Tuesday, February 20, 2018

மலர்மொட்டால் தான் மலரும் தமிழீழம்- எச்சரிக்கிறார் சம்பந்தன்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தரப்பினர் மிகவும் கீழ்த்தரமான முறையில் இனவாதத்தை தூண்டி வருவதாக கண்டனம் தெரிவித்த சம்பந்தன் ஒருவேளை எதிர்காலத்தில் தமிழீழம் மலருமாக இருந்தால் அதற்கு மஹிந்தவின் தரப்பினரே காரணமாக அமைவர் என எச்சரித்தார்.

Sunday, February 18, 2018

மலர்ந்துள்ள பூமொட்டு ஆட்சிக்கவிழ்ப்பிற்கான அத்திவாரமா?


2016ம் ஆண்டு டிசம்பர் 28திகதி வெளிநாட்டு ஊடகவியலாளர் சங்கத்தின் பிரதிநிதிகளுடனான சந்திப்பை நடத்திய மஹிந்த ராஜபக்ஸ 2017ம் ஆண்டுக்குள் தற்போதுள்ள நல்லாட்சி அரசாங்கத்தை கவிழ்ப்பதாக திடசங்கற்பத்தோடு கருத்துவெளியிட்டிருந்தார். அப்போது  அவரது கருத்தை பதவியில் இருந்து தோற்கடிக்கட்ட நாட்டுத்தலைவரின் நப்பாசை என்று எண்ணியர்கள் பலருண்டு. இதிலே ஊடகவியலாளர்கள் பலரும் அடங்குவர். ஆனால் 2017ம் ஆண்டு கடந்து அதிககாலம் செல்லும் முன்பாகவே ஆட்சிக்கவிழ்ப்பிற்கான அத்திவாரம் போடப்பட்டுவிட்டதை மலர்மொட்டுச் சின்னத்தில் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ஸ ஆதவு பொதுஜன பெரமுண கட்சியானது நேற்று சனிக்கிழமை (பெப்ரவரி 10ம் திகதி) நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் ஈட்டியுள்ள அமோக வெற்றி கோடிட்டுக்காட்டுகின்றது.

அடுத்து நடக்கப்போவது என்ன? 

உள்ளூராட்சி சபைத்தேர்தலில் பெற்றுள்ள பெரு வெற்றியை அடுத்து மஹிந்த தரப்பினர் வெறுமனே உள்ளூரட்சி மன்றங்களை அபிவிருத்திசெய்யும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கமாட்டார்கள். மாறாக இதனை ஒரு ஏவுதளமாகக் கொண்டு பாராளுமன்றத்திற்குள்ளும் வெளியிலும் பீரங்கித்தாக்குதல்களை தொடுப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளன.  மஹிந்த ராஜபக்ஸ தரப்பு நிச்சயமாக பிரதமர் பதவியை பெறுவதற்கும் அரசாங்கத்தை அமைப்பதற்கும் கடுமையான முயற்சிகளை மேற்கொள்ளும் சாத்தியமே அதிகமாக உள்ளது.  மஹிந்த தரப்பிற்கு ஆதரவாக தற்போது 50 பாராளுமன்ற உறுப்பினர்கள் தானே உள்ளனர். அப்படியிருக்கையில் எப்படி பிரதமர் பதவியைக் கைப்பற்றுவது சாத்தியமாகும் என்று நீங்கள் அங்கலாய்ப்பது புரிகின்றது. உள்ளூராட்சித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸ தரப்பு வெற்றிபெற்ற விதமும் மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்க தரப்பினருக்கு ஏற்பட்டுள்ள பெரும் பின்னடைவும் அடுத்துவரும் நாட்களில் மஹிந்த ராஜபக்ஸ தரப்பை நோக்கி பலரும் செல்வதற்கான நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. மூழ்கின்ற படகில் சவாரி செய்வதற்கு எவருமே விரும்பமாட்டார்கள் தம்மைக் கரைசேர்க்கக்கூடிய படகிலே சஞ்சரிக்கவே விரும்புவார்கள் என்பதில் ஆச்சரியமில்லை. அந்தவகையில் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் தாம் வெற்றிபெறக்கூடிய அணியி;ல் இருக்கவே பாராளுமன்ற உறுப்பினர்கள் விரும்புவார்கள். மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலுள்ளவர்கள் அந்தவகையில் முதற்கட்டமாக அடுத்துவரும் நாட்களிலேயே மஹிந்தவின் மடியிலே சரணடைந்துவிடுவதை பார்க்க முடியும். அவர்களைப் பொறுத்தவரையில் கட்சியின் ஒற்றுமையையும் எதிர்கால நலன்களையும் கருத்தில் கொண்டே இந்த முடிவிற்கு தள்ளப்பட்டு விட்டதாக எளிதாக காரணத்தை கூறி தமது செயலை நியாயப்படுத்தக் கூடும். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பானது ஒட்டுமொத்தமாக பெற்ற ஆசனங்களின் எண்ணிக்கை 95ஆக இருக்கும் நிலையிலும் ஐக்கிய தேசியக் கட்சி பெற்ற ஆசனங்களின் எண்ணிக்கை 106 ஆக இருக்கின்ற நிலையிலும் பிரதமர் பதவியை பெற்றுக்கொள்ளவும் அதன் மூலமாக அரசாங்கத்தை அமைப்பதற்கும் தனியே சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களை மாத்திரம் எடுத்தால் போதுமானதன்று. இந்நிலையில் தற்போதுள்ள ஐக்கிய தேசியக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலரை எடுக்க வேண்டிய தேவைப்பாடு ஏற்படும். உள்ளூராட்சி தேர்தலில் ஈட்டிய அபார  வெற்றியானது மஹிந்த தரப்பினருக்கு ஐக்கிய தேசியக் கட்சியினரை தம்பால் கவர்ந்திழுப்பதற்கான ஊக்கியாக அமையும். 2014ம் ஆண்டில் நடைபெற்ற ஊவா மாகாணசபைத் தேர்தலில் ஹரின் பெர்ணான்டோவை முதலமைச்சர் வேட்பாளராகக் கொண்ட ஐக்கிய தேசியக்கட்சி பெற்ற வெற்றியானது எப்படி 2015 ஜனவரியில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலிலும் ஓகஸ்டில் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் வெற்றிகளுக்கு களமமைத்ததோ அவ்வாறே 2018ம் பெப்ரவரியில் இடம்பெற்றுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் வெற்றியானது 2020ல் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலிலும் ஜனாதிபதித் தேர்தலிலும் கட்சிகளின் வெற்றிப்பாதையை தீர்மானிக்க பெரும் வாய்ப்புண்டு என்றால் மிகையல்ல.


இந்தத் தேர்தலில் மக்கள் வெளிப்படுத்திய செய்தி யாது?

சிங்கள மக்களைப் பொறுத்தவரையில் பெரும் எண்ணிக்கையானவர்கள் தமது தலைவன் மஹிந்த ராஜபக்ஸவே என நம்புவது துலாம்பரமாகியுள்ளது. மைத்திரிபால சிறிசேனவை தமது தலைவனாக ஏற்றுக்கொள்ளவில்லை என்பது தெளிவாகியுள்ளது. 

இம்முறை தேர்தலில் தமது முக்கிய பிரசார விடயங்களாக மஹிந்த தரப்பு தற்போதைய அரசாங்கம் தமிழ் மக்களுக்கு புதிய அரசியல் யாப்பினூடாக அதிக அதிகாரங்களைக் கொடுத்து நாட்டைப் பிளவுபடுத்த முற்படுகின்றது என்பதும் எவ்வித அபிவிருத்தியும் செய்யாமல் நாட்டை பொருளாதார அதளபாதாளத்தில் தள்ளுகின்றது என்பதையுமே முன்வைத்திருந்தது. இவற்றை பெரும்பாலான சிங்கள மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளமையை தேர்தல் முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றது. இவற்றைவிடவும் முக்கியமானதாக போரிலே வெற்றிபெற்ற அரச படைத்தரப்பை பொறுப்புக்கூறல் பொறிமுறைகளூடாக இந்த அரசாங்கம் பழிவாங்க முற்படுகின்றது என்ற மஹிந்தவின் வாதத்திற்கு கிடைத்த வெற்றியாகவும் இதனை நோக்க முடியும். 

தேர்தலுக்கு  நல்லாட்சி அரசாங்கத்திடம் இருந்து ஊழல் மோசடிவிடயத்தில் காத்திரமான செயற்பாட்டை எதிர்பார்த்தவர்கள் ஏதுமே உருப்படியாக நடக்கவில்லை என்ற ஏமாற்றமும் அவர்களுக்கு எதிரான விரக்தி வாக்குகளாக விழுந்துள்ளதை உணர்ந்துகொள்ளமுடிகின்றது. அதனிலும் பிணைமுறி மோசடி விடயத்தில் அரசாங்கத்தின் மீது குறிப்பாக ஐக்கிய தேசியக்கட்சியின் மீது மக்கள் மிகவும் வெறுப்படைந்துள்ளதை தேர்தல் முடிவுகள் உணர்த்திநிற்கின்றது. ஊழலை ஒழிப்போம் என பதவிக்கு வந்தவர்களே ஊழலில் ஈடுபடுவதை மக்களால் சகித்துக்கொள்ளமுடியவில்லை.
வடக்கு கிழக்கைப் பொறுத்தவரை குறிப்பாக வடக்கைப் பொறுத்தவரையில் கடந்தபல தேர்தல்களில் மக்களின் அமோக ஆதரவைப் பெற்று வெற்றிவாகைசூடி ஏறத்தாழ ஏகப்பிரதிநிதிகளாக  பார்க்கப்பட்ட தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு அதன் அரசியல் பாதையை செப்பனிடவேண்டும் என்ற செய்தியை மக்கள் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்கள். கஜேந்திரக்குமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தமிழர்களின் அரசியல் வாழ்வியலில் ஆக்கபூர்வமான வகிபாகத்தை வகிக்க வேண்டும் என மக்களால்விரும்பிக் கொடுக்கப்பட்ட சந்தர்ப்பமாகவும் இதனை நோக்கமுடியும். சுரேஷ் பிரேமச்சந்திரனைப் பொறுத்தவரையில் தனது அரசியல் எதிர்காலத்தை  அவர் அணுஅணுவாக ஆராயவேண்டிய நிலைமையை தேர்தல் முடிவு பிரதிபலிக்கின்றது. நெருக்கடியான போர்க்காலத்தில் விடுதலைப்புலிகளை பலவீனப்படுத்தும் வகையில் செயற்பட்ட ஆனந்தசங்கரியை தமிழ் மக்கள் எப்போதோ நிராகரித்துவிட்ட நிலையில் அவரோடு கூட்டுவைத்துக்கொண்டமை சுரேஷ் பிரேமச்சந்திரனின் அரசியல்ஞானத்தையே கேள்விக்குட்டுத்துகின்றது. தமிழ் மக்களும் இதனை வாக்குகளால் வெளிப்படுத்தியிருக்கின்றனர்.



காத்திருக்கும் சவால்கள் 

உள்ளூராட்சிமன்ற தேர்தலில் அமோக வெற்றிபெற்றுவிட்டோம் என்பதற்காக நினைத்தபடி மஹிந்த தரப்பினரால் செயற்படமுடியாது. ஜெனிவா சவாலை எதிர்கொள்வதற்கு ரணில் விக்கிரமசிங்க தேவையாக உள்ளநிலையில் அவரை வெறுமனே ஒரங்கட்டிவிடமுடியாது யாதார்த்தநிலை உண்டு. தமிழ் மக்களே விட்டாலும் இலங்கையில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த ஜெனிவாவை மேற்குலக நாடுகள் துரும்பாகப் பயன்படுத்தும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளமையால் அரசியல் களத்தில் ரணிலின் பிரசன்னத்தை வைத்திருக்க வேண்டிய தேவைப்பாடு உள்ளது. 

எந்த அரசாங்கம் பதவிக்கு வந்தாலும் மல்லிகைப் பூ தெளித்த மலர்ச்சாலையாக அது இருந்தவிடமாட்டாது மாறாக முட்கள் நிறைந்த பாதையாகவே இருக்கும். குறிப்பாக கடன் சுமை என்பது இலங்கையால் தாங்கிக்கொள்ளமுடியாத நிலையை எட்டியிருக்கின்றது. அரச ஊழியர்களுக்கு மாதாந்தச்சம்பளம் கொடுப்பதற்கே உள்நாட்டு வெளிநாட்டு கடன்களைப் பெறவேண்டிய நிலை உள்ளது என்றால் நிலைமையின் பாரதூரம் விளங்கும். லாபம் தராத பாரிய கட்டுமானங்களில் முதலீடுகளைச் செய்ததன் பிரதிபலனாக அதற்காகப் பெற்ற கடன்களைத்திருப்பிச் செலுத்தும்வதில் கடும் சவால்கள் காணப்படுகின்றன. இலங்கையின் ஒட்டுமொத்த கடன்களின் உண்மையான விபரம் என்ன என்று தெரியவில்லை என கணக்காய்வாளர் நாயகம் கடந்தவாரத்தில் கூறியிருந்தார். இதுவரை மதிப்பிடப்பட்ட தொகைக்கு அமைய 10 ரில்லியன்களாக கடன்களின் தொகை அமைந்துள்ளது. அதாவது பத்து லட்சம் கோடிகள் என்பதாக அந்த தொகை அமைந்திருகின்றது. அரச வருமானத்தில் 90 சதவீதத்திற்கும் அதிகமான தொகை கடன்களை வட்டியுடன் மீளச் செலுத்துவதற்கே செலவிட வேண்டிய நிலைமை காணப்படுகின்றதால் யார் அதிகாரத்திற்கு வந்தாலும் சிக்கலை எதிர்கொள்ள நேரிடும். 

ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வதற்கு மட்டுமன்றி உலக வங்கி, சர்வதேச நாணயநிதியம் ஆகியவற்றிடம் இருந்து பெற்ற கடன்களுக்காகவும் பொருளாதார, நிதிநிலை, நிர்வாக, அரசியல்யாப்பு மறுசீரமைப்புக்களை முன்னெடுக்கவேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது. இவற்றை யாராலும் தூக்கி கிடப்பில் போட்டுவிட்டு புதிதாக அனைத்தையும் ஆரம்பிப்போம் என்று கூறமுடியாது.  



ஏகலைவன்