Thursday, December 19, 2019

தேர்தல் காலகட்டத்தை தாண்டி அன்றாட வாழ்வியலில் மக்களைப் குழப்பும் போலிச் செய்திகள்


2020ம்ஆண்டில் இலங்கையில் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல்கள் ஏப்ரல் இறுதி வாரத்திலேயோ அன்றேல் மே மாத ஆரம்பத்திலேயோ நடைபெறும் வாய்ப்புக்கள் உள்ளன. கடந்த ஜனாதிபதித தேர்தலையொட்டிய பிரசாரங்களை அலசி ஆராய்கின்றபோது பெருமளவானவை சமூக ஊடகப் பரப்பிலேயே கட்டவிழ்த்துவிடப்பட்டிருந்தன.

2010ம் ஆண்டு தேர்தலுக்கு பின்னரே இலங்கையிலுள்ள அரசியல்வாதிகள் சமூக ஊடகங்களைப் பாவிக்கத் தொடங்கினர். அப்போது ஜனாதிபதியாகவிருந்த  மஹிந்த ராஜபக்ஸ வெகுஜனத் தொடர்புகளுக்கான ஓர் பொறிமுறையாக பேஸ்புக் தளத்தை முதலில் பாவிக்கத்தொடங்கினார்.

 உண்மையைக் கூறுவதாயின் 2015ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போதே இலங்கையில் தேர்தலொன்றில் சமூக ஊடகங்கள் வெளிப்படையான பாத்திரமொன்றை வகித்திருந்தன. அந்த தேர்தல் காலகட்டத்தில் முன்னாள் ஜனாதிபதியை சமூக ஊடகங்களில் கணிசமானவர்கள் பின்தொடர்ந்திருந்த போதிலும் கூட அவரது எதிர்த்தரப்பினரோ இலகுவாக அணுகக்கூடிய இணையத்தின் திறந்ததன்மையை பயன்படுத்தி அப்போது அரச ஊடகங்கள் மீதும் சில தனியார் ஊடகங்கள் மீதும் அவர் கொண்டிருந்த இரும்புப் பிடியை முறியடிப்பதற்கு சமூக ஊடகங்களை பயன்படுத்திக்கொண்டனர்.



கடந்த ஜனாதிபதி தேர்தல் தொடக்கம் தற்போதுள்ள காலப்பகுதியில் தேசிய தேர்தல்களில் சமூக ஊடகம் என்பது பிரதான ஒரு விடயமாக பரிணமித்துநிற்கின்றது. பேஸ்பும் மற்றும் டுவிட்டர் தளங்கள் இல்லாமல் இருந்திருந்தால் 2018ம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் இடம்பெற்ற அரசியல்சாசன நெருக்கடி மிகவும் வித்தியாசமாக கையாளப்பட்டிருக்கும். புpரதமரைப் பதவி நீக்கம் செய்தமைக்கு எதிரானவர்கள் தமக்கானதொரு பொதுமேடையை ஏற்படுத்திக்கொள்வதற்கு சமூக ஊடகங்களே களமமைத்துக்கொடுத்ததை மறந்துவிடமுடியாது என்ற கருத்தை அண்மையில் பிரபல ஊடகவியலாளர் அமந்த பெரேரா தனது கட்டுரையொன்றில் பதிவுசெய்திருந்தார்.


சமூக ஊடகங்களின் வரவு அரசாங்கங்கள் செய்தி மீது கொண்டிருந்த ஒருவிதமான ஏகபோகத்தன்மையை அன்றேல் இரும்புப்பிடியை கணிசமானளவில் தளர்த்துவதற்கு வழிகோலியது.

கடந்தாண்டு அரசியலமைப்பு நெருக்கடியைத் தொடர்ந்து மீண்டும் ரணில் விக்கிரமசிங்க பிரதமரானபோது அவரது பதவியேற்பு தொடர்பான செய்தி இந்த நாட்டிலுள்ள 21மில்லியன் மக்களுக்கு ஒரு டுவீட் செய்தி மூலமாகவே அறிவிக்கப்பட்டிருந்தது. பதவியேற்பு நிகழ்வை படம்பிடிப்பதற்கு ஊடகங்கங்களுக்கு ஜனாதிபதி தடைவிதித்த ஒரு நிலைமையை எதிர்கொண்ட ஒரே நாடாக இலங்கையே இருந்திருக்க வாய்ப்புண்டு. அங்கு பிரசன்னமாகியிருந்த அமைச்சர்களும் ஏனையதரப்பினரும் தமது திறன்கைபேசிகளை பயன்படுத்தி வெளியிலுள்ள மக்களுக்கு என்ன நடைபெறுகின்றது என்பதை தெரியப்படுத்தியிருந்தனர்.

திறன்கைபேசிகளோ அன்றேல் டுவிட்டரோ அன்றேல் இவ்விரண்டுமோ இல்லாமல் இருந்திருந்தால் நிலைமை எப்படியிருந்திருக்கும் எனக் கற்பனை செய்துபாருங்கள்.
அரசியல்சாசன நெருக்கடிக்கு முன்னரும் பின்னரும் அரசாங்கம் சமூக ஊடகங்களைத் முடக்கியதனை நாம் கண்ணுற்றுள்ளோம். திகண கலவரத்தையடுத்து 2018 மார்ச் மாதத்தில் முதலிலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களையடுத்தும் சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டிருந்தன.
சமூக ஊடகங்களை இலங்கையர்கள் மீது எங்ஙனம் தாக்கம் செலுத்துகின்றது என்பது தொடர்பான உத்தியோகபூர்வமான ஆய்வுகள் இல்லையென்ற போதிலும் இலங்கையிலுள்ள 21 மில்லியன் சனத்தொகையில் 7மில்லியன் மக்கள் அதாவது 30 வீதமானவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகின்றனர்.என்பது நிருபணமாகியுள்ளது.

ஒரு மில்லியனுக்கும் அதிகமான பேஸ்புக் ரசிகர்களைக் கொண்ட இசைக்கலைஞர் ஈராஜ் வீரரத்ன தனது பதிவுகளுடாக கோத்தபாயவிற்கு ஆதரவைச் சேர்க்கும் நடவடிக்கைகளை ஜனாதிபதித் தேர்தலின் போது முன்னெடுத்திருந்தார்.இதேபோன்று இன்ஸ்டகிராம் தளத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானர்களை ரசிகர்களாக கொண்டுள்ள இலங்கை மொடல் ஒருவர் கோத்தபாய ராஜபக்ஸ ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட போது அதற்கு ஆதரவாக பதிவிட்டிருந்தார். இன்னுமொரு பிரபல யூடிப் பயனாளர் போலி தேர்தல் பெறுபேறு உட்பட பல்வேறு தில்லுமுல்லுகள் நிறைந்த வீடியோவை வெளியிட்டபோது அதற்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான லைக்குகள் கிடைத்தன. அப்படியான ஆதரவுப்பதிவுகள் சமூக வலைத்தளங்களில் இனிவரும் காலத்திலும் அடிக்கடி வர வாய்ப்புக்கள் உள்ளன.

பொது தளம் என்பது தற்போது இவ்வாறான திருகுதாளங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளமை கவலைக்கிடமானது. வரவர இத்தகையவர்களின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக அவதானத்தில் வைத்திருப்பதும் அவர்கள் ஒழுங்குவிதிகளைப் பின்பற்றி நடக்கின்றனரா என பார்ப்பதும் கடினமாகிக்கொண்டுவருகின்றது.  எந்தவொரு தொலைக்காட்சி அலைவரிசைகளும் போலியான தேர்தல் பெறுபேறுகளை ஒளிபரப்பமாட்டாது. ஏனெனில் தெளிவான சட்டங்களும் ஒழுங்குகளும் அவர்களுக்கென முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால் யார் யூடிப் வீடியோ தொடர்பில் பொறுப்புக்கூறுவது? யூடிப் தளமானது அதில் உள்வாங்கப்படும் வீடியோக்களிலுள்ள விடயதானம் தொடர்பாக எவ்விதமான பொறுப்புக்களையும் எடுத்துக்கொள்ளாத ஒருதளமாகவே நோக்கப்படுகின்றது. இவ்வாறான விடயதானம் என்பது பிரச்சனைக்குரியதாக இருந்தாலும் கூட அதுதொடர்பாக மக்களின் அதிகரித்த முறைப்பாடுகளின் மத்தியிலேயே நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் அதற்குள்ளாக ஒரு மில்லியன் பேர் அதனைப் பார்வையிட்டுவிட்டனர் என்பது கரிசனையை ஏற்படுத்துகின்றது.

அண்மையில் கிழக்குமாகாணத்தின் பாணமயில் அமைந்துள்ள முகுது மாகா விகாரை என்ற பௌத்த ஸ்தானத்தில் புத்தர் சிலைகள் உடைக்கப்பட்டுள்ளதாக ஈராஜ் உட்பட சிலர் பெரும் பிரசாரத்தை சமூக ஊடகங்கள் மற்றும் பாரம்பரிய ஊடகங்கள் மூலம் முன்னெடுத்து சிங்கள பௌத்த மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்த முற்பட்டனர். ஆனால் பதும் கேனர் என்ற சுயாதீன ஊடகவியலாளர் அங்கு சென்று நேரில் இடத்தைப் பார்வையிட்டு அங்குள்ள பௌத்த தேரரை நேர்காணல் செய்து உண்மையை வெளிப்படுத்தியிருந்தார். அந்த சிலைகள் நிற்கும் நிலையில் வைக்கப்படுவதற்காக தற்போது தரையில் கிடப்பில் வைக்கப்பட்டுள்ளதே தவிர அவை உடைக்கப்படவில்லை என்பதே அவர் வெளிப்படுத்திய உண்மை. தேர்தல்காலத்தில் இவ்வாறான போலிச் செய்தியின் உண்மையான பக்கம் வெளிப்படுத்தப்படாவிடின் மக்களை அச்சங்களில் குளிர்காய நினைப்பவர்களுக்கு அது அனுகூலமாக அமைந்துவிடும்.

சமூக ஊடகங்களைக் கண்காணித்து பிரச்சனைக்குரிய பதிவுகள் தொடர்பாக முறைப்பாடு செய்யவுள்ளதாக இலங்கையின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் உறுதியளித்தபோதும் அவர்களால் எதனையும் பெரிதாகச் செய்யமுடியவில்லை. போலிச் செய்திகள் மற்றும் காழ்ப்புணர்வுமிக்க மோசமான பதிவுகளை கண்காணித்தல் மற்றும் அவற்றை நீக்குதல் தொடர்பாக இலங்கையின் தேர்தல்கள் ஆணைக்குழு பேஸ்புக் நிறுவனத்தினருடன் கலந்துரையாடல்களை நடத்தியபோதும் ஜனாதிபதித் தேர்தலில் பேஸ்புக் மூலமான போலிச் செய்திகளையோ வெறுப்புப் பதிவுகளையோ நீக்க முடியவில்லை. நடைமுறையில் இதனைச் செய்வது எந்தவகையிலும் இலகுவானதாக இருக்கப்போவதில்லை.  விரைவாக இவற்றை இனங்கண்டுபிடிப்பதற்கு உரிய வளங்கள் உள்ளதா என்பது முக்கியவிடயமாகும். பேஸ்புக் மற்றும் டுவிட்டர் தளங்களைப் பார்க்கும் போது ஏற்கனவே அவை ஊடகவியலாளர்கள் அரசியல் வாதிகள் மற்றும் செயற்பாட்டாளர்களுக்கு எதிரான சொற்தாக்குதல்களால் நிறைந்துகிடக்கின்றன. இந்தப்பதிவுகளுக்கு எதிராக எந்தவிதமான வினைத்திறன்மிக்க தடுப்புச் செயற்பாடுகளையும் காணமுடியவில்லை.

கடந்தகாலத்தைப் போன்று அவற்றை இனங்காண்பதும் ஆவணப்படுத்துவதும் மட்டும் போதுமானதல்ல. தற்போது அதனையும் தாண்டிய நகர்வுகளை முன்னெடுப்பதே அவசியமானதாகும்.




அருண் ஆரோக்கியநாதன்

Sunday, December 15, 2019

இலங்கையை ஆக்கிரமிக்கும் சுவரோவியங்கள்!

இலங்கையில் கடந்த நவம்பர் மாதம் 16ம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலையடுத்து ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தையடுத்து நாட்டிற்கு புதிய வடிவம் கொடுக்கின்ற செயற்திட்டங்கள் பலவும் முன்னெடுக்கப்படுகின்றன. அந்தவகையில் நாட்டின் பல பகுதிகளிலும் சுவரோவியங்களை வரையும் நடவடிக்கைகள் அரச ஊக்குவிப்புடன் தனியார் நலன் விரும்பிகள் மற்றும் தொண்டர்களால் முன்னெடுக்கப்படுகின்றன.

ஆங்கிலத்தில் Murals எனப்படும் சுவரோவியங்களை வரைவது ஓவியக் கலையை பொதுத் தளத்திற்கு எடுத்துச் செல்கின்ற முக்கிய செயற்பாடாகக்  காணப்படுகின்றது. இந்த சுவரோவியங்களின் வகைகளும் அதற்கு பயன்படுத்தப்படும் நுட்பங்களும் ஓவியருக்கு ஓவியர் வித்தியாசப்படும்.

இந்த சுவரோவியங்களுக்கு நீண்ட வரலாறு இருக்கின்றது. நாம் அறிந்த வகையில் இந்தோனேசிய குகையொன்றில் இரத்தத்தால் வரையப்பட்ட ஓவியமானது 44 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என சில தினங்களுக்கு முன்பாக கண்டறியப்பட்டுள்ளது. இதுவே இதுவரையில் கண்டறியப்பட்ட மிகவும் பழமையான சுவரோவியமாக பார்க்கப்படுகின்றது.

சுவர்களில் வரைப்படும் இவ் ஓவியங்களை சுவரோவியங்கள் என நாம் குறிப்பட்டாலும் இவை அதனையும் தாண்டிய ஆழமான செய்திகளைத்தாங்கியவையாகும். வரலாற்று விடயங்களைப் பதிவுசெய்தல் ,அரசியல் செய்திகளைத் தருதல், கேலிச் சித்திர உருவங்கள் மர்மங்கள் எனப் பலவற்றை நம் கண்முன்னே நிறுத்தவதற்காக பயன்படுத்தப்படுகின்றன. 

இவை பொலிவிழந்து காணப்படும் இடங்களை அழகுபடுத்துவதுடன் புது உற்சாகத்தை மக்கள் மத்தியிலே  ஏற்படுத்துவதற்கும் வழிகோலும் சாத்தியமுள்ளன.சிறியதொரு பகுதியை பெரிதாக பெருப்பித்துக்காண்பிப்பதற்கும் சில ஓவியர்கள் சுவரோவியங்களைப் பயன்படுத்துவதுண்டு. அத்தோடு சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுப்பதற்கும் ஊக்கியாக இவை அமையலாம். 

போகின்ற போக்கைப் பார்த்தால் அரச கட்டிடங்களை மட்டுமன்றி தனியாருக்கு சொந்தமான சுவர்களையும் இந்த சுவரோவியக் கலைஞர்களை  ஆக்கிரமித்துவிடுவார்கள் போலுள்ளதென சமூக வலைத்தளங்களில் பதிவுகளைக் காணமுடிகின்றது. தூய்மையாக வெள்ளையடிக்கப்பட்ட வர்ணம்பூசப்பட்ட சுவர்களிலும் அழகுள்ளது. அவை அந்தப் பிரதேசத்திற்கு ஒரு மேன்மைமிக்க உணர்வைதருகின்றதென்பதை இத்தகையவர்களுக்கு உணர்த்த வேண்டும் எனவும் சமூக வலைத்தளங்களிலே பதிவுகள் இடப்பட்டிருந்தன. 

அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதைப் போன்று எவ்வித வழிகாட்டல்களும் இன்றி தான்தோன்றித்தனமான முறையில் வரையப்படும் சுவரோவியங்கள் மக்கள் மத்தியில் குறிப்பாக இளைய தலைமுறையினர் மத்தியில் இனவாதத்தையும் வன்முறையையும் விதைக்கும் அபாயம் உள்ளதாக மனநல மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.




பத்துவருடங்களுக்கு முன்னர் முடிவுறுத்தப்பட்ட ஆயுதப்போரை மீண்டும் நினைவுபடுத்துவதாக இராணுவ வீரர்களின் வெற்றி பிரவாகத் தோற்றங்கள், இங்கிலாந்தில் குற்றமாக அறிவிக்கப்பட்ட பிரிகேடியர் பிரியங்கர பெர்ணான்டோவின் கழுத்துவெட்டு சமிக்ஞைத் தோற்றம், முஸ்லிம்கள் மரங்களை வெட்டி காடளிப்பில் ஈடுபடும் குற்றத்தைப் புரிவது போன்றதான தோற்றம் என இனவாதத்தையும் துவேசத்தையும் விதைக்கும் சுவரோவியங்கள் நாட்டில் இனங்களுக்கிடையிலான உறவில் விரிசலை உண்டுபண்ணுவதற்கு வழிகோலக்கூடும்.

நாட்டில் இனவாதமும் சிறுபான்மையினருக்கு எதிரான துவேசமும் எந்தளவிற்கு வேரூன்றியிருக்கின்றன என்பதற்கான சான்றுகளில் ஒன்றாகவே இப்படியான சுவரோவியங்களையும் பார்க்கவேண்டியிருக்கின்றது.  

 இலங்கையில் மூன்று தசாப்தகாலமாக நடைபெற்ற ஆயுதப் போர் மிலேச்சத்தனமாக முடிவிற்கு கொண்டுவரப்பட்டு பத்தாண்டுகள் ஆனபோதும் அதனால் சமூகங்களிடையே ஏற்படுத்தப்பட்ட காயங்களும் காழ்ப்புணர்வுகளும் உரிய உளவளச் சிகிச்சை மூலமோ இழப்பீடுகள் போன்ற ஏனைய ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மூலமோ ஆற்றுப்படுத்தப்படவில்லை. போரைத் தாண்டி லஞ்ச ஊழல் மோசடிக் குற்றங்கள் பாலியல் வல்லுறவு கொலை கொள்ளைக் குற்றங்களால் நிறைந்துள்ள இலங்கையில்  சுவரோவியங்களில் மட்டும் நல்லவற்றை எதிர்பார்ப்பது எமது மடமையே என நினைத்துகொள்ளலாம். 

கௌவரத்துடன் பல்லினங்கள் வாழுகின்ற அமைதியும் சுபீட்சமும் நின்றுநிலைக்கின்ற நாடாக இந்த நாடு மாற்றம் பெறவேண்டும் என்று ஆட்சியாளர்கள் விரும்பினால் இந்த சுவரோவியங்களில் கூட சரியான நெறிப்படுத்தல்களை வழங்கி ,சுவரோவியங்களை நகரங்களில் ஒரு சில பகுதிகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தி மக்களுக்கு மத்தியில் நற்சிந்தனைகளை விதைக்கும் வகையில் மாற்றத்தை உண்டுபண்ணமுடியும்.

Monday, November 4, 2019

தேர்தல் காலத்தில் அதிகரிக்கும் போலிச் செய்திகளை அடையாளம் காண்பது எப்படி?




' அர அபி' என்று ஐக்கிய தேசியக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கூறியதை அராபி என்றும் கோட்டாபயவை 'பரதன்ன' ஓன என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து ஐக்கிய தேசிய முன்னணி பக்கம்மாறிய சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் கூறிய கருத்தை கோட்டாபயவை 'மரன்ன' ஓன என்றும் இலங்கையிலுள்ள முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்ட செய்திகள் தேர்தல் காலத்தில் ஆக்கிரமித்துள்ள போலிச் செய்திகளை வெளிச்சம் போட்டுக்காண்பித்துள்ளன. 
 
இந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்ட கூட்டங்களில் பேசிய வார்த்தைகளை தொழில்நுட்பத்தின் உதவியுடன் சமார்த்தியமாக உண்மையாகவே அவர்கள் பேசுவது போன்று அதனைத்தயாரித்தவர்கள் வடிவமைத்துள்ளனர். 
 
காணொளிகளை திரிவுபடுத்துவது இலங்கையில் மிகக்குறைவாக நடந்துள்ள போதும் புகைப்படங்கள்  ஆவணங்களில் திரிவுபடுத்தல்களை மேற்கொண்டு போலித் தகவல்களை பரப்பும் நடவடிக்கை கடந்த காலமுதல்  இடம்பெற்றுவருகின்றது . தேர்தல் காலம் என்றபடியால் போலியான தகவல்களை கொண்ட புகைப்படங்கள் அதிகமாக இந்த நாட்களில் வெளியாகி மக்கள் மத்தியில் குழப்பமான மனநிலையைத் தோற்றுவிக்கும் முயற்சிகள் இடம்பெறுகின்றன.
 
அநுராதபுரத்தில் இடம்பெற்ற பொதுஜன பெரமுண கட்சியின்  ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் முதலாவது பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற மக்களின் புகைப்படமென ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது. 
 
FakeNews 1
 
உண்மையில் ஆராய்ந்து பார்த்தபோது அது கடந்தவருடம் பிரான்ஸில் இடம்பெற்ற கால்பந்து உலகக்கிண்ண இறுதிப்போட்டியின் போது எடுக்கப்பட்ட படத்தைத் தான் அநுராதபுரப் பொதுக்கூட்டம் எனப்பகிர்ந்துகொண்டுள்ளனர். 
 
அதுபோன்றே ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் காலி முகத்திடல் பொதுக்கூட்டத்திற்கு வருகைதந்த ஆதரவாளர்கள் தமக்கிடையே மோதிக்கொண்டதாக புகைப்படமொன்று வெளியாகியிருந்தது. 
 
FakeNews 2
உண்மையில் ஆராய்துபார்த்ததில் அது 2013ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அப்போதைய பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க பதவியில் இருந்து நீக்கப்பட்டபோது ஐக்கிய தேசியக்கட்சி ஆதரவாளர்களும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு ஆதரவாளர்களும் மோதிக்கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்பது தெரியவந்தது. 
 
இதனைத் தவிர ஐக்கிய தேசிய முன்னணியின் காலிமுகத்திடல் பொதுக்கூட்ட்த்தில் சஜித் பிரேமதாஸவிற்கு பின்னால் நின்றுகொண்டிருந்தவர் வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் என்று சமூக வலைத்தளங்களில் பரப்பட்டது. 
FakeNews 4FakeNews 4
 
இப்படியாக பலதரப்பினையும் பாதிக்கும் வகையில் போலிச் செய்திகள் தற்போது அதிகளவில் பரப்பப்படுகின்றன. 
 
போலித்தகவல்களை நாம் ஆராய்ந்தால் அதன் உண்மையைக் கண்டறியமுடியும் . கடந்த காலத்திலும் இவ்வாறு போலிச் செய்திகள் பரப்பப்பட்டுள்ளன. ஆனால் இணைய யுகத்தில் சமூக வலைத்தளங்களின் வருகையின் பின்னர் போலிச் செய்திகளைப் பரப்பும் வேகம் அதிகரித்துவிட்டமை அதாவது போலிச் செய்திகள் வைரலாக துரித கதியில் பரப்பப்படும் சாத்தியம் உள்ளதால் அதனால் ஏற்படும் தாக்கம் அபாயகரமானதாகக் காணப்படுகின்றது. 
 
போலித்தகவல் என்பது இரண்டு வகைப்படும்  . தவறான செய்தி என்று தெரியாமலேயே அதனைப்பரப்புகின்றமை மற்றையது தவறான செய்தி என்று தெரிந்தும் அதனைப் பரப்புவது. 
FakeNews5
 
இதில் எது அபாயமானது என்று கேட்டால் இரண்டுமே அபாயகரமானது அவை வைரலாக மாறுமிடத்து என்பதே பதிலாக இருக்கும். 
 
2016ம் ஆண்டில் அமெரிக்காவில் இடம்பெற்ற தேர்தலின் போது பரப்பப்பட்ட போலிச் செய்திகளால் அமெரிக்க ஜனாதிபதியாக யாருமே எதிர்பாராத டொனால்ட் ட்ரம்ப் வந்த கதையைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்தநிலையில் இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னமும் மூன்றுவாரங்களுக்கும் குறைவான காலமே உள்ள நிலையில் இங்கு சமூக ஊடகங்களிலும் பிரதான தொலைக்காட்சி மற்றும் ப்த்திரிகைகளிலும் பரப்பப்படும் போலிச் செய்திகளால் இறுதி வெற்றியில் தாக்கம் செலுத்தக்கூடிய நிலை காணப்படுகின்றது. 
 
 
FakeNews7FakeNews7
 
அப்படியானால் எவ்வாறு துரிதமாக தகவலை போலித்தகலென்றோ அன்றேல் ஒரு செய்தியை போலிச் செய்தியென்றோ அடையாளம் காண்பது என நீங்கள் அறிந்துவைத்திருப்பது மிகவும் அவசியமாகும்.  https://www.newsline.lk/news/7634-fake-news
 
அருண் ஆரோக்கியநாதர் 
தொடரும்...


Sunday, October 27, 2019

நெல்சன் மண்டாவின் மண்ணில் ...



ஊடகவியலாளாராக சர்வதேச நாடுகளுக்கு அந்நாடுகளைக் கண்டறிந்துகொள்வதற்காக ஏற்பாடுசெய்யப்படும் சுற்றுப்பயணங்களில் கலந்துகொள்வதானாலும் அன்றேல் ஏதேனும் சர்வதேச மாநாட்டில் பங்கேற்க வாய்ப்பு அமைந்தாலும் அவை சம்பந்தப்பட்ட செய்திகளை ஊடகநிறுவனங்களுக்கு அனுப்பிவிட்டு  விபரமாக பின்னர் எழுதுவோம் என்று எண்ணும் ஊடகவியலாளர்கள் பலர் என்னைப் போன்று இருக்கக்கூடும். ஆனால் அடுத்தடுத்து பணிகள் குடும்பவிடயங்கள் போன்றவற்றால் ஏற்படும் வேலைப்பளுவால் அப்படி விபரமாக எழுத முழுயாத சந்தர்ப்பங்களும் அமைந்துவிடுவதுண்டு. அந்தவகையில் தெனனாபிரிக்காவிற்கு 2017ம் ஆண்டு சர்வதேச புலனாய்வு ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொள்ளவதற்கு  அரிய வாய்ப்புக்கிடைத்திருந்தது. அதன்போது கண்டுரசித்து வியந்த பார்த்த விடயங்களை எழுதுகின்றேன்.




Tuesday, October 1, 2019

போலிச் செய்திகள் ,வெறுப்பு பேச்சு தேர்தலில் எந்தளவில் தாக்கம் செலுத்தப்போகின்றன?




அருண் ஆரோக்கியநாதர். 



ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்று முதல் இன்னமும் 48 நாட்களே உள்ளன. ஏற்கனவே பிரசார நடவடிக்கைகள் ஆரம்பமாகிவிட்டன. இதில் பெருமளவானவை சமூக ஊடகப் பரப்பில் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன. 2010ம் ஆண்டு தேர்தலுக்கு பின்னரே இலங்கையிலுள்ள அரசியல்வாதிகள் சமூக ஊடகங்களைப் பாவிக்கத் தொடங்கினர். அப்போது ஜனாதிபதியாகவிருந்த  மஹிந்த ராஜபக்ஸ வெகுஜனத் தொடர்புகளுக்கான ஒரு பொறிமுறையாக பேஸ்புக் தளத்தை முதலில் பாவிக்கத்தொடங்கினார். உண்மையைக் கூறுவதாயின் 2015ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போதே இலங்கையில் தேர்தலொன்றில் சமூக ஊடகங்கள் வெளிப்படையான பாத்திரமொன்றை வகித்திருந்தன. அந்த தேர்தல் காலகட்டத்தில் முன்னாள் ஜனாதிபதியை சமூக ஊடகங்களில் கணிசமானவர்கள் பின்தொடர்ந்திருந்த போதிலும் கூட அவரது எதிர்த்தரப்பினரோ இலகுவாக அணுகக்கூடிய இணையத்தின் திறந்ததன்மையை பயன்படுத்தி அன்று அரச ஊடகங்கள் மீதும் சில தனியார் ஊடகங்கள் மீதும் அவர் கொண்டிருந்த இரும்புப் பிடியை முறியடிப்பதற்கு சமூக ஊடகங்களை பயன்படுத்திக்கொண்டனர்.

