Monday, December 6, 2010

வலுவுள்ள சமூகம் படைப்பதற்காய் உடலினை உறுதிசெய்வோம்

                                                                               ஏகலைவன்


இன்றைய அவசர உலகில் பலருக்கு பணம் சம்பாதிப்பதே குறியாய் இருப்பதால் உடல்திடநிலை குறித்து பலரும் அக்கறை செலுத்துவதில்லை


இந்த உலகப் போக்கு இலங்கையையும் விட்டுவைக்கவில்லை.
இலங்கையில் கடந்த 20-30 வருடங்களில் நீரழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது .

நாட்டின் மொத்த சனத்தொகையில் 10சதவீதமானவர்கள் நீரழிவு நோயினாலும் 25 சதவீனமானவர்கள் உயர் இரத்த அழுத்த நோயினாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட புதிய புள்ளிவிபரத் தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன
.
இதற்கு புகைபிடித்தல் மதுபானம் அருந்துதல் மன அழுத்தம் மோசமான உணவுப்பழக்க வழக்கம் போன்ற காரணிகளால் அதிகமானவர்கள் இந்த நோய்களுக்கு ஆளாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது/

இலங்கையைப் பொறுத்தவரையில் போர்ச் சூழலும் அதிகளவு மக்கள் இந்த நோய்களினால் பீடிக்கப்பட்டுள்ளமைக்கு காரணமாக கூறப்படுகின்றது

கஷ்டப்பிரதேசங்களில் கிராமிய சூழலில் வாழ்பவர்களுக்கு மன உளைச்சல் உளவியற் பாதிப்புக்கள் என்பனவற்றைத்தவிர்த்து வேறுகாரணங்களால் இந்த நோய்கள் நெருங்க வாய்ப்பில்லை .இதற்கு அம்மக்களின் இயற்கையுடன் ஒன்றிய வாழ்க்கை முறையும் கடின உழைப்புமே காரணமாகும்
 .
ஆனால் நகர்பிரதேசங்களில் உள்ளவர்களுக்கு இந்நோய்கள் வருவதற்கு தமது உடல் திடநிலை குறித்து அவர்கள் அக்கறை காண்பிக்காமையே பிரதான காரணமாக சுட்டிக்காட்டப்படுகின்றது

இடவசதியின்மை காரணமாக தமது வீடுகளிலோ தூரம் காரணமாக மைதானங்களிலோ விளையாட்டு உடற்பயிற்சி போன்றவற்றில் ஈடுபடமுடியாதவர்களுக்காகவென்ற தற்போது நகர்ப்புறங்களில் உடற்பயிற்சிக் கூடங்கள் 'GYM'காணப்படுகின்றன.

.
இவற்றை எத்தனைபேர் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்றால் அது மிகக் குறைவாகவே காணப்படுகின்றது

புகைபிடித்தும் மதுபானம் அருந்தியும் தெருத்தெருவாய்ச் சுற்றியும் தமது நேரகாலத்தை வீணடித்து நம்பியிருக்கும் குடும்பத்தாரையும் நட்டாற்றில் விட்டுச் செல்லுகின்றவர்கள் மத்தியில் உடற்பயிற்சிக் கூடங்களுக்கு சென்று தமது உடலைத் திடப்படுத்தி வலுவான சமூகத்தை படைத்திட பங்களிக்கின்றவர்கள் பாராட்டப்படவேண்டியவர்களாவர்
.
விளையாட்டிற்காக கேசரி ஸ்போர்ட்ஸ் சஞ்சிகை அர்ப்பணிக்ப்பட்டுள்ள நிலையில் அதில் விளையாட்டின் முக்கிய நோக்கங்களில் ஒன்றான உடலினை உறுதி செய்கின்ற முயற்சியில் தம்மை அர்ப்பணித்துக்கொண்டுள்ளவர்கள் பற்றிய ஆக்கங்களை பிரசுரிக்க தீர்மானித்துள்ளோம்

அந்த வகையில் அர்ப்பணிப்புடன் நேர்த்தியாக செயற்படுகின்ற உங்கள் பகுதிகளிலுள்ள விளையாட்டுக்கழகங்கள் உடற்பயிற்சிக் கூடங்கள் கராத்தே வகுப்புக்கள் போன்றவை பற்றியும் அங்கு நிலைநாட்டப்பட்ட சாதனைகள் குறித்தும் எமக்கு எழுதி அனுப்புமிடத்து தகுதியானவை இச்சஞ்சீகையில் நிச்சயமாக பிரசுரிக்கப்படும் என்பதைக் கூறிக்கொள்கின்றோம்

இந்த வகையில் இந்த சஞ்சிகையில் கொட்டாஞ்சேனை சுற்றுவட்டத்திற்கு அண்மையில் அமைந்துள்ள லைவ்லைன் உடற்பயிற்சிக்கூடத்தின் பயிற்சிவழங்குநர் ஆ.பி.சிறியான் ஆனந்தவுடன் உடற்பயிற்சியின் அவசியம் குறித்தும் கலந்துரையாடினேன்.

.
உடற்பயிற்சி செய்யவேண்டியது ஏன் அவசியம் என கருதுகின்றீர்கள் ?
முன்புபோலன்றி தற்போது அனைத்துமே சொகுசுமயமாகிவருகின்றது .உடலை வருத்தி உழைக்கும் நிலைமை காணப்படவில்லை.அதனால் தான் உடற்பயிற்சி அவசியமாகும்.

என்னனென்ன நோக்கங்களுக்காக உடற்பயிற்சிக்கூடத்திற்கு வருகின்றனர் ?
கணிசமானோர் உடற்கட்டுமானத்திற்காக (Body Building) வருகின்றனர். உடலினை உறுதிசெய்வதற்காக பலர் வருகின்றனர் .இதனைத்தவிர கொழுப்பு கொலஸ்ரோலை குறைப்பதற்காக தொப்பையைக் குறைப்பதற்காக என்றும் இங்கு வருகின்றனர்.

ஒருவர் எத்தனை மணிநேரம் உடற்பயிற்சி செய்யவேண்டும்?
உடற்கட்டுமானம் செய்பவர்கள் ஒன்றரை மணிநேரம் முதல் 2மணித்தியாலங்கள் செய்யவேண்டும் .உடற்திடநிலைக்காக செய்பவர்கள் பெண்களாக இருப்பின் 45நிமிடங்களும் ஆண்களாக இருப்பின் ஒருமணிநேரமும் செய்யவேண்டும்

உடற்பயிற்சி செய்வதற்கு என்று நேரகாலம் உள்ளதா?
ஆதிகாலை முதல் 9மணிவரையான காலப்பகுதியும் மாலை நான்கு மணிமுதல் இரவு 10மணிவரையான காலப்பகுதியும் மிகவும் நல்லது .உடற்பயிற்சி கூடத்தில் உகந்த காலநிலை அதாவது குளிர்சாதனம் செய்யப்பட்டு வெக்கையற்ற இதமான காற்றுடனான சூழல் காணப்பட்டால் மதியம் 1மணி 2மணி என்றாலும் உடற்பயிற்சி செய்யமுடியும்.


உடற்பயிற்சிக்கூடமொன்றை தெரிவுசெய்யும் போது எத்தகைய விடயங்களை கவனத்தில் கொள்ளவேண்டும் ?

முதலில் உடற்பயிற்சிக்கூடம் அமைந்துள்ள சூழல் முக்கியமாக உட்புறச்சூழல் சிறப்பாக இருக்கவேண்டும் .அடுத்ததாக அங்குள்ள பயிற்றுநர் எப்படிப்பட்டவர் என்பதை அறிந்துகொள்ளவேண்டும் .தேர்ச்சியற்ற பயிற்றுவிப்பாளர்கள் இன்று அதிகமாக உள்ளனர். இதனால் முதலில் சேர முன்பு உடற்பயிற்சிக்கூடத்திற்கு சென்று அவதானிக்க வேண்டும் .தேர்ச்சியற்ற பயிற்றுநர் இருப்பின் நல்ல உடலுடன் போகின்றவர்கள் காயங்களுடனும் உபாதைகளுடனும் தான் திரும்பிவரவேண்டும் .

No comments:

Post a Comment