Thursday, December 16, 2010

தாயக மண்ணில் இருதசாப்தங்களுக்கு பின்னர் ஆஷஸ் தொடர் தோல்வியை எதிர்நோக்கும் அவுஸ்திரேலியா

இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையே நடைபெற்றுவருகின்ற ஆஷஸ் டெஸ்ற் கிரிக்கட் தொடரின் மூன்றாவது போட்டி நாளைய தினம் பேர்த் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

கடந்த வாரம் அடலைட்டில் நிறைவடைந்த இரண்டாவது டெஸ்ற் போட்டியில் ஓர் இனிங்ஸ் மற்றும் 71 ஓட்டங்களால் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி இதுவரை நடைபெற்ற இரண்டு போட்டிகளின் முடிவுகளுக்கு அமைவாக 1ற்கு 0 பூச்சியம் என்ற அடிப்படையில் முன்னணி வகிக்கின்றது .

24 வருடங்களுக்கு பின்னர் அவுஸ்திரேலிய அணியை இங்கிலாந்து அணி இனிங்ஸ் வி;த்தியாசத்தில் தோற்கடித்தமை குறிப்பிடத்தக்கது முதலாவது டெஸ்ற் போட்டியின் போது இரட்டைச்சதமடித்த இங்கிலாந்து அணியின் ஆரம்பத்துடுப்பாட்டவீரர் அலிஸ்டர் குக் இரண்டாவது போட்டியிலும் 149 ஓட்டங்க்ளைப் பெற்று அணிக்கு சிறப்பான அத்திவாரத்தை பெற்றுக்கொடுத்திருந்தார்

.பிறிஸ்பேர்ன் கபா மைதானத்தில் நடைபெற்ற போட்டியின் இரண்டாவது இனிங்ஸில் ஆட்டமிழக்காது 235 ஓட்டங்களைப் பெற்றதன் மூலம் அம்மைதானத்தில் அதுவரையில் அதிகூடிய ஓட்டங்களாக காணப்பட்ட டொன் பிரட்மனின் ஓட்ட எண்ணிக்கையை முறியடித்திருந்த அலிஸ்டர் குக் இரண்டாவது போட்டியில் பெற்ற சதத்தின் மூலம் பிரட்மனின் மற்றுமொரு சாதனையை சமன்செய்திருந்தார் .

26வயதிற்கு முன்பாக 15 சதங்களைப் பெற்ற டொன் பிரட்மனின் சாதனையையே அலிஸ்டர் குக் சமன்செய்திருந்தார். 26வயதிற்குள் அதிக டெஸ்ற்  சதங்களைப் பெற்றவர் என்ற சாதனை தற்போது சச்சின் டெண்டுல்கர் வசமுள்ளது .டெண்டுல்கர் 26வயதிற்குள் 19சதங்களைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது


அடிலைட்டில் இடம்பெற்ற இரண்டாவது டெஸ்ற் கிரிக்கட் போட்டியின் திருப்புமுனையான ஆட்டமாக கெவின் பீற்றர்ஸனின் துடுப்பாட்டமே அமைந்தது .மிகவும் அபாரமாக துடுப்பெடுத்தாடிய பீற்றர்ஸன் விமர்சகர்களின் ஐயப்பாடுகளுக்கெல்லாம் பதிலளிக்கும் வகையில் அற்புதமாக விளையாடி 227 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்து இங்கிலாந்து அணி மிக வலுவான மொத்த ஓட்டத்தை பெறுவதற்கு வழிவகுத்தார்

கடந்த மார்ச் மாதத்திற்கு பின்னர் அதாவது 18 மாதங்களுக்கு பின்னர் டெஸ்ற் போட்டிகளி;ல் கெவின் பீற்றர்ஸன் குவித்த முதலாவது சதமாக இது அமைந்ததுடன் டெஸ்ற் கிரிக்கட் வாழ்வில் பெற்ற அதிகூடிய ஓட்டங்களாகவும் 30வயதுடைய பீற்றர்ஸன் டெஸ்ற் கிரிக்கட் அரங்கில் அறிமுகமாகிய ஐந்துவருடகாலத்தில் பெற்ற 17வது சதமாகவும் அமைந்தது

இரண்டாவது டெஸ்டில் அவுஸ்திரேலிய அணியின் தோல்வியைவிடவும் அது தோல்வியைத்தழுவிய விதம் பல்வேறு கேள்விகளுக்கும் மாற்றங்களுக்கும் வழிகோலியுள்ளது

முதலாவது போட்டியில் பந்துவீச்சில் பிரகாசிக்கத்தவறிய நிலையில் கடந்த சில ஆண்டுகாலமாக அவுஸ்திரேலியாவின் முக்கிய பந்துவீச்சாளராக திகழ்ந்த மிச்சேல் ஜோன்ஸனை அணியில் இருந்து நீக்கும் கடும் முடிவை எடுக்க நிர்ப்பந்திக்கப்பட்ட அவுஸ்திNலிய அணி இரண்டாவது போட்டியில் அடைந்த அவமானகரமான தோல்விக்குப் பின்னர்கடுமையான அதிரடி முடிவுகளை எடுக்கும் நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது

பந்துவீச்சில் மட்டுமன்றி துடுப்பாட்டத்திலும் தன்னை மீளாய்விற்குட்படுத்த வேண்டிய நிலைமை அவ்வணிக்கு தோன்றியுள்ளது .

கடந்த தசாப்தகாலத்தில் அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்ட முதுகெலும்பாக திகழ்ந்த அணித்தலைவர் ரிக்கி பொன்டிங்கின் துடுப்பாட்டம் ஒருகாலத்தில் சச்சின் டெண்டுல்கர் பிரயன் லாராவுடன் ஒப்பிட வைத்த அந்த அசாத்திய மேதாவிலாசத் தன்மையை இழந்துள்ளமை மட்டுமன்றி சாதாரண வீரருக்குரித்தான ஓட்டக்குவிப்பையும் இழந்துள்ளமை அவ்வணிக்கு பெரும் பின்னடைவைக்கொடுத்துள்ளதென்றே கூறவேண்டும்

 இரண்டாவது டெஸ்ற் போட்டியையடுத்து ஐசிசி வெளியிட்டுள்ள துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் 2001ம் ஆண்டிற்குப் பின்னர் முதற்தடவையாக ரிக்கி பொன்டிங் முதல் இருபது வீரர்கள் வரிசசையில் கூட இடம்பெறாமை அவரது துடுப்ப்hட்ட வீழ்ச்சியை உறுதிப்படுத்துகின்றது

ஆரம்பத்துடுப்பாட்டவீரராக கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியாக பிரகாசித்துவந்த சைமன் கடிச் காயமுற்றுள்ளமையும் தொடரின் ஏனைய போட்டிகளில் அவர் விளையாடமாட்டார் என அறிவிப்பு வெளியாகியுள்ளமையும் அவ்வணியின் நிலைமையை மேலும் கவலைக்கிடமாக்கியுள்ளது .

மார்க்கஸ் நோர்த்தின் துடுப்பாட்டம் நோர்த்தில் இருந்து சவுத்திற்கு போய்விட்டதாக அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் கிறேக் சப்பல் அண்மையில் எழுதிய கட்டுரையொன்றில் சுட்டிக்காட்டியிருந்தார் அந்தவகையில் மார்க்கஸ் நோர்த்தின் துடுப்பாட்டம் ஏமாற்றமளிப்பதாகவுள்ளது

மூன்றாவது டெஸ்ற் போட்டிக்கான அணியில் சைமன் கடிச்சின் இடம் கைமாறப்போவது உறுதியாகிவிட்டாலும் மார்க்கஸ் நோர்த்துடைய இடமும் நிச்சயமில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன

தற்போதுள்ள வீரர்களைப் பார்க்கையில் ஷேன் வொட்ஸன் ரிக்கி பொன்டிங் மைக்கல் கிளார்க் மைக்கல் ஹஸி பிரட் ஹடின் ஆகியோரின் சாதனைகள் நிருபிக்கப்பட்டதொன்றாக காணப்படுவதால் அவர்கள் தமக்கேயுரியதான உயரிய துடுப்பாட்ட ஆற்றலைக் கண்டுகொள்ளும் நிலையில்  துடுப்பாட்டத்தை அவுஸ்திரேலியா சரிசெய்துகொள்வதற்கு வாய்ப்புள்ளது .

ஆனால் பந்துவீச்சே அவ்வணிக்கு பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது கடந்த 30வருடகாலத்தில் தாம் கண்ணுற்ற மிக மோசமான பந்துவீச்சாக தற்போதுள்ள பந்துவீச்சாளர்களின் ஆற்றல் வெளிப்பாடுகள் காணப்படுவதாக அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான்கள் சுட்டிக்காட்டியுள்ளனர் .

அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு எந்தளவிற்கு அதளபாதாளத்திற்கு சென்றுள்ளதென்பதற்கும் அந்நாட்டு ரசிகர்களிடையே எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றதென்பதற்கும் ஆதாரமாக அவுஸ்திரேலிய ரசிகர்கள் ஓய்வுபெற்ற நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ஷேன் வோர்னை மீண்டும் அணிக்கு திரும்புமாறு கோரியுள்ளனர் .

இதற்காக www.bringbackwarne.com என்ற பெயரில் அவுஸ்திரேலியாவின் கிரிக்கட் ரசிகர்கள் இணையத்தளமொன்றை ஆரம்பித்துள்ளதுடன் வோர்னிற்கு ஒரு மில்லியன் டொலர்களை வழங்கத்தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர் .

இது எந்தளவிற்கு அவுஸ்திரேலிய நிலைமை மோசமாகியுள்ளதென்பதற்கு ஒரு அறிகுறியாக நோக்கப்படுகின்றது

மறுபுறத்தில் இங்கிலாந்து அணி நாளுக்கு நாள் பலம்பெற்றுவருவதை அதன் ஆற்றல் வெளிப்பாடுகள் உணர்த்திநிற்கின்றன .தற்போதைய அணியின் துடுப்பாட்டவீரர்கள் அனைவரும் ஏறத்தாழ ஆற்றலின் உச்சத்தில் காணப்படுவதுடன் அவுஸ்திரேலியா குறித்து கடந்தகாலத்தில் கொண்டிருந்த அச்சமுடக்கநிலையை களைந்து சுதந்திரமாக அடித்தாடுவதைக் காணமுடிகின்றது


அணித்தலைவர் அன்ட்று ஸ்ரோஸ் ஆரம்பத்துடுப்பாட்டவீரர் அலிஸ்டர் குக் ஜொனத்தன் ட்ரோட் கெவின் பீற்றர்ஸன் போல் கொலிங்வுட் இயன் பெல் மட் ப்றயர் என அவ்வணியின் துடுப்பாட்டவரிசையைக் காணும் போதே எதிரணிக்கு அச்சநிலை ஏற்படும் வகையில் ஆற்றல்கள் பிரமிக்கவைப்பதாய் மாறிவருகின்றன

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு ஜேம்ஸ் அன்டர்ஸன் கிரஹாம் ஸ்வான் ஆகியோரின் சிறப்பான ஆற்றல் வெளிப்பாடுகளாலும் ஏனைய வீரர்களின் பக்கத்துணையாலும் வலுவானதாக காணப்படுகின்றது .முக்கிய பந்துவீச்சாளரான ஸ்டுவர்ட் ப்ரோட் உபாதைகாரணமாக தொடரின் எஞ்சிய போட்டிகளில் பங்கெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ள போதும் மேலதீக வீரர்கள் திறமைசாலிகளாக இருப்பதால் அவரின் வெற்றிடத்தை இங்கிலாந்து அணியால் இலகுவில் நிவர்த்தித்துவிடமுடியும்

ஆக மொத்தத்தில் பாரிய மாற்றங்கள் இடைப்பட்ட காலத்தில் ஏற்படாதவிடத்து கடந்த 1986-87ம் ஆண்டுக்கு பின்னர் முதற்தடவையாக அவுஸ்திரேலிய மண்ணில் ஆஷஸ் டெஸ்ற் தொடரை இங்கிலாந்து அணி வென்றெடுப்பதற்கான வாய்ப்புக்கள் தற்போதைய நிலையில் பிரகாசமாகத் தெரிகின்றன

போரிய அழிவிற்கு பின்னர் அன்றேல் தோல்விக்குப் பின்னர் மீண்டெழுவதற்கு உதாரணமாக சாம்பலில் இருந்து மீள உயிர்த்தெழும் ஃபீனிக்ஸ் பறவையை கோடிட்டுக்காண்பிப்பர். அவுஸ்திரேலிய அணி தற்போதைய ஆஷஷ் தொடரின் எஞ்சிய மூன்று போட்டிகளிலும் சாம்பலில் இருந்து மீள உயிர்த்தெழும் ஃபீனிக்ஸ் பறவை போன்று மீண்டெழுமா அன்றேல் வீழ்ச்சி மேல் வீழ்ச்சிகாணுமா என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும் .

கிரிக்கட் ரசிகர்களின் பேரபிமானம் பெற்ற ஆஷஷ் கிண்ண கிரிக்கட் தொடர் நாளை ஆரம்பம்


கிரிக்கட் விளையாட்டின் மிகப்பழைமையானதும் பாரம்பரியம் மிக்கதுமான ஆஷஷ் கிண்ண டெஸ்ற் கிரிக்கட் தொடரின் மற்றுமொரு அத்தியாயம்  நாளையதினம் அவுஸ்திரேலியாவில் ஆரம்பமாகின்றது

கடந்த இரண்டு தசாப்தகாலத்தில் முதற்தடவையாக அவுஸ்திரேலிய மண்ணில் ஆஷஷ் தொடரொன்றை வென்றெடுக்கும் நம்பிக்கையுடன் இங்கிலாந்து அணியும் தமது அணியின் பெயரைக் கட்டிக்காக்கும் திடசங்கற்பத்துடன் அவுஸ்திரேலிய அணியும் களமிறங்குகின்றன.

1986ஃ87 கிரிக்கட் பருவகாலத்திலேயே 2ற்கு 1 என்ற போட்டிகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அவுஸ்திரேலிய மண்ணில் கடைசியாக வெற்றியீட்டியிருந்தது .அதற்கு பின்னர் அவுஸ்திரேலியா மண்ணில் இடம்பெற்ற 5 ஆஷஷ் தொடர்களிலும் இங்கிலாந்து அணி படுமோசமான தொடர் தோல்விகளைத் தழுவியுள்ளது

இந்த 5 ஆஷஷ் தொடர்களிலும் இருநாடுகளும் 25 டெஸ்ற்போட்டிகளில் விளையாடியுள்ளதுடன் இதில் இங்கிலாந்து அணி 18 போட்டிகளில் தோல்வியைத்தழுவியுள்ளதுடன் மூன்றில் மாத்திரமே வெற்றிபெற்றுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது .

இருந்தபோதிலும் இம்முறை முடிவுகள் வித்தியாசமாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

இதற்கு அண்மைக்காலமாக இங்கிலாந்து அணி வெளிப்படுத்திவருகின்ற சிறப்பான ஆற்றல் வெளிப்பாடுகளும் நம்பிக்கையூட்டும் பயிற்சிப்போட்டி முடிவுகளும் மட்டுமன்றி அவுஸ்திரேலிய அணியின் ஆட்டத்திறனில் காணப்படும் சோபையிழப்பும் அவ்வணியின் வீரர்கள் சிலரது உடற்திடநிலை குறித்த கரிசனைகளும் காரணமாகும் .

