Thursday, October 21, 2010

PATHETIC CONDITION OF RATNAM PARK

சாக்கடையாகிப்போன '' சம்பியன்'' மைதானம்

''எப்படியிருந்த மைதானம் இப்படியாகிவிட்டதே'' ரட்ணம் மைதானத்தை இன்று பார்ப்பவர்கள் இந்த வார்த்தைகளை முணுமுணுத்துக்கொண்டு போவதை அவதானிக்க முடிகின்றது 


பூரணத்துவமிக்க மனித சமூகத்தை உருவாக்குவதில் விளையாட்டு உடற்பயிற்சி பொழுது போக்கு என்பனவும் இன்றியமையாதன . இதற்காகத் தான் ஒவ்வொரு பிரதேசத்திலும் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளின் மத்தியில் மைதானங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன
இந்தவகையில் கொழும்பு கொச்சிக்கடை ஜிந்துப்பிட்டி கொட்டாஞ்சேனை சென்றல் வீதி புதுக்கடை எனப் பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் குறிப்பாக இளைஞர்களால் பயன்படுத்தப்பட்டுவந்த ஜம்பட்டா வீதி ரட்ணம் மைதானத்தின் இன்றைய நிலையோ மிகவும் மோசமானதாக கவலைக்கிடமாக காட்சியளிக்கின்றது


இலங்கை கால்பந்தாட்ட அரங்கில் புகழ்பெற்ற கழகங்களான ரட்ணம் மற்றும் ரினோன் கழகங்களின் தாயக பயிற்சி மைதானமாகவும் திகழ்ந்த இந்த ரட்ணம் மைதானம் இனமதபேதமின்றி அனைத்து தரப்பு மக்களாலும் பயன்படுத்தப்பட்டு வந்ததென்பதுடன் இலங்கை தேசிய கால்பந்தாட்ட அணியைப் பிரதிநிதித்துவப்படுத்திய பல வீரர்களின் ஆரம்பத்திற்கு களமமைத்துக்கொடுத்திருந்தது

ஆனால் கடந்த சில வருடங்களாக கேட்பாரில்லாத நிலையில் மிகவும் பரிதாபகரமாக இந்த மைதானம் காணப்படுகின்றது
மைதானத்தில் காடுபற்றி புற்கள் அடர்த்தியாக வளர்ந்துள்ளதுமட்டு மன்றி கழிவுநீரும் தேங்கிக்காணப்படுகின்றது.

மைதானத்திற்கு அருகிலுள்ள ஒருசில தோட்டங்களைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோதமான நிலையில் வீடுகளை அமைப்பதற்காக கழிவுநீர் வாய்க்கால்களை அடைத்து அதனை மைதானத்திற்குள் திருப்பி விட்டுள்ளமையும் இந்த நிலைமைக்கு முக்கிய காரணம் என சுட்டிக்காட்டப்படுகின்றது

இதனைத்தவிர மழை பெய்யும் போது நீர்வழிந்தோட வழியின்றி மழைநீரும் தேங்கிநிற்பதுண்டெனக்குறிப்பிடும் மைதானத்திற்கு அருகில் வாழும் மக்கள் இதனால் டெங்கு நோய் பரவும் அபாயமும் அதிகமாக காணப்படுவதாக கவலைதெரிவிக்கின்றனர்.

மைதானத்தின் பரிதாபகரமான நிலைக்கு மத்தியிலும் வேறு தெரிவுகள் இல்லாத நிலையில் அங்கு பயிற்சிக்காக வந்திருந்த பிரதேசவாசியான கே.செல்வராஜ் என்பவரிடம் மைதானத்தின் நிலைகுறித்து வினவியபோது 


'நான் இந்த பிரதேசத்தை சேர்ந்தவன் இந்த மைதானத்தில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் விளையாடிய நாட்கள் இன்று வெறும் கனவாகிப்போய்விட்டது தற்போது ஒருசிலர் தான் இங்கு வருகின்றனர்.மைதானம் இருக்கின்ற நிலையை பார்த்தால் யாரிற்காவது வர மனம்வருமா? இங்கு தேங்கிக்கிடக்கின்ற நீரால் மைதானத்தின் அருகில் வசிக்கின்ற எம்போன்றவர்கள் கடும் நுளம்புத்தொல்லையை எதிர்நோக்க நேரிடுகின்றது சிறுவர் குழந்தைகள் செறிந்து வாழுகின்ற இப்பகுதியில் இப்படி மைதானம் இருப்பது எவ்வளவு ஆபத்தானது. கொழும்பு மாநகரசபைதான் இந்த மைதானத்தை பராமரிக்க வேண்டியவர்கள் ஆனால் அவர்கள் இதனை பொருட்படுத்தாமல் அலட்சியம்செய்துவருகின்றனர்'

வெறுமனே விளையாட்டு மைதானமாக மட்டுமன்றி அனைத்தினங்களையும் சேர்ந்த மக்களின் உறவுப்பாலமாகவும் விளங்கிய ரட்ணம் மைதானத்தின் நிலைமை பற்றி கொச்சிக்கடைப்பிரதேசத்தை சேர்ந்த எஸ்.ஜஸ்ரின் என்பவர் கருத்துவெளியிடுகையில்

 ' எமது ரட்ணம் மைதானம் இவ்வாறு காணப்படுவதால் நாங்க விளையாடுவதற்காக மோதரைக்கும் எலிஹவுஸ் பூங்காவிற்கும் தான் செல்லவேண்டியிருக்கின்றது .இதனால் போக்குவரத்து செலவுவேற ஏற்படுகின்றது.ரட்ணம் கழகம் ரினோன் கழகங்களைச் சேர்ந்தவர்கள் கூட இதுவிடயத்தில் நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை அப்படி நடவடிக்கை எடுத்திருந்தால் வருடக்கணக்காக மைதானம் இப்படிக் அசிங்கமாக கிடக்காது'
ரட்ணம் மைதானத்தின் வாசலுக்கு அருகிலுள்ள பௌத்த விகாரையைச் சேர்ந்த பிக்குவொருவர் கருத்துவெளியிடுகையில் ' ஐயோ நுளம்புத்தொல்லை தாங்க முடியவில்லை .கடந்த சில வாரங்களுக்கு முன்பாக இசை நிகழ்;ச்சியொன்றை நடத்துவதற்காக மைதானத்தின் ஒருபகுதியை சுத்திகரித்தனர் ஆனாலும் அனேமான இடங்களில் மீண்டும் கழிவுநீர் தேங்கி புற்களும் பெரிதாக வளர்ந்துவிட்டன .இதுவிடயத்தில் ஏன் முழுமையாக நடவடிக்கை எடுக்கின்றார்கள் இல்லை என்பது புரியாத புதிராக உள்ளது'
ரட்ணம் மைதானத்தின் எல்லையோரமாகத்தான் கீறின் லேனில் உள்ள முஸ்லிம் மகாவித்தியாலயத்தின் பல் அடுக்கு மாடிக்கட்டிடமும் அமைந்துள்ளது.

.இலங்கையில் டெங்கு நோய் காரணமாக இவ்வருடத்திற்குள்ளாக 25ஆயிரத்திற்கு அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டும் 200ற்கு மேற்பட்டவர்கள் மரணமுற்றிருக்கின்ற நிலையில் இந்தப்பாடசாலையில் கல்விகற்கின்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சுற்றியுள்ள பிரதேசத்தில்;வாழ்கின்ற பல்லாயிரக்கணக்கான மக்களின் நலன்கள் தொடர்பிலும் அக்கறை செலுத்தவேண்டியது கடமையல்லவா?

நடக்ககூடாதது நடந்த பின்னர் அதற்காக அழுது புலம்புவதைவிடுத்து வருமுன் நடவடிக்கை எடுப்பது அனைவருக்கும் நன்மையானது
எனவே ரட்ணம் மைதானத்தை புனரமைப்பதன் மூலம் அனைவரது மனங்களிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்த பிரதேசத்தைச் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் வாதிகள் வர்த்தகர்கள் நலன்விரும்பிகள் என அனைத்துதரப்பினரும் முன்வரவேண்டும் என்பதே கேசரி ஸ்போர்ட்ஸின் வேண்டுகோளாகும் 
--

No comments:

Post a Comment