Thursday, December 16, 2010
கிரிக்கட் ரசிகர்களின் பேரபிமானம் பெற்ற ஆஷஷ் கிண்ண கிரிக்கட் தொடர் நாளை ஆரம்பம்
கிரிக்கட் விளையாட்டின் மிகப்பழைமையானதும் பாரம்பரியம் மிக்கதுமான ஆஷஷ் கிண்ண டெஸ்ற் கிரிக்கட் தொடரின் மற்றுமொரு அத்தியாயம் நாளையதினம் அவுஸ்திரேலியாவில் ஆரம்பமாகின்றது
கடந்த இரண்டு தசாப்தகாலத்தில் முதற்தடவையாக அவுஸ்திரேலிய மண்ணில் ஆஷஷ் தொடரொன்றை வென்றெடுக்கும் நம்பிக்கையுடன் இங்கிலாந்து அணியும் தமது அணியின் பெயரைக் கட்டிக்காக்கும் திடசங்கற்பத்துடன் அவுஸ்திரேலிய அணியும் களமிறங்குகின்றன.
1986ஃ87 கிரிக்கட் பருவகாலத்திலேயே 2ற்கு 1 என்ற போட்டிகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அவுஸ்திரேலிய மண்ணில் கடைசியாக வெற்றியீட்டியிருந்தது .அதற்கு பின்னர் அவுஸ்திரேலியா மண்ணில் இடம்பெற்ற 5 ஆஷஷ் தொடர்களிலும் இங்கிலாந்து அணி படுமோசமான தொடர் தோல்விகளைத் தழுவியுள்ளது
இந்த 5 ஆஷஷ் தொடர்களிலும் இருநாடுகளும் 25 டெஸ்ற்போட்டிகளில் விளையாடியுள்ளதுடன் இதில் இங்கிலாந்து அணி 18 போட்டிகளில் தோல்வியைத்தழுவியுள்ளதுடன் மூன்றில் மாத்திரமே வெற்றிபெற்றுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது .
இருந்தபோதிலும் இம்முறை முடிவுகள் வித்தியாசமாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.
இதற்கு அண்மைக்காலமாக இங்கிலாந்து அணி வெளிப்படுத்திவருகின்ற சிறப்பான ஆற்றல் வெளிப்பாடுகளும் நம்பிக்கையூட்டும் பயிற்சிப்போட்டி முடிவுகளும் மட்டுமன்றி அவுஸ்திரேலிய அணியின் ஆட்டத்திறனில் காணப்படும் சோபையிழப்பும் அவ்வணியின் வீரர்கள் சிலரது உடற்திடநிலை குறித்த கரிசனைகளும் காரணமாகும் .
தற்போதைய நிலையில் இங்கிலாந்து அணி சர்வதேச கிரிக்கட் பேரவையின் தரப்படுத்தலில் அவுஸ்திரேலியாவிலும் மேலாக இருப்பதுடன் கடந்த இருவருடங்களில் சிறப்பான வெற்றி தோல்வி விகிதாசாரப் பெறுதியைக் கொண்டிருக்கின்றது.
கடந்த 2வருடங்களில் இங்கிலாந்து அணி 12 டெஸ்ற் போட்டிகளில் வெற்றிபெற்றும் 4போட்டிகளில் தோல்வியடைந்துமுள்ள அதேவேளையில் அவுஸ்திரேலிய அணியோ 12 டெஸ்ற் போட்டிகளில் வெற்றிபெற்றும் 6 போட்டிகளில் தோல்வியடைந்துமுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
கடந்த முறை அவுஸ்திரேலிய மண்ணில் இடம்பெற்ற ஆஷஷ் தொடருக்கு முன்பான 2வருட காலப்பகுதியில் அவுஸ்திரேலிய அணி விளையாடிய டெஸ்ற் போட்டிகளில் 15ல் வெற்றி பெற்றிருந்ததுடன் 2ல் மாத்திரமே தோல்வியைத் தழுவியிருந்து .
அந்த 2 டெஸ்ற் தோல்விகளும் இங்கிலாந்து மண்ணில் 2005ல் இடம்பெற்ற ஆஷஷ் தொடரின் போது சந்தித்த தோல்விகளாகும். அந்தத் தோல்விகளைத் தவிர விளையாடிய அனைத்துப்போட்டிகளிலும் அவுஸ்திரேலிய அணி அபார வெற்றிகளைக் குவித்திருந்தது. இதில் பலம்வாய்ந்த தென் ஆபிரிக்க அணிக்கெதிராக 2006/7 பருவகாலத்தில் தாயகத்திலும் வெளியிலும் விளையாடிய ஆறுபோட்டிகளில் ஈட்டிய 5 வெற்றிகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்வாறான உச்சநிலையில் இருந்தபோதே 2006ஃ 7 பருவகாலத்தில் அவுஸ்திரேலிய மண்ணில் கடைசியாக இடம்பெற்ற ஆஷஷ் தொடரில் அவுஸ்திரேலிய அணி 5-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணியை வெள்ளையடிப்புச் செய்து அமோக வெற்றியீட்டியிருந்தது .
