Thursday, September 30, 2010

எந்திரன் ஏற்படுத்தியுள்ள எதிர்பார்ப்புக்கள்



அருண் ஆரோக்கியநாதர்

அன்றாடவாழ்வை முன்னெடுப்பதே பெரும் திண்டாட்டமாக இருக்கும் பலரது வாழ்வில் தமது வாழ்வுடன் சம்பந்தப்பட்ட செய்திகளைத்தவிர வேறேதும் முக்கியமானதாக தோன்றுவதில்லை . ஆனால் சில செய்திகள் அவற்றின் பரிணாமம் காரணமாக விரும்பியோ விரும்பாமலோ முக்கியத்துவம் பெற்றுவிடுகின்றன .


அந்தவகையில் சினிமாவை ரசிக்கின்றவர்களாக இருந்தாலும் இல்லையென்றாலும் எந்திரன் திரைப்படம் குறித்த செய்திகளை இந்நாட்களில் கேள்விப்படாமல் இருப்பின் அது ஆச்சரியமாகவே இருக்கும்


இந்தியத்திரையுலகின் மிகப்பெரிய நட்சத்திரங்களில் இருவரான சூப்பர்ஸ்டார் ரஜனிகாந்த் மற்றும் ஐஸ்வர்யா ராய் பச்சன் ஆகியோர் படத்தில் நடிப்பது எந்திரன் மீதான ரசிகர்களது ஆர்வத்திற்கு காரணமாக இருப்பினும் திரைப்படத்திற்கான தயாரிப்புச் செலவு குறித்த செய்திகளே முதலில் பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கின்றன .



இத்திரைப்படத்திற்கு செலவிடப்பட்ட தொகை குறித்து இந்திய ஊடகங்கள் பல்வேறு தொகைளைக் குறிப்பிட்டுள்ளன .இந்திய ரூபா மதிப்பில் 150 முதல் 200 கோடிகள் செலவிடப்பட்டதாக மாறுபட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன


எந்திரன் திரைப்படத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் தரவுகளுக்கு அமைவாக இந்த திரைப்படத்திற்காக 165 கோடி இந்திய ரூபாவிற்கு அதிகமாக செலவிடப்பட்டதாக சுட்டிக்காட்டப்படுகின்றது .தற்போதைய இலங்கை நாணயமதிப்பின் படி 411 கோடி ரூபாவாகும். இதுவரைகாலத்தில் இந்தியத்திரைப்படமொன்றிற்கு செலவிடப்பட்ட அதிகூடிய தொகை இதுவெனவும் குறிப்பிடப்படுகின்றது .எந்திரனுக்கு முன்னர் இந்தியாவில் அதிக செலவில் எடுக்கப்பட்ட திரைப்படம் அக்ஷய் குமார் மற்றும் சஞ்சய் தத் நடித்த 'புளு'  (BLUE)  இதற்காக 100 கோடி இந்திய ரூபா செலவிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது


உலகளவில் அதிக செலவில் தயாரிக்கப்பட்ட திரைப்படம் ஜேம்ஸ் கமரூனின் அவதார் AVATAR திரைப்படம் இதற்காக 300மில்லியன் அமெரிக்கடொலர்கள் (அண்ணளவாக 3000கோடி இலங்கை ரூபா ) பொருட்செலவில் தயாரிக்க்பபட்ட இந்த திரைப்படமே அதிக வருமானத்தை குவித்த திரைப்படம் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளது 2.8பில்லியன் அமெரிக்க டொலர்களை (அண்ணளவாக 28000 கோடி ருபாவை இந்ததிரைப்படம் சம்பாதித்துள்ளம குறிப்பிடத்தக்கது


இலங்கையில் இதுவரை எடுக்கப்பட்ட திரைப்படங்களில் மிக அதிகமான தயாரிப்புச்செலவில் எடுக்கப்பட்ட திரைப்படமாக ஜக்ஸன் அன்டனியியின் இயக்கத்தில் வெளியாகிய ' அபா' திரைப்படத்திற்கு 60 மில்லியன்கள் முதல் 80 மில்லியன்கள் வரை செலவானதாக இலங்கை சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதில் அதிக பட்ச தொகையைக் கருத்தில் கொண்டாலே 8கோடி இலங்கை ரூபா தான் அபா திரைப்படத்திற்காக செலவிடப்பட்டிருக்கின்றது .


ஒப்பீட்டளவில் பார்க்கின்றபோது இது இந்திய திரைப்படத்துறையின் பெரும் பரிமாணத்தை காண்பித்துநிற்கின்றது .


மறுமுனையில் உலகின் மூன்றிலொரு பங்கு வறியமக்கள் வாழ்கின்ற இந்தியாவில் இப்படிபெரும் தொகைப்பணததை விரயம் செய்து திரைப்படம் எடுக்கத்தான் வேண்டுமா என கேள்வியெழுப்புகின்றவர்களும் இருக்கவே செய்கின்றனர் .


இந்தியாவில் மட்டுமன்றி ஆசியாவிலேயே அதிக செலவில் எடுக்கப்பட்ட திரைப்படம் என எந்திரன் திரைப்படம் தற்போது ஊடகங்களில் பெருமையாக குறிப்பிடப்படுகின்றது .


இவ்வாறாக பெரும் தொகை செலவில் திரைப்படங்கள் எடுக்கப்படுவது இந்தியாவைப்பொறுத்தவரையில் என்ன செய்தியைக் குறிப்பிடுகின்றது என கொழும்பிலுள்ள இந்தியா செய்தியாளர் ஸ்ரீராமிடம் வினவியபோது ' இது அசூர வேகத்தில் பொருளாதார வளர்ச்சிகண்டுவருகின்ற இந்தியாவில் ஏற்பட்டுவருகின்ற மாறுதலைக் காண்பிக்கின்றது .இந்தியாவில் தற்போதுள்ள மத்திய தரவர்க்கத்தின் பொருளாதார வலுவைக்காண்பிக்கின்றது. இந்தியாவில் தற்போது சுமார் 300 மில்லியன் மக்கள் மத்திய தரவர்க்கத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர் .இவர்களை நம்பியே இவ்வாறான திரைப்படங்கள் எடுக்கப்படுகின்றன. இது தமிழர்களது பொருளாதார பலத்திற்கும் சான்றாக அமைந்துள்ளது' எனத்தெரிவித்தார்.


இந்தியாவைப்பொறுத்தவரையில் எந்திரன் போன்ற படங்கள் மிகப்பெரிய ரிஸ்க்கை கொண்டுள்ளன அவர் குறிப்பி;ட்டபோது ஏன் அப்படிக்கூறுகின்றீர்கள் என வினவினேன் '  எந்திரன் திரைப்படம் விஞ்ஞானபூர்வமான கதையை மையமாகக்கொண்டதாக குறிப்பிடப்படுகின்றது.ஆனால் இந்தியாவில் திரைப்படங்களைப் பார்க்கின்றவர்களில் பெரும்பாலானவர்கள் வறியவர்களாக பாமரர்களாக இருக்கின்றனர் .அவர்களால் நவீன விஞ்ஞான விடயங்களை புரிந்துகொள்ளமுடியுமா அதனை ரசிக்க முடியுமா என்பது கேள்விக்குரியதே என்னைப்பொறுத்தவரையில் ரஜனிக்காந்த் என்ற சூப்பர் ஸ்டார் நடிகரின் மக்கள் செல்வாக்கை மனதில் நிறுத்தியே இத்தகைய பெரும் ரிஸ்க்கை எடுத்திருக்கின்றனர்' எனக்குறிப்பிட்டார் .


எந்திரன் திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய ரஜனிகாந்த்   இந்தியாவைப்பொறுத்தவரையில் முதலில் வெளிவருகின்ற உயர் விஞ்ஞானத் தொழில் நுட்ப திரைப்படமெனக் குறிப்பிட்டிருந்தார் .
இவ்வாறான திரைப்படங்களை ஆங்கிலத்தில் 'Sci- Fi Movies' என அழைக்கின்றனர் .விஞ்ஞர்னபூர்வ கதைகளை அடிப்படையாகக்கொண்ட திரைப்படங்களான இவை வேற்றுக்கிரகவாசிகள் வாழ்க்கை கடந்தகாலத்திற்குள் பயணித்தல் ரோபோக்கள் விண்வெளி சஞ்சாரம் போன்ற வித்தியாசமான கதைக்கருக்களை கொண்டிருந்தன.


ஒருவேளை இதனை விளங்காதவர்கள் ஸ்டார் வோர்ஸ் ஏ ஸ்பேஸ் ஒடிசி தி மட்ரிக்ஸ் டேர்மினேற்றர் ஏலியன் பக் டு த பியூசர் அவதார் இன்செப்ஷன் போன்ற படங்களை பார்த்திருந்தால்; விளங்கிக்கொள்ளமுடியும் .


ஆரம்பத்தில் மரத்தைச் சுற்றிக் காதல் பண்ணிக்கொண்டிருந்த இந்திய சினிமா அண்மைக்காலங்களில் அதிகமதிகமாக வெளிநாடுகளில் காதல் பண்ணிக்கொண்டும் குடும்பம் உறவுகளை மையமாகக்கொண்ட கதைக்கருக்களிலும் சுழன்றுகொண்டிருக்கின்ற வேளையில் நவீன சினிமாவின் நடப்புப் போக்கிற்கு அமைவாக விஞ்ஞான தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்ட திரைப்படங்களுக்குள் பிரவேசித்திருப்பது வரவேற்கத்தக்கவிடயம் .


விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மேற்கத்தேயர்களுக்கு மட்டும் உரித்தான விடயமல்ல மாறாக அது அனைவருக்கும் அவசியமானது என உணரப்படுpகின்றதை உறுதிப்படுத்துவதாக இந்த திரைப்படம் அமைந்துநிற்கின்றது


எனினும் பாமர மக்களை அதிகமாகக் கொண்ட இந்தியாவில் இந்த திரைப்படத்திற்கு கிடைக்க கூடிய வரவேற்பை பார்த்தே இதுபோன்ற திரைப்படங்கள் இனிவரும் காலத்தில் தயாரிக்கபடுவது தீர்மானிக்கபடும் என எதிர்பார்க்கலாம் .


எந்திரன் திரைப்படத்தின் இயக்குநர் சங்கர் தமிழ் திரைத்துறையிலுள்ள சிறந்த கற்பனாவாதிகளில் ஒருவர் என்பதுடன் அதிநவீன தொழில்நுட்பம் குறித்த அறிவையும் கொண்டிருப்பவர்.அவரது கடந்த காலத்திரைப்படங்களை பார்த்தவர்கள் சமூக அநீதிக்கு எதிராக குரல்கொடுக்கின்ற கதாநாயகர்களை மையமாகக்கொண்ட இந்தியன் அந்நியன் சிவாஜி போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த திரைப்படங்களை அவர் தந்துள்ளமையை நினைவிற்கொள்ளலாம். அந்தவகையில் நவீன தொழில்நுட்பங்களுக்கு மத்தியில் நல்லகதைக்கருவையும் பொழுதுபோக்கு அம்சங்களையம் உள்ளடங்கியிருப்பின் எந்திரனுக்கு மக்கள் மத்தியில் வரவேற்புக்கிடைக்கும்


எந்திரன் போன்ற திரைப்படங்கள் எத்தகைய தாக்கததை ஏற்படுத்தும் என இலங்கையின் பிரபல சினிமா தயாரிப்பாளர்களில் ஒருவரும் ஹொலிவுட் திரைப்படங்கள் பலவற்றை இலங்கையில் படம்பிடிப்பதற்கு முன்னோடியாக திகழ்ந்தவருமான சந்திரன் ரட்ணத்திடம் வினவியபோது'
இத்தகைய திரைப்படங்கள் உயர்ரக தொழில்நுட்பத்தை இப்பிராந்தியத்திற்கு கொண்டுவர வழிகோலும்.அதனைவிட மேலாக ஆசியாவினது குறிப்பாக இந்திய உபகண்டத்தின் பெரும் சனத்தொகையை கருத்திற்கொண்டு அந்த சந்தைவாய்ப்பை பயன்படுத்திக்கொள்வதற்கு அதிகமதிகமாக ஆர்வங்காண்பித்துவருகின்ற ஹொலிவுட் தயாரிப்பு நிறுவனங்கள் தமது முதலீடுகளை இப்பிராந்தியத்தில் முதலிடுவதற்கு வழிகோலும். இத்தகைய பெரும் தொகையில் அதனைவிடமேலாக சிறந்த தராதரத்துடன் உயர்தொழில்நுட்பத்தை பயன்படுத்தி திரைப்படம் எடுக்கக்கூடிய உள்ளுர் வாசிகள் இருப்பதை அவர்கள் உணர்ந்தால் அவர்கள் பக்கம் மேலும் மேலுமாக இப்பிராந்தியம் மீது திரும்புவதற்கு வாய்ப்புண்டு' எனக் குறிப்பிட்டார்


