ஆக்கம்: அருண் ஆரோக்கியநாதர்
இலங்கையின் அரசியல் யாப்பில் செப்டம்பர் மாதத்தில் பெரும் மாற்றங்கள் இடம்பெறவுள்ளதாக தற்போது கருத்துக்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.
ஒருவர் இருதடவைகள் மாத்திரமே ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியும் என தற்போதுள்ள நிலையை மாற்றியமைத்தல் உத்தேச அரசியல்யாப்பு மாற்றத்தில் முக்கியத்துவம் பெறுமென நம்பப்படுகின்றது.
உத்தேச அரசியல்யாப்பு திருத்தங்கள் தொடர்பில் அரசாங்கத்தரப்பில் உள்ளவர் மத்தியிலே தெளிவற்ற நிலை காணப்படுவதை ஐக்கியதேசியக்கட்சியுடனான பேச்சுக்களின் போது காணமுடிந்ததாகவும் இதுதொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாக அரசாங்கத்திடமிருந்து எழுத்துமூலமான யோசனைகளை எதிர்பார்த்துள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கடந்த வாரம் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்திருந்தார்.
குடும்பத்தை மையப்படுத்திய அரசியல் யாப்பாக அன்றி மக்கள் மயப்படுத்தப்பட்ட மக்களுக்கு நன்மைதரக்கூடிய அரசியல் யாப்பை உறுதிப்படுத்தும் ஒரேநோக்குடனேயே அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைக்கு சென்றிருந்ததாகவும் வேறு எந்த நோக்கமும் தமக்கு இருக்க வில்லை எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தார்..
ஆனால் இந்த செய்தியாளர் மாநாடு இடம்பெற்று ஒருநாள் கடக்க முன்பாகவே அரசியல்யாப்பு திருத்தங்களுக்காக அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எடுத்த தீர்மானம் காரணமாக அரசியல்யாப்பை திருத்தியமைப்பதற்கு தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தை அரசாங்கம் பெற்றிருந்தது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் இடம்பெற்ற பாராளுமன்றத்தேர்தல்களில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 144 ஆசனங்களையும் ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் 81 ஆசனங்களையும் பெற்றிருந்தன. தேர்தலுக்கு முன்பாகவே அரசியல் யாப்பில் மாற்றங்களைக் கொண்டுவருவது தொடர்பாக கருத்துக்களை வெளியிட்டு வந்த ஆளுங்கட்சிக்கு தேர்தலில் மூன்றில் இரண்டு அறுதிப்பெரும்பான்மை கிட்டவில்லையாகினும் பிரபா கணேசன் திகாம்பரம் ஆகியோரதும் ஸ்ரீமுஸ்லிம் காங்கிரஸின் ஆதரவும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றிருக்கின்றது
இந்த நிலையில் அரசியல்யாப்பில் மேற்கொள்ளவுள்ள உத்தேசத் திருத்தங்கள் தொடர்பில் அரசாங்கம் இனிமேலும் ஜக்கிய தேசியக்கட்சிக்கு எழுத்துமூலமாக யோசனைகளை வழங்கி அதன் ஆதரவைக் கோரும் என எதிர்பார்க்கமுடியாது
.
; அரசியல் யாப்பில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தங்கள் தொடர்பில் பொதுமக்கள் அறிந்திருப்பது முக்கியமானது மக்கள் மத்தியில் இவ்விடயம் கலந்தாலோசிக்கப்படவேண்டும் ஏனெனில் இது அவர்களது எதிர்காலம் தொடர்பான விடயம் என ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டிருந்தார் .
இதனைவிதமான கருத்தை கடந்த வாரம் கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்பாக சாட்சியமளித்த இலங்கையின் சிரேஷ்ட இராஜதந்திரிகளில் ஒருவரான ஜயந்த தனபாலவும் சுட்டிக்காட்டியிருந்தார்
அரசியல்யாப்பில் மேற்கொள்ளவுடவுள்ள மாற்றங்கள் தொடர்பாக மக்கள் மத்தியில் கருத்தாடல்கள் இடம்பெறவேண்டும் இதற்கு ஆகக்குறைந்தபட்டம் சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவினரால் தயார் செய்யப்பட்ட யோசனைகளது அறிக்கைவெளியிடப்படவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அரசியல்யாப்புத்திருத்தங்கள் பற்றி மக்கள் எந்தவகையிலும் அக்கறை காண்பிக்கவில்லை அவர்கள் அடிப்படைத்தேவைகளைப் பற்றியே கேட்கின்றனர் என ஆணைக்குழுவின் தலைவர் சித்தராஞ்சன் டி சில்வா குறிப்பிட்டார். கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவினர் அண்மையில் வவுனியாவிற்கு விஜயம் செய்திருந்தபோது அங்கு வந்திருந்த மக்களில் 99வீதமானவர்கள் தம்மை சமமானவர்களாக மதிக்கவேண்டும் சம உரிமைவேண்டும் என்றே வலியுறுத்தியதாக குறிப்பிட்ட ஆணைக்குழுத்தலைவர் அவர்களுக்கு அரசியல்யாப்பு திருத்தங்கள் தொடர்பிலோ அன்றேல் தம்பகுதியில் மேற்கொள்ளப்படும் பாரிய அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பிலோ எவ்வித அக்கறையும் கிடையாது எனத் தெரிவித்திருந்தார்
'அரசியல்யாப்பே எந்தவொரு நாட்டினதும் சட்டத்தின் அடிநாதம்'
இதற்கு பதிலளித்த ஜயந்த தனபால சமமாக கருதப்படவேண்டும் என்ற
ஆதங்கம் அரசியல்யாப்புடனேயே தொடர்புபட்டது ஏனென்றால் அரசியல்யாப்பே எந்தவொரு நாட்டினதும் சட்டத்தின் அடிநாதமாக காணப்படுகின்றது மக்களின் அபிலாஷைகளை உள்ளடக்கிய அரசியல்யாப்பின் உருவாக்கமும் நடைமுறைப்படுத்தலுமே மக்களின் அடிப்படைத்தேவைகளைப் பூர்த்திசெய்யும் என வலியுறுத்தினார்.
இதன்போது குறுக்கிட்ட ஆணைக்குழுத்தலைவர் வவுனியாவில் மக்களைச் சந்தித்த போது அவர்கள் அரசியல் யாப்புதிருத்தங்கள் எவ்வித நாட்டமும் காட்டவில்லை அது அவர்களைப்பொறுத்தவரையில் முக்கியமில்லாததொன்றாகவே இருந்தது அவர்களுக்கு அதில் அக்கறை இல்லை மக்கள் வேண்டுவதெல்லாம் சமமான தொழில் வாய்ப்புக்கள் கல்வியில் சமவாய்ப்புக்கள் எனதெரிவித்ததுடன் நிலப்பிரச்சனை தொடர்பிலும் மக்கள் கூறியிருந்தனர் நிலப்பிணக்குகள் தமக்கு சுட்டிக்காட்டப்பட்ட் முக்கியமான விடயம் எனக்குறிப்பிட்டார்.
; அரசியல் யாப்புதிருத்தங்கள் தொடர்பில் மக்களுக்கு அக்கறையில்லை அவர்கள் சம உரிமையையே வேண்டிநிற்பதாக ஆணைக்குழுத்தலைவர் திரும்ப திரும்ப கூறியபோது ஜயந்த தனபால மீண்டுமாக தனது கருத்தை நியாயப்படுத்தினார் அரசியல் யாப்பு எந்தவொரு நாட்டினதும் சட்டத்தின் அடிநாதமாக திகழ்கின்றது மக்கள் தொடர்பில் அரசாங்கதிற்குள்ள உரிமைகளும் கடமைகளும் அரசியல்யாப்பின் மூலமாகவே உறுதிசெய்யப்படவேண்டும் .இந்த விடயங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படாமையானது மக்களின் அபிலாஷைகளை காட்டிக்கொடுக்கின்ற விடயமாகவே அமையும் அந்த வகையில் எவ்வித தாமதமுமின்றி இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என குறிப்பிட்டார்.
தற்போது இலங்கைக்கு தேவையானது அரசியல்யாப்பு மாற்றமா அன்றேல் புத்தம் புதிய அரசியல் யாப்பா என்ற வாதப்பிரதிவாதங்கள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றது.தற்போது எவ்வாறான நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ளும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் அரசியல் துறைத்தலைவரும் பிரபல அரசியல் ஆய்வாளருமான கலாநிதி கீத பொன்கலன் அவர்களை வினவியபோது
'மூன்றில் இரண்டு பெரும்பான்மை அரசாங்கத்திற்கு இருப்பதன் காரணமாக தாங்கள் விரும்பிய எதனையும் செய்யக் கூடிய இயலுமை அரசாங்கத்திற்கு காணப்படுகின்றது என்பது மறுக்கப்படுவதற்கில்லை வரலாற்றை எடுத்துப்பார்ப்போமாக இருந்தால் அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் புதிய யாப்புக்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன 1972ம் மற்றும் 1978ம் ஆண்டுகளிலும் புதிய யாப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன ஏனெனில் அப்போதைய அரசாங்கங்களுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் காணப்பட்டது .அதில் வரலாற்று ரீதியான என்கின்ற முக்கியத்துவம் காணப்படுகின்றது
ஏனெனில் புதிய யாப்பொன்று அறிமுகப்படுத்தப்படுகின்றபோது அந்த யாப்பு அந்த தனிமனிதனுடைய அல்லது அந்த அரசாங்கத்தினுடைய யாப்பாக பார்க்கப்படுவதற்கான ஒருசந்தர்ப்பம் இருக்கின்றது உதாரணமாக 1978ம் ஆண்டு யாப்பு ஐக்கிய தேசியக்கட்சியினுடைய யாப்பு இலங்கை யாப்பு என பார்க்கப்படுவதிலும் பார்க்க அதிகமாக ஜே ஆர் ஜெயவர்த்தனவின் யாப்பு என்று பார்க்கப்படுகின்றது .அந்தவகையில் அவருடைய புகழ் அவருடைய வரலாறு அவருடைய பங்களிப்பு என்று பார்க்கப்படுவதற்கான சந்தர்ப்பம் இருக்கின்றது. அதனடிப்படையில் நோக்குகின்றபோது மஹிந்த ராஜபக்ஸவிற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருக்கின்றபோது புதிய யாப்பு ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கான ஒரு ஆர்வம் ஒரு ஆசை இருப்பதற்கான சந்தர்ப்பங்கள் இருக்கும் .ஏனெனில் அது மஹிந்த ராஜபக்ஸவின் பங்காக இந்தநாட்டிற்கு அவர் ஆற்றிய சேவையாக வரலாற்று ரீதியாக பார்க்கப்படுவதற்கான ஒரு சந்தர்ப்பம் இருக்கின்றது ஆனால் அதற்கிருக்கின்ற சிக்கல் என்னவெனில் புதிய யாப்பொன்றை அறிமுகப்படுத்துவதாக இருந்தால் இப்போதிருக்கின்ற முறைமையில் இருந்து முழுமையாக மாறிச்சென்று வேறொரு முறைமைக்கு செல்ல வேண்டும் .அவ்விதமில்லாமல் இப்போதிருக்கின்ற அதே பண்புகளை வைத்துக்கொண்டு புதிய யாப்பொன்றை அறிமுகப்படுத்துகின்றோம் எனக்கூறுவது சற்று நகைச்சுவையான விடயமாகத்தான் இருக்கும். இப்போதிருக்கின்ற நிலையில் ஜனாதிபதி முறைமையை மாற்றிக்கொள்வதற்கான எந்தவிதமான ஆர்வமும் அரசாங்கத்திற்கு காணப்படவில்லை
ஆகவே புதிய யாப்பு ஒன்றை அறிமுகப்படுத்துவதென்ற விருப்பத்தை செயற்படுத்துவதாக இருந்தால் ஜனாதிபதி முறைமையில் இருந்து பாராளுமன்ற முறைமைக்கு மாறிச்செல்வது என்றவிதமான மாற்றங்கள் உட்படுத்தப்படவேண்டும். அவ்விதமில்லாமல் புதிய யாப்பொன்றை நாம் அறிமுகப்படுத்தினோம் என்று கூறுவது சற்றுக்கடினமானதாகும் ஆகவே என்னுடைய எதிர்பார்ப்பின் படி தற்போதுள்ள யாப்பில் மேலும் சில திருத்தங்கள் செய்யப்படுவதற்கான சாத்தியம் இருக்கின்றதே ஒழிய புதிய யாப்பொன்றை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியம் மிகவும் குறைவானதென்று நான் நினைக்கின்றேன்' என கலாநிதி கீத பொன்கலன் பதிலளித்தார்
1978ல் அறிமுகப்படுத்தப்பட்ட இலங்கையின் தற்போதைய அரசியல்யாப்பானது இறுக்கமானதொரு ஆவணமாக அடிப்படையில் தோன்றினாலும் 32வருடகாலப்பகுதிக்குள்ளாக ஏற்கனவே 17முறை திருத்தங்களுக்கு உட்பட்டுள்ளநிலையில் அது பலவீனமானதொரு அரசியல்யாப்பா என்ற கேள்விகளையும் சிலர் எழுப்பமுடியும்.
பலவீனமான அரசியல் யாப்பா அடிக்கடி திருத்தங்களுக்குள்ளாகும் என்ற கேள்விகளும் சிறந்த அரசியல்யாப்பு திருத்தங்களுக்குள்ளாவதில்லை என்ற கருத்துக்களும் அரசியல் யாப்பை பலவீனம் என்பதுடன்தொடர்புபடுத்திப்பார்க்க முடியுமா என்ற கேள்விகளும் எமது அரசியல்யாப்பை குறித்து பரந்துபட்டு சிந்திப்பவர்களின் மனதில் தோன்றக்கூடும்.
உலகிலுள்ள முன்னணி ; அன்றேல் நாம் அதிகமாக அறிந்த நாடுகள் சிலவற்றில் அரசியல்யாப்புக்கள் திருத்தங்களுக்குள்ளான தடவைகளையும் முறைமைகளையும் இங்கே ஆராய்ந்து பார்ப்பது இந்தக்கேள்விகளுக்கு ஏதோவகையில் விடைதருமா ?
பிரித்தானியாவின் அரசியல்யாப்பானது எழுதப்படாததொன்றாக இருக்கின்ற காரணத்தால் அதிலே மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை சரியாக பகுத்தறிவது கடினமானதென்ற வகையில் அதனை விட்டு விட்டு ஏனையவற்றில் கவனம் செலுத்தலாம்.
1787ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 17ம்திகதி அறிமுகப்படுத்தப்பட்ட ஐக்கிய அமெரிக்காவின் அரசியல்யாப்பு இதுவரையில் 27தடவைகள் மாத்திரமே திருத்தங்களைக் கண்டிருக்கின்றது இதில் முதல் பத்துத்திருத்தங்களும் உரிமைபற்றிய சட்டங்கள் (Bill of Rights) என பொதுவாக அறியப்படுகின்ற இவை 1791ம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தன.அமெரிக்க அரசியல் யாப்பிலுள்ள 27திருத்தங்களில் கடைசித்திருத்தமான 27வது திருத்தம் 1992ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டது .தென் ஆபிரிக்காவின் தற்போதைய அரசியல்யாப்பு 1996ம் ஆண்டு அறிமுகப்படு;த்தப்பட்டது இது ஏற்கனவே 16தடவைகள் திருத்தங்களைச் சந்தித்துள்ளது 2009ம் ஆண்டில் மாத்திரம் மூன்று திருத்தங்களைக் கண்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது .
தென் ஆபிரிக்காவில் தற்போதுள்ள அரசியல்யாப்பிற்கு முன்பாக 1909இ1961இ1983 மற்றும் 1993ம் ஆண்டுகளில் பல அரசியல்யாப்புக்கள் இருந்துள்ளன.இது இலங்கையைப் போன்ற கிட்டத்தட்ட பிரதிபலித்துநிற்கின்றது
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் அரசியல்யாப்பு 1950ம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது இலங்;கையைப் போன்றே நெகழ்ச்சித்தன்மையற்ற அரசியல்யாப்பாக இது கருதப்பட்டபோதிலும் 60 ஆண்டு காலப்பகுதியில் 94 தடவைகள் அதில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.இறுதித்தடவையாக 2006ம் ஆண்டில் திருத்தம் கொண்டுவரப்பட்ட இந்திய அரசியல்யாப்பானது இறைமையுள்ள சுதந்திர நாடுகளில் எழுத்தில் எழுதப்பட்ட உலகின் நீண்ட அரசியல்யாப்பாக கருதப்படுகின்றது இந்திய அரசியல்யாப்பில் 395 அத்தியாயங்கள் (Articles) உள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
உலகின் மிக அதிக மக்கள் தொகைகொண்ட நாடான சீனாவின் அரசியல்யாப்பு ஏனைய முன்னணிநாடுகளின் அரசியல்யாப்புக்களிலும் குறைந்த கவனத்தையே பெற்றிருக்கின்றது சீனாவின் தற்போதைய அரசியல்யாப்பு 1982ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டதுடன் அதில் 4திருத்தங்கள் இதுவரையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
.
அவுஸ்திரேலியாவின் தற்போதைய அரசியல் யாப்பு 1900ம் ஆண்டில் ஐக்கிய இராஜ்ஜியத்தால் உருவாக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டது அவுஸ்திரேலியாவின் அரசியல்யாப்பை திருத்துவதற்கான யோசனைகள் 44தடவைகள் முன்வைக்கப்பட்டபோதிலும் 8தடவைகள் மாத்திரமே வெற்றியளித்துள்ளன.
உலகின் இரண்டாவது பெரிய நாடான கனடாவின் அரசியல்யாப்பு 1982ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது .பத்துதடவைகள் அதில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன கடைசியாக செய்யப்பட்ட மாற்றம் 2001ம் ஆண்டில் இடம்பெற்றது.
சோவியற் ஒன்றியத்தின் சிதைவின் பின்னரும் உலகில் பரப்பளவில் மிகப்பெரிய நாடாக திகழும் ரஷ்யாவின் தற்போதை அரசியல்யாப்பு 1993ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இதுவரையில் ஒருதடவை மாத்திரமே 2008ம் ஆண்டில் அது திருத்தத்திற்குள்ளாகியுள்ளமை இணையத்தளத்தேடல்களின் மூலம் அறியமுடிகின்றது
அரசியல் யாப்பில் செய்யப்பட்ட திருத்தங்களின் அடிப்படையில் அது நல்லதா கெட்டதா அன்றேல் வலுவானதா பலவீனமானதா என்பதைத் தீர்மானிக்க முடியாது என்பது தெளிவாகின்றது
1978ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஏழாம் திகதி இலங்கையின் தற்போதைய அரசியல்யாப்பு அறிமுகப்படுத்தப்பட்டது இதில் 16திருத்தங்கள் ஐக்கியதேசியக்கட்சியின் ஆட்சிக்காலத்திலும் 17வது திருத்தம் சந்திரிக்காவின் தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணியின் காலத்திலும் மேற்கொள்ளப்பட்டது
தற்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு அரசாங்கத்தினால் அரசியலமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள உத்தேச மாற்றங்கள் தமிழ் பேசும் சிறுபான்மை மக்களுக்கு ஏதேனும் நன்மைகளைக் கொண்டுவருமா என கொழும்பு பல்கலைக்கழகத்தின் அரசியல் துறைத்தலைவர் கலாநிதி கீத பொன்கலனிடம் வினவியபோது
'தற்போது முன்னெடுக்கப்படுகின்ற மாற்றங்களில் இனப்பிரச்சனைக்கான தீர்வு விடயத்தில் பாரதூரமான புதிய விடயங்கள் எதுவும் சேர்த்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கவில்லை உதாரணமாக அதிகாரத்தை பரவலாக்குவதற்கான நியாயமான ஒரு உள்ளடக்கம் இம்முறை மாற்றங்களில் சேர்து;துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கவில்லை ஏனெனில் தற்போதுள்ள அரசியல் சூழ்நிலை அதற்கு சாதகமானதாக இல்லை குறிப்பாக தமிழ்தரப்பில் இருந்து வரக்கூடிய அழுத்தங்கள் முழுமையாக இல்லாமல் போயிருக்கின்றது என நான் நினைக்கின்றேன் ஆயுதப் போராட்டம் இருக்கும் வரையில் ஒருவிதமான அழுத்தம் காணப்பட்டது ஆயுதப் போராட்டம் இல்லாமல் போனதன் பின்னர் அரசியல் அழுத்தம் இருந்திருக்க வேண்டும் ஆனால் தற்போதைய நிலையில் பார்க்கின்றபோது தமிழ்த்தரப்பில் இருந்து எந்தவிதமான அழுத்தங்களும் செயல்பாடுகளும் காணப்படவில்லை என்பதன் காரணமாக அரசாங்கத்தின் மீது எந்தவிதமான அழுத்தமும் இருக்கவில்லை அதன் காரணமாகவும் இந்த விருப்பத்தின் பற்றாக்குறை காரணமாகவும் அவ்விதமான ஒரு ஏற்பாடு சிறுபான்மையினருக்கு அல்லது அவர்களுடைய பிரச்சனைகளைத் தீர்;த்துக்கொள்ளக்கூடிய ஏற்பாடு சேர்த்துக்கொள்ளப்படும் என்று நான் நினைக்கவில்லை இம்முறை அரசியலமைப்பு மாற்றம் அறிமுகப்படுத்தப்படுகின்றபோது இதுதொடர்பாக பாரிய முன்னேற்றகரமான நடவடிக்கைகள் எதனையும் நான் எதிர்பார்க்கவில்லை' எனச் சுட்டிக்காட்டினார்.
யுத்தத்தினால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் புதிய மாற்றங்கள் தொடர்பாக எதிர்பார்ப்புக்களைக் கொண்டிருந்தாலும் கடந்தகாலத்தில் அரசியல்யாப்பில் உள்ளடக்கப்பட்ட விடயங்களே இன்னமும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாத நிலையில் புதிதாக ஏதும் நடக்கும் என எதிர்பார்ப்பது யாதார்த்தததை உணர்ந்துகொள்ளாமையாகவே பார்க்கப்படலாம்
அரசியல் யாப்பு என்ற பெயரில் உன்னதமான ஆவணமொன்று இருந்தாலும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் நடைமுறைப்படுத்தப்படாவிடின் அதனால் என்ன பயனேற்பட முடியும் என அரசியல்கட்சிகளின் பிரமுகர்களும் ஆய்வாளர்களும் கடந்த காலங்களில் பல்வேறு மேடைகளில் சுட்டிக்காட்டிய கூற்றையே உங்கள் சிந்தனைகளுக்கு இவ்வேளையில் முன்வைக்க விரும்புகின்றேன் .
No comments:
Post a Comment