Friday, December 5, 2014

ஊழலில் உழலும் தேசம்

இலங்கையிலுள்ள அரசியல்வாதிகள் தேர்தல் காலம் என்று வரும்போது மக்களின் உணர்வுகளைத் தூண்டி வாக்குகளாக மாற்றுவதற்கு பல்வேறு துரும்புச்சீட்டுகளை கடந்த காலங்களில் பயன்படுத்திவந்துள்ளனர்.

இதில் தமிழர்களுக்கு எதிரான இனவாத கோ­ங்கள் நீண்ட காலமாக முதன்மை பெற்றன. கடந்த சில தசாப்தங்களாக அவை விடுதலைப்புலிகளுக்கு எதிரான பயங்கரவாதக் கோ­ங்களாகப் பரிணாமம் கொண்டன. விடுதலைப்புலிகளுக்கு எதிரான ஆயுதமோதல் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு ஐந்து வருடங்களானபோதிலும் மக்கள் மத்தியில் வாக்குப்பிச்சை கேட்பதற்காக இன்னமும் அதிலேயே தொங்கிக்கொண்டிருக்கின்ற கட்சிகளையும் நம் கண்முன்னே காணமுடிகின்றது.

அரசியல்வாதிகள் என்ன நினைத்தாலும் சாதாரண மக்களின் மத்தியில் இந்த நாட்டுக்குத் தற்போது தேவையானது என்ன என்பது தொடர்பான தெளிவு ஏற்பட்டுவருவதை சமூகத்தின் பலதரப்பட்ட மக்களுடனான அன்றாடக் கலந்துரையாடல்களிலிருந்தே புரிந்துகொள்ள முடிகின்றது. அதிலே குறிப்பாக, பொருளாதார நெருக்கடியால் நாளாந்த வாழ்க்கையை நகர்த்த தள்ளாடும் மக்கள் இந்த நாட்டில் தலைவிரித்தாடும் ஊழல் குறித்து கருத்துகளைப் பரவலாக முன்வைக்கத்தொடங்கியுள்ளதை உணர்ந்துகொள்ள முடிகின்றது.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் உலகளவில் ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் முன்னிலைவகிக்கின்ற ட்ரான்ஸ்பெரன்ஸி இன்டர்ந­னல் அமைப்பு வெளியிட்டுள்ள பட்டியலில் இலங்கைக்குக் கிடைத்துள்ள இடமும் அதுதொடர்பில் தெரிவிக்கப்படும் கருத்துகளும் அமைந்துள் ளன. 2014ஆம் ஆண்டுக்கான உலக ஊழல் கருதுநிலைச் சுட்டியில் உள்வாங்கப்பட்ட 175 நாடுகளில் இலங்கை 85ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.


இலங்கை கடந்தாண்டைவிடவும் ஒரு புள்ளியை அதிகமாகப் பெற்று 38 புள்ளிகளை மொத்தமாக ஈட்டியமையை ஒருவிதமான முன்னேற்றமாக புள்ளிகள் அடிப்படையில் பார்த்தால் நோக்கமுடியும். ஊழலால் இந்நாடு அடைந்துள்ள பாதிப்பிலிருந்து விடுபடுதற்கு இது போதுமானதாகக் காணப்படவில்லை என்பதை புள்ளிவிவர வியாக்கியானங்கள் துலாம்பரமாக்குகின்றன. கடந்தாண்டில் 177 நாடுகளைக் கொண்ட பட்டியலில் இலங்கை 37 புள்ளிகளுடன் 91ஆவது இடத்தைப் பெற்றிருந்தது. 2013ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இலங்கை 2014இல் ஒரு புள்ளியை அதிகமாகப் பெற்றிருந்தாலும் 2012ஆம் ஆண்டில் அடைந்த 40 புள்ளிகள் இலக்கை எய்துவதற்குத் தவறிவிட்டது.
\
பர்கினா பாஸோ, இந்தியா, ஜமேய்க்கா, பெரு, பிலிப் பைன்ஸ், தாய்லாந்து, ரினிடாட் அன்ட் டுபாக்கோ மற்றும் ஸாம்பியா ஆகிய நாடுகளைப் போன்றே இலங்கையும் 2014இல் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் 38 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இந்த நாடுகள் அவற்றின் அரச துறைகளில் பாரதூரமான ஊழல் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளன என்பதையே இந்த எண்ணிக்கையானது எடுத்துக்காட்டுகின்றது.

2014ஆம் ஆண்டு ஊழல் கருதுநிலைச் சுட்டி புள்ளிகளைப் பொறுத்தவரையில் 175 நாடுகளில் மூன்றில் இரண்டுக்கு அதிகமானவை 50இற்கு குறைவான புள்ளிகளையே பெற்றுள்ளன. புள்ளிகளைப் பொறுத்தவரையில் 0 என்பது மிகவும் ஊழல் மிக்க நாடெனவும் 100 என்பது மிகவும் தூய்மையான நாடெனவும் அளவீட்டு ரீதியில் கருத்திற்கொள்ளப்படும். 2014ஆம் ஆண்டில் டென்மார்க் 92 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்த அதேவேளை, வடகொரியா மற்றும் சோமாலியா ஆகியன தலா 8 புள்ளிகளுடன் கடைசி ஸ்தானங்களைத் தமதாக்கிக்கொண்டன.

இலங்கை 50 புள்ளிகளுக்குக் குறைவாகப் பெற்றிருப்பதனால் அரச துறையில் இடம்பெறும் ஊழல்களைக் குறைக்கமுடியாத நாடுகள் வரிசையில் இலங்கையும் இடம்பெற்றுள்ளமை தெளிவாகின்றது என ட்ரான்ஸ் பரன்ஸி இன்டர்ந­னல் இலங்கை கிளையின் நிறைவேற்று அதிகாரி எஸ். ரணுக்கே தெரிவித்துள்ளார். ஊழல் கருதுநிலைச் சுட்டி கருதுநிலையை அடியயாற்றியதாக இருந்தாலும் கூட ஊழலுக்கு எதிரான மிகவும் அங்கீகரிக்கப்பட்ட சுட்டெண்ணாகவும் அதிகமாக மேற் கோள் காண்பிக்கப்படும் சுட்டெண்ணாகவும் இருந்துவருகின்றமை குறிப்பிடத்கத்கது.

ஊழல் கருதுநிலைச் சுட்டியானது அரசதுறை ஊழல் குறித்த நிபுணர்களின் அபிப்பிராயங்களை அடிப்படையாகக் கொண்டதாகும். தலைவர்களை பொதுமக்கள் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தக்கூடிய திறந்த அரசு இருப்பின் நாடுகளது மொத்தப்புள்ளிகளுக்கு அது வலுச்சேர்க்கும். ஊழல் தொடர்கதையாக இருக்குமிடத்திலும் ஊழலுக்கான தண்டனைகள் போதுமானதாக இல்லாமலிருப்பினும் அரச நிறுவனங்கள் பிரஜைகளது தேவைகள் தொடர்பாக பதிலளிக்காத நிலையிலும் குறைவான புள்ளிகளே வழங்கப்படும்.

இலங்கையில் தகவல் அறியும் உரிமைச்சட்டம் இல்லாமையானது ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் பெரும் முட்டுக்கட்டையாக இருந்துவருவதுடன் ஊழல் செய்யும் அரசியல்வாதிகள், அதிகாரிகள், ஊழலை அம்பலப்படுத்தும் ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வ லர்களைப் பாதுகாப்பதற்கான தெளிவான வரையறைகள் இல்லாமை பெருங்குறைபாடாகக் காணப்படுகின்றது.

Monday, December 1, 2014

உற்சாகமளிக்கும் ஆரம்பம்

நேற்றைய தினம் பொலநறுவையில் இடம்பெற்ற பொது எதிரணிகளின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் மிகுந்த உற் சாகத்துடன் பங்கேற்றிருந்தனர்.

பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன முதன் முதலாக தன்னை அறிவித்தபோது கடந்த மாதம் 21ஆம் திகதியன்று கொழும்பு புதிய நகர மண்டபத்தில் காணப்பட்ட உற்சாகம் அதன் பின்னர் அவர் பங்கேற்ற நிகழ்வு களில் அதிகரித்துவந்த நிலையில், நேற்றைய தினம் பொலநறுவையில் நடைபெற்ற கூட்டத்தில் உற்சாகம் மற்றுமொரு கட்டத்தை நோக்கி நகர்ந்திருந்ததை அவதானிக்க முடிந்தது. விவசாயப் பின்புலத்தைக் கொண்ட மைத்திரிபால சிறிசேனவின் சொந்தத் தேர்தல் தொகுதியான பொலநறுவையில் கூட்டம் இடம்பெற்றமை இதில் முக்கிய பங்களிப்பை வழங்கி யிருந்ததை மறுக்க முடியாது.

கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் மத்தியில் மட்டுமன்றி, பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர் கள், தொண்டர்கள் மத்தியிலும் ஒருவிதமான புத்து ணர்ச்சியுடன் கூடிய உற்சாக நிலையைப் பார்க்கும் போது எதிரணியினரின் நகர்வுகள் நல்லதொரு ஆரம்ப அடித்தளத்தை ஏற்படுத்தியிருப்பதாகத் தோன்றுகின்றது.

இந்நிலையில், பொது எதிரணியினர் இன்று விகாரமாதேவி பூங்காவில் புரிந்துணர்வு ஒப்பந்தத் தில் கைச்சாத்திடவுள்ளனர். தேசிய அரசை நிறுவி நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழித்தல், புதிய தேர்தல் முறைமை, சுயாதீன ஆணைக் குழுக்கள் ஆகியவற்றை ஸ்தாபிக்கின்ற 17ஆவது திருத்தத்தை மீண்டும் செயன்நிலைக்குக் கொண்டு வந்து நடைமுறைப்படுத்தல் போன்ற முக்கிய அம் சங்களை இன்றைய புரிந்துணர்வு ஒப்பந்தம் தாங்கி யுள்ளதாகக் கூறப்படுகின்ற நிலையில் மேலும் எதிர்பார்ப்புகள் அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பேன் என்று வாக்குறுதியோடு ஆட்சிக்கு வந்த சந்திரிக்கா குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்­ ஆகியோர் இரு தடவைகள் ஆட்சியில் இருந்தும் அம் முறைமையை ஒழிக்கத் தவறிய நிலையில் மைத் திரிபால சிறிசேன ஆட்சிபீடமேறினால் தமது வாக்குறு தியை நிறைவேற்றுவார் என்பதற்கு எவராலும் ஆணித்தரமான உத்தரவாதங்களைக் கொடுக்க முடியாமற் போனாலும் மாற்றமொன்றை வேண்டி நிற்கும் மக்களுக்கு மைத்திரியின் வருகை உற்சா கத்தைக் கொடுத்துள்ளதை உணர்வுவெளிப்பாடுகள் துலாம்பரமாக்கி நிற்கின்றன.

உற்சாகம் ஒருபுறம் இருந்தாலும் பொது எதிரணி யினர் செயற்பாட்டில் எதிர்கொள்ளக்கூடிய சவால்கள், நெருக்கடிகள் குறித்த ஆரம்பக்கட்ட ஐயப்பாடுகளும் நிலவுகின்றன. 35இற்கு மேற்பட்ட அரசியல் கட்சிகள், சிவில் சமூக அமைப்புகளைத் தாங்கிய பொது எதிரணியிலுள்ள அனைவரும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்கவேண்டும் போன்ற நல்லாட்சியுடன் தொடர்புடைய பொதுப்புள்ளியில் இணைந்திருக்கின்றார்களே அன்றி ஏனைய அனைத்து விடயங்களிலும் உடன்பாடு உடையவர்கள் அல்லர் என்பதை ஜாதிக யஹல உறுமயவின் அண்மைய அறிவிப்புகள் வெளிப்படுத்திநிற்கின்றன.

குறிப்பாக, பொறுப்புக்கூறுதல் விடயத்தில் நல்லி ணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடை முறைப்படுத்தும் மைத்திரிபால சிறிசேனவின் அறிவிப்பையே கடுமையாக எதிர்த்துநிற்கும் யஹல உறுமய தமிழர்களின் அரசியல் தீர்வு தொடர்பாக எத்தகைய நிலைப்பாட்டை எடுக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை. இப்படியாக பல முரண்பட்ட அமைப் புகளின் கூட்டணியே பொது எதிரணி என்பதை மக்கள் உணர்ந்துகொண்டு அதன்மீதான எதிர்பார்ப் புகளை யதார்த்தமாக வைத்துக்கொண்டால் ஏமாற் றங்களைத் தவிர்த்துக்கொள்ளமுடியும்.

அடுத்தடுத்த கட்டங்களில் வரக்கூடிய சவால்கள், சங்கடங்கள், நெருக்கடிகள் ஒருபுறம் இருந்தாலும் பொது எதிரணியினரின் ஆரம்பச் செயற்பாடுகள் உற்சாகமளிப்பதை மக்களின் உணர்வலைகளி லிருந்து புரிந்துகொள்ள முடிகின்றது.

ஆரம்பம் சரியாக அமைந்தால் அடுத்துவரும் கட்டங்களும் சரியாகும் என்ற நம்பிக்கையை வலுவாகக்கொண்ட எமது மக்களின் எதிர்பார்ப்புகள் தடை களைத் தாண்டி நிறைவேறுமா என்பதற்குக் காலம் தான் பதில் சொல்லவேண்டும்.

Sunday, November 30, 2014

மாற்றம் குறித்த நம்பிக்கை

ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு தொடர்பான உத்தியோகபூர்வ பிரகடனத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கைச்சாத்திட்டது முதலாக இலங்கையின் அரசியல் களம் முன்னெப்போதுமில்லாதவகையில் சூடிபிடித்துள்ள நிலையில் நாளுக்கு நாள் மக்கள் மத்தியிலும் எதிர்பார்ப்புக்கள் அதிகரித்துவருவதை உணர்வலைகள் வெளிப்படுத்திநிற்கின்றன.

பொது எதிரணியின் வேட்பாளராக தெரிவுசெய்யப்பட்டுள்ள மைத்திரிபால சிறிசேனவினால் மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிராக தேர்தலில் இறுதிவெற்றியைப் பெற்றுவிடமுடியும் என்பதை இன்னமும் தீர்க்ககரமாக கூறமுடியாவிட்டாலும் மாற்றமொன்று தேவையென வேண்டிநின்ற மக்களுக்கான மாற்றுத்தெரிவையும் நம்பிக்கையையும் அவரது முன்வருகை கொடுத்துள்ளது என்பதை மறுக்கமுடியாது. தம்மைப் போன்றே கிராமிய மக்களின் அடித்தளத்தைக் கொண்ட  மைத்திரிபால சிறிசேன தமக்கு எதிராக போட்டியிடுவார் என ஜனாதிபதி சிறிதளவும் எதிர்பார்த்திருக்கவில்லை என்றே வருகின்ற தகவல்களில் இருந்து புரிந்துகொள்ள முடிகின்றது. இந்நிலையில் இரண்டு வருடங்கள் எஞ்சியிருக்கும் நிலையில் விரைந்து தேர்தலுக்கு செல்வதற்கு எடுத்த முடிவு ஞானமுடையதா ஆளுந்தரப்பினர் தமக்குள்ளே வாதப்பிரதிவாதங்களில் ஈடுபடுவதாகவும் தகவல்கள் வருகின்றன. 

 ஜனாதிபதித் தேர்வில் பிரதான பாத்திரம் வகிக்கும் சிங்கள பௌத்த மக்கள் மத்தியில் போர் வெற்றியினால் ஏற்பட்ட செல்வாக்கு ஜனாதிபதிக்கு இன்னமும் கணிசமான அளவிற்கு இருக்கவே செய்கின்றது. ஆனால் தற்போது முகங்கொடுக்கும் பொருளாதார நெருக்கடி,
  நிறைவேற்று அதிகாரத்தின் அடித்தளத்தில் நாட்டில் இடம்பெறும் ஊழல்  மோசடிகள், குடும்ப ஆட்சியின் ஆதிக்க நிலை போன்ற இன்னோரன்ன காரணிகள் ஒரு மாற்றுத் தெரிவை நாட வேண்டிய அவசியத்தை ஏனைய சமூகங்களை போன்று அவர்களிடத்திலும் ஏற்படுத்தி விட்டிருப்பதனையே இன்னமும் சுயாதீனமாக இயங்குவதாக நம்பப்படும் பெரும்பான்மை சமூக ஊடகங்களுடாக அறிந்துகொள்ள முடிகின்றது.