அந்த ஆஷஷ் தொடருடன் அவுஸ்திரேலிய அணியின் ஜாம்பவான் வீரர்களான ஷேன் வோர்ன் கிளென் மக்கிராத் மத்தியு ஹெய்டன் ஜஸ்ரின் லாங்கர் மற்றும் டேமியன் மார்டின் ஆகியோர் ஓய்வுபெற்றதுமே அவுஸ்திரேலிய அணியின் வீழ்ச்சி ஆரம்பமாகியது .
இந்நிலையில் கடைசியாக 2009ம் ஆண்டில் இங்கிலாந்து மண்ணில் இடம்பெற்ற ஆஷஷ் தொடரில் 2ற்கு 1 என்ற கணக்கில் அவுஸ்திரேலிய அணி ஆஷஷ் தொடரை இழந்தது . இதன் மூலமாக இரண்டு முறை(2005இ2009) இங்கிலாந்து மண்ணில் ஆஷஷ் தொடரை இழந்த அவுஸ்திரேலிய அணிக்கு தலைமைதாங்கியவர் என்ற அவப்பெயரை ரிக்கி பொன்டிங் ஈட்டிக்கொண்டதுடன் அவரது கிரிக்கட் எதிர்காலம் தொடர்பான விமர்சனங்களுக்கும் ஆளானார்.
ஆனால் தமது தாயகத்தில் இம்முறை ஆஷஷ் தொடர் இடம்பெறுவதாலும் இங்கிலாந்தில் அடைந்த தோல்விகளுக்கு பழிவாங்குவதற்கு நீண்டகாலமாகவே அவுஸ்திரேலிய அணி திடசங்கற்பங்கொண்டிருப்பதாலும் இறுதிவரையில் விறுவிறுப்பைத்தரும் தொடராக இம்முறை தொடர் அமையும் என எதிர்பார்க்கலாம் .
ஆஷஷ் டெஸ்ற் கிரிக்கட் தொடர் வரலாறு
இங்கிலாந்து அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ற் கிரிக்கட் தொடர் 1877ம் ஆண்டிலேயே ஆரம்பித்து விட்டபோதும் இரு அணிகளுக்கும் இடையிலான ஆஷஷ் தொடர் 9 போட்டிகளின் பின்னர் 1882ம் ஆண்டிலேயே ஆரம்பமாகியது .
1882ம் ஆண்டில் இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவுஸ்திரேலிய அணி ஒரு போட்டியில் மாத்திரமே விளையாடியது. துடுப்பாட்ட வீரர்களுக்கு மிகவும் சவாலான லண்டன் ஓவல் மைதானத்தில் இடம்பெற்ற இந்தப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி அதன் முதல் இனிங்ஸில் 63 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது .
பதிலளித்த இங்கிலாந்து அணி அதன் முதல் இனிங்ஸில் 101 ஓட்டங்களைப் பெற்று 38 ஓட்டங்களால் முன்னிலை பெற்றது .இதனைத் தொடர்ந்து இரண்டாவது இனிங்ஸை ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணியால் 122 ஓட்டங்களை மாத்திரமே பெறமுடிந்தது இதன் படி இங்கிலாங்து அணிக்கு 85 ஓட்டங்களைப் பெறவேண்டும் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது . ஆனால் இங்கிலாந்து அணியோ 78 ஓட்டங்களுக்கே சுருண்டு 7 ஓட்டங்களால் தோல்வியைத்தழுவியது .
தமது காலனித்துவ நாட்டிடம் அடைந்த படுதோல்வியைத்தாங்க முடியாது பெருந்துயர் அடைந்த இங்கிலாந்து ஊடகங்கள் இதற்கு பெரும் பிரசாரங்களைக் கொடுத்து செய்திவெளியிட்டன
இங்கிலாந்தின் ஸ்போர்டிங் டைம்ஸ் என்ற பத்திரிகை இங்கிலாந்து அடைந்த தோல்வியை மரண அறிவித்தலாக பிரசுரித்திருந்தது
இங்கிலாந்து கிரிக்கட் 1882ம் ஆண்டு ஓகஸ்ற் மாதம் 29ம் திகதி ஓவல் மைதானத்தில் மரணித்து விட்டதாகவும் இதனை ஆழ்ந்த துயரத்துடன் நண்பர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் அறிவித்துக்கொள்வதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது இதன் பின்னரே ஆஷஷ் தொடர் இரு நாடுகளுக்கும் இடையே உத்தியோக பூர்வமாக விளையாடப்பட்டுவருகின்றது
இரு அணிகளுக்கும் இடையே இது வரை நடைபெற்றுள்ள 65 டெஸ்ற் தொடர்களில் அவுஸ்திரேலிய அணி 31 தொடர்களிலும் இங்கிலாந்து அணி 29 தொடர்களிலும் வெற்றி ஈட்டியுள்ளன .ஐந்து தொடர்கள் வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்துள்ளன
2009ம் ஆண்டுவரையான இரு அணிகளுக்கும் இடையிலான போட்டிகளின் பெறுபேறுகளுக்கு அமைவாக அவுஸ்திரேலிய அணி மொத்தமாக 122 டெஸ்ற்களிலும் இங்கிலாந்து அணி 97 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளதுடன் 86 போட்டிகள் வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment