Thursday, December 19, 2019

தேர்தல் காலகட்டத்தை தாண்டி அன்றாட வாழ்வியலில் மக்களைப் குழப்பும் போலிச் செய்திகள்


2020ம்ஆண்டில் இலங்கையில் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல்கள் ஏப்ரல் இறுதி வாரத்திலேயோ அன்றேல் மே மாத ஆரம்பத்திலேயோ நடைபெறும் வாய்ப்புக்கள் உள்ளன. கடந்த ஜனாதிபதித தேர்தலையொட்டிய பிரசாரங்களை அலசி ஆராய்கின்றபோது பெருமளவானவை சமூக ஊடகப் பரப்பிலேயே கட்டவிழ்த்துவிடப்பட்டிருந்தன.

2010ம் ஆண்டு தேர்தலுக்கு பின்னரே இலங்கையிலுள்ள அரசியல்வாதிகள் சமூக ஊடகங்களைப் பாவிக்கத் தொடங்கினர். அப்போது ஜனாதிபதியாகவிருந்த  மஹிந்த ராஜபக்ஸ வெகுஜனத் தொடர்புகளுக்கான ஓர் பொறிமுறையாக பேஸ்புக் தளத்தை முதலில் பாவிக்கத்தொடங்கினார்.

 உண்மையைக் கூறுவதாயின் 2015ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போதே இலங்கையில் தேர்தலொன்றில் சமூக ஊடகங்கள் வெளிப்படையான பாத்திரமொன்றை வகித்திருந்தன. அந்த தேர்தல் காலகட்டத்தில் முன்னாள் ஜனாதிபதியை சமூக ஊடகங்களில் கணிசமானவர்கள் பின்தொடர்ந்திருந்த போதிலும் கூட அவரது எதிர்த்தரப்பினரோ இலகுவாக அணுகக்கூடிய இணையத்தின் திறந்ததன்மையை பயன்படுத்தி அப்போது அரச ஊடகங்கள் மீதும் சில தனியார் ஊடகங்கள் மீதும் அவர் கொண்டிருந்த இரும்புப் பிடியை முறியடிப்பதற்கு சமூக ஊடகங்களை பயன்படுத்திக்கொண்டனர்.



கடந்த ஜனாதிபதி தேர்தல் தொடக்கம் தற்போதுள்ள காலப்பகுதியில் தேசிய தேர்தல்களில் சமூக ஊடகம் என்பது பிரதான ஒரு விடயமாக பரிணமித்துநிற்கின்றது. பேஸ்பும் மற்றும் டுவிட்டர் தளங்கள் இல்லாமல் இருந்திருந்தால் 2018ம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் இடம்பெற்ற அரசியல்சாசன நெருக்கடி மிகவும் வித்தியாசமாக கையாளப்பட்டிருக்கும். புpரதமரைப் பதவி நீக்கம் செய்தமைக்கு எதிரானவர்கள் தமக்கானதொரு பொதுமேடையை ஏற்படுத்திக்கொள்வதற்கு சமூக ஊடகங்களே களமமைத்துக்கொடுத்ததை மறந்துவிடமுடியாது என்ற கருத்தை அண்மையில் பிரபல ஊடகவியலாளர் அமந்த பெரேரா தனது கட்டுரையொன்றில் பதிவுசெய்திருந்தார்.


சமூக ஊடகங்களின் வரவு அரசாங்கங்கள் செய்தி மீது கொண்டிருந்த ஒருவிதமான ஏகபோகத்தன்மையை அன்றேல் இரும்புப்பிடியை கணிசமானளவில் தளர்த்துவதற்கு வழிகோலியது.

