Wednesday, September 8, 2010

18வது திருத்தம் தொடர்பான பன்முகப் பார்வைகள்

                                                        அருண் ஆரோக்கிய நாதர் 
http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=26987

இலங்கையின் அரசியல் வரலாற்றில் இன்றைய தினம் முக்கியத்துவம் பெறப்போகின்றது நாட்டின் எதிர்காலப்போக்கைத் தீர்மானிக்கப்போகின்ற அரசியல் திருத்தம் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டு வாக்கெடுப்பிற்கு விடப்படவுள்ளது

18வது திருத்தம் எனப் பெயரிடப்பட்டுள்ள அரசியல் யாப்புத்திருத்தமானது நிறைவேறப்போவது உறுதியென்ற அசையா நம்பிக்கையிலுள்ள அரசாங்கம் இன்றையதினம்160ற்கு மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களிப்பர் எதிர்பார்ப்பை வெளியிட்டுள்ளது

மறுமுனையில் தோல்வி உறுதியாகிவிட்டதை உணர்ந்துகொண்டுள்ள எதிர்க்கட்சிகளும் சிவில் சமூக அமைப்புக்களும் இறுதிநேரத்திலேனும் இதனைத் தடுத்து நிறுத்திவிடவேண்டும் என் கங்கணம் கட்டிக்கொண்டு களமிறங்கியிருக்கின்றன.

 தமது முயற்சிகள் வெற்றிபெறுவதற்கு வாய்ப்பில்லை என்றாலும் ஆண்டாண்டு காலத்திற்கு இலங்கையின் எதிர்கால அரசியலை தீர்;மானிக்கப்போகின்ற இந்த அரசியல் யாப்புத்திருத்தம் தொடர்பில் தமது எதிர்ப்பை பதிவுசெய்கின்ற நடவடிக்கையில் இறங்கியிருக்கின்றன

கடந்த வாரம் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 59வது ஆண் நிறைவு விழாவில் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ 'இது சூரியனும் நிலவும் இருக்கும் வரையில் இருக்க வேண்டிய அரசியலமைப்பல்ல. நாட்டு மக்களின் தேவைகளுக்கு ஏற்ப அது மாறவேண்டும். அபிவிருத்தி மற்றும் நாட்டின் தேசிய ஒருமைப்பாடு போன்றவற்றுக்காக மாற வேண்டும். மக்களின் இறைமையைப் பலப்படுத்தும் அரசியலமைப்பாக இருக்க வேண்டும். இதற்கமைய இவை மாற வேண்டிய காலம் எழுந்துள்ளது'எனக் குறிப்பிட்டிருந்தார்

அத்தோடு உத்தேச அரசியலமைப்புத் திருத்தத்தில் கூறப்படுவது போல் ஆபத்தான விடயங்கள் எதுவும் கிடையாதென்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியிருந்தார் .

இந்த திருத்தம் தொடர்பில் மாறுபட்ட கருத்துக்கள் தற்போது முன்வைக்கப்பட்டுள்ளன .உத்தேச அரசியல் யாப்புத்திருத்தமானது ஜனநாயகத்திற்கு முரணானது ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்துவிடும் ஜனநாயக நிறுவனங்களின் செயற்பாடுகள் முற்றாக முடக்கப்பட்டு விடும் .சர்வாதிகாரத்தை நோக்கி நாட்டை இட்டுச் செல்லும் நாட்டை இருள் சூழு;ந்த காலப்பகுதிக்கு கொண்டுசெல்லும் போன்ற குற்றச்சாட்டுக்களை திருத்தத்தை எதிர்க்கின்ற எதிர்க்கட்சிகளும் சிவில் சமூக நிறுவனங்களும் ஊடகங்களும் பொதுவாக முன்வைத்துநிற்கின்றன .

             புத்திஜீவிகள் பார்வையில் ....

ஏன் ஜனாதிபதிகளின் பதவித் தவணைக்கால வரையறையை நீக்குவது தவறானது ?

