Saturday, March 6, 2021

உலகில் தைரியமிக்க பெண் என்ற விருதிற்கு சட்டத்தரணி ரனிதா ஞானராஜா தகுதியானவரா?





நேற்றையதினம் ஃபேஸ்புக்கில் திரைப்பட நெறியாளரும் ஊடக பயிற்றுவிப்பாளரும் நண்பருமான நடராஜா  மணிவாணன் ' சில சாதனையாளர்களை உடனிருந்து பார்த்த பின்னர் அவர்களைக் கொண்டாட முடியாமல் போய்விடுகின்றது...' என பதிவொன்றை இட்டிருந்தார். 




அவர் அந்தப்பதிவை இட்ட சில மணிநேரத்தில் சமூக வலைத்தளத்தில் சட்டத்தரணியும் மனித உரிமை செயற்பாட்டாளருமான ரனிதா ஞானராஜா, உலகில் தைரிய மிக்க பெண்களுக்காக அமெரிக்க இராஜாங்க செயலாளரினால் வழங்கப்படும் 'International Women of Courage'  விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள செய்தி சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டிருந்தது. 

மணிவாணன் ,யாரை நினைத்து அந்தப்பதிவை இட்டாரோ தெரியவில்லை.அவரது பதிவில் ஆழமான பொருள் பொதிந்துள்ளது. எங்கோ வெளிநாட்டில் வாழ்பவர்கள் சிறிதாக சாதித்துவிட்டாலும் அதனை போற்றிப் புகழ்ந்து ஆலவட்டம் எடுக்கும் நம்மவர்கள் எம்மத்தியிலேயே வாழ்ந்துகொண்டிருக்கின்றவர்களின் உண்மையான பெறுமதியை பலவேளைகளில் உணரத்தவறிவிடுகின்றோம். அன்றேல் இவர்கள் நம்மவர்கள் தானே என்ற ஒரு அலட்சியப்பான்மையுடன் தட்டிக்கழித்துக் கடந்துபோய்விடுகின்றோம். 

சட்டத்தரணி ரனிதா ஞானராஜாவை சில தடவைகள் தான் நேரில் சந்தித்திருக்கின்றேன். பல தடவைகள் தொலைபேசியில் உரையாடியிருக்கின்றேன்.  சக்தி  ஊடகபணிப்பாளர் கந்தவேள் மயூரனின் மனைவி என்றவகையில் நல்ல நட்புடனும் பேசும் அவரது  அநீதி கண்டு பொங்கும்  உளப்பிரவாகத்தை பேச்சுக்களினூடாகவும் சமூக வலைத்தளப் பதிவுகளுடாகவும்   பல தடவைகள்  உணர்ந்துகொண்டுள்ளேன்.

தனது சொந்த வாழ்வில் மிக இளம் வயதில் காணாமலாக்கப்பட்டதன் வலியை அனுபவித்து உணர்ந்தமையையும்  மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்காக குறிப்பாக காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளுக்காக  தொழில்சார் தன்மையைத்தாண்டி மனிதாபிமானத்தோடு ஈடுபாடாக ரனிதா பணியாற்றுவதற்கு காரணமாக அமைவதாக அவரோடு நெருங்கிப்பழகுபவர்கள் தெரிவிக்கின்றனர். 

பல்கலைக்கழக காலத்திலேயே ரனிதாவுடன் நன்கு பரிட்சயமான சட்டத்தரணியும் அரசியல்வாதியுமான மங்களேஸ்வரி சங்கர் விருதுபற்றி கருத்துவெளியிடுகையில், " படிக்கும் காலத்தில் இருந்தே மனித உரிமை இல்லத்தில் தனது சட்ட அனுபவத்தை பயன்படுத்திக்கொண்டவர். அதன் பின்னர் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையம்  CHRரில்  CEO ஆக நான் கடமையாற்றிக்கொண்டிருந்த காலத்தில் தான் . ரனிதா ,ஒரு சட்ட உத்தியோகத்தராக  எங்களுடைய நிலையத்தில் இணைந்துகொண்டவர் அன்றிருந்து மிக ஆர்வமாக CHR நடத்திக்கொண்டிருந்த மனித உரிமை மீறல் வழக்குகள், காணாமலாக்கப்பட்டவர்கள் விவகாரம், மனித உரிமை பாதுகாவலர்களுக்கான பயிற்சிகள் என்று பல்வேறு கருத்திட்டங்களில் மிக மும்முரமாக தனது சட்ட அறிவைப்பயன்படுத்தி  வெற்றிகரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்த ஒருவர்."' என நினைவுகூர்ந்தார். 


ரனிதாவைப் பற்றி சிரேஷ்ட சட்டத்தரணி கே.எஸ். ரத்னவேல் கூறுகையில்,  கடந்த பத்துவருடகாலமாக அவர் தம்மோடு  பணியாற்றுகின்றபோது எவ்விதமான அச்சுறுத்தல்கள் மத்தியிலும் எந்தவிதமான சமரசத்திற்கும் இடமின்றி அர்ப்பணிப்போடு தொழிலை முன்னெடுக்கும்  உறுதிமிக்க  பெண்மணி எனக்குறிப்பிட்டார்.  எப்போதுமே அர்ப்பணிப்போடு செயற்படும் அவர் தொழில்சார் ரீதியாக மட்டுமன்றி அதற்கு அப்பாலும் சென்று மனித நேயத்தோடு பாதிக்கப்பட்டவர்களுக்காக பரிந்துபேசுபவர் என புளகாங்கிதமடைந்தார் ரத்னவேல். 



உலகில் தைரியமான பெண் என்ற விருது பற்றி அமெரிக்க இராஜாங்கத்திணைக்கம் கூறுகையில்,ரனிதா ஞானராஜா, அச்சுறுத்தல் மற்றும் சவால்களுக்கு மத்தியில் நாட்டில் ஒதுக்கப்பட்ட மற்றும் பாதிப்புகளை எதிர்நோக்கும் சமூகங்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடியவர் என  சுட்டிக்காட்டியுள்ளது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள், நீண்ட காலமாக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு இலவச சட்ட உதவியை ரனிதா வழங்கியுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

தனிப்பட்ட முறையில் போரினால் பாதிக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுடனும் அவர்களது குடும்பத்தினருடனும் பணியாற்றிய தனது விரிவான அனுபவத்தின் அடிப்படையில், இலங்கையின் மிகவும் நலிவுற்ற மக்களுக்கு நீதியையும் பொறுப்புக்கூறலையும் பெற்றுக்கொடுப்பதில் ரனிதா அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளார்.

உலகெங்கும் உள்ள பெண்களின் தைரியத்தையும் தலைமைத்துவத்தையும் அமைதிக்கான வாதிடலையும் அங்கீகரித்து, நீதி, மனித உரிமைகள், பால்நிலை சமத்துவம், பெண்களை வலுவூட்டல் போன்றவற்றுக்காக தனிப்பட்ட ரீதியில் அபாயத்தையும் பொருட்படுத்தாமல் பணியாற்றியமைக்காக அவர்களை கௌரவப்படுத்தும் விதமாக International Women of Courage விருது வழங்கப்பட்டு வருகிறது.


இம்முறை 15 ஆவது ஆண்டாக இந்த விருது வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதுவரை 75 நாடுகளை சேர்ந்த 155 பெண்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

விருது வழங்கும் விழா சர்வதேச பெண்கள் தினமான மார்ச் 8ம்திகதி  காணொளி தொழில்நுட்பத்தினூடாக நடைபெறவுள்ளது.




இதன்போது அமெரிக்காவின் முதல் பெண்மணி னுச. ஜில் பைடன் தெரிவு செய்யப்பட்ட பெண்களின் சாதனைகளை அங்கீகரித்து தனது கருத்துக்களை பகிரவுள்ளார் என நியுஸ்பெஸ்ட் இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது. 

ரனிதாவிற்கு விருது வழங்கப்படவுள்ளதான அறிவிப்பையடுத்து இலங்கையிலுள்ள மற்றுமொரு தைரியமிக்கபெண்மணியும் சர்வதேச விருதுகள் பல வென்ற மனித உரிமை செயற்பாட்டாளருமான ஷிரீன் ஷரூர் கருத்துவெளியிடுகையில், "ரனிதா, நீண்டகாலமாக மனித உரிமைகள் தொடர்பான சட்டத்தரணியாக பணியாற்றிவருவதுடன் ஏனையவர்கள் பொறுப்பேற்கத் தயங்கும் வழக்குகளை முன்னின்று எடுத்து நடத்தியுள்ளார். அவர் அச்சுறுத்தல்களுக்கும் அபாயங்களுக்கு மத்தியிலும் கூட அரசியல் கைதிகள், காணாமலாக்கப்பட்டோர்  வழக்குகள் மற்றும் முக்கியமாக மன்னார் பாரிய புதைகுழி விவகார வழக்குகளில்  தனது வகிபாகத்தை வழங்கியுள்ளார். "மிகவும் தகுதிமிக்கதும் மிக்க அவசியமானதுமான அங்கீகாரமாக நான் பார்க்கின்றேன்.' என்று குறிப்பிட்டார். 

இந்த உலகில் அண்மைக்காலமாக பதவிக்காகவும் அதிகாரத்திற்காகவும் பணத்திற்காகவும்  சோரம் போகின்றவர்களுக்கே விருதுகளும் சிறப்புக்களும் கௌரவிப்புக்களும்  நடக்கின்றனவே என்று ஆதங்கப்பட்டு பன்னாடைகளுக்கெல்லாம் பொன்னாடை போர்த்துகின்றனரே என்று அங்கலாய்த்திருக்கையில் ,சட்டத்தரணி ரனிதா ஞானராஜா உயரிய சர்வதேச விருதொன்றுக்காக தெரிவுசெய்யப்பட்டிருப்பதான செய்தி மனமகிழ்ச்சியளிக்கின்றது. 

குரலற்றவர்களின் குரலாக திகழும் ரனிதா ஞானராஜாவிற்கு உலகில் தைரியமிக்க பெண்மணி என்ற விருது வழங்கப்படுவது முற்றிலும் பொருத்தமானது.  உங்கள் பணி இன்னமும் சிறப்புற வாழ்த்துக்கள் ரனிதா .

ஆக்கம்: அருண் ஆரோக்கியநாதர்


No comments:

Post a Comment