Sunday, December 9, 2018
அரசியல் நெருக்கடியால் இலங்கை செலுத்தப் போகும் விலை!
இலங்கையில் தற்போது தீவிரம் பெற்றிருக்கும் அரசியல் அதிகார நெருக்கடி நிலைமையின் பாரதூரத்தை ‘ 30 வருடகால யுத்த காலத்தில் செய்ய முடியாமற்போனதை 3 கிழமைகளில் செய்துவிட்டனர்’ எனப் பகுதித்தறிவுடன் சிந்திக்கும் பலருடனான கலந்துரையாடல்களின் மூலமாக உணர்ந்துகொள்ளமுடிகின்றது.
தற்போது இலங்கையின் அரசியல் நெருக்கடி ஒரு மாதத்தை கடந்து முடிவின்றி சென்றுகொண்டிருக்கின்றது.
ஒக்டோபர் 26ம் திகதி ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமர் பதவியில் இருந்து நீக்கி அமைச்சரவையைக் கலைத்து மஹிந்த ராஜபக்ஷவை புதிய பிரதமராக நியமித்தமை தொடக்கம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட நடவடிக்கைகளும் அதனைத் தொடர்ந்து இலங்கையின் பாராளுமன்றத்தில் நடந்தேறிய சம்பவங்களும் இலங்கை ஒரு ஜனநாயக நாடா? என்ற கேள்வியை பலரது மனங்களிலும் எழுப்பியுள்ளதென்பதில் சந்தேகத்திற்கிடமில்லை.
எதிர்காலத்தில் இலங்கையின் பிரதமராகவோ அதனிலும் அதிகமாக ஜனாதிபதியாகவோ வரக்கூடியவர் என கருதப்படுபவரான ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதைய பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் பார்வையில் ‘இலங்கை என்பது ஜனநாயக நாடு என்ற நிலையில் இருந்து குறைந்து சர்வாதிகார நாடு என்ற நிலையை நோக்கி அதிகரித்துச் செல்கின்றது’ என அமைந்திருக்கின்றது.
இலங்கையில் கொடூரமான போர் மூன்று தசாப்பதங்களாக இடம்பெற்ற காலத்தில் அதிகமாக பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள், இலங்கை ஒரு மிலேச்சத்தனமான அரச பயங்கரவாதம் முன்னெடுக்கப்படும் நாடு, அதற்கெதிராக உலக நாடுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியபோதெல்லாம் ,அந்த நிலைமைக்கு செல்லாமல் இருந்தமைக்கு ஆசியாவின் மிகப்பழமையான ஜனநாயக நாடு என்ற கருதுகோள் ஆழமாக உலகில் பதிந்திருந்தமையும் ஆட்சியதிகாரம் சுமூகமாக தேர்தல் மூலம் மாற்றப்பட்டமையும் முக்கிய காரணங்களாக இருந்தன.
இறுதிப் போர் நிகழ்ந்த காலகட்டத்தில் பல்லாயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டபோது கூட சர்வதேசம் இலங்கை மீது காத்திரமான நடவடிக்கைகள் எதனையும் இருக்காமல் இருந்தமைக்கு இது ஒரு ஜனநாயக நாடு என்ற வரலாற்றுப் பார்வையே காரணமாக இருந்தது.
ஆனால் ஒக்டோபர் 26ம் திகதியின் பின்னரான நிலைமை அனைத்மையும் மாற்றியமைத்துவிட்டது என்றால் மிகையல்ல.
ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் கடந்த மூன்றரை ஆண்டுகாலத்தில் வாக்குறுதிகள் மூலமாகவும் சில நல்லெண்ண நடவடிக்கைகள் மூலமாகவும் மேற்குலகத்தினர் மத்தியில் இலங்கை தொடர்பில் கட்டியெழுப்பிய மாயத்திரையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது செயற்பாடுகள் மூலமாக தெரிந்தோ தெரியாமலோ சுக்குநூறாக உடைத்துவிட்டிருக்கின்றார் என்று கூறினாலும் மிகையல்ல.
ஒக்டோபர் 26ம்திகதிக்கு முன்பாக இலங்கை தொடர்பாக அடுத்த மார்ச் மாதத்தில் சர்வதேச சமூக ஜெனிவாவில் என்ன நிலைப்பாட்டை எடுக்கும்? இலங்கை பொறுப்புக்கூறலில் இருந்து சாக்குப் போக்குச் சொல்லியும் அங்கொன்றும் இங்கொன்றுமாக செய்த காணாமற்போனோருக்கான அலுவலகத்தை அமைத்தல் போன்ற சில நம்பிக்கை விதைப்பு நகர்வுகளை காண்பித்தும் தப்பித்துக்கொள்ளுமா? ஐநா மேற்பார்வையில் இருந்து கழன்றுவிடுமா ? என்ற ஐயப்பாடு மனித உரிமைகள் ஆர்வலர்கள் மற்றும் கரிசனைமிக்க தமிழர் நலன் விரும்பிகள் அரசியல் வாதிகள் மற்றும் ஊடகவியலாளர்களிடையே பரவலாக காணப்பட்டது. ஆனால் ஜனாதிபதி மைத்திரியின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகள் அடுத்த ஜெனிவா அமர்வுகள் இலங்கை அரசிற்கு கடுமையாக அமையும் என்பதை கோடிட்டுக்காண்பித்து நிற்கின்றது. இலங்கையிலுள்ள மேற்குலக இராஜதந்திரிகள் சிவில் சமூக பிரமுகர்கள் வெளிப்படுத்தும் கருத்துக்கள் இதையே எடுத்துணர்த்துகின்றன.
மனித உரிமைகள் விடயத்தை ஒரு புறம் வைத்துவிட்டு இலங்கையின் பொருளாதாரத்தை எடுத்துப் பார்த்தால் கடந்த ஒரு மாத காலப்பகுதியில் ஏற்பட்டிருக்கும் இழப்பு தட்டிக்கழித்துவிடமுடியாததாக அமைந்திருக்கின்றது.
