Thursday, March 18, 2021

ஜெனிவாவில் இலங்கையை இந்தியா ஆதரிக்கும் என வெளிவிவகார செயலாளர் கூறுவது உண்மையா?

 


ஜெனிவாவில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46வது கூட்டத்தொடரில் இலங்கை மீதான தீர்மானம் தொடர்பான வாக்கெடுப்பு நெருங்கிவரும் நிலையில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பது பலரதும் கேள்வியாக இருக்கின்றது. ஆனாலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் முன்னர் இலங்கையின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்கு இந்தியா உறுதிமொழியளித்துள்ளதாக இலங்கையின் வெளிவிவகார செயலாளர் அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

தேசிய அபிவிருத்திக்கான ஊடக மத்திய நிலையத்தால் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த 3வது கலந்துரையாடலின் போதே அவர் இந்தத்தகவலை வெளியிட்டுள்ளார்.

இந்தியாவின் நிலைப்பாட்டை இலங்கை பெரிதும் பாராட்டுவதாக குறிப்பிட்டுள்ள வெளிவிவகார செயலாளர் இறையாண்மையை மதிக்கின்ற எந்தவொரு அமைப்புடன் இணைந்து பணியாற்றுவதற்கு தயாராக உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஜெனிவாவில் இலங்கையை ஆதரிக்கும் நிலைப்பாட்டை இந்தியா உத்தியோகபூர்வமாக எடுத்துவிட்டதா?என இந்திய வெளிவிவகார அமைச்சுக்கு நெருக்கமான வட்டாரத்தில் வினவியபோது இந்தியா இன்னமும் உத்தியோகபூர்வமான நிலைப்பாட்டை எடுக்கவில்லை எனக் கூறப்பட்டது. எங்கிருந்து இலங்கை வெளிவிவகார செயலாளர் இந்தியாவின் ஆதரவு என்ற உத்தரவாதத்தைப் பெற்றார் என்பது வியப்பாக உள்ளதெனவும் அவ்வட்டாரம் மேலும் தெரிவித்தது.

Wednesday, March 17, 2021

அஸாத் சாலிக்கும் ஈஸ்டர் தாக்குதலுக்கும் தொடர்பு? கைதுசெய்யப்பட்டமைக்கு அதுவே காரணம் என்கிறார் அமைச்சர் சரத் வீரசேகர

 


ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்பு இருப்பதால் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி கைது செய்யப்பட்டதாக அமைச்சர் சரத் வீரசேக்கர தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட அசாத் சாலி 3 நாட்கள் தடுத்து வைக்கும் உத்தரவின் பேரில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினராரல் விசாரிக்கப்படுகின்றார்.

சட்ட மாஅதிபரின் பணிப்புரைக்கமைய கொள்ளுபிடி பகுதியில் வைத்து அசாத் சாலி கைது செய்யப்பட்டார். தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி நாட்டின் சட்டங்கள் தொடர்பாக சர்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு வந்தார். அக்கூற்று தொடர்பா பல தரப்பினரும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

அசாத் சாலி பயணித்த மோட்டார் காரில் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்றும் ரவைகளும் பொலிசாரினால் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ் மாஅதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதேநேரம் அமைச்சர் கலாநிதி சரத் வீரசேக்கர கருத்து வெளியிடுகையில் ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்பு இருப்பதற்கான விடயங்கள் தெரியவந்தமையினால் அசாத் சாலி கைது செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

1996 உலகக்கிண்ண வெற்றியின் பின்னான 25 ஆண்டுகளில் இனங்களுக்கிடையிலான ஒற்றுமையில் ஆற்றிய வகிபாகம் பற்றிய ஒரு பார்வை

 



1996ம் ஆண்டு உலகக்கிண்ண கிரிக்கட் போட்டியில் சம்பியன் பட்டம் வென்ற இலங்கை அணி அதன் 25வது வருட நிறைவை  இன்று கொண்டாடுகின்றது. இலங்கை நாட்டின் வரலாற்றில் முக்கியமான தருணமாக இந்த உலகக்கிண்ண வெற்றி பார்க்கப்படுவதில் எவ்வித சந்தேத்திற்கும் இடமில்லை. 

இனமுரண்பாடுகளால் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கின்ற இலங்கையில் அனைவரையும் பலவித வேற்றுமைகளுக்கு மத்தியில்  ஒன்றிணைக்கும் அரிய விடயமாக கிரிக்கட் போட்டிகள் பல சந்தர்ப்பங்களில் அமைந்திருந்ததை மறுக்கமுடியாது

இலங்கையின் ஆயுதப்படையினருடனும் பதவியில் இருந்த அரசாங்கங்களுடன் மூர்க்கமாக மோதிக்கொண்ட விடுதலைப்புலிகள் கூட இலங்கை கிரிக்கட் அணியின் தீவிர ரசிகர்களாக இருந்திருக்கின்றனர் என்பதை நான் இரு தடவைகள் நேரிலேயே கண்ணுற்றிருக்கின்றேன்.  இலங்கையில்  நீண்டநாட்கள் தொடர்ச்சியாக போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்த காலப்பகுதியான 2002ம் ஆண்டு முதல் 2006 ஆண்டு காலப்பகுதியில் சக்தி டீவியில் நான் பணியாற்றிய காலப்பகுதி 2005ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் நிறைவிற்கு வந்துவிட்டது. சக்தி டீவிக்கு செய்திசேகரிப்பதற்காக  நான்கு தடவைகள் வன்னிக்கு செல்லக்கிடைத்தது. அப்படியாக சென்ற ஒரு தருணத்தில் கிளிநொச்சியில் சமாதான செயலகம் அமைந்துள்ள  பகுதிக்கு அருகே விடுதலைப்புலிகளின் அங்கத்தவர்கள் இலங்கை கிரிக்கட் அணி வேறு சர்தேச அணியொன்றுடன் மோதும் போட்டியைப் பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் இலங்கை அணியினர் சிறப்பாக செயற்படும் சந்தர்ப்பங்களின் மகிழ்வுணர்வை வெளிப்படுத்தியதை அவதானித்தேன். அப்போது நீங்கள் இலங்கைப் படைகளுக்கு எதிராக மோதுகின்றீர்கள் . ஆனால் இலங்கை கிரிக்கட் அணியை ரசிக்கின்றீர்கள் என்பது வெளிபடையாக தெரிகின்றது.  அதற்கு அவர்கள் கிரிக்கட்டை அரசியலுக்கு அப்பாற்பட்டதாக வெறுமனே விளையாட்டாக நோக்கியமையே காரணமாக இருந்தது என்பதை அவர்களுடனான கலந்துரையாடல்களின் போது உணர்ந்துகொண்டேன். 



இதேவிதமான இன்னுமொரு தடவையும்  நேரில் அவதானித்திருக்கின்றேன். 2004ம் ஆண்டு  சுனாமிக்கு பின்னர் 2005ம் ஆண்டு மே மாதம் தொடக்கம் 2006ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை வேர்லட் விஷன் நிறுவனத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான சிறுவர் பாதுகாப்பு அதிகாரியாக கடமையாற்றியபோதே இது நிகழ்ந்தது.  கொழும்பில் இருந்து மட்டக்களப்பிற்கு சிறுவர்களது நலன்களை கவனிக்கும் விடயத்திற்கு பொறுப்பானவராக சென்றதால் விடுதலைப்புலிகளின் கடிதத்தலைப்பில் ஒரு அழைப்பு வந்தது. இராணுவக் கட்டுப்பாடற்ற வெல்லாவெளிப்பிரதேசத்திற்கு சென்று அவர்களைச் சந்திக்க வேண்டும்.  யார் எதைப் போட்டுக்கொடுத்தார்களோ என்ற நினைப்போடு அவர்களது பிரதேசத்திற்கு சென்றேன். அப்போது நான் பார்த்த காட்சி  முன்னர் வன்னியில்பார்த்ததை நினைவிற்கு கொண்டுவந்தது. இலங்கை அணிவிளையாடும் கிரிக்கட் போட்டியை அவர்கள் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர். அப்போது உடனே அவர்களிடம் என்ன இலங்கை அணியின் போட்டியைப் பார்க்கின்றீர்கள் ரசிகர்கின்றீர்கள் ஆதரிக்கின்றீர்கள் என ஆர்வத்தோடு கேள்வி எழுப்பினேன்.  அவர்களும் சிரித்துக்கொண்டு இலங்கை அணியை ரசிப்பதை ஏற்றுக்கொண்டனர்.  போர் நிறுத்தமாக இருந்ததால் அவர்கள் இலங்கை அணியை ஆதரித்து ரசித்தார்களா இல்லை ஆரம்பமுதலே அப்படித்தானா என்பது எனக்குள் இருந்த கேள்வியாக இருந்தது. 

இலங்கை சுதந்திரம் பெற்ற காலப்பகுதி முதலாக சிறுபான்மை மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டும் நசுக்கப்பட்டும் வருகின்ற காரணத்தால் இலங்கை அணி 1996ல் ஈட்டிய சரித்திர வெற்றியை அனைவரும் ஒருமித்து கொண்டாடினரா என்பது கேள்விக்குரியதாகும். அதிலும் விளையாட்டு என்பது அரசியலுக்கு அப்பாற்பட்டது எனக் கூறப்படுகின்ற காரணத்தால் அரசியலைத் தாண்டி இலங்கையின் கிரிக்கட் வெற்றியை சிறுபான்மையின மக்கள் ஒட்டுமொத்தமாக கொண்டாடினரா எனக் கேட்டால் அதற்குப் பதில் இல்லை என்பதாகவே வரும். சுதந்திரம் கிடைத்தது முதலான காலப்பகுதியில் இலங்கையில் வாழும் மக்கள் அனைவரும் இலங்கையரே என்ற பொது அடையாளத்தை வளர்ப்பதற்கு ஆட்சியாளர்கள் தவறியமையும் தமது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக மக்களை இன ரீதியாக மத ரீதியாக மொழி ரீதியாக பிரித்தாண்டமையுமே இதற்கான காரணங்களாகும். 


தேசிய அணி வெற்றி பெற்ற சந்தர்ப்பங்களில் சிறுபான்மை மக்கள் ஆதரித்தார்கள் என்பதற்காகவோ சிறுபான்மை மக்களது பிரதிநிதிகள் தேசிய அணியில் இடம்பிடித்தார்கள் என்பதற்காகவோ தேசிய அணி மீது தீவிர பற்றுடைய சிறுபான்மையினத்தைச் சேர்ந்த மக்களும் உள்ளனர் என்பதற்காகவோ அரசியல் ரீதியாக கட்டவிழ்த்துவிடப்படும் பாரபட்சங்களும் அநீதிகளும் ஒடுக்குமுறைகளும் இல்லாமல் போகுமென்று எவரேனும் நம்பினால் அவர்கள் யதார்த்தத்தை உணராதவர்களாகவே கருதப்படவேண்டும். தேசிய அணிக்கு ஆதரவு என்று இரத்தத்திலேயே உடலில் எழுதிவைத்தாலும் இங்குள்ள அரசியல்வாதிகளும் இனவாதிகளும் தமக்கு தேவையான நேரத்தில் இனவாதத்தையும் மதவாதத்தையும் ஏவிவிட வல்லவர்கள் என்பதை உணர நீண்ட நாட்கள் பின்னோக்கிநகர வேண்டியதில்லை. 

25 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கை அணி உலக சம்பியன் ஆனபோது அவ்வணியில் முத்தையா முரளிதரன் இடம்பெற்றிருந்ததை சிறுபான்மையினர் குறிப்பாக தமிழ் மக்கள்  மகிழ்வுடன் வரவேற்றிருந்தனர் . அதனைக் கொண்டாடியவர்களும் உண்டு. ஆனால் அதற்குப்பின்னர் வந்த 25 ஆண்டு காலப்பகுதியில் சிறுபான்மை இனத்தவரில் இருந்து எத்தனை பேருக்கு இலங்கை அணியில் வாய்ப்புக்கிடைத்துள்ளது என்றால் ஏமாற்றமே மிகுதியாகும்.  முத்தையா முரளிதரன் தவிர இலங்கை அணியில் ரஸல் ஆர்னோல்ட் 1997ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை  பத்தாண்டுகள் இடம்பெற்றிருந்தார். திலக்கரத்ன முதியான்ஸலாகே தில்ஷான் அன்றேல் திலக்கரத்ன தில்ஷான் என இன்று அறியப்படும் தில்ஷான் 1999ம் ஆண்டுமுதல் 2016ம் ஆண்டு வரை இலங்கை  தேசிய அணியில் இடம்பெற்றிருந்தார். தில்ஷானின்  ஆரம்ப பெயர் துவான் மொஹமட் தில்ஷான் என்றபோதும் அவர் தன்னை ஒரு சிறுபான்மை இனத்தவராக அன்றி தாயாரின் பெயர் வழியே பெரும்பான்மை இனத்தவராக  அடையாளப்படுத்தப்படுகின்றார். அவரைத்தவிர சுராஜ் ரன்தீவ் இலங்கை அணிக்காக 2012 முதல் 2016 வரை விளையாடியிருந்தார். இவரது ஆரம்ப பெயர் மொஹமட் மர்சூக் மொஹமட் சுராஜ் என்பதாகும். இவரும் ஒரு சிறுபான்மை இனத்தவராக அன்றி  பெரும்பான்மை இனத்தவராக  அடையாளப்படுத்தப்படுகின்றார்.

இவர்களைத்தவிர 2004 ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இலங்கைத் தேசிய அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி சகல துறை வீரர் பர்வீஸ் மஹ்ருப் பல போட்டிகளில் விளையாடியிருந்தார். நவீட் நவாஸ் ஒரு டெஸ்ட் போட்டியில் இலங்கைக்காக பங்களாதேஷிற்கு எதிராக 2002ல் ஒரு போட்டியில் விளையாடி 99 ஓட்டங்களை எடுத்த போதும் அதன் பின்னர் ஒருபோட்டியில் கூட விளையாடவில்லை.

2008ம் ஆண்டு முதல் இலங்கை தேசிய அணிக்காக விளையாடிவரும் அஞ்சலோ மத்தியுஸின் தந்தை ட்ரெவர் மத்தியூஸ் தமிழர் என்றபோதிலும் அஞ்சலோ தன்னை தமிழாக அடையாளம் காண்பிப்பதில்லை. இதற்கு அவர் மருதானை புனித சூசையப்பர் கல்லூரியில் சிங்கள மொழியில் கல்விகற்றமை காரணமாக இருக்கக்கூடும். 

இவர்களைத்தவிர 1996ம் ஆண்டு உலகக்கிண்ணத்திற்கு பின்னர் வந்த காலப்பகுதியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய தமிழ் முஸ்லிம் இனங்களைச் சேர்ந்தவர்கள் என்று பார்த்தால் பிரதீப் ஜெயப்பிரகாஷ்தரன் மட்டும்தான் . ரோயல் கல்லூரியின் பழைய மாணவரான பிரதீப் 2005ம் ஆண்டில் ஒரே ஒரு சர்வதேச ஒருநாள் போட்டியில் பங்கேற்று ஒரு விக்கட்டை கைப்பற்றியிருந்தார். அவரைத்தவிர  சர்வதேச போட்டிகளை நெருங்கிவந்த சிறுபான்மை இனத்தவர் என்று பார்த்தால் 2019ம் ஆண்டில் தென் ஆபிரிக்க அணிக்கெதிரான இலங்கை டெஸ்ற் குழாமில் இடம்பிடித்த மொஹமட் சிராஸைக்குறிப்பிடலாம். 

ஏறத்தாழ 22 மில்லியன் சனத்தொகையைக் கொண்ட இலங்கையில் சிறுபான்மை மக்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 25 சதவீதத்திற்கு அதிகமாக இருப்பினும் இலங்கை தேசிய கிரிக்கட் அணியில் அவர்களது பிரசன்னம் என்பது கடந்த 25 வருட காலத்தில் மிகவும் குறைவாக இருப்பதைப் புரிந்துகொள்ளமுடியும். ஆனால் ஏறத்தாழ 1450 மில்லியன் சனத்தொகையைக் கொண்ட இந்தியாவில் கடந்த 25 ஆண்டுகாலப்பகுதியில் எத்தனை சிறுபான்மை இனத்தவர்கள் தேசிய கிரிக்கட் அணியில் இடம்பெற்றிருக்கின்றார்கள் எனப்பார்க்கின்றபோது நாம் எங்கிருக்கின்றோம் என்பது புலனாகும். மொஹமட் அஸாருதீன் தொடக்கம்  ஷஹீர் கான், முனாப்  பட்டேல், மொஹமட் ஷமி ,மொஹமட் சிராஜ், லக்ஸ்மிபதி பாலாஜி,  சுப்ரமணியம் பத்ரினாத் ,ஹேமங் பதானி ,ரவிச்சந்திரன் அஷ்வின் ரி.நடராஜன் ,முரளி கார்த்திக் ,முரளி விஜய், வொஷிங்டன் சுந்தர் , சஞ்சு சம்ஸன், ஸ்ரீசாந்த் என எண்ணிலடங்கா வீரர்கள் நாம் பார்க்கும் காலத்திலேயே விளையாடியிருக்கிறார்கள். தற்போதைய இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு வீரர் எனினும் இடம்பெறுவதைக் காணமுடியும். இது எதனைக் காண்பிக்கின்றது. 



தேசிய அணியில் பங்கேற்கும் தகுதி  இலங்கையிலுள்ள தமிழ் முஸ்லிம் வீரர்களுக்கு இல்லை என்பதையா அன்றேல் அவர்கள் பங்கேற்பதற்கு தேவையான வசதி வாய்ப்புக்கள் ஏற்படுத்திக்கொடுக்கப்படாமையையா இது காண்பிக்கின்றது . போதிய வசதிகள் இல்லாத வட கிழக்கு பகுதிகளில் வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்படவேண்டும் . அதுமட்டுமன்றி வீரர்கள் முதற்தர தேசிய மட்ட போட்டிகளில் பங்கேற்பதற்கான வாய்ப்புக்கள் ஏற்படுத்திக்கொடுக்கப்படவேண்டும். கடந்தாண்டு வடக்கைச்சேர்ந்த விஜயகாந்த் வியாஸ்காந்த் லங்கா பிரிமியர் லீக் போட்டிகளில் ஜெவ்னா ஸ்டாலியன்ஸ் அணிக்காக விளையாடியபோது அதற்கு தமிழ் மக்கள் மத்தியில் இருந்து பெரும் வரவேற்புக் கிடைத்தது. வாய்ப்புக்கள் உருவாக்கப்படும் போதே இப்படியான பங்கேற்பு சாத்தியமானது. இன்னமும் பல வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்படும் போதே இன்னமும் அதிகமானவர்கள் தேசிய அளவிலும் அதனைத் தாண்டி சர்வதேச அளவிலும் பிரகாசிக்க முடியும். அனைவரும் விளையாடலாம் என்பது சமத்துவம் .ஆனால் அனைவரும் விளையாடும் வகையில் வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதே சிறுபான்மையினர் மேலும் அதிகமாக தேசிய அணிக்கு தெரிவாக வழிகோலும் . 





சனத்தொகையில் எண்ணிக்கைக்கு சமனாக தமக்கு தேசிய அணியில் பிரதிநிதித்துவம் கிடைக்கவேண்டும் என்பது இலங்கையிலுள்ள சிறுபான்மை மக்களின் எண்ணமல்ல. மாறாக தமது பிரதிநிதிகளும் கூட திறமையை வெளிப்படுத்தி தேசிய அணிக்கு தெரிவாகக்கூடிய வாய்ப்புக்கள் உருவாக்கப்படவேண்டும் என்பதே அவர்களது உள்ளுணர்வாகும். 


ஆக்கம்: அருண் ஆரோக்கியநாதர்.

Tuesday, March 16, 2021

அஸ்ரா செனேக்கா தடுப்பூசி தொடர்பில் சந்தேகம் கொள்ள தேவையில்லை : உலக சுகாதார அமைப்பு

 


அஸ்ரா செனேக்கா astrazeneca தடுப்பூசி தொடர்பில் சந்தேகம் கொள்ள தேவையில்லையென உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. தடுப்பூசியினை தொடர்ந்தும் செலுத்துமாறு அவ்வமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

ஜேர்மன், பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஸ்பெய்ன் உள்ளிட்ட சில நாடுகள் அஸ்ரா செனேக்கா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையினை தற்காலிகமாக நிறுத்தியுள்ள நிலையிலையே உலக சுகாதார அமைப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தடுப்பூசி செலுதிக்கொள்ளப்பட்டதன் பின்னர் இரத்தம் உறைவதாக கருத்துக்கள் வெளியானதை அடுத்து அந்நாடுகள் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையினை இடைநிறுத்தியுள்ளன.



எவ்வாறெனினும் இரத்தம் உறைவதற்கும் இத்தடுப்பூசிக்கும் தொடர்பேதும் இருப்பதாக இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லையென உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர் சிலருக்கு இரத்த உறைவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும் தடுப்பூசி வழங்கலை இரத்து செய்யுமளவுக்கு ஆதாரங்கள் கிடைக்கவில்லையென உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

Monday, March 15, 2021

கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கையில் சீனாவை நெருங்கும் இலங்கை

 


இலங்கையில் இதுவரை காலத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 88,000த்தைக் கடந்துள்ளது. உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கை 87வது இடத்தில் உள்ளது.

Covid-19 தொற்றுக்குள்ளான 178 பேர் இன்று (15) அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதனையடுத்தே மொத்த தொற்றாளர்கள் எண்ணிக்கை 88,000க் கடந்தது.

இதேவிதமாக கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை நாளாந்த பதிவாகும் இடத்து அடுத்து சில நாட்களுக்குள் இலங்கை சீனாவை முந்திவிட வாய்ப்புள்ளது.

தற்போது 90,049 கொரோனா தொற்றாளர்களுடன் சீனா உலகளவில் 86வது இடத்தில் உள்ளது. சீனா உண்மையான தரவுகளை மறைக்கின்றது அங்கே பதிவான கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கும் என்று கருத்துக்கள் வெளியானாலும் உலகிலுள்ள அங்கிகரிக்கப்பட்ட கொரோனா பற்றிய இணையத்தளங்களின் விபரங்களுக்கு அமைவாக இதுவரை 90,049 கொரோனா தொற்றாளர்களே பதிவாகியிருப்பதாக கூறப்பட்டிருப்பதால் அதனையே கருத்தில் கொள்ளவேண்டியுள்ளது. இதனடிப்படையில் இலங்கை இன்னமும் சில நாட்களில் சீனாவின் எண்ணிக்கையை முந்தினாலும் ஆச்சரிப்படுவதற்கில்லை.

இதேவேளை கொரோனா மூன்றாவது அலை ஏற்படக்கூடிய அபாய நிலை காணப்படுவதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தினர் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பண்டிகைக் காலத்தில் உரிய சுகாதார விதிமுறைகளை பின்பற்ற தவறினால் கொரோனா தொற்று அதிகரிக்கக்கூடும் என சங்கத்தின் செயலாளர் மஹேந்திர பாலசூரிய தெரிவித்துள்ளார்.

இதுவரை உலகளவில் 120,507,233 (120 மில்லியன்) மக்கள் கொரோனா தொற்றுக்கிலக்காகி உள்ளதுடன் 2,666,907 உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பும்ராவை போல்ட் ஆக்கிய தமிழ் பொண்ணு!

 


இந்திய கிரிக்கட் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளராக திகழ்பவர் ஜஸ்பிரிட் பும்ரா. துல்லியமான தனது பந்துவீச்சால் எதிரணி துடுப்பாட்டவீரர்களுக்கு சிம்மசொப்னமாக திகழ்பவர் பும்ரா. அவர் கிரிக்கட் வாழ்வில் கைப்பற்றிய அனேக விக்கட்கள் அவரது யோக்கர் பந்துமூலமாகவே வீழ்ந்தன. இதில் விக்கட்டில் நேரில் பட்டு போல்ட் முறையில் ஆட்டமிழந்தவர்கள் பலர் . 27வயதுடைய பும்ராவிற்கு இந்தியாவில் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். ஆனால் பும்ரா ரசிகராக இருந்ததோ சஞ்சனா கணேசன் என்ற தொலைக்காட்சி அறிவிப்பாளருக்கு என்றால் வியப்பாகவுள்ளதா?

ஸ்டார் டீவியின் பிரபல அறிவிப்பாளரான சஞ்சனா கணேசன் முன்னர் பல தொலைக்காட்சிகளில் முக்கியமான நிகழ்ச்சிகளைத் தொகுத்துவழங்கியுள்ளார்.1991ம் ஆண்டு மே மாதம் 6ம் திகதி பிறந்த சஞ்சனா கணேசன் மகாராஸ்டிரா மாநிலத்தின் புனே நகரைச் சேர்ந்தவர் .இவரது தந்தை கணேசன் ராமசாமி எழுத்தாளராகவும் முகாமைத்துவ குருவாகவும் திகழ்வதுடன் தாயார் சுஷ்மா கணேசன் சட்டத்தரணியாகவும் உடற்திடநிலை பயிற்றுவிப்பாளராகவும் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 

தனது டுவிட்டர் தளத்தில் தான் ஒரு தமிழ் பொண்ணு என்பதை அவர் பெருமையாக பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்திய கிரிக்கட் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா ,ஸ்டார் டிவியின் அறிவிப்பாளர் சஞ்சனா கணேசன் திருமணம் இன்று கோவாவில் நடைபெற்றது.

Sunday, March 14, 2021

இலங்கைத் தமிழ் மக்கள் மீதான கரிசனை தேர்தல்காலத்திற்கு மட்டுப்படுதப்பட்டதாக அன்றி உண்மையானதாக இருக்கவேண்டும்-இந்திய வெளிவிவகார அமைச்சர் கருத்து

 



இலங்கைத் தமிழ் மக்கள் மீது காண்பிக்கப்படும் கரிசனை என்பது தேர்தல்காலத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதாக அன்றி  உண்மையானதாக அமையவேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். 


'இந்தியா டுடே' ஊடக நிறுவனத்தின் வருடாந்த மாநாட்டில் பங்கேற்றபோதே அவர் இவ்வாறு கருத்துவெளியிட்டுள்ளார். 

இலங்கைத்தமிழ் மக்கள் மீதான கரிசனை என்பது சரியானது . ஏனெனில்  அது இயற்கையானது. ஏனெனில்.இருதரப்பினருக்கும் இடையே மொழியால் உறவுநிலை இருக்கின்றது. 

"தமிழ் நாட்டில் உள்ளவர்களும் ஏனைய பகுதிகளில் உள்ளவர்களும் ஒரு விடயத்தை  தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும். இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் மீதான கரிசனை என்பது   தேர்தல்தினத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பாக ஆரம்பித்து தேர்தலுக்கு மறுதினம் முடிவடைகின்ற ஒருவிடயமாக இருக்கக்கூடாது சில வேளைகளில் தேர்தல்கள் நெருங்கும் போது இலங்கைத் தமிழர்கள் மீதான உணர்வு அதிகரிக்கும்.  பின்னர் அது தணிந்துபோகும். '