தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் திருகோணமலைமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம்
-பேட்டிகண்டவர் அருண் ஆரோக்கியநாதர்-
கேள்வி : அபிவிருத்திக்கும் நல்லிணக்கத்திற்குமான அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தீர்மானித்ததன் பின்னணியிலுள்ள காரணங்கள் யாது ?
கேள்வி : அபிவிருத்திக்கும் நல்லிணக்கத்திற்குமான அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தீர்மானித்ததன் பின்னணியிலுள்ள காரணங்கள் யாது ?
பதில் :
ஜனாதிபதியவர்கள் அபிவிருத்திக்கும் சமாதானத்திற்குமான சர்வகட்சி மாநாட்டிற்கு மிகக்குறுகிய கால அழைப்பிதழை அனுப்பியிருந்தார்கள் அதாவது கூட்டத்திற்கு முதல்நாள் ஐந்துமணியளவில் எனக்கு அந்த அழைப்புக்கிடைத்தது அப்போது எங்களுடைய கட்சியின் தலைவர் திருகோணமலையிலும் செயலாளர் நாயகம் தேர்தல் சம்பந்தமாக யாழ்ப்பாணத்திலும் இருந்தனர் எங்களுடைய கூட்டுக்கட்சியின் தலைவர்களும் நாட்டில் இருக்கவில்லை இப்படியான ஒருசூழ்நிலையில் தான் இந்த அழைப்பு எங்களுக்கு வந்தது நான் கொழும்பிலுள்ள எமது சக பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடினோம் அப்போது அவர்களுடைய மனநிலை இந்தக்கூட்டத்தை தவிர்த்து கட்சித்தலைமை வந்த பின்னர் பிரத்தியேகமாக ஒருதினத்தில் ஜனாதிபதியைச்சந்திப்பது என்ற அபிப்பிராயம் இருந்தது ஆனால் அன்று மாலை ஐந்தரைக்கு பிற்பாடு எமது கட்சியின் தலைவர் சம்பந்தன் அவர்களுக்கும் ஒரு அழைப்பிதழ் எனது பக்ஸிற்கு அனுப்பப்பட்டிருந்தது நான் அதனை அவருக்கு திருகோணமலைக்கு அனுப்பி அவரிடத்திலே ஆலோசனைகளைக்கேட்டபோது அந்த அழைப்பை சாதகமாக ஏற்றுக்கொண்டு மாவட்டரீதியிலே ஒரு சிறிய தூதுக்குழுவாக சென்று பங்குபற்றுமாறு கூறினார் நீண்டகாலமாக அரசாங்கம் ஒருகுறையை எமது கட்சியிலே போட்டுவருகின்றது அதற்கு ஒரு முற்றுப்புள்ளியை நாங்கள் வைக்கவேண்டும் முக்கியமாக எங்களுடைய மக்களின் அவலம் இடம்பெயர்ந்து வாழும் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களின் அவலங்களை அரசதலைமைக்கு எடுத்துக்கூறவேண்டிய பொறுப்பும் இருக்கின்றது ஆனபடியால் நீங்கள் இதிலே கலந்துகொள்ள வேண்டும் என்ற ஆலோசனையை எங்களுக்கு வழங்கியிருந்தார் அதன்பேரிலே நாங்கள் மிகக்குறுகிய அழைப்பிதழ் என்றாலும் அதனைநாம் ஏற்று அடுத்தநாள் சந்திப்பிலே கலந்துகொண்டோம்
கேள்வி:
கடந்தகாலங்களிலும் இதுபோன்ற அழைப்புக்கள் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிற்கு விடுக்கப்பட்டிருந்தபோது அவற்றை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு புறக்கணித்திருந்தது அந்த அழைப்புக்களை ஏற்று பேச்சுக்களில் பங்கேற்றிருந்தால் பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிர்களைக்காப்பாற்றியிருக்கமுடியும் என தமிழத்த்தேசியக்கூட்டமைப்பின் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றதே
பதில்
அப்பொழுது விடுதலைப்புலிகள் இராணுவப்பலத்தோடு இருந்த ஒரு காரணத்தினால் தான் அரசாங்கம் பேச்சுவார்த்தையொன்றைத் தொடங்கவேண்டிய நிலை ஏற்பட்டது இதையாரும் மறுப்பதற்கில்லை ஏனென்றால் நீண்டகாலமாக நடந்த போராட்டங்களிலே இங்கிருந்த அரச தலைமைகள் சாத்வீக போராட்டங்களில் ஈடுபட்ட தமிழ்த்தலைமைகளை அன்றேல் சிறுபான்மைத்தலைமைகளை அழைத்து ஒருகாத்திரமான பேச்சுவார்த்தை நடத்தி ஒரு தீர்வை எட்டுவதற்கு முயற்சிக்கவில்லை இந்தநிலையிலேதான் ஒரு ஆயுதப்போராட்டம் இங்கு தலையெடுக்க வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டது அந்தப்போராட்டத்தை தமிழ் மக்களில் பெரும்பான்மையோரும் ஆதரித்திருந்தனர் அந்தப்போராட்டம் ஒரு நியாயமான போராட்டம் ஏனெனில் தமிழ்த்தலைமைகளால் முப்பது வருடங்களுக்கு மேலாக முன்னெடுக்கப்ட்ட சாத்வீக ரீதியான போராட்டத்தினால் எந்தவித பலனும் ஏற்படவில்லை என்றநிலைப்பாட்டிலே தமிழ் மக்களும் பெரும்பான்மையாக இதனை ஆதரித்தார்கள் இந்தநிலையிலே அரசாங்கம் சர்வதேசத்தின் உதவிகளைப்பெற்று ஒரு அரசியல் தீர்வைப்பெறுவதற்காக விடுதலைப்புலிகளுடன் பேசிக்கொண்டிருந்த காலம் எங்களோடு அரசியல் தீர்வுபற்றிப்பேசுவதற்கு ஒருகாத்திரமான நிகழ்ச்சித்திட்டத்திலே எங்களுக்கு அழைப்பிதழ் வரவில்லை விடுதலைப்புலிகளுடன் பேசிக்கொண்டிருந்தகாலம் அந்தக்காலத்திலே நாங்கள் போய் அதற்குள் சம்பந்தப்பட்டு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவது பொருத்தமற்றதாக எங்களுக்கு பட்டது எனவே அரசியல்தீர்வைப்பற்றி விடுதலைப்புலிகளுடன் அரசாங்கம் பேசவிரும்புகின்றது சர்வதேசம் அதிலே மும்முனைப்பாக இருக்கின்றது அந்தவகையில் பேச்சுவார்த்தை மூலம் ஒருதீர்வை எட்டுவார்கள் என்ற நம்பிக்கையில் நாங்கள் இருந்தோம்
கேள்வி :
எனினும் யுத்தம் தீவிரம்பெற்றிருந்த மேமாத காலப்பகுதியில் கூட தமிழ்த்தேசியக்கூட்டமை பேச்சுக்கு வருமாறு விடுத்த அழைப்பையும் நீங்கள் நிராகரித்திருந்தீர்களல்லவா ? ஏன் அப்படி நடக்கநேர்ந்தது ?
பதில்
அந்த அழைப்பை பொறுத்தவரையிலே அந்த அழைப்பு எங்களை மானசீகமாக அரசாங்கம் எங்களை அழைத்து அந்தபேச்சுவார்த்தை சம்பந்தமாக கதைப்பதற்காக அழைத்த அழைப்பாக நாங்கள் கருத முடியாது காரணம் என்றவென்றால் அரசாங்கத்திற்கு ஒரு சர்வதேச அழுத்தம் இருந்தது நியாயமான அழுத்தம் இருந்தது அந்த அழுத்தத்தை அரசாங்கம் கையாளுவதற்காக நாங்கள் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பையும் அழைக்கின்றோம் அவர்களோடு பேசுகின்றோம் நாங்கள் மிகவிரைவிலே ஒருதீர்வைக்காணப்போகின்றோம் என்ற ஒரு நிலைப்பாட்டோடு எங்களுடைய பிரச்சனையை இன்னமும் காலம்தாழ்த்துவதற்காக சர்வதேசத்தினுடைய அனுசரணையை பெற்றுக்கொள்வதற்கான அழைப்பாகவே நாங்கள் அதனைப்பார்கின்றோம்
கேள்வி
வன்னியில் இருந்து இடம்பெயர்ந்துவந்த மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள முகாம்களில் பல குறைபாடுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளித்துள்ள அரசாங்கம் இத்தனை பெரும்தொகையான மக்கள் குறுகிய காலப்பகுதிக்குள் வந்துசேரும் போது குறைகள் ஏற்படுவது இயல்பானது அவர்களின் குறைபாடுகளைக் களைந்து வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்துவருகின்றது தற்போது அந்த மக்களின் நிலைமையை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
இந்த மக்கள் தொடர்பில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு என்ன நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றது ?
பதில் :
வன்னி மக்களுக்கு இந்த அவலங்கள் உண்மையாக ஏற்பட்டிருக்க கூடாது இந்தப்பிரச்சனையைப்பொறுத்தவரையில் அரசாங்கம் மிகவும் சாதுரியமாக மனித அழிவுகளை உடமை இழப்புக்களைத் தவிர்த்து இதனைக்கையாண்டிருக்கலாம் என்பது எனது கருத்து; ஒருபோர்நிறுத்தத்திற்கு வந்து பேச்சுவார்த்தையை இந்த நேரத்தில் தொடங்கினால் எமது தரப்பாலும் விடுதலைப்புலிகளுக்கு ஏதாவது அழுத்தத்தைக் கொடுத்து சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு நாங்கள் முழு முயற்சியையும் மேற்கொள்வோம் என நாங்கள் அந்தப்போர் தொடங்கிய காலப்பகுதிதொடக்கம் அரசாங்கத்திடம் மிகவும் வினயமாக நாங்கள் கேட்டிருந்தோம் ஆனால் அதை அரசாங்கம் கேட்கவில்லை அந்த யுத்தம் விடுதலைப்புலிகளுக்கு எதிரான ஒரு யுத்தம் என்று கூறிக்கொண்டாலும் கூட அதிலே பாதிக்கப்பட்டவர்கள் கூடுதலாக அப்பாவிப்பொதுமக்களேயாவர் வன்னி நிலப்பரப்பிலே இருந்த ஏறக்குறைய நான்கு லட்சத்திற்கு மேற்பட்டமக்கள் தங்களுடைய உடமைகளை உறவுகளை முதுசங்களை இழந்து இன்று மிகவுமொரு துன்பகரமான வாழ்க்கையை வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள் வன்னிப்பிரதேசத்தைப்பொறுத்தவரையிலே அவர்கள் எப்போதுமே கடுமையான உழைப்பாளிகளாக இருந்துவந்துள்ளனர் வறுமையையே காணாதவர்கள் வளமான நிலம் வயல்நிலங்கள் தோட்டநிலங்கள் இதே போன்று கடல்வளம் இந்த வளங்களை அவர்கள் முழுமையாக பிரயோசனப்படுத்தி செழிப்போடு வாழ்ந்தமக்கள் என்றே அவர்களை நான் கூறுவேன் பயங்கரவாதம் என்று கூறிக்கொண்டு அந்தப்பகுதியில் அரசாங்கம் போதியளவு அபிவிருத்தியைச் செய்யாவிட்டாலும் கூட அந்த மக்கள் தங்களுடைய முயற்சியிலே பல வசதி வளங்களை ஏற்படுத்திக்கொண்டு வாழ்ந்திருக்கிறார்கள் இந்த மக்களை இன்று இராணுவ நடவடிக்கையினாலே அவர்களுடைய வீடு வாசல் உடமைகளை முற்றாக இழக்கவைத்து அவர்களுடைய உறவுகளை இழக்கவைத்து இன்று அகதிமுகாமிலே அவர்களை வாழவைத்துள்ளனர் இதனை மிகவுமொரு துன்பகரமான நிகழ்வாகவே நாங்கள் பார்க்கின்றோம் அரசாங்கம் இந்த யுத்தத்தைத் தொடங்கும் போது அவர்களை மிகவும் கண்ணியமாக அழைத்திருந்தது இந்த யுத்தம் உங்களுடைய நன்மைக்காக செய்யப்படுகின்ற யுத்தம் உங்களுடைய விடுதலைக்காக செய்யப்படுகின்ற யுத்தம் உங்களுடைய விமோசனத்திற்காக செய்யப்படுகின்ற யுத்தம் என்று கூறிக்கொண்டாலும் கூட மனித நேய யுத்தம் என்று கூறி யுத்தத்தை நடத்திய அரசாங்கம் மனித நேயத்தை ஏற்படுத்தவில்லையென்றுதான் நாங்கள் கூறுவோம் பொதுவாக அரச ஊடகங்களிலே அந்த முகாம்களைப்பற்றி கூறும் போது அவர்கள் வளமாக இருக்கின்றனர் சகல வசதிகளும் செய்துகொடுக்கப்படுகின்றது சுகாதார வசதியிருக்கின்றது கல்வி வசதியிருக்கின்றது ஏனைய வசதிகள் யாவும் இருக்கின்றது மக்கள் அங்கு வசதியாக வாழ்கின்றார்கள் என்று கூறினாலும் கூட ஆனால் உண்மையான நிலைமைகள் அங்கு அவ்வாறில்லை வன்னிப்பிரதேசத்து தமிழ் மக்களைப்பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களை;போய் பார்க்கமுடியாத சூழ்நிலைதான் இன்றும் தொடர்கின்றது அங்கு ஒர் நல்ல சூழ்நிலையிருப்பின் எங்களையும் சர்வதேச தொண்டுநிறுவனங்களையும் விடுவதற்கு அரசாங்கம் ஏன் தயங்க வேண்டும் என்று நாங்கள் அரசாங்கத்தைக் கேட்க வேண்டியிருக்கின்றது
கேள்வி : விடுதலைப்புலிகள் இராணுவரீதியில் தோற்கடிக்கப்பட்டுவிட்டதாக கூறப்பட்டுள்ள நிலையில் தமிழர்தரப்பில் தலைமைத்துவ வெற்றிடம் ஏற்பட்டுவிட்டதாக நிலவும் கருத்துக்கள் தொடர்பாக நீங்கள் என்ன கூற விளைகின்றீர்கள் ?
கேள்வி : விடுதலைப்புலிகள் இராணுவரீதியில் தோற்கடிக்கப்பட்டுவிட்டதாக கூறப்பட்டுள்ள நிலையில் தமிழர்தரப்பில் தலைமைத்துவ வெற்றிடம் ஏற்பட்டுவிட்டதாக நிலவும் கருத்துக்கள் தொடர்பாக நீங்கள் என்ன கூற விளைகின்றீர்கள் ?
பதில் :அப்படியாக தமிழ்த்தலைமையில்லை என்று கூறுவதற்கில்லை ஏனென்றால் எங்களுடைய கட்சியைப்பொறுத்தவரையில் தந்தை செல்வாவின் காலத்தில் இருந்து எங்களுடைய சிறுபான்மை மக்களுடைய பிரச்சனைக்காக போராடிவந்ததொரு பாரம்பரியமான கட்சி அந்தக்கட்சி பரம்பரையாக தலைமைத்துவங்களைக் கொண்டுவருகின்றது விடுதலைப்புலிகளையோ அதன் தலைமைத்துவத்தையோ உருவாக்கியதற்கான பொறுப்பை நாங்கள் அரசாங்கத்திடம்தான் சொல்லவேண்டும் ஏனென்றால் ஜனநாயக வழியிலே இயங்கிய தலைவர்கள் தங்களுடைய ஜனநாயக செயற்பாடுகளைச்செய்ய முடியாத ஒரு காலகட்டம் இருந்தது அந்த நிலைமைக்கு அரசாங்கம் தான் முழுப்பொறுப்பை ஏற்க வேண்டும் தற்போது தமிழ்த்தலைமைத்துவம் இல்லையென்று சொல்வதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது எங்களுடைய கட்சி மிகவும் காத்திரமாக தந்தை செல்வாவின் வழியைப்பின்பற்றி எங்களுடைய செயற்பாடுகளை முன்னெடுக்கின்றோம் இப்போது எங்களுக்கு மேலே சுமத்தப்பட்டுள்ள பாரிய பொறுப்புக்களை நாங்கள் நன்றாக உணர்கின்றோம் ஏனென்றால் இவ்வளவு காலமும் விடுதலைப்புலிகளும் அரசாங்கமும் சர்வதேச சமூகமும் பேச்சுவார்த்தைகளிலே ஈடுபட்டு ஒருதீர்வைக்காண்பார்கள் என்ற எண்ணத்தோடு நாங்கள் இருந்த ஒரு காலகட்டம் இருந்தது அதேநேரத்தில் எங்களுடைய கருத்துக்களை எங்களுடைய நிலைப்பாடுகளை நாங்கள் சர்வதேசச் சமூகத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் மிகத்தெளிவாக கூறிவந்திருக்கின்றோம் ஆனால் இப்போது ஒரு புதுவித சூழல் ஏற்பட்டிருக்கின்றது இ;ந்தச் சூழ்நிலையிலே எங்களுடைய கட்சி மிகவும் செயற்திட்டங்களை வகுத்து அந்த அடிப்படையிலே நாங்கள் காத்திரமாக செயற்படுவதற்கு நாங்கள் முடிவெடுத்துள்ளோம் .
கேள்வி: யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா உள்ளுராட்சி மன்றத்தேர்தல்களிலே பங்கேற்க தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தீர்;மானித்துள்ளது இதனை எப்படி பார்க்கின்றீர்கள் ?இந்தத் தேர்தல் தொடர்பாக மக்கள் மத்தியிலே உண்மையான ஆர்வம் காணப்படுகின்றதா?
பதில் :யாழ் மாநகர சபைத்தேர்தலைப் பொறுத்தளவிலும் வவுனியா நகரசபைத் தேர்தலைப்பொறுத்தளவிலும் இந்தத் தேர்தல்கள் எங்களுடைய மக்கள் மீது வலிந்து திணிக்கப்பட்ட தேர்தலாகத்தான் நாங்கள் பார்க்கின்றோம் ஏனென்றால் இந்தத்தேர்தலை மக்கள் அறவே விரும்பவில்லை அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்களும் இந்தத்தேர்தலை ஏற்றுக்கொள்ளவில்லை இடம்பெயர்ந்து வாழுகின்ற மக்களை அவர்களுடைய சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துங்கள் என அரசாங்கத்திடம் நாங்கள் பிரதானமாக அரசாங்கத்திடம் கேட்டிருந்தோம் அவர்கள் மீளக்குடியமர்த்தப்பட்டு அவர்கள் ஒரு இயல்பு வாழ்க்கைநிலைக்கு திரும்பிய பின்னர் இந்த தேர்தலை நடத்துவதுதான் மிகப்பொருத்தமானதென்று கூறியிருந்தோம் யாழ்ப்பாணத்திலிருந்து பெருந்தொகையான மக்கள் வன்னிப்பிரதேசத்திற்கு இடம்பெயர்ந்திருந்தவர்கள் பிரச்சனையான காலப்பகுதியிலே யாழ்ப்பாணத்திலிருந்த கெடுபிடிகள் காரணமாக வன்னிப்பிரதேசத்திற்கு இடம்பெயர்ந்தவர்கள் வன்னியிலுள்ள வாக்காளர் தொகையிலே நாற்பது வீதத்திற்கு மேலானவர்கள் . அதேபோன்று வவுனியாவிலிருந்தும் வன்னிப்பிரதேசத்திற்கு மக்கள் இடம்பெயர்ந்திருந்தனர் இவர்களெல்லாம் எங்கிருக்கின்றார்கள் அங்கு எத்தனைபேர் இருக்கின்றார்கள் எத்தனைபேர் இல்லை அவர்கள் எப்படியாக வாழ்கின்றார்கள் என்ற நிலைமையைச் சரியாக அறி;ந்து கொள்ளமுடியாத நிலையிலே மக்கள் ஒரு சிறைக்குள் அகப்பட்டது போல மிகவும் துன்ப துயரங்களுடன் வாழும் போது இப்பொழுது அந்த மக்களுக்கு தேiவானது ஒரு தேர்தலல்ல முதலாவது தேவையாகவுள்ளது அவர்களது மீள் குடியேற்றம் அவர்கள் உடல்ரீதியாக உளரீதியாக பொருளாதார ரீதியாக அவர்களுடைய வாழ்க்கை ரீதியாக அவர்கள் மிகமோசமாக பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள் தற்போது வவுனியா முகாம்களில் தற்கொலைகள் கூட நடைபெறுகின்றது படித்த சமூகத்தில் ஆசிரியர்கள் கூட தற்கொலைசெய்கின்றனர் எத்தனையோ வயோதிபர்கள் நாளாந்தம் 15 முதல் இருபது பேர்வரை இறந்துகொண்டிருக்கின்றனர் தாய் தந்தையில்லாத ஆயிரத்திற்கு மேற்பட்ட பிள்ளைகள் இருக்கின்றனர் இப்படியாக வேதனை துன்பங்களுடன் அந்த மக்கள் இருக்கின்றபோது அவர்கள் மீது இந்த நேரத்தில் கொண்டுபோய் தேர்தலைச்சுமத்தியிருப்பது பொருத்தமற்றதொன்றாகவே நாங்கள் கருதுகின்றோம் இருந்தபோதும் எங்கள் மக்கள் மீது இந்த தேர்தல் சுமத்தப்பட்ட காரணத்தினால் நாங்கள் இந்தத்தேர்தலுக்கு முகங்கொடுக்க வேண்டும் இந்த தேர்தல் மூலமாக அரசாங்கத்திற்கும் சர்வதேச சமூகத்திற்கும் தமிழ் மக்களுடைய கட்டுக்கோப்பை உறுதியை தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாஷைகளை மேலும் வலியுறுத்த வேண்டும் அது எங்கள் கடமை என்ற ரீதியில்தான் இந்தத்தேர்தலில் நாங்கள் பங்குபற்றியிருக்கின்றோம்
கேள்வி: ஆறுமாதங்களில் மீள்குடியேற்றம் 180நாள் செயற்திட்டம் மீள்குடியேற்றத்;திற்கு இந்தியா உதவியளிக்கும் போன்ற கருத்துக்கள் அரசதரப்பில் வெளியிடப்பட்டிருக்கின்றது மீள்குடியேற்றம் ஆறுமாத காலப்பகுதியில் இடம்பெறும் என்ற நம்பிக்கை உங்களிடத்தில் இருக்கின்றதா? அரசாங்கம் இந்த விடயத்தில் காண்பிக்கும் முன்னெடுப்புக்கள் தொடர்பில் நீங்கள் எங்கனம் நம்பிக்கை கொண்டிருக்கின்றீர்கள் ?
பதில் நாங்கள் கடைசியாக நடைபெற்ற நல்லிணக்கம் அபிவிருத்தியென்ற மாநாட்டிலே கலந்துகொண்டபோது அதில் ஒன்றைநான் நன்கு அவதானித்தேன் எமது சிறுபான்மை இனத்தைச்சேர்ந்த சகல கட்சிகளின் பிரதிநிதிகளும் அதிலே சமூகமளித்திருந்தார்கள் அவர்கள் அத்தனைபேரும் மீள்குடியேற்றத்தைப்பற்றியும் அந்த மக்களின் இயல்பு வாழ்க்கையைப்பற்றியும் மிகவும் வலியுறுத்திக்கேட்டிருந்தார்கள் மிகவிரைவாக மக்களை மீளக்குடியேற்றி அவர்களுக்கு இயல்புவாழ்க்கையை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்று கேட்டிருந்தார்கள் அத்தோடு நீண்டகாலமாக கிட்டத்தட்ட 60வருடங்களுக்கு மேலாக இந்தநாட்டிலேயுள்ள இனப்பிரச்சனைக்கு இந்த அரசாங்கம் இன்னும் காலத்தைக்கடத்தாமல் தீர்வைக்காண வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது பொதுவாக எல்லாக்கட்சிகளும் எந்தவித மாற்றுக்கருத்துக்களும் இல்லாமல் அங்கிருந்த சிறுபான்மைக்கட்சிகள் எல்லாமே அந்தக்கருத்தைக் கூறியிருந்தன அரசியல்தீர்வுக்கு எதிரான சில கருத்துக்களைச்சொல்லுகின்ற ஜாதிக்க ஹெல உறுமய ஜேஎன்பி போன்ற கட்சிகள் கூட அதற்கு எதிர்ப்புக்களைத் தெரிவிக்கவில்லை அங்கு கண்ணிவெடிகள் இருப்பதாகவும் அவற்றை அகற்றவேண்டும் அவற்றை அகற்றியதன் பின்னர் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுவிட்டது குடியேற்றம் செய்யலாம் என சான்றிதழ் பெறவேண்டும் இதன் பின்னரே குடியேற்றத்தைச்செய்யலாம் என்ற ஒரு கருத்தை அதன் போது ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார் ஆனால் கண்ணிவெடிகளை அகற்றுவதற்கான முயற்சிகள் இடம்பெயர்ந்துவந்து இரண்டுமாதங்களுக்கு மேலாகியும் காத்திரமானமுறையில் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படுவதாக தெரியவில்லை இப்பொழுது இந்த மீள்குடியேற்ற நடவடிக்கைகளிலே தமிழ்ப்பாராளுமன்ற உறுப்பினர்களையும் எங்களுடைய பாராளுமன்ற உறுப்பினர்களையும் சேர்க்கலாம் இப்படிச்சேர்ப்பதன் மூலம் கஷ்டங்கள் இருக்கும் போது உதவிகள் தேவைப்படும் போது எங்களுடைய உதவி ஒத்தாசைகளையும் சிறப்பாக வன்னிப்பிரதேச பாராளுமன்ற உறுப்பினர்களின் உதவி ஒத்தாசைகளையும் பெற்றுக்கொள்ளலாம் ஆனால் அதனைப்பெற்றுக்கொள்வதற்கு எந்தவிதமான ஆர்வமும் காண்பிக்கப்படவி;ல்லை மீள்குடியேற்றம் சம்பந்தமான ஒரு செயற்குழுவிற்கு கிட்டத்தட்ட 19 உத்தியோகஸ்தர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர் இதிலே 18 உத்தியோகஸ்தர்கள் பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்தவர்கள் இடம்பெயர்ந்துள்ளர்களோ தமிழ்மக்கள் அவர்களுக்கு புனர்வாழ்வளிக்க தெரிவுசெய்யப்பட்ட குழுவிலுள்ள 18பேர் சிங்கள சகோதரர்கள் ஒருவர் எங்களுடைய மீள்குடியேற்ற அமைச்சரின் செயலாளர் 19பேரைக்கொண்ட இந்தக்குழுவில் ஒரு தமிழ்ப்பிரதிநிதி கூட இடம்பெறவில்லை