உலகப் புகழ்பெற்ற லோன்லி பிளனற் சுற்றுலா சஞ்சீகை இலங்கையே உலகில் தற்போது சுற்றுலா செல்வதற்கு சிறந்த நாடு என புகழ்ந்திருந்தது. ஆனால் அரசியல் நெருக்கடி நிலைமை அதனை அடியோடு மாற்றியமைத்திருக்கின்றது. புகழ்பெற்ற இலங்கையின் தென்பகுதி சுற்றுலா விடுதிகள் பலவற்றில் முன்கூட்டிய பதிவுகள் பல ரத்துச்செய்யப்பட்டு வெறிச்சோடிக் காணப்படுகின்றதை பலரும் தமது சமூக வலைத்தளங்களில் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.
தற்போது சுற்றுலா விடுதிகள் நிறைந்து வழியவேண்டிய காலப்பகுதி. ஆனால் நடப்பதோ அதற்கு தலைகீழாக இருக்கின்றமை கள யதார்த்தம் உணர்த்திநிற்கின்றது.
இலங்கை அரசியல்யாப்பை மதித்து ஜனநாயக வழியில் நடக்கும் நாடென்பது ஆணித்தரமான வகையில் உறுதிப்படுத்தும் வரையில் இலங்கையில் முதலிடுவதற்கு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முன்வருவது சந்தேகமே என இலங்கையிலுள்ள முன்னணி பொருளியலாளர்களும் செய்தியாளர்களும் கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதனைத்தவிர இந்த அரசியல் நெருக்கடி பல்வேறு வகையிலும் இலங்கையின் பொருளாதாரத்திற்கு பலத்த பாதிப்புக்களை உண்டுபண்ணியுள்ளது.
https://twitter.com/SriLankaTweet/status/1069934512400789504https://twitter.com/SriLankaTweet/status/1069934512400789504
அண்மைய எதிர்காலத்தில் கடுமையான பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கவேண்டிய அபாய நிலைக்குள் தள்ளப்பட்டிருப்பதாக முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர போன்றவர்கள் சுட்டிக்காட்டுவதை வெறுமனே பதவி பறிக்கப்பட்டவர்களின் கோப வெளிப்பாடுகளாக மட்டும் கண்டுகொள்ளாமல் இருந்துவிடமுடியாது.
அரசியல் நெருக்கடி தீர்ந்தபின்னர் பொருளாதார இழப்புக்களை ஒருவாறாக மீண்டும் சீர்செய்து விடலாம் என ஆளுந்தரப்பாக தொடர்ந்தும் அடையாளப்படுத்தும் தரப்பினரின் கருத்துக்களில் ஒருவித அர்த்தமுள்ளதென்று வைத்துக்கொண்டாலும் இலங்கை ஒரு ஜனநாயக நாடா? என்ற மிகப்பெரும் கேள்விக்கு வழிவகுத்துள்ள நிலைமைகள் மீதான சந்தேகம் நெருக்கடி நிலை தீர்ந்தபின்னர் பல காலத்திற்கு தொடர்ந்துமே இருக்கும் என்பதையே கள யதார்த்தம் எடுத்துணர்த்திநிற்கின்றது.
Link to Article:
Sunday, June 10, 2018
Tuesday, February 20, 2018
Sunday, February 18, 2018
மலர்ந்துள்ள பூமொட்டு ஆட்சிக்கவிழ்ப்பிற்கான அத்திவாரமா?
2016ம் ஆண்டு டிசம்பர் 28திகதி வெளிநாட்டு ஊடகவியலாளர் சங்கத்தின் பிரதிநிதிகளுடனான சந்திப்பை நடத்திய மஹிந்த ராஜபக்ஸ 2017ம் ஆண்டுக்குள் தற்போதுள்ள நல்லாட்சி அரசாங்கத்தை கவிழ்ப்பதாக திடசங்கற்பத்தோடு கருத்துவெளியிட்டிருந்தார். அப்போது அவரது கருத்தை பதவியில் இருந்து தோற்கடிக்கட்ட நாட்டுத்தலைவரின் நப்பாசை என்று எண்ணியர்கள் பலருண்டு. இதிலே ஊடகவியலாளர்கள் பலரும் அடங்குவர். ஆனால் 2017ம் ஆண்டு கடந்து அதிககாலம் செல்லும் முன்பாகவே ஆட்சிக்கவிழ்ப்பிற்கான அத்திவாரம் போடப்பட்டுவிட்டதை மலர்மொட்டுச் சின்னத்தில் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ஸ ஆதவு பொதுஜன பெரமுண கட்சியானது நேற்று சனிக்கிழமை (பெப்ரவரி 10ம் திகதி) நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் ஈட்டியுள்ள அமோக வெற்றி கோடிட்டுக்காட்டுகின்றது.
அடுத்து நடக்கப்போவது என்ன?
உள்ளூராட்சி சபைத்தேர்தலில் பெற்றுள்ள பெரு வெற்றியை அடுத்து மஹிந்த தரப்பினர் வெறுமனே உள்ளூரட்சி மன்றங்களை அபிவிருத்திசெய்யும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கமாட்டார் கள். மாறாக இதனை ஒரு ஏவுதளமாகக் கொண்டு பாராளுமன்றத்திற்குள்ளும் வெளியிலும் பீரங்கித்தாக்குதல்களை தொடுப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளன. மஹிந்த ராஜபக்ஸ தரப்பு நிச்சயமாக பிரதமர் பதவியை பெறுவதற்கும் அரசாங்கத்தை அமைப்பதற்கும் கடுமையான முயற்சிகளை மேற்கொள்ளும் சாத்தியமே அதிகமாக உள்ளது. மஹிந்த தரப்பிற்கு ஆதரவாக தற்போது 50 பாராளுமன்ற உறுப்பினர்கள் தானே உள்ளனர். அப்படியிருக்கையில் எப்படி பிரதமர் பதவியைக் கைப்பற்றுவது சாத்தியமாகும் என்று நீங்கள் அங்கலாய்ப்பது புரிகின்றது. உள்ளூராட்சித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸ தரப்பு வெற்றிபெற்ற விதமும் மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்க தரப்பினருக்கு ஏற்பட்டுள்ள பெரும் பின்னடைவும் அடுத்துவரும் நாட்களில் மஹிந்த ராஜபக்ஸ தரப்பை நோக்கி பலரும் செல்வதற்கான நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. மூழ்கின்ற படகில் சவாரி செய்வதற்கு எவருமே விரும்பமாட்டார்கள் தம்மைக் கரைசேர்க்கக்கூடிய படகிலே சஞ்சரிக்கவே விரும்புவார்கள் என்பதில் ஆச்சரியமில்லை. அந்தவகையில் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் தாம் வெற்றிபெறக்கூடிய அணியி;ல் இருக்கவே பாராளுமன்ற உறுப்பினர்கள் விரும்புவார்கள். மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலுள்ளவர்கள் அந்தவகையில் முதற்கட்டமாக அடுத்துவரும் நாட்களிலேயே மஹிந்தவின் மடியிலே சரணடைந்துவிடுவதை பார்க்க முடியும். அவர்களைப் பொறுத்தவரையில் கட்சியின் ஒற்றுமையையும் எதிர்கால நலன்களையும் கருத்தில் கொண்டே இந்த முடிவிற்கு தள்ளப்பட்டு விட்டதாக எளிதாக காரணத்தை கூறி தமது செயலை நியாயப்படுத்தக் கூடும். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பானது ஒட்டுமொத்தமாக பெற்ற ஆசனங்களின் எண்ணிக்கை 95ஆக இருக்கும் நிலையிலும் ஐக்கிய தேசியக் கட்சி பெற்ற ஆசனங்களின் எண்ணிக்கை 106 ஆக இருக்கின்ற நிலையிலும் பிரதமர் பதவியை பெற்றுக்கொள்ளவும் அதன் மூலமாக அரசாங்கத்தை அமைப்பதற்கும் தனியே சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களை மாத்திரம் எடுத்தால் போதுமானதன்று. இந்நிலையில் தற்போதுள்ள ஐக்கிய தேசியக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலரை எடுக்க வேண்டிய தேவைப்பாடு ஏற்படும். உள்ளூராட்சி தேர்தலில் ஈட்டிய அபார வெற்றியானது மஹிந்த தரப்பினருக்கு ஐக்கிய தேசியக் கட்சியினரை தம்பால் கவர்ந்திழுப்பதற்கான ஊக்கியாக அமையும். 2014ம் ஆண்டில் நடைபெற்ற ஊவா மாகாணசபைத் தேர்தலில் ஹரின் பெர்ணான்டோவை முதலமைச்சர் வேட்பாளராகக் கொண்ட ஐக்கிய தேசியக்கட்சி பெற்ற வெற்றியானது எப்படி 2015 ஜனவரியில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலிலும் ஓகஸ்டில் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் வெற்றிகளுக்கு களமமைத்ததோ அவ்வாறே 2018ம் பெப்ரவரியில் இடம்பெற்றுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் வெற்றியானது 2020ல் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலிலும் ஜனாதிபதித் தேர்தலிலும் கட்சிகளின் வெற்றிப்பாதையை தீர்மானிக்க பெரும் வாய்ப்புண்டு என்றால் மிகையல்ல.
இந்தத் தேர்தலில் மக்கள் வெளிப்படுத்திய செய்தி யாது?
சிங்கள மக்களைப் பொறுத்தவரையில் பெரும் எண்ணிக்கையானவர்கள் தமது தலைவன் மஹிந்த ராஜபக்ஸவே என நம்புவது துலாம்பரமாகியுள்ளது. மைத்திரிபால சிறிசேனவை தமது தலைவனாக ஏற்றுக்கொள்ளவில்லை என்பது தெளிவாகியுள்ளது.
இம்முறை தேர்தலில் தமது முக்கிய பிரசார விடயங்களாக மஹிந்த தரப்பு தற்போதைய அரசாங்கம் தமிழ் மக்களுக்கு புதிய அரசியல் யாப்பினூடாக அதிக அதிகாரங்களைக் கொடுத்து நாட்டைப் பிளவுபடுத்த முற்படுகின்றது என்பதும் எவ்வித அபிவிருத்தியும் செய்யாமல் நாட்டை பொருளாதார அதளபாதாளத்தில் தள்ளுகின்றது என்பதையுமே முன்வைத்திருந்தது. இவற்றை பெரும்பாலான சிங்கள மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளமையை தேர்தல் முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றது. இவற்றைவிடவும் முக்கியமானதாக போரிலே வெற்றிபெற்ற அரச படைத்தரப்பை பொறுப்புக்கூறல் பொறிமுறைகளூடாக இந்த அரசாங்கம் பழிவாங்க முற்படுகின்றது என்ற மஹிந்தவின் வாதத்திற்கு கிடைத்த வெற்றியாகவும் இதனை நோக்க முடியும்.
தேர்தலுக்கு நல்லாட்சி அரசாங்கத்திடம் இருந்து ஊழல் மோசடிவிடயத்தில் காத்திரமான செயற்பாட்டை எதிர்பார்த்தவர்கள் ஏதுமே உருப்படியாக நடக்கவில்லை என்ற ஏமாற்றமும் அவர்களுக்கு எதிரான விரக்தி வாக்குகளாக விழுந்துள்ளதை உணர்ந்துகொள்ளமுடிகின்றது. அதனிலும் பிணைமுறி மோசடி விடயத்தில் அரசாங்கத்தின் மீது குறிப்பாக ஐக்கிய தேசியக்கட்சியின் மீது மக்கள் மிகவும் வெறுப்படைந்துள்ளதை தேர்தல் முடிவுகள் உணர்த்திநிற்கின்றது. ஊழலை ஒழிப்போம் என பதவிக்கு வந்தவர்களே ஊழலில் ஈடுபடுவதை மக்களால் சகித்துக்கொள்ளமுடியவில்லை.
வடக்கு கிழக்கைப் பொறுத்தவரை குறிப்பாக வடக்கைப் பொறுத்தவரையில் கடந்தபல தேர்தல்களில் மக்களின் அமோக ஆதரவைப் பெற்று வெற்றிவாகைசூடி ஏறத்தாழ ஏகப்பிரதிநிதிகளாக பார்க்கப்பட்ட தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு அதன் அரசியல் பாதையை செப்பனிடவேண்டும் என்ற செய்தியை மக்கள் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்கள். கஜேந்திரக்குமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தமிழர்களின் அரசியல் வாழ்வியலில் ஆக்கபூர்வமான வகிபாகத்தை வகிக்க வேண்டும் என மக்களால்விரும்பிக் கொடுக்கப்பட்ட சந்தர்ப்பமாகவும் இதனை நோக்கமுடியும். சுரேஷ் பிரேமச்சந்திரனைப் பொறுத்தவரையில் தனது அரசியல் எதிர்காலத்தை அவர் அணுஅணுவாக ஆராயவேண்டிய நிலைமையை தேர்தல் முடிவு பிரதிபலிக்கின்றது. நெருக்கடியான போர்க்காலத்தில் விடுதலைப்புலிகளை பலவீனப்படுத்தும் வகையில் செயற்பட்ட ஆனந்தசங்கரியை தமிழ் மக்கள் எப்போதோ நிராகரித்துவிட்ட நிலையில் அவரோடு கூட்டுவைத்துக்கொண்டமை சுரேஷ் பிரேமச்சந்திரனின் அரசியல்ஞானத்தையே கேள்விக்குட்டுத்துகின்றது. தமிழ் மக்களும் இதனை வாக்குகளால் வெளிப்படுத்தியிருக்கின்றனர்.
காத்திருக்கும் சவால்கள்
உள்ளூராட்சிமன்ற தேர்தலில் அமோக வெற்றிபெற்றுவிட்டோம் என்பதற்காக நினைத்தபடி மஹிந்த தரப்பினரால் செயற்படமுடியாது. ஜெனிவா சவாலை எதிர்கொள்வதற்கு ரணில் விக்கிரமசிங்க தேவையாக உள்ளநிலையில் அவரை வெறுமனே ஒரங்கட்டிவிடமுடியாது யாதார்த்தநிலை உண்டு. தமிழ் மக்களே விட்டாலும் இலங்கையில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த ஜெனிவாவை மேற்குலக நாடுகள் துரும்பாகப் பயன்படுத்தும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளமையால் அரசியல் களத்தில் ரணிலின் பிரசன்னத்தை வைத்திருக்க வேண்டிய தேவைப்பாடு உள்ளது.
எந்த அரசாங்கம் பதவிக்கு வந்தாலும் மல்லிகைப் பூ தெளித்த மலர்ச்சாலையாக அது இருந்தவிடமாட்டாது மாறாக முட்கள் நிறைந்த பாதையாகவே இருக்கும். குறிப்பாக கடன் சுமை என்பது இலங்கையால் தாங்கிக்கொள்ளமுடியாத நிலையை எட்டியிருக்கின்றது. அரச ஊழியர்களுக்கு மாதாந்தச்சம்பளம் கொடுப்பதற்கே உள்நாட்டு வெளிநாட்டு கடன்களைப் பெறவேண்டிய நிலை உள்ளது என்றால் நிலைமையின் பாரதூரம் விளங்கும். லாபம் தராத பாரிய கட்டுமானங்களில் முதலீடுகளைச் செய்ததன் பிரதிபலனாக அதற்காகப் பெற்ற கடன்களைத்திருப்பிச் செலுத்தும்வதில் கடும் சவால்கள் காணப்படுகின்றன. இலங்கையின் ஒட்டுமொத்த கடன்களின் உண்மையான விபரம் என்ன என்று தெரியவில்லை என கணக்காய்வாளர் நாயகம் கடந்தவாரத்தில் கூறியிருந்தார். இதுவரை மதிப்பிடப்பட்ட தொகைக்கு அமைய 10 ரில்லியன்களாக கடன்களின் தொகை அமைந்துள்ளது. அதாவது பத்து லட்சம் கோடிகள் என்பதாக அந்த தொகை அமைந்திருகின்றது. அரச வருமானத்தில் 90 சதவீதத்திற்கும் அதிகமான தொகை கடன்களை வட்டியுடன் மீளச் செலுத்துவதற்கே செலவிட வேண்டிய நிலைமை காணப்படுகின்றதால் யார் அதிகாரத்திற்கு வந்தாலும் சிக்கலை எதிர்கொள்ள நேரிடும்.
ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வதற்கு மட்டுமன்றி உலக வங்கி, சர்வதேச நாணயநிதியம் ஆகியவற்றிடம் இருந்து பெற்ற கடன்களுக்காகவும் பொருளாதார, நிதிநிலை, நிர்வாக, அரசியல்யாப்பு மறுசீரமைப்புக்களை முன்னெடுக்கவேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது. இவற்றை யாராலும் தூக்கி கிடப்பில் போட்டுவிட்டு புதிதாக அனைத்தையும் ஆரம்பிப்போம் என்று கூறமுடியாது.
ஏகலைவன்
Sunday, January 28, 2018
சாக்கடை அரசியலில் மூழ்கிப்போகும் எதிர்பார்ப்புக்கள்
• 'அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை எதிரியும் இல்லை' ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் தெரிவான 96 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் தனித்து ஆட்சியமைக்கத்தயார் தயார்' - இரத்தினபுரியில் தேர்தல் பிரசாரக்கூட்டமொன்றில் ஜனவரி 27ம் திகதி ஜனாதிபதி ஆற்றிய உரை
• 'அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பதை இன்னமும் தீர்மானிக்கவில்லை' – கொழும்பு ஜனாதிபதி மாளிகையில் பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் ஊடகப் பிரதானிகளுடன் ஜனவரி 26ம்திகதி நடத்திய சந்திப்பில் ஜனாதிபதி
• என்னுடைய பதவிக்காலம் எப்போது முடிவடைகின்றது எனப் பலரும் அறிய விரும்புகின்றனர். அவர்களுக்கு என்னிடம் பதிலொன்றுள்ளது. ஊழல் அரசியல்வாதிகளும் கொலையாளிகளும் கள்வர்களும் நீதியின் முன்பாகக் கொண்டுவரப்படும் நாளிலேயே என்னுடைய பதவிக்காலம் நிறைவடைகின்றது. – தனது டுவிட்டர் சமூகத்தளத்தில் ஜனவரி 18ம்திகதி ஜனாதிபதி
கடந்த சில வாரங்களாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பேச்சுக்களையும் அறிக்கைகளையும் செயற்பாடுகளையும் உற்றுநோக்குகின்றபோது வித்தியாசமான போக்கு எதிரொலிப்பதை அரசியல் களத்தை பின்தொடர்பவர்களால் மட்டுமன்றி அவ்வப்போது செய்திகளைப் பார்க்கின்றவர்களால் கூட உணர்ந்துகொள்ளமுடியும்.
ஜனாதிபதியின் தொனியிலும் போக்கிலும் ஏன் இந்த மாற்றம் என்று பலரும் அங்கலாய்ப்பது இயல்பானதே! 2015ம் ஆண்டில் உயிரச்சுறுத்தலின் மத்தியில் நிகழ்த்தப்பட்ட ஆட்சிமாற்றத்தால் ஏற்பட்ட முக்கியமான எதிர்பார்ப்புக்கள் கானல் நீராகப் போய்விடுமா என்பதே அங்கலாய்ப்பிற்கான முக்கியகாரணமாகும்.
பெப்ரவரி 10 ம்திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தல்களை இலக்காகக்கொண்டே ஜனாதிபதி இவ்வாறான அதிரடிக்கருத்துக்களை வெளியிட்டுவருகின்றார் என்பது பரவலான அபிப்பிராயமாக இருந்துவருகின்றது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இரண்டாக மைத்திரி மற்றும் மஹிந்த அணிகளாக பிளவுபட்டுக்கிடக்கும் நிலையில் ஐக்கிய தேசியக்கட்சி உள்ளூராட்சித் தேர்தலில் முதலாவது இடத்தினைப் பெறும் எனற நிலையில் எப்படிப்பட்டாயினும் தனது அணியின் வாக்கு எண்ணிக்கையை அதிகரித்துக்கொண்டுவிடவேண்டும் என்ற முனைப்போடு ஜனாதிபதி சிறிசேன கருத்துக்களை வெளிப்படுத்தி வருவதாகவே அரசியல் விமர்சகர்களில் சிலர் கூறுகின்றனர்.
உள்ளூராட்சித் தேர்தலில் மைத்திரியின் அணியை விடவும் மஹிந்த ராஜபக்ஸவை தலைவராக வரிந்துகட்டிக்கொண்டு பூமொட்டுச் சின்னத்தில் களமிறங்கும் தரப்பினர் இரண்டாவது இடத்தைப் பெற்றுவிட்டால் மைத்திரி மீதான அழுத்தங்கள் முன்னெப்போதுமில்லாத அளவிற்கு அதிகரிக்க வாய்ப்புண்டு.
நிறைவேற்றதிகார ஜனாதிபதி பதவியில் இருந்துகொண்டே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவராகவும் செயற்படுகின்ற நிலையிலேயே அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் மஹிந்த அணியின் பக்கமாக சாய்கின்றபோது தேர்தலூடாக மஹிந்தவின் பலம் உறுதிசெய்யப்படுமிடத்து மேலும் அதிகமானோர் சிறிசேனவின் பக்கத்திலிருந்து மஹிந்த பக்கமாக வெளிப்படையாக தாவத்தொடங்கிவிடுவர்.
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் இன்னமும் தீர்மானிக்காத நிலையிலும் உயர் நீதிமன்றம் தற்போதைய ஜனாதிபதிப் பதவிக்காலம் ஐந்துவருடங்கள் மாத்திரமே எனத் தெளிவுபடுத்தியுள்ள நிலையிலும் ஜனாதிபதி சிறிசேன வெறுமனே நொண்டி வாத்து போன்றதொரு ஜனாதிபதியாகவே இருக்க நேரிடும் என்பதால் அவரது கட்சியினரே அவரைப் பொருட்படுத்தாமல் நடந்துகொள்ளும் சூழு;நிலை ஏற்படலாம்.;
ஜனாதிபதிப் பதவியை 2015ம் ஆண்ட ஜனவரி 9ம் திகதி ஏற்றபின்னர் நாட்டுமக்களுக்கு ஆற்றிய உரையின் போது தாம் மீண்டுமாக ஜனாதிபதிப் பதவிக்கு போட்டியிடப்போவதில்லை என்று அறிவித்ததன் மூலம் பல்வேறுமட்டங்களிலிருந்தும் பெருந்திரளானவர்களை தம்பால் திரும்பிப்பார்க்கவைத்த ஜனாதிபதி சிறிசேன கடந்த சிலவாரகாலமாக செயற்படும் விதமும் தெரிவிக்கும் கருத்துக்களும் அவர்மீது கணிசமானவர்கள் மத்தியில் வெறுப்பைத் தோற்றுவிக்கவைப்பதாகவும் அனேகமானவர்கள் மத்தியில் அவரது நோக்கம் குறித்த சந்தேகத்தை எழுப்புவதாகவும் அமைந்துள்ளன.
மீண்டுமாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை பதவியில் தொடர எதிர்பார்க்கவில்லை என்றெல்லாம் பதவியேற்ற ஆரம்பகாலத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில் பேசிய ஜனாதிபதி இன்றோ தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை. அதிகாரத்தில் இல்லாவிட்டாலும் அரசியலில் இருப்பேன். ஊழல் அரசியல்வாதிகளை நீதிக்கு முன்கொண்டுவந்த நாளிலேயே தமது பதவிக்காலம் முடிவடைகின்றது எனக் தெரிவிக்கும் கருத்துக்கள் அவர் தற்போதைய ஐந்துவருடங்களுக்கு மேலாகவும் அதிரகாரத்தில் இருக்க ஆசைப்படுவதை துலாம்பரமாக்குகின்றது.
'அரசியலில் நிரந்தரமான நண்பர்களும் இல்லை எதிரிகளும் இல்லை' ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் தெரிவான 96 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் தனித்து ஆட்சியமைக்கத்தயார்' என நேற்று இரத்தினபுரியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கூறிய கூற்றானது உள்ளூராட்சித் தேர்தலை இலக்காக் கொண்ட பிரசாரம் அல்ல என்பதும் மாறாக உண்மையாகவே ஐக்கியதேசியக் கட்சியுடனான கூட்டணியில் இருந்து விலகித்தனிவழி செல்வதற்கு தயாராகிவிட்டதனையே உணர்த்திநிற்கின்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் தரப்பினரை நேரடியாகத் தாக்கி அதிலும் மஹிந்தவின் காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளுக்கு எதிராக வலுவான நடவடிக்கை எதனையும் இதுவரையில் எடுக்காமல் அனைத்து தவறுகளுக்கும் ஐதேகவே பொறுப்பேற்க வேண்டும் இதே பாங்கில் கருத்துக்களை வெளியிடுவதும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதும் அக்கட்சியுடனான விரிசலை அதிகரிக்கவே வழிகோலும். ஐக்கிய தேசிய கூட்டணிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும் இடையே கைச்சாத்திடப்பட்ட கைச்சாத்திடப்பட்ட நல்லாட்சி அரசாங்க கூட்டு ஒப்பந்தம் கடந்த ஆண்டு டிசம்பர் 31ம்திகதியுடன் நிறைவிற்கு வந்துவிட்ட நிலையில் இரு கட்சிகளையும் தொடர்ந்தும் அரசாங்கத்தில் ஒன்றிணைத்து வைத்திருப்பதற்கான எழுத்துமூல உறுதிப்பாடு இல்லை என்றாகிவிட்ட நிலையில் தேர்தலின் பின்னர் அந்த ஒப்பந்தம் மீண்டும் புதுப்பிக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன உட்பட சில முக்கிஸ்தர்கள் கூறிய கருத்துக்கள் நிஜமாகவதற்கு சாத்தியமில்லை என்பதையே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மைக்காலமாக வெளிப்படுத்திவரும் ஆக்ரோஷக் கருத்துக்கள் வெளிப்படுத்திநிற்கின்றன.
அரசியல் என்பது ஒரு சாக்கடை அதற்குள் ஒரு முறை மூழ்கிவிட்டால் அவர்களை நம்பிவிடக்கூடாது என்ற கசப்பான உண்மையை இலங்கை வாக்காளர்கள் மீண்டுமாக உணர்ந்துகொள்ளும் துர்ப்பாக்கிய நிலையின் விளிம்பில்நாம் நின்றுகொண்டிருக்கின்றோம். படுகொலைகளைப் புரிந்தவர்கள் சர்வாதிகள் போன்று ஆட்சி செய்தனர் நாட்டை மோசமாகக் கொள்ளையடித்தனர் எதிர்காலச் சந்ததியினரை அழிவுக்குள் தள்ளுகின்றனர் என அடுக்கடுக்காக ராஜபக்ஸ தரப்பினர் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்று இன்று பதவியைத் தக்கவைப்பதற்காக அதிகாரத்தை உறுதிப்படுத்துவதற்காக கூறும் கருத்துக்களைப் பார்க்கின்றபோது மனச்சாட்சியுள்ள குடிமக்கள் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை இழக்கும் துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்படுவர் என்பது திண்ணமாகும்.
பதவியை பொருட்டாகக் கருதவில்லை அதிகாரத்தை தூக்கியெறியத் தயார் என்று கருத்துக்களும் எளிமையான செயற்பாடுகளுமே ஜனாதிபதி சிறிசேனவிற்கு மக்கள் மத்தியில் ஆதரவைக் கொண்டுவரக்காரணமாக இருந்தது. ஆனால் அதிகாரத்தை மீண்டும் வலுப்படுத்துவதற்கும் ஆட்சியில் நிலைத்திருப்பதற்கும் அவர் தீர்மானித்தால் மக்களிடமிருந்து அந்நியப்படும் ஏதுநிலை ஏற்படும். ஆக மொத்தம் மூன்று ஆண்டுகளுக்குள்ளாக இவரும் வழமையான அரசியல்வாதிதான் என்பதை உறுதிசெய்வதாகவே ஜனாதிபதி சிறிசேனவின் நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றனவென்றால் மிகையல்ல.
ஆதவன் இணையத்தளத்தில் 2018 ஜனவரி 28ம்திகதி பிரசுரமானது
Saturday, January 6, 2018
சவால்களால் நிறைந்துள்ள 2018
பிறந்துள்ள 2018ம் ஆண்டு இலங்கையின் அரசியல் களத்தில் பல்வேறு சவால்களை கண்டு நிற்கப்போகின்றது என்பது திண்ணம்.
நீடிக்குமா நல்லாட்சி?
மைத்திரி-ரணில் நல்லாட்சி அரசாங்கம் நீடிக்குமா என்பதே தற்போது அனைவருக்கும் முன்பாகவுள்ள கேள்வியாகும். ஐக்கிய தேசியக் கட்சியின் அனைத்து மட்டத்திலும் தனி வழிசென்று ஆட்சி அமைக்க வேண்டும் என்ற விருப்பம் காணப்படுகின்றது என கடந்த வாரம் இலங்கையிலுள்ள வெளிநாட்டு ஊடவியலாளர்களுடனான சந்திப்பின் போது அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ பகிரங்கமாகவே அறிவித்திருந்தார். புpணை முறி விசாரணை அறிக்கை முடிவுகள் ஐக்கிய தேசியக்கட்சியினரையே அதிகமாக இலக்குவைத்துள்ளதாக நம்பப்படுவதால் ஜனாதிபதி சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடனான நல்லாட்சி கூட்டணியை மீண்டும் புதுப்பிப்பதில் சிக்கல்களைத் தோற்றுவிக்கும் என்பது திண்ணமாகும்.
மறுமுனையில் பெப்ரவரி 10 திகதி நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களில் ஜனாதிபதி சிறிசேனவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது ஐக்கிய தேசியக் கட்சி மஹிந்த ராஜபக்ஷவின் அணியான பொதுஜன பெரமுன ஆகியவற்றிற்கு அடுத்து மூன்றாவது இடத்தைப் பெறுமிடத்து நல்லாட்சி அரசாங்கத்திலிருந்து வெளியேறுவதற்கான அழுத்தம் பன்மடங்காகும். ஏனெனில் மஹிந்தவின் கையோங்கிவிடின் ஜனாதிபதி சிறிசேனவின் பக்கமுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள உறுப்பினர்கள் மஹிந்த பக்கம் தாவுவதை தடுக்க முடியாமற்போய்விடும். தேர்தல் அறிவிப்பு வெளியான நிலையிலேயே பிரதி அமைச்சராக இருந்த நிமல் லன்ஸா ஜனாதிபதி அணியிலிருந்து வெளியேறியிருந்தார். அந்தவகையில் தேர்தலில் மைத்திரியின் ஸ்ரீலசுக அணியை விடவும் மஹிந்தவின் ஸ்ரீலசுக அணி சிறப்பாக செயற்பட்டால் மைத்திரி மீதான அழுத்தங்கள் அதிகரிக்கும்.
ஜெனிவா நெருக்கடி
மறுமுனையில் மார்ச் மாதத்தில் இலங்கை ஜெனிவாவில் மற்றுமொரு சவாலை எதிர்கொள்ளக்காத்திருக்கின்றது. 2015 ஓக்டோபர் 1ம் திகதி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் நிறைவேற்றப்படாத நிலையில் கடந்த மார்ச் மாதத்தில் இலங்கைக்கு இருவருட கால அவகாசம் வழங்கப்பட்டது.
எதிர்வரும் மார்ச்சுடன் ஒருவருடகாலம் பூர்த்தியாகவுள்ள நிலையில் எதிர்பார்க்கப்பட்ட முக்கியமான விடயங்கள் பலவும் இன்னமும் பூர்த்திசெய்யப்படாத நிலையில் ஜெனிவாவில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதிலளிப்பதில் இலங்கை தர்மசங்கட நிலையை எதிர்நோக்கும் என்பது நிச்சயமாகும். இனப்பிரச்சனைக்கான அரசியல் தீர்வென்பது உள்ளூராட்சித் தேர்தல்களால் மேலும் தாமதமடையும் என்பது நிச்சயம்.
ஆனால் நல்லாட்சி அரசாங்கத்திலுள்ள பிரதான கட்சிகள் தேர்தலின் பின்னர் தனிவழி போனால் கானல்நீராகவே போய்விடும். மனித உரிமைக்கு பெரும் அச்சுறுத்தலாக விளக்கும் பயங்கரவாத தடைச்சட்டத்தை இல்லாதொழித்து அதற்கு பதிலாக சர்வதேச நியமங்களுக்கு அமைவான சட்டமொன்றைக்கொண்டுவருவதாக வழங்கிய உறுதிமொழிகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. கடந்தவருடம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐநா தூதுக்குழுக்களும் ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுக்களும் இதுவிடயத்தில் தமது கவலைகளைத் தெரிவித்திருந்தன. ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை வழங்கப்படுவதற்கான முக்கியமான நிபந்தனையாக பயங்கரவாத தடைச்சட்ட நீக்கம் அமைந்துள்ளநிலையில் நீண்டகாலத்திற்கு சாக்குப் போக்கு கூறி சமாளிக்க முடியாது.
பொருளாதார சிக்கல்கள்
இலங்கைக்கு வழங்கிய ஜிஎஸ்பி வரிச்சலுகையை இலங்கையின் பொருட்களுக்கான மிகப் பெரிய ஏற்றுமதிச் சந்தையான அமெரிக்கா நிறுத்திக்கொண்டுள்ள நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை இழப்பது தள்ளாடிக் கொண்டிருக்கின்ற இலங்கையின் பொருளாதாரத்திற்கு பெரும் பின்னடைவாக அமையும்.
சீனாவிடம் இருந்து பெற்ற பெருந்தொகைக் கடன்களைத் திருப்பிப் கொடுப்பதற்கு வழியின்றி கடந்தாண்டில் ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தை சீனாவிற்கு குத்தகைக்கு கொடுக்க நிர்ப்பந்திக்கப்பட்ட இலங்கைக்கு இவ்வாண்டில் பல கடன்களுக்கான தவணைகளைச் திருப்பிச் செலுத்த வேண்டிய கடப்பாடு உள்ளது. இவ்வருடத்தில் இலங்கை 2இ564 மில்லியன் அமெரிக்க டொலர்களை மொத்தமாக கடன் மீள் செலுத்துகைக்காக வழங்க வேண்டும். இந்தவகையில் இலங்கை அரசியல் களத்திலும் சரி பொருளாதாரத்திலும் சரி உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கடும் சவால்களுக்கு முகங்கொடுக்கும் ஆண்டாக 2018 அமையப்போவது திண்ணம்.
- நிதர்சனன்
இலங்கையில் சீனாவின் ஆதிக்கம்
ஹம்பாந்தோட்டை மாகம்புர துறைமுகத்தில் 2018ம் முதல் நாளான நேற்று சீனாவின் தேசியக் கொடி ஏற்பட்டுள்ளமை இலங்கையின் இறைமைக்கு வீழ்ந்த அடி என்ற பாங்கில் சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டுக்கொண்டிருப்பதைக் காணமுடிகின்றது. வெறுமனே வேற்று நாட்டின் கொடி ஏற்றப்படுகின்றமையை வைத்து ஒரு நாட்டின் இறைமையைக் கேள்விக்குட்படுத்திவிட முடியாது.
ஆனால் இலங்கையில் சீனாவின் வகிபாகத்தை உண்மையாக அறிந்திருப்பவர்கள் கொண்டிருக்கும் கரிசனையை பத்தோடு பதினொன்றாகப் புறந்தள்ளிவிட முடியாது.
கடந்த வருடத்தில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பிற்கு அமைவாக இலங்கையின் வெளிநாட்டுக் கடன்களின் மொத்த அளவு 64 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். அதாவது இலங்கை ரூபாவில் 960000 கோடிகளாகும். அரசாங்கத்தின் அனைத்துவிதமான ஆண்டுவருமானத்தில் 94 சதவீதமானவை கடன்களை திரும்பிச் செலுத்துவதற்கே செலவிடப்படும் துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றது.
இதில் மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் சீனாவிடம் இருந்து பெற்ற கடன்களின் தொகை மாத்திரம் 8 பில்லியன் அமெரிக்க டொலர்கள். அதாவது 120000 கோடி ரூபா. வட்டியோடு இந்த கடன் தவணைகளைத் திரும்பிச் செலுத்துவதற்கு திக்கித் திணறி நிற்கின்ற இலங்கை கடந்தகாண்டு டிசம்பர் மாதம் 9ம்திகதி சீனாவின் மேர்ச்சான்ட் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்த்திற்கு 99வருட குத்தகை அடிப்படையில் ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தை தாரைவார்க்க நேர்ந்தது.
வர்த்தகத்தில் சாணக்கியமுடைய சீனா இலங்கையின் கடன்சுமைகளை நன்கறிந்தும் கடன்வழங்கியமை கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த சொத்துக்களை தன்பால் கவர்ந்துகொள்ளும் கடன்பொறி இராஜதந்திரத்திற்கு அமைவாகவே என தற்போது உணர்ந்துகொள்ளப்பட்டுள்ளது.
90களின் ஆரம்பப்பகுதியில் இருந்து அசுர பொருளாதார வளர்ச்சியைத் தக்கவைத்து வந்த சீனா இன்று உலகின் இரண்டாவது மிகப் பெரிய பொருளாதார வல்லரசு என்ற நிலையில் அமெரிக்காவிற்கு அடுத்த நிலையில் உள்ளது. உலகின் தொழிற்சாலை என்ற அளவிற்கு உலகில் உற்பத்தியாகும் பெரும்பாலான பொருட்கள் சீனாவிலேயே தற்போது உற்பத்திசெய்யப்படுகின்ற அளவிற்கு அதன் முக்கியத்துவம் அதிகரித்துவிட்டது.
தனது பொருளாதார வளர்ச்சியைத் தொடர்ந்தும் தக்கவைத்து முதற்தரத்தை நோக்கிய வேகப் பாய்ச்சலை வியூகமாகக் கொண்டிருக்கும் சீனா கடந்த 1500ம் ஆண்டுகளில் பட்டுப்போன 'பட்டுப்பாதை' வர்த்தகத்திற்கு மீண்டும் உயிரூட்ட 'ஒரே மண்டலம்' ஒரே பாதை' என்ற பெயரில் சீனா புதிய திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது. இதன் படி இலங்கையில் ஹம்பாந்தோட்டையில் மிகப்பெரிய துறைமுகத்தை நிர்மாணிக்க கடனுதவி வழங்கியது சீனா. 'கடன்பட்டார் நெஞ்சம் போன்று கலங்கினான் இலங்கை வேந்தன்'; என்ற கம்பராமாயண கருத்துக்கமைவாக கடன்பட்டவர்களின் இக்கட்டான நிலையில் இன்றோ வேறு வழியின்றி சீனாவிற்கே அந்த துறைமுகத்தைக் இலங்கை கொடுக்க நேர்ந்துள்ளது.
குத்தகைக்கு எடுத்துள்ள நிறுவனத்தின் கொடியை ஏற்றினால் போதும் தானே ஏன் சீன நாட்டின் கொடியை ஏற்ற வேண்டும் என பலரும் கேள்வி எழுப்பலாம். ஆனால் சீன மேர்ச்சன்ட் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனமாக இருந்தாலும் சரி சைனா ஹாபர் நிறுவனமாக இருந்தாலும் சரி அனைத்துமே சீன அரசாங்கத்திற்கு சொந்தமானவை என்பதை சீனா அரசியல் பொருளாதாரத்தை அறிந்தவர்கள் நன்கறிவர்.
ஆக மொத்தம் சீனாவே இன்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை குத்தகைக்கு எடுத்துள்ளது. அடுத்துவரும் 99 ஆண்டுகளில் என்ன நடக்கும் என்பதை இப்போது கூறமுடியாது. ஹொங்கொங் தீவை பிரித்தானியா 1898ம் ஆண்டில் 99வருடக் குத்தகைக்கு எடுத்த போது சீனா வறுமைக்கோட்டின் கீழுள்ள பலவீனமான நாடாக இருந்தது. சீனாவின் அசுர வளர்ச்சியும் பலமும் பிரித்தானியாவின் சரிவும் குத்தகைக் காலத்தின் நிறைவில் மீளக்கையளிப்பை உறுதிசெய்தது.
ஆனால் இன்னமும் 99 வருடங்களின் பின்னர் சீனாவின் பலம் மேலும் அதிகரித்து முதற்தர பொருளாதார வல்லரசாக மாறும் என எதிர்வுகூறப்பட்டுள்ள நிலையில் கேந்திர முக்கியத்துவம் மிக்க ஹம்பாந்தோட்டை துறைமுகம் மீளவும் இலங்கையின் கைகளுக்கு திரும்புமா இல்லையா என்பதற்கு காலம்தான் பதில்சொல்லவேண்டும்.
2015ம்ஆண்டில் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து மேற்குலக நாடுகளுடனான உறவுகள் பலமடைந்தபோதும் இலங்கை எதிர்பார்த்த பொருளாதார பலாபலன்கள் கிடைக்கவில்லை. வெளிநாட்டு நேரடி முதலீடுகள் எதிர்பார்த்ததைவிடவும் குறைவாகவே கிடைத்தன. வெறுமனே 300 மில்லியன் அமெரிக்க டொலர் மாத்திரமே 2016ம் ஆண்டில் கிடைத்திருந்தது.
இந்த நிலையில் இலங்கையின் பொருளாதாரம் கடும் நெருக்கடிகளை தற்போது எதிர்கொண்டுள்ளமையால் ஹம்பாந்தோட்டைத் துறைமுகம் போன்று அரச சொத்துக்கள் பலவும் சீனாவின் கைகளுக்கு செல்லும் சாத்தியக்கூறுகளை மறுதலிக்கமுடியாது. அந்தவகையில் பொருளாதாரத்தில் மாத்திரமன்றி அரசியலிலும் சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் வலுப்பெறுவதை யாராலும் தடுத்துநிறுத்திவிடமுடியாது.
Subscribe to:
Posts (Atom)