தற்போதைய நிலையில் இங்கிலாந்து அணி சர்வதேச கிரிக்கட் பேரவையின் தரப்படுத்தலில் அவுஸ்திரேலியாவிலும் மேலாக இருப்பதுடன் கடந்த இருவருடங்களில் சிறப்பான வெற்றி தோல்வி விகிதாசாரப் பெறுதியைக் கொண்டிருக்கின்றது.

கடந்த 2வருடங்களில் இங்கிலாந்து அணி 12 டெஸ்ற் போட்டிகளில் வெற்றிபெற்றும் 4போட்டிகளில் தோல்வியடைந்துமுள்ள அதேவேளையில் அவுஸ்திரேலிய அணியோ 12 டெஸ்ற் போட்டிகளில் வெற்றிபெற்றும் 6 போட்டிகளில் தோல்வியடைந்துமுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

கடந்த முறை அவுஸ்திரேலிய மண்ணில் இடம்பெற்ற ஆஷஷ் தொடருக்கு முன்பான 2வருட காலப்பகுதியில் அவுஸ்திரேலிய அணி விளையாடிய டெஸ்ற் போட்டிகளில் 15ல் வெற்றி பெற்றிருந்ததுடன் 2ல் மாத்திரமே தோல்வியைத் தழுவியிருந்து .

அந்த 2 டெஸ்ற் தோல்விகளும் இங்கிலாந்து மண்ணில் 2005ல் இடம்பெற்ற ஆஷஷ் தொடரின் போது சந்தித்த தோல்விகளாகும். அந்தத் தோல்விகளைத் தவிர விளையாடிய அனைத்துப்போட்டிகளிலும் அவுஸ்திரேலிய அணி அபார வெற்றிகளைக் குவித்திருந்தது. இதில் பலம்வாய்ந்த தென் ஆபிரிக்க அணிக்கெதிராக 2006/7 பருவகாலத்தில் தாயகத்திலும் வெளியிலும் விளையாடிய ஆறுபோட்டிகளில் ஈட்டிய 5 வெற்றிகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இவ்வாறான உச்சநிலையில் இருந்தபோதே 2006ஃ 7 பருவகாலத்தில் அவுஸ்திரேலிய மண்ணில் கடைசியாக இடம்பெற்ற ஆஷஷ் தொடரில் அவுஸ்திரேலிய அணி 5-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணியை வெள்ளையடிப்புச் செய்து அமோக வெற்றியீட்டியிருந்தது .

அந்த ஆஷஷ் தொடருடன் அவுஸ்திரேலிய அணியின் ஜாம்பவான் வீரர்களான ஷேன் வோர்ன் கிளென் மக்கிராத் மத்தியு ஹெய்டன் ஜஸ்ரின் லாங்கர் மற்றும் டேமியன் மார்டின் ஆகியோர் ஓய்வுபெற்றதுமே அவுஸ்திரேலிய அணியின் வீழ்ச்சி ஆரம்பமாகியது .

இந்நிலையில் கடைசியாக 2009ம் ஆண்டில் இங்கிலாந்து மண்ணில் இடம்பெற்ற ஆஷஷ் தொடரில் 2ற்கு 1 என்ற கணக்கில் அவுஸ்திரேலிய அணி ஆஷஷ் தொடரை இழந்தது . இதன் மூலமாக இரண்டு முறை(2005இ2009) இங்கிலாந்து மண்ணில் ஆஷஷ் தொடரை இழந்த அவுஸ்திரேலிய அணிக்கு தலைமைதாங்கியவர் என்ற அவப்பெயரை ரிக்கி பொன்டிங் ஈட்டிக்கொண்டதுடன் அவரது கிரிக்கட் எதிர்காலம் தொடர்பான விமர்சனங்களுக்கும் ஆளானார்.

ஆனால் தமது தாயகத்தில் இம்முறை ஆஷஷ் தொடர் இடம்பெறுவதாலும் இங்கிலாந்தில் அடைந்த தோல்விகளுக்கு பழிவாங்குவதற்கு நீண்டகாலமாகவே அவுஸ்திரேலிய அணி திடசங்கற்பங்கொண்டிருப்பதாலும் இறுதிவரையில் விறுவிறுப்பைத்தரும் தொடராக இம்முறை தொடர் அமையும் என எதிர்பார்க்கலாம் .

ஆஷஷ் டெஸ்ற் கிரிக்கட் தொடர் வரலாறு

இங்கிலாந்து அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ற் கிரிக்கட் தொடர் 1877ம் ஆண்டிலேயே ஆரம்பித்து விட்டபோதும் இரு அணிகளுக்கும் இடையிலான ஆஷஷ் தொடர் 9 போட்டிகளின் பின்னர் 1882ம் ஆண்டிலேயே ஆரம்பமாகியது .

1882ம் ஆண்டில் இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவுஸ்திரேலிய அணி ஒரு போட்டியில் மாத்திரமே விளையாடியது. துடுப்பாட்ட வீரர்களுக்கு மிகவும் சவாலான லண்டன் ஓவல் மைதானத்தில் இடம்பெற்ற இந்தப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி அதன் முதல் இனிங்ஸில் 63 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது .

பதிலளித்த இங்கிலாந்து அணி அதன் முதல் இனிங்ஸில் 101 ஓட்டங்களைப் பெற்று 38 ஓட்டங்களால் முன்னிலை பெற்றது .இதனைத் தொடர்ந்து இரண்டாவது இனிங்ஸை ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணியால் 122 ஓட்டங்களை மாத்திரமே பெறமுடிந்தது இதன் படி இங்கிலாங்து அணிக்கு 85 ஓட்டங்களைப் பெறவேண்டும் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது . ஆனால் இங்கிலாந்து அணியோ 78 ஓட்டங்களுக்கே சுருண்டு 7 ஓட்டங்களால் தோல்வியைத்தழுவியது .

தமது காலனித்துவ நாட்டிடம் அடைந்த படுதோல்வியைத்தாங்க முடியாது பெருந்துயர் அடைந்த இங்கிலாந்து ஊடகங்கள் இதற்கு பெரும் பிரசாரங்களைக் கொடுத்து செய்திவெளியிட்டன

இங்கிலாந்தின் ஸ்போர்டிங் டைம்ஸ் என்ற பத்திரிகை இங்கிலாந்து அடைந்த தோல்வியை மரண அறிவித்தலாக பிரசுரித்திருந்தது
இங்கிலாந்து கிரிக்கட் 1882ம் ஆண்டு ஓகஸ்ற் மாதம் 29ம் திகதி ஓவல் மைதானத்தில் மரணித்து விட்டதாகவும் இதனை ஆழ்ந்த துயரத்துடன் நண்பர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் அறிவித்துக்கொள்வதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது இதன் பின்னரே ஆஷஷ் தொடர் இரு நாடுகளுக்கும் இடையே உத்தியோக பூர்வமாக விளையாடப்பட்டுவருகின்றது

இரு அணிகளுக்கும் இடையே இது வரை நடைபெற்றுள்ள 65 டெஸ்ற் தொடர்களில் அவுஸ்திரேலிய அணி 31 தொடர்களிலும் இங்கிலாந்து அணி 29 தொடர்களிலும் வெற்றி ஈட்டியுள்ளன .ஐந்து தொடர்கள் வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்துள்ளன

2009ம் ஆண்டுவரையான இரு அணிகளுக்கும் இடையிலான போட்டிகளின் பெறுபேறுகளுக்கு அமைவாக அவுஸ்திரேலிய அணி மொத்தமாக 122 டெஸ்ற்களிலும் இங்கிலாந்து அணி 97 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளதுடன் 86 போட்டிகள் வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது

Tuesday, December 14, 2010

ஸியாபோவின் நோபல் பரிசு உலகிற்கு வழங்கும் செய்தி


சீன அதிருப்தியாளர் லியு ஸியாவோபோவிற்கு 2010ம் ஆண்டிற்கான நோபல் சமாதானப்பரிசு வழங்கப்பட்டமை உலக நாடுகளிடையில் பல்வேறு கருத்துமோதல்களுக்கும் சர்ச்சைகளுக்கும் வழிகோலியிருந்தது

ஊடகங்களால் அதிகமாக அலசி ஆராயப்பட்டுள்ள இவ்விடயத்தில் முக்கியமாக கவனிக்கப்படவேண்டிய ஒரு செய்தி அடங்கிநிற்கின்றது .

கருத்துவெளியிடும் சுதந்திரத்தினை நசுக்குவதற்கு அடக்குமுறை ஆட்சியாளர்கள் முற்படுகின்றபோது தமக்குத்தாமே எத்தகைய அழிவினை அன்றேல் அபகீர்த்தியை அவர்கள் வரவழைத்துக்கொள்கின்றனர் என்பதற்கு லியு ஸியாபோவிற்கு நோபல் சமாதானப்பரிசு வழங்கப்பட்டமை நினைவுறுத்துகின்றது.

CHARTER 08 ( சரம் 08) என ஆங்கிலத்தில் அறியப்படும் சீனாவில் அரசியல் மாற்றங்களுக்கான விஞ்ஞாபனமொன்றை தயாரிப்பதற்கு துணைபுரிந்தமைக்காக கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஒரே நாளில் இடம்பெற்ற  விசாரணைகளையடுத்து லியு ஸியாபோ 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார். அரச அதிகாரத்திற்கு அச்சுறுத்தலாக அமைந்தமையே இவர் மீதான முக்கிய குற்றச்சாட்டாக அமைந்திருந்தது .

அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம் வெளியிடப்பட்டு 60 ஆண்டுகள் பூர்த்தியடைந்த 2008ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ம் திகதி வெளியிடப்பட்ட சரம் 08 விஞ்ஞாபனத்தில் ஆரம்பத்தில் புத்திஜீவிகள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் என 350ற்கு அதிகமான சீனர்கள் கையொப்பமிட்டிருந்தனர் . தற்போதோ சீனாவிற்கு உள்ளும் வெளியுமாக பத்தாயிரத்திற்கு அதிகமானவர்கள் இந்த விஞ்ஞாபனத்தில் கையொப்பமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது . சீனாவில் அரசியல் மாற்றத்திற்கான Charter
  08 விஞ்ஞாபனம் முன்னாள் செக்கோஸ்லோவாக்கியாவில் அதிருப்தியாளர்களால் வெளியிடப்பட்ட சோவியற் யூனியனுக்கு எதிரான Charter 77 ன் பெயரையும் பாணியையும் பின்பற்றியதாகவே அமைந்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது


லியு ஸியாபோவை சிறையடைத்ததன் மூலமாக அரசியல் மாற்றத்திற்கான வேர்களை முளையிலேயே கிள்ளிவிடுவதற்கு சீன அரசாங்கம் முயற்சித்த போதிலும் அதற்கு மாற்றான விடயமே நடந்தேறியுள்ளது .அடக்;குமுறை மூலம் உண்மையின் குரலை நசுக்கிவிடுவது எளிதல்ல அது இன்னுமின்னும் விஸ்வரூபமெடுத்து உலகையே ஆட்கொள்ளும் என்பதையே இது உணர்த்திநிற்கின்றது

தற்போது 54வயதுடைய ஸியாபோவின் பெயர் 1989ம் ஆண்டில் சீனத்தலைநகர் பீஜிங்கிலுள்ள தியனமென் சதுக்கத்தில் ஆட்சியாளர்களால் ஈவிரக்கமற்றமுறையில் மாணவர்களது ஆர்ப்பாட்டம் அடக்கியொடுக்கப்பட்டபோது முதலில் பிரபலமாக அறியப்பட்டிருந்தது

ஆனால் சீனா கடந்தாண்டில் அவரை சிறையடைத்ததன் பின்னர் தற்போது உலகிலுள்ள ஒவ்வொரு நாட்டிலும் லியு ஸியாபோவின் பெயரும் அவரது முன்னெடுத்த பணியின் நோக்கமும் நன்கறியப்பட்டதாகிவிட்டது .

அசூர வேகத்தில் பொருளாதார வளர்ச்சிகண்டுவரும் சீனாவில் ஜனநாயகம் என்பதே கிடையாது என்ற எண்ணக்கருவில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் சீனாவின் உயர்மட்டத்தலைவர்கள் அரசியல் தாராளமயமாக்கல் குறித்த கருத்துக்களை வெளிப்படுத்த முறபடும் நிலையில் ஸியாபோவினை சிறையடைத்ததால் அவரது பெயர் நோபேல் சமாதானப்பரிசு உயர்ந்ததோடன்றி சீனாவிற்கு சர்வதேச அளவில் பாரியளவிலான அபகீர்த்தியை உண்டுபண்ணியுள்ளது.

ஸியாபோவிற்கு வழங்கப்பட்ட நோபேல் பரிசு இன்னுமின்னும் அதிகமான அதிருப்தியாளர்கள் உலகின் பல்வேறு பகுதிகளிலும் சர்வாதிகார ஆட்சியை நடத்திவருகின்றவர்களுக்கு எதிராக சிறிய அளவிலான எதிர்ப்பினைக்காண்பிப்பதற்கு சக்தியையும் உத்வேகத்தையும் கொடுக்கும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது
.
சிறுதுளி பெருவெள்ளம் என்ற முதுமொழியை நாம் கேட்டதுண்டு சிறிய எதிர்ப்பு செயல் பெரிய தாக்கத்தை உண்டுபண்ணும் என்பதற்கு லியு ஸியாபோ சிறந்த உதாரணமாக திகழ்கின்றார்.

சர்வபலம் பொருந்திய ஆட்சியாளர்களுக்கு முன்பாக நாம் என்ன செய்யமுடியும் எமது இந்த சிறிய செயற்பாட்டால் என்ன மாற்றம் தான் நிகழ்ந்துவிடப்போகின்றது போன்ற எண்ணக்கருக்களைக் கொண்டிருப்பவர்களையும் கண்திறந்துபார்க்க வைப்பதாக சிந்திக்க வைப்பதாக முக்கியமாக செயற்படத்தூண்டுவதாக ஸியாபோவின் நோபல் பரிசு அமைந்துள்ளதென்றால் மிகையல்ல



வெறுமனே பெயரளவிலன்றி மாற்றுவலுவுள்ளோர் மனதளவிலும் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும்

                                                              அருண் ஆரோக்கியநாதர்


'ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்க்களமே ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே இரவானால் பகலொன்று வந்திடுமே' என்ற நம்பிக்கை தரும் பாடல்வரிகளை ஒரு முறையேனும் முணுமுணுக்காதவர்கள் நம்மில் வெகுசிலராகவே இருக்கக்கூடும் .

மாற்றுத்திறனாளிகள் மாற்றுவலுவுள்ளோர் என தற்போது பரவலாக அடையாளப்படுத்தப்படுகின்றதும் அங்கவீனர்கள் உடல் ஊனமுற்றோர் என கடந்தகாலங்களில் சமூகத்தில் இருந்து ஓரங்கட்டப்பட்ட பிரிவினரை ஊக்கப்படுத்துகின்ற வகையில் எழுதப்பட்ட இப்பாடலைக் கேட்கின்றபோதெல்லாம் உள்ளத்தில் எழுகின்ற உணர்ச்சிப் பெருக்கை வெறுமனே வார்த்தைகளில் வர்ணித்துவிடமுடியாது.

