Tuesday, October 5, 2010

சீனாவின் வளர்ச்சியும் சாவல்களும்


                                                    --அருண் ஆரோக்கியநாதர்

சீனாவைப் பற்றி நிகழ்காலத்தில் உலகில் பேசப்படுகின்ற போதெல்லாம் அனேகமாக அதன் அசூர வளர்ச்சி பற்றிய பிரமிப்புக்கள் அன்றேல் அதன் செயற்பாடுகள் பற்றிய ஐயப்பாடுகளே முன்வைக்கப்படுகின்றன.

உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்ட நாடாக கடந்தபல தசாப்தகாலமாக கருதப்பட்ட ஜப்பானை முந்திக் கொண்டு இவ்வாண்டின் ஓகஸ்ற் மாதத்தில் இரண்டாம் இடத்தை பிடித்த சீனா  2027ம் ஆண்டில் உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்ட நாடாக திகழும் என பிரபல பொருளாதார ஆய்வு நிறுவனமான கோல்ட்மன் சக்ஸ் நிறுவனம் எதிர்வுகூறியிருக்கின்றது

இந்தச் செய்திகள் இன்றைய உலகப்போக்கில் சீனாவை புறக்கணித்துவிட்டு எதனையுமே செய்துவிடமுடியாதென்ற நிலைமை ஏற்றப்பட்டுள்ளதனை விரும்பியோ விரும்பாமலோ ஒப்புக்கொள்ளச்செய்கின்றது

ஜயாயிரமாண்டுகளுக்கு மேலான வரலாற்றைக் கொண்ட சீனா 1949ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி மாவோ ஸேதுங் தலைமையிலான கம்யூனிஸக் கட்சியினால் மக்கள் சீனக் குடியரசாக ஸ்தாபிக்கப்பட்டமுதல் கொண்டு இம்மாதம் முதலாம் திகதி வரையில் 61 ஆண்டுகளைக் கடந்துவந்துள்ளது

சீனாவின் தேசிய தினத்தை முன்னிட்டு கடந்தவாரத்தில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியொன்றில் சீனாவைப் பற்றி ஒளிபரப்பபட்ட விவரணத் தொகுப்பொன்றைக் காணக்கிடைத்தது

இந்த இடைப்பட்ட காலத்தில் சீனா எத்தகைய அசூர வளர்ச்சியைக் கண்டுநிற்கின்றது என்பiதை அந்த விவரணதொகுப்பை கண்ணுற்றவர்கள் ஏகமனதாகவே ஆமோதித்தனர்



கடந்தகாலத்தில் சீனாவைப் பற்றி பேசுபவர்கள் உலகில் அதிக சனத்தொகை கொண்ட நாடு சீனப்பெருஞ்சுவர் இராட்சத பண்டா தியனமென் சதுக்கம் டெராகொட்டா போர்வீரர்கள் சீனாவின் புராதன நாகரீகம் பண்டைய நகரங்கள் குறித்தே பேசியதைக் கேள்விப்பட்டிருக்கின்றோம்

ஆனால் இன்று அதன் பாரிய அபிவிருத்தியடைந்த தலைநகர் பீஜிங் ஹொங்கொங் ஷங்காய் நகரங்கள் அதன் முன்னேற்றம் கண்டுவரும் கைத்தொழில் துறை வியக்கவைக்கும் நெடுஞ்சாலைகள் வானுயர்ந்த கட்டிடங்கள் வலுவான பொருளாதாரம் வளர்ச்சி பெறும்வாழ்க்கைத்தரம் பற்றிப் பேசுகின்றதை காணமுடிகின்றது .

இன்றைய உயர் நிலையோக்கிய பயணத்திற்கு; சீனத்தலைவர் டெங் ஸியாவோபிங் 1978ம் ஆண்டில் மேற்கொண்ட தூரதரிசனமிக்க நடவடிக்கைகளே காரணம் என சுட்டிக்காட்டப்படுகின்றது .கடும் போக்கு கம்யூனிஸக் கொள்கைகளுக்கு பதிலாக திறந்த பொருளாதாரக் கொள்கைகளை அவர் அறிமுகப்படுத்தியிருந்தார் . அன்று இருந்ததிலும் பார்க்க 90 மடங்குகளாக சீனாவின் பொருளாதாரம் இன்று பெருகியுள்ளதாக புள்ளிவிபரங்கள் சான்றுபகர்கின்றது

