Sunday, November 30, 2014

மாற்றம் குறித்த நம்பிக்கை

ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு தொடர்பான உத்தியோகபூர்வ பிரகடனத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கைச்சாத்திட்டது முதலாக இலங்கையின் அரசியல் களம் முன்னெப்போதுமில்லாதவகையில் சூடிபிடித்துள்ள நிலையில் நாளுக்கு நாள் மக்கள் மத்தியிலும் எதிர்பார்ப்புக்கள் அதிகரித்துவருவதை உணர்வலைகள் வெளிப்படுத்திநிற்கின்றன.

பொது எதிரணியின் வேட்பாளராக தெரிவுசெய்யப்பட்டுள்ள மைத்திரிபால சிறிசேனவினால் மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிராக தேர்தலில் இறுதிவெற்றியைப் பெற்றுவிடமுடியும் என்பதை இன்னமும் தீர்க்ககரமாக கூறமுடியாவிட்டாலும் மாற்றமொன்று தேவையென வேண்டிநின்ற மக்களுக்கான மாற்றுத்தெரிவையும் நம்பிக்கையையும் அவரது முன்வருகை கொடுத்துள்ளது என்பதை மறுக்கமுடியாது. தம்மைப் போன்றே கிராமிய மக்களின் அடித்தளத்தைக் கொண்ட  மைத்திரிபால சிறிசேன தமக்கு எதிராக போட்டியிடுவார் என ஜனாதிபதி சிறிதளவும் எதிர்பார்த்திருக்கவில்லை என்றே வருகின்ற தகவல்களில் இருந்து புரிந்துகொள்ள முடிகின்றது. இந்நிலையில் இரண்டு வருடங்கள் எஞ்சியிருக்கும் நிலையில் விரைந்து தேர்தலுக்கு செல்வதற்கு எடுத்த முடிவு ஞானமுடையதா ஆளுந்தரப்பினர் தமக்குள்ளே வாதப்பிரதிவாதங்களில் ஈடுபடுவதாகவும் தகவல்கள் வருகின்றன. 

 ஜனாதிபதித் தேர்வில் பிரதான பாத்திரம் வகிக்கும் சிங்கள பௌத்த மக்கள் மத்தியில் போர் வெற்றியினால் ஏற்பட்ட செல்வாக்கு ஜனாதிபதிக்கு இன்னமும் கணிசமான அளவிற்கு இருக்கவே செய்கின்றது. ஆனால் தற்போது முகங்கொடுக்கும் பொருளாதார நெருக்கடி,
  நிறைவேற்று அதிகாரத்தின் அடித்தளத்தில் நாட்டில் இடம்பெறும் ஊழல்  மோசடிகள், குடும்ப ஆட்சியின் ஆதிக்க நிலை போன்ற இன்னோரன்ன காரணிகள் ஒரு மாற்றுத் தெரிவை நாட வேண்டிய அவசியத்தை ஏனைய சமூகங்களை போன்று அவர்களிடத்திலும் ஏற்படுத்தி விட்டிருப்பதனையே இன்னமும் சுயாதீனமாக இயங்குவதாக நம்பப்படும் பெரும்பான்மை சமூக ஊடகங்களுடாக அறிந்துகொள்ள முடிகின்றது.

ஜனாதிபதி தேர்தலைப் பொறுத்தவரையில் நடப்பு ஜனாதிபதி தனது பிரசாரத்தை பல வாரங்களுக்கு முன்னரே ஆரம்பித்து முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கின்றார். வரவுசெலவுத்திட்ட அறிவிப்புக்கள் இ முதற்கொண்டு பல்வேறு துறையினருடனான அலரிமாளிகை சந்திப்புக்கள் இ யாழ்ப்பாண விஜயத்தின் போது உட்பட பிரதேச ரீதியான விஜயங்களின் போதான சலுகைக் கொடுப்பனவுகள் என அனைத்துமே தேர்தலை முன்னிறுத்தியதாகவே அமைந்துள்ளன. இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் இன்றைய தினம் பொலநறுவையில் தமது முதலாவது பிரசாரக் கூட்டத்தை ஆரம்பிக்கின்றார். இன்னமும் தேர்தலுக்கு 40 நாட்களுக்கும் குறைவான காலப்பகுதியே உள்ள நிலையில் எதிரணியினர் ஒற்றுமைப்பட்டரீரியில் எவ்வாறு ஆளுந்தரப்பினரின் மாபெரும் பிரசார யுத்தத்திற்கு முகங்கொடுக்கப்போகின்றனர் என்பதும் தேர்தலில் முக்கிய பாத்திரத்தை வகிக்கப்போகும் கிராமப்புறமக்கள் மத்தியில் தமது திட்டங்களை தெளிவுபடுத்தி அவர்களது ஆதரவையும் வென்றெடுக்கப்போகின்றனர்  என்பதும் பெரும் சவால் மிக்கதாகவே அமையப் போகின்றது. 

இந்த ஆரம்ப கட்ட நிலையில் நோக்கும் போது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை 100நாட்களில் ஒழிப்போம் என்ற வாக்குறுதியை முன்நிறுத்தி ஒன்று சேர்ந்துள்ள பொது எதிரணியின் செயற்பாடுகளால் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸ என்ற தனிமனிதரை வெற்றிகொள்ள முடியாவிட்டாலும் மக்கள் உணர்வில் வேண்டிநிற்கும் மாற்றங்கள் இந்த நாட்டின் ஆட்சி முறையில் மாற்றத்தைக் கொண்டுவந்து மக்களின் பொது எதிர்பார்ப்புக்கள் ஈடேறுவதற்கேனும் வழிகோலும் என்ற நம்பிக்கையை கொடுத்துள்ளது என்பதை தெளிவாக குறிப்பிடமுடியும்.

அடுத்துவரும் நாட்களிலும் வாரங்களிலும் ஏற்படப்போகும் மாற்றங்கள் ஒரு கட்டத்தில் நினைத்துப்பார்க்கவே முடியாதிருந்த மேலும் பல மாற்றங்களை கொண்டுவரலாம். ஏனெனில் மாற்றம் ஒன்றே மாறாதது என்பது காலாகாலமாக மெய்பிக்கப்பட்ட உலக நியதியாகும்.

No comments:

Post a Comment