிங்களக் கிராமங்களாக கடந்த 70 ஆண்டுகளில் மாறியிருக்கின்றன; மாற்றப்பட்டிருக்கின்றன. அப்படியான நிலையொன்றுக்கு செல்வதைத்தான் தென் இலங்கையின் ஆட்சியாளர்கள் வலியுறுத்துகிறார்கள். அதற்கு எதிராக சிறு புல்லாக எழுந்து நின்றாலும், அதனை புல்டோசர் கொண்டு அழிக்கும் மனநிலையில் இருக்கிறார்கள். இவ்வாறான மனநிலையில் நின்று கொண்டுதான், சுதந்திரம் பற்றியும் சமாதானம் பற்றியும் போதிக்கிறார்கள்.



இலங்கை பிரித்தானிய காலனித்துவத்திலிருந்து விடுதலை பெற்ற காலம் முதல் தமிழ் பேசும் மக்களின் தாயகப் பகுதியான வடக்கு –கிழக்கினை நோக்கிய பௌத்த சிங்கள ஆக்கிரமிப்பு தென் இலங்கை ஆட்சியாளர்களினால் ஆரம்பிக்கப்பட்டது. தமிழ் மக்களின் பாரம்பரிய அடையாளங்களை அழித்து அல்லது அவற்றுக்கு பௌத்த அடையாளம் சூட்டி, அந்த நிலத்தின் பூர்வக்குடிகளான தமிழ் மக்களை சிறிய நிலப்பரப்புக்குள் சுருக்கத் தொடங்கியிருக்கிறார்கள். அரச காணிகளில் மாத்திரமல்ல, தமிழ் மக்களின் சொந்தக் காணிகளிலும் இராணுவமும், தொல்பொருள் திணைக்களமும் இணைந்து பௌத்த விகாரைகளை கட்டுகின்றன.



தென் இலங்கை சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் திளைத்திருக்க, வடக்கு –கிழக்கிலுள்ள தமிழ் பேசும் மக்கள் தங்களது அடிப்படை உரிமைகளை வலியுறுத்தி போராட்டங்களை முன்னெடுக்கிறார்கள். குறிப்பாக, பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையிலான தொடர் போராட்டமொன்று இராணுவ கெடுபிடிகளுக்கு மத்தியிலும் நேற்று புதன்கிழமை தொடங்கி நடைபெற்று வருகின்றது.



ஏனைய சமூகங்களுக்கான சுதந்திரத்தை மறுத்தவர்கள், சுதந்திர தினத்தைக் கொண்டாட, சுதந்திரம் மறுக்கப்பட்டவர்கள், சுதந்திரத்துக்காக, விடுதலைக்காக போராடுகிறார்கள். இதுதான், இலங்கையின் ஒரே யதார்த்தம். மத, மார்க்க உரிமை தொடங்கி எந்தவித அடிப்படை உரிமையையும் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு வழங்கக் கூடாது என்பதில் தென் இலங்கை குறியாக இருக்கின்றது. ஜனநாயக வழிப் போராட்டங்களை நடத்தினால்கூட நீதிமன்றத்தினூடான தடையுத்தரவு தொடங்கி புலனாய்வு அச்சுறுத்தல், இராணுவ கெடுபிடி என்று அனைத்து வகையிலான அத்துமீறல்களும் கட்டவிழ்த்துவிடப்படுகின்றன. “...நீங்கள் இறந்தவர்களை புதைக்க முடியாது, அவர்களை நினைவுகூர முடியாது, அவர்களுக்காக கண்ணீர் சிந்த முடியாது, அவர்களின் அடையாளங்களைப் பேண முடியாது...” என்ற இராணுவ சிந்தையும், தாழ்வுச் சிக்கலும் ஒருங்கே பெற்றவர்களின் மனநிலைக்கும் உத்தரவுகளுக்கும் எதிராக நின்றுதான் தமிழ் பேசும் மக்கள் போராட வேண்டியிருக்கின்றது.



அடிப்படை ஜனநாயகம் அனுமதிக்கின்ற எதனையுமே அனுமதிக்காத இராணுவ, தாழ்வுச் சிக்கலுள்ள தென் இலங்கை மனநிலைக்கு எதிராக போராடுவது என்பது அவ்வளவு இலகுவான ஒன்றல்ல. ஒவ்வொரு அடக்குமுறையை ஜனநாயக ரீதியான எதிர்கொண்டாலும், மீண்டும் மீண்டும் புதிய வடிவில் அடக்குமுறையை ஏவுவார்கள். அதனை எதிர்கொள்வது என்பது, ஒருசில தனி நபர்களினாலோ, கட்சிகளினாலோ, அமைப்புக்களினாலோ மாத்திரம் செய்ய முடியாது. அதற்குத்தான் ‘சமூகமாக திரள்தல்’ என்கிற விடயம் முக்கியமானது. சமூக விரோத செயற்பாடுகளுக்காக அல்லாமல், சமூக முன்னேற்றத்துக்காக அடிப்படை உரிமைக்காக சமூகமாக திரள்தல் என்பது மனித விடுதலையில் முதற்படி. கடந்த எழுபது வருடங்களாக விடுதலைக்காக, சுயநிர்ணய உரிமைக்காக போராடி வருகின்ற தமிழ் மக்கள், அந்த விடுதலைக்கான உணர்வினை எந்தவொரு காரணத்துக்காகவும் விட்டுக்கொடுக்க முடியாது. சமூகமாக திரண்டு ஜனநாயகப் போராட்டங்களை வலுப்படுத்த வேண்டும்.



இறுதி மோதல்களுக்குப் பின்னரான கடந்த பதினொரு ஆண்டுகளில், முள்ளிவாய்க்கால் முடிவுகளுக்குள் இருந்து மீண்டெழுதல் தொடங்கி, போராட்ட வடிவத்தை மீளமைத்து அடுத்த கட்டத்தை நோக்கி செல்லுதல் வரையில் சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. இறுதி மோதல்களுக்குப் பின்னரான நாட்களில் சில அரசியல் தலைவர்களிடமும், அமைப்புக்களிடமும் பேணப்பட்ட ஜனநாயப் போராட்ட வடிவம், 2015 ஆட்சி மாற்றத்தோடு தமிழ் மக்களிடம் பெருமளவு கடத்தப்பட்டிருக்கின்றது. சமூகமாக திரள்வது பற்றிய நம்பிக்கைகள் ஏற்படுத்தப்பட்டது. அதுதான், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம், காணி விடுவிப்புக்கான போராட்டம் என்பன ஆயிரம் நாட்களைத் தாண்டி நீள்வதற்கான நம்பிக்கையை ஏற்படுத்தியது. எழுக தமிழ் போன்ற பேரெழுச்சிப் போராட்டங்களை கட்டமைத்தது. இப்போது, மீண்டும் 2015க்கு முந்தைய நிலைமை. ஆனால், அதனை ஜனநாயக வழியில் எதிர்கொள்வதற்கான தைரியம் சமூகமாக திரள்வதினூடாக தமிழ் மக்களிடம் ஏற்பட்டிருக்கின்றது. அது, எவ்வகையிலான தடைகள் வந்தாலும் அதனை எதிர்கொள்ளும் திடத்தினைக் கொடுத்திருக்கின்றது. தொடர்ச்சியாக போராடும் ஒரு சமூகத்துக்கு அது மிகவும் அவசியமானது.



பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையிலான தமிழ் மக்களின் கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு எதிரான நீதிமன்ற தடை உத்தரவுகளை சமூக ஒருங்கிணைவு மற்றும் திரட்சி ஊடாக வலிதற்றதாக்கலாம். அரசியல் தலைவர்களையும், ஊடகவியலாளர்களையும், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளையும் போராட்டங்களில் பங்குபற்ற தடை விதிக்கும் உத்தரவுகளை நீதிமன்றங்களினூடாக பொலிஸார் பெற்றுவருகிறார்கள். அது, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடங்கி, ஜனநாயகப் போராட்டங்கள் எதுவானாலும் அவற்றை முடக்குவதற்காக கடைபிடிக்கப்படுகின்றது. இவ்வாறான அடக்குமுறைக் கட்டங்களை, கட்சிகள், அமைப்புக்களின் ஒருங்கிணைவினாலும் மக்களின் சமூகத் திரள்வினாலும்தான் கடக்க முடியும்.



நேற்று பொத்துவிலில் ஆரம்பித்த கவனயீர்ப்புப் போராட்டத்தை பொலிகண்டியில் முடிக்கும் வரையில் தமிழ் மக்கள் ஒன்றிணைந்திருக்க வேண்டும். ஒவ்வொரு கட்டத்திலும் புதிய புதிய வழியில் தென் இலங்கை தமிழ் மக்களின் போராட்டத்தை முடக்க முனையும். அதனை, சட்டப் போராட்டத்தை நடத்தியும், ஜனநாயக வழியில் புதிய யுத்திகளைக் கண்டடைந்தும் கடக்க வேண்டும். அதுதான், தொடர் அடக்குமுறையாளர்களுக்கு எதிராக தொடர்ச்சியாக அடக்குமுறைக்குள் உள்ளாகிவரும் தமிழ் மக்கள் செய்ய வேண்டியது. பொத்துவில் தொடங்கிய போராட்டம் பொலிகண்டியோடு நின்றுவிடாமல், சர்வதேசம் வரையில் தொட வேண்டும். அது, பறிக்கப்பட்ட தமிழ் மக்களின் சுதந்திரத்தை மீட்டெடுக்கும் அளவுக்கான விடய ஞானம், தெளிவு, திட்டமிடல், ஒருங்கிணைவோடு நிகழ வேண்டும். தனது சுதந்திரம் பறிக்கப்பட்ட ஒரு சமூகம் அதே நாளில் அதற்கான சபதத்தை ஏற்பதைத்தவிர வேறு தெரிவுகள் இருக்க முடியாது. தமிழ் மக்களின் முன்னால் உள்ளதும் அந்தத் தெரிவு மாத்திரமே.