இந்தக்காலப்பகுதியில் 300மில்லியன் மக்களை சீனா வறுமையில் இருந்து வெளிக்கொண்டுவந்திருப்பதாக ஐநா குறிப்பிடுகின்றது



எந்தவொரு நாட்டையும் போலன்றி கடந்த முப்பது ஆண்டுகாலமாக சீனப்பொருளாதாரம் வருடாந்தம் சராசரியாக 10வீத பொருளாதார வளர்ச்சி வேகத்;தை கொண்டு பயணித்துக்கொண்டிருப்பதுடன் தற்போதைய நிலையிலும் வேகமான பொருளாதார வேகத்தை கொண்டிருக்கின்றது



சீனா எதிர்நோக்கும் சவால்கள்
யதார்த்தத்தை வெளிப்படுத்திய சீனத் தூதுவர்

சீனாவின் 61வது தேசிய தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்ச்சியில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு பேசிய சீனத்தூதுவர் யாங் ஸியுபிங் சீனாவில் பொருளாதார மறுமீரமைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு திறந்த பொருளாதாரம் 1978ல்  அமுல்படுத்தப்பட்டது முதலாக உலகை உலுக்கு கின்ற மாற்றங்களை சீனா கண்டுநிற்பதாக குறிப்பிட்டார் .
சீனர்கள் தமது நாட்டின் சாதனைகள் தொடர்பாக பெருமைப்பட்டுக்கொள்கின்ற அதேவேளை எதிர்நோக்கியிருக்கின்ற என்றுமில்லாத பல பெரும் சவால்கள் தொடர்பிலும் தெளிவாக விளங்கிக்கொண்டிருப்பதாக சீனத் தூதுவர் சுட்டிக்காட்டினார்.

' சோசலிஸ சமத்துவத்தின ஆரம்பக்கட்டத்திலேயே சீனா இன்னமும் உள்ளதுடன் தொடர்ந்துமே அபிவிருத்தியடைந்துவருகின்ற நாடாகவே இருக்கின்றது சீனாவின் மொத்த தேசிய உற்பத்தி தலா வருமானம் சமீபத்தில் தான் 3000 அமெரிக்க டொலர்கள் இலக்கை தாண்டியுள்ளது .இதன்படி உலகளவில் 104வது இடத்திலேயே காணப்படுகின்றது .சமச்சீரற்ற அபிவிருத்தியானது மிகமுக்கிய பிரச்சனைகளிலொன்றாக அமைந்துள்ளது பல கிராமப்புறங்களும் தூரப்பிரதேசங்களும் இன்னமுமே மிகவும் வறுமைமிக்கதாக காணப்படுகின்றது 135மில்லியன் மக்கள் இன்னமும் நாளொன்றுக்கு ஒருடொலர்களுக்கம் குறைந்த வருமானத்தை ஈட்டுபவர்களாகவே காணப்படுகின்றனர் .சீனா உண்மையான அபிவிருத்தியையும் முன்னேற்றத்தையும் அடைவதற்கு பல தாசப்தகாலங்கள் பத்திற்கும் மேற்பட்ட சந்ததியினரின் கடுமையான முயற்சிகள் அவசியமாகும் .

உலகின் இரண்டாவது பொருளாதார சக்தியாகசீனாவின் ஒட்டுமொத்த பொருளாதாரம் வளர்ச்சி கண்டுள்ளபோதிலும் பொருளாதார அபிவிருத்தி சமத்துவமீன்மையானது பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளதனை சீனத்தூதுவரின் கருத்துக்களில் இருந்து அறிந்துகொள்ளமுடிந்தது

உலகின் மிகப்பெரும் பொருளாதார வல்லரசாக திகழும் அமெரிக்காவின் வருடாந்த மொத்த தேசிய உற்பத்தி 14 ரில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ளதுடன் தலா வருமானம் 46000 அமெரிக்க டொலர்களுக்கு அதிகமாக இருக்கின்றது
 ஜப்பானின் வருடாந்த மொத்த தேசிய உற்பத்தி தலா வருமானம் 32000 அமெரிக்க டொலர்களுக்கு அதிகமாக உள்ளது

4.99ரில்லியன் அமெரிக்க டொலர்கள் மொத்த தேசிய உற்பத்தியுடன் உலகின் இரண்டாவது பொருளாதார சக்தியாக திகழுகின்ற சீனாவில் மக்களின் சராசரி தலா வருமானம் 3000 அமெரிக்க டொலர்கள் அளவிலேயே இருக்கின்ற நிலையில் தம்மை உண்மையான பொருளாதார வல்லரசு என அழைக்க முடியாததென்பதை சீனத்தரப்பே ஒப்புக்கொண்டுள்ளமை யாதார்த்தைத்தை அவர்கள் நன்குணர்ந்துகொண்டுள்ளமையை தெளிவுபடுத்துகின்றது

சீனாவின் அபிவிருத்தி உலகிற்கு நன்மைகளைக் கொண்டுவந்துள்ளதுடன் அது உலகப்பொருளாதாரத்தினதும் வர்த்தகத்தினதும் வளர்ச்சியை வலுவாக ஊக்குவித்துள்ளதாக சீனத்தூதுவர் சுட்டிக்காட்டியதுடன் தமது நாட்டை வளர்த்துக்கொள்வதற்கு அமைதியான சர்வதேச சூழலை எதிர்பார்த்துநிற்பதாகவும் 1.3 பில்லியன்களாகவுள்ள சீனாமக்கள் சிறப்பான முன்னேற்றமிக்க வாழ்க்கை வாழ்வதற்கு தமது ஓட்டுமொத்த நேரத்தையும் சக்தியையும் அபிவிருத்தியில் ஈடுபடுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தவேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார் .
.
தமது சொந்த அபிவிருத்தி மூலமாக உலக சமாதானத்திற்காக பங்களிப்புச்செய்வதாகவும் சீனத்தூதுவர் தெரிவித்திருந்தார்

ஐயப்பாடுகளைப் போக்கும் கருத்துக்கள்

சீனாவின் அசூர வளர்ச்சியானது பல்வேறு தரப்பிலும் அச்சங்களையும் ஐயப்பாடுகளையும் ஏற்படுத்திவிட்டுள்ள நிலையில் சீனத்தூதுவர் இதனைத் தெளிவுபடுத்தும் விதமாக சில கருத்துக்களை முன்வைத்திருந்தார்.

' (அபிவிருத்தியென்பது )சீனா தேர்ந்தெடுத்துள்ள உபாயத் தெரிவாகும் .சமாதானமான அபிவிருத்தி என்ற பாதையில் சீன மக்கள் தொடர்ந்தும் தம்மை உறுதியுடன்  அர்ப்பணித்திருப்பர்.சீனாவின் அபிவிருத்தி யாரையும் புண்படுத்தவோ அன்றேல் அச்சுறுத்தவோ மாட்டாது . வளர்ச்சி பெற்றதும் ஆதிக்கத்தை நாடிய பெரும் வல்லரசுகளின் பாதையை சீனா ஒருபோதுமே பின்பற்ற மாட்டாது. சீனா எவ்வளவுக்கு எவ்வளவு அபிவிருத்தி காண்கின்றதோ அவ்வளவிற்கு அவ்வளவு சர்வதேச பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ளும் .ஏனையவர்களின் நலன்களை விலைகொடுத்து தனது சுயநலனை சீனா ஒருபோதுமே முன்னெடுக்கமாட்டாது. சீனாவின் அபிவிருத்திக்கு நீண்டகாலங்கள் ஸ்திரமான சர்வதேச சூழல் அவசியமானது குறிப்பாக அண்டைநாடுகளில் ஸ்திரமான நிலை அவசியமானது .இலங்கை உட்பட அண்டைநாடுகளுடன் சிறப்பான அயலக நட்புறவையும் ஒத்துழைப்பையும் கட்டியெழுப்புகின்ற கொள்கையை சீனா தொடர்ந்தும் பின்பற்றும் '

சீனத்தூதுவரின் கருத்துக்கள் நம்பிக்கையை ஏற்படுத்துவதாக இருக்கின்றபோதிலும் சீனாவின் வளர்ச்சியும் அதன் செயற்பாடுகளும் இலங்கையிலுள்ள சில தரப்பினரைப்போன்றே உலகிலும் அச்சத்துடனும் ஐயப்பாட்டுடனும் நோக்கப்படுவதை இங்கே சுட்டிக்காட்டுதல் சாலப்பொருத்தமாகும்.

No comments:

Post a Comment