தற்போது கிடைக்கும் தகவல்களைப் பார்க்கின்றபோது வடஅமெரிக்காவிலும் அதனைத் தொடர்ந்தும் இந்தியாவிலும் முதல்வாரத்திற்கான முன்பதிவுகள் யாவும் சில மணிநேரத்திற்குள்ளாகவே விற்றுத்தீர்ந்துவிட்டதாக அறியமுடிகின்றது


அந்தவகையில் இதுவரை காலத்தில் இந்தியத்திரைப்படமொன்று முதல் வாரத்தில் அதிகமாக சம்பாதித்த திரைபடமென்ற சாதனையை ஏற்படுத்தி தற்போது மூன்றாவது வாரமாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்ற சல்மான் கான் நடித்த DABANGG டபாங் திரைப்படத்தின் வசூலை எந்திரன் முறியடிக்கும் என்றே செய்திகள் வெளியாகியுள்ளன்


 டபாங் திரைப்படம் அமீர் கான் நடித்த 3 இடியட்ஸ் 3 IDIOTS திரைப்படத்தின் சாதனையை முறியடித்து முதல் வாரத்தில் 81.57 கோடி இந்திய ருபாயை சம்பாதித்திருந்தது .இரண்டாவது வாரமுடிவில் 116கோடி இந்திய ருபாவை சம்பாதித்துள்ள இந்த டபாங் திரைப்படம் 3 இடியற்ஸ் திரைப்படத்தின் ஒட்டுமொத்த வருவான சாதனையை படைக்கும் என எதிர்பார்ப்புக்களும் வெளியாகியுள்ளன. 3 இடியட்ஸ் திரைப்படம் தான் இதுவரைகாலத்தில் இந்தியாவில் அதிக வருமானத்தை ஈட்டிய திரைப்படமாக பதிவுசெய்யப்பட்டுள்ளது 35 கோடி இந்திய ருபா செலவில் தயாரிக்கப்பட்ட 3 இடியட்ஸ் தரைப்படம் மொத்தமாக 339 கோடி ருபாவை ஈட்டியது .
 சினிமா வட்டாரங்களை மேற்கோள் காட்டி வெளிவந்துள்ள செய்திகளில் எந்திரன் திரைப்படத்தின் திரை உரிமை மாத்திரமே 200 கோடி இந்திய ரூபாவிற்கு விற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .இது உண்மையென உறுதிப்படுத்தப்பட்டால் படம் வெளிவரமுன்பே படத்திற்காக இட்ட மூலதனத்தை தயாரிப்பாளர்கள் பெற்றுவிட்டார்கள் என்றே கூறவேண்டும்




எந்திரன் திரைப்படம் இந்திய திரைப்படவரலாற்றில் முன்னெப்போதுமில்லாத வகையில் 2000ற்கு மேற்பட்ட பிரின்ட்கள் போடப்பட்டதும் 3000 திரையரங்கங்களில் வெளியாகப்போவதுமான பெரும் திரைப்படமாக எக்கச் சக்க எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்திவிட்டுள்ளது .இந்தியாவிற்கு வெளியே 300 திரையரங்குகளில் வெளியாகவிருக்கின்றது .ஸ்பைர்டமான் திரைப்படத்திற்கு பின்னர் உலகளவில் அதிக திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படம் என்ற சாதனையையும் இந்த திரைப்படம் ஏற்படு;த்தியுள்ளதாக ஊடகங்கள் சில தகவல் வெளியிட்டுள்ளன் இவ்வாறு பல சாதனைகளை ஏற்கனவே தன்னகத்தே கொண்டு நாளையதினம் ( ஓக்டோபர் முதலாம் திகதி ) வெளியாகும் எந்திரன் திரைப்படம் எத்தகைய சாதனையை நிலைநாட்டப்போகின்றதென பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.

Monday, September 27, 2010

சுற்றுலாத்துறை வளர்ச்சியில் இலங்கை எதிர்நோக்கி நிற்கின்ற சவால்கள்



உலக சுற்றுலா தினம் இன்று




யுத்தத்திற்குப் பின்னரான காலப்பகுதியில் பொருளாதார அபிவிருத்தியை இலக்காக கொண்டு செயற்படுகின்ற இலங்கை அரசாங்கம் அதற்காக தெரிவுசெய்துள்ள துறைகளில் சுற்றுலாத்துறை முக்கிய இடத்தை வகிக்கின்றது .

2016ம் ஆண்டில் 2.5 மில்லியன் சுற்றுலாப்பயணிகளை இலங்கைக்கு வரவழைப்பதை இலக்காகக் கொண்டு சுற்றுலா அதிகார சபை அதன் அபிவிருத்தித்திட்டங்களை முடுக்கிவிட்டுள்ள நிலையில் இன்றையதினம் கொண்டாடப்படுகின்ற உலக சுற்றுலா தினம் முக்கியத்துவம் பெறுகின்றது 


உலக சுற்றுலா தினம் 1980ம் ஆண்டு முதல் ஐக்கியநாடுகளின் உலக சுற்றுலாத்துறை அமைப்பினால் கொண்டாடப்பட்டுவருகின்றது .சர்வதேச சமூகத்தின் மத்தியில் சுற்றுலாத்துறையின் வகிபாகம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் உலகளாவிய ரீதியில் சுற்றுலாத்துறை எங்கனம் சமூக கலாச்சார அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக தாக்கங்கங்களை ஏற்படுத்துகின்றது என்பதை உணர்த்துவதே இத்தினத்தின் நோக்கமாகும்.

உலக சுற்றுலா அமைப்பின் வரைவிலக்கணத்திற்கு அமைவாக சுற்றுலாப்பயணி என்பவர் தனது வழமையான வாழ்விடச் சூழலுக்கு அப்பால் 24மணிநேரத்திற்கு அதிகமான ஆனால் ஒருவருடத்திற்கு மேற்படாத காலப்பகுதியை பொழுதுபோக்கிற்காக அன்றேல் வர்த்தகத்திற்காக அன்றேல் வேறு நோக்கங்களுக்காக கழிப்பதுடன் இந்த செயற்பாடுகளுடாக வருமானமீட்டுதலை நோக்காக கொண்டிருக்காமை' எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது 

தற்போதைய புள்ளிவிபரங்களின் படி சுற்றுலா 260மில்லியன் மக்களுக்கு உலகளாவிய ரீதியில் வேலைவாய்ப்புக்களை வழங்குகின்றதும் உலகின் மொத்த தேசிய உற்பத்தியில் 10வீதமான வருமானத்தை ஈட்டிக்கொடுப்பதுமான சுற்றுலாத்துறையே உலகிலுள்ள மிகப்பெரியதும் மிக வேகமாக வளர்வதுமான தொழில்துறையாக கருதப்படுகின்றது 

2008ம் ஆண்டில் உலகளாவிய ரீதியில் சுற்றுலா 922மில்லியனுக்கும் அதிகமானவர்கள் சுற்றுலாப்பயணம் மேற்கொண்டுள்ளதுடன் அதே ஆண்டில் சர்வதேச சுற்றுலாத்துறை கொடுக்கல்வாங்கல்களில் 944பில்லியன் அமெரிக்க டொலர்கள் பணம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதனுடன் சுற்றுலாப்பயணிகளின் சர்வதேசப் போக்குவரத்து கட்டணங்களையும் இணைத்துப்பார்ககின்றபோது 2008ம் ஆண்டில் மொத்த தொகையானது 1.1 டிரில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது .இதன்படி நாளொன்றுக்கு மூன்று பில்லியன் அமெரிக்க டொலர்கள் அதாவது முப்பதாயிரம் கோடி ருபாவிற்கும் அதிகமான தொகையாகும் .


உலகளாவிய ரீதியில் சுற்றுலா பயணிகளில் அதிகமானவர்கள் பயணம் செய்கின்ற நாடுகள் வரிசையில் பிரான்ஸ் முதலிடம் வகிக்கின்றது .

கடந்தாண்டில் 74.2மில்லியன் சுற்றுலாப்பயணிகள் பிரான்ஸிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
கடந்தாண்டில் அதிக சுற்றுலாப்பயணிகள் விஜயம் செய்த சில நாடுகளின் விபரங்கள் பின்வருமாறு :

பிரான்ஸ் 74.2 மில்லியன் 
அமெரிக்கா 54.9மில்லியன் 
ஸ்பெயின் 52.2மில்லியன் 
சீனா 50.9 மில்லியன்
இத்தாலி 43.2மில்லியன் 
புpரித்தானியா 28மில்லியன் 
துருக்கி 25.5மில்லியன் 
ஜேர்மனி 24.2மில்லியன் 
மலேசியா 23.6மில்லியன் 
மெக்ஸிகோ 21.5மில்லியன்
.

இலங்கையின் சுற்றுலாத்துறையும் யுத்தத்தின் தாக்கமும்

1983ம் ஆண்டில் கம்போடியா நாட்டிற்கு 200 000 சுற்றுலாப்பயணிகள் விஜயம் செய்திருந்தநிலையில் இலங்கைக்கு 337 530 சுற்றுலாப்பயணிகள் விஜயம் மேற்கொண்டிருந்தனர், ஆனால் 2009ம் ஆண்டிலோ கம்போடியா நாட்டிற்கு சுமார் 21 லட்சம் சுற்றுலாப்பயணிகள் விஜயம் செய்துள்ள அதேவேளை இலங்கைக்கு 447890 சுற்றுலாப்பயணிகள் மாத்திரமே விஜயம் செய்திருந்தனர்.  

இலங்கையில் இடம்பெற்ற மூன்று தசாப்த கால யுத்தமானது ஏனைய துறைகள் போன்றே சுற்றுலாத்துறையிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட்டிருப்பதை இதிலிருந்து உணர்ந்துகொள்ள முடியும். 

எனினும் கடந்தாண்டு மே மாதத்தில் யுத்தம் நிறைவுபெற்றதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து வந்த மாதங்களில் சுற்றுலாப்பயணிகளின் வருகையில் அதிகரிப்புக்கள் ஏற்பட்டுள்ளதை இலங்கை சுற்றுலா அதிகார சபையின் புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன 
கடந்தாண்டின் ஒவ்வொரு மாதங்களுடனும் ஒப்பிட்டுப்பார்க்கையில் இவ்வாண்டில் சுற்றுலாப்பயணிகள் வருகையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது 

இவ்வாண்டின் முதல் ஏழு மாத காலப்பகுதியிலும் இலங்கைக்கு மொத்தமாக 341 988 சுற்றுலாப்பயணிகள் வருகைதந்துள்ளனர் இது இதே காலப்பகுதியில் 2009ம் ஆண்டில் இலங்கைக்கு வருகைதந்திருந்த 229 952 சுற்றுலாப்பயணிகளுடன் ஒப்பிடும் போது 48.7வீத வளர்ச்சியாகும் . கடந்த ஓகஸ்ற் மாதத்தில் 55 898 சுற்றுலாப்பயணிகள் இங்கு விஜயம் செய்துள்ளனர் கடந்தாண்டு ஒகஸ்ற் மாதத்தில் 41207 சுற்றுலாப்பயணிகளே இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர் .ஆக மொத்தம் இந்த வளர்ச்சி தொடர்ந்தும் அதிகரித்துச் செல்வதையே காணமுடிகின்றது 

இதன் படி இவ்வாண்டில் இலங்கைக்கு வருகைதரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை ஆறுலட்சத்தை எட்டும் என இலங்கை சுற்றுலா அதிகார சபை எதிர்பார்க்கின்றது.இதுவரை காலத்தில் இலங்கைக்கு அதிகபட்சமாக 566000 சுற்றுலாப்பயணிகள் 2004ம் ஆண்டு வருகைதந்திருந்தனர் .இவ்வருட மொத்த எண்ணிக்கை இதனைத்தாண்டும் என்றே எதிர்பார்ப்புக்கள் வெளியிடப்பட்டுள்ளன 

2009ம் ஆண்டில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த 447 890 சுற்றுலாப்பயணிகளில் 59.7 வீதமானவர்கள் ஆண்களென்பதுடன் 40.3வீதமானவர்கள் பெண்களாவர். 40வயதிற்கும் 49வயதிற்கும் இடைப்பட்டவர்களே இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட சுற்றுலாப்பயணிகளில் அதிகமானவர்களாக இருந்தனர் .மொத்த எண்ணிக்கையில் இது 28.6வீதமாகும் இதற்கு அடுத்ததாக 30வயது முதல் 39வயதுவரையானவர்களில் 28.5வீதமானவர்கள் இங்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர்
 .
இலங்கைக்கு விஜயம் செய்பவர்களில் அதிக எண்ணிக்கையாளவர்கள் கடந்தாண்டில் இந்தியாவிலிருந்தே வருகை தந்திருந்தனர் .இந்தியாவில் இருந்து 83 634 சுற்றுலாப்பயணிகள் வருகைதந்திருந்தனர் அதற்கடுத்து பிரித்தானியாவில் இருந்து 81594 பேர் வருகைதந்திருந்தனர் . மாலைதீவு 31916 ஜேர்மனி 29654 அவுஸ்திரேலியா 23239பேரும் கடந்தாண்டில் வருகைதந்திருந்தனர் .