ஜனாதிபதி தேர்தலைப் பொறுத்தவரையில் நடப்பு ஜனாதிபதி தனது பிரசாரத்தை பல வாரங்களுக்கு முன்னரே ஆரம்பித்து முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கின்றார். வரவுசெலவுத்திட்ட அறிவிப்புக்கள் இ முதற்கொண்டு பல்வேறு துறையினருடனான அலரிமாளிகை சந்திப்புக்கள் இ யாழ்ப்பாண விஜயத்தின் போது உட்பட பிரதேச ரீதியான விஜயங்களின் போதான சலுகைக் கொடுப்பனவுகள் என அனைத்துமே தேர்தலை முன்னிறுத்தியதாகவே அமைந்துள்ளன. இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் இன்றைய தினம் பொலநறுவையில் தமது முதலாவது பிரசாரக் கூட்டத்தை ஆரம்பிக்கின்றார். இன்னமும் தேர்தலுக்கு 40 நாட்களுக்கும் குறைவான காலப்பகுதியே உள்ள நிலையில் எதிரணியினர் ஒற்றுமைப்பட்டரீரியில் எவ்வாறு ஆளுந்தரப்பினரின் மாபெரும் பிரசார யுத்தத்திற்கு முகங்கொடுக்கப்போகின்றனர் என்பதும் தேர்தலில் முக்கிய பாத்திரத்தை வகிக்கப்போகும் கிராமப்புறமக்கள் மத்தியில் தமது திட்டங்களை தெளிவுபடுத்தி அவர்களது ஆதரவையும் வென்றெடுக்கப்போகின்றனர்  என்பதும் பெரும் சவால் மிக்கதாகவே அமையப் போகின்றது. 

இந்த ஆரம்ப கட்ட நிலையில் நோக்கும் போது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை 100நாட்களில் ஒழிப்போம் என்ற வாக்குறுதியை முன்நிறுத்தி ஒன்று சேர்ந்துள்ள பொது எதிரணியின் செயற்பாடுகளால் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸ என்ற தனிமனிதரை வெற்றிகொள்ள முடியாவிட்டாலும் மக்கள் உணர்வில் வேண்டிநிற்கும் மாற்றங்கள் இந்த நாட்டின் ஆட்சி முறையில் மாற்றத்தைக் கொண்டுவந்து மக்களின் பொது எதிர்பார்ப்புக்கள் ஈடேறுவதற்கேனும் வழிகோலும் என்ற நம்பிக்கையை கொடுத்துள்ளது என்பதை தெளிவாக குறிப்பிடமுடியும்.

அடுத்துவரும் நாட்களிலும் வாரங்களிலும் ஏற்படப்போகும் மாற்றங்கள் ஒரு கட்டத்தில் நினைத்துப்பார்க்கவே முடியாதிருந்த மேலும் பல மாற்றங்களை கொண்டுவரலாம். ஏனெனில் மாற்றம் ஒன்றே மாறாதது என்பது காலாகாலமாக மெய்பிக்கப்பட்ட உலக நியதியாகும்.

Monday, September 22, 2014

ஊவாத் தேர்தல் முடிவுகள் உணர்த்தும் செய்தி என்ன?



logo 

 
Sep 22 2014 // ஆசிரியர் தலையங்கம்






2013 செப்டெம்பரில் நடைபெற்ற வடமாகாண சபைத் தேர்தலின் போதே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசு, போரின் பின்னர் முதற்தடவையாக மிக மோசமான தேர்தல் தோல்வியை சந்தித்திருந்தது. அதன் பின்னர் நடைபெற்ற தேர்தல்களில் அரசின் வாக்குவங்கி வீழ்ச்சியை நோக்கிப் பயணிப்பதைத் காணக்கூடியதாக இருக்கின்றது. தற்போது வெளியாகியிருக்கும் ஊவா மாகாணசபைத் தேர்தல் முடிவுகள் இதை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.

குறிப்பாக தமிழ் மக்களின் உரிமைக்குரலுக்கு செவிசாய்க்காது, அபிவிருத்தியயை முன்னிலைப்படுத்தி வடக்கு மாகாணசபைத் தேர்தலுக்கான பரப்புரையை கூட்டணி அரசு முன்னெடுத்தது. இதனால், உரிமையா? சலுