உலகில் சிறந்த துடுப்பாட்ட வீரர்கள் பற்றி கடந்த இரு தசாப்த காலத்தில் பேசப்படுகின்ற போதெல்லாம் இவரின் பெயரும் எங்கோ மூலையில் அடிபடுவதுண்டு. ஆனால் பிரயன் லாரா சச்சின் டெண்டுல்கர் போன்ற ஜாம்பவான்கள் தம் மேதாவிலாசத் துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய போது அப்படியே இவரது பெயர் அடிபட்டுப் போய்விடுவதே உண்மை. ஆனால் அசாத்திய திறமை மிக்க துடுப்பாட்ட வீரர்கள் பலரையும் தாண்டி இன்று இவர் பெயர் கிரிக்கட் வரலாற்றில் பொறிக்கப்படுகின்றதென்றால் அதற்கு காரணம் இவரது ' டைகர்' என்ற செல்லப் பெயரைப் போன்றே இறுதிவரை சளைக்காது போராடும் குணமேயாகும். அது வேறுயாருமல்ல நம்ம சிவ்நாராயண் சந்தர்போல் தான் அந்த அற்புதமான கிரிக்கட் வீரர்.
மேற்கிந்திய தீவுகள் கிரிக்கட் அணி அதன் எட்டுத்தசாப்தத்திற்கு மேலான கிரிக்கட் வரலாற்றில் பல அதிரடித் துடுப்பாட்ட வீரர்களையும் அட்டகாசத்துடுப்பாட்ட வீரர்களையும் கண்டதுண்டு. ஆனால் அவர்களில் ஒரே ஒருவரைத்தவிர ( பிரயன் லாராவைத்தவிர) ஏனைய வீரர்கள் எட்டமுடியாத உயரத்தை இன்று சந்தர்போல் எட்டிநிற்கின்றார் என்றால் அதற்கு தன்னலமற்ற இடைவிடாப் போராடும் குணமே காரணமாகும். அந்த உயரம் தான் டெஸ்ற் கிரிக்கட் போட்டிகளில் 10000 ஓட்டக்களைக்கடந்த இரண்டாவது மேற்கிந்திய வீரர் என்றதும் உலகில் இந்த மைல்கல்லை எட்டிய 10வது வீரர் என்ற சாதனையும் தான்.
வெற்றி வரலாறு படைத்த மேற்கிந்திய தீவுகள் அணி முன்னணி வீரர்கள் பலரின் ஓய்விற்குப் பின்னர் பின்னடைவைச் சந்தித்து தோல்விகளால் துவண்டு கொண்டிருந்த போது பிரயன் லாராவுடன் இணைந்து அவ்வணியின் மானத்தை காப்பாற்றிய சந்தர்ப்போல் இன்று லாராவின் ஓய்விற்கு பின்னர் தனியொருவராக அணியின் மானத்தைக் காப்பாற்றிக் கொண்டிருப்பது மட்டுமன்றிp மீண்டுமாக அணிக்கு தனது போராடும் குணத்தை விதைத்து ஏனைய வீரர்களையும் வலுவூட்டி வருகின்றமையை அவுஸ்திரேலிய அணியுடனான டெஸ்ற் தொடரின் போது காணமுடிந்தது.
பத்தாயிரம் ஓட்டங்களைக் கடந்த தோடு தனது டெஸ்ற் துடுப்பாட்ட சாராசரியையும் 50ற்கு மேலாக அதிகரித்துக்கொண்ட சந்தர்ப்போல் மூன்று வருடகாலத்திற்குப் பின்னர் டெஸ்ற் துடுப்பாட்ட தரவரிசையில் முதலிடத்தை பெற்றுள்ளமை இளம் சந்ததியினருக்கு சளைக்காத போராடும் குணத்தின் உன்னதத்தன்மையை வெகுவாக பறைசாற்றி நிற்கின்றது.
No comments:
Post a Comment