மத்திய கிழக்கு நாடுகளில் இருந்தும் பிpரான்ஸ் சிங்கபூர் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து வருகின்ற சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்படுவதாக அண்மைக்கால புள்ளிவிபரங்கள் காண்பிக்கின்றன .

சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதில் இலங்கை எதிர்நோக்கும் சவால்கள் 
இலங்கை 2016ம் ஆண்டில் நிர்ணயித்திருக்கின்ற 2.5மில்லியன்கள் என்ற சுற்றுலாப்பயணிகள் இலக்கை எட்டுவதற்கு பல சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியிருக்கின்றது 

இலங்கையில் தற்போது 14700 வரையான ஹோட்டல் அறைகளே உள்ளன.சுற்றுலாத்துறை அபிவிருத்தித்திட்டத்திற்கு அமைவாக அடுத்துவரும் ஐந்தாண்டு காலப்பகுதியில் மேலதீகமாக 30000 ஹோட்டல் அறைகளை நிர்மாணிப்பதற்கான பணிகளை ஆரம்பித்துவைத்துள்ளதாக இலங்கை சுற்றுலா அதிகாரசபையின் தலைவர் நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார் 

பாசிக்குடா சுற்றுலா அபிவிருத்தி வலயத்தில் 13 ஹோட்டல்களை நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் அதன் மூலம் அப்பிரதேசத்தின் தேவையைப் பூர்த்திசெய்வதற்கான 1000 ஹோட்டல் அறைகளை உள்ளடக்கியிருக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார் .இதனைத்தவிர குச்சவெளியில் 500 ஏக்கர் நிலப்பகுதியை சுற்றுலாத்துறை அபிவிருத்தி வலயமாக அபிவிருத்திசெய்வதற்கு சுற்றுலா அதிகார சபை திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார் 


அடுத்துவரும் இரண்டு வருடகாலப்பகுதியில் 450 ஹோட்டல் அறைகளை நிர்மாணிப்பதற்காக கல்பிட்டியிலுள்ள இரு தீவுகள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள சுற்றுலா அதிகார சபைத்தலைவர் மாலைதீவிற்கு ஈடாக உயர்மட்ட சுற்றுலாப்பயணிகளைக் கவரும் வகையில் கல்பிட்டியிலுள்ள 12 தீவுகள அபிவிருத்தி செய்யப்படுதற்காக குத்தகைக்கு விடப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் 

வடக்கு கிழக்கில் சுற்றுலா அபிவிருத்திக்கு பொருத்தமான வலயங்களை இனங்காண்பதற்காக ஆய்வொன்றை மேற்கொண்டுள்ளதாகவும் சுற்றுலா அதிகார சபைத்தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார் 

2016ம் ஆண்டில் 2.5மில்லியன் சுற்றுலாப்பயணிகளை வரவழைக்கின்ற அரசாங்கத்தின் இலக்கை அடைய வேண்டுமானால் இலங்கைக்கு வருகின்ற தலா ஒரு சுற்றுலாப்பயணிக்கு தலா நான்கு பணியாளர்களை வேலைக்கமர்த்த வேண்டும் என இலங்கை சுற்றுலாத்துறை ஹோட்டல் உரிமையாளர்களுக்கு இலக்கு கொடுத்துள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன .
இதன்படி மொத்தமாக 10மில்லியன் உள்ளுர் வாசிகள் அதாவது சனத்தொகையில் ஏறத்தாழ சரிபாதியானவர்கள் சுற்றுலாத்து ஹோட்டல்துறையில் பணிபுரிவர் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது 

இலங்கை சுற்றுலாத்துறையினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கிற்கு அமைவாக தலா ஒரு சுற்றுலாப்பயணிக்கு நான்கு பணியாளர்கள் என்ற இலக்கு பாரிய சவாலைத்தோற்றுவித்துள்ளதாக ரேணுகா ஹோட்டல் குழுமநிறுவனத்தின் இணை நிர்வாக பணிப்பாளர் அர்னிலா தம்பையா அண்மையில் இடம்பெற்ற வைபவமொன்றில் சுட்டிக்காட்டியிருந்தார் 

உயர் தராதரம் அவசியமானவிடயம் என்றநிலையில் இந்த எண்ணிக்கையானவர்களை பயிற்றுவிப்பது கடும் சவாலானவிடயம் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார் 
மத்தியவங்கியின் தரவுகளுக்கு அமைவாக கடந்தவருடத்தில் சுற்றுலா ஹோட்டல் துறை கடந்தவருடம் 124 456 பேருக்கு தொழில்வாய்ப்புக்களை வழங்கியிருந்தது இதில் 51857 பேர் நேரடித் தொழிலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது .

சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கைக்கு அமைவாக ஹோட்டல் அறைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவேண்டும் பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவேண்டும் என்ற கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்ற நிலையில் இங்கு ஒருவிடயத்தை சுட்டிக்காட்டவிரும்புகின்றேன் .

இலங்கையை விடவும் (65610 சதுரகிலோமீற்றர்) சுமார் நூறு மடங்கு சிறிய நாடான சிங்கப்பூரிற்கு (699 சதுர கிலோமீற்றர்) கடந்தாண்டில் 9.68 மில்லியன் மக்கள் விஜயம் மேற்கொண்டிருந்தனர் .இது இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டவர்களின் எண்ணிக்கையிலும் பார்க்க சுமார் 20மடங்கு அதிகமாகும் .

5.08 மில்லியன் மக்களைக் கொண்ட சிங்கப்பூர் நாடு 9.68மில்லியன் சுற்றுலாப்பயணிகளை உபசரிக்க முடியும் என்கின்ற அது எம்போன்ற நாடுகளுக்கெல்லாம் பெரும் பாடத்தை எடுத்துணர்த்திநிற்கின்றது 

இலங்கையின் சுற்றுலாத்துறையைப் பொறுத்தமட்டில் 99சதவீதமானவை தனியாருக்கு சொந்தமாக உள்ளது. ஆனாலும் சுற்றுலாத்துறைக்கு போதுமான உட்கட்டமைப்பு வசதிகள் இங்குகாணப்படவில்லை அதனிலும் மேலாக நிலையான கொள்கைகள் இல்லாமையே சுற்றுலாத்துறையின் முன்னேற்றத்திற்கு தடையாக உள்ளதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர் . 

அண்மையில் இலங்கைக்கு வருகின்றவர்கள் அனைவருக்கும் விஸா கட்டாயமாக்கப்படவுள்ளதாக அறித்தலொன்று வெளியாகியிருந்தது இந்த அறிவித்தல் வெளியாகி மூன்று மணி நேரத்திற்குள்ளாகவே அந்த அறிவித்தல் மீளப்பெறப்பட்டு இது தொடர்பில் ஆராயப்பட்டுவருவதாக செய்திகள் வெளியாகியிருந்தன .

இதுபோன்ற தெளிவில்லாத கொள்கைகள் சுற்றுலாத்துறைக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டப்படுகின்றது .

எல்லாவற்றிற்கும் மேலாக ஏனைய துறைகளின் அபிவிருத்தியைப் போன்றே சுற்றுலாத்துறையின் அபிவிருத்திக்கும் அமைதிச் சூழல் இன்றியமையாததாகும் .பல நாட்கள் படுகின்ற கஷ்டங்களெல்லாம் ஒரு அசம்பாவிதத்தினால் நஷ்டமாக போய்விடக்கூடும் என்பதை கடந்த கால படிப்பினைகள் காண்பித்துநிற்கின்றன . 

பாசிக்குடா சுற்றுலா அபிவிருத்தி வலயத்தில் இதுவரை ஒரு ஹோட்டல் நிர்மாணப்பணிமாத்திரமே இடம்பெறுவதாக இலங்கை ஹோட்டல்துறை தலைவர் ஹிரான் குரே அண்மையில் ஆதங்கம் வெளியிட்டிருந்தார் 

எதிர்பார்த்த முதலீடுகள் வந்து சேரவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார் 

சுற்றுலாத்துறையில் இன்று பாரிய அபிவிருத்தியைக்கண்டுநிற்கின்ற கிழக்காசிய நாடுகள் கடந்த பலதசாப்தகாலமாக பெரும் பிரச்சனைகள் இன்றி அமைதியாக இருந்தமை காரணமாகவே இன்றுள்ள நிலையை அடையமுடிந்தது அந்தவகையில் இலங்கையில் உண்மையான நல்லிணக்கத்துடன் கூடிய நிரந்தர சமாதானம் கட்டியெழுப்பப்பட்டால் கிழக்காசிய நாடுகளென்ன உலகமே பார்த்து வியக்கும் நாடாக அபிவிருத்தி காணமுடியும் என்பதில் ஐயமில்லை 



Thursday, September 16, 2010

குறிவகைக்கப்படுகின்ற பொருளாதார அபிவிருத்தியும் இலங்கை எதிர்நோக்கிநிற்கின்ற சவால்களும்

                         ஆக்கம் :அருண் ஆரோக்கியநாதர் 


பொருளாதார அபிவிருத்தியே போருக்குப்பின்னான இலங்கையின் மிகமுக்கியமான எதிர்பார்ப்பாக இருக்கின்றது

தற்போது 42 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அதாவது அண்ணளவாக இலங்கை ரூபாவில் 4 லட்சத்து 20 ஆயிரம் கோடிகளாக காணப்படும் இலங்கையின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக அரசாங்கம் கூறிவருகின்றது.

இலங்கையில் இருந்து வறுமையை இல்லாமல் செய்வதே அரசாங்கம் கடைப்பிடிக்கின்ற பொருளாதாரக் கொள்கைகளின் முக்கியமான நோக்கமாக காணப்படுவதாகவும் வறுமை நிலையைக் குறைப்பதனை குறியாகக்கொண்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக மத்தியவங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்திருக்கின்றார்

2007ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் 15வீதமாக காணப்பட்ட இலங்கையின் வறுமை வீதமானமான தற்போது வீழ்ச்சி கண்டிருப்பதாகவும் தமது அண்மைய மதிப்பீடுகளுக்கு அமைவாக அது 9 முதல் 10வீதத்திற்கிடையே காணப்படவேண்டும் எனவும் அலரி மாளிகையில் கடந்த வாரம் இடம்பெற்ற முன்னணி வர்த்தகப் பிரமுகர்களுடனான சந்திப்பின் போது சுட்டிக்காட்டியிருந்த மத்திய வங்கியின் ஆளுநர் இந்த இலக்கங்கள் தொடர்பாக இன்னமும் ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்திருந்தார் .

இலங்கையர்களின் ஆண்டுக்கான தலா வருமானத்தை அடுத்துவரும் ஆறு ஆண்டுகாலப்பகுதியில் இரண்டுமடங்காக அதாவது 2016ம் ஆண்டளவில் 4000; அமெரிக்க டொலர்களாக அதிகரிப்பதற்கும் அரசாங்கம் எதிர்பார்ப்புக்களைக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள அஜித் நிவாட் கப்ரால் இதற்கு முதலீடுகள் கணிசமான அளவிற்கு அதிகரிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தம் நிறைவடைந்தமை 18வது திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளமையோடு காணப்படுகின்ற முன்னெப்போதுமில்லாத அரசியல் ஸ்திரத்தன்மை ஆகியன முதலீட்டாளர்கள் நாட்டில் முதலீடுகளை மேற்கொள்வதற்கான நல்லெண்ண  ஊந்துதலை வழங்கும் எனவும அவர் கருத்துவெளியிட்டிருக்கின்றார்.
யுத்தம் நிறைவடைந்து ஒருவருடங்களுக்கும் அதிகமான காலப்பகுதி கடந்துள்ள நிலையிலும் இலங்கை எதிர்பார்த்த அளவிலான பாரிய முதலீடுகள் கிடைக்கப்பெறவில்லை என்பதை மத்திய வங்கியின் ஆளுநரின் கருத்துக்கள் கோடிட்டுக்காட்டிநிற்கின்றன

எதுவுமே தானாக அதன்பாட்டிற்கு இடம்பெறமாட்டாது இலங்கையில் வர்த்தகத்தை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் மாறவேண்டும் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கின்றது நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது ஆனால் மெதுவாகவும் உறுதியாகவும் அந்த இலக்கை அடைவோம் மாற்றங்கள் விரைவில் உணரப்படும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டிருந்தார் . இது யதார்த்த நிலையைப்பிரதிபலிக்கின்ற கூற்றாகவும் அமைந்துநிற்கின்றது

யுத்தத்தின் பின்னர் இலங்கை எதிர்பார்த்த முதலீடுகள் கிடைக்கவில்லை என்பதை கடந்தவாரத்தில் நல்லிணக்க ஆணைக்குழு முன்பாக சாட்சியமளித்த நாட்டின் முன்னணி வர்த்தகர்கள் சிலரும் சுட்டிக்காட்டியிருந்தனர்

'யுத்தம் நிறைவுபெற்று 15மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும் இலங்கையில் கணிசமான அளவிற்கு குறிப்பிட்டுக்கூறும் வகையிலான தனியார் துறை முதலீடுகள் இடம்பெறாமையானது அதிர்ச்சியைத்தருவதாகவும் குழப்பமானதாகவும் தோன்றுகின்றது ' என இலங்கையின் முதற்தர வர்த்தகக்குழுமமாக கணிக்கப்படுகின்ற ஜோன் கீல்ஸ் நிறுவனத்தின் தலைவர் சுசந்த ரத்னாயக்க குறிப்பிட்டிருந்தார் .

 நாட்டில் குறிப்பாக வடக்கு கிழக்கில் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் முதலீடுகளை மேற்கொள்ள ஆர்வம்கொள்ளும் வகையில் அரச மற்றும் தனியார் துறைகள் கூட்டிணைந்த நடவடிக்கைகளை தீவிரமாக முன்னெடுக்கவேண்டும் முதலீடுகளை மேற்கொள்ள ஆர்வமுள்ள புலம்பெயர்ந்த மக்களுக்காக அரசாங்கம் முதலீட்டுத்திட்டமொன்றையும் அறிமுகப்படுத்த வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்திருந்தார்

'கடந்த வருடத்தில் முன்னெப்போதுமில்லாதவகையில் இலங்கையை முதலீட்டாளர்களுக்கு நெருக்கமான நாடாக இலங்கை வர்த்தக சம்மேளனமானது ஊக்குவிப்பு பிரசார நடவடிக்கையை மேற்கொண்டிருந்தது ஆனபோதிலும் முதலீட்டாளர்களைக் கவர்வதற்கு அதுமாத்திரமே போதுமானதாக அமையமாட்டாது முதலீட்டாளர்களுக்கு சாதகமான சூழ்நிலை உருவாக்கப்படவேண்டும்' என இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் கலாநிதி அருண ஏக்கநாயக்க சுட்டிக்காட்டியிருந்தார்.

இலங்கை எதிர்பார்த்த அளவிலான தனியார் துறை முதலீடுகள் கிடைக்கவில்லை என்பதை சர்வதேச நாணய நிதியமும் அண்மையில் சுட்டிக்காட்டியிருந்தது

கடந்த வருடத்தின் முதல் ஆறுமாத காலப்பகுதியில் 250மில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்பட்ட வெளிநாட்டு நேரடி முதலீடுகள் இவ்வாண்டின் முதல் ஆறுமாதகாலப்பகுதியில் 208மில்லியன் அமெரிக்க டொலர்களாக வீழ்ச்சிகண்டிருக்கின்றன.

இலங்கைக்கு போதுமான முதலீகள் கிடைக்கப்பெறாவிடின் தற்போதுள்ள பொருளாதார வளர்ச்சி வேகத்தை 7வீதத்திற்கு மேலாக அதிகரிப்பது தலா வருமானத்தை இரட்டிப்பாக்குவது போன்ற அரசாங்கத்தின் இலக்குகள் எதுவுமே சாத்தியமற்றது என்பதையும் அவ்வமைப்பு சுட்டிக்காட்டியிருந்தது

எதிர்பார்த்த முதலீடுகள் கிடைக்கப்பெறாமை தொடர்பாக இவ்வாறாக அரசாங்கம் உட்பட பல்வேறு தரப்புக்களும் கரிசனைகளை வெளிப்படுத்திவருகின்ற நிலையில் இலங்கையின் அடுத்த வரவுசெலவுத்திட்டத்திற்கான ஆரம்பகட்ட தயாரிப்பு பணிகள் ஆரம்பமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை மக்களும் ஊடகங்களும் அரசியல் யாப்பின் 18வது திருத்தம் குறித்த பேச்சுக்களை படிப்படியாக மறந்து இன்னமும் சிலவாரங்களில் நவம்பர் மாதத்தில் சமர்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்ற 2011ம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டம் குறித்து இனிவரும் நாட்களில் தம் பார்வையை அதிகமாக செலுத்தப்போவதை எதிர்பார்க்க முடியும் .

2011ம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டம் தொடர்பாக தமது திட்டங்களையும் யோசனைகளையும் இம்மாதம் 30மதிகதி முன்வைக்குமாறு தொழில்சார் நிபுணர்கள் கல்விமான்கள் கலைஞர்கள் ஊடகத்துறையினர் மற்றும் பொதுமக்களிடம் அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது .
இது தொடர்பாக அழைப்புவிடுகின்ற விளம்பரமொன்றும் சில தினங்களுக்கு முன்பாக பத்திரிகையொன்றில் வெளியாகியிருந்தது

இலங்கையின் அடுத்த வரவுசெலவுத்திட்டத்திற்கான யோசனைகளை அரசாங்கம் எதிர்பார்த்துள்ள நிலையில் இலங்கையிலுள்ள முன்னணி பொருளாதார அறிஞர்களில் ஒருவராகவும்; அமெரிக்க ஜோர்ஜ் வொஷிங்டன் பல்கலைக்கழகத்தின் வருகைதரு விரிவுரையாளராவும் பருத்தித்துறை ஆய்வகத்தின் பிரதான ஆய்வாளராகவும் திகழ்கின்ற கலாநிதி முத்துக்கிருஷ்ணா சர்வானந்தனிடம் இலங்கையின் பொருளாதாரம் தொடர்பாக விளங்கக்களைக் கோரியிருந்தேன்.

கேள்வி :இலங்கைக்கும் கிடைக்கும் வெளிநாட்டு முதலீடுகள் குறைவடைந்திருக்கின்றன இதற்கும் இலங்கை அரசாங்கத்தின் தற்போதை பொருளாதாரக் கொள்கைகள் தொடர்புகள் உள்ளனவா ?

பதில் இந்த அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகள் 2006ம் ஆண்டிலிருந்து கூடியளவில் தேசியவாதத்தைக் கொண்டதாக இருக்கின்றது இராணுவநடவடிக்கைகளை தேசியவாத ரீதியில் மேற்கொண்டதுபோல் பொருளாதார அணுகுமுறைகளில் கூட ஒரு பழமைவாத தேசியவாத கொள்கைகளைத்தான் முன்னுரிமைப்படுத்திக்கொண்டுவந்தனர்

.தற்போது சற்றுத்தளர்த்தப்பட்டிருந்தாலும் கூட ஒட்டுமொத்த அளவில் கொள்கைகள் தனியார் துறைக்கு வாய்ப்பானதாகவோ அன்றேல் தனியார் துறைமுதலீடுகளை அதிகரிக்ககூடிய வாய்ப்புக்களை ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலைகளை ஏற்படுத்தவில்லை ஆகவே அரசாங்கம் வெளிநாடுகளில் இருந்தோ உள்ளுர் தனியார் துறையினரிடம் இருந்தோ முதலீடுகளைப் பெறவேண்டுமாயின் கொள்கைரீதியாக பல மாற்றங்களை மேற்கொள்ளவேண்டும்



































'ஒருபுறத்தில் புலம் பெயர் தமிழர்களிடமிருந்தும் புலம்பெயர் இலங்கையர்களிடமிருந்தும் முதலீடுகளை அரசாங்கம் எதிர்பார்க்கின்றது ஆனால் அதற்கான சூழ்நிலைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதா எனப்பார்க்கின்றபோது உண்மையில் இல்லை என்றே கூறவேண்டும்' -கலாநிதி முத்துக்கிருஷ்ணா சர்வானந்தன்





கேள்வி:இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புதவற்கு புலம்பெயர்ந்த மக்களின் பங்களிப்புக்கள் அவசியம் என்பது தற்போது வெளியாகிவரும் கருத்துக்களில் இருந்து வலுவாக உணரப்படுகின்றது புலம்பெயர் மக்களிடம் இருந்து முதலீடுகளைப் பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வர்த்தக தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் அதேபோன்று அரசாஙகத்தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டிருக்கின்றன இருந்தும் பெறுபேறுகள் எதிர்மறையாக காணப்படுகின்றதே ?

பதில் ஒருபுறத்தில் புலம் பெயர் தமிழர்களிடமிருந்தும் புலம்பெயர் இலங்கையர்களிடமிருந்தும் முதலீடுகளை அரசாங்கம் எதிர்பார்க்கின்றது ஆனால் அதற்கான சூழ்நிலைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதா எனப்பார்க்கின்றபோது உண்மையில் இல்லை என்றே கூறவேண்டும் உதாரணத்திற்கு இன்றும் வவுனியாவிற்கு மேலே வடக்கு நோக்கி செல்வதாயின் எந்தவொரு வெளிநாட்டவராக இருந்தாலும் பாதுகாப்பு அமைச்சின் அனுமதிதேவை புலம்பெயர்ந்த தமிழராக இருக்கலாம் வெளிநாட்டில் பிறந்தவராக இருக்கலாம் வெளிநாட்டு கடவுச்சீட்டைக்கொண்டவர்களுக்கு இது அவசியமாகவுள்ளது

 இதுவொரு முக்கிய விடயமாக இருக்கின்றது போர்நிறுத்த காலப்பகுதியில் இந்த விதிமுறை இருக்கவில்லை ஆகவே அதிகமான மக்கள் வந்துபோகக்கூடியதாக இருந்தது இப்போதும் வந்துபோகின்றனர் என்பதை மறுப்பதற்கில்லை ஆனால் கட்டுப்பாடு இருக்கின்றது சிலருக்கு அனுமதி கொடுத்தாலும் ஆகாய வழியாகத்தான் போகவேண்டும் என்று நிபந்தனை விதிக்கின்றாhர்கள் இலங்கை விமானப்படையின் சிறிய ரக விமானங்களில் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் சென்றுவருவதற்கு கிட்டத்தட்ட 19000ருபா செலவாகின்றது ஒருவருக்கு இவ்வளவுதொகையெனும் போது ஒரு குடும்பமாக பார்க்கையில் அதுவொரு பெரிய தொகையாக இருக்கின்றது இவ்வாறான பாதுகாப்புக்கெடுபிடிகள் இன்னமும் இருக்கின்றது .
வன்னியிலும் யாழ்ப்பாணத்திலும் உயர்பாதுகாப்பு வலயங்கள் இருக்கின்றபோதும் வடக்கே குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இராணுவ சோதனைச் சாவடிகள் பெருமளவில் குறைக்கப்பட்டிருக்கின்றன அத்தோடு போக்குவரத்து தொடர்பாகவன்றி வாகனங்களையோ நபர்களையோ வழிமறிப்பதும் பெருமளவில் குறைந்துள்ளது இவைகள் தளர்த்தப்பட்டிருந்தாலும் வேறு சில விடயங்களைக் குறிப்பிடவேண்டும் போர்நிறுத்தக்காலப்பகுதியில் மக்களிடமிருந்தோ ஏ 9 பாதையூடாகச்சென்ற வர்த்தகர்களிடமிருந்தோ அறவிட்டார்களோ அதே அளவிற்கு இல்;லாவிடினும் தற்போது யாழ்ப்பாணத்தை தளமாகக்கொண்ட அமைப்பொன்று மக்களிடமிருந்து வரிகளை அறவிட்டு வருகின்றது  போர்நிறுத்தகாலத்தில் வரிகளைவிதித்தவர்கள் வரிமூலமாக ஈட்டியதில் 10வீதமானதையே தற்போது வரிகளை அறவிடுகின்ற அமைப்பு பெறக்கூடும் .அது குறைவாகக் காணப்பட்டபோதிலும் அவ்வாறான வரிவிதிப்புக்கள் மக்களுக்கு சில கெடுபிடிகளை ஏற்படுத்தியுள்ளது வெளிநாட்டிலிருந்து வருகின்றவர்களுக்கு தயக்கத்தை ஏற்படுத்தியுள்ளது
இதை அரசாங்கம் தெரிந்தோ தெரியாமலோ விட்டுக்கொடுத்துவருகின்றது ஆனால் மக்களுக்கு தெரிகின்ற இவ்வாறான செய்திகள் வெளிநாடுகளுக்கு போகும் ஆகவே இ;வ்வாறான ஒரு சூழ்நிலையில் தற்போதெல்லாம் சுமூகமான நிலை இருக்கின்றது சுதந்திரமாக வர்த்தகர்களோ வியாபாரிகளோ செயற்படலாம் என்பதை மக்கள் பூரணமாக நம்புவதற்கு தயாரில்லை நடைமுறையில் கெடுபிடிகள் இருக்கின்றன தற்போதில்லாத போதும் வருடத்தின் ஆரம்பப்பகுதியில் சிறுவர்கள் சிலர் பணம் பெறுவதற்காக கடத்தப்பட்டனர் இதற்கெல்லாம் அரசியல் தொடர்புகள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டது. ;

அமைப்புக்களின் தொல்லைகள் வன்னியில் இல்லாவிடினும் இராணுவம் நிலைகொண்டிருக்கின்றது கூடுதலான கட்டுப்பாடான பிரதேசமாக இருக்கின்றது உட்கட்டமைப்பு வசதிகள் இன்னமும் பூரணமாக மேற்கொள்ளப்படவில்லை சில பாதுகாப்பு கெடுபிடிகள் தொடர்ந்துகொண்டுதான் வருகின்றது வன்னியில் ஏ9வீதியின் இருமருங்கிலும் இரர்ணுவத்தினரால் நடத்தப்படும் தேநீர் கடைகளுக்கோ சிகை அலங்காரநிலையங்களோ குறைந்தபாடிவில்லை ஆனாலும் ஓரளவிற்கு திரும்பப்போனவர்கள் அதாவது  தற்போது மீளக்குடியேறிய மக்கள் சில தேநீர்கடைகளை வைத்துவருகின்றனர் இராணுவத்தினரினால் நடத்தப்படும் நிலையங்கள் ஆரம்பத்தில் அவர்களது தேவைகளை நிறைவேற்றிக்கொள்கின்ற தற்காலிக செயற்பாடாகவே தோன்றியது ஆனால் யுத்தம் நிறைவடைந்து இவ்வளவு காலம் கடந்துவிட்டநிலையிலும் இதுதொடர்பில் நடவடிக்கைகளை எடுப்பதாக தெரியவில்லை இவற்றை கொள்கைவகுப்போர் கணக்கெடுப்பதாகவும் தெரியவில்லை இது எங்கேசென்று முடியுமோ தெரியவி;ல்லை இவையெல்லாம் சின்ன விடயங்கள் இரவோடிரவாகவே மாற்றியமைக்ககூடிய விடயங்கள் இவற்றைத்தான் சுசந்த ரட்ணாயக்க போன்றவர்கள் அரசாங்கத்திற்கு சுட்டிக்காட்டவேண்டும்

இவையெல்லாம் சின்ன விடயங்கள் இரவோடிரவாகவே மாற்றியமைக்ககூடிய விடயங்கள்

வெளிநாட்டு வர்த்தககர்களை ஒருபுறம் வைத்துவிட்டு உள்நாட்டு நிலைமையைப்பாருங்கள் அரசாங்கம் எவ்வளவு கேட்டுக்கொண்டபோதிலும உள்நாட்டில் உள்ள வர்த்தகர்கள் வர்த்தகத்தில் ஈடுபட்டபோதும் குறிப்பிடும் படியாக முதலீடுகளை மேற்கொள்வதைக் காணமுடியாதுள்ளது இதற்கான நடவடிக்கைகளை படிப்படியாக நடக்கும் என்று கூறிக்கொண்டுபோகின்றோம் ஆனால் யுத்தம் நிறைவடைந்து ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகளாகின்றது
ஏ 9வீதி இவ்வருடத்தில் 24மணிநேரமும் திறக்கப்பட்டத்தைத்தவிர  குறிப்பிடும்படியாக பெருமளவுவிடயங்கள் நடக்கவில்லை என்று தான் கூறவேண்டும் மக்கள் எந்தநேரமும் போய்வரக்கூடியதாக இருப்பது பெரிய காரியம் ஆனால் அதைவிட மற்ற புறநிலைச் சூழ்நிலைகளை சாதகமாக மேற்கொள்ளவேண்டும் அரசாங்கப்படைகளைத் தவிர ஏனைய ஆயுதக்குழுக்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தாதவரையிலும் வடக்கிற்கு மக்கள் சுதந்திரமாக பாதுகாப்பு அமைச்சின் அனுமதியின்றி சாதாரண நடைமுறைகளின் கீழ் சாதாரண மக்களோ வர்த்தகர்களோ செல்ல இடமளிக்கப்படும் வரையிலும் நிலைமை சுமூகமாக வருவதற்குரிய சாத்தியக்கூறுகள் தென்படவில்லை

கேள்வி: அப்படியானால் புலம்பெயர்ந்தவர்கள் நோக்கி தொடர்ச்சியாக அழைப்புக்கள் விடுக்கப்படுகின்றதே இதுபற்றி எப்படிப்பார்க்கின்றீர்கள் ?

பதில்:
அழைப்பு யாரும் விடுக்கலாம் ஆனால் அதற்கு சட்டரீதியானதொரு உத்தரவாதமில்லை வருகின்றவர்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதமளிக்கின்ற சூழ்நிலைகள் காணப்படவில்லை உதாரணமாக கூறுவதென்றால் இரண்டுகிழமைக்கு முன்னர் மட்டக்களப்பு மாநகரசபையின் உறுப்பினர் ஒருவர் காணமல் போயிருந்தார்
அதைக்கண்டுபிடிக்கமுடியாதவர்கள் எப்படி என்னைப்போன்ற உங்களைப்போன்ற சாதாரண குடிமக்களுக்கு பாதுகாப்பு தரமுடியும் முதலீட்டாளர்கள் வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியும் என்பதை எப்படி நம்பமுடியும் இவ்வாறான நம்பிக்கையூட்டும் விடயங்களில் அரசாங்கம் கவனத்தை செலுத்தவேண்டும்
கேள்வி: வடக்கு கிழக்கு பிரச்சனை விடயத்தில் ஒரு அரசியல்தீர்வு முன்வைக்கப்படாதவிடத்து புலம்பெயர்ந்த மக்கள் இங்கு முதலீடுகளை மேற்கொள்ள முன்வரப்போவதில்லை என புலம்பெயர்ந்த மக்களுடனான சந்திப்பின்போது உணர்ந்துகொண்டதாக ஐக்கியதேசியக்கட்சியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் டி எம் சுவாமிநாதன் அண்மையில் குறிப்பிட்டிருந்தார் இதில் எந்தளவிற்கு உண்மையுள்ளதாக நீங்கள் காண்கின்றீர்கள் ?

பதில்
இதுவும் ஒரு காரணம் அதாவது எந்தவொரு முதலீட்டாளரும் தூரநோக்கில் தான் பார்ப்பார்கள் குறுகிய லாபத்திற்காக நாட்டில் முதலீடுசெய்பவர்கள் கூடுதலாக பங்குச்சந்தையில் தான் முதலீடுசெய்வார்கள் ஆனால் வெளிநாட்டு நேரடி முதலீடு என்ற வகையில் நிரந்தரமாக ஒரு தொழிற்சாலையை ஆரம்பிப்பதோ பெரிய ஹோட்டலை ஆரம்பிப்பதோ நீண்டகால முதலீடு நீண்டகால முதலீடுகளைக் கவர்வதாயின் அவர் கூறிய கருத்து முற்றிலும் சரியானது அப்படியானவர்கள் ஒரு நீண்ட நிலையான சமாதானம் இருக்ககூடிய ஒரு சூழ்நிலையைத்தான் எதிர்பார்ப்பார்கள் அதற்குரிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றதா என்று தான் பார்ப்பார்கள் .பாராளுமன்றத்தில் தங்களுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருக்கின்றது என்று அரசாங்கம் கூறலாம்; .அரசியல் ஸ்திரத்தன்மை இருப்பதாக கூறலாம் ஆனால் சிறுபான்மை இனம் அப்படி நினைக்கவில்லை நம்முடைய அரசியல் ஸ்திரத்தன்மை என்பது வேறானதாகவுள்ளது.

மனக்கசப்புக்களை அகற்றக்கூடிய விதமாக அரசாங்கம் திட்டங்களை வைத்திருக்கின்றதா 30வருடங்களாக தமிழ் மக்கள் அனுபவித்த துயரங்கள் அதற்கு முன்பாக சுதந்திரம் பெற்றதில் இருந்து புறக்கணிக்கப்பட்டு வந்ததை நிவர்த்திசெய்யக்கூடிய ஏதாவது திட்டங்களை அரசாங்கம் முன்மொழிகின்றதா என்பதைப்பார்த்துத்தான் அவர்கள் செயற்படுவார்கள் இந்த விடயத்தில் அவர் கூறியது முற்றிலும் உண்மையானது புலம்பெயர்ந்த வெளிநாட்டவர்களின் முதலீடுகளை எதிர்பார்ப்பதாயின் அரசாங்கம் வேறொன்றையும் செய்யவேண்டியதில்லை 13வது திருத்தச்சட்டத்தையே முற்றுமுழுதாக நேர்மையாக நடைமுறைப்படுத்தினாலே போதும் ஏற்கனவே அது சட்டத்தில் இருக்கின்றது மனதார உள்ளார விரும்பினால் ஜனாதிபதியோ அரசாங்கமோ இதை இரவோடிரவாக நடைமுறைப்படுத்தலாம் அதேயொரு பெரும் நம்பிக்கையூட்டும் விடயமாக இருக்கும் ஆனால் நடப்பது அதற்கு புறம்பானதாகத்தான் இருக்கின்றது

கேள்வி: மக்கள் மத்தியில் நம்பிக்கையூட்டும் வகையில் தான் தென் ஆபிரிக்காவில் வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவைப் பின்பற்றி இலங்கையிலும் நல்லிணக்க ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது இது வெற்றியளிக்கும் என்பது தொடர்பில் உங்களுக்கு நம்பிக்கை உள்ளதா?

பதில்
இல்லை முற்றிலும் இல்லை என்பது எனது தனிப்பட்ட கருத்து மற்றும் மக்களின் கருத்துக்கூட எனக்குத்தெரிந்தவரையில் அப்படியான ஒரு எதிர்பார்ப்பும் இல்லை என்பதாகவே உள்ளது இதனை சுயாதீனமான குழுவாக மக்கள் கருதவில்லை இந்தக்குழு ஸ்தாபிக்கப்பட்டதன் சூழ்நிலையை நீங்கள் அறிய வேண்டும்; ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் தமக்கு பரிந்துரைகளை வழங்குவதற்காக குழுவொன்றை நியமனம் செய்ய முற்பட்ட வேளையில் அவசர அவசரமாக நியமித்தது இப்படியான ஒரு குழு உண்மையில் தேவைப்படின் அரசாங்கம் கடந்தவருடமே அதனை நியமித்திருக்கலாம்  அடுத்தாக அந்தக்குழுவில் அங்கம் வகிப்பவர்களின் நம்பகத்தன்மை முற்றிலும் அற்ற ஒரு சூழ்நிலையே இருக்கின்றது எந்தவொரு சாதாரண குடிமகனுக்கும் அந்தக்குழு மீது நம்பிக்கை கிடையாது அந்தக்குழுவில் அங்கம் வகிக்கும் ஒரு தனிநபர் கூட நேர்மையான சுதந்திரமான நியாயமுள்ள கொள்கையுடைய உறுப்பினராக எனக்கு தெரியவில்லை இந்தவொரு சூழ்நிலையில் தென் ஆபிரிக்காவில் சேர் டெஸ்மண்ட் டுட்டு அவர்களின் தலைமையில் நடந்த ஆணைக்குழுவிற்கும் இலங்கையின் ஆணைக்குழுவிற்கும் மலைக்கும் மடுவிற்கும் போன்ற பாரிய வேற்றுமையுள்ளது இதன் மூலம் பெரிதாக எதுவும் நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை இதெல்லாம் அரசாங்கத்தின் கண்துடைப்பு வேலை வெளிநாட்டு சக்திகள் வெளிநாடுகளை சற்று ஆறுதல் படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட சில நடவடிக்கைகளில் ஒன்றாகவே நான் கருதுகின்றேன்



கேள்வி: வடக்கை நோக்கி படையெடுக்கின்ற வங்கிகளும் நிதிநிறுவனங்களும் மக்கள் வைப்பிடுகின்ற பணத்தை துடைத்துக்கொண்டு தென்பகுதிக்கு கொண்டுவந்துவிடுவதாகவும் இந்த செயற்பாடுகள் நிறுத்தப்படவேண்டும் குறித்த பிரதேசத்திலேயே கணிசமான முதலீடுகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் விதிமுறைகளை வகுக்கவேண்டும் என பிரபல தனியார் வங்கியொன்றின் தலைவரொருவர் சுட்டிக்காட்டியிருப்பது பற்றிய உங்கள் அபிப்பிராயம் என்ன?