இப்படியான செயற்பாடுகள் மேலும் கசப்பையும் வெறுப்பையும் வளர்ப்பதற்கு ஒரு காரணமாக இருக்கும் இதைப்பொறுத்தவரையில் இன்று நாம் எந்தவித பேதமும் காட்டாமல் அரச தரப்பு எதிர்த்தரப்பு என்றில்லாமல் நாம் அனைவரும் ஒன்றாகச்சேர்ந்து இந்தப்பிரச்சனைக்கு தீர்வுகாணவேண்டும் எனக்கூறும் ஜனாதிபதி இப்படியான மாற்றங்களை பேச்சளவில் மட்டுமல்லாது செயலிலும் செயற்படுத்த வேண்டும் அப்படியாக செயலளவில் எத்தனிப்புக்களைச் செய்கின்றபோதுதான் காலங்காலமாக ஏமாற்றப்பட்டுவந்த இந்த தமிழினம் இந்த அரசியற் தலைமைகளிலே ஓரளவு நம்பிக்கைக்கொள்ளக் கூடிய சூழ்நிலை ஏற்படும் அதனைக் கட்டாயம் ஏற்படுத்தவேண்டும் இப்போதுள்ள அரசியல் தலைமைகள் ஒரு நல்ல தீர்வைக்கண்டு இந்த நாட்டை நல்லிணக்கம் ஒருமைப்பாடு என்ற ரீதியில் கட்டி வளர்க்க வேண்டுமாக இருந்தால் இதனை செயலளவிலே மெல்லமெல்லமாக காண்பிக்க வேண்டும் என்பது எங்களுடைய தாழ்மையான அபிப்பிராயமாகும் கேள்வி:யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியிலும் யுத்தம் உச்சக்கட்டத்தை அடைந்திருந்த காலப்பகுதியிலும் மனித உரிமைகள் மீறப்பட்டதாக பல்வேறு அமைப்புக்கள் மட்டுமல்லாது உங்களது கட்சியும் குற்றச்சாட்டுக்களைத்தெரிவித்துவந்திருந்தது தற்போது உங்களது கட்சி அரசாங்கத்தால் கூட்டப்பட்ட நல்லிணக்கம் அபிவிருத்தி மாநாட்டில் பங்கேற்றிருப்பதன் மூலம் அந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பான உரம் மழுங்கடிக்க படக்கூடிய வாய்ப்புக்ள் உள்ளதாக தெரிவிக்கப்படுவது தொடர்பாக என்ன கூறவிரும்புகின்றீர்கள் ? பதில் : நாங்கள் அந்தக்கூட்டத்திலே கலந்து கொள்வதற்கு சர்வதேசரீதியிலே சில பிரச்சனைகள் இருந்தாலும் கூட இந்தச்சந்திப்பிலே கலந்துகொள்ளவேண்டிய ஒருதேவை எங்களுக்கு இருந்தது நான் முக்கியமாக ஆரம்பத்திலே குறிப்பிட்டபடி குறிப்பாக மக்கள் எங்களுடைய மக்கள் படுகின்ற துன்ப துயரங்கள் அவர்களுடைய வேதனைகளில் இருந்து அவர்களை மீட்டு நாங்கள் அவர்களுக்கு ஒரளவு நிவாரணம் கொடுக்க வேண்டும் அதற்கு நாங்களும் அரசாங்கத்திற்கு அழுத்தத்தைக்கொடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டோடுதான் நாங்கள் அதிலே கலந்துகொண்டோம் இதற்காக அரசாங்கம் செய்த மனித உரிமை மீறல்களை மூடி மறைப்பதற்காக நாங்கள் இந்தக் கூட்டத்திலே கலந்துகொண்டோம் என்று கருதுவது பிழையானது அரசாங்கத்தால் செய்யப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பிலே நியாயமான விசாரணை செய்யப்படவேண்டும் அதிலே எங்களுக்கு மாறுபட்ட கருத்துகிடையாது ஏனென்றால் எங்கள் மக்களிடமிருந்த வருகின்ற தகவல்களிலிருந்து மனித உரிமைகள் அதிகளவில் மீறப்பட்டிருக்கின்றது என்பதை மறுக்க முடியாது தற்போது கூட முகாம்களிலேயிருந்து பலவிதமான விரும்பத்தகாத செய்திகள் வந்துகொண்டிருக்கின்றது ஏனென்றால் அங்குள்ள இளம்யுவதிகள் விசாரணை என்ற போர்வையில் ஏமம்சாமம் என்றில்லாமல் கூப்பிடப்பட்டு விசாரணைசெய்யப்படுகின்றார்கள் என்ற அச்சம் இளம்பெண்கள் மத்தியிலே இருக்கின்றது கணவனை இழந்தபெண்கள் மத்தியிலேயும் சில அச்சம் இருக்கின்றது புல்மோட்டை முகாமிலே சில சம்பவங்கள் இடம்பெற்றதாக பத்திரிகைளிலும் சில கதைகளை பார்க்ககூடியதாக இருந்தது அதிலே உண்மையில்லை என நாங்கள் சொல்வதற்கில்லை அப்படியான உண்மைகள் இருப்பதாகத்தான் அங்கு மக்கள் பேசிக்கொள்கிறார்கள் இது இன்னும் வீணான கசப்புக்களை ஏற்படுத்துவதற்கு சாதகமாக அமையக்கூடும் ஆனபடியால் இடம்பெயர்ந்த மக்கள் விடயத்திலே அரசாங்கம் மிகவும் அக்கறையுடன் நடந்துகொள்ளவேண்டும் அவர்கள் கௌரவமாகவும் தன்மானத்துடனும் சீவித்த மக்கள் அவர்களை ஒரு மனிதராக கணித்து இந்த நாட்டின் பிரஜைகளாக கணித்து அவர்களுக்குரிய மனிதாபிமான பிரச்சனைகளை நன்கறிந்து அவர்கள் இப்படியான சில கஷ்டங்களில் இருந்து விடுபடுவதற்கு அரசாங்கம் உதவவேண்டும் அத்தோடு நாங்களும் இந்த முகாம்களைப்போய்பார்க்கவேண்டும் மக்களிடத்தில் இருந்து இப்படியான குறைகள் வரும் போது இதிலே உண்மையிருக்கின்றதா இல்லையா என்ற தகவலை நாங்கள் வெளியிலே சொல்ல முடியாத சூழ்நிலைதான் இன்று தொடர்கின்றது இடம்பெயர்ந்து முகாம்களிலுள்ள மக்களை உடனடியாக நாங்கள் சென்று பார்க்கவேண்டும் அவர்களுடைய பிரதிநிதிகள் நாங்கள் ஆனபடியால் எங்களை அங்கு செல்வதற்கு அனுமதிக்க வேண்டும் அவர்களுடன் நாங்கள் கதைக்கவேண்டும் அத்தோடு நாங்கள் கலந்து அரசாங்கத்துடன் சேர்ந்து இதற்கு என்னசெய்யலாம் என்று கூட்டிணைந்து ஜனாதிபதி விரும்புகின்றபடி ஒரு செயற்திட்டத்தை நாங்கள் விரைவாக எடுக்க முடியும் 180நாள் வேலைத்திட்டம் என்பது செய்யமுடியாததல்ல அரசாங்கம் முழுமுயற்சியுடன் செய்தால் 180நாட்களுக்கு முன்பாக அந்த மீள் குடியேற்றத்தைச்செய்யலாம் நாங்களும் அதற்கு ப+ரணமான ஒத்துழைப்பை வழங்குவோம் எங்களிடத்தில் என்னென்ன உதவிகள் தேவை நீங்கள் இதைச்செய்யவேண்டும் என்றால் நாங்கள் போய் அந்த உதவிகளைச்செய்து மக்களை 180நாட்களுக்கு உள்ளே குடியேற்ற முடியுமாக இருந்தால் அரசாங்கத்திற்கும் நல்லது எங்களுக்கும் நல்லது நாங்கள் அதைத்தான் விரும்புகின்றோம்
No comments:
Post a Comment