ஏன் ஜனாதிபதிகளின் பதவித் தவணைக்கால வரையறையை நீக்குவது தவறானது ? என்ற தலைப்பில் பேராசிரியர் ரொஹான் சமரஜீவ எழுதியுள்ள கட்டுரையில் மேற்படிக்கேள்விக்கு சாதாரணப் பதிலைததானும் வழங்க  எதிர்க்கட்சிகள் தவறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளதுடன் ஜனாதிபதியொருவர் இரண்டுதவணைகளுக்கு மேல் பதவிவகிப்பதை தடுக்கும் அரசியல்யாப்பிலுள்ள தற்போதைய வரையறையை நீக்குவது தவறானது என்பதை ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டியுள்ளார் .
















தேர்தல் காலத்தின் போது அரச இயந்திரக்களை வெளிப்படையாகவே துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தக்கூடியவகையிலான கட்டுக்கடங்கா அதிகாரங்களை பதவியிலிருப்பவர்கள் கொண்டுள்ளமை காரணமாக பதவியிலிருக்கும் ஜனாதிபதியொருவரை அரியாசனத்திலிருந்து அகற்றுவது சாத்தியமற்றது எனக் குறிப்பிட்டுள்ளார்

உத்தேச அரசியல்யாப்புத்திருத்தமானது தீர்க்கரமான நெருக்கடி நீக்க பொறிமுறையை இல்லாது செய்துவிடுகின்றதென குறிப்பிட்டுள்ள பேராசிரியர் ரொஹான் சமரஜீவ 12வருடகாலத்திற்கு ஒருமுறையேறும் அதிகாரமாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையையும் இல்லாமல் செய்துவிடுவதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலைமையானது அதிகாரக் கட்டமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்த விரும்புகின்றவர்கள் வேறுவழியில்லாத நிலையில் சதிமுயற்சிகள் அன்றேல் மக்கள் சக்தியுடான போராட்டங்களை நடத்துவதற்கு நிர்பந்திக்கப்படும் நிலை ஏற்படும் என எச்சரித்துள்ள பேராசிரியர் ரொஹான் சமரஜீவ உத்தேச அரசியல்யாப்பு திருத்தங்களின் உடனடிப் பயனாளிகள் உட்பட அனைவருக்குமே இது தீங்கானதென சுட்டிக்காட்டியுள்ளார்

தற்போதுள்ள அரசியல்யாப்பிற்கமைவாகவே பதவியிலுள்ள ஜனாதிபதியொருவரைத்; தோற்கடிப்பது எத்தகைய கஷ்டமானதென்பதை ஆதாரங்களுடன் பேராசிரியர் முன்வைத்துள்ளார்.

வேட்பாளர்களிடையே கடும் போட்டி காணப்பட்ட 1989ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி வேட்பாளர் ரணசிங்க பிரேமதாஸ குறைந்த வாக்குவித்தியாசத்தில் வெற்றியீட்டினார் அவர் அப்போது ஆளும் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தபோதும் நடப்பு ஜனாதிபதியாக இருக்கவில்லை.1994ம் ஆண்டில் எதிர்க்கட்சி வேட்பாளர் சந்திரிக்கா குமாரதுங்க வெற்றிபெற்றார் .அந்த தேர்தலிலும் ஜனாதிபதியாக இருந்த டி பி விஜேதுங்க போட்டியிடவில்லை 2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் 1989ம் ஆண்டிலும் பார்க்க மிகக்குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் மஹிந்த ராஜபக்ஷ வெற்றிபெற்றார் .அப்போது கூட பதவியிலிருந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டிருக்கவில்லை