பதில்:
சேமிப்பு கணக்கில் வைப்பில் இடுபவர்களுக்கு எந்தவங்கியாக இருந்தாலும் அவர்களுக்குரிய வட்டிகிடைத்தால் பிரச்சனையில்லை அந்தப்பணத்தை அவர்கள் அந்தந்த பிரதேசங்களில் முதலீடு செய்கிறார்களோ அல்லது பிறமாவட்டங்களுக்கு எடுத்துச்சென்று முதலீடு செய்கின்றார்களோ என்பது பணம் வைப்புச்செய்கின்றவர்களின் சேமிப்பவர்களின் கரிசனையாக இருக்காது இருந்தாலும் இதற்குகூட அரசாங்கம் சில நடவடிக்கைகளை எடுக்கலாம்
ஆனாலும் இது முழுமையாக அரசாங்கத்தின் தவறல்ல பொதுவாக வடபகுதிமக்கள் குறிப்பாக யாழ்பிரதேச மக்கள் அதிக சேமிப்பு பழக்கம் உடையவர்கள் இலட்சக்கணக்கானவர்கள் வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியா இடைத்தங்கல் முகாம்களுக்குள் வந்தபோதுகூட அவர்கள் கணிசமான சேமிப்புக்களை தம்முடன் கொண்டுவந்திருந்தனர் . இலங்கைவங்கி மக்கள் வங்கிபோன்றன முகாம்களுக்குள் சென்று அவர்களது வைப்புக்களை பெற்றுக்கொண்டன என்ற தகவல்களையும் நாம் அறிந்துள்ளோம். சரித்திர ரீதியாக வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் ஏனைய சமூகத்தவருடன் ஒப்பிடும் போது முதலீடு செய்வதற்கு தயக்கம் காட்டும் சமூகத்தினர் அவர்களுக்கு வங்கியில் சேமிப்புக்கணக்கில் அன்றேல் நிலையான வைப்புக்கணக்கில் வைப்பது பாதுகாப்பு அதிகம் என எண்ணுகின்றனர்

ஒருவியாபாரத்தில் அன்றேல் உற்பத்தித்துறையில் முதலீடு செய்து தற்செயலாக லாபம் வராவிட்டால் அந்தப்பணத்தை இழக்க கூடும் என்ற பீதி அல்லது பயம் இருக்கின்றது இதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கலாம் வங்கிகளைக்கட்டாயப்படுத்தலாம் சட்டதிட்டங்கள் இருக்கின்றது குறிப்பாக மொத்த சேமிப்பு பணத்தில் ஆகக்குறைந்தது 25வீதத்தையாவது உள்ளுரிலே முதலீட்டாளர்களுக்கோ வர்த்தவர்களுக்கோ கடனாகக் கொடுக்கவேண்டும் என்ற சில நிபந்தனைகளை விதிக்கலாம் காலகாலமாக மத்தியவங்கி அப்படியான சில நிபந்தனைகளை சில கட்டுப்பாடுகளை விதித்துவந்துள்ளது இவ்வாறான நிபந்தனைகளை விதித்தாலும் கூட கடனாகப்பெற்று முதலீடு செய்வதற்குரிய வர்த்தகசமூகமொன்று இருக்கின்றதா என்பது கேள்விக்குரியதாக இருக்கின்றது

 வங்கிகள் தமது லாபத்தையும் கருத்திற்கொள்ளவேண்டும் அரசாங்கம் 25சதவீத சேமிப்பு பணத்தை அந்தப்பிரதேசத்திலேயே முதலீடு செய்யவேண்டும் என்ற நிபந்தனை விதித்தால் அந்த 25சதவீதத்தை கடனாகக் பெறக்கூடிய ஒருசமூகம் இருக்கின்றதா என்பதைப்பார்க்கவேண்டு;ம் அல்லது அந்தவங்கிக்கு அது நட்டமாக போய்விடும் ஆகவே இதை ஒரு சட்டரீதியாகவோ கொள்கைரீதியாகவோ வலியுறுத்தி நடைமுறைக்கிடமுடியாத சற்றே கடினமான விடயமாகவுள்ளது
.
ஆனால் சிலவிடயங்களை சுட்டிக்காட்டவிரும்புகின்றேன் யாழ்ப்பாணத்திற்கான தனியார் விமானசேவையை தற்போது விமானப்படை மாத்திரமே மேற்கொள்கின்றது ஏ9 வீதியாக செல்லும் போது தேநீர்கடைகளையோ சிற்றுண்டிச் சாலைகளையோ சிகையலங்கார நிலையங்களையோ பாதுகாப்பு படையினர் தான் நடத்திவருகின்றனர் இவற்றிலிருந்து பாதுகாப்பு படையினர் சற்றே படிப்படியாக விலகிக்கொண்டுவந்தார்கள் என்றால் நம்பிக்கையை ஏற்படுத்த முடியும் என்பதுடன் தனிநபர்கள் அன்றேல் தனியார் நிறுவனங்களை நடத்தக்கூடிய நிலைமையை ஏற்படுத்தலாம்.

இவ்வளவு பாரிய இழப்பை கண்டதொரு பிரதேசத்திற்கு இவை போதுமானதாக இல்லை என்பதே உண்மையானது



கேள்வி : யுத்தத்தின் நிறைவிற்கு பின்னரான வடக்கின் பொருளாதாரத்தை எப்படிப்பார்க்கின்றீர்கள் ?அங்கு மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்திகள் தொடர்பாக உங்கள் கருத்து என்ன ?

பதில்:
ஓரளவிற்கு படிப்படியான முன்னேற்றம் நடந்துவருகின்றது மீன்பிடியை எடுத்துக்கொண்டால் பாதுகாப்புக்கெடுபிடிகள் எல்லாம் பெரும்பாலும் அகற்றப்பட்டுள்ளது மயிலிட்டி போன்ற உயர்பாதுகாப்பு வலயப்பிரதேசங்களில் தற்போதும் மீன்பிடிக்க செல்லமுடியாத கடற்பிரதேமாகவுள்ளது ஆனாலும் அதிகமான பிரதேசங்களில் மீனவர்கள் தமது தொழிலை செய்யக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன அவ்வாறே விவசாயிகளுக்கு கொழும்பு விலையிலேயே கிருமிநாசினிகள்  உற்பத்திப்பொருட்களைப் பெற்றுக்கொள்ளமுடிகின்றது ஆகவே அதை வைத்துக்கொண்டு பெருமளவில் விவசாயம் செய்கின்றனர் இதெல்லாம் பாரம்பரியமான தொழில்கள் காலாகாலமாக மக்கள் செய்துவரும் தொழில்கள்

அரசாங்கத்தின் முதலீடுகளை எடுத்துக்கொண்டால் நான் அடிக்கடி அந்தப்பிரதேசங்களுக்கு சென்றுவருகின்ற ஒருவன் என்ற முறையில் வீதி அபிவிருத்தியைத்தவிர வேறொன்றும் பெரிதாக செய்வதாக தெரியவில்லை வீதி அபிவிருத்தி பாரியளவில் நடைபெறுகின்றது யாழ் -பலாலி யாழ் -பருத்தித்துறை யாழ் -காங்கேசன் துறை யாழ் -மானிப்பாய் என குடாநாட்டிலுள்ள் நான்கு பெருந்தெருக்கள் அகலமாக்கப்பட்டு நவீனமயப்படுத்தப்படுகின்றது இது ஆசிய அபிவிருத்தியின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படுகின்றது வீதி அபிவிருத்திகள் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் மேற்கொள்ளப்படுகின்றது முழுமையாக வடக்கில் தான் நடைபெறுகின்றதென கூறுவதற்கில்லை கிழக்குமாகாணம் மீட்கப்பட்டபின்னர் கூட அங்கு பல வீதிகள் பாலங்கள் அமைக்கப்பட்டன வேறும் சில உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்துப்பட்டுவருகின்றது தொலைதொடர்பு விஸ்தரிக்க்பபடுகின்றது ஸ்ரீலங்கா டெலிகொம் கைத்தொலைபேசி சேவைவழங்குநர்கள் தமது சேவைகளை விஸ்தரித்துவருகின்றனர் ஆனால் இவ்வளவு பாரிய இழப்பை கண்டதொரு பிரதேசத்திற்கு இவை போதுமானதாக இல்லை என்பதே உண்மையானது
ஒவ்வொரு சின்ன விடயமும் நாட்டிற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தக்கூடியது முதலீட்டாளர்களை பின்வாங்கச்செய்யக்கூடியதாகும்

கேள்வி: நீங்கள் இவ்வளவு கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டீர்கள் மீண்டுமாக கேட்கின்றேன் தற்போதைய நிலையில் இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு மேற்கொள்ள வேண்டிய யதார்த்த பூர்வமான நடவடிக்கைகளைகள் எப்படி அமைய வேண்டும் எனக்கூறுகின்றீர்கள் ?

பதில் : முதலில் ஆட்சி நிர்வாக முறையில் சீர்திருத்தம் வேண்டு;ம் அரசாங்கம் எவ்வளவு பலமாக இருந்தாலும் பயபீதியுள்ள அரசாங்கமாகத்தான் அது செயற்படுகின்றது எதிர்க்கட்சியுடனோ மக்களுடனனோ பாதுகாப்பு சம்பந்தமான விடயங்களிலோ பயபீதியுள்ள அரசாங்கமாகத்தான் செயற்படுகின்றது இது எந்தவொருமுதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையூட்டுவதாக இருக்காது பொருளாதாரக் கொள்கைகளை நினைத்த நினைத்தபடி மாற்றிவருகின்றனர் நிலையான உறுதியான கொள்கையொன்று கிடையாது; திடீரென உருளைக்கிழங்கிற்கு முப்பது ரூபா வரி அறவிடுவதாக அறிவிப்பு வந்ததை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.இப்படியான தற்காலிக கொள்கை ரீதியில் தான் இவர்கள் இயங்கிவருகின்றனர் .தூர நோக்கில் அன்றேல் நடுத்தர நோக்கில் பார்க்கும் போது இதுபொருளாதாரத்திற்கு அவ்வளவு சாதகமானதாக இல்லை உருளைக்கிழக்கென்பது ஒருசின்ன விடயம் ஆனால் பெரிய விடயங்களில் கூட எந்தவொரு முதலீட்டாளருக்கும் அரசாங்கத்தின் கொள்கை தொடர்பில் நம்பிக்கை ஏற்படவேண்டும் .பெரும்பாலான வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் இலங்கை விமானநிலையத்தில்  வந்தவுடன் விஸா பெறுகின்ற நடைமுறை இருந்துவருகின்றது இதனை அகற்றப்போவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன .இவ்வாறான ஒரு செய்திவந்தால் கூட உல்லாசப்பயணிகளை இலக்காகக் கொண்ட ஹோட்டல் துறையில் முதலீடுசெய்பவர்கள் பலவிதமாக சிந்திப்பார்கள் தமது முதலீடுகள் பிரயோசனப்படுமா என்று சிந்திப்பார்கள் இவ்வாறான பல உதாரணங்களை எடுத்துக்கொள்ளலாம்  அரசாங்கம் இப்படியான விடயங்களில் தீர்க்கமாக சிந்தித்து முடிவெடுக்க வேண்டும் முடிவெடுக்கும் முன்பாகவே இப்படியானதொரு செய்தியை பரப்பிவிட்டால் அது முதலீட்டாளர்களை பின்வாங்கச் செய்கின்ற ஒருகாரியமாக அமைந்துவிடும் அரசாங்கம் மேற்கொள்ளுகின்ற ஒவ்வொரு நடவடிக்கையையும் ஊடகங்களுக்கும் மக்களுக்கும் வெளிப்படுத்தும் முன்பாக தீர்க்கரமான வகையில் முடிவுகளை; எடுத்திருக்கவேண்டும் சிந்தனையில்லாமல் அவசரமாக மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகள் பல்வேறு பொருளாதார தாக்கங்களை ஏற்படுத்தக்கூடியது இவ்வாறாக பல உதாரணங்களை எடுத்துக்கொள்ளலாம் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் இன்னமும் தனியார் துறையினருக்கோ வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கோ பூரணமாக நம்பகத்தன்மையை ஏற்படுத்தக்கூடியதாக இல்லை அரச தரப்பில் ஒருசாரர் தேசியப்பாதுகாப்பிற்கே முன்னுரிமை என கருத்துக்களை வெளியிடும் போது இன்னொருதரப்பினரோ யுத்தத்தை வென்றாகிவிட்டது இனிமேல் பொருளாதார அபிவிருத்தியே முக்கியம் என கருத்துக்களை வெளியிடுகின்றனர் இவ்வாறான முரண்பட்ட கருத்துக்களை அரசாங்கத்திலுள்ள வௌ;வேறு தரப்பினர் கூறுவதால் பாரிய வகையில் முதலீட்டாளர்களின் நம்பகத்தன்மையை இழக்கின்றனர் இவை மிகவும் உணர்வுபூரணமான விடயங்கள் இவற்றை பற்றி பொதுமக்கள் முன்பாக பேசும் போது கவனமாக இருக்க வேண்டும் பொதுவாக பார்க்கையில் மனித உரிமைகள் நிலைமை எவ்வளவோ வெகுவாக முன்னேறியிருக்கின்றது ஆனாலும் இன்னமும் முன்னேற்றம் அவசியமாகவுள்ளது ஏற்கனவே குறிப்பிட்டது போன்று மாநகரசபை உறுப்பினரொருவர் காணமல் போயிருக்கின்றார் இரண்டு வாரங்கள் ஆகியும் அவரைக்கண்டுபிடிக்க முடியாமல் இருக்கின்றது அப்படியான சூழ்நிலையில் நாம் எப்படி மனிதப்பாதுகாப்பைக்குறித்து நம்பிக்கை கொள்ளமுடியும் ஒவ்வொரு சின்ன விடயமும் நாட்டிற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தக்கூடியது முதலீட்டாளர்களை பின்வாங்கச்செய்யக்கூடியதாகும் அடுத்ததாக  வடக்கு கிழக்கைப் பொறுத்தவரையில் வேறு பாரிய தீர்வுத்திட்டத்தை முன்வைக்காவிடினும் 13வது திருத்தத்தை முழுமையாக நேர்மையாக நடைமுறைப்படுத்தி மாகாண முதலமைச்சரும் அவரது சபையும் மத்திய அரசாங்கத்தின் தலையீடின்றி செய்யக்கூடிய வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கமுடியும் மத்திய அரசாங்கம் நேரடியாக வேண்டுகோள் விடுப்பதை விடவும் வடக்கு அன்றேல் கிழக்கு முதலமைச்சர்கள் நேரடியாக புலம்பெயர்ந்தவர்களிடம் வேண்டுகோள் விடுத்தால் அதன் பிரதிகூலங்கள் அதிகமானதாக இருக்கும் ஆனால் அப்படி முதலீட்டாளர்களை வரவழைத்தால் அதற்குரிய சட்டப்பாதுகாப்பை மத்திய அரசாங்கம் தான் வழங்கவேண்டும் இதற்கான சூழ்நிலைகளை அரசாங்கம் மேற்கொள்ளவேண்டும் தனியார்துறைக்கு முன்னுரிமை கொடுப்பதாக வாயால் சொல்வதை விடவும் நடைமுறையில் செய்துகாட்டவேண்டும் ஆட்சிமுறையில் முன்னேற்றம் காணப்படவேண்டும் ஏற்கனவே சட்டத்திலுள்ளதை அமுல்படுத்தி பிராந்தியங்களை சுயாதீனமாக இயங்க விடவேண்டும் அதைவிடுத்து அரசியல் லாபங்களைக் கருதி அவரைக்கொண்டு இவரைக்கொண்டுவந்து அது செய்யப்போகின்றோம் இதுசெய்யப்போகின்றோம் என்று பூச்சாண்டி காட்டுவது மக்களுக்கு நம்பிக்கையைத்தருவதாக இல்லை'.

இலங்கை எதிர்பார்த்துநிற்கின்ற பொருளாதார அபிவிருத்தி என்பது வெறுமனே பொருளாதாரம் சார்ந்த விடயங்களில் மாத்திரம் தங்கிநிற்கவில்லை என்பதையே கலாநிதி முத்துக்கிருஷ்ண சர்வானந்தன் தெரிவித்த கருத்துக்களில் இருந்து உணர்ந்துகொள்ள முடிகின்றது
 டெய்லி நியூஸ் பத்திரிகை கடந்த 8ம்திகதி அதன் ஆசிரியர் தலையங்கத்தில் புலம்பெயர்ந்த மக்களை கவர்ந்திழுக்கின்றவகையில் இலங்கையின் புறச்சூழ்நிலையில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் எனச் சுட்டிக்காட்டியிருந்தது

தற்போதுள்ள பாதுகாப்பு நடைமுறைகளில் படிப்படியாக குறைப்புக்களை மேற்கொண்டால் புலம்பெயர்ந்த மக்கள் இந்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ள ஊக்குவிக்கமுடியும் எனவும் காலவோட்டத்தில் எஞ்சியிருக்கின்ற அவசரகாலச்சட்ட விதிகளையும் நீக்கிவிடுவதன் மூலமாக பாரியளவில் புலம்பெயர்ந்த முதலீட்டாளர்களை இலங்கையை நோக்கி கவர்ந்திழுப்பதற்கான பின்னணியை ஏற்படுத்த முடியும் எனவும் சுட்டிக்காட்டியிருந்தது

இந்த வகையில் நம்பிக்கையை கட்டியெழுப்புகின்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலமாக இலங்கையை நிலையான பொருளாதார அபிவிருத்தி நோக்கி வழிநடத்தவேண்டும் என்பதே மக்களின் எதிர்பாகாவும் இருக்கும் என்பதில் ஐயமில்லை
                                                                         Published on Virakesari Daily 16/09/2010

Wednesday, September 8, 2010

18வது திருத்தம் தொடர்பான பன்முகப் பார்வைகள்

                                                        அருண் ஆரோக்கிய நாதர் 
http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=26987

இலங்கையின் அரசியல் வரலாற்றில் இன்றைய தினம் முக்கியத்துவம் பெறப்போகின்றது நாட்டின் எதிர்காலப்போக்கைத் தீர்மானிக்கப்போகின்ற அரசியல் திருத்தம் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டு வாக்கெடுப்பிற்கு விடப்படவுள்ளது

18வது திருத்தம் எனப் பெயரிடப்பட்டுள்ள அரசியல் யாப்புத்திருத்தமானது நிறைவேறப்போவது உறுதியென்ற அசையா நம்பிக்கையிலுள்ள அரசாங்கம் இன்றையதினம்160ற்கு மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களிப்பர் எதிர்பார்ப்பை வெளியிட்டுள்ளது

மறுமுனையில் தோல்வி உறுதியாகிவிட்டதை உணர்ந்துகொண்டுள்ள எதிர்க்கட்சிகளும் சிவில் சமூக அமைப்புக்களும் இறுதிநேரத்திலேனும் இதனைத் தடுத்து நிறுத்திவிடவேண்டும் என் கங்கணம் கட்டிக்கொண்டு களமிறங்கியிருக்கின்றன.

 தமது முயற்சிகள் வெற்றிபெறுவதற்கு வாய்ப்பில்லை என்றாலும் ஆண்டாண்டு காலத்திற்கு இலங்கையின் எதிர்கால அரசியலை தீர்;மானிக்கப்போகின்ற இந்த அரசியல் யாப்புத்திருத்தம் தொடர்பில் தமது எதிர்ப்பை பதிவுசெய்கின்ற நடவடிக்கையில் இறங்கியிருக்கின்றன

கடந்த வாரம் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 59வது ஆண் நிறைவு விழாவில் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ 'இது சூரியனும் நிலவும் இருக்கும் வரையில் இருக்க வேண்டிய அரசியலமைப்பல்ல. நாட்டு மக்களின் தேவைகளுக்கு ஏற்ப அது மாறவேண்டும். அபிவிருத்தி மற்றும் நாட்டின் தேசிய ஒருமைப்பாடு போன்றவற்றுக்காக மாற வேண்டும். மக்களின் இறைமையைப் பலப்படுத்தும் அரசியலமைப்பாக இருக்க வேண்டும். இதற்கமைய இவை மாற வேண்டிய காலம் எழுந்துள்ளது'எனக் குறிப்பிட்டிருந்தார்

அத்தோடு உத்தேச அரசியலமைப்புத் திருத்தத்தில் கூறப்படுவது போல் ஆபத்தான விடயங்கள் எதுவும் கிடையாதென்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியிருந்தார் .

இந்த திருத்தம் தொடர்பில் மாறுபட்ட கருத்துக்கள் தற்போது முன்வைக்கப்பட்டுள்ளன .உத்தேச அரசியல் யாப்புத்திருத்தமானது ஜனநாயகத்திற்கு முரணானது ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்துவிடும் ஜனநாயக நிறுவனங்களின் செயற்பாடுகள் முற்றாக முடக்கப்பட்டு விடும் .சர்வாதிகாரத்தை நோக்கி நாட்டை இட்டுச் செல்லும் நாட்டை இருள் சூழு;ந்த காலப்பகுதிக்கு கொண்டுசெல்லும் போன்ற குற்றச்சாட்டுக்களை திருத்தத்தை எதிர்க்கின்ற எதிர்க்கட்சிகளும் சிவில் சமூக நிறுவனங்களும் ஊடகங்களும் பொதுவாக முன்வைத்துநிற்கின்றன .

             புத்திஜீவிகள் பார்வையில் ....

ஏன் ஜனாதிபதிகளின் பதவித் தவணைக்கால வரையறையை நீக்குவது தவறானது ?

ஏன் ஜனாதிபதிகளின் பதவித் தவணைக்கால வரையறையை நீக்குவது தவறானது ? என்ற தலைப்பில் பேராசிரியர் ரொஹான் சமரஜீவ எழுதியுள்ள கட்டுரையில் மேற்படிக்கேள்விக்கு சாதாரணப் பதிலைததானும் வழங்க  எதிர்க்கட்சிகள் தவறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளதுடன் ஜனாதிபதியொருவர் இரண்டுதவணைகளுக்கு மேல் பதவிவகிப்பதை தடுக்கும் அரசியல்யாப்பிலுள்ள தற்போதைய வரையறையை நீக்குவது தவறானது என்பதை ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டியுள்ளார் .
















தேர்தல் காலத்தின் போது அரச இயந்திரக்களை வெளிப்படையாகவே துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தக்கூடியவகையிலான கட்டுக்கடங்கா அதிகாரங்களை பதவியிலிருப்பவர்கள் கொண்டுள்ளமை காரணமாக பதவியிலிருக்கும் ஜனாதிபதியொருவரை அரியாசனத்திலிருந்து அகற்றுவது சாத்தியமற்றது எனக் குறிப்பிட்டுள்ளார்

உத்தேச அரசியல்யாப்புத்திருத்தமானது தீர்க்கரமான நெருக்கடி நீக்க பொறிமுறையை இல்லாது செய்துவிடுகின்றதென குறிப்பிட்டுள்ள பேராசிரியர் ரொஹான் சமரஜீவ 12வருடகாலத்திற்கு ஒருமுறையேறும் அதிகாரமாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையையும் இல்லாமல் செய்துவிடுவதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலைமையானது அதிகாரக் கட்டமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்த விரும்புகின்றவர்கள் வேறுவழியில்லாத நிலையில் சதிமுயற்சிகள் அன்றேல் மக்கள் சக்தியுடான போராட்டங்களை நடத்துவதற்கு நிர்பந்திக்கப்படும் நிலை ஏற்படும் என எச்சரித்துள்ள பேராசிரியர் ரொஹான் சமரஜீவ உத்தேச அரசியல்யாப்பு திருத்தங்களின் உடனடிப் பயனாளிகள் உட்பட அனைவருக்குமே இது தீங்கானதென சுட்டிக்காட்டியுள்ளார்

தற்போதுள்ள அரசியல்யாப்பிற்கமைவாகவே பதவியிலுள்ள ஜனாதிபதியொருவரைத்; தோற்கடிப்பது எத்தகைய கஷ்டமானதென்பதை ஆதாரங்களுடன் பேராசிரியர் முன்வைத்துள்ளார்.

வேட்பாளர்களிடையே கடும் போட்டி காணப்பட்ட 1989ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி வேட்பாளர் ரணசிங்க பிரேமதாஸ குறைந்த வாக்குவித்தியாசத்தில் வெற்றியீட்டினார் அவர் அப்போது ஆளும் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தபோதும் நடப்பு ஜனாதிபதியாக இருக்கவில்லை.1994ம் ஆண்டில் எதிர்க்கட்சி வேட்பாளர் சந்திரிக்கா குமாரதுங்க வெற்றிபெற்றார் .அந்த தேர்தலிலும் ஜனாதிபதியாக இருந்த டி பி விஜேதுங்க போட்டியிடவில்லை 2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் 1989ம் ஆண்டிலும் பார்க்க மிகக்குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் மஹிந்த ராஜபக்ஷ வெற்றிபெற்றார் .அப்போது கூட பதவியிலிருந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டிருக்கவில்லை

ஜனாதிபதி பதவியில் இருந்தவர்களே இரண்டாவது தவணைக்காலத்திற்காக போட்டியிட்ட 1982இ1999 மற்றும் 2010ம் ஆண்டு தேர்தல்களில் எதிர்க்கட்சி வேட்பாளர்களுக்கு எவ்வித சந்தர்பங்களோ நம்பிக்கையோ இல்லாத நிலைமை காணப்பட்டதாக பேராசிரியர் ரொஹான் சமரஜீவ சுட்டிக்காட்டியுள்ளார்

2010ம் ஆண்டு தேர்தலின் போது ஒட்டுமொத்த அரச இயந்திரமும் எதிரணிவேட்பாளரை தோற்கடிப்பதற்காக பயன்படுத்தப்பட்டதாக சுட்டிக்காட்டியுள்ள பேராசிரியர் சமரஜீவ இது 1982ம் ஆண்டு இடம்பெற்ற தேர்தல்களுக்கு எவ்வகையிலும் வித்தியாசமானதல்ல அந்த தேர்தலில் எதிரணி ஜனாதிபதி வேட்பாளர் வாக்களிப்பதற்காக வாக்குச் சாவடிக்கு சென்றபோது தனது வாக்கு ஏற்கனவே பதிவுசெய்யப்பட்டிருப்பதைக்கண்டு அதிர்ச்சியுற்றாhர் என தனது கட்டுரையில் பேராசிரியர் ரொஹான் சமரஜீவ குறிப்பிட்டுள்ளார்

தாரண்மைவாத ஜனநாயக முறைமையையே ஆட்டங்காணச்செய்துவிடும்
                                  கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து

மாற்றுக்கொள்கைக்கான ஆய்வுநிலையத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து கருத்துவெளியிடுகையில் 18வது திருத்தம் என்பது அதிகாரத்தை ஒருங்கிணைத்து மேலும் வலுப்படுத்துகின்ற செயற்பாடெனத் தெரிவித்தார்

அரசியல் என்பது அதிகாரம் சம்பந்தப்பட்டதாகும்  அரசியல்யாப்பு என்பது அளவிற்கு மீறிய அதிகாரக் குவிப்பில் இருந்தும் பிரயோகத்திலிருந்தும் மக்களைப்பாதுகாப்பது பற்றியதாகும் எனக் குறிப்பிட்ட கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து  அரசியல்வாதிகளுக்கு ஆட்சிசெய்வதற்கான அதிகாரம் தேவைப்படுகின்ற அதேவேளை தமது அடிப்படை உரிமைகளையும் சுதந்திரங்களையும் அனுபவித்து மகிழ்வதற்கு வழிகோலுகின்ற கட்டமைப்பை உருவாக்குவதற்கே மக்களுக்கு அரசாங்கம் தேவைப்படுகின்றது அந்தவகையில் அரசியல் யாப்பின் 18வது திருத்தமானது மக்களைப் பாதுகாக்கின்றதா அன்றேல் மக்களின் உரிமைகளையும் சுதந்திரங்களையும் அபாயத்திற்குட்படுத்துகின்ற அளவிற்கு அதிகாரத்திலுள்ளவர்களது வரப்பிரசாதங்களை வலுப்படுத்துகின்றதா எனச் சிந்திக்க வேண்டும் என கலாநிதி பாக்கிய சோதி சரவணமுத்து தெரிவித்தார்

நிறைவேற்று அதிகாரத்திலுள்ளவர்களுக்கு சார்பானதான அரசியல்யாப்புத் திருத்தம் மேற்கொள்ளப்படுவது இது முதற்தடவையல்ல எனச் சுட்டிக்காட்டும் மாற்றுக்கொள்கைக்கான அய்வு நிலையத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் அரசியல்யாப்பில் மேற்கொள்ளவுள்ள உத்தேச திருத்தங்களுக்கு அப்பால் அது செயற்படுத்தப்பட்ட விதமானது ஜனநாயக ஆட்சியின் விழுமியங்களுக்கு நெறிமுறைகளுக்கும் ஒருசொட்டு மரியாதையைத்தானும் கொடுக்கவில்லை என்பதையே காண்பித்து நிற்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்




















அவர் மேலும் கருத்துவெளியிடுகையில்

'தற்போது ஜனாதிபதியும் அவரது ஆதரவாளர்களும் தமது தரப்பு நியாயப்படுத்தலுக்காக மக்கள் தெரிவுசெய்தால் மாத்திரமே மூன்றாவது தடவையும் ஜனாதிபதியாக தெரிவாக முடியும் எனக் கூறலாம் .இதற்கு பதிலாக கடைசியாக நடைபெற்ற தேர்தல்களின் போது எமக்கு கிடைத்த அனுபவங்களை எடுத்துக்கொள்ளமுடியும் .தற்போது என்ன நடைபெற்ற நிகழப்போகின்றதென்றால் மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதிக்கு ஜே ஆர் ஜெயவர்த்தனவின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்குரிய அதிகாரங்களும் அதற்கு அதிகமானவையும் கிடைக்கப்போகின்றது இது எதை அர்த்தப்படுத்துகின்றதென்றால் ஜனாதிபதியின் அதிகாரங்கள் தொடர்பில்; எந்தவிதமான வரையறைகளையோ பொறுப்புக்கூறும் தன்மையையோ இல்லாமல் போய்விடும் நிலைமை ஏற்படும் இந்நிலைமையானது எம்மையை சர்வாதிகாரத்தன்மை கொண்ட ஆட்சியின் பால் கொண்டு செல்லுமாகையால் அது இந்த நாட்டின் ஜனநாயகத்திற்கு மிகவும் பாரதூரமான அச்சுறுத்தலை உண்டுபண்ணும் அபாயநிலை காணப்படுகின்றது

இந்த நாட்டிலுள்ள மக்கள் பலமான அரசாங்கம் என கூறப்படுகின்ற அந்த அரசாங்கம் தமக்கு தேவைதானா எனத் தம்மைத்தாமே கேள்விக்குட்படுத்தவேண்டும் தற்பொது முன்னுரிமை அளிக்கப்படுவதான பொருளாதார அபிவிருத்தியை நோக்கி இட்டுச்செல்லக்கூடியவர் என்பதனால் .தனிநபர் ஒருவருக்கு அதிகளவான அதிகாரம் குவிந்திருக்கும் நிலைமை அவசியமா அன்றேல் சுயாதீன ஆணைக்குழுக்கள் பொறுப்புக்கூறும் தன்மை வெளிப்படைத்தன்மை போன்றவற்றை உள்ளடக்கிய முறையான ஜனநாயக நல்லாட்சியுடன் பொருளாதார அபிவிருத்தி அவசியமா என மக்கள் சிந்திக்க வேண்டும் சமீபத்தில் மேர்வின் சில்வாவிற்கு கிடைத்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உள்விசாரணை முடிவை சுட்டிக்காட்ட விரும்புவிரும்புகின்றேன்  விசாரணைகளில் மேர்வின் சில்வா குறித்த சமுர்த்தி அதிகாரியை மரத்தில் கட்டியமைக்கான சான்றுகள் இல்லை என தெரிவிக்கப்பட்டிருக்கின்றது இதற்கமைய தற்போது அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் களனி பிரதேசத்திற்கான பிரதான அமைப்பாளராக மீண்டும் பதவியில் அமர்த்துவதற்கு இடமுள்ளது மீண்டும் அவருக்கு பிரதியமைச்சர் பதவியும் கிடைக்கலாம் என எதிர்பார்க்க முடியும் நவம்பர் மாததில் அவர் அமைச்சரானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை

இங்கே சுட்டிக்காட்டப்படவேண்டிய விடயம் யாதெனில் ஊடகங்கள் முன்னிலையிலும் பொலிஸார் முன்னிலையிலும் மக்கள் முன்னிலையிலும் குறித்த சமுர்த்தி அதிகாரியை மேர்வின் சில்வா மரத்தில் கட்ட உத்தரவிட்டிருந்தார் ஜனநாயக விழுமியங்களைக் கொண்ட வேறெந்த நாடாக இருந்தாலும் மேர்வின் சில்வா செய்த செயலுக்கு சட்டத்தின் முன்நிறுத்தப்பட்டிருப்பார் ஆனால் இங்கு நிலைமை அப்படியல்ல சட்டத்தின் ஆட்சி சட்டத்தின் முன்பாக சமமானதன்மை  மக்களன் அடிப்படை உரிமைகளை உள்ளடக்கியதான இந்த நாட்டின் அரசியல்யாப்பிற்கு மதிப்பளிக்கும் தன்மை போன்ற விடயங்களில் காண்பிக்கக்கூடிய முன்னூதாரணம் இப்படியானதாக இருக்கக்கூடாது அந்த வகையில் இந்த அரசியல் யாப்புதிருத்தம் நிறைவேற்றப்படுவது இலங்கையைப் பொறுத்தவரையில் கவலையளிக்கின்ற விடயமாகும் இது ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட செயற்பாடாக காணப்படுகின்றது அரசியல்கட்சிகள் தத்தமக்குரித்தான பல்வேறு காரணங்களுக்காக ஜனாதிபதிக்கு ஆதரவளித்து மூன்;றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை வழங்கப்போகின்றன எதிர்க்கட்சிகள் மிகவு;ம் பலவீனமாக உள்ளதுடன் மக்களை அணிதிரட்டிக்கொண்டு ஜனநாயக உரிமைகள் மற்றும் சுதந்திரத்தின் வீழ்ச்சிக்கு எதிராக காத்திரமான போராட்டத்தை முன்னெடுக்க முடியாதளவிற்கு உட்பூசலில் சிக்குண்டிருக்கின்றன அந்தவகையில் தாராண்மைவாத ஜனநாயகத்தன்மை மற்றும் அரசியல் யாப்புவாதம் ஆகியவற்றின் அத்திரவாரங்கள் ஆட்டங்காண்பதான இலங்கையின் நிலைமை கவலைக்குரியதாகும்'



ஊடகங்கள் பார்வையில்

ஒரு தேசத்தின் மரணம் என்ற தலைப்பில் ஆசிரியர் தலையங்கத்தை இம்முறை எழுதியிருந்த சன்டே லீடர் பத்திரிகை நீங்கள் புதிய அரசியல்யாப்பின் வடிவத்தை காணவேண்டுமாக இருந்தால் கடைசியாக இடம்பெற்ற இரு தேர்தல்களையும் திரும்பிப்பாருங்கள்
எனக்குறிப்பிட்டுள்ளதுடன் 'எதிர்காலம் பற்றிய தரிசனம் உங்களுக்கு அவசியமானதாக இருந்தால் சதா காலத்திற்கும் உங்கள் முகத்தின் மீது இரும்புப்;பாதணியொன்று பதிந்திருப்பதை கற்பனைசெய்துகொள்ளுங்கள்' என அரசியல் எழுத்தாளரான ஜோர்ஜ் ஒர்வெல்லின் கூறிய கூற்றொன்றை சுட்டிக்காட்டியுள்ளது.இது அரசியல்யாப்பே அல்ல மாறாக மடமைத்தனம் இது மக்னா கார்டாவிலும் (அரசரின் அதிகாரத்தை முதன் முதலில் வரையறை செய்து கட்டுப்பாடுகளை விதித்த 13ம் நூற்றாண்டுகால ஆவணம்) பார்க்க இலங்கையை ஒரு அடி பின்னோக்கி நகர்த்திச்செல்கின்றது.இலங்கையைப் பொறுத்தவரையில் மன்னரிடம் மீண்டும் அதிகாரங்களை கையளிக்கும் செயற்பாட இடம்பெறுகின்றது அரசியல் சாசனமென்பது அடுத்த 10வருடங்கள் குறித்தோ அன்றேல் 50வருடங்கள் குறித்தோ எண்ணிப்பார்க்க கூடாது மாறாக அது அடுத்துவரும் பல நூறு ஆண்டுகள் குறித்து எண்ணிப்பார்க்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது .அது சிறப்பான சூழ்நிலைகளை கருத்திற்கொண்டு வடிவமைக்கப்படலாகாது மாறாக மோசமான சூழ்நிலைகள் ஏற்பட்டால் அதனை எதிhகொள்வதனை கருத்திற்கொண்டு வடிவமைக்கப்படவேண்டும்.அரசியல் சாசனமென்பது ஒருவரை மனதில் நிறுத்தியன்றி மக்களை மனதில் நிறுத்தி மேற்கொள்ளவேண்டியது என சன்டே லீடர் தெரிவித்துள்ளது

மறுமுனையில் அரசியல்யாப்புத்திருத்தங்கள் வரவேற்கத்தக்கது என்ற தலைப்பில் ஆசிரியர் வரைந்திருந்த சன்டே ஒப்சேவர் பத்திரிகை ஜனநாயக முறைமையின் கீழ்  ஜனாதிபதி பதவிக்கோ வேறெந்த பதவிக்கோ ஒருவர் மீண்டுமாக பெரும்பான்மை மக்களின் வாக்குகளால்; தேர்ந்தெடுக்கப்படுவதை தடுக்ககூடாது எனக்குறிப்பிட்டுள்ளதுடன் ஒரு இரண்டு தடவை பதவிவகித்தார் என்ற காரணத்திற்காக மாத்திரம் ஜனாதிபதித் தேர்தலில் மீண்டுமாக போட்டியிடுவதை தடுக்க கூடாது என தெரிவித்துள்ளது பெரும்பான்மையான மக்கள் மூன்றாவது தடவையாகவும் முன்னாள் ஜனாதிபதியொருவரைத் தேர்ந்தெடுக்க விரும்பினால் உண்மையாகவே ஜனநாயகத்தன்மை கொண்டதான ஒரு அரசியல் யாப்பு அதற்கு தடையாக இருக்க கூடாது எனச் சுட்டிக்காட்டியுள்ளது.

தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர்கள் பற்றி அரசியலமைப்பின் 92 ஆவது சரத்தில் குறிப்பிடப்படுகிறது. மனநோயாளி, இலஞ்சம் பெற்றோர், வங்குரோத்துக்காரர்கள் போன்றோர் தகுதியற்றவர்கள் என இதில் சுட்டிக்காட்டப்படுகிறது. இருமுறை மக்களின் வாக்குகளால் தெரிவான ஒருவரும் இவர்களில் ஒருவராக இருக்க முடியாது. வேறெந்த தலைவர்களையும் விடவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவே அதிக  தேர்தல்களை நடத்தியதுடன் ஜனநாயகத்திலும் அதீத நம்பிக்கை வைத்து செயற்பட்டவர்; எனக் கூறியுள்ளது மக்களுடன் நெருக்கமான ஜனாதிபதி ஒருபோதுமே தீங்கான அரசியல்யாப்பு திருத்தங்களை முன்வைக்க மாட்டார் என்பதையே நிருபிக்கப்பட்டதான அவரது கடந்த கால வரலாற்றுத்தடங்கள் உணர்த்திநிற்பதாகவும் அப்பத்திரிகை குறிப்பி;ட்டுள்ளது

முடிவாகிவிட்டுள்ள 18வது திருத்தம் குறித்து இவ்விதமாக முடிவற்று நீண்டு செல்கின்ற வாதப்பிரதிவாதங்களுக்கு மத்தியில் இலங்கையில் இன்றையதினம் மேற்கொள்ளப்படவுள்ள அரசியல்திருத்தமானது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தப்போகின்றதென்பதற்கு காலம்தான் பதில்சொல்ல வேண்டும் .





                                                                               Published on Virakesari Daily 08/09/2010