மாற்றுவலுவுள்ளோருக்கான சர்வதேச தினமான இன்று எமது சமூக அமைப்பில் தவிர்க்க முடியாத பாகமாக மாறிவிட்டுள்ள இந்த கௌரவத்திற்கு பாத்திரமான மக்களையும் அவர்கள் எதிர்கொள்கின்ற சிக்கல்களையும் அவர்களுக்கு எம்மால் செய்யக்கூடிய விடயங்களையும் சிந்தித்துப்பார்ப்பது சாலவும் பொருத்தமானதாகும்.

உலக சனத்தொகையில் ஏறத்தாழ 10 சதவீதமானோர் அதாவது சுமார் 650மில்லியன் மக்கள் அங்கவீனத்தைக் கொண்டிருப்பதாக உலக வங்கியின் அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

யுஎன்டிபி என அறியப்படும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் தரவுகளுக்கு அமைவாக உலகில் அங்கவீனத்தைக் கொண்டிருப்பவர்களில் எண்பது வீதமானவர்கள் வளர்முக நாடுகளிலேயே இருப்பதான அதிர்ச்சித்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

 அங்கவீனம் இருக்குமானால் அது உங்களை உலகின் மிகப்பெரிய சிறுபான்மைக்குழுவின் அங்கத்தவராக மாற்றிவிடும் என்ற அளவில் அதன் உண்மையான பரிமாணம் பாரியதாகக் காணப்படுகின்றமையை நாம் வாழும் சமூதாயத்தினை அவதானித்தாலே உணர்ந்துகொள்ளமுடியும் .
அங்கவீனம் என்றதுமே நம்மவர்களில் பலருக்கு உடல் அவயவங்கள் அற்றவர்களே கண்முன் தோன்றுவர் .ஆனால் நிஜத்தில் அங்கவீனத்தை உடையவர்களின் மொத்தத் தொகையுடன் ஒப்பிட்டுப்பார்க்கையில் இவர்களின் எண்ணிக்கை குறைவானதென்பது வியப்பாகத் தோன்றலாம் .

இதனை மேலும் தெளிவாக கூறுவதென்றால் நம் கண்களுக்கு உடனே தெரியாத அங்கவீனத்தைக் கொண்டிருப்பவர்களே சமூகத்தில் அதிகளவில் காணப்படுகின்றனர் என்பதே நிதர்சனமாகும் . சமூக விஞ்ஞானத்தின் வளர்ச்சியின் விளைவாக உடலியல் குறைபாடுகளுக்கு மேலாக அறிவியல் குறைப்பாடுகள் அபிவிருத்திக் குறைபாடுகள் போன்றவற்றால்; பாதிக்கப்பட்டவர்களைக் கூட அங்கவீனர்கள் என்ற பரந்துபட்ட பிரிவாக வகைப்படுத்துகின்றனர்.

அங்கவீனத்தைக் கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை கிரமமாக அதிகரித்துவருவதனை புள்ளிவிபரங்கள் உறுதிப்படுத்திநிற்கின்றன .

அ)எச்ஜவி எயிட்ஸ் போன்ற புதிய நோய்களின் தோற்றம் மன அழுத்தம் மதுப்பாவனை போதைபாவனை போன்ற தீங்கான விடயங்களால் ஏற்படும் பாதகமான தாக்கங்கள்

ஆ) வயதெல்லை அதிகரிப்பும் முதியோர்களின் பெருகிவரும் எண்ணிக்கையும் இவர்களில் பல உடற்சீரியக்கமற்றவர்களாக காணப்படுகின்றனர்

இ) போசாக்கீன்மை நோய்த்தாக்கம் சிறுவர்களைத் தொழிலுக்கமர்த்தல் போன்ற பல காரணங்களால் அடுத்துவரும் 30 ஆண்டு காலப்பகுதியில் உலகில் குறிப்பாக வளர்முக நாடுகளில் அங்கவீனத்தைக் கொண்டிருக்கும் சிறுவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படும் என கூறப்பட்ட எதிர்வுகூறல் நிஜமாகிவருகின்றமை

ஈ)ஆயுத மோதல்கள் மற்றும் வன்முறைகள்

ஆகியன அங்கவீன அதிகரிப்பிற்கு முக்கிய காரணமாக சுட்டிக்காட்டப்படுகின்றன.

70வயதிற்கு மேலாக ஆயுட்காலத்தைக் கொண்ட நாடுகளில் வாழும் மக்கள் சராசரியாக 8 ஆண்டுகளை அன்றேல் தமது ஆயுளின் 11.5வீதத்தை அங்கவீனத்துடன் கழிக்க நேரிடுவதாக ஆய்வு முடிவொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இலங்கையும் அங்கவீனமும்

இலங்கையில் அங்கவீனர்களின் தொகை குறித்து சமூக சேவைகள் அமைச்சின் கீழ் இயங்கும் திணைக்களமொன்றின் அதிகாரியொருவரைத் தொடர்புகொண்டு வினவியபோது இலங்கை சனத்தொகையில் சுமார் ஏழுவீதமானோர் அங்கவீனத்தைக் கொண்டிருப்பதாக குறிப்பிட்டார் .
.
இந்த எண்ணிக்கை கடைசியாக 2001ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட குடிசன மதிப்பீட்டுக்கமைவானதென தெரிவித்த அந்த அதிகாரி யுத்தத்திற்கு பின்னரான உண்மையான நிலவரம் அடுத்தவருடம் இடம்பெறவுள்ள குடிசன மதிப்பீட்டின் பின்னரே தெரிய வரும் எனச் சுட்டிக்காட்டினார்.

பிறப்பு அங்கவீனத்தைக் கொண்டவர்களுடன் பின்னர் முதுமை நோக்கிய வாழ்வில் அங்கவீனத்தைக் கொண்டவர்களைத் தவிர யுத்த வன்முறைகளால் அங்கவீனர்களானவர்களின் எண்ணிக்கையும் அடங்கும்.

இலங்கையில் மூன்றுதசாப்தகாலமாக இடம்பெற்ற யுத்தால் காவுகொள்ளப்பட்ட உயிர்களிலும் அதிகமாக அங்கவீனத்திற்குட்பட்டவர்களின் எண்ணிக்;கை காணப்படும் என்பதைச் சொல்வதற்கு மேதைகள் தேவையில்லை.

பொதுமக்கள் அரச படையினர் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் ஏனைய இயக்கங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் என யுத்தத்தால் நாட்டின் பலபகுதிகளிலும் வாழ்கின்ற மக்கள் அங்கவீனமுற்றுள்ளனர் .இதில் வடக்கு கிழக்கை சேர்ந்த தமிழ் மக்களது எண்ணிக்கையே அதிகமானதாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்துக்கள் இருக்கும் என நினைக்கவில்லை .

 தமிழ் மக்களில் எத்தனைபேர் யுத்தத்தால் அங்கவீனமாகினர் என்ற உத்தியோகபூர்வமான தரவுகள் இல்லை இதற்கு வடக்கு கிழக்கில் கடந்த 30வருடகாலமாக குடிசனமதிப்பீடு இடம்பெறாமையும் முக்கியகாரணமாகும் .

     யுத்தத்தால் அவயவங்களை இழந்தோரின் நிலை
யுத்தம் நிறைவடைந்ததாக பிரகடனப்படுத்தப்பட்டு 16 மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும் அவயவங்களை இழந்த ஆயிரக்கணக்கானோர் உதவிகளுக்காக காத்திருப்பதாக ஐரின்(IRIN) செய்திச்சேவை அண்மையில் சுட்டிக்காட்டியிருந்தது

 அவயவங்களை இழந்தவர்களுக்கு செயற்கை அவயவங்களை பொருத்தும் பணியினை மேற்கொண்டுவரும் Sri Lanka School of Prosthetics and Orthotics நிறுவனத்தை மேற்கோள் காட்டி வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் இலங்கையில் கணக்கெடுக்கப்பட்டுள்ள 160000 அவயவங்களை இழந்தோரில் 90 சதவீதமானோர் தரமான செயற்கைக்கால்களைப் பெறுவதில் சிரமங்களை எதிர்நோக்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இவர்களில் அனேகமானோர் சிவில் யுத்தத்துடன் தொடர்புடைய நிலக்கண்ணிவெடி மற்றும் குண்டுவெடிப்புக்கள் காரணமாகவே அவயவங்களை இழந்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

2009ம் ஆண்டின் முற்பகுதியில் யுத்தத்தின் போது இடம்பெற்ற ஷெல் தாக்குதலில் தனது இருகால்களையும் இழந்து இன்னும் செயற்கை கால்களை பெற்றுகொள்ள முடியாதநிலையிலுள்ள முல்லைத்தீவைச் சேர்;ந்த 25வயதுடைய ஜெகநாதன் சிவகுமாரன் என்ற இளைஞரின் கருத்தையும் ஜரிஎன் செய்திச் சேவை பதிவுசெய்துள்ளது.

'நான் பணத்திற்காக ஒரு விலங்கினைப் போன்று வீதிகளில் பிச்சையெடுத்துக்கொண்டிருக்கின்றேன் .யுத்தத்தால் அங்கவீனாகிய நான் இன்னமும் அதனால் வேதனைப்பட்டுக்கொண்டிருக்கின்றேன்'  என்கிறார் ஜெகநாதன் சிவகுமாரன்

அவயவங்களை இழந்தவர்களுக்கு பொருத்தப்படும் செயற்கை அவயவங்களிலும் உடலுக்கு மிகநெருங்கி ஒத்திசைவாக காணப்படுபவை உடலுக்கு கடினமானவை என வித்தியாசம் உள்ளன.

மனித உடலுக்கு மிகவும் நெருக்கமானதும் ஒத்திசைவானதுமான அவயவங்களைத்தயாரிப்பதற்கு உபயோகப்படுத்தப்படுகின்ற மூலப்பொருட்கள் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றதுடன் அவற்றின் விலை மிகவும் அதிகமானதாகும் .அதனுடன் ஒப்பிட்டுப்பார்க்கையில் இந்தியாவில் இருந்து தருவிக்கப்படும் மூலப்பொருட்கள் விலைகுறைவானதாக காணப்படுகின்ற போதிலும் அது பயனாளர்களுக்கு எளிதாக இருப்பதில்லை என சுட்டிக்காட்டப்படுகின்றது.

அமெரிக்காவில் இருந்து இறக்குமதிசெய்யப்படும் உயர்தரம் வாய்ந்த செயற்கை அவயவம் ஒன்றைப்பெறுவதற்கு 5000 முதல் 12000 அமெரிக்க டொலர்களை செலவிடவேண்டிய நிலை காணப்படுகின்றது .வருடமொன்றிற்கே சராசரியாக 4500 அமெரிக்க டொலர்களை சம்பாதிக்கின்ற இலங்கை மக்களால் இத்தகைய உயர்தர செயற்கை அவயவங்களை பெற்றுக்கொள்ள முடியாதநிலை காணப்படுகின்றது.

காட்டில் விறகுதேடச்சென்ற போது நிலக்கண்ணிவெடியில் சிக்கி 2007ம் ஆண்டில் வலது காலை இழந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 41வயதுடைய ஷங்கர் கமலராஜன் என்பவரது கருத்;தையும் ஐரிஎன் செய்திச்சேவை பதிவுசெய்திருந்தது இவ்வருடத்தின் பெப்ரவரி மாதத்திலேயே உள்ளுர் சமூக நிறுவனமொன்றின் அனுசரணையின் மூலமாக ஷங்கருக்கு செயற்கைக்கால் கிடைத்திருந்தது

தனக்கேற்பட்ட நிலைமை குறித்து கருத்துவெளியிட்ட ஷங்கர் ' என்னால் எதனையுமே செய்துகொள்ள முடியாத நிலை காரணமாக இரண்டு வருடகாலங்களை நான் பிச்சைக்காரனைப் போன்று கழிக்க நேர்ந்தது .உணவின்றி பட்டினி கிடந்த நாட்களும் உள்ளன. கடந்த காலத்தில் முடக்கப்பட்ட நிலையிலான ஏற்பட்ட உளவியல் தாக்கத்திலிருந்து விடுபட்டு (செயற்கைகாலுடன் கூடிய) புதிய வாழ்விற்கு என்னை இசைவாக்கிக்கொள்ள முயற்சித்துவருகின்றேன்' எனக் கூறினார்.

ஆனால் அனுசரணையாளர்களின் உதவியைப் பெற்றுக்கொள்ள முடியாதுள்ள பலரின் நிலைமை கேள்விக்குரியதாகவே காணப்படுகின்றது .

அங்கவீனமுற்றோரின் வாழ்வை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள அமைப்புக்களிலொன்றான லெனாட் செசாயர் அமைப்பின் முகாமையாளர் அலி ஷப்றியிடம் வினவியபோது அங்கவீனமுற்றவர்களுக்கு உதவுவதற்கு தமக்கு மனமிருந்தபோதும் போதிய வளங்கள் பற்றாக்குறையாக இருப்பதாக சுட்டிக்காட்டினார் . இதன்காரணமாகவே பாரிய தேவைகளைக் கொண்டிருக்கும் வடக்கு கிழக்கு பிரதேசத்தில் தமது சேவையை விஸ்தரிக்க முடியாதுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அங்கவீனமுற்றோருக்கு நிதி மற்றும் வளங்கள் மூலமாக உதவுகின்ற தேவை பெரிதாக இருக்;கின்றது அதனைவிடவும் இலங்கை மக்களும் ஆட்சியாளர்களும் பாரிய தேவையைப் பூர்த்திசெய்யவேண்டும் என அலி ஷவ்றி சுட்டிக்காட்டினார்.

அங்கவீனமுடையவர்களுக்கு சமூகத்தில் தரப்படுகின்ற அங்கிகாரமும் சந்தர்ப்பங்களும் தற்போது மிகமிக குறைவானதாகவே காணப்படுகின்றது.இவ்விடயத்தில் மக்களின் மனநிலையிலும் அதிகாரங்களிலுள்ளவர்களின் அணுகுமுறைகளிலும் கொள்கை வகுப்பிலும் நடைமுறைப்படுத்தலிலும் மாற்றங்கள் ஏற்படவேண்டும் என ஷவ்றி தெரிவித்தார்.

அங்கவீனமுடையவர் பாரபட்சமாக பார்க்கப்படும் நிலைமை உலகளவில் பரவலாக காணப்படுகின்றது

2004ம் ஆண்டில் பிரித்தானியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அங்கவீனமுற்றவர்கள் வன்முறை அன்றேல் பாலியல் வன்புணர்ச்சிக்குட்படுத்தப்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகளைக் கொண்டிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

உலகில் உழைக்கும் வயதைச் சேர்ந்தவர்களில் 386மில்லியன் பேர் ஏதோ ஒரு வகையான அங்கவீனத்தைக் கொண்டிருப்பதாக சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் தெரிவித்துள்ளதுடன் சில நாடுகளைப் பொறுத்தவரையில் அங்கவீனமுடையவர்கள் மத்தியில் வேலையில்லாப்பிரச்சனை 80சதவீதமாக காணப்படுவதாக சுட்டிக்காட்டுகின்றது

அங்கவீனமுடையவர்கள் தமக்கு வழங்கப்பட்ட வேலைகளை செயற்திறனுடைய முறையில் செய்யமாட்டார்கள் என காலகாலமாக நிலவிவரும் தப்பபிப்பிராயங்களும் அவர்களை வேலையில் சேர்த்துக்கொண்டால் அதிக சலுகைகளை வழங்கவேண்டும் என்ற எண்ணமுமே அங்கவீனமுற்றவர்கள் மத்தியில் காணப்படும் தொழிலின்மை பிரச்சனைக்கு முக்கிய காரணமாகும்.

ஆனால் மனதை ஒருமுகப்படுத்தி நேரத்தை வீணடிக்காது வேலைசெய்வதில் அங்கவீனமுடையவர்கள் எவருக்குமே சளைத்தவர்களோ இரண்டாம்தரமானவர்களோ கிடையாது என்பது பல இடங்களில் நிருபிக்கப்பட்டுள்ளது.

அங்கவீனமுடையவர்களை அங்கவீனர்கள் என்று அழைப்பதற்கு பதிலாக மாற்றுவலுவுள்ளோர் மாற்றுத்திறனாளிகள் மாற்றுத்திறன் உடையோர் என அழைப்பதெல்லாம் நல்ல மாற்றங்களே .ஆனாலும் மக்களாகிய நாமும் அதிகாரத்திலுள்ளவர்களும் இந்த பெயர்மாற்றத்தினால் மாத்திரம் நன்மைகிட்டும் என்றுவிட்டு பொறுப்புக்களை தட்டிக்கழித்துவிடமுடியாது .

இவர்கள் விடயத்தில் இதயசுத்தியுடன் உளப்பூர்வமாக நாம் எமது சிந்தனைப்போக்கையும் செயற்பாடுகளையும் மாற்றிக்கொள்ள இன்றைய தினத்திலேனும் நாம் உறுதிபூணவேண்டும்


Monday, December 6, 2010

யுத்தத்தால் விதவைகளானோருக்கு விமோசனம் யார் தருவார்?

வவுனியாவிலிருந்து 
அருண் ஆரோக்கிய நாதர்



யுத்தம் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டு ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகள் கடந்து விட்டநிலையில் குண்டுச்சத்தங்கள் மௌனித்துவிட்ட போதிலும் யுத்தம் ஏற்படுத்திய வடுக்கள் வடக்கு கிழக்கு பகுதியில் துலாம்பரமாக தெரிகின்றன.

இதில் யுத்தத்தால் கணவனை இழந்து விதவைகளானோர் நிலைமை பரிதாபகரமானது .இலங்கை அரசாங்கத்தின் தரவுகளுக்கு அமைவாக கிழக்கு மாகாணத்தில் 49000 விதவைகளும் வடமாகாணத்தில் 40000 விதவைகளும் உள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது

இந்த விதவைகளுக்கு புனர்வாழ்வளிப்பதற்கு வெளிநாடுகளின் உதவியை எதிர்பார்த்துள்ளதாக இலங்கை அரசாங்க அமைச்சர்கள் கடந்த மாதத்தில் அறிவித்திருந்தனர் .இவர்களுக்கு உதவியளிக்க இந்தியா ஏற்கனவே முன்வந்திருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது

விதவைகள் விபரம் 
கிழக்கு மாகாணம் -49000
வடமாகாணம் -40000

இந்த நிலையில் கொடூர யுத்தத்தினால் விதவைகளான சாந்தி உமா மற்றும்  ஜான்ஸி ஆகிய மூன்று இளம் பெண்களை சந்திக்கின்ற வாய்ப்பு அண்மையில் கிட்டியிருந்தது .

 அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு என்ற நற்பெண்களுக்குள்ள உயரிய குணத்தால் இவர்கள் ஆரம்பத்தில் பேசத்தயங்கியபோதும் இரண்டு நாட்களின் பின்னர் மனந்திறந்து பேசத்தொடங்கினர்.

சாந்தி( 21வயது )
'அண்ணா எனக்கு 2006ஆண்டு ஏப்ரல் 12ம்திகதி 16வயதில் திருமணமானது .எனது பள்ளித்தோழிpயின் அண்ணாவைத்தான் நான் விரும்பித் திருமணம் செய்திருந்தேன் . திருமணத்தின் பின்னர் விசுவமடுவிலுள்ள என்னுடைய பெற்றோருடன் தான் வாழ்ந்துவந்தோம். கணவர் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தார் 2007ம் ஆண்டு ஜுலை 21ம்திகதி எங்களுக்கு மகன் பிறந்தான் .கணவன் என்னை நல்லா பார்த்துக்கொண்டார்.எந்த உதவிக்காகவும் நான் வேறுவீடுகளைத்தட்டியது கிடையாது. இப்படி சிறப்பாக வாழ்க்கை நடத்திக்கொண்டிருந்தபோதுதான் யுத்தம் வெடித்திருந்தது. விசுவமடுவில் இருந்து இடம்பெயர்ந்து ஒவ்வொரிடமாக சென்று போன வருசம் (2009)ஏப்ரல் மாதம் 7ம்திகதி புதுமாத்தளனிலிருந்து முள்ளிவாய்க்காலுக்கு சென்று கொண்டிருந்தபோது தான் ஷெல் வீச்சில் கணவர் பலியானார். இடம்பெயரும் போது எங்களை முன்னுக்கு அம்மா அப்பாவுடன் போக சொல்லிவிட்டு அவர் சைக்கிளின் சமான்கiளை சுமந்துவருவார். ஷெல் வீச்சில் அவர் பலியானபோது நான் உடனிருக்கவில்லை முதலில் அவருடைய தம்பிதான் இறந்துவிட்டதாக சொன்னாங்க உண்மைய எல்லோரும் மறைச்சிட்டாங்க பிறகு தம்பி வந்து நடந்ததைக் கூறியவுடன் நான் மயங்கிவிழுந்துட்டேன் .பிறகு நாங்க இருந்த இடத்திலேயே அவரது சடலத்தை புதைத்துவிட்டு முள்ளிவாய்காலுக்கு போனோம் .அங்கிருந்து போனவருசம் மே 17ம்திகதி இராணுவ கட்டுப்பாட்டுப்பகுதிக்கு வந்து மெனிக்பாமில் ஒருவருடத்திற்கு மேல் இருந்தோம் மூன்று மாதங்களுக்கு முன்னர் தான் மீண்டும் விசுவமடுவிற்கு சென்றிருந்தோம் '

உமா( 30வயது)
'நாங்க கிளிநொச்சி ஊற்றுப்பாலம் பகுதியை சேர்ந்தவங்க. நானும் எனது கணவரும் விரும்பித்தான் திருமணம் செய்திருந்தோம் .எங்கட அப்பாவிலுள்ள உயர் குணங்கள் இருப்பதைக் கண்டுதான் நான் அவரை விரும்பினேன் .2007ல் திருமணமானது .2008ம் ஆண்டு ஜுலை மாதம் 26ம்திகதி மகள் பிறந்ததும் கணவர் கிளிநொச்சி மருத்துவமனைக்கு வந்து பார்த்து தூக்கி மகிழ்ந்தார் அதற்கு பிறகும் பல தடவைகள் வந்தார்.இரண்டு நாட்கள் கழித்து ஜுலை 28ம்திகதி எங்களை மருத்துவமனையில் பார்த்துவிட்டு சென்ற பின்னர் தான் ஷெல் தாக்குதலில் உயிரிழந்தார். அதற்கு பிறகு என்னுடைய வாழ்க்கை இருண்டுவிட்டது. ஷெல் தாக்குதல் எங்கட பிரதேசத்திற்கு அருகில் அதிகரிக்க அதிகரிக்க அவர் செத்து ஒரு மாதத்திற்கு பிறகு நாங்க இடம்பெயர்ந்து ஒவ்வொரிடமாக சென்றோம் இறுதியில் மாத்தளனில் இருந்து மார்ச் மாதம் நாங்க மெனிக் பாம் வந்தோம் .பிறகு ஒன்றரை வருஷத்திற்கு பிறகுதான் சொந்த இடத்திற்கு திரும்பினோம் '

ஜான்ஸி ( 26வயது )
'இரணைப்பாலை தான் எங்கட சொந்த இடம் எனக்கு 2007ம் ஆண்டு திருமணமானது நாங்க புதுமாத்தளனுக்கு இடம்பெயர்ந்த போது போன வருசம் (2009) மார்ச் 22ம் திகதி அவர் ஷெல் தாக்குதலில் உயிரிழந்தார். ஒரு குழந்தையும் நானும் எங்கட அம்மா அப்பாவும் தற்போதும் மெனிக் பாமில் தான் இருக்கின்றோம் .இன்னமும் எங்கட பகுதியில் மீள் குடியமர அனுமதிக்கப்படவில்லை'

தம்மை நன்கு பார்த்துக்கொண்ட தமது கணவர்மார் உயிருடன் இருந்திருந்தால் தம்மை எந்தவேலைக்கு செல்லவும் அனுமதித்திருக்கமாட்டார்கள் எனக்கூறும் இந்த இளம் விதவைகள் தற்போது மிதிவெடி அகற்றும் நிறுவனமொன்றில் ஆபத்துமிக்க மிதி வெடி அகற்றும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர் .

ஏனையோரைப்போன்றே தமக்கும் சில நிறுவனங்கள் உதவிப்பொருட்களையும் சிறுதொகைப்பணத்தையும் வழங்கியுள்ளபோதிலும் கணவனை இழந்த பெண்கள் என்ற நிலைமை கருதி இதுவரையில் விசேடமான உதவிகளோ நிவாரணங்களோ கிடைக்க வில்லை எனக்கூறும் இவர்கள் தமது குடும்ப நிலைமை கருதி தமது வாழ்விட சூழலுக்கு வெளியே தொழிலுக்கு வந்துவிட்ட நிலையில் தாம் இல்லாத காரணத்தால் ஏனையோருக்கு கிடைத்துள்ள சில நிவாரணப் பொருட்களும் தமக்கு கிடைக்காது போயுள்ளதாக இவர்கள் கூறுகின்றனர்.

கணவன் உயிருடன் இருந்த காலத்திற்கும் தற்போதைய நிலையிலுவும் சமூதாயத்தில் எத்தகைய வேறுபாட்டை உணருகின்றீர்கள் என வினவியதற்கு பதிலளிக்கையில்

சாந்தி
' அவர் உயிருடன் இருக்கும் போது யாருடன் வேண்டுமானாலும் கதைக்கலாம் எங்கவேண்டுமானாலும் போகலாம் ஆனா இப்ப நான் சொந்தக்காரர்களிடம் பேசினால் கூட ஏன் அவ அவரோட பேசுறா இவரோட பேசுறா என குத்தலா பேசுறாங்க எங்கட அம்மா அப்பா கூட மகள் நீ அவங்களோட பேசினா சமூதாயம் அப்படி இப்படி பேசும் என்று கட்டுப்பாடு விதிக்கிறாங்க'

உமா
' அவர் இருக்கையில் நான் கேட்கிறத்திற்கு முதலே எல்லாத்தையும் வாங்கித்தந்திடுவார்.இப்ப கடைக்களுக்கென்றாலும் ஏனைய இடங்களுக்கு என்றாலும் நாங்கள் தான் போகணும் .நிவாரணங்கள் கொடுப்பவர்கள் உரிய ஆளே நேரில் வரவேணும் என்று கூறுவதால் எல்லாத்திற்கும் நாங்கள் தான் போகவேண்டியுள்ளது வெளியே போய்வரும் போது சிலரது கேலி கிண்டலுக்கு ஆளாக வேண்டியிருக்கின்றது என்னசெய்கிறது எல்லாவற்றையும் சகித்துக்கொள்ளவேண்டியிருக்கின்றது'

ஜான்ஸி
'என்ற கணவர் நோய்வாய்பபட்டு ஊனமுற்றவராய் இருந்திருந்தாலும் உயிரோடு இருந்திருக்க வேண்டும் என்று நினைக்கின்றேன் .இப்ப ஒவ்வொரு செயலுக்கும் விளக்கம் சொல்லியும் சந்தேகத்தோடுதான் பார்க்கிறாங்க '

யுத்த்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு தரப்பினரில் மிகவும் துர்ப்பாக்கிய சாலிகளாக காணப்படும் கணவனை இழந்த இளம் பெண்களின் இளம்தாய்மாரின் எதிர்காலம் எதிர்ப்பார்ப்புக்கள் குறித்து அவர்களிடமே வினவியபோது

சாந்தி
' என்னுடைய பிள்ளையை நன்கு வளர்த்தெடுக்கவேண்டும் நல்ல கல்வியை கொடுத்து சிறந்த எதிர்காலத்தை வழங்கவேண்டும் அதுதான் எனது எதிர்பார்ப்பு'

உமா
'நான் பட்ட கஷ்டத்தை சொல்லி பிள்ளையை வளர்ப்பேன் ஆனால் எல்லாவற்றிலும் சிறப்பானது கிடைப்பதற்கு நான் என்னால் இயன்றதை செய்வேன். எங்கட ஒன்றவிட்ட அக்கா ஒருவரும் யுத்தம் காரணமாக 1996ம் ஆண்டு கணவனை இழந்தவ அப்ப அவங்கட குழந்தைக்கு 6மாதம் மட்டும் தான் அவ நல்ல முறையில் பெண்குழந்தையை வளர்த்தெடுத்திருக்கிறா அதுபோல என்னுடைய பெண் குழந்தையையும் நான் நல்ல முறையில் வளர்த்து நல்ல ஒருவரது கையில ஒப்படைக்க வேண்டும் என்பதே எனது நோக்கம்'

ஜான்ஸி
'பிள்ளையை ஒழுங்கா வளர்த்தெடுக்கணும் என்பதே என்னுடைய ஒரே எதிர்ப்பார்ப்பு அதனைத்தவிர நோயுற்றிருக்கிற என்னுடைய பெற்றோரை நன்கு உழைத்து பராமரிக்க வேண்டும்'

தமது எதிர்பார்ப்புக்கள் குறித்து இவ்வாறு கூறியவர்களைப்பார்த்து தயங்கியவாறே கோபித்துக்கொண்டுவிடாதீர்கள் நீங்கள் இளம் வயதினராய் இருப்பதனால் மீண்டும் திருமணம் செய்துகொள்வீர்களா என்று வினவியபோது

சாந்தி
 'எங்க சமூகத்தில் மீண்டும் திருமணம் செய்வதை அனுமதிக்க மாட்டாங்க சொந்தக்காரங்களே பிரித்துவைத்திடுவாங்க அவங்க ஏற்றுக்கொள்ள மாட்டாங்க என்னைப்போல நிறையப்பேர் கணவன் இல்லாம இருக்கிறநிலையிலே இப்படி இருப்பதே பழகிப்போய்விட்டது '


உமா
' அம்மா அப்பாவிடம் நான்கைந்துபேர் வந்து திருமணம் கேட்டிருக்கிறாங்க அவங்க எனக்கு எதையும் உடனே கூறமாட்டாங்க நான் ஏசி விடுவன் அல்லது வீட்டை விட்டு பிள்ளையைக் கூட்டிக்கொண்டு போய்விடுவேன் என்று அவங்களுக்கு பயம் . மெனிக்பாம் முகாமில இருக்கும் போது கணவனை இழந்த மனைவியை இழந்தவர்கள் மீண்டும் திருமணம் செய்ததை பார்த்திருக்கின்றேன் . தங்களுக்கு என்று பிள்ளைகள் பிறந்த பிறகு அவர்கள் நடந்துகொள்வதையும் பார்த்திருக்கின்றேன் .முன்னைய பிள்ளையை ஏதோ மாற்றாந்தாய் பிள்ளையாக பிரித்து பார்ப்பதுடன் அந்தப்பிள்ளையிடம் வேலைவாங்கிறதும் அடித்துதைப்பதையும் பார்த்து வெறுத்துப்போய்விட்டது .இதனால மீண்டும் திருமணம் முடிப்பதென்றால் பயமா இருக்கின்றது .அதைவிட இருக்கிற பிள்ளையை நன்கு வளர்த்தெடுத்தா போதும்'

ஜான்ஸி
'நினைத்தேன் நீங்கள் இந்த கேள்வியை கேட்கத்தான் சுற்றிவளைக்கின்றீர்கள் என்று ஆனா எனக்கு இந்த நிலையில் அது குறித்து சிந்தித்துபார்க்கமுடியாது என்னுடைய கணவரின் நினைவுகள் இப்போதும் அதிகமாக என்னை ஆட்கொண்டிருக்கின்றது அதiனைத்தவிர பிள்ளையை நன்றாக வளர்க்கவேண்டும் என்ற நோக்கமும் உள்ளது '


 நீங்கள் எல்லோரும் இளவயதினராய் இருக்கின்றீர்கள் கணவனை இழந்தது நீங்கள் செய்த தவறல்ல காலம் செய்த தவறு ஒருசில உதாரணங்களுக்காக மீண்டும் திருமணம் செய்யக்கூடாது என்ற முடிவிற்கு வந்துவிடுவதுதானா தீர்வு என வினவியபோது ?

சாந்தி
'சமூகத்தின் நிலைப்பாட்டில் மாற்றம் வரவேண்டும்'

உமா
' நல்லது வந்தால் பார்க்கலாம்'


ஜான்ஸி
'இப்ப பிள்ளையை வளர்ப்பதுதான் முக்கியம் '


யுத்தம் காரணமாக எமது நாட்டில் குறிப்பாக வடக்கு கிழக்கில் விதவைகளானவர்களுக்கென இதுவரையில் உருப்படியான உதவிகள் வழங்கப்படவில்லை என்பதையே ஒருபானைச் சோற்றிற்கு ஒருசோறு பதம் என்பது போன்று இந்த மூன்று இளம் விதவைகளுடனான கலந்துரையாடலின் மூலமாக உணரமுடிந்தது

இவர்களுக்கு வழங்கும் உதவிகளுக்கு மேலாக உளவியல் ரீதியான ஆற்றுப்படுத்தல் சிகிச்சைகளும் வழங்கப்படுவதுடன் தாம் இழைக்காத தவறிற்காக விதவைகளாகிப்போயுள்ள இவர்களுக்கு நிரந்தரமான தீர்வாக விதவைகள் மறுதிருமணம் போன்ற விடயங்களில் சமூக எண்ணக்கருவில் மாற்றங்கள் ஏற்படவேண்டும்

புறக்கணித்து இருப்பதற்கு விதவைகள் எண்ணிக்கை ஒன்றிரண்டல்ல மாறாக ஆயிரக்கணக்காக இருப்பதன் காரணமாக சமூகத்தில் கருத்துருவாக்கத்தை ஏற்படுத்தும் பணியில் சமூக நிறுவனங்கள் தொண்டர்கள் மனிதாபிமானமுள்ளவர்கள் ஊடகவியலாளர்கள் தீவிரமாக ஈடுபடவேண்டும்

இரகசியத்தன்மையைப் பாதுகாப்பதற்காக உண்மையான பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன





வலுவுள்ள சமூகம் படைப்பதற்காய் உடலினை உறுதிசெய்வோம்

                                                                               ஏகலைவன்


இன்றைய அவசர உலகில் பலருக்கு பணம் சம்பாதிப்பதே குறியாய் இருப்பதால் உடல்திடநிலை குறித்து பலரும் அக்கறை செலுத்துவதில்லை


இந்த உலகப் போக்கு இலங்கையையும் விட்டுவைக்கவில்லை.
இலங்கையில் கடந்த 20-30 வருடங்களில் நீரழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது .

நாட்டின் மொத்த சனத்தொகையில் 10சதவீதமானவர்கள் நீரழிவு நோயினாலும் 25 சதவீனமானவர்கள் உயர் இரத்த அழுத்த நோயினாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட புதிய புள்ளிவிபரத் தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன
.
இதற்கு புகைபிடித்தல் மதுபானம் அருந்துதல் மன அழுத்தம் மோசமான உணவுப்பழக்க வழக்கம் போன்ற காரணிகளால் அதிகமானவர்கள் இந்த நோய்களுக்கு ஆளாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது/

இலங்கையைப் பொறுத்தவரையில் போர்ச் சூழலும் அதிகளவு மக்கள் இந்த நோய்களினால் பீடிக்கப்பட்டுள்ளமைக்கு காரணமாக கூறப்படுகின்றது

கஷ்டப்பிரதேசங்களில் கிராமிய சூழலில் வாழ்பவர்களுக்கு மன உளைச்சல் உளவியற் பாதிப்புக்கள் என்பனவற்றைத்தவிர்த்து வேறுகாரணங்களால் இந்த நோய்கள் நெருங்க வாய்ப்பில்லை .இதற்கு அம்மக்களின் இயற்கையுடன் ஒன்றிய வாழ்க்கை முறையும் கடின உழைப்புமே காரணமாகும்
 .
ஆனால் நகர்பிரதேசங்களில் உள்ளவர்களுக்கு இந்நோய்கள் வருவதற்கு தமது உடல் திடநிலை குறித்து அவர்கள் அக்கறை காண்பிக்காமையே பிரதான காரணமாக சுட்டிக்காட்டப்படுகின்றது

இடவசதியின்மை காரணமாக தமது வீடுகளிலோ தூரம் காரணமாக மைதானங்களிலோ விளையாட்டு உடற்பயிற்சி போன்றவற்றில் ஈடுபடமுடியாதவர்களுக்காகவென்ற தற்போது நகர்ப்புறங்களில் உடற்பயிற்சிக் கூடங்கள் 'GYM'காணப்படுகின்றன.

.
இவற்றை எத்தனைபேர் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்றால் அது மிகக் குறைவாகவே காணப்படுகின்றது

புகைபிடித்தும் மதுபானம் அருந்தியும் தெருத்தெருவாய்ச் சுற்றியும் தமது நேரகாலத்தை வீணடித்து நம்பியிருக்கும் குடும்பத்தாரையும் நட்டாற்றில் விட்டுச் செல்லுகின்றவர்கள் மத்தியில் உடற்பயிற்சிக் கூடங்களுக்கு சென்று தமது உடலைத் திடப்படுத்தி வலுவான சமூகத்தை படைத்திட பங்களிக்கின்றவர்கள் பாராட்டப்படவேண்டியவர்களாவர்
.
விளையாட்டிற்காக கேசரி ஸ்போர்ட்ஸ் சஞ்சிகை அர்ப்பணிக்ப்பட்டுள்ள நிலையில் அதில் விளையாட்டின் முக்கிய நோக்கங்களில் ஒன்றான உடலினை உறுதி செய்கின்ற முயற்சியில் தம்மை அர்ப்பணித்துக்கொண்டுள்ளவர்கள் பற்றிய ஆக்கங்களை பிரசுரிக்க தீர்மானித்துள்ளோம்

அந்த வகையில் அர்ப்பணிப்புடன் நேர்த்தியாக செயற்படுகின்ற உங்கள் பகுதிகளிலுள்ள விளையாட்டுக்கழகங்கள் உடற்பயிற்சிக் கூடங்கள் கராத்தே வகுப்புக்கள் போன்றவை பற்றியும் அங்கு நிலைநாட்டப்பட்ட சாதனைகள் குறித்தும் எமக்கு எழுதி அனுப்புமிடத்து தகுதியானவை இச்சஞ்சீகையில் நிச்சயமாக பிரசுரிக்கப்படும் என்பதைக் கூறிக்கொள்கின்றோம்

இந்த வகையில் இந்த சஞ்சிகையில் கொட்டாஞ்சேனை சுற்றுவட்டத்திற்கு அண்மையில் அமைந்துள்ள லைவ்லைன் உடற்பயிற்சிக்கூடத்தின் பயிற்சிவழங்குநர் ஆ.பி.சிறியான் ஆனந்தவுடன் உடற்பயிற்சியின் அவசியம் குறித்தும் கலந்துரையாடினேன்.

.
உடற்பயிற்சி செய்யவேண்டியது ஏன் அவசியம் என கருதுகின்றீர்கள் ?
முன்புபோலன்றி தற்போது அனைத்துமே சொகுசுமயமாகிவருகின்றது .உடலை வருத்தி உழைக்கும் நிலைமை காணப்படவில்லை.அதனால் தான் உடற்பயிற்சி அவசியமாகும்.

என்னனென்ன நோக்கங்களுக்காக உடற்பயிற்சிக்கூடத்திற்கு வருகின்றனர் ?
கணிசமானோர் உடற்கட்டுமானத்திற்காக (Body Building) வருகின்றனர். உடலினை உறுதிசெய்வதற்காக பலர் வருகின்றனர் .இதனைத்தவிர கொழுப்பு கொலஸ்ரோலை குறைப்பதற்காக தொப்பையைக் குறைப்பதற்காக என்றும் இங்கு வருகின்றனர்.

ஒருவர் எத்தனை மணிநேரம் உடற்பயிற்சி செய்யவேண்டும்?
உடற்கட்டுமானம் செய்பவர்கள் ஒன்றரை மணிநேரம் முதல் 2மணித்தியாலங்கள் செய்யவேண்டும் .உடற்திடநிலைக்காக செய்பவர்கள் பெண்களாக இருப்பின் 45நிமிடங்களும் ஆண்களாக இருப்பின் ஒருமணிநேரமும் செய்யவேண்டும்

உடற்பயிற்சி செய்வதற்கு என்று நேரகாலம் உள்ளதா?
ஆதிகாலை முதல் 9மணிவரையான காலப்பகுதியும் மாலை நான்கு மணிமுதல் இரவு 10மணிவரையான காலப்பகுதியும் மிகவும் நல்லது .உடற்பயிற்சி கூடத்தில் உகந்த காலநிலை அதாவது குளிர்சாதனம் செய்யப்பட்டு வெக்கையற்ற இதமான காற்றுடனான சூழல் காணப்பட்டால் மதியம் 1மணி 2மணி என்றாலும் உடற்பயிற்சி செய்யமுடியும்.


உடற்பயிற்சிக்கூடமொன்றை தெரிவுசெய்யும் போது எத்தகைய விடயங்களை கவனத்தில் கொள்ளவேண்டும் ?

முதலில் உடற்பயிற்சிக்கூடம் அமைந்துள்ள சூழல் முக்கியமாக உட்புறச்சூழல் சிறப்பாக இருக்கவேண்டும் .அடுத்ததாக அங்குள்ள பயிற்றுநர் எப்படிப்பட்டவர் என்பதை அறிந்துகொள்ளவேண்டும் .தேர்ச்சியற்ற பயிற்றுவிப்பாளர்கள் இன்று அதிகமாக உள்ளனர். இதனால் முதலில் சேர முன்பு உடற்பயிற்சிக்கூடத்திற்கு சென்று அவதானிக்க வேண்டும் .தேர்ச்சியற்ற பயிற்றுநர் இருப்பின் நல்ல உடலுடன் போகின்றவர்கள் காயங்களுடனும் உபாதைகளுடனும் தான் திரும்பிவரவேண்டும் .

Thursday, October 21, 2010

PATHETIC CONDITION OF RATNAM PARK

சாக்கடையாகிப்போன '' சம்பியன்'' மைதானம்

''எப்படியிருந்த மைதானம் இப்படியாகிவிட்டதே'' ரட்ணம் மைதானத்தை இன்று பார்ப்பவர்கள் இந்த வார்த்தைகளை முணுமுணுத்துக்கொண்டு போவதை அவதானிக்க முடிகின்றது 


பூரணத்துவமிக்க மனித சமூகத்தை உருவாக்குவதில் விளையாட்டு உடற்பயிற்சி பொழுது போக்கு என்பனவும் இன்றியமையாதன . இதற்காகத் தான் ஒவ்வொரு பிரதேசத்திலும் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளின் மத்தியில் மைதானங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன
இந்தவகையில் கொழும்பு கொச்சிக்கடை ஜிந்துப்பிட்டி கொட்டாஞ்சேனை சென்றல் வீதி புதுக்கடை எனப் பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் குறிப்பாக இளைஞர்களால் பயன்படுத்தப்பட்டுவந்த ஜம்பட்டா வீதி ரட்ணம் மைதானத்தின் இன்றைய நிலையோ மிகவும் மோசமானதாக கவலைக்கிடமாக காட்சியளிக்கின்றது


இலங்கை கால்பந்தாட்ட அரங்கில் புகழ்பெற்ற கழகங்களான ரட்ணம் மற்றும் ரினோன் கழகங்களின் தாயக பயிற்சி மைதானமாகவும் திகழ்ந்த இந்த ரட்ணம் மைதானம் இனமதபேதமின்றி அனைத்து தரப்பு மக்களாலும் பயன்படுத்தப்பட்டு வந்ததென்பதுடன் இலங்கை தேசிய கால்பந்தாட்ட அணியைப் பிரதிநிதித்துவப்படுத்திய பல வீரர்களின் ஆரம்பத்திற்கு களமமைத்துக்கொடுத்திருந்தது

ஆனால் கடந்த சில வருடங்களாக கேட்பாரில்லாத நிலையில் மிகவும் பரிதாபகரமாக இந்த மைதானம் காணப்படுகின்றது
மைதானத்தில் காடுபற்றி புற்கள் அடர்த்தியாக வளர்ந்துள்ளதுமட்டு மன்றி கழிவுநீரும் தேங்கிக்காணப்படுகின்றது.

மைதானத்திற்கு அருகிலுள்ள ஒருசில தோட்டங்களைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோதமான நிலையில் வீடுகளை அமைப்பதற்காக கழிவுநீர் வாய்க்கால்களை அடைத்து அதனை மைதானத்திற்குள் திருப்பி விட்டுள்ளமையும் இந்த நிலைமைக்கு முக்கிய காரணம் என சுட்டிக்காட்டப்படுகின்றது

இதனைத்தவிர மழை பெய்யும் போது நீர்வழிந்தோட வழியின்றி மழைநீரும் தேங்கிநிற்பதுண்டெனக்குறிப்பிடும் மைதானத்திற்கு அருகில் வாழும் மக்கள் இதனால் டெங்கு நோய் பரவும் அபாயமும் அதிகமாக காணப்படுவதாக கவலைதெரிவிக்கின்றனர்.