ஜனாதிபதி பதவியில் இருந்தவர்களே இரண்டாவது தவணைக்காலத்திற்காக போட்டியிட்ட 1982இ1999 மற்றும் 2010ம் ஆண்டு தேர்தல்களில் எதிர்க்கட்சி வேட்பாளர்களுக்கு எவ்வித சந்தர்பங்களோ நம்பிக்கையோ இல்லாத நிலைமை காணப்பட்டதாக பேராசிரியர் ரொஹான் சமரஜீவ சுட்டிக்காட்டியுள்ளார்

2010ம் ஆண்டு தேர்தலின் போது ஒட்டுமொத்த அரச இயந்திரமும் எதிரணிவேட்பாளரை தோற்கடிப்பதற்காக பயன்படுத்தப்பட்டதாக சுட்டிக்காட்டியுள்ள பேராசிரியர் சமரஜீவ இது 1982ம் ஆண்டு இடம்பெற்ற தேர்தல்களுக்கு எவ்வகையிலும் வித்தியாசமானதல்ல அந்த தேர்தலில் எதிரணி ஜனாதிபதி வேட்பாளர் வாக்களிப்பதற்காக வாக்குச் சாவடிக்கு சென்றபோது தனது வாக்கு ஏற்கனவே பதிவுசெய்யப்பட்டிருப்பதைக்கண்டு அதிர்ச்சியுற்றாhர் என தனது கட்டுரையில் பேராசிரியர் ரொஹான் சமரஜீவ குறிப்பிட்டுள்ளார்

தாரண்மைவாத ஜனநாயக முறைமையையே ஆட்டங்காணச்செய்துவிடும்
                                  கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து

மாற்றுக்கொள்கைக்கான ஆய்வுநிலையத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து கருத்துவெளியிடுகையில் 18வது திருத்தம் என்பது அதிகாரத்தை ஒருங்கிணைத்து மேலும் வலுப்படுத்துகின்ற செயற்பாடெனத் தெரிவித்தார்

அரசியல் என்பது அதிகாரம் சம்பந்தப்பட்டதாகும்  அரசியல்யாப்பு என்பது அளவிற்கு மீறிய அதிகாரக் குவிப்பில் இருந்தும் பிரயோகத்திலிருந்தும் மக்களைப்பாதுகாப்பது பற்றியதாகும் எனக் குறிப்பிட்ட கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து  அரசியல்வாதிகளுக்கு ஆட்சிசெய்வதற்கான அதிகாரம் தேவைப்படுகின்ற அதேவேளை தமது அடிப்படை உரிமைகளையும் சுதந்திரங்களையும் அனுபவித்து மகிழ்வதற்கு வழிகோலுகின்ற கட்டமைப்பை உருவாக்குவதற்கே மக்களுக்கு அரசாங்கம் தேவைப்படுகின்றது அந்தவகையில் அரசியல் யாப்பின் 18வது திருத்தமானது மக்களைப் பாதுகாக்கின்றதா அன்றேல் மக்களின் உரிமைகளையும் சுதந்திரங்களையும் அபாயத்திற்குட்படுத்துகின்ற அளவிற்கு அதிகாரத்திலுள்ளவர்களது வரப்பிரசாதங்களை வலுப்படுத்துகின்றதா எனச் சிந்திக்க வேண்டும் என கலாநிதி பாக்கிய சோதி சரவணமுத்து தெரிவித்தார்

நிறைவேற்று அதிகாரத்திலுள்ளவர்களுக்கு சார்பானதான அரசியல்யாப்புத் திருத்தம் மேற்கொள்ளப்படுவது இது முதற்தடவையல்ல எனச் சுட்டிக்காட்டும் மாற்றுக்கொள்கைக்கான அய்வு நிலையத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் அரசியல்யாப்பில் மேற்கொள்ளவுள்ள உத்தேச திருத்தங்களுக்கு அப்பால் அது செயற்படுத்தப்பட்ட விதமானது ஜனநாயக ஆட்சியின் விழுமியங்களுக்கு நெறிமுறைகளுக்கும் ஒருசொட்டு மரியாதையைத்தானும் கொடுக்கவில்லை என்பதையே காண்பித்து நிற்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்




















அவர் மேலும் கருத்துவெளியிடுகையில்

'தற்போது ஜனாதிபதியும் அவரது ஆதரவாளர்களும் தமது தரப்பு நியாயப்படுத்தலுக்காக மக்கள் தெரிவுசெய்தால் மாத்திரமே மூன்றாவது தடவையும் ஜனாதிபதியாக தெரிவாக முடியும் எனக் கூறலாம் .இதற்கு பதிலாக கடைசியாக நடைபெற்ற தேர்தல்களின் போது எமக்கு கிடைத்த அனுபவங்களை எடுத்துக்கொள்ளமுடியும் .தற்போது என்ன நடைபெற்ற நிகழப்போகின்றதென்றால் மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதிக்கு ஜே ஆர் ஜெயவர்த்தனவின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்குரிய அதிகாரங்களும் அதற்கு அதிகமானவையும் கிடைக்கப்போகின்றது இது எதை அர்த்தப்படுத்துகின்றதென்றால் ஜனாதிபதியின் அதிகாரங்கள் தொடர்பில்; எந்தவிதமான வரையறைகளையோ பொறுப்புக்கூறும் தன்மையையோ இல்லாமல் போய்விடும் நிலைமை ஏற்படும் இந்நிலைமையானது எம்மையை சர்வாதிகாரத்தன்மை கொண்ட ஆட்சியின் பால் கொண்டு செல்லுமாகையால் அது இந்த நாட்டின் ஜனநாயகத்திற்கு மிகவும் பாரதூரமான அச்சுறுத்தலை உண்டுபண்ணும் அபாயநிலை காணப்படுகின்றது

இந்த நாட்டிலுள்ள மக்கள் பலமான அரசாங்கம் என கூறப்படுகின்ற அந்த அரசாங்கம் தமக்கு தேவைதானா எனத் தம்மைத்தாமே கேள்விக்குட்படுத்தவேண்டும் தற்பொது முன்னுரிமை அளிக்கப்படுவதான பொருளாதார அபிவிருத்தியை நோக்கி இட்டுச்செல்லக்கூடியவர் என்பதனால் .தனிநபர் ஒருவருக்கு அதிகளவான அதிகாரம் குவிந்திருக்கும் நிலைமை அவசியமா அன்றேல் சுயாதீன ஆணைக்குழுக்கள் பொறுப்புக்கூறும் தன்மை வெளிப்படைத்தன்மை போன்றவற்றை உள்ளடக்கிய முறையான ஜனநாயக நல்லாட்சியுடன் பொருளாதார அபிவிருத்தி அவசியமா என மக்கள் சிந்திக்க வேண்டும் சமீபத்தில் மேர்வின் சில்வாவிற்கு கிடைத்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உள்விசாரணை முடிவை சுட்டிக்காட்ட விரும்புவிரும்புகின்றேன்  விசாரணைகளில் மேர்வின் சில்வா குறித்த சமுர்த்தி அதிகாரியை மரத்தில் கட்டியமைக்கான சான்றுகள் இல்லை என தெரிவிக்கப்பட்டிருக்கின்றது இதற்கமைய தற்போது அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் களனி பிரதேசத்திற்கான பிரதான அமைப்பாளராக மீண்டும் பதவியில் அமர்த்துவதற்கு இடமுள்ளது மீண்டும் அவருக்கு பிரதியமைச்சர் பதவியும் கிடைக்கலாம் என எதிர்பார்க்க முடியும் நவம்பர் மாததில் அவர் அமைச்சரானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை

இங்கே சுட்டிக்காட்டப்படவேண்டிய விடயம் யாதெனில் ஊடகங்கள் முன்னிலையிலும் பொலிஸார் முன்னிலையிலும் மக்கள் முன்னிலையிலும் குறித்த சமுர்த்தி அதிகாரியை மேர்வின் சில்வா மரத்தில் கட்ட உத்தரவிட்டிருந்தார் ஜனநாயக விழுமியங்களைக் கொண்ட வேறெந்த நாடாக இருந்தாலும் மேர்வின் சில்வா செய்த செயலுக்கு சட்டத்தின் முன்நிறுத்தப்பட்டிருப்பார் ஆனால் இங்கு நிலைமை அப்படியல்ல சட்டத்தின் ஆட்சி சட்டத்தின் முன்பாக சமமானதன்மை  மக்களன் அடிப்படை உரிமைகளை உள்ளடக்கியதான இந்த நாட்டின் அரசியல்யாப்பிற்கு மதிப்பளிக்கும் தன்மை போன்ற விடயங்களில் காண்பிக்கக்கூடிய முன்னூதாரணம் இப்படியானதாக இருக்கக்கூடாது அந்த வகையில் இந்த அரசியல் யாப்புதிருத்தம் நிறைவேற்றப்படுவது இலங்கையைப் பொறுத்தவரையில் கவலையளிக்கின்ற விடயமாகும் இது ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட செயற்பாடாக காணப்படுகின்றது அரசியல்கட்சிகள் தத்தமக்குரித்தான பல்வேறு காரணங்களுக்காக ஜனாதிபதிக்கு ஆதரவளித்து மூன்;றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை வழங்கப்போகின்றன எதிர்க்கட்சிகள் மிகவு;ம் பலவீனமாக உள்ளதுடன் மக்களை அணிதிரட்டிக்கொண்டு ஜனநாயக உரிமைகள் மற்றும் சுதந்திரத்தின் வீழ்ச்சிக்கு எதிராக காத்திரமான போராட்டத்தை முன்னெடுக்க முடியாதளவிற்கு உட்பூசலில் சிக்குண்டிருக்கின்றன அந்தவகையில் தாராண்மைவாத ஜனநாயகத்தன்மை மற்றும் அரசியல் யாப்புவாதம் ஆகியவற்றின் அத்திரவாரங்கள் ஆட்டங்காண்பதான இலங்கையின் நிலைமை கவலைக்குரியதாகும்'



ஊடகங்கள் பார்வையில்

ஒரு தேசத்தின் மரணம் என்ற தலைப்பில் ஆசிரியர் தலையங்கத்தை இம்முறை எழுதியிருந்த சன்டே லீடர் பத்திரிகை நீங்கள் புதிய அரசியல்யாப்பின் வடிவத்தை காணவேண்டுமாக இருந்தால் கடைசியாக இடம்பெற்ற இரு தேர்தல்களையும் திரும்பிப்பாருங்கள்
எனக்குறிப்பிட்டுள்ளதுடன் 'எதிர்காலம் பற்றிய தரிசனம் உங்களுக்கு அவசியமானதாக இருந்தால் சதா காலத்திற்கும் உங்கள் முகத்தின் மீது இரும்புப்;பாதணியொன்று பதிந்திருப்பதை கற்பனைசெய்துகொள்ளுங்கள்' என அரசியல் எழுத்தாளரான ஜோர்ஜ் ஒர்வெல்லின் கூறிய கூற்றொன்றை சுட்டிக்காட்டியுள்ளது.இது அரசியல்யாப்பே அல்ல மாறாக மடமைத்தனம் இது மக்னா கார்டாவிலும் (அரசரின் அதிகாரத்தை முதன் முதலில் வரையறை செய்து கட்டுப்பாடுகளை விதித்த 13ம் நூற்றாண்டுகால ஆவணம்) பார்க்க இலங்கையை ஒரு அடி பின்னோக்கி நகர்த்திச்செல்கின்றது.இலங்கையைப் பொறுத்தவரையில் மன்னரிடம் மீண்டும் அதிகாரங்களை கையளிக்கும் செயற்பாட இடம்பெறுகின்றது அரசியல் சாசனமென்பது அடுத்த 10வருடங்கள் குறித்தோ அன்றேல் 50வருடங்கள் குறித்தோ எண்ணிப்பார்க்க கூடாது மாறாக அது அடுத்துவரும் பல நூறு ஆண்டுகள் குறித்து எண்ணிப்பார்க்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது .அது சிறப்பான சூழ்நிலைகளை கருத்திற்கொண்டு வடிவமைக்கப்படலாகாது மாறாக மோசமான சூழ்நிலைகள் ஏற்பட்டால் அதனை எதிhகொள்வதனை கருத்திற்கொண்டு வடிவமைக்கப்படவேண்டும்.அரசியல் சாசனமென்பது ஒருவரை மனதில் நிறுத்தியன்றி மக்களை மனதில் நிறுத்தி மேற்கொள்ளவேண்டியது என சன்டே லீடர் தெரிவித்துள்ளது

மறுமுனையில் அரசியல்யாப்புத்திருத்தங்கள் வரவேற்கத்தக்கது என்ற தலைப்பில் ஆசிரியர் வரைந்திருந்த சன்டே ஒப்சேவர் பத்திரிகை ஜனநாயக முறைமையின் கீழ்  ஜனாதிபதி பதவிக்கோ வேறெந்த பதவிக்கோ ஒருவர் மீண்டுமாக பெரும்பான்மை மக்களின் வாக்குகளால்; தேர்ந்தெடுக்கப்படுவதை தடுக்ககூடாது எனக்குறிப்பிட்டுள்ளதுடன் ஒரு இரண்டு தடவை பதவிவகித்தார் என்ற காரணத்திற்காக மாத்திரம் ஜனாதிபதித் தேர்தலில் மீண்டுமாக போட்டியிடுவதை தடுக்க கூடாது என தெரிவித்துள்ளது பெரும்பான்மையான மக்கள் மூன்றாவது தடவையாகவும் முன்னாள் ஜனாதிபதியொருவரைத் தேர்ந்தெடுக்க விரும்பினால் உண்மையாகவே ஜனநாயகத்தன்மை கொண்டதான ஒரு அரசியல் யாப்பு அதற்கு தடையாக இருக்க கூடாது எனச் சுட்டிக்காட்டியுள்ளது.

தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர்கள் பற்றி அரசியலமைப்பின் 92 ஆவது சரத்தில் குறிப்பிடப்படுகிறது. மனநோயாளி, இலஞ்சம் பெற்றோர், வங்குரோத்துக்காரர்கள் போன்றோர் தகுதியற்றவர்கள் என இதில் சுட்டிக்காட்டப்படுகிறது. இருமுறை மக்களின் வாக்குகளால் தெரிவான ஒருவரும் இவர்களில் ஒருவராக இருக்க முடியாது. வேறெந்த தலைவர்களையும் விடவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவே அதிக  தேர்தல்களை நடத்தியதுடன் ஜனநாயகத்திலும் அதீத நம்பிக்கை வைத்து செயற்பட்டவர்; எனக் கூறியுள்ளது மக்களுடன் நெருக்கமான ஜனாதிபதி ஒருபோதுமே தீங்கான அரசியல்யாப்பு திருத்தங்களை முன்வைக்க மாட்டார் என்பதையே நிருபிக்கப்பட்டதான அவரது கடந்த கால வரலாற்றுத்தடங்கள் உணர்த்திநிற்பதாகவும் அப்பத்திரிகை குறிப்பி;ட்டுள்ளது

முடிவாகிவிட்டுள்ள 18வது திருத்தம் குறித்து இவ்விதமாக முடிவற்று நீண்டு செல்கின்ற வாதப்பிரதிவாதங்களுக்கு மத்தியில் இலங்கையில் இன்றையதினம் மேற்கொள்ளப்படவுள்ள அரசியல்திருத்தமானது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தப்போகின்றதென்பதற்கு காலம்தான் பதில்சொல்ல வேண்டும் .





                                                                               Published on Virakesari Daily 08/09/2010

No comments:

Post a Comment