கடந்த ஜனாதிபதி தேர்தல் தொடக்கம் தற்போதுள்ள காலப்பகுதியில் தேசிய தேர்தல்களில் சமூக ஊடகம் என்பது பிரதான ஒரு விடயமாக பரிணமித்துநிற்கின்றது. பேஸ்பும் மற்றும் டுவிட்டர் தளங்கள் இல்லாமல் இருந்திருந்தால் 2018ம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் இடம்பெற்ற அரசியல்சாசன நெருக்கடி மிகவும் வித்தியாசமாக கையாளப்பட்டிருக்கும். பிரதமரைப் பதவி நீக்கம் செய்தமைக்கு எதிரானவர்கள் தமக்கானதொரு பொதுமேடையை ஏற்படுத்திக்கொள்வதற்கு சமூக ஊடகங்களே களமமைத்துக்கொடுத்ததை மறந்துவிடமுடியாது. சமூக ஊடகங்களின் வரவு ,அரசாங்கங்கள் செய்தி மீது கொண்டிருந்த ஒருவிதமான ஏகபோகத்தன்மையை அன்றேல் இரும்புப்பிடியை கணிசமானளவில் தளர்த்துவதற்கு வழிகோலியது.

கடந்தாண்டு அரசியலமைப்பு நெருக்கடியைத் தொடர்ந்து மீண்டும் ரணில் விக்கிரமசிங்க பிரதமரானபோது அவரது பதவியேற்பு தொடர்பான செய்தி இந்த நாட்டிலுள்ள 21மில்லியன் மக்களுக்கு ஒரு டுவீட் செய்தி மூலமாகவே அறிவிக்கப்பட்டிருந்தது. பதவியேற்பு நிகழ்வை படம்பிடிப்பதற்கு ஊடகங்கங்களுக்கு ஜனாதிபதி தடைவிதித்த ஒரு நிலைமையை எதிர்கொண்ட ஒரே நாடாக இலங்கையே இருந்திருக்க வாய்ப்புண்டு. அங்கு பிரசன்னமாகியிருந்த அமைச்சர்களும் ஏனையதரப்பினரும் தமது திறன்கைபேசிகளை பயன்படுத்தி வெளியிலுள்ள மக்களுக்கு என்ன நடைபெறுகின்றது என்பதை தெரியப்படுத்தியிருந்தனர். திறன்கைபேசிகளோ அன்றேல் டுவிட்டரோ இல்லாமல் இருந்திருந்தால் நிலைமை எப்படியிருந்திருக்கும் எனக் கற்பனை செய்துபாருங்கள். 

அரசியல்சாசன நெருக்கடிக்கு முன்னரும் பின்னரும் அரசாங்கம் சமூக ஊடகங்களைத் முடக்கியதனை நாம் கண்ணுற்றுள்ளோம். திகண கலவரத்தையடுத்து 2018 மார்ச் மாதத்தில் முதலிலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களையடுத்தும் சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டிருந்தன. 
சமூக ஊடகங்களை இலங்கையர்கள் மீது எங்ஙனம் தாக்கம் செலுத்துகின்றது என்பது தொடர்பான உத்தியோகபூர்வமான ஆய்வுகள் இல்லையென்ற போதிலும் இலங்கையிலுள்ள 21 மில்லியன் சனத்தொகையில் 6மில்லியன் மக்கள் அதாவது 30 வீதமானவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகின்றனர்.என்பது நிருபணமாகியுள்ளது.  ஒரு மில்லியனுக்கும் அதிகமான பேஸ்புக் ரசிகர்களைக் கொண்ட இசைக்கலைஞர் ஈராஜ் வீரரத்ன தனது பதிவுகளுடாக கோத்தபாயவிற்கு ஆதரவைச் சேர்க்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார். அண்மையில் ஐதேக உட்பட அதனைச் சார்ந்தவர்களை அசிங்கப்படுத்தி பாடலொன்றை வெளியிட்டிருந்தார். இதேபோன்று இன்ஸ்டகிராம் தளத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானர்களை ரசிகர்களாக கொண்டுள்ள இலங்கை மொடல் ஒருவர் கோத்தபாய ராஜபக்ஸ ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட போது அதற்கு ஆதரவாக பதிவிட்டிருந்தார். அப்படியான ஆதரவுப்பதிவுகள் இனி அடிக்கடி வர வாய்ப்புக்கள் உள்ளன. இன்னுமொரு பிரபல யூடிப் பயனாளர் போலி தேர்தல் பெறுபேறு உட்பட பல்வேறு தில்லுமுல்லுகள் நிறைந்த வீடியோவை சமீபத்தில் வெளியிட்டபோது அதற்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான லைக்குகள் கிடைத்தன. 

பொது தளம் என்பது தற்போது இவ்வாறான திருகுதாளங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளமை கவலைக்கிடமானது. வரவர இத்தகையவர்களின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக அவதானத்தில் வைத்திருப்பதும் அவர்கள் ஒழுங்குவிதிகளைப் பின்பற்றி நடக்கின்றனரா என பார்ப்பதும் கடினமாகிக்கொண்டுவருகின்றது.  எந்தவொரு தொலைக்காட்சி அலைவரிசைகளும் போலியான தேர்தல் பெறுபேறுகளை ஒளிபரப்பமாட்டாது. ஏனெனில் தெளிவான சட்டங்களும் ஒழுங்குகளும் அவர்களுக்கென முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால் யார் யூடிப் வீடியோ தொடர்பில் பொறுப்புக்கூறுவது? யூடிப் தளமானது அதில் உள்வாங்கப்படும் வீடியோக்களிலுள்ள விடயதானம் தொடர்பாக எவ்விதமான பொறுப்புக்களையும் எடுத்துக்கொள்ளாத ஒருதளமாகவே நோக்கப்படுகின்றது. இவ்வாறான விடயதானம் என்பது பிரச்சனைக்குரியதாக இருந்தாலும் கூட அதுதொடர்பாக மக்களின் அதிகரித்த முறைப்பாடுகளின் மத்தியிலேயே நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் அதற்குள்ளாக ஒரு மில்லியன் பேர் அதனைப் பார்வையிட்டுவிட்டனர் என்பது கரிசனையை ஏற்படுத்துகின்றது. அண்மையில் கிழக்குமாகாணத்தின் பாணமயில் அமைந்துள்ள முகுது மாகா விகாரை என்ற பௌத்த ஸ்தானத்தில் புத்தர் சிலைகள் உடைக்கப்பட்டுள்ளதாக ஈராஜ் உட்பட சிலர் பெரும் பிரசாரத்தை சமூக ஊடகங்கள் மற்றும் பாரம்பரிய ஊடகங்கள் மூலம் முன்னெடுத்து சிங்கள பௌத்த மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்த முற்பட்டனர். ஆனால் பதும் கேனர் என்ற சுயாதீன ஊடகவியலாளர் அங்கு சென்று நேரில் இடத்தைப் பார்வையிட்டு அங்குள்ள பௌத்த தேரரை நேர்காணல் செய்து உண்மையை வெளிப்படு;த்தியிருந்தார். அந்த சிலைகள் நிற்கும் நிலையில் வைக்கப்படுவதற்காக தற்போது தரையில் கிடப்பில் வைக்கப்பட்டுள்ளதே தவிர அவை உடைக்கப்படவில்லை என்பதே அவர் வெளிப்படுத்திய உண்மை. தேர்தல்காலத்தில் இவ்வாறான போலிச் செய்தியின் உண்மையான பக்கம் வெளிப்படுத்தப்படாவிடின் மக்களை அச்சங்களில் குளிர்காய நினைப்பவர்களுக்கு அது அனுகூலமாக அமைந்துவிடும். 

சமூக ஊடகங்களைக் கண்காணித்து பிரச்சனைக்குரிய பதிவுகள் தொடர்பாக முறைப்பாடு செய்யவுள்ளதாக இலங்கையின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் கூறுகின்றனர். போலிச் செய்திகள் மற்றும் காழ்ப்புணர்வுமிக்க மோசமான பதிவுகளை கண்காணித்தல் மற்றும் அவற்றை நீக்குதல் தொடர்பாக இலங்கையின் தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்கனவே பேஸ்புக் நிறுவனத்தினருடன் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளனர். ஆனாலும் நடைமுறையில் இதனைச் செய்வது எந்தவகையிலும் இலகுவானதாக இருக்கப்போவதில்லை.  தேர்தல் காலப்பகுதியில் போலிச் செய்திகளையும் வெறுப்புணர்வுப் பேச்சுக்களையும் கண்காணிக்கவுள்ளதாக தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் (சிஎம்ஈவி) அமைப்பு தெரிவித்துள்ளது. ஆனால் விரைவாக இவற்றை இனங்கண்டுபிடிப்பதற்கு உரிய வளங்கள் உள்ளதா என்பது முக்கியவிடயமாகும். 

பேஸ்புக் மற்றும் டுவிட்டர் தளங்களைப் பார்க்கும் போது ஏற்கனவே அவை ஊடகவியலாளர்கள் அரசியல் வாதிகள் மற்றும் செயற்பாட்டாளர்களுக்கு எதிரான சொற்தாக்குதல்களால் நிறைந்துகிடக்கின்றன. இந்தப்பதிவுகளுக்கு எதிராக எந்தவிதமான வினைத்திறன்மிக்க தடுப்புச் செயற்பாடுகளையும் காணமுடியவில்லை. கடந்தகாலத்தைப் போன்று அவற்றை இனங்காண்பதும் ஆவணப்படுத்துவதும் மட்டும் போதுமானதல்ல. தற்போது அதனையும் தாண்டிய நகர்வுகளை முன்னெடுப்பதே அவசியமானதாகும். 



Live well, Laugh often, & Love with all of your heart! 

TRICI 

Monday, September 2, 2019

மீண்டும் பேசுபொருளாகியிருக்கின்ற பொறுப்புக் கூறல் கடப்பாடு



 கடந்த காலத்தில் இடம்பெற்ற குற்றங்களை மறந்துவிட்டு அன்றே கிடப்பில் போட்டுவிட்டு நாம் எதிர்காலத்தை நோக்கி வெற்றிகரமாக நகரமுடியாது. மாறாக நீதியின் மீது கட்டியெழுப்பப்படும் சமாதானத்தின் மூலமே முன்னோக்கிப் பயணிக்கமுடியும்' 



இலங்கையில் கடந்த  சில மாதகாலமாக  பேச்சளவில் கூட ஓரங்கட்டப்பட்டிருந்த  இறுதிப் போரின் போது  இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்களுக்கான  பொறுப்புக் கூறல் கடப்பாடு என்ற விடயம் கடந்த 19ம் திகதி முதலாக மீண்டும் பேசுபொருளாகியிருக்கின்றது.

இலங்கையின் புதிய இராணுவத்தளபதியாக லெப்டினற் ஜெனரல் சவேந்திர சில்வாவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்தமையை அடுத்தே மீண்டுமாக இறுதிப்போரில் இடம்பெற்றதாக கூறப்படும் பாரிய குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் பற்றி பல்வேறு தரப்பினரும் கரிசனையை வெளிப்படுத்த வருகின்றனர்.

அமெரிக்கா ,ஐரோப்பிய ஒன்றியம் அடங்கலாக சர்வதேச சமூகம், ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளர், மனித உரிமை ஆணையாளர், உட்பட ஐநா சமூகம் ,புலம்பெயர் சமூகம், சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் உள்ளுர் சிவில் சமூக அமைப்புக்கள், தமிழ்க் கட்சிகள் என பல்வேறு தரப்பினரும் சவேந்திர சில்வாவின் நியமனம் தொடர்பில் ஆழ்ந்த கரிசனையை வெளிப்படுத்தியிருப்பதுடன் பொறுப்புக்கூறல் தொடர்பான நம்பிக்கைக்கு வீழ்ந்த பேரடியெனவும் முற்றுப்புள்ளியெனவும் ஜனாதிபதியின் நடவடிக்கைகளை வர்ணித்துள்ளனர். 



2009ம் ஆண்டில் போர் முடிவிற்கு கொண்டுவரப்பட்டதையடுத்து ஜெனிவாவில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் மேற்குலக நாடுகளின் கரிசனைகளையும் மீறி இலங்கைக்கு ஆதரவாக மாற்றப்பட்டது. ஆனால் அயராத முயற்சிகளின் பலனாக 2012, 2013 ,2014 ஆகிய ஆண்டுகளில் தொடர்ச்சியாக தீர்மானங்கள் பொறுப்புக்கூறல் நல்லிணக்க விடயங்களில் இலங்கை காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நிறைவேற்றப்பட்டன. 

இலங்கையில்  2015 ஜனவரியில் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தை அடுத்து மார்ச் மாதத்தில் கொண்டுவரப்படவிருந்த தீர்மானம் பிற்போடப்பட்டு இசெப்டம்பர் 2015ல் இலங்கை அரசாங்கம், மனித உரிமைகள் பேரவைத் தீர்மானம் 30/1இற்கு ஒப்புதல் அளித்ததுடன், நிலைமாறுகால நீதி வழிமுறையொன்றின் ஊடாக வெளிப்படைத்தன்மை மற்றும்  பொறுப்புக்கூறல் ஆகியவற்றிற்கு முன்னொருகாலமும் இல்லாதவாறு தனது உறுதிமொழியினையும் வழங்கியது. குறிப்பாக மோதலுடன் தொடர்புடைய விடயங்களில் உண்மையைக் கண்டறிதல், நீதியை நிலைநாட்டுதல், இழப்புக்கள் மற்றும் நிறுவனச் சீர்திருத்தங்கள் ஆகியவற்றிற்கு அரசினால் அங்கீகரிக்கப்பட்ட வழிமுறைகள் ஊடாக தீர்வு காண்பதற்கு அரசாங்கம் உறுதிமொழியளித்தது. 

நான்கு ஆண்டுகள் நிறைவுபெற்ற நிலையிலும், இலங்கையின் அரசியல் நிலைமை நிலையற்றதாகவே காணப்படுவதுடன்இ நிலைமாறுகால நீதிக்கான அனைத்து உறுதியளிப்பும் அரசாங்கத்திற்குள்ளேயே நலிவடைந்துள்ளதாகவே காணக்கூடியதாக உள்ளது. 2018 ஆம் ஆண்டின் இறுதிக் காலகட்டத்தில் அரங்கேறிய அரசியல் சதி முயற்சிகள் கூட்டணி அரசாங்கத்திற்குள்ளே தீவிரமான பிளவுகள் இருப்பதையும் துலாம்பரமாகக் காட்டியது. கட்சி அரசியலுக்குள் காணப்படும் பெரும் ஊழல்கள்இ சனாதிபதியின் விருப்பங்களுக்கு மத்தியில் சில அரச நிறுவனங்கள் எளிதில் பாதிப்படையும் நிலைக்கு உள்ளாகியிருத்தல் மற்றும் நிலைமாறுகாலம் முழுமையாக நலிவடைந்துள்ளமை ஆகியனவற்றை துலாம்பரமாகக் காணக்கூடியதாக இருந்தது. நிலைமாறுகால நீதியைப் பொறுத்தமட்டில், நம்பகத்தன்மைமிக்க பொறுப்புணர்வுக்கான எதிர்ப்பு வலுவடைந்து வரும் நிலையில், அரசாங்கத்திற்குள் இருந்து ஆதரவளித்த சிலர் அதிலிருந்து விலகியுள்ளதொரு போக்கினை அவதானிக்க முடிகின்றது. 

2019ன் இறுதியிலும் 2020லும் இ நாங்கள் பல முக்கியமான தேர்தல்களை எதிர்நோக்கியுள்ளதால் எந்தவொரு நிலைமாறுகால நீதி செயன்முறையும் மறுவரையறை செய்யப்படுவதற்கோ அல்லது முடிவுறுத்தப்படுவதற்கோ உள்ளாகக்கூடும். அரசியல் சதிமுயற்சியின் ஊடாக முன்னைய ஆட்சியாளர்கள் ஆட்சிபீடம் ஏற்றப்பட்ட அக்குறிப்பிட்ட சில மாதங்களிலேயே இவ்விடயம் சார்ந்த செயற்பாட்டாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குழுக்கள் மீதான கண்காணிப்பும் அச்சுறுத்தல்களும் தீவிரமாக்கப்பட்டதுடன், ஊடக சுதந்திரமும் மட்டுப்பாடுகளுக்கு முகம்கொடுத்தது. ஆகவே இத்தேர்தல்களின் பெறுபேறுகளின் மூலம் 2015 இற்கு முன்னரான அடக்குமுறை மீள ஏற்படுவதற்கான வாய்ப்புகளைப் பற்றி சிந்திக்க வைக்கின்றது.

தற்போது பரந்தளவில் அரசியலில் காணப்படும் தளம்பல் அல்லது ஸ்திரமற்ற நிலையில் நிலைமாறுகால நீதி விடயத்தில் காணப்படும் சர்ச்சைமிக்க நிலவரங்கள் காரணமாக எதிர்வரும் ஆண்டில் அரசாங்கத்தின் அரசியல் ரீதியான ஆர்வம் பெருமளவு குன்றுவதற்கோ அல்லது முற்றுமுழுதும் இல்லாமல் போவதற்கோ வாய்ப்புகளும் உள்ளன. .


கடந்தகால குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் மீறல்கள் ஆகியவற்றைப் பற்றிய விடயங்கள் விளித்துரைக்கப்பட வேண்டும் எனும் உலகளாவிய புரிதலானது நிலைமாறுகால நீதியின்' தேவையினை வலுவூட்டுகின்றது. இவ்வருடத்தின் மே மாதம் மோதல் முடிவுற்று பத்து ஆண்டுகள் கடந்துள்ளது என்பதை நினைவூட்டினாலும், மோதல்களின் போது இரு தரப்பும் குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளார்கள் எனும் பொதுவாக ஏற்றுக்கொள்ளக்கூடிய தன்மையிலிருந்தும் அது சார்ந்த நம்பகத்தன்மைமிக்க பொறுப்புக்கூறும் கடப்பாட்டிலிருந்து  வெகுதூரம் விலகியிருப்பதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இச்சமூகம் நீண்டகாலத்தில் நல்லிணக்கம்இ சமத்துவம்இ சனநாயக நிலையுறுதி ஆகியவற்றைக் கொண்ட சட்டத்திற்கு மதிப்பளிக்கக்கூடியதொரு சமூகமாக நிலைமாற்றம் அடைய வேண்டுமாயின்இ நிலைமாறு கால நீதி செயன்முறை சார்ந்த 30/1 தீர்மானத்தினை செயற்படுத்துவது மிகவும் அத்தியாவசியமானதாகும்.

இச்சந்தர்ப்பத்தில் அரசியல் ரீதியில் மிகவும் யதார்த்தமானதொரு விடயத்தினை குறிப்பிட்டாக வேண்டும். 2015 ஆம் ஆண்டின் ஆட்சி மாற்றத்தைப் பொறுத்தமட்டில் அதன் மிக முக்கியமான பங்காளர்களாக சிறுபான்மை சமூகங்கள் இருந்துள்ள அதேவேளை, இச்சமூத்தைச் சேர்ந்த இனக்குழுமங்களே மோதல்களினால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்களாகவும் இருக்கின்றனர். 

தற்போதைய அரசாங்கம் தங்களுடைய தேர்தல் வாக்குறுதிகளாகிய உண்மையைக் கண்டறிதல் மற்றும் நீதித்துறை வகைப்பொறுப்பு ஆகியவற்றை  நிறைவேற்றத் தவறும் பட்சத்தில், 2015 இல் அரசாங்கத்திற்கு வாக்களித்தவர்களின் பெருமளவிலான வாக்குகளை இழக்க நேரிடக்கூடியதொரு இடர் நிலையும் உண்டு. ஆனால் எதிரணியினர்களின் வேட்பாளர்  தெரிவினால் உள்ளதில் யாருக்கு வாக்களித்தால் பரவாயில்லை என்று வாக்காளர்கள் சிந்தித்து வாக்களித்தால் அரசாங்கத்திலுள்ளவர்களுக்கு  அனுகூலமாக அமையவாய்ப்பும் உள்ளதை இவ்வேளையில் சுட்டிக்காட்டியே ஆகவேண்டும்.

