Friday, May 4, 2012

அறிவு வளர்க்கும் விஜய் டீவியின் பணி தொடரட்டும்



தமிழ் மொழி மூல தொலைக்காட்சிகள் எல்லாம் சினிமா மயப்பட்டுவருகின்றநிலையிலே மக்களின் அறிவுத்தேடலுக்ககும் சிந்தனைத்தூண்டலுக்கும் பயன்தரும் நிகழ்ச்சிகளை படைப்பதில் விஜய் டீவிக்கு நிகர் வேறேதுமில்லை.

ஸ்டார் குழுமத்தின் அங்கமாக இருந்து வேற்றுமொழி நிகழ்ச்சிகளை அப்படியே மொழிமாற்றம் செய்வதை விடுத்து சொந்தமாகவே தமிழ் மக்களுக்கு பிரத்தியேகமான நிகழ்ச்சிகளைப்படைத்ததில் விஜய் டீவியின் பணி மகத்தானது. இதற்கு தமிழ் எங்கள் மூச்சு சிறந்த உதாரணமாகும். நீயா நானா? நிகழ்ச்சி தொடர்ச்சியாக தமிழ் மக்களின் சிந்தனைக்கு வளம் சேர்த்துக்கொண்டிருக்கின்றது. அந்தவகையில் தற்போது நடிகர் சூர்யா நடாத்தும் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சி புதிய சாதனையைப் படைத்துக்கொண்டிருக்கின்றது.

சினிமாவின் பிரபல்யத்தைப் பயன்படுத்தி மக்களுக்கு பொது அறிவை கொண்டுசேர்க்கும் பொது அறிவைத் தேடத்தூண்டும் பொது அறிவின் முக்கியத்துவத்தை உணர்த்தும் மாபெரும் பணியை விஜய் டீவி செய்வதை மனதார பாராட்டுகின்றேன்.

இந்த நிகழ்ச்சியை உலகெங்கிலும் பரந்து வாழும் மக்கள் பார்க்கின்றபோதும் இந்திய மக்களைத் தவிர ஏனைய நாட்டவர்கள் பங்கேற்ற வாய்ப்பளிக்காமை கவலையானவிடமாக இருப்பினும் அனேகரைப் போன்று பார்வையாளராக இருந்தேனும் பயனடையக் கிடைத்ததை எண்ணி மகிழ்கின்றேன். மக்களது அறிவுத் தேடலையும் சிந்தனையாற்றலையும் ஊக்குவிக்கும் விஜய் டீவியின் பணி தொடர வாழ்த்துகின்றேன்.

Wednesday, May 2, 2012

என்றென்றும் எண்ணத்தில் புதைந்திருக்கும் ஹீரோ


நானறிந்த காலத்தில் தனது விளையாட்டு ஆற்றலால் என்னை வசீகரித்த எனது உள்ளத்திற்கு அளவில்லாத மகிழ்ச்சியை அளித்த வீரர் என்றால் அது பிரயன் லாரா தான்.

 கிரிக்கட் உலகம் எத்தனையோ ரன் மெஸின்களைக் கண்டதுண்டு. எத்தனையோ அதிரடி அட்டகாசத்துடுப்பாட்ட வீரர்களை கண்டதுண்டு.
ஆனால் துடுப்பாட்டத்தை ஓர் அழகியல் கலையாக மாற்றி அதிலே முத்திரைபதித்ததோடு மட்டும் நின்றுவிடாமல் மேதாவிலாசத்திறமைகாண்பித்த ஓரே வீரராக நான் பிரயன் லாராவையே பார்க்கின்றேன்.பல வீரர்களில் அழகியல் என்பது அவர்கள் ஆட்டத்தில் ஓர் அங்கமாக இருந்திருக்கும். அதில் அளவுகள் மாறுபடலாம். ஆனால் ஒட்டுமொத்த அசைவுகளாலும் ஆட்டத்தாலும் கிரிக்கட் உலகில் ஜொலித்தவராக மேற்கிந்தியத்தீவுகள் அணியின் நட்டத்திர வீரர் பிரயன் லாரா ஒருவரே திகழ்கின்றார்.

Tuesday, May 1, 2012

தன்னலமற்ற துடுப்பாட்டத்தால் சாதிக்கும் ஜாம்பவான் சந்தர்போல்



உலகில் சிறந்த துடுப்பாட்ட வீரர்கள் பற்றி கடந்த இரு தசாப்த காலத்தில் பேசப்படுகின்ற போதெல்லாம் இவரின் பெயரும் எங்கோ மூலையில் அடிபடுவதுண்டு. ஆனால் பிரயன் லாரா சச்சின் டெண்டுல்கர் போன்ற ஜாம்பவான்கள் தம் மேதாவிலாசத் துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய போது அப்படியே இவரது பெயர் அடிபட்டுப் போய்விடுவதே உண்மை. ஆனால் அசாத்திய திறமை மிக்க துடுப்பாட்ட வீரர்கள் பலரையும் தாண்டி இன்று இவர் பெயர் கிரிக்கட் வரலாற்றில் பொறிக்கப்படுகின்றதென்றால் அதற்கு காரணம் இவரது ' டைகர்' என்ற செல்லப் பெயரைப் போன்றே இறுதிவரை சளைக்காது போராடும் குணமேயாகும். அது வேறுயாருமல்ல நம்ம சிவ்நாராயண் சந்தர்போல் தான் அந்த அற்புதமான கிரிக்கட் வீரர்.

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கட் அணி அதன் எட்டுத்தசாப்தத்திற்கு மேலான கிரிக்கட் வரலாற்றில்  பல அதிரடித் துடுப்பாட்ட வீரர்களையும் அட்டகாசத்துடுப்பாட்ட வீரர்களையும் கண்டதுண்டு. ஆனால் அவர்களில் ஒரே ஒருவரைத்தவிர ( பிரயன் லாராவைத்தவிர) ஏனைய வீரர்கள் எட்டமுடியாத உயரத்தை இன்று சந்தர்போல் எட்டிநிற்கின்றார் என்றால் அதற்கு தன்னலமற்ற இடைவிடாப் போராடும் குணமே காரணமாகும். அந்த உயரம் தான் டெஸ்ற் கிரிக்கட் போட்டிகளில் 10000 ஓட்டக்களைக்கடந்த இரண்டாவது மேற்கிந்திய வீரர் என்றதும் உலகில் இந்த மைல்கல்லை எட்டிய 10வது வீரர் என்ற சாதனையும் தான்.

வெற்றி வரலாறு படைத்த மேற்கிந்திய தீவுகள் அணி முன்னணி வீரர்கள் பலரின் ஓய்விற்குப் பின்னர் பின்னடைவைச் சந்தித்து தோல்விகளால் துவண்டு கொண்டிருந்த போது பிரயன் லாராவுடன் இணைந்து அவ்வணியின் மானத்தை காப்பாற்றிய சந்தர்ப்போல் இன்று லாராவின் ஓய்விற்கு பின்னர் தனியொருவராக அணியின் மானத்தைக் காப்பாற்றிக் கொண்டிருப்பது மட்டுமன்றிp மீண்டுமாக அணிக்கு தனது போராடும் குணத்தை விதைத்து ஏனைய வீரர்களையும் வலுவூட்டி வருகின்றமையை அவுஸ்திரேலிய அணியுடனான டெஸ்ற் தொடரின் போது காணமுடிந்தது.

பத்தாயிரம் ஓட்டங்களைக் கடந்த தோடு தனது டெஸ்ற் துடுப்பாட்ட சாராசரியையும் 50ற்கு மேலாக அதிகரித்துக்கொண்ட சந்தர்ப்போல் மூன்று வருடகாலத்திற்குப் பின்னர் டெஸ்ற் துடுப்பாட்ட தரவரிசையில் முதலிடத்தை பெற்றுள்ளமை இளம் சந்ததியினருக்கு சளைக்காத போராடும் குணத்தின் உன்னதத்தன்மையை வெகுவாக பறைசாற்றி நிற்கின்றது.