போலிச் செய்திகள் Fake News இன்று தேர்தல் காலத்தில் மட்டுமன்றி மக்களின் அன்றாட வாழ்வியலுடனும் இணைந்து விட்ட நிலையில் போலிச் செய்திகளை இனங்காண்பது எப்படி என்பது இன்று நமக்கு முன்பாக உள்ள சவாலாகும். குறிப்பாக சமூக வலைத்தளங்களில் போலிச் செய்திகளைப் பரப்புவது நாளுக்கு நாள் வளர்ந்து வரும் அச்சுறுத்தலாகவுள்ளது. போலிச் செய்திகள் பரவுவதை நாம் சாதாரணமாகக் கடந்துபோகவும் முடியாத நிலை காணப்படுகின்றது. இன்றுள்ள உயர் தொழில்நுட்பங்கள் மூலமாக புகைப்படங்கள் காணொளிகளை உண்மையேது பொய்யேது என்று தெரியாத அளவிற்கு மிகவும் தத்வரூபமாக வடிவமைக்கக்கூடிய நிலை காணப்படுவதால் போலிச் செய்திகள் தொடர்பாக நாம் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும்.
போலிச் செய்திகள் பரவுவதை அதனால் நாம் ஏமாற்றத்துக்குள்ளாவதைத் தடுப்பதற்காக சில வழிகாட்டுதல்களை உங்களுக்கு இங்கு தருகின்றேன்.
1. தலைப்புக்களை மாத்திரம் வாசிப்பதோடு நிறுத்தாதீர்
பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் வாசகர்கள் நாம் சமூக வலைத்தளத்தில் காணும் ஒரு செய்தி அன்றேல் கட்டுரையின் தலைப்பையோ அன்றேல் அதன் முதலாவது பந்தியையோ மாத்திரம் வாசித்து விட்டு உடனே அதனைப் Share பண்ண தீர்மானிப்பது, போலிச் செய்திகள் பரவுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும். போலிச் செய்திகளை பரப்புபவர்கள் சில நேரத்தில் ஆரம்பத்தில் சரியாக தொடங்கிவிட்டு தமது செய்தி அன்றேல் கட்டுரையின் இதர பகுதிகளை பொய்யான தகவல்களால் நிரப்பக்கூடும்.
போலியான செய்திக் கோவைகள் தடித்தெழுத்துக்களையும் ஆச்சரியக் குறிகளையும் உள்ளடக்கிய கவர்ச்சிகரமான தலைப்புக்களை கொண்டிருக்கும் என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
தலைப்புக்கள் சொல்லும் விடயங்கள் நம்ப முடியாதுள்ளதே என உங்கள் உள்ளுணர்வு கூறுமிடத்து அவை உண்மையில் போலியான செய்திகளாக இருப்பதற்கே இடமுண்டு. சில சந்தர்ப்பங்களில் சமூக வலைத்தளத்தில் வரும் செய்திகள் அன்றேல் கட்டுரைகளை கிளிக் பண்ணும் போது அதில் குறிப்பிடப்பட்ட தலைப்பிற்கும் செய்திக்கும் எவ்விதமான தொடர்புமில்லை அன்றேல் தரவுகளை உறுதிப்படுத்துவதற்கு எவ்விதமான மூல ஆதாரமும் இல்லை என்பது புலனாகும்.
2. செய்தித்தளத்தின் மூலத்தை ஆராய்தல்
பரிச்சயமில்லாத இணையத்தளம் அன்றேல் செய்தித்தளம் ஒன்றிலிருந்து செய்தி வெளிவந்திருந்தால் அவர்களது பக்கத்திற்கு சென்று ' About' பகுதியில் செய்தித்தளம்/ அமைப்பு தொடர்பான மேலதீக விபரங்களைப் பெறுங்கள். பரிச்சயமில்லாத செய்தித்தளங்கள் கண்ட இடமெல்லாம் விளம்பரங்களை தாங்கியிருப்பதுடன் பெரும் எழுத்துக்களில் தலைப்புக்களைக் கொண்டிருப்பதுண்டு. இது மக்களின் அவதானத்தை உடனே ஈர்க்கும் நோக்கம் கொண்டதாகும். அந்த இணையத்தளத்தின் பெயரை Google கூகுள் பண்ணிப் பார்ப்பதன் மூலமும் அதில் வெளியான ஏனைய செய்திகள் கட்டுரைகளை ஆராய்வதன் மூலமும் அந்த தளம் நம்பகரமானதா என்பதை உறுதிசெய்ய முடியும்.
3. யார் எழுதியவர் என்ற ஆதாரங்களை சரிபாருங்கள்
செய்தியைத் தொகுத்து எழுதியவர் தந்துள்ள செய்தி மூலங்களை சரிபார்த்து அவை உண்மையானவை என்பதை உறுதி செய்யுங்கள். செய்தியை எழுதியவருடைய பெயர் பல உண்மைகளை வெளிக்கொண்டுவர உதவும். எழுதியவரின் பழைய ஆக்கங்களை பார்ப்பதனுடாக அவர் நம்பத்தகுந்தவரா அன்றேல் போலிகளின் புகலிடமா என்பது துலங்கும். குறித்த செய்தி நம்பத்தகுந்த துல்லியமான தகவல்களை வழங்குவதில் நன்மதிப்பைப் பெற்ற மூலம் ஒன்றினால் எழுதப்பட்டுள்ளதை உறுதி செய்யுங்கள். ஆதாரங்கள் போதாமை அல்லது பெயர் குறிப்பிடப்படாத வல்லுனர்களை சார்ந்திருக்கின்றமை என்பன குறித்த செய்தி பொய்யானது என்பதை வெளிப்படுத்தும்.
4. தரப்பட்டுள்ள Link லிங்கை கவனமாக அவதானியுங்கள்
ஒரு செய்தி அன்றேல் கட்டுரையில் குறைவாக Links லிங் காணப்பட்டால் அது அந்தச் செய்தி போலியாக இருக்கக்கூடும் என்பதற்கான அபாயச் சமிக்ஞையாகும். சில போலித்தளக்களும் links லிங்களை அதிகமாக தரக்கூடும். ஆனால் அவற்றை ஆராய்ந்தால் உண்மை வெளிப்படும்.
போலியான அல்லது ஒரே மாதிரியாகத் தோற்றமளிக்கும் ஒரு link லிங் தவறான செய்தி ஒன்றின் எச்சரிக்கை அடையாளமாகும். அநேகமான போலியான செய்தித் தளங்கள் நேர்மையான செய்தி ஊடகங்களின் செய்திகளைப் பிரதிசெய்து அவற்றில் சிறுசிறு மாற்றங்களை ஏற்படுத்தி மீளவும் வழங்குகின்றன. நீங்கள் தளத்திற்கு சென்று குறித்த Linkகை உறுதி செய்யப்பட்டுள்ள மூலங்களின் செய்திகளுடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியும். நீங்கள் சந்தேகிக்கும் ஒரு செய்தித்தளத்தின் URL பெயர்களை ஆராய்ந்துபார்க்கவேண்டும்.
5. போட்டோக்களை மேற்கோள் வசனங்களை ஆராயுங்கள்
போலிச் செய்திகளை தயாரிப்பவர்கள் போலியான மேற்கோள் வசனங்களை உருவாக்குவதில் வல்லவர்கள். தாம் தயாரித்த போலி வசனத்தை பிரபலமான ஒருவர் சொன்னதைப் போன்று திணித்துவிடுவார்கள்.
போலியான செய்திக் கோவைகள் அநேகமாக தந்திரமாகப் பயன்படுத்தப்பட்டுள்ள படங்கள் அல்லது வீடியோக்களை உள்ளக்கியதாக இருக்கும். சில நேரங்களில் போட்டோ உண்மையானதான இருப்பினும் அது சார்ந்த விடயங்களில் இருந்து நீக்கப்பட்ட ஒன்றாக இருக்கலாம். போட்டோ அல்லது படம் தொடர்பாக சேர்ச் செய்வதன் மூலம் அதன் மூலத்தை உறுதிப்படுத்த முடியும். கூகுளில் Reverse Image செய்வதன் மூலம் அன்றேல் Tineye மூலம் இதனை உறுதி செய்யலாம்
6. திகதி ,நேரம் மற்றும் எழுத்துப் பிழை வடிவங்களை சரிபாருங்கள்
தவறான செய்திகள் சற்றும் தொடர்பற்ற திகதிகளைக் கொண்டமைந்திருக்கும் அல்லது மாற்றம் செய்யப்பட்ட நிகழ்ச்சிகளைக் கொண்டிருக்கும். போலிச் செய்திகளைப் பரப்புவோர் செய்யும் இன்னுமொரு பொதுவான விடயம் பழைய கட்டுரைகள் அன்றேல் நிகழ்ச்சிகளை மக்களை நம்பச் செய்யும் வகையில் சமீபத்தில் நடந்ததைப் போன்ற தோற்றப்பாட்டை கொடுப்பதாகும். அந்தவகையில் செய்தி பிரசுரிக்கப்பட்ட நேரம் மற்றும் திகதியை சரிபார்ப்பது போலிச் செய்திகளால் ஏமாற்றப்படாமல் தடுக்க உதவும். சில நேரங்களில் எப்போது குறிப்பிட்ட நிகழ்ச்சி நடந்தது என்பதை அறிவது நேரமெடுக்கும் விடயமாக இருக்கும் ஆனால் கட்டுரையின் பிரசுர காலம் தற்போது நடந்தது போன்று இருக்கும். அப்போது அதில் தரப்பட்டுள்ள லிங்களை கிளிக் பண்ணி வாசித்து இது உண்மையில் நடந்ததா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
அத்தோடு அநேகமான போலிச் செய்தித் தளங்கள் எழுத்துப் பிழைகள் அல்லது சீரற்ற வடிவங்களைக் கொண்டிருக்கும். இவ்வாறான விடயங்களைக் கண்டால் அவதானமாக இருங்கள்.
7. ஏனைய செய்திதளங்களின் அறிக்கைகளுடன் ஒப்பிடுங்கள்
ஒரு செய்தி சந்தேகத்திற்கிடமாக இருந்தால் அன்றேல் முக்கியமான பெரும் செய்தியாக இருந்தால் அந்தச் செய்தியை ஏனைய செய்தித்தளங்கள் பிரசுரித்திருக்கின்றனவா என ஆராயுங்கள். வேறெந்த செய்தித்தளமும் குறித்த செய்தியை பிரசுரித்திருக்காவிடின் அநேகமாக அந்தச் செய்தி போலியானதாக இருக்க வாய்ப்புண்டு. ஒன்றுக்கு மேற்பட்ட செய்தித்தளங்கள் குறித்த ஒரு செய்தியை வழங்கும் போது அச்செய்தி உண்மையானதாக இருப்பதற்கான சாத்தியம் அதிகமாகும்.
8. செய்தி நகைச்சுவையானதா? கிண்டலா?
சில நேரங்களில் போலியான செய்திக் கோவைகளை நகைச்சுவை, கிண்டல் அல்லது கேலி என்பவற்றிலிருந்து வேறுபடுத்திப் பார்ப்பதற்கு சிரமமாக இருக்கும் குறித்த தளமானது வேடிக்கை விடயங்களைப் பகிர்தல் தொடர்பாக அறியப்பட்ட ஒன்றாக என்பதை குறித்த செய்திக் கோவையின் விபரங்கள் மற்றும் தொனி என்பன வேடிக்கையாக அமைந்துள்ளனவா என்பதையும் சரி பாருங்கள். Newscurry நியுஸ் கரி என்ற ஆங்கில இணையத்தளம் இவ்வாறான நகைச்சுவை கிண்டல் தளமாக காணப்படுகின்றது.
9. சுய விருப்பை தாண்டி செய்தியைப் பாருங்கள்
தேர்தல் நாம் விரும்பும் வேட்பாளர் வெற்றி பெறவேண்டும் விரும்பும் கட்சி வெற்றிபெறவேண்டும் என நினைப்பவர்கள் அதனை சார்ந்த செய்திகள் வரும்போது தரவுகளை ஆராயாது போலிச் செய்திகளையும் உண்மையென எண்ணும் போக்கு காணப்படுகின்றது. போலிச் செய்திகள் மக்களின் உணர்வுகளோடு ஒன்றியதாக அன்றேல் உணர்வுகளை மேலிடச் செய்வதாக வடிவமைக்கப்படுகின்றன. ஒரு தரப்பின் வாதத்தை முன்னிறுத்துவதாக அன்றேல் முன்கூட்டிக் காணப்பட்ட அரசியல், இன, மத நம்பிக்கைகளை மீண்டுமாக நிலைநாட்டும் வண்ணம் தந்திரமாக போலிச் செய்திகளை தயாரிப்பவர்கள் அவற்றை வடிவமைப்பதுண்டு. எனவே எமக்குள்ள தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களைத் தாண்டி செய்திகளை உறுதிப்படுத்தும் போது உண்மைத் தரவுகளையும் அர்த்தப்படுத்தல்களையும் அடிப்படையாகக் கொண்டு அவற்றை அணுகவேண்டும்.
10. Share செய்யுமுன் சிந்தியுங்கள்
போலிச் செய்தித்தளங்கள் அதனை வாசிப்பவர்கள் தமது போலிகளை மற்றவர்களுடன் Share செய்வதில் தங்கியுள்ளன. எனவே நீங்கள் வாசிக்கும் செய்திக் கோவைகள் தொடர்பாக மிகுந்த அவதானத்தோடு இருங்கள் நம்பத்தகுந்தது என நீங்கள் நிச்சயமாக நினைக்கும் செய்திகளை மாத்திரம் Share செய்யுங்கள்.
அருண் ஆரோக்கியநாதன்