Tuesday, September 1, 2009

ஊடகவியலாளர் திஸ்ஸநாயகத்திற்கு 20வருட கடூழியச்சிறைத் தண்டனை

By Arun Arokianathan
Virakesari 01.09.2009
Headlines


ஊடகவியலாளர் ஜே. திஸ்ஸநாயகத்திற்கு மேல்மாகாண மேல் நீதிமன்றம் இன்று 20வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது அரசாங்கப்படையினர் மனிதநேய நடவடிக்கைகளை முன்னெடுத்தபோது இனத்துவேசத்தை பரப்பும் வகையில் வெளியிடப்பட்ட ஆக்கங்களின் மீதான மூன்று குற்றச்சாட்டுக்களில் குற்றவாளியாக நிருபிக்கப்பட்டதனாலேயே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது




திஸ்ஸநாயகத்தால் வெளியிடப்பட்ட நோர்த் ஈஸ்டன் மன்த்லீ என்ற சஞ்சீகையில் 2006ம் ஆண்டு ஜுலை முதலாம் திகதிமுதல் 2007ம் ஆண்டு ஜுலை முதலாம் திகதிவரையான காலப்பகுதியில் எழுதப்பட்ட ஆக்கங்களின் மூலமாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் 2.1 ர் பிரிவின் கீழ் சதிமுயற்சியில் ஈடுபட்டமை பயங்கரவாத தடைச்சட்டம் 2ர்ன் கீழ் ஒற்றுமையின்மை வன்முறையை தூண்டும் வகையில் குற்றமிழைத்தமை அவசரகாலச்சட்டத்தின் கீழ் பிரத்தியேகமான பயங்கரவாத நடவடிக்கைகளில் அதாவது சஞ்சிகை விநியோகம் மூலமாக விடுதலைப்புலிகளுக்கு நிதிதிரட்டியமை ஆகிய மூன்று குற்றச்சாட்டுக்களின் மீதே இன்று தீர்ப்பு வழங்க்பபட்டது இதில் முதல் இரண்டு குற்றச்சாட்டுக்களின் மீதும் குற்றவாளியாக தீர்மானிக்கப்பட்டு தலா 5வருடங்கள் கடூழியச்சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட திஸ்ஸநாயகம் அவசரகாலச்சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டிலும் குற்றவாளியாக தீர்மானிக்கப்பட்ட நிலையில் 10வருடகால கடூழியச்சிறைத்தண்டனையுமாக மொத்தம் 20வருடகடுழிய சிறைத்தண்டனை விதித்து மேல்மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜேசுந்தர
தீர்ப்பளித்தார்.




முன்னதாக காலையில் இந்த வழங்கின் தீர்ப்பை அறிந்துகொள்வதற்காக பெரும் எண்ணிக்கையிலான ஊடகவியலாளர்கள் நீதிமன்றக்கட்டிடத்தொகுதியின் முன்பாக கூடியிருந்தனர்

ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம் இன்று காலை 9.30மணியளவில் மேல்நீதிமன்றத்திற்கு கொண்டுவருவார் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஊடகவியலாளர்கள் சந்தேகநபர்களைக்கொண்டுவரும் பேருந்துகளின் வரவிற்காக காத்திருந்தனர் .9.30மணியளவில் கூட்டம்நிறைந்த சிறைச்சாலை பேருந்து மேல்நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக வந்து நின்றதும் சக ஊடகவியலாளர் ஒருவர் திஸ்ஸநாயகம் இதில் கொண்டுவரப்பட்டாரா என வினவினார் .

அதன்போது சிறைச்சாலை காவலாளர் ஒருவர் இல்லை எனப்பதிலளிக்கவே ஏனைய பேருந்துகள் வரும் வரையில் கலந்துரையாடலில் ஈடுபட்டிருக்கவே ஏற்கனவே கூட்டத்துடன் வந்திருந்த பேருந்திலிருந்து திஸ்ஸ நாயகம் அழைத்துச்செல்லப்படுவதாக அங்கு நின்றிருந்த சிலர் கூறவே ஊடகவியலாளர்கள் முண்டியடித்தபடி ஒளிப்படக்கருவிகளுடன் விரைந்தனர் எனினும் திஸ்ஸநாயகம் நீதிமன்ற வளாகத்திற்குள் கொண்டு செல்லப்பட்டபோது அவரது முழு உருவையும் பதிவுசெய்யமுடியவில்லை தூரத்தேயிருந்தவாறு பக்கவாட்டையே பதிவுசெய்யமுடிந்தது

மேல் நீதிமன்றத்திற்குள் சென்ற போது அங்கு ஊடகவியலாளர்களுடன் மனித உரிமை ஆர்வலர்கள் தூதரக அதிகாரிகளும் அமர்ந்திருந்தனர்.
நீதிபதி தீபாலி விஜேசுந்தர வருகைதந்ததையடுத்து ஊடகவியலாளர் ஜே திஸ்ஸநாயகத்தின் வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது அரச தரப்பு வழக்கறிஞர் சுதர்சன டி சில்வா வாதிடுகையில் “குற்றஞ்சாட்டப்பட்டுள்ள திஸ்ஸநாயகம் 2006ம்ஆண்டு ஜுலை முதலாம் திகதி முதல் 2007ம் ஆண்டு ஜுலை முதலாம் திகதி வரை நோர்த் ஈஸ்டன் மன்த்லீ என்ற சஞ்சீகையில் எழுதிய ஆக்கங்களில் கிழக்கில் அரசாங்கமும் அரச படைகளும் முன்னெடுத்த மனித நேய நடவடிக்கைகளின் போது இடம்பெற்ற படுகொலைகளுக்கு அரசாங்கமே பொறுப்பு என்ற வகையிலும் உணவு மருந்து மற்றும் எரிபொருட்களை போதுமான அளவில் கிடைக்காமற்செய்து தடைகளை ஏற்படுத்துவதன்; மூலமாக மக்களை வெளியேறநிர்ப்பந்திக்கின்றது எனவும் எழுதியிருந்தார் இதன் மூலமாக இனங்களுக்கு மத்தியில் குழப்பத்தை பரப்பும் வகையில் அவரது நடவடிக்கைகள் அமைந்திருந்தன அரசியல்சாசனத்தில் கருத்துவெளியிடும் சுதந்திரம் இருக்கின்றபோதும் அதனைப்பாவித்து எவரும் பொய்களைப்பரப்பமுடியாது அதி உயர்ந்த ஜனநாயகம் ஊடகசுதந்திரம் காணப்படுவதாக கூறப்படும் அமெரிக்காவிலும் கூட கருத்துசுதந்திரம் என்ற பேரில் பொய்களைப்பரப்புவதற்கு அனுமதிகிடையாது உதாரணத்திற்கு சனக்கூட்டம் நிறைந்திருக்கும் ஓர் நாடாக அரங்கில் தீ பற்றிவிட்டதாக யாரும் பொய்யொன்றைக் கூறினால் அதனால் ஏற்படும் விபரீதம் எத்தகையதென்பதை நீங்கள் அறிவீர்கள் அதையொத்த வகையில் தான் இவரது செயற்பாடும் அமைந்திருக்கின்றது எனவே இவருக்கு வழங்கக்கூடிய அதிக பட்ச தண்டனையை வழங்க வேண்டும” எனக்கேட்டுக்கொண்டார்.
இதனைத்தொடர்ந்து குற்றஞ்சாட்டப்பட்டவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அனில் சில்வா எதிர்த்துவாதிடுகையில் “நீங்கள் தீர்ப்பை எழுதி வந்துள்ளீர்கள். தற்போது பேசிப் பயனில்லை. எனினும் மேல் மாகாணத்தில் உள்ள பிரதான நிதிமன்றத்தில் பிரதான நீதிவான் என்ற வகையில் நீங்கள் வழங்கும் தீர்ப்பு நியாயபூர்வமானதாக குறைந்த தண்டனை காலத்தைக் கொண்டதாக இருக்க வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன். நீங்கள் அறிந்துகொள்ள வேண்டம் என்பதற்காக எனது கட்சிக்காரர் திஸ்ஸநாயகம் குறித்து சில விடயங்களை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.எனது கட்சிக்காரர் திஸ்ஸநாயகம் ஆரம்பகாலத்தில் பணிப்புரிந்த மார்க்க நிறுவனத்தில் சக ஊழியர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தமையினால் தனது வேலையையும் இழந்தார். 1980 களில் தென்பகுதியிலேயே சிங்கள இளைஞர்களின் மனிதஉரிமைகள் மீறப்பட்டபோது அதற்கு எதிராக குரல் எழுப்பினார் அதுமட்டுமன்றி அக்காலப்பகுதியில் காணமல் போனவர்களின் குடும்பங்களுடன் இணைந்து பணியாற்றி அவர்களுக்காக குரல் கொடுத்தார் இப்படியாக தனது இனத்தை சார்ந்தவர்கள் அல்லாத சிங்கள இனத்திற்காக குரல் கொடுத்த திஸ்ஸ நாயகம் இன்று தமது தமிழ் இனத்திற்காக குரல் கொடுத்தமைக்காக தனது சுதந்திரத்தை இழந்து நிற்கின்றார்.வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் பற்றி யாரும் தற்போது பேச முன்வருவதில்லை அவர்களை பற்றிபேசினால் ஏற்படும் வேதனை எனக்கு தெரியும், திஸ்ஸநாயகம் இனதுவேசம் அற்றவர் என்பதனை சாட்சியம் வழங்கிய சிங்கள சாட்சிக்காரர்களின் வாக்குமூலங்களிலிருந்து நிரூபணமாகின்றது.அவர் குற்றமற்றவர் என்பதனை எனது வாதமாகும் பிணையேதும் வழங்கப்படாமல் அவரை ஒருவருடங்கள் 5 மாதங்கள் தடுப்புக்காவலில் வைத்திருந்தமை சட்டவிரோதமானது குற்றஞ்சாட்டப்பட்ட திஸ்ஸநாயகம் இனதுவேசி அல்ல சிகப்பு கண்ணாடிபோட்டு உளவு பார்க்கும் போலி தேசப்பற்றாளர்களுக்கு அனைத்துமே தவறாகதான் தெரியும். அவர்களுக்கு இவர் செய்தவையும் தவறாகவே தெரியும் இவர் தமிழர் என்பதனால் தற்போது சிறைத்தண்டனைக்கு ஆளாக்கப்பட்டிருக்கின்றார். தற்போது நாட்டில் இடம்பெறுவன சீரியதாக தென்படவில்லை இவரது விடயத்தில் நிறைவேற்று அதிகாரத்திடமிருந்து நிவாரணத்தை எதிர்ப்பார்த்து நிற்கின்றோம் அவர் எழுதியவை ஏனைய ஊடகவியலாளர்களுக்கும் ஓர் பாடமாகும் கருத்து வெளியிடும் சுதந்திரம் அரசியல் யாப்பில் உள்ளது தமிழர் என்றாலும் அரசியல் யாப்பிலுள்ள அந்த உரிமை இவருக்கும் உண்டு”

இதனைச் செவிமடுத்தபின்னர் நீதிபதி தனது தீர்ப்பை வாசித்தார். .பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் அவசரகாலச்சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுக்களிலும் திஸ்ஸநாயகத்தின் குற்றம் தெளிவாக நிருபிக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டார் 

நோர்த் ஈஸ்டன் மன்த்லீ என்ற சஞ்சிகையை அச்சிட சதிசெய்தமை திஸ்ஸமீது சுமத்தப்பட்ட முதலாவது குற்றச்சாட்டாகும் இந்த சஞ்சிகையை பிரசுரித்ததன் மூலம் இனங்களுக்கிடையே முரண்பாட்டை ஏற்படுத்தியமை இரண்டாவது குற்றச்சாட்டாகும் மூன்றாவது குற்றச்சாட்டு சஞ்சிகை விற்பனைமூலமாக பயங்கரவாதத்திற்கு நிதி அன்பளிப்புச்செய்தமையாகும் இதில் முதல் இரு குற்றச்சாட்டுக்களும் நிருபிக்கப்பட்ட நிலையில் தலா 5வருட கடூழியச்சிறைத்தண்டனை வழங்கப்பட்டதுடன் மூன்றாவது குற்றச்சாட்டும் சந்தேகங்களுக்கு இடமின்றி நிருபிக்கப்பட்டதால் 10வருட கடூழியசிறைத்தண்டனை விதிக்கப்பட்டது இவ்வாறு மொத்தமாக 20வருடகடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது 
1980களில் அறிமுகப்படுத்தப்பட்ட கடுமையாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட இலங்கையின் முதலாவது ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம் என்பது குறிப்பிடத்தக்கது




No comments:

Post a Comment