கடந்தாண்டு அரசியலமைப்பு நெருக்கடியைத் தொடர்ந்து மீண்டும் ரணில் விக்கிரமசிங்க பிரதமரானபோது அவரது பதவியேற்பு தொடர்பான செய்தி இந்த நாட்டிலுள்ள 21மில்லியன் மக்களுக்கு ஒரு டுவீட் செய்தி மூலமாகவே அறிவிக்கப்பட்டிருந்தது. பதவியேற்பு நிகழ்வை படம்பிடிப்பதற்கு ஊடகங்கங்களுக்கு ஜனாதிபதி தடைவிதித்த ஒரு நிலைமையை எதிர்கொண்ட ஒரே நாடாக இலங்கையே இருந்திருக்க வாய்ப்புண்டு. அங்கு பிரசன்னமாகியிருந்த அமைச்சர்களும் ஏனையதரப்பினரும் தமது திறன்கைபேசிகளை பயன்படுத்தி வெளியிலுள்ள மக்களுக்கு என்ன நடைபெறுகின்றது என்பதை தெரியப்படுத்தியிருந்தனர்.

திறன்கைபேசிகளோ அன்றேல் டுவிட்டரோ அன்றேல் இவ்விரண்டுமோ இல்லாமல் இருந்திருந்தால் நிலைமை எப்படியிருந்திருக்கும் எனக் கற்பனை செய்துபாருங்கள்.
அரசியல்சாசன நெருக்கடிக்கு முன்னரும் பின்னரும் அரசாங்கம் சமூக ஊடகங்களைத் முடக்கியதனை நாம் கண்ணுற்றுள்ளோம். திகண கலவரத்தையடுத்து 2018 மார்ச் மாதத்தில் முதலிலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களையடுத்தும் சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டிருந்தன.
சமூக ஊடகங்களை இலங்கையர்கள் மீது எங்ஙனம் தாக்கம் செலுத்துகின்றது என்பது தொடர்பான உத்தியோகபூர்வமான ஆய்வுகள் இல்லையென்ற போதிலும் இலங்கையிலுள்ள 21 மில்லியன் சனத்தொகையில் 7மில்லியன் மக்கள் அதாவது 30 வீதமானவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகின்றனர்.என்பது நிருபணமாகியுள்ளது.

ஒரு மில்லியனுக்கும் அதிகமான பேஸ்புக் ரசிகர்களைக் கொண்ட இசைக்கலைஞர் ஈராஜ் வீரரத்ன தனது பதிவுகளுடாக கோத்தபாயவிற்கு ஆதரவைச் சேர்க்கும் நடவடிக்கைகளை ஜனாதிபதித் தேர்தலின் போது முன்னெடுத்திருந்தார்.இதேபோன்று இன்ஸ்டகிராம் தளத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானர்களை ரசிகர்களாக கொண்டுள்ள இலங்கை மொடல் ஒருவர் கோத்தபாய ராஜபக்ஸ ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட போது அதற்கு ஆதரவாக பதிவிட்டிருந்தார். இன்னுமொரு பிரபல யூடிப் பயனாளர் போலி தேர்தல் பெறுபேறு உட்பட பல்வேறு தில்லுமுல்லுகள் நிறைந்த வீடியோவை வெளியிட்டபோது அதற்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான லைக்குகள் கிடைத்தன. அப்படியான ஆதரவுப்பதிவுகள் சமூக வலைத்தளங்களில் இனிவரும் காலத்திலும் அடிக்கடி வர வாய்ப்புக்கள் உள்ளன.

பொது தளம் என்பது தற்போது இவ்வாறான திருகுதாளங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளமை கவலைக்கிடமானது. வரவர இத்தகையவர்களின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக அவதானத்தில் வைத்திருப்பதும் அவர்கள் ஒழுங்குவிதிகளைப் பின்பற்றி நடக்கின்றனரா என பார்ப்பதும் கடினமாகிக்கொண்டுவருகின்றது.  எந்தவொரு தொலைக்காட்சி அலைவரிசைகளும் போலியான தேர்தல் பெறுபேறுகளை ஒளிபரப்பமாட்டாது. ஏனெனில் தெளிவான சட்டங்களும் ஒழுங்குகளும் அவர்களுக்கென முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால் யார் யூடிப் வீடியோ தொடர்பில் பொறுப்புக்கூறுவது? யூடிப் தளமானது அதில் உள்வாங்கப்படும் வீடியோக்களிலுள்ள விடயதானம் தொடர்பாக எவ்விதமான பொறுப்புக்களையும் எடுத்துக்கொள்ளாத ஒருதளமாகவே நோக்கப்படுகின்றது. இவ்வாறான விடயதானம் என்பது பிரச்சனைக்குரியதாக இருந்தாலும் கூட அதுதொடர்பாக மக்களின் அதிகரித்த முறைப்பாடுகளின் மத்தியிலேயே நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் அதற்குள்ளாக ஒரு மில்லியன் பேர் அதனைப் பார்வையிட்டுவிட்டனர் என்பது கரிசனையை ஏற்படுத்துகின்றது.

அண்மையில் கிழக்குமாகாணத்தின் பாணமயில் அமைந்துள்ள முகுது மாகா விகாரை என்ற பௌத்த ஸ்தானத்தில் புத்தர் சிலைகள் உடைக்கப்பட்டுள்ளதாக ஈராஜ் உட்பட சிலர் பெரும் பிரசாரத்தை சமூக ஊடகங்கள் மற்றும் பாரம்பரிய ஊடகங்கள் மூலம் முன்னெடுத்து சிங்கள பௌத்த மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்த முற்பட்டனர். ஆனால் பதும் கேனர் என்ற சுயாதீன ஊடகவியலாளர் அங்கு சென்று நேரில் இடத்தைப் பார்வையிட்டு அங்குள்ள பௌத்த தேரரை நேர்காணல் செய்து உண்மையை வெளிப்படுத்தியிருந்தார். அந்த சிலைகள் நிற்கும் நிலையில் வைக்கப்படுவதற்காக தற்போது தரையில் கிடப்பில் வைக்கப்பட்டுள்ளதே தவிர அவை உடைக்கப்படவில்லை என்பதே அவர் வெளிப்படுத்திய உண்மை. தேர்தல்காலத்தில் இவ்வாறான போலிச் செய்தியின் உண்மையான பக்கம் வெளிப்படுத்தப்படாவிடின் மக்களை அச்சங்களில் குளிர்காய நினைப்பவர்களுக்கு அது அனுகூலமாக அமைந்துவிடும்.

சமூக ஊடகங்களைக் கண்காணித்து பிரச்சனைக்குரிய பதிவுகள் தொடர்பாக முறைப்பாடு செய்யவுள்ளதாக இலங்கையின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் உறுதியளித்தபோதும் அவர்களால் எதனையும் பெரிதாகச் செய்யமுடியவில்லை. போலிச் செய்திகள் மற்றும் காழ்ப்புணர்வுமிக்க மோசமான பதிவுகளை கண்காணித்தல் மற்றும் அவற்றை நீக்குதல் தொடர்பாக இலங்கையின் தேர்தல்கள் ஆணைக்குழு பேஸ்புக் நிறுவனத்தினருடன் கலந்துரையாடல்களை நடத்தியபோதும் ஜனாதிபதித் தேர்தலில் பேஸ்புக் மூலமான போலிச் செய்திகளையோ வெறுப்புப் பதிவுகளையோ நீக்க முடியவில்லை. நடைமுறையில் இதனைச் செய்வது எந்தவகையிலும் இலகுவானதாக இருக்கப்போவதில்லை.  விரைவாக இவற்றை இனங்கண்டுபிடிப்பதற்கு உரிய வளங்கள் உள்ளதா என்பது முக்கியவிடயமாகும். பேஸ்புக் மற்றும் டுவிட்டர் தளங்களைப் பார்க்கும் போது ஏற்கனவே அவை ஊடகவியலாளர்கள் அரசியல் வாதிகள் மற்றும் செயற்பாட்டாளர்களுக்கு எதிரான சொற்தாக்குதல்களால் நிறைந்துகிடக்கின்றன. இந்தப்பதிவுகளுக்கு எதிராக எந்தவிதமான வினைத்திறன்மிக்க தடுப்புச் செயற்பாடுகளையும் காணமுடியவில்லை.

கடந்தகாலத்தைப் போன்று அவற்றை இனங்காண்பதும் ஆவணப்படுத்துவதும் மட்டும் போதுமானதல்ல. தற்போது அதனையும் தாண்டிய நகர்வுகளை முன்னெடுப்பதே அவசியமானதாகும்.




அருண் ஆரோக்கியநாதன்

Sunday, December 15, 2019

இலங்கையை ஆக்கிரமிக்கும் சுவரோவியங்கள்!

இலங்கையில் கடந்த நவம்பர் மாதம் 16ம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலையடுத்து ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தையடுத்து நாட்டிற்கு புதிய வடிவம் கொடுக்கின்ற செயற்திட்டங்கள் பலவும் முன்னெடுக்கப்படுகின்றன. அந்தவகையில் நாட்டின் பல பகுதிகளிலும் சுவரோவியங்களை வரையும் நடவடிக்கைகள் அரச ஊக்குவிப்புடன் தனியார் நலன் விரும்பிகள் மற்றும் தொண்டர்களால் முன்னெடுக்கப்படுகின்றன.

ஆங்கிலத்தில் Murals எனப்படும் சுவரோவியங்களை வரைவது ஓவியக் கலையை பொதுத் தளத்திற்கு எடுத்துச் செல்கின்ற முக்கிய செயற்பாடாகக்  காணப்படுகின்றது. இந்த சுவரோவியங்களின் வகைகளும் அதற்கு பயன்படுத்தப்படும் நுட்பங்களும் ஓவியருக்கு ஓவியர் வித்தியாசப்படும்.

இந்த சுவரோவியங்களுக்கு நீண்ட வரலாறு இருக்கின்றது. நாம் அறிந்த வகையில் இந்தோனேசிய குகையொன்றில் இரத்தத்தால் வரையப்பட்ட ஓவியமானது 44 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என சில தினங்களுக்கு முன்பாக கண்டறியப்பட்டுள்ளது. இதுவே இதுவரையில் கண்டறியப்பட்ட மிகவும் பழமையான சுவரோவியமாக பார்க்கப்படுகின்றது.

சுவர்களில் வரைப்படும் இவ் ஓவியங்களை சுவரோவியங்கள் என நாம் குறிப்பட்டாலும் இவை அதனையும் தாண்டிய ஆழமான செய்திகளைத்தாங்கியவையாகும். வரலாற்று விடயங்களைப் பதிவுசெய்தல் ,அரசியல் செய்திகளைத் தருதல், கேலிச் சித்திர உருவங்கள் மர்மங்கள் எனப் பலவற்றை நம் கண்முன்னே நிறுத்தவதற்காக பயன்படுத்தப்படுகின்றன. 

இவை பொலிவிழந்து காணப்படும் இடங்களை அழகுபடுத்துவதுடன் புது உற்சாகத்தை மக்கள் மத்தியிலே  ஏற்படுத்துவதற்கும் வழிகோலும் சாத்தியமுள்ளன.சிறியதொரு பகுதியை பெரிதாக பெருப்பித்துக்காண்பிப்பதற்கும் சில ஓவியர்கள் சுவரோவியங்களைப் பயன்படுத்துவதுண்டு. அத்தோடு சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுப்பதற்கும் ஊக்கியாக இவை அமையலாம். 

போகின்ற போக்கைப் பார்த்தால் அரச கட்டிடங்களை மட்டுமன்றி தனியாருக்கு சொந்தமான சுவர்களையும் இந்த சுவரோவியக் கலைஞர்களை  ஆக்கிரமித்துவிடுவார்கள் போலுள்ளதென சமூக வலைத்தளங்களில் பதிவுகளைக் காணமுடிகின்றது. தூய்மையாக வெள்ளையடிக்கப்பட்ட வர்ணம்பூசப்பட்ட சுவர்களிலும் அழகுள்ளது. அவை அந்தப் பிரதேசத்திற்கு ஒரு மேன்மைமிக்க உணர்வைதருகின்றதென்பதை இத்தகையவர்களுக்கு உணர்த்த வேண்டும் எனவும் சமூக வலைத்தளங்களிலே பதிவுகள் இடப்பட்டிருந்தன. 

அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதைப் போன்று எவ்வித வழிகாட்டல்களும் இன்றி தான்தோன்றித்தனமான முறையில் வரையப்படும் சுவரோவியங்கள் மக்கள் மத்தியில் குறிப்பாக இளைய தலைமுறையினர் மத்தியில் இனவாதத்தையும் வன்முறையையும் விதைக்கும் அபாயம் உள்ளதாக மனநல மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.




பத்துவருடங்களுக்கு முன்னர் முடிவுறுத்தப்பட்ட ஆயுதப்போரை மீண்டும் நினைவுபடுத்துவதாக இராணுவ வீரர்களின் வெற்றி பிரவாகத் தோற்றங்கள், இங்கிலாந்தில் குற்றமாக அறிவிக்கப்பட்ட பிரிகேடியர் பிரியங்கர பெர்ணான்டோவின் கழுத்துவெட்டு சமிக்ஞைத் தோற்றம், முஸ்லிம்கள் மரங்களை வெட்டி காடளிப்பில் ஈடுபடும் குற்றத்தைப் புரிவது போன்றதான தோற்றம் என இனவாதத்தையும் துவேசத்தையும் விதைக்கும் சுவரோவியங்கள் நாட்டில் இனங்களுக்கிடையிலான உறவில் விரிசலை உண்டுபண்ணுவதற்கு வழிகோலக்கூடும்.

நாட்டில் இனவாதமும் சிறுபான்மையினருக்கு எதிரான துவேசமும் எந்தளவிற்கு வேரூன்றியிருக்கின்றன என்பதற்கான சான்றுகளில் ஒன்றாகவே இப்படியான சுவரோவியங்களையும் பார்க்கவேண்டியிருக்கின்றது.  

 இலங்கையில் மூன்று தசாப்தகாலமாக நடைபெற்ற ஆயுதப் போர் மிலேச்சத்தனமாக முடிவிற்கு கொண்டுவரப்பட்டு பத்தாண்டுகள் ஆனபோதும் அதனால் சமூகங்களிடையே ஏற்படுத்தப்பட்ட காயங்களும் காழ்ப்புணர்வுகளும் உரிய உளவளச் சிகிச்சை மூலமோ இழப்பீடுகள் போன்ற ஏனைய ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மூலமோ ஆற்றுப்படுத்தப்படவில்லை. போரைத் தாண்டி லஞ்ச ஊழல் மோசடிக் குற்றங்கள் பாலியல் வல்லுறவு கொலை கொள்ளைக் குற்றங்களால் நிறைந்துள்ள இலங்கையில்  சுவரோவியங்களில் மட்டும் நல்லவற்றை எதிர்பார்ப்பது எமது மடமையே என நினைத்துகொள்ளலாம். 

கௌவரத்துடன் பல்லினங்கள் வாழுகின்ற அமைதியும் சுபீட்சமும் நின்றுநிலைக்கின்ற நாடாக இந்த நாடு மாற்றம் பெறவேண்டும் என்று ஆட்சியாளர்கள் விரும்பினால் இந்த சுவரோவியங்களில் கூட சரியான நெறிப்படுத்தல்களை வழங்கி ,சுவரோவியங்களை நகரங்களில் ஒரு சில பகுதிகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தி மக்களுக்கு மத்தியில் நற்சிந்தனைகளை விதைக்கும் வகையில் மாற்றத்தை உண்டுபண்ணமுடியும்.