மைதானத்தின் பரிதாபகரமான நிலைக்கு மத்தியிலும் வேறு தெரிவுகள் இல்லாத நிலையில் அங்கு பயிற்சிக்காக வந்திருந்த பிரதேசவாசியான கே.செல்வராஜ் என்பவரிடம் மைதானத்தின் நிலைகுறித்து வினவியபோது 


'நான் இந்த பிரதேசத்தை சேர்ந்தவன் இந்த மைதானத்தில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் விளையாடிய நாட்கள் இன்று வெறும் கனவாகிப்போய்விட்டது தற்போது ஒருசிலர் தான் இங்கு வருகின்றனர்.மைதானம் இருக்கின்ற நிலையை பார்த்தால் யாரிற்காவது வர மனம்வருமா? இங்கு தேங்கிக்கிடக்கின்ற நீரால் மைதானத்தின் அருகில் வசிக்கின்ற எம்போன்றவர்கள் கடும் நுளம்புத்தொல்லையை எதிர்நோக்க நேரிடுகின்றது சிறுவர் குழந்தைகள் செறிந்து வாழுகின்ற இப்பகுதியில் இப்படி மைதானம் இருப்பது எவ்வளவு ஆபத்தானது. கொழும்பு மாநகரசபைதான் இந்த மைதானத்தை பராமரிக்க வேண்டியவர்கள் ஆனால் அவர்கள் இதனை பொருட்படுத்தாமல் அலட்சியம்செய்துவருகின்றனர்'

வெறுமனே விளையாட்டு மைதானமாக மட்டுமன்றி அனைத்தினங்களையும் சேர்ந்த மக்களின் உறவுப்பாலமாகவும் விளங்கிய ரட்ணம் மைதானத்தின் நிலைமை பற்றி கொச்சிக்கடைப்பிரதேசத்தை சேர்ந்த எஸ்.ஜஸ்ரின் என்பவர் கருத்துவெளியிடுகையில்

 ' எமது ரட்ணம் மைதானம் இவ்வாறு காணப்படுவதால் நாங்க விளையாடுவதற்காக மோதரைக்கும் எலிஹவுஸ் பூங்காவிற்கும் தான் செல்லவேண்டியிருக்கின்றது .இதனால் போக்குவரத்து செலவுவேற ஏற்படுகின்றது.ரட்ணம் கழகம் ரினோன் கழகங்களைச் சேர்ந்தவர்கள் கூட இதுவிடயத்தில் நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை அப்படி நடவடிக்கை எடுத்திருந்தால் வருடக்கணக்காக மைதானம் இப்படிக் அசிங்கமாக கிடக்காது'
ரட்ணம் மைதானத்தின் வாசலுக்கு அருகிலுள்ள பௌத்த விகாரையைச் சேர்ந்த பிக்குவொருவர் கருத்துவெளியிடுகையில் ' ஐயோ நுளம்புத்தொல்லை தாங்க முடியவில்லை .கடந்த சில வாரங்களுக்கு முன்பாக இசை நிகழ்;ச்சியொன்றை நடத்துவதற்காக மைதானத்தின் ஒருபகுதியை சுத்திகரித்தனர் ஆனாலும் அனேமான இடங்களில் மீண்டும் கழிவுநீர் தேங்கி புற்களும் பெரிதாக வளர்ந்துவிட்டன .இதுவிடயத்தில் ஏன் முழுமையாக நடவடிக்கை எடுக்கின்றார்கள் இல்லை என்பது புரியாத புதிராக உள்ளது'
ரட்ணம் மைதானத்தின் எல்லையோரமாகத்தான் கீறின் லேனில் உள்ள முஸ்லிம் மகாவித்தியாலயத்தின் பல் அடுக்கு மாடிக்கட்டிடமும் அமைந்துள்ளது.

.இலங்கையில் டெங்கு நோய் காரணமாக இவ்வருடத்திற்குள்ளாக 25ஆயிரத்திற்கு அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டும் 200ற்கு மேற்பட்டவர்கள் மரணமுற்றிருக்கின்ற நிலையில் இந்தப்பாடசாலையில் கல்விகற்கின்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சுற்றியுள்ள பிரதேசத்தில்;வாழ்கின்ற பல்லாயிரக்கணக்கான மக்களின் நலன்கள் தொடர்பிலும் அக்கறை செலுத்தவேண்டியது கடமையல்லவா?

நடக்ககூடாதது நடந்த பின்னர் அதற்காக அழுது புலம்புவதைவிடுத்து வருமுன் நடவடிக்கை எடுப்பது அனைவருக்கும் நன்மையானது
எனவே ரட்ணம் மைதானத்தை புனரமைப்பதன் மூலம் அனைவரது மனங்களிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்த பிரதேசத்தைச் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் வாதிகள் வர்த்தகர்கள் நலன்விரும்பிகள் என அனைத்துதரப்பினரும் முன்வரவேண்டும் என்பதே கேசரி ஸ்போர்ட்ஸின் வேண்டுகோளாகும் 
--

உலகத்திற்கு சிலி நாடு தந்த படிப்பினைகள்

வறுமை பட்டினி இயற்கை அனர்த்தங்கள் யுத்தம் சுரண்டல் ஆக்கிரமிப்பு என உலகில் மனிதப் பெறுமதிகளை குறைக்கின்ற செய்திகள் அண்மைக்காலமாக அதிகரித்துவருகின்ற நிலையில் மனிதகுலம் மாபெரும் வளர்ச்சியைக்காண்பதற்கு அடித்தளமாக இருந்த மனிதாபிமானம் நம்பிக்கை பொறுப்புக்கூறும் தன்மை கடும் உழைப்பு விடாமுயற்சி புதிய தேடல் போன்ற மகத்தான குணாம்சங்களை எடுத்துக்காட்டிய நிகழ்வு கடந்தவாரத்தில் நிகழ்ந்திருந்தது

 சிலியின் தங்கம் மற்றும் தாமிர சுரங்கத்தில் 2000 அடிக்கு கீழான ஆழத்தில ;சிக்கியிருந்த 33 சுரங்கத்தொழிலாளர்கள் 69நாட்களுக்கு பின்னர் மீட்கப்பட்ட நிகழ்வு உலகமக்களின் பெரும் அவதானத்தை ஈர்த்திருந்தது

இந்தச்சுரங்கத்தொழிலாளர்களுக்கு என்ன நடந்தது எப்படி நடந்தது மீட்புபணிகள் எவ்வாறு முன்னெடுக்கப்பட்டன போன்ற விடயங்களெல்லாம் கடந்த ஒருவாரகாலத்திற்கும் மேலாக ஊடகங்களில் அதிக அதிகமாக ஆராயப்பட்டு செய்திகள் வெளியாகியிருந்தன

மனித உயிரின் பெறுமதியை எவ்வாறு மதித்து செயற்படவேண்டும் என்பதற்கு இந்த மீ;ட்புச்சம்பவம் எடுத்த்துக்காட்டாக அமைந்ததுடன் இவ்வாறான அனர்த்தங்களின் போது விபத்தில் சிக்கிக்கொண்டவர்கள் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் அதற்கு தலைமைத்துவம் கொடுப்பவர்கள் எங்கனம் செயற்படவேண்டும் என்பதற்கும் இது உதாரணமாகியது

பொருளாதாரத்தில் தமது நாடு வளர்ச்சியடையவேண்டும் என்பதற்காக மனித உயிர்களைப்பற்றிப்பற்றிய பொறுப்பின்றி செயற்படுகின்ற நாட்டுத்தலைவர்களுக்கு இந்த சம்பவம் சிறந்த பாடமாக அமைந்திருக்கின்றது

சிலி நாட்டின் தற்போதைய ஜனாதிபதி செபஸ்டியன் பினேரா பெருங்கோடிஸ்வரராக இருந்தபோதிலும் அவர் தனது நாட்டுமக்களின் உயிரைக்காப்பாற்றுவதில் வெளிப்படுத்திய தலைமைத்துவம் போற்றத்தக்கது

வெறுமனே 33பேர்தானே என்று அந்த கோடீஸ்வரர் உல்லாசத்தில் மூழ்கியிருக்கவில்லை மாறாக சம்பவ இடத்திற்கே நேரில் சென்று மீட்புப்பணிகளை பார்வையிட்டும் தேவையான நேரத்தில் உத்தரவுகளை வழங்கியும் தனது பொறுப்பை செவ்வனே செய்திருந்தார்
அவரைத்தவிர சுரங்கத்தில் சிக்கிக்கொண்டவர்கள் நெருக்கடி நிலையின் போது நடந்துகொண்ட பாங்கு அதிலும் சுரங்கத்தில் இருந்தவர்களுக்கு தலைமைதாங்கிய லூயிஸ் உருஸா செயற்பட்ட பாங்கும் தற்போது பெரும் அவதானத்தை ஈர்த்துள்ளன .

உலகமே அவர்கள் இறந்திருக்கக்கூடும் என எண்ணியிருந்த நம்பிக்கையற்ற தருணத்தில் அதளபாதாளத்தில் இருந்து கொண்டு உயர் ஒழுக்க விழுமியத்தை பேணிய சுரங்கத்தொழிலாளர்கள் சுயநலமாக செயற்படாமல் தம்வசம் இருந்த உணவுப்பொருட்கள் போன்றவற்றை மிகச் சிக்கனமாக புத்திசாதுரியத்துடன் பாவித்து உதவிகிட்டும் வரையில் தமது உயிரைத்தக்கவைத்துக்கொண்டமை இங்கே சுட்டிக்காட்டத்தக்கது

சுரங்கத்தில் இருந்தவர்களுக்கு தலைமைதாங்கிய லூயிஸ் உருஸாவின் வழிகாட்டலில் அவர்கள் உணவையும் பானத்தையும் சிறுசிறு பருக்கையாக அதாவது அருமருந்தாக பயன்படுத்தியிருக்கின்றனர்

இருப்பவற்றை ஒரே நேரத்தில் தின்றுகுடித்துவிட்டு நாளைக்கு என்ன செய்வோம் என்று திண்டாடும் மக்களுக்கும் இது பாடமாகும்
அதிலும் பார்க்க சிறந்த பாடம் விபத்து அனர்த்தம் நேரும் தருணங்களில் வெளி உதவிகள் வந்து சேரும் வரையில் எமது சுயபுத்தியைப் பாவித்து உதவிகளை பெறத்தக்கவாறு எமது உயிரை பாதுகாத்துவைத்திருப்பது எங்கனம் என்பதாகவே இருந்தது

 மீட்கப்பட்டபின்னர் இந்த சுர்ங்கத்தொழிலாளர்களுக்கு உலக நாடுகளில் இருந்து சுற்றுலா அழைப்புக்களும் பரிசுப்பொருட்களும் புகழாரங்களும் குவிந்துகொண்டிருக்க அவர்கள் அனைத்திலும் மேலாக ஒன்றைப்பற்றி சிந்தித்துவருகின்றார்கள் என்பதே தற்போது பிந்திய செய்தியாக கிடைத்திருக்கின்றது

ஆம் சுரங்கத்தில் இருந்து மீட்கப்பட்டவர்கள் அனைவரும் இணைந்து சுரங்கப்பாதுகாப்பு குறித்த நிறுவனமொன்றை அமைத்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளார் என்ற செய்தியே அதுவாக இருக்கின்றது

ஆகமொத்தத்தில் சிலி சுரங்த்தொழிலாளர்கள் அதளபாதாளத்தில் இருந்து மீட்கப்பட்டது நம்பிக்கையற்ற நிலையில் இருள் சூழ்ந்த பொழுதுகளில் நம்பிக்கை கீற்றாகவும் புதிய வெளிச்சமாகவும் அமைந்திருக்கின்றதென்றால் மிகையல்ல. குறிப்பாக இவ்வாண்டு முற்பகுதியில் இடம் பெற்ற கடும் பூகம்பத்தால் சின்னாபின்னமாகியிருந்த சிலி மக்களின் மன உணர்வுகளுக்கு பெரும் உத்வேகத்தையும் மகிழ்ச்சியையும் இந்த சம்பவம் வழங்கியிருக்கின்றது

சுpலி நாட்டு சம்பவம் மனிதாபிமானம் நம்பிக்கை பொறுப்புக்கூறும்தன்மை விடாமுயற்சி கடும் உழைப்பு புதிய தேடல் ஆகிய மனித குணாம்சங்களின் எடுத்துக்காட்டாக விளங்கிநின்றது


Thursday, October 14, 2010

INTERVIEW WITH NORTHERN PROVINCE GOVERNOR

வடக்கில் ஏற்பட்டு வருகின்ற முன்னேற்றங்களை இன்னமும் சில மாதகாலத்தில் நன்குணரமுடியும்
                          வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி ஏ சந்திரசிறி


நேர்காணல்: அருண் ஆரோக்கியநாதர்


வடக்கு தெற்கு மக்கள் ஒன்றுபடவேண்டும் அனைவரும் இணைந்து அபிவிருத்திக்காக உழைக்க தொடங்கவேண்டும் என வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி ஏ சந்திரசிறி தெரிவிக்கின்றார்.


அரசியல் பாதுகாப்பு தொடர்பான விடயங்களைத்தவிர ஏனைய விடயங்கள் குறித்து கேள்விகளை தொடுங்கள் என்ற ஆளுநரின் முன்நிபந்தனையைத் தொடர்ந்து நாம் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்

கேள்வி: உயர்பாதுகாப்பு வலயத்தில் இருந்து வெளியேறிய மக்களின் மீள் குடியேற்றம மற்றும் அவர்களது காணிகள் விடயத்தில் எத்தகைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன?

பதில்:பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் செப்டம்பர் 14ம்திகதிமுதல் ஆரம்பமாகியதாக எனக்கு தெரியத்தரப்பட்டது வடமராட்சி கிழக்கு பகுதியில் பாதுகாப்பு படையினர் மக்களை குடியேற அனுமதித்துள்ளதால் அங்கு 800 குடும்பங்கள் சென்று மீளக்குடியேறியுள்ளன.


 இதுமட்டுமன்றி பாதுகாப்பு படையினர் அந்தப்பகுதியை சிறப்பான முறையில் துப்பரவுசெய்துள்ளதுடன் மேலும் பல வேலைகளையும் ஆற்றியுள்ளனர் கூட்டுறவு நிலையவசதிகள் பாடசாலை வசதிகள் தபாலக வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்துள்ளதுடன் அந்தப்பகுதியிலுள்ள அனைத்து கிணறுகளையும் சுத்திகரித்துக்கொடுத்துள்ளனர்.


 அரசாங்கத்தரப்பில் அவர்கள் மீளச் சென்று குடியேறுவதற்கு அவசியமான அடிப்படை வசதிகளை நாமும் செய்துகொடுத்துள்ளோம் கடைசியாக இடம்பெற்ற யாழ்மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தின் போது தெல்லிப்பழை பகுதியிலும் சில இடங்களில் மீளக்குடியேற அனுமதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.


 தனங்கிளப்பு பகுதியில் உயர்பாதுகாப்பு வலயத்தில் இருந்து 2000 ஏக்கர் காணி பயிர்ச்செய்கைக்காக ஆறுமாதங்களுக்கு முன்னர் படையினரால் மக்களிடம் திருப்பியொப்படைக்கப்பட்டது அந்த 2000ம் ஏக்கரிலும் பயிர்ச்செய்கைபண்ணப்பட்டுள்ளது இன்னும் ஆயிரம் ஏக்கர்கள் பயிர்ச்செய்கைக்காக கையளிக்கப்படவுள்ளது இது பற்றி கலந்துரையாடல்கள் இடம்பெற்றுவருகின்றன இந்தவகையில் முன்னேற்றங்கள் விரைவாக ஏற்பட்டுவருகின்றன மாற்றங்கள் துரிதமாக இடம்பெறுவதையும் அனேக முற்னேற்றங்கள் இடம்பெறுவதையும் இன்னமும் சில மாதகாலத்தில் உணர்வீர்கள்


கேள்வி : கண்ணிவெடி அகற்றும் பணிகளின் தற்போதைய நிலை எவ்வாறு காணப்படுகின்றது ?

பதில்:தற்போது மடு முகமாலை புதுமத்தளான் புதுக்குடியிருப்பு பச்சிலைப்பள்ளி நாகர்கோவில் தெற்கு ஆகியபகுதிகளில் கண்ணிவெடியகற்றும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன .யாழில் சிறுசிறுபகுதிகளில் கண்ணிவெடியகற்றல் நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டியுள்ளது;


பாதுகாப்பு படையினருடன் மேலும் ஆறு நிறுவனங்களும் இந்தப்பணியில்ஈடுபட்டுள்ளன. புதுமாத்தளான் புதுக்குடியிருப்பு பகுதியில் கண்ணிவெடிகள் அகற்றிமுடிப்பதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்பதைக்கூற முடியாது புதுமாத்தளான் புதுக்குடியிருப்பு முகமாலை பகுதிகளில் விடுதலைப்புலிகளின் முன்னரங்குகள் காணப்பட்டமையால் அங்கு பெருவாரியான கண்ணிவெடிகள் புதைத்துவைக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை அகற்றுவற்கு நீண்டகாலங்கள் தேவைப்படும் ஆனாலும் காலவரையறை கூறமுடியாது



கேள்வி: கிளிநொச்சி கச்சேரி வளாகத்தில்எழாயிரத்திற்கு அதிகமான மோட்டார் சைக்கிள்களும் 14ஆயிரத்திற்கு மேற்பட்ட துவிச்சக்கர வண்டிகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று அண்மையில் செய்திவெளியிட்டிருந்தது .இவை தொடர்பில் அரசாங்கம் என்ன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது?

பதில்:யுத்த காலத்தின் போது மக்களால் புதுமத்தளான் பகுதியில் கைவிடப்பட்ட வாகனங்களை வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் பல மில்லியன் ருபாவை செலவிட்டு நாம் கிளிநொச்சிக்கு கொண்டுவந்தோம் ஊடகங்களில் குறிப்பிடுவது போன்று அங்கு ஆயிரக்கணக்கான மோட்டார் சைக்கிள்கள் காணப்படவில்லை மாறாக400 -600வரையான மோட்டார் சைக்கிள்கள் உள்ளன.


 இதனைத்தவிர 14ஆயிரம் துவிச்சக்கர வண்டிகளும். ட்ரக்கடர்கள் அடங்கலாக 30 கனரக வாகனங்களும் உள்ளன .இவற்றில் 20வீதமானவற்றை நாம் அடையாளங்கண்டுள்ளோம் அடையாளம் தொடர்பிலும் நாம் மிகக்கவனமாக இருக்கவேண்டும் அனுமதிப்பத்திரம் மற்றும ஆவணங்கள் இல்லாத நிலையில் அரசாங்கம் எதையும் எடுத்தஎடுப்பில் யாருக்கும் கொடுத்துவிடமுடியாது அரசாங்கத்தின் நடைமுறையின் கீழ் யார்யார் தமது ஆவணங்களை சமர்பிக்கின்றார்களோ அதனை திருப்பித்தரமுடியும். பொலிஸ் நிலையத்திலும் அரசாங்க அதிபர் அலுவலகத்திலும் பதிவுசெய்த பின்னர் இந்த வாகனங்கள் இவர்களுக்கு உரியது என உறுதிசெய்தால் அவர்களுக்குரியதனைத்தும் வழங்கப்படும். சைக்கிள்களை நாம் மக்களுக்கு வழங்க தொடங்கியுள்ளோம் நல்ல நிலையில் இருந்த சைக்கிள்க்ள அனைத்தும் ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டன ஏற்கனவே 7000 அதிகமான துவிச்சக்கர வண்டிகளை நாம் விநியோகித்துள்ளோம் ஏனையவற்றை ஒரு நிறுவனமொன்று இலவசமாக திருத்தவுள்ளது அதற்கு பின்னர் நாம் இலவசமாக அந்த சைக்கிள்களை கிளிநொச்சி முல்லைத்தீவு மக்களுக்கு வழங்கவுள்ளோம் இதுதான் மாகாண மட்டத்தில் எமது திட்டமாகும்
  .

கேள்வி: யுத்தகாலத்தின் போது பலர் தமது ஆவணங்களை இழந்திருக்கும் சாத்தியம் உள்ளநிலையில் அத்தகைய மக்கள் எவ்வாறு தமது வாகனங்களை திருப்பிப்பெறமுடியும் ?

பதில்:அவர்களுக்கு வழிமுறையுள்ளது அவர்கள் பெறவேண்டுமானால் அவர்கள் கொழும்பிற்கு வரமுடியும் வந்து மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு சென்று அவர்களுடைய ஆவணங்களை இனங்காண முடியும் அவர்களிடம் நிச்சயமாக பிரதிகள் இருக்கும் என நினைக்கின்றேன் அவர்களது பெயர்கள் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் உள்ளதா என எப்போதுமே பார்வையிடமுடியும்.


அங்கு தமது கோப்பை(FILE) இனங்ண்டு அதில் பிரதிஎடுத்துக்கொண்டுவந்து அதனை கிளிநொச்சியிலுள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கலாம் அது ஒரிஜினல் ஆவணமாக இருப்பதால் அதனை அரசாங்க அதிபரும் பொலிஸாரும் ஏற்றுக்கொள்வர்.


இதனைத்தவிர கிளிநொசசியில் வாகனங்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ள  வளாகத்தில் அலுவலகம் ஏற்கனவே உள்ளது யாரேனும் தமது மோட்டார் சைக்கிள்களை அடையாளம் காணமுடிந்தால் அவர்கள் அந்த அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளுடன் கலந்தாராய முடியும் அங்கிருந்து ஆவணமொன்றை பெற்று கொழும்பிற்கு வரமுடியும் அவர்கள் தமது வாகனத்தை  பதிவுசெய்திருந்தால் அனுமதிப்பத்திரங்களுக்கு கொடுப்பனவுகளைச்செய்திருந்தால் நிச்சயமாக அந்த ஆவணம் கொழும்பில் இருக்கும் அவர்களிடம் அடையாள அட்டை அன்றேல் கடவுச்சீட்டு போன்ற ஆவணங்கள் இருக்கும் அதனை வைத்துக்கூட ஆவணங்களை பெற்றுக்கொள்ளமுடியும்


கேள்வி: யுத்தம் நிறைவடைந்து சுமார் ஒன்றரைவருடங்கள் கடந்துள்ள நிலையிலும் வெளிநாட்டு முதலீடுகள் எதிர்பார்த்தளவு வரவில்லை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. புலம்பெயர்ந்த மக்களின் முதலீடுகள் போன்ற விடயங்களிலும் இதே நிலை காணப்படுகின்றதே நம்பிக்கைதரும் நடவடிக்கைகள் இதுவிடயத்தில் இடம்பெறுகின்றதா?

பதில் :வெளிநாட்டு நேரடி முதலீடுகளைப் பொறுத்தவரையில்   வடமாகாணத்தை தனியாக எடுத்து நோக்கவேண்டும் ஏனென்றால் யுத்தம் நிறைபெற்ற பின்னர் வந்த முதலாவது வருடகாலப்பகுதி முற்றுமுழுதாக மீளக்குடியமர்த்தல் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக அர்ப்பணிக்கப்பட்டது அபிவிருத்தி துறையில் உட்கட்டமைப்பு அபிருத்தியுடன் நீர்ப்பான பகுதிக்கு முன்னுரிமையளிக்கப்பட்டது


இவ்வருடத்தில் மேலதீகமாக 80 ஆயிரம் ஏக்கர் விவசாயநிலத்தில் பயிர்ச்செய்கை பண்ணப்பட்டுள்ளது இவைதான் எமது தற்போதை முன்னுரிமைகளாகும் வெளிநாட்டு நேரடி முதலீடுகளைப்பொறுத்தவரையில் அவை உரிய காலத்தில் வடமாகாணத்திற்கு வந்துசேரும் நாம் தற்போது முழுமையான ஆய்வை மேற்கொண்டுவருகின்றோம் ஏற்கனவே முதலீட்டு வாய்ப்புக்களுக்காக ஐந்து மாவட்டங்களிலும் ஐந்து பிரதேசங்களை அடையாளங்கண்டுள்ளோம் .


கேள்வி: வடமாகாணத்தின் ஐந்து மாவட்டத்திலும் கைத்தொழில் வலயங்களை இனங்கண்டுள்ளதாக கூறினீர்கள். இதுபற்றி சற்றுவிரிவாக கூறுங்கள் ?

பதில்:மன்னார் தீவுக்கு அருகாமையில் கைத்தொழில் வலயமொன்று அமையவுள்ளது கடந்தகாலத்தில் கூட கைத்தொழில்கள் அந்த வலயத்தில் காணப்பட்டன .அந்த வலயம் 40 ஏக்கர்களைக் கொண்டது அதை நாம் ஏற்கனவே அடையாளங்கண்டுள்ளோம் .வவுனியாவிற்கு வடக்கே ஒமந்தைப் பிரதேதசத்தில் கைத்தொழில் துறை அபிவிருத்திக்காக நாம் 45 ஏக்கர் பிரதேசத்தை தெரிவுசெய்துள்ளோம் .அது தயாராகவுள்ளது கிளிநொச்சியைப் பொறுத்தவரையில் நாம் ஏற்கனவே 100 ஏக்கர் நிலப்பரப்பை கைத்தொழில் அபிவிருத்திக்காக தெரிவுசெய்துள்ளோம் .கிளிநொச்சி நகரில் இருந்து 3கிலோமீற்றர்கள் தூரத்தில் இது அமைந்துள்ளது. முல்லைத்தீவு பிரதேசத்திலும் கைத்தொழில் அபிவிருத்திக்காக நாம் நிலப்பரப்பை இனங்கண்டுள்ளோம் அது தர்மபுரம் பகுதிக்கு அண்மையாகவுள்ளது.


  யாழ்ப்பாணத்தில் அச்சுவேலி கைத்தொழில் வலயம் உள்ளது அங்கு சுமார் 25 கைத்தொழில் துறைகள் வரவுள்ளன. கைத்தொழில் வலயங்களாக இனங்காணப்பட்டுள்ள பிரதேசத்திற்கு தேவையான நீர்வசதி மின்சார வசதியெல்லாவற்றையும் நாம் வழங்குவோம்


இந்த கைத்தொழில் வலயங்களில் முதலிடுவதற்கு யாரேனும் ஆர்வமாக இருப்பின் அவர்கள் பணத்துடன் வருவார்களாக இருப்பின் பணத்தை செலவிட தயாராக இருப்பின் அவர்கள் வந்து எம்முடன் பேசவேண்டும் அப்போது அந்த கைத்தொழில் வலயங்களில் வாய்ப்புக்களை வழங்குவோம் ஆனால் அவர்கள் உண்மையாக வரவேண்டும் இதனைச் செய்வதன் மூலமாக மாகாணம் அபிவிருத்தியடைவதுடன் அதன் நன்மைகள் உள்ளுர் பொருளாதாரத்தை சென்றடையவேண்டும் என்பதை உறுதிப்படுத்தவேண்டும்.


கேள்வி: யாழ் மாவட்ட முன்னாள் படைத்தளபதி என்ற வகையில் யாழ்மாவட்டத்தின் தற்போதை பாதுகாப்பு நிலை தொடர்பில் உங்கள் நிலைப்பாடு என்ன?

பதில்: வடமாகாணத்தின் ஆளுநர் என்ற வகையில் பாதுகாப்பு அதிகாரிகள் தமது கடமையை மேற்கொள்ளும் பாங்கையிட்டு நாம் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன். அவர்கள் கிரமமான முறையில் அதனை முன்னெடுத்துவருகின்றனர்.பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பக்கத்தைமட்டுமன்றி மக்களுக்கும் ஒத்துழைப்பு நல்கிவருகின்றனர் .


வீடுகள் புனரமைப்பு பணி தற்காலிக குடியிருப்பு நிர்மாணப்பணி கடற்தொழில் படகு திருத்தியமைக்கும் பணி மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் பணிகளிலும் அதிகமான ஒத்துழைப்பை நல்கிவருகின்றனர். மக்களின் மகிழ்ச்சியான எதிர்காலத்திற்காக அவர்கள் வழங்கிவரும் ஒத்துழைப்பையிட்டு முன்னாள்இராணுவ அதிகாரி என்றவகையில் மிக்க மகிழ்சியடைகின்றேன்.

கேள்வி: யுத்தம் நிறைவுற்ற பின்னர் வடமாகாணத்தை நோக்கி செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்திருக்கின்றது ..இது எதைக்காண்பிக்கின்றது?

 பதில்: ஏ9 வீதி திறந்த காலப்பகுதியில் இருந்து இரண்டு மூன்று மில்லியனுக்கும் அதிகமான மக்கள் அங்கு சென்றிருப்பார்கள் என்பது எனக்கு நிச்சயமாகும் அதிகமான மக்கள் அங்கு செல்கின்றனர் குறிப்பாக வார இறுதிநாட்களில் 40ஆயிரத்திற்கு அதிகமானவர்கள் அங்கு காணப்படுகின்றனர் அவர்கள் நயினாதீவு நல்லூர்க்கோவில் கீரிமலை ஏனைய பகுதிகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் யாழ் கோட்டை ஓல்ட்பார்க் அனைத்துபகுதிகளுக்கும் சென்று யாழ்மக்களுடன் கலந்து அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடுகின்றனர் .


அங்கு உன்னதமான நிலை காணப்படுகின்றது இந்த போக்கு தொடரவேண்டும் என நான் கருதுகின்றேன் வடக்கு தெற்கு மக்கள் ஒன்றுபடவேண்டும் அனைவரும் இணைந்து அபிவிருத்திக்காக உழைக்க தொடங்கவேண்டும் தற்போது உள்ளூர் சுற்றுலாத்துறை அபிவிருத்திகண்டுவருகின்றது ஏற்கனவே புலம்பெயர்ந்தமக்கள் வரத்தொடங்கியுள்ளனர் .கடந்த நல்லூர் திருவிழாவின் போது 75ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் உலகின் பல்வேறுபகுதிகளில் இருந்தும் வருகைதந்திருந்தனர் திருவிழாவின் இறுதிநாளில் நானும் அங்கிருந்து பெருந்திரளான மக்களின் பிரசன்னத்தை கண்ணுற்றேன் மக்கள் வரத்தொடங்கியுள்ளனர் சேர்ந்து செயற்படத்தொடங்கியுளளனர் திட்டங்களை இணைத்து செயற்படுத்திவருகின்றோம்

கேள்வி:அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட வடக்கின் வசந்தம் திட்டத்தின் தற்போதைய நிலை என்ன?

பதில் : வடக்கின் வசந்தம் நிகழ்ச்சித்திட்டமானது கடந்தவருடம் ஜுலை மாதத்தில் ஆரம்பமாகியிருந்தது இதுவரையில் ஒருவருடமும் இரண்டு மாதகாலமும் சென்றுள்ளநிலையில் பல்வேறு துறைகளிலும் நாம் பெருமளவிலான பணிகளை ஆற்றியுள்ளோம் குறிப்பாக மீள்குடியேற்றம்  உட்கட்டமைப்பு அபிருத்தி வாழ்வாதார நடவடிக்கைகள்  சுற்றுலா மற்றும் பொருளாதார துறைகளிலும் பல்வேறு பணிகளைச் செய்துமுடித்துள்ளோம் .இந்த ஒருவருட காலத்திற்குள்ளாக நாம் செய்துமுடித்துள்ளவை அளப்பரியதாகும் இது அரசாங்கத்தின் சிறப்பான திட்டமிடல் மற்றும் மக்கள் உட்பட அனைத்து தரப்பினரின் பங்களிப்பின் மூலமாகவே இது  சாத்தியமாகியுள்ளது



கேள்வி: வடமாகாண மக்கள் கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பவர்கள் என்றவகையில் கல்வித்துறை தொடர்பில் எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளீர்கள் ?

பதில்:செட்டி குளத்தில் தற்போது சுமார் 25000 பேரே உள்ளனர் அதில் ஏழாயிரம் வரையிலான சிறுவர்கள் மாத்திரமே உள்ளனர்.சிறுவர்கள் திரும்பிச்சென்றுள்ள அனைத்துப்பகுதிகளிலும் நாம் பாடசாலைகளை ஆரம்பித்துள்ளோம் வடமாகாணம் முழுவதிலும் உள்ள 1110 பாடசாலைகளில் 79 பாடசாலைகளைத் தவிர ஏனைய பாடசாலைகள் அனைத்தும் இயங்குகின்றன இந்த 79 பாடசாலைகளும் மீள்குடியேற்றம் இன்னமும் இடம்பெறாத பகுதிகளிலேயே காணப்படுகின்றன .


சிறுவர்கள் தம்தம் பகுதிகளுக்கு திரும்பிச்செல்லும் போது தற்காலிக கல்வி நிலையங்களை இருவாரகாலத்தில் நிறுவி அவர்கள் தமது கல்வியை உடனடியாக தொடர்வதற்கு நடவடிக்கை எடுக்கின்றோம் பாடாலைகள் சாதனங்கள் சீருடைகள் பாடப்புத்தங்கள் எல்லாம் வழங்கப்படுகின்றன ஆசிரியர்களைப் பொறுத்தவரையில் யுத்தகாலப்பகுதியில் வவுனியாவிற்கும் யாழ்ப்பாணத்திற்கும் சென்றவர்கள் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு போன்றபகுதிகளுக்கு திரும்பிவரவேண்டியுள்ளது அவர்களுக்கு அரசாங்கம் இலவசபோக்குவரத்துச்சேவையை வழங்கியுள்ளது அவர்களது தங்குமிடவிடயத்தில் இன்னமும் பிரச்சனை உள்ளது விரைவில் அந்தப்பிரச்சனைக்கும் தீர்வுகாணவுள்ளோம் .


ஆகக்குறைந்தது விரைவாக அவர்களுக்கு தற்காலிக தங்குமிடவசதிகளையாவது ஏற்படுத்திக்கொடுக்க முனைகின்றோம் அனைத்துவிடயங்களும் நூற்றுக்கு நூறு வீதம் நேர்த்தியாக இருக்கின்றதென நாம் கூறவரவில்லை மாறாக சிறுவர்களுக்கும் அவர்களது கல்விச் செயற்பாடுகளுக்கும் 80வீதமான வசதிகள் கிடைப்பதை நாம் உறுதிப்படுத்தியுள்ளோம்




PAKISTAN NEW TEST CRICKET CAPTAIN MISBAH UL HAQ

பாகிஸ்தான் அணிக்கு மீண்டும் புதிய தலைவர் நியமனமும் 
        அவ்வணி எதிர்நோக்குகின்ற சிக்கல்களும்

பாகிஸ்தான் டெஸ்ற் கிரிக்கட் அணியின் புதிய தலைவராக மிஸ்பா உல் ஹக் நியமிக்கப்பட்டுள்ளதாக கடந்தவாரத்தில் வெளியான தகவலைப்பார்த்த போது மீண்டும் புதிய தலைவரா என்ற ஆதங்கமே ஏற்பட்டது

கடந்த சில ஆண்டுகாலப்பகுதியில் ஏன் கடந்த சில மாதங்களுக்குள்ளாக பாகிஸ்தான் கிரிக்கட் அணிக்கு எத்தனை பேர் தலைவர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர் என்பதே வியப்பானது ஏன் இவ்வாறு அடிக்கடி புதியதலைவர்கள் நியமிக்கப்படுகின்றனர் என்பது அதனைவிடவும் வியப்பானது

2010ம் ஆண்டில் பாகிஸ்தான் டெஸ்ற் கிரிக்கட் அணிக்கு தலைவராக நியமிக்கப்பட்ட 4வது வீரர் மிஸ்பா உல் ஹக் என்பது இங்கே சுட்டிக்காட்டத்தக்கது இதற்கு முன்பாக இவ்வாண்டில் மொஹம்மட் யூசுப் ஷஹீட் அப்ரிடி மற்றும் சல்மான் பட் ஆகியோர் தலைவர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர்.

சல்மான் பட் கிரிக்கட் சூதாட்ட சர்ச்சையில் சிக்கிக் கொண்டுள்ள நிலையிலேயே அடுத்த மாதம் தென் ஆபிரிக்க அணிக்காக அபுதாபியில் நடைபெறவுள்ள இரண்டு டெஸ்ற் போட்டிகள் கொண்ட தொடருக்கான பாகிஸ்தான் அணிக்கு சல்மான் பட் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் கிரிக்கட் அணி அந்நாட்டு அரசியலைப் போன்றே ஸ்திரமற்ற நிலையில் உள்ளதனையே அண்மைக்கால செயற்பாடுகள் காண்பித்துநிற்கின்றன.

அணியின் வீரர்களை எடுத்த கதியில் நீக்குவது பின்னர் சேர்த்துக்கொள்வது என நீண்டகால திட்டமிடலற்ற தீர்மானங்கள் பாகிஸ்தான் கிரிக்கட் அணியில் காணப்படுகின்றன .

இதன் காரணமாக பிறப்பிலேயே அதிக திறமை கொண்ட பல வீரர்களை அடுக்கடுக்காக சர்வதேச களத்திற்கு அனுப்பியும் ஒரு சிலரைத்தவிர பெரும்பாலானவர்களிடமிருந்து உச்சப்பயன்பாட்டை பெறமுடியாத துர்;ப்பாக்கி நிலைக்கு பாகிஸ்தான் தள்ளப்பட்டுள்ளது.

18வது இளம் வீரர் மொஹம்மட் ஆமிரின் கிரிக்கட் வாழ்வு இதற்கு நல்ல உதாரணம் கடந்தாண்டு ஜுலை மாதம் டெஸ்ற் பிரவேசத்தை மேற்கொண்ட ஆமிர் இவ்வாண்டு ஒகஸ்ற் மாதத்துடன் தனது டெஸ்ற் வாழ்வை இடைநிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

 தாம் விளையாடிய 14 டெஸ்ற் போட்டிகளிலேயே 51விக்கட்டுக்களை வீழ்த்தி அபாரத் திறமை வெளிப்படுத்திய ஆமிர்; கிரிக்கட் சூதாட்ட சர்ச்சையில் சிக்காமல் இருந்திருந்தால் நிச்சயமாக அவர் தான் இவ்வாண்டின் வளர்ந்துவரும் வீரருக்கான விருதை தட்டிச் சென்றிருப்பார் என்பது மறுக்க முடியாத உண்மையாகும் .ஏனெனில் இவ்வாண்டு அந்த விருதை வென்ற இங்கிலாந்து வீரர் ஸ்டீவன் பின் 32 விக்கட்டுக்களை மாத்திரமே வீழ்த்தியிருந்ததை சுட்டிக்காட்டத்தக்கது.

18வயதில் அதுவும் கிரிக்கட் அரங்கில் பிரவேசித்து ஒருவருடம் கூட பூர்த்தியாவதற்கு முன்னர் ஆமிரின் எதிர்காலம் கேள்விக்குறியாகி நிற்பதற்கு பாகிஸ்தான் கிரிக்கட் நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும் என்ற கருத்துக்களை நஷார் ஹுஸைன் போன்ற கிரிக்கட் பிரபலங்கள் அண்மையில் தெரிவித்திருந்தனர்.

உரிய முறையில் திறமை காண்பித்தால் அணியில் நீண்டகாலம் விளையாடமுடியும் அதற்கு இன்னுமின்னும் உழைக்கவேண்டும் திறமைகளை வளர்த்துக்கொள்ளவேண்டும் என்ற எண்ணமெல்லாம் ஸ்திரமான அணியில் உள்ளவர்களுக்குதான் ஏற்படும் மாறாக அணியில் இருப்பதே நிச்சயமில்லை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் காரணங்கள் இன்றி நீக்கப்படலாம் என்ற நிலை காணப்பட்டால் உண்மையிலேயே நல்ல எண்ணங்கொண்ட வீரர்கள் கூட அவர்களது எதிர்;காலம் குறித்த நிச்சயமற்ற நிலைகாரணமாக கிரிக்கட் சூதாட்டம் போன்ற விரும்பத்தகாத செயற்பாடுகளை நோக்கி; இழுபட்டுச்செல்கின்ற நிலைமையே ஏற்படும் என்பதை இங்கே குறிப்பிட்டாகவேண்டும்

1990ஆம் ஆண்டிற்கு பின்னர் வந்த காலப்பகுதியில் அவுஸ்திரேலிய டெஸ்ற் கிரிக்கட் அணிக்கு அலன் போர்டர் மார்க் டெய்லர் ஸ்டீவ் வோ அடம் கில்கிறிஸ்ட் மற்றும் ரிக்கி பொன்டிங் ஆகிய ஐந்துபேர் மாத்திரமே தலைமை வகித்துள்ளனர். இது அந்த அணியின் ஸ்திர நிலைக்கு சான்றாக அமைந்ததுடன் இந்தக்காலப்பகுதியில் அவுஸ்திரேலிய அணி டெஸ்ற் கிரிக்கட் ஜாம்பவான்களாக விரல் விட்டு எண்ணக்கூடிய தொடர்களைத் தவிர ஏனையவற்றில் பெரு வெற்றிகளை ஈட்டியிருந்தது


மறுமுனையில் பாகிஸ்தான் அணி 1990ம் ஆண்டிற்கு பின்னர் வந்த காலப்பகுதியில் இம்ரான் கான் வஸீம் அக்ரம் வக்கார் யூனுஸ் சலீம் மலிக் ரமீஸ் ராஜா சயீட் அன்வர் ஆமீர் சொகைல் ரஸீட் லத்தீவ் மொயின் கான் இன்ஸமாம் உல் ஹக் மொஹமட் யூஸுவ் யூனிஸ்கான் ஷொகைப் மலிக் ஷாஹிட் அப்ரிடி சல்மான் பட் தற்போது மிஸ்பா உல் ஹக் என 16பேர் அணிக்கு தலைமை வகித்துள்ளனர் இந்தக்காலப்பகுதியில் பாகிஸ்தான் அணி பெற்ற டெஸ்ற் தொடர் வெற்றிகளை விரல் விட்டெண்ணிவிடலாம் தோல்விகளே அதிகமாக காணப்பட்டது


 அணியில் ஸ்திரமற்ற நிலைமை அவ்வணிவீரர்களை சூதாட்டம் உட்பட பல்வேறு சிக்கல்களில் தள்ளிவிட்டுள்ளதையே நிதர்சனம் உணர்த்திநிற்கின்றது


Wednesday, October 13, 2010

KUMAR SANGAKARA ON WORLD CUP

2011ம் ஆண்டு உலகக்கிண்ண போட்டியில் சிறப்பான சாதனைகளை நிகழ்த்தமுடியும்

-     இலங்கை அணித்தலைவர் குமார சங்ககார நம்பிக்கை





அடுத்தவருடம் இடம்பெறவுள்ள உலகக்கிண்ண போட்டிகளின் போது சிறப்பான சாதனைகளை நிகழ்த்த முடியும் என இலங்கை அணித்தலைவர் குமார் சங்ககார நம்பிக்கை தெரிவித்தார்

கடந்த சனிக்கிழமை கொழும்பில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் கேசரி ஸ்போர்ட்ஸ் சார்பாக எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு கருத்துவெளியிட்டார்

உலகக்கிண்ண போட்டிகளுக்கான தயார்படுத்தல்கள் எவ்வாறு காணப்படுகின்றன என கேசரி ஸ்போர்ட்ஸ் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சங்ககார

'நாம் மிகவும் நல்ல முறையில் தயாராகிவருகின்றோம் .இன்னமும் ஒருவாரகாலப்பகுதியில் அவுஸ்திரேலியாவிற்கு பயணமாகவுள்ளோம் அந்தவகையில்.சிறிய அடிகளை சரியாக எடுத்துவைப்பதன் மூலமாக பெரிதாக சாதிப்பதற்கு ஒரு வழிமுறையை பின்பற்றவேண்டியுள்ளது எமது அவதானம் அர்ப்பணிப்பு தக்கவைத்துக்கொண்டு பயிற்சிகளில் ஈடுபடுவதன் மூலமாக இம்முறை எம்மால் சிறப்பானசாதனையை நிகழ்த்தக்கூடுமாக இருக்கும் என நம்புகின்றேன் '

உலகக்கிண்ண போட்டிகளுக்கு முன்பாக தாயகத்திற்கு வெளியே இலங்கை அணி மேற்கொள்ளும் முக்கிய கிரிக்கட் சுற்றுப்பயணமாக அவுஸ்திரேலிய சுற்றுப்பயணம் அமைந்துள்ளது இந்த சுற்றுப்பயணத்தின்போது மூன்று பயிற்சிப்போட்டிகள் அடங்கலாக ஒரு டுவன்டி டுவன்டி சர்வதேசப் போட்டியிலும் முன்று ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும் இலங்கை அணி விளையாடவுள்ளது

இந்த சுற்றுப்பயணத்தின் அட்டவணை பின்வருமாறு

                   பயிற்சி ஆட்டங்கள்

குயின்ஸ்லாந்து எதிர் இலங்கை (பிறிஸ்பேன்)- ஒக்டோபர் 22
நியுசவுத் வேல்ஸ் எதிர் இலங்கை (சிட்னி) – ஒக்டோபர் 24
நியுசவுத் வேல்ஸ் எதிர் இலங்கை (சிட்னி) –ஒக்டோபர் 26
         
சர்வதேச போட்டிகள்

டுவன்டி டுவன்டி சர்வதேச போட்டி
அவுஸ்திரேலியா எதிர் இலங்கை (பேர்த்)-ஒக்டோபர் 31

ஒருநாள் சர்வதேச போட்டிகள்

அவுஸ்திரேலியா எதிர் இலங்கை (மெல்பேர்ண்)-நவம்பர் 3
அவுஸ்திரேலியா எதிர் இலங்கை (சிட்னி) –நவம்பர் 5
அவுஸ்திரேலியா எதிர் இலங்கை ( பிறிஸ்பேன்)- நவம்பர் 7

இந்தப்போட்டிகள் அனைத்துமே பகலிரவுப்போட்டிகளாகவே நடைபெறவுள்ளன .

1996ம் ஆண்டு உலகக்கிண்ண போட்டிகளுக்கு முன்பாக அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் முக்கோணத்தொடர் போட்டிகளில் சம்பியன் ஆகியமையே இலங்கை அணிக்கு உலகக்கிண்ண சம்பியன்களாவதற்கு மிகவும் அவசியமாக தேவைப்பட்ட உந்துசக்தியையும் நம்பிக்கையையும் கொடுத்ததாக இலங்கை அணிவீரர்கள் பலர் கூறியதை கடந்தகாலத்தில் கேள்விப்பட்டிருக்கின்றோம்
அந்தவகையில் இம்முறை அவுஸ்திரேலிய சுற்றுப்பயணம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றது .இதில் சிறப்பாக ஆற்றல்களை வெளிப்படுத்துவது அணியின் நம்பிக்கைக்கு வலுச்சேர்க்கும் என குமார் சங்ககார தெரிவித்திருந்தார்

10வது ஒருநாள் சர்வதேச உலகக்கிண்ண போட்டிகள் அடுத்தாண்டு பெப்ரவரி 19ம்திகதி முதல் ஏப்ரல் இரண்டாம் திகதிவரை இந்தியா இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் கூட்டாக இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது