அமெரிக்காவின் மிஸோரி மாநிலத்தின் பேர்குஸன் நகரில் தொடரும் கலவரங்கள் அந்நாட்டில் மட்டுமல்ல உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளன. இந்தப்பகுதி தற்போது ஒரு யுத்த பூமி போன்று காட்சியளிக்கும் அளவிற்கு நிலைமைகள் மோசமடைந்துள்ளன.
இம்மாதம் ஒன்பதாம் திகதி மைக்கல் பிரவுண் என்ற பதின்ம வயது கறுப்பின இளைஞர் பொலிஸாரினால் காட்டுமிராண்டித்தனமாக சுட்டிக்கொல்லப்பட்டதையடுத்து அதற்கு அடுத்த தினத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நடத்தப்பட்ட மெழுகுதிரி ஏந்திய திருவிழிப்பு நிகழ்ச்சியயான்றின் போது கார்க் கண்ணாடிகளை உடைத்தும் கடைகளைக் கொள்ளையிட்டும் ஆரம்பமான கலவரங்கள் தற்போது இரண்டாவது வாரமாக தொடர்கின்றன.
கலவரங்களால் பாதிக்கப்பட்ட பேர்குஸன் நகரின் மொத்த சனத்தொகை 21,205 என் பதுடன் மொத்த சனத்தொகையில் 65 சத வீதமானோர் கறுப்பினத்தவர்களாவர். ஆனால் அந்த நகரிலுள்ள ஒட்டுமொத்த பொலிஸாரில் 6 சதவீதமானோர் மட்டுமே கறுப்பினத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நடக்கின்ற சம்பவங்களைப் பார்க்கின்ற போது மைக்கல் பிரவுண் என்ற இளைஞர் கொல்லப்பட்ட சம்பவம் ஏற்கனவே அந்தச் சமூகத்தில் காணப்பட்ட பாரிய வேறுபாட்டையும் அநீதிகளையும் கோடிட்டுக்காட்டுகின்றன.
இலங்கை, மலேசியா போன்ற நாடுகளில் சிறுபான்மையினரான தமிழ் மக்கள் அரசியல் ரீதியிலும் நிர்வாக ரீதியிலும் பாரபட்சத்திற்கு உட்படுத்தப்படுவதைப் போன்றே உலகின் முன்னணி ஜனநாயக நாடாக பார்க்கப்படும் அமெரிக்காவில் சிறுபான்மையினரான கறுப்பினத்தவர்களின் நிலைமை இன்னமும் இருக்கின்றதா என்ற கேள்வியை எழுப்பிநிற்கின்றது.
அமெரிக்காவின் சிவில் உரிமைகளுக்கான செயற்பாட்டாளரான மார்டின் லூதர் கிங் ஜுனியர் 1963 ஆம் ஆண்டு ஓகஸ்ற் 28ஆம் திகதியன்று – எனக்கு ஒரு கனவுள்ளது என்ற உலகப்புகழ் பெற்ற உரையை ஆற்றியிருந்தார்.
அவ்வுரையிலே தனது பிள்ளைகள் – வருங்கால சந்ததியினர் தமது தோலின் நிறத்தினை அடிப்படையாகக்கொண்டன்று மாறாக அவர்களது குணாம்சங்களின் அடிப்படையில் – செயல்களில் அடிப்படையில் எடைபோடப்படும் காலம் உருவாகவேண்டும் என்பதே தனது கனவு என்ற அடிப்படைக் கருத்தை வலியுறுத்தியிருந்தார்.
அவரது உரை இடம்பெற்று ஐம்பதாண்டுகள் கடந்துவிட்ட பின்னரும் அமெரிக்காவில் நிற பேதம் என்பது இன்னமும் முழுமையாக அகன்றுவிடவில்லை. அது புரையோடிப்போய்க் கிடக்கின்றது என்ற செய்தியே தற்போது பேர்குஸனில் இடம்பெறும் கலவரங்களூடாக உணர்த்தப்படுகின்றது. இத்தனைக்கும் அமெ ரிக்காவில் கறுப்பினத்தவர் ஜனாதிபதியாக தேர்வாகி எத்தனையோ பல கறுப்பினத்தவர்கள் அரசியலிலும் நிர்வாகப் பொறுப்பிலும் முன்னிலையில் திகழ்கின்ற நிலையிலும் அடிமட்டத்தில் நிலவும் வேறுபாடுகள் பெருமளவில் மாறவில்லை என்ற உண்மை புலனாகின்றது. பேர்குஸன் விடயத்தை விதிவிலக்காகப் பார்த்தாலும் பாரபட்சங்களால் இழைக்கப்படும் அநீதிகளுக்கு சட்டத்தின் ஆட்சி மூலமாக எப்படியேனும் விடைதேடலாம் என்ற நம்பிக் கையேனும் அமெரிக்காவில் பொதுவாக காணப்படுகின்றது.
ஆனால் எமது நாட்டில் அரசியல் மற்றும் நிர்வாக ரீதியிலான பாரபட்சங்கள் மட்டுமன்றி சட்டத்தின் ஆட்சியில் காணப்படும் வெற்றிடமானது சிறுபான்மை மக்களை நம்பிக்கையற்ற நடைபிணங்களாக மாற்றிக்கொண்டிருக்கின்றது. இந்த விடயத்தில் அரசாங்கம் தூரதரி சனத்துடன் செயற்படாவிடின் விளைவுகள் விரும்பத்தகாதவையாகவே அமைந்துவிடும் அபாயம் உண்டு!
No comments:
Post a Comment