' அர அபி' என்று ஐக்கிய தேசியக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கூறியதை அராபி என்றும் கோட்டாபயவை 'பரதன்ன' ஓன என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து ஐக்கிய தேசிய முன்னணி பக்கம்மாறிய சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் கூறிய கருத்தை கோட்டாபயவை 'மரன்ன' ஓன என்றும் இலங்கையிலுள்ள முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்ட செய்திகள் தேர்தல் காலத்தில் ஆக்கிரமித்துள்ள போலிச் செய்திகளை வெளிச்சம் போட்டுக்காண்பித்துள்ளன.
இந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்ட கூட்டங்களில் பேசிய வார்த்தைகளை தொழில்நுட்பத்தின் உதவியுடன் சமார்த்தியமாக உண்மையாகவே அவர்கள் பேசுவது போன்று அதனைத்தயாரித்தவர்கள் வடிவமைத்துள்ளனர்.
காணொளிகளை திரிவுபடுத்துவது இலங்கையில் மிகக்குறைவாக நடந்துள்ள போதும் புகைப்படங்கள் ஆவணங்களில் திரிவுபடுத்தல்களை மேற்கொண்டு போலித் தகவல்களை பரப்பும் நடவடிக்கை கடந்த காலமுதல் இடம்பெற்றுவருகின்றது . தேர்தல் காலம் என்றபடியால் போலியான தகவல்களை கொண்ட புகைப்படங்கள் அதிகமாக இந்த நாட்களில் வெளியாகி மக்கள் மத்தியில் குழப்பமான மனநிலையைத் தோற்றுவிக்கும் முயற்சிகள் இடம்பெறுகின்றன.
அநுராதபுரத்தில் இடம்பெற்ற பொதுஜன பெரமுண கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் முதலாவது பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற மக்களின் புகைப்படமென ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது.
உண்மையில் ஆராய்ந்து பார்த்தபோது அது கடந்தவருடம் பிரான்ஸில் இடம்பெற்ற கால்பந்து உலகக்கிண்ண இறுதிப்போட்டியின் போது எடுக்கப்பட்ட படத்தைத் தான் அநுராதபுரப் பொதுக்கூட்டம் எனப்பகிர்ந்துகொண்டுள்ளனர்.
அதுபோன்றே ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் காலி முகத்திடல் பொதுக்கூட்டத்திற்கு வருகைதந்த ஆதரவாளர்கள் தமக்கிடையே மோதிக்கொண்டதாக புகைப்படமொன்று வெளியாகியிருந்தது.
உண்மையில் ஆராய்துபார்த்ததில் அது 2013ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அப்போதைய பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க பதவியில் இருந்து நீக்கப்பட்டபோது ஐக்கிய தேசியக்கட்சி ஆதரவாளர்களும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு ஆதரவாளர்களும் மோதிக்கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்பது தெரியவந்தது.
இதனைத் தவிர ஐக்கிய தேசிய முன்னணியின் காலிமுகத்திடல் பொதுக்கூட்ட்த்தில் சஜித் பிரேமதாஸவிற்கு பின்னால் நின்றுகொண்டிருந்தவர் வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் என்று சமூக வலைத்தளங்களில் பரப்பட்டது.
இப்படியாக பலதரப்பினையும் பாதிக்கும் வகையில் போலிச் செய்திகள் தற்போது அதிகளவில் பரப்பப்படுகின்றன.
போலித்தகவல்களை நாம் ஆராய்ந்தால் அதன் உண்மையைக் கண்டறியமுடியும் . கடந்த காலத்திலும் இவ்வாறு போலிச் செய்திகள் பரப்பப்பட்டுள்ளன. ஆனால் இணைய யுகத்தில் சமூக வலைத்தளங்களின் வருகையின் பின்னர் போலிச் செய்திகளைப் பரப்பும் வேகம் அதிகரித்துவிட்டமை அதாவது போலிச் செய்திகள் வைரலாக துரித கதியில் பரப்பப்படும் சாத்தியம் உள்ளதால் அதனால் ஏற்படும் தாக்கம் அபாயகரமானதாகக் காணப்படுகின்றது.
போலித்தகவல் என்பது இரண்டு வகைப்படும் . தவறான செய்தி என்று தெரியாமலேயே அதனைப்பரப்புகின்றமை மற்றையது தவறான செய்தி என்று தெரிந்தும் அதனைப் பரப்புவது.
இதில் எது அபாயமானது என்று கேட்டால் இரண்டுமே அபாயகரமானது அவை வைரலாக மாறுமிடத்து என்பதே பதிலாக இருக்கும்.
2016ம் ஆண்டில் அமெரிக்காவில் இடம்பெற்ற தேர்தலின் போது பரப்பப்பட்ட போலிச் செய்திகளால் அமெரிக்க ஜனாதிபதியாக யாருமே எதிர்பாராத டொனால்ட் ட்ரம்ப் வந்த கதையைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்தநிலையில் இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னமும் மூன்றுவாரங்களுக்கும் குறைவான காலமே உள்ள நிலையில் இங்கு சமூக ஊடகங்களிலும் பிரதான தொலைக்காட்சி மற்றும் ப்த்திரிகைகளிலும் பரப்பப்படும் போலிச் செய்திகளால் இறுதி வெற்றியில் தாக்கம் செலுத்தக்கூடிய நிலை காணப்படுகின்றது.
அப்படியானால் எவ்வாறு துரிதமாக தகவலை போலித்தகலென்றோ அன்றேல் ஒரு செய்தியை போலிச் செய்தியென்றோ அடையாளம் காண்பது என நீங்கள் அறிந்துவைத்திருப்பது மிகவும் அவசியமாகும். https://www.newsline.lk/news/7634-fake-news
அருண் ஆரோக்கியநாதர்
தொடரும்...