2019 இற்கு பின்னரான காலப்பகுதியில் தாராளவாத அரசாங்கமொன்றையும் நீண்ட கால அரசியல் ஸ்திரநிலையையும் சமாதானத்தையும் இலங்கையில் இடையறாமல் முன்னெடுத்துச் செல்லவேண்டுமாயின், நிலைமாறுகால நீதி எனும் விடயம் உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் முன்னுரிமைப்படுத்தப்பட்டதொரு விடயமாக அமைதல் வேண்டும்.

கடந்த சில ஆண்டு காலத்தை நோக்குமிடத்து, நிலைமாறு கால நீதிக்கான அரசியல் விருப்பார்வம் குறைவடைந்து அல்லது இல்லாதொழிந்து போயுள்ள அதேவேளை அதற்கெதிரான எதிர்ப்பு அலைகள் வலுப்பெற்றுள்ள சூழமைவில் அதன் நோக்கெல்லை வியத்தகு அளவிற்கு குறுகியுள்ளதென்பது மறுக்க முடியாததொரு விடயமாகும். ஆகவே, நிலைமாறுகால நீதிக்காக ஆதரித்து வாதாடுகின்ற இராஜதந்திரிரகளும், சிவில் சமூகங்களும், ஊடகங்களும் அவர்களுடைய அணுகுமுறையினை மாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது.

 2015 ஆம் ஆண்டளவில் நிலைமாறு நீதிக்கான வழிமுறையமைப்பு அரசின் உயர்மட்டத்தில் உள்ளவர்களுடன் நேரடியாக பணியாற்றுவதாக அமைந்திருந்தெனினும், அதற்கான நுழைவாயில்கள் துரிதமாக மூடப்படுவதை உணரமுடிகின்றது. ஆகவே, அடுத்துவரும் ஆண்டில் பங்கீடுபாட்டாளர்கள் கடந்த காலத்தில் அடைந்து கொண்டவற்றை வலுவூட்டிக்கொள்வதையும் அரச நிறுவனங்களில் கீழ் வரிசையில் உள்ளவர்கள் மத்தியில் ஆற்றலையும் அறிவினையும் கட்டியெழுப்புவதையும் நிலைமாறு கால நீதிக்காக பொதுமக்களை அணிதிரட்டும் விடயத்தையும் முன்னுரிமைப்படுத்தல் வேண்டும்.
கடந்த நான்கு  ஆண்டு காலத்தில் தீர்மானம் 30/1 இன் மூலம் அடைந்துகொள்ளப்பட்ட மிகவும் உறுதியான பெறுபெறு யாதெனில் காணமாற்போனவர்களுக்கான அலுவலகம் (OMP) தாபிக்கப்பட்டமையாகும். அது முழுமையான செயல் வடிவத்தைப் பெறாவிட்டாலும் அது மிகவும் வலுவுடைய சட்ட ஆணையை பெற்றுக்கொண்டுள்ளதுடன், பெருமளவு சுயாதீனமான ஆணையாளர்களையும் கொண்டுள்ளமை அதன் சிறப்பியல்பாகும். இவ் அலுவலகத்தின் பணியானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். கடந்த கால ஆட்சியின் போது குறிப்பாக இனரீதியிலான மோதல்கள் மற்றும் ஏனைய அரசியல் மற்றும் சிவில் கலவரங்கள் காரணமாகஇ கடத்தப்பட்ட அல்லது காணாமற் போனவர்களுக்கு என்ன நடந்தது அல்லது எங்கிருக்கின்றார்கள் என்பதைக் கண்டறிவதே அதற்குள்ள பிரதான ஆணையாகும். ஆகவே 20,000 மேற்பட்ட காணாமற் போனவர்களைப் பற்றிக் கண்டறிதல் சமூக ரீதியிலும் சட்ட ரீதியிலும் வலியுறுத்தி நிற்கின்றதொரு தேவையாக உள்ளது. இதற்கு மேலதிகமாக காணாமற் போவதற்கு வழிசமைத்த அரச நிறுவனங்களின் அடக்குமுறை மற்றும் குற்றவியல் சார்ந்த கொள்கைகள் மற்றும் நடத்தைகள் பற்றிய உண்மைகளை கண்டறிவதற்கும் இவ் அலுவலகத்திற்கு தத்துவம் உள்ளதுடன், இவ்விடயம் உண்மையைக் கண்டறியும் பிரயத்தனங்களுக்கு பங்களிப்பு வழங்குவதுடன் நீதியை நிலைநாட்டுவதற்கும் இட்டுச் செல்கின்றது.

 தொடக்கம் முதற்கொண்டே காணாமற் போனவர்களுக்கான அலுவலகம் பல்வேறு அரசியல் அமைப்புகளினது பாரிய எதிர்ப்புகளுக்கு உள்ளாகியதுடன் தொடர்ந்தும் இந்நிலை நீடிக்கின்றது. இந்நிலையினை எதிர்த்துப் போராடுவதற்கு மக்கள் மத்தியில் இந்த அலுவலத்தைப் பற்றி ஆதரித்து வாதாட வேண்மென்பதுடன் அரச நிறுவனங்கள் இவ் அலுவலகத்தின் புலனாய்வு விடயங்களில் உடனுழைக்கின்றார்கள் என்பதை உறுதிசெய்தல் வேண்டும்.

 நிலைமாறுகால நீதி செயன்முறைக்கு ஒத்தாசை வழங்கும் பொருட்டு அரச நிறுவனங்களின் சுயாதீனத்தன்மை, மனித உரிமைகளுக்கு இசைந்தொழுகுதல் மற்றும் ஆற்றல் ஆகியவை உறுதிப்படுத்தப்படும் ஆண்டாக 2019 ஆம் ஆண்டு இருத்தல் வேண்டும். 2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆட்சிக் ஆட்சிச் கவிழ்ப்பின் போது நீதித்துறையில் காணப்பட்ட சுயாதீனத்தன்மை ஊக்கம் அளிக்கும் விடயமாகும். இவ்வாறானதொரு நிலைமை இதற்கு  நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் காணப்படவில்லை என்பதுடன் ஆட்சி மாற்றம் இடம்பெற்ற பின்னர் நிறுவனங்களில் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன என்பதற்கு சாட்சியாகவும் திகழ்கின்றது. ஆயினும் மற்றைய திணைக்களங்களைப் பொறுத்தமட்டில் இன்னும் பல சீர்த்திருங்கள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன என்பது உண்மையானதாகும்.

உதாரணமாக வழக்காடும் உத்தியோகத்தர்கள் அரசியல் தளம்பல் நிலைகள் ஏற்படும் சிலசந்தர்ப்பங்களில் அரசிற்கு சார்பானதொரு போக்கினை வெளிப்படுத்தியமையும் காணக்கிடைக்கின்றது. இராணுவத்தைப் பொறுத்தமட்டில் மனித உரிமைகள் விடயத்தில் பாரியளவு மீறல்களையும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் அல்லது உள்நாட்டில் குற்றவியல் தவறுகள் புரியப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் அண்மைக்காலத்தில் பல பதவி உயர்வுகளையும் பெற்றுள்ளார்கள். ஆகவேஇ பங்கீடுபாட்டாளர்கள் முக்கியமான அரச நிறுவனங்களில் தாபன ரீதியிலான மறுசீரமைப்புகளை இடம்பெறச் செய்தல் வேண்டும். பல சந்தர்ப்பங்களில் சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்படாமல் முரண்படும் அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு மத்தியியலும் கூட சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் ஆற்றல் விருத்தி மற்றும் வலுவூட்டப்பட்ட பரிந்துரைகளின் மூலம் இவை மேற்கொள்ளப்பட்டுள்ள சந்தர்ப்பங்களும் உள்ளன.

இறுதியாக, 2019 ஆம் ஆண்டு தாராளவாத சனநாயகம், உண்மை மற்றும் நீதி ஆகிவற்றின் பால் மக்களை அணிதிரட்டும் ஆண்டாக அமைந்திட வேண்டும். 2018 ஆம் ஆண்டு ஆட்சிக்கவிழ்ப்பு, சனநாயகத்தில் மக்கள் கொண்டுள்ள பலத்தை வெளிக்காட்டுவதற்கு ஆதாரமாக அமைந்தது. இலங்கை வரலாற்றில் ஒருபோதும் பொது மக்கள் உள்நாட்டு அலுவல்களில் தூய்மையான ஆட்சி, சட்டத்தின் சுயாட்சி மற்றும் அடிப்படை உரிமைகள் போன்றவற்றை வலியுறுத்தி இவ்வாறாக ஈடுபட்டதாக காண இயலாது. இலங்கை ஜனரஞ்சகமான செயற்பாடுகளைத் தவிர்த்து சனநாயகக் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட இயங்குநிலையுள்ள சனநாயகத்தை நோக்கிப் பயணம் செய்ய வேண்டுமாயின் இந்த முன்னேற்றம் பேணிவரப்பட்டு முன்னேற்றப்பட வேண்டும். அரசியல்வாதிகளும் கொள்கை வகுப்பாளர்களும் தங்களுடைய தொகுதிகளுக்கு வகைபொறுப்பு கூறுபவர்களாக மாற்றப்பட வேண்டும். நிலைமாறு கால நீதிக்கு மதிப்பளித்து கடந்த கால விடயங்களுடன் பரிமாற்றத்தை ஏற்படுத்திக்கொள்வதற்கும், உண்மையைக் கண்டறிவதற்கும் மோதலின் போது அனைத்துத் தரப்புகளும் புரிந்த குற்றங்கள் தொடர்பாக நீதியினை நிலைநாட்டுவதற்கும் அனைத்து இனங்களுக்கு மத்தியிலும் பங்கீடுபாட்டாளர்கள் விழிப்புணர்வினை கட்டியெழுப்புதல் வேண்டும். 

2020 இல் எந்த அரசாங்கம் ஆட்சிபீடம் ஏறினாலும் நம்பகத்தன்மை கொண்டதொரு நிலைமாறுகால நீதிச் செயன்முறையொன்றிற்கு கட்டாயமாக பொதுமக்களின் ஒத்தாசையும் அழுத்தமும் தேவையாகவிருக்கும். 2019 ஆம் ஆண்டு அவ்வாறானதொரு விடயத்திற்கான விழிப்புணர்வினையும் ஒத்துழைப்பினையும் கட்டியெழுப்புகின்றதொரு ஆண்டாக அமைதல் வேண்டும்.
இவ்வருடமானது எவ்வாறான அரசியல் ஸ்திரமற்ற நிலையைத் தோற்றுவித்தாலும் பங்கீடுபாட்டாளர்கள் நிலைமாறு நீதியினை அவர்களின் நிகழ்ச்சிநிரலின் ஒருங்கிணைந்ததொரு பகுதியாக இருப்பதை உறுதிசெய்து கொள்ளுதல் வேண்டும். 30 ஆண்டு கால அடக்குமுறை வன்முறை மற்றும் மோதல்களின் வகைபொறுப்பில் காணப்படும் நலிவடைந்த தன்மை அபிவிருத்திக்கு பாதகமான முறையில் தாக்கம் செலுத்துவதுடன் நாட்டின் அரசியல் மற்றும் பாதுகாப்பு ஆகிய விடயங்ளை மேலும் ஸ்திரமற்ற நிலைக்குக் கொண்டுசெல்லும். ஆகவேஇ இலங்கையின் நிலைமாறு கால நீதி விளக்க அறிக்கையாகிய மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானத்தை நிறைவேற்றும் விடயம், நேர்மையானதும் நீடுறுதிமிக்கதுமான முன்னேற்றத்திற்கு விட்டுக்கொடுப்புக்கு இடமற்ற வகையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகின்றது.

தமக்கு வேண்டப்படும் அரசாங்கம் அமையும் போது அன்றேல் தமது தேவைகள் இருக்கின்ற அரசாங்கத்தினால் பூர்த்திசெய்யப்படும் போது சர்வதேச சமூகம் குறிப்பாக மேற்குலகம் இறுதிப்போரின் போது இடம்பெற்றதாக கூறப்படும் குற்றங்கள் தொடர்பாக அடக்கிவாசிப்பதும் தாம் நினைத்தவை நடக்கவில்லை என்றால் அதுதொடர்பில் பெருங்குரல் எழுப்புவதும் இலங்கை விடயத்திலும் அரங்கேறிக்கொண்டிருக்கின்றது.  

சர்வதேச சமூகத்தின் நிகழ்ச்சி நிரலுக்குள் வீழ்ந்துவிடாமல் தமது சொந்த மக்களின் எதிர்காலத்தை மனதிற்கொண்டு கடந்த காலத்தில் இடம்பெற்றதாக கருதப்படும் குற்றங்கள் இஅத்துமீறல்களால் பாதிப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதை பதவியில் இருக்கின்ற பதவிக்கு வரப்போகின்ற அரசாங்கங்கள் உறுதிசெய்யுமானால்   நிலையான சமாதானத்தையும் ஸ்திரத்தன்மையையும் உறுதிசெய்யமுடியும். இதன்மூலம் தங்குதடையற்ற அபிவிருத்தியை நாட்டில் முன்னெடுக்கவும் சுபீட்சமான இலங்கையைக் கட்டியெழுப்பவும் முடியும் என்ற மிகையல்ல.

அருண் ஆரோக்கியநாதன்.


Monday, August 26, 2019

ஜனாதிபதி தேர்தல் வெற்றி கணக்கு!



'தேர்தல்களில் யாருக்கு வாக்களிப்பது எனத் தீர்மானிக்காமல் இருப்பவர்களின் வாக்குகளே வெற்றிதோல்வியைத் தீர்மானிக்கும் காரணியாகும்.'- அமெரிக்க நகைச்சுவை எழுத்தாளர் இவான் இஸார்




எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை பொதுஜன பெரமுணவும் ஜனதா விமுக்தி பெரமுணவும் ( ஜேவிபி) ஏற்கனவே அறிவித்துவிட்டன. ஜனாதிபதி வேட்பாளர் யார் என்ற இழுபறி ஐக்கிய தேசியக்கட்சிக்குள் நீடித்துக்கொண்டே செல்கின்றது. பிரதான கட்சிகளைத் தவிர சுயேட்சையாகவும் நாகனந்த கொடிதுவக்கு போன்றவர்கள் போட்டியிடலாம் என்ற ஊகங்கள் இருக்கின்றன. 



கடந்த தேர்தலிலும் பார்க்க அதிகவேட்பாளர்களைக் கொண்டதாக ஜனாதிபதி தேர்தல்களம் அமைந்தாலும் யார் இறுதியில் வெற்றிபெறுவதற்கு அதிக சாத்தியம் உள்ளதென்பதை கடந்த கால தரவுகளை முன்னிறுத்தி ஆராய்வோம்.

கடந்த தேர்தலில் ஜக்கிய தேசியக் கட்சியைப் பிரதான கட்சியாகக்கொண்ட புதிய ஜனநாயக முன்னணியின் சார்பில் பொதுவேட்பாளராகப் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன 6,217,162 வாக்குகளையும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ஷ 5,768,090  வாக்குகளையும் தேசப்பற்றுள்ள தேசிய முன்னணியின் சார்பில் போட்டியிட்ட ரத்னாயக்க ஆராச்சிகே சிறிசேன 18.174 வாக்குகளையும் எமது தேசிய முன்னணியின் சார்பில் போட்டியிட்ட நாமல் அஜித் ராஜபக்ஷ 15,726 வாக்குகளையும் பெற்றிருந்தனர். 


2015 ஜனாதிபதி தேர்தல் முடிவுகள்
வேட்பாளர் பெயர்
 போட்டியிட்ட கட்சி 
பெற்ற வாக்குகள்
மைத்திரிபால சிறிசேன
புதிய ஜனநாயக முன்னணி
6,217,162
மஹிந்த ராஜபக்ஷ
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு
5,768,090  
ரத்னாயக்க ஆராச்சிகே சிறிசேன 
தேசப்பற்றுள்ள தேசிய முன்னணி
18,174
நாமல் அஜித் ராஜபக்ஷ 
எமது தேசிய முன்னணி 
15,726


கடந்த ஏப்ரல் மாதத்தில் உக்ரேய்ன் நாட்டில் இடம்பெற்ற தேர்தலில் அரசியல் கட்சிகளைச் சேராத அரசியலுக்கு முற்றிலும் வெளியே இருந்து போட்டியிட்ட நகைச்சுவை நடிகர் வொளோடிமிர் ஷெலன்ஸ்கி மகத்தான வெற்றியைப் பெற்றிருந்தார். அப்படியானதொரு ஆச்சரியம் அண்மைய எதிர்காலத்தில் இலங்கையில் நடப்பதற்கு வாய்ப்பில்லை என்று அரசியல் ஆய்வாளர்களுடனான கலந்துரையாடல்களின் போது உணரமுடிந்தது. L


இலங்கையின் கடந்த கால ஜனாதிபதித் தேர்தல்களை ஆராய்ந்தால் ஐக்கிய தேசியக் கட்சி அன்றேல் அதனைத் தலைமையாகக்கொண்ட கூட்டணி அதேபோன்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அன்றேல் அதனைத் தலைமையாகக்கொண்ட கூட்டணியே வெற்றிபெற்றிருந்தது. இம்முறை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இடத்தில் பொதுஜன பெரமுண இருக்கின்றது.. அந்தவகையில் பொதுஜன பெரமுண தலைமையிலான கூட்டணி அன்றேல் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணியிலிருந்து போட்டியிடுகின்ற வேட்பாளருக்கே இறுதி வெற்றிக்கான வாய்ப்பு இருக்கின்றது. 








இம்முறை தேர்தலில் களமிறங்கியிருக்கும் ஜே.வி.பி தலைவர் அநுர குமார திஸாநாயக்க மற்றும் களமிறங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படும் சட்டத்தரணி சமூக செயற்பாட்டாளர் நாகனந்த கொடித்துவக்கு ஆகியோhர் கடந்த தேர்தலில் சிறிசேனவிற்கு வாக்களித்த தரப்பினரின் வாக்குகளிலேயே அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற அரசியல் விமர்சகர்கள் சுட்டி;க்காட்டுகின்றனர்.  2018ம் ஆண்டு பெப்ரவரி மாதம் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஜேவிபிக்கு 710,932 வாக்குகள் கிடைத்திருந்தன. அநுர குமார திஸாநாயக்க என்ற ஆளுமைமிக்க அரசியல் வாதியின் மீது மக்களுக்கு நம்பிக்கையிருந்தாலும் அவர் சார்ந்து நிற்கின்ற ஜேவிபியிடம் நாட்டின் எதிர்காலத்தை கொடுப்பதற்கு பெரும்பான்மையான மக்கள் இன்னமும் தயாராகவில்லை. அப்படிபபார்க்கையில் எதிர்வரும் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்கவால் கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பெற்ற வாக்குகளைத் தாண்டிப் பெறுவதற்கு வாய்ப்பில்லை. கடந்த 2015பாராளுமன்றத் தேர்தலில் ஜேவிபி 543,944 வாக்குகளைப் பெற்றிருந்தது. ஜனாதிபதித் தேர்தல் என்று வருகின்ற போது யாரால் இறுதி வெற்றியைப் பெறமுடியும் என்ற எண்ணத்திலேயே அதிகமானவர்கள் வாக்களிப்பதனால் உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் ஜேவிபி பெற்ற வாக்குகளை விடவும் குறைவான வாக்குகள் அநுர குமார திஸாநாயக்கவிற்கு கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. தற்போதைய நிலைவரப்படி அநுர குமார திஸாநாயக்கவால் சுமார் ஐந்து லட்சம் வாக்குகளையே அதிகபட்சமாகப் பெறமுடியும் என அரசியல் அவதானிகளின் கருத்துக்கள் மூலம் அறிந்துகொள்ளமுடிகின்றது. 

சமூகத்தின் மீது அக்கறை கொண்டவர் கறைபடியாத கரங்களுக்கு சொந்தக்காரர் என பேசப்படும் சட்டத்தரணி நாகனந்த கொடித்துவக்கு தேர்தலில் போட்டியிட்டால் அவருக்கு அதிருப்தி வாக்காளர்களிடம் இருந்து கிடைக்கக்கூடிய அதிகபட்ச வாக்குகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்தையும் தாண்டுவதற்கு வாய்ப்பில்லை என்பதே அரசியல் ஆய்வாளர்களின் எதிர்வுகூறலாக இருக்கின்றது.


கடந்த தேர்தலில் போட்டியிட்ட வடக்கு கிழக்கு தமிழ் வாக்காளர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் யாருக்கு வாக்களித்து வெற்றியைப் பெற்றுக்கொடுப்பது என்பது தொடர்பில் இன்னமும் தீர்மானமின்றி இருந்தாலும் யார் வரக்கூடாது என்பதில் திட்டவட்டமான முடிவுடன் இருப்பதாக கருத்தாடல்களின் போது உணர்ந்துகொள்ளமுடிகின்றது. மஹிந்த ராஜபக்ஸவிற்காவது ஒரு ஜனநாயக முகம் இருக்கின்றது அவர் மக்களை வசீகரிக்கக்கூடிய ஆகர்ஸியம் மிக்க தலைவர். ஆனால் கோத்தபாய என்று வரும் போது அவரை இராணுவ முகத்துடனே மாத்திரமே மக்கள் பார்பார்கள். கடந்த தேர்தலில் மஹிந்தவிற்கு வடக்கு கிழக்கில் கிடைத்த வாக்குகள் கூட எதிர்வரும் தேர்தலில் கோத்தபாயவிற்கு கிடைப்பதற்கு வாய்ப்பில்லை என்று சுட்டி;காட்டப்படுகின்றது. இலங்கையில் மிக அண்மையில் இடம்பெற்ற தேர்தலான உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை அளவுகோலாக் கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு கிடைக்கக்கூடிய வாக்குகளை பார்க்கின்றபோது அந்த தேர்தலில் அவர்களுக்கு கிடைத்த 337,877 வாக்குகள் கிடைத்திருந்தன.  கடந்த பாராளுமன்றத்தேர்தலில் 515,963  வாக்குகள் கிடைத்திருந்தன.  நல்லாட்சி அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளை முற்றாக நிறைவேற்றவில்லை என்ற அதிருப்தி மக்கள் மத்தியில் காணப்பட்டபோதும் ராஜபக்ஸ தரப்பினர் மீண்டும் வந்துவிடுவார்கள் அப்படி வந்தால் நல்லாட்சியில் காணப்பட்ட நிம்மதியான வாழ்க்கை பறிபோய்விடும் என்ற அச்சம் காணப்படுகின்றது. அந்தவகையில் ராஜபக்ஷவின் கடந்த காலத்தை நினைவூட்டினாலேயே தமிழ் மக்களின் வாக்குகளை மீண்டும் தக்கவைத்துக்கொள்வதற்கு அதிக வாய்ப்புக்கள் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பிற்கு உள்ளது.  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தேசிய தேர்தல்களில் இன்னமும் காத்திரமான சக்தியாக உருமாறவில்லை. ஈபிடிபி அதற்குரிய வாக்குவங்கியை தொடர்ந்து தக்கவைத்துவருகின்றபோதும் அது ஒட்டுமொத்த வாக்களில் வெறுமனே அரைச்சதவீதத்தையும் தொடவில்லை.  

முஸ்லிம் வாக்குகளைப் பொறுத்தவரை 2015ம் ஆண்டு தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸவிற்கு வாக்களித்த தரப்பினர் ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னர் எழுந்த சூழ்நிலைகளால் தொடர்ந்தும் அதே நிலைப்பாட்டில் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கமுடியாது. 

சிங்கள மக்களைப் பொறுத்தவரையில் ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னர் ஏற்பட்ட சூழல் தேசிய பாதுகாப்பு விடயத்தில் கரிசனையை உருவாக்கிவிட்டுள்ளது. இதனால் தேசியவாதத்தை முன்னிறுத்தும் தரப்பினருக்கு அவர்களில் பெரும்பான்மையான வாக்குகள் அளிக்கப்பட வாய்ப்புண்டு. ஈஸ்டர் தாக்குதலில் நேரடியாக பாதிக்கப்பட்ட மக்கள்மத்தியில் அரசாங்கத்தின் மீதும் ஜனாதிபதியின் மீதும் வெறுப்பு இருந்தாலும் ஒட்டுமொத்த கத்தோலிக்க கிறிஸ்தவ மக்களும் அதே நிலைப்பாட்டில் இல்லை.

தமிழ் முஸ்லிம் மக்களின் பெரும்பான்மையான வாக்குகள் 2015ம் ஆண்டு போன்றே இம்முறையும் ஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான கூட்டணி வேட்பாளருக்கு கிடைக்கும் என்ற எடுகோளின் அடிப்படையில் அநுர குமாரவும் நாகனந்தவும் சுமார் ஆறுலட்சம் வாக்குகளை இந்தக்கூட்டணிக்கு கிடைக்கக்கூடிய வாக்குகளில் இருந்து பிரித்துச் சிதறிடித்துவிடுவார்கள் என்ற எடுகோளின் அடிப்படையிலும் நோக்கினால் எவ்வாறு இக்கூட்டணியால் வெற்றிபெறமுடியும் என்பது எமக்கு முன்பாக உள்ள கேள்வியாகும். 

இந்த நிலையில் கடந்த தேர்தலின்  பின்னர் புதிய வாக்காளர்களாக பதிவுசெய்யப்பட்டிருக்கின்ற 12 லட்சம் இளம் வாக்காளர்களின் வாக்குகள் யாருக்கு கிடைக்கப்போகின்றது என்பதும் எதிர்வரும் தேர்தலில் தாக்கம் செலுத்தக்கூடிய மிகப்பெரும் காரணிகளில் ஒன்றாகும். இந்தப்புதிய வாக்குகளை ஈர்ப்பதற்கு கட்சிகள் என்ன வியூகங்களைக் கையாளப்போகின்றன என்பதிலேயே தேர்தலின் இறுதி வெற்றி தோல்விகள் தங்கியுள்ளன.  தேர்தலில் வெற்றி பெறுவதென்பது ஒரு கலை.  சிறப்பான முறையில் பிரசார உத்திகளை வகுத்து செயற்படுகின்றவர்கள் மக்கள் அலையை உருவாக்கி இறுதிவெற்றியை தம்வசப்படுத்துவதைக் கண்ணுற்றிருக்கின்றோம். இளம் வாக்காளர்கள் அதிகமாக சமூக வலைத்தளங்களில் உலாவருபவர்களாக உலகின் பல பாகங்களிலும் நடைபெறுகின்ற விடயங்களை உடனுக்குடனே அறிந்துகொள்பவர்களாக இருப்பதனால் சமூக வலைத்தளங்களில் முன்னெடுக்கப்படும் பிரசாரங்கள் புதிய வாக்காளர்களான இளம் தலைமுறையினரை ஈர்ப்பதற்கு உதவும். 

ஆகமொத்தத்தில் ஜனாதிபதித் தேர்தல் வெற்றியென்பது புதிய வாக்காளர்களை தம்வசப் படுத்துவதிலேயே தங்கியிருக்கப்போகின்றது என்பது திண்ணம்.

அருண் ஆரோக்கியநாதர்


இலங்கையிலிருந்து ஐரோப்பா வரை - சுவடுகளை இழக்கின்றோமா? - விபரிக்கிறார் க...


தமிழ் மொழி போல் இனிதாவதொன்றும் இல்லை - பெருமிதம் கொள்ளும் பன்மொழி அறிஞர்.



Saturday, August 17, 2019

எழுத்தாளர் அசோகமித்திரன் பற்றி அவரது புதல்வர்


காலநிலை மாற்றம் பொருளாதாரத்தில் செல்வாக்கு செலுத்துகின்றதா?


வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டும் - அருண் தம்பிமுத்து


அரசியல் தீர்வை அடைவது எமது அபிலாஷை- அமைச்சர் மனோ கணேசன்


நம்பிக்கை இல்லாப் பிரேரணை – மஹிந்தவின் பதவி பறிக்கப்படுமா..?


ஜனநாயகத்தை பாதுகாக்கக் கோரி மக்கள் வீதியில்


பிரதமர் ஆசனம் யாருக்குரியது? போராட்டங்களுக்கு மத்தியில் சபாநாயகரின் அறிவிப்பு|


எம்மை விமர்சித்தவர்கள் இன்று புரிந்துகொண்டுள்ளனர் - M.A.சுமந்திரன்