Thursday, November 9, 2017

பயங்கரவாத தடைநீக்கத்தை உன்னிப்பாக அவதானிக்கின்றோம்-ஜீன் லம்பேர்ட்

ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற தூதுக்குழுத் தலைவி ஜீன் லம்பேர்ட் சுடர் ஒளிக்கு விசேட செவ்வி 

நேர்காணல் அருண் ஆரோக்கியநாதர்.


பயங்கரவாத தடைச்சட்டத்தை தற்போதைய நிலையில் நீங்கி இருப்பார்கள் என்பதே எமது எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் இன்னமும் எமக்களித்த வாக்குறுதி நிறைவேற்றப்படாமை தொடர்பில் ஆழ்ந்த கரிசனை கொண்டுள்ளோம். இவ்விடயத்தில் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் கடும் குரல்கள் எழும் என்பது நிச்சயம். இந்த விடயத்தில் அரசாங்கத்தின் நடவடிக்கையை நாம் மிகவும் அவதானதிற்குட்படுத்திக்கொண்டே இருப்போம் என இலங்கைக்கு விஜயம் செய்த ஐரோப்பிய நாடாளுமன்ற தூதுக்குழுவின் தலைவி ஜீன் லம்பேர்ட் தெரிவித்தார். 
கடந்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்து நிலைமைகளை விரிவாக ஆராய்ந்த ஐரோப்பிய ஆணைக்குழு எதிர்வரும் ஜனவரியில் அறிக்கை சமர்பிக்கவுள்ளநிலையில் இன்னமும்  அவதானம் அதிகரிக்கும் என சுட்டிக்காட்டிய அவர் 2019ம் ஆண்டில் இலங்கையின் ஜிஎஸ்பி பிளஸ் மீள் பரிசீலனை இடம்பெறவுள்ள நிலையில் வாக்குறுதிகளை நிறைவேற்றாமை தொடர்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சூசகமாக கருத்துக்களை வெளிப்படுத்தினார்.
ஒக்டோபர் 31ம்திகதி முதல் நவம்பர் 3ம்திகதிவரை  முன்னெடுத்த இலங்கைகக்கான விஜயம் தொடர்பில் கடந்த வியாழக்கிழமை கொழும்பிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய பணிமனையில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பைத் தொடர்ந்து சுடர் ஒளிக்கு  அவர் வழங்கிய விசேட செவ்வி பின்வருமாறு:

ஒட்டுமொத்தமாக இந்த விஜயத்தை எப்படிப்பார்க்கின்றீர்கள்?

நாம் இதனை மிகவும் பெறுமதியான விஜயமாகக் கருதுகின்றோம். எங்களைச் சிறப்பாக வரவேற்றனர். நாம் சந்தித்த அமைச்சர்களுடான சந்திப்பின் போது எமக்கு அதிகமான காலப்பகுதி இருந்திருந்தால் நல்லது ஏனெனில் நாம் எமது கலந்துரையாடல்களில் ஆழமாகச் சென்றிருக்க முடியும் இருந்தாலும் அந்த சந்தர்ப்பத்தை வரவேற்கின்றோம ஜிஎஸ்பி பிளஸ் வர்த்தகச் சலுகைக்கான மதிப்பீட்டுக் காலப்பகுதியில் கூறியவிடயங்களுடன் நோக்கும் போது சில விடயங்களில் அரசாங்கத்திடம் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது என்பதை எமது கலந்துரையாடல்களின் போது உணர்ந்தோம்.  அவர்களின் திட்டங்கள் என்னவென்பது குறித்து நாம் இம்முறை அறியமுடிந்தது. எனினும் சில விடயங்கள் எமக்கு கரிமனைமிகுந்தாக அமைந்துள்ளன. நாம் கடைசியாக ஒருவருடத்திற்கு முன்பாக இங்கு வந்திருந்தோம். அந்தத்தருணத்தில் மாற்றங்கள் உதாரணமாக கூறுவதெனில்  பயங்கரவாதத்த தடைச்சட்ட நீக்கமானது இந்தக்காலப்பகுதியில் நடைமுறைக்கு வந்திருக்கும் என கடந்தமுறை நாம் நம்பவைக்கப்பட்டோம். அது நடைபெறாமை குறித்து நாம் மிகுந்த கரிசனைகொண்டுள்ளோம். அதுபோன்று குற்றவியல் ஒழுக்கக்கோவையில் மாற்றங்கள் இடம்பெறாமை தொடர்பாகவும் நாம் கரிசனைகொண்டுள்ளோம். அந்தவகையி;ல் சுய பாரபட்சம் இன்னமும் சாத்தியமானது. அதுபோன்ற மாற்றங்கள் இடம்பெற்றிருப்பதை நாம் இப்போது காணவிரும்புகின்றோம். ஆனால் அது நடக்கவில்லை.


அரசாங்கம் அடையாளச் சமிக்ஞைகளாக சில நடவடிக்கைகளை எடுத்துள்ளபோதும் பொறுப்புக்கூறல் நல்லிணக்கம் போன்ற முக்கியமான விடயங்களில் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்ற அபிப்பிராயம் மக்கள் மத்தியில் காணப்படுகின்றது. அரசாங்கம் நேரத்தை இழுத்தடிப்பதற்காக செய்கின்றதா அன்றேல் அவர்களிடத்தில் உண்மையான நோக்கம் உள்ளது என்பதை அவர்களுடனான சந்திப்புக்களின் போது நீங்கள் கண்டுணர்ந்தீர்களா?

இன்னமும் உண்மையான நோக்கங்கள் உள்ளதாக நான் கருதுகின்றேன்.  காணமல்போனவர்கள் விவகாரத்துடன் தொடர்புடைய அலுவலகமானது தற்போது நடைமுறைக்கு வந்துள்ளதைக்கண்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம். அதற்காக வரவுசெலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நாம் அறிகின்றோம். அது மிகவும் முக்கியமானது. ஏனெனில் நான் இங்கு வரத்தொடங்கிய பல வருடகாலப்பகுதியில் அது பல்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்களதும் நீண்டகாலக் கோரிக்கையாக இருந்துவந்துள்ளது.  நல்லிணக்கம் ஒருங்கிணைத்தல் போன்ற விடயங்களில் மென்கொள்கைகளில் பல மாற்றங்கள் இடம்பெற்றுள்ளதைக் நாம் காண்கின்றோம். அது எவ்வாறு முன்செல்லப்போகின்றது என்பதை காண்பது கடினமானதென நினைக்கின்றேன். ஏனெனில் அது ஒன்று ஒரு கட்டிடமல்ல ( கட்டிடம் எழும்புவதைக் கண்கூடாக காணலாம் ) மாறாக மக்களின் மனப்பான்மை மற்றும் நடத்தைகளை மாற்றுகின்ற விடயமாக அது அமைந்துள்ளது. காணிகளை விடுவிப்பதில் முன்னேற்றம் உள்ளது. ஆனால் அது விரைவுபடுத்தப்படுவதைக் காண நாம் விரும்புகின்றோம்.  அது வேகமாக இருக்கவேண்டும் என நான்  எண்ணுகின்றேன். மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு புதிய வீடுகளைக் கட்டிக்கொடுக்கும் பணிகள் இன்னமும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. அந்தவகையில் முன்னேற்றம்காணும் சில விடயங்கள் இன்னமும் உள்ளன. இலங்கையிலுள்ள பலரது உணர்வலைகளை நாமும் பகிர்ந்துகொள்கின்றோம். அதாவது மக்கள் நம்பிக்கையை இழக்காமல் இருக்கும் வகையில் இந்தவிடயங்கள் மிகவேகமாக இருக்கவேண்டும் என நாம் விரும்புகின்றோம்.

இந்த அரசாங்கத்தை ஆட்சிபீடமேற்றுவற்கு துணைபுரிந்த பலரும் அரசாங்கமானது மு;க்கியமான வாக்குறுதிகளை நிறைவேற்றத்தவறியுள்ளமை தொடர்பில் தமது அதிருப்தியையும் விரக்தியையும் வெளிப்படுத்திவருகின்றனர். ஆனால் கடந்த வருடத்தில் வருகைதந்ததற்கும் தற்போது வந்ததற்கும் இடையில் சில முன்னேற்றங்களை நீங்கள் கண்டுள்ளதாக நீங்கள் கூறுகின்றீர்கள். ஆனால் மக்கள் நினைப்பதற்கு முரணானதாக உங்களுடைய கருத்துக்கள் அமைந்துள்ளதல்லவா? இது பற்றிய உங்கள் அபிப்பிராயம் என்ன?

நாம் காணும் சில மாற்றங்கள்  அவை பெரும்மாற்றங்கள்  எனக்கூறவரவில்லை ஆனால் அவை நடக்கின்றன. இது மக்களின் தனிப்பட்ட அனுபவத்திலிருந்தும் வருபவையாகும். நீங்கள் மீள் குடியேற்றம் மற்றும் காணிகள் மீண்டும் கிடைக்கப்பெறுகின்றமை போன்ற விடயங்களை நோக்குவீர்களாக இருந்தால்  இது உங்களுக்கு நடந்திருந்தால் நீங்கள் இதனை மிகவும் ஆழமாக உணருவீர்கள்.  ஏனையவர்களும் இது இடம்பெறுகின்றதை என்பதைக் கூறுவார்கள். இது இன்னமும் நடக்கின்றது. நிறுத்தப்படவில்லை என்பதை நினைவில் கொள்ளவேண்டும். அதுவே முக்கியமான அளவுகோலாகும். இது நிறுத்தப்பட்டுவிட்டதா? இல்லை. இன்னமும் முன்செல்கின்றதா? ஆம.; இன்னமும் வேகமாக முன்னெடுக்கப்படலாமா? ஆம் ஆம் . அதனையே நாம் நினைவுறுத்தினோம். அரசாங்கம் இதனை உணர்ந்துள்ளதென நான் நினைக்கின்றேன். இன்னமும் பல விடயங்கள் செய்யப்படவேண்டியுள்ளன. மக்கள் தமது வாக்குகளை அளித்தார்கள் ஆனால் தற்போது நம்பிக்கை இழக்கத்தொடங்கியுள்ளனர். எனவே இதுவிடயத்தில் விரைந்து செயலாற்றுங்கள் என்றே நாம் அரசாங்கத்திற்கு கூறினோம்.


ஜிஎஸ்பி பிளஸ் வர்த்தகச் சலுகைக்கான மதிப்பீட்டின் போது அரசாங்கம் நிறைவேற்றவேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் எதிர்பார்க்கின்ற 27 சாசனங்களுக்கு மேலதீகமாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை அரசாங்கம் நிறைவேற்றுவது தொடர்பிலும் நீங்கள் அவதானம்செலுத்திவருவதாக கூறினீர்கள். கடைசியாக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஐநாவின் இரு விசேட அறிக்கையாளர்களும் பொறுப்புக்கூறல் விடயத்தில் அரசாங்கத்தின் செயற்பாடுகளில் எவ்வித முன்னேற்றமும் இல்லை என்று ஏமாற்றத்தை வெளியிட்டிருந்தனர். இந்தவிடயத்தில் உங்களுடைய தூதுக்குழுவின் பார்வை எப்படி உள்ளது?

பொறுப்புக்கூறல் விடயத்தில் இன்னமும் எவ்வித முன்னேற்றத்தையும் காணமுடியவில்லை. ஒரு செயன்முறை கட்டமைக்கப்பட்டிருப்பதை நாம் காணவில்லை. ஐக்கிய நாடுகள் மனித உரிமை தீர்மானத்திலுள்ள ஏனைய விடயங்கள் தொடர்பிலேயே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதை நாம் காண்கின்றோம். நல்லிணக்கம் ஒருங்கிணைப்பு போன்ற விடயங்களில் நடவடிக்கைகள் இடம்பெற்றுவருகின்றன. காணமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்திற்கான ஆணையாளர் வெற்றிடத்திற்காக மக்கள் விண்ணப்பிப்பதையும் நாம் காண்கின்றோம். ஆனால் பொறுப்புக்கூறல் விடயத்தில் எவ்வித நடவடிக்கையும் இல்லை. அதனை முன்னெடுப்பதற்கான எவ்வித கட்டமைப்புக்களும் இதுவரையில் ஸ்தாபிக்கப்படவுமில்லை

No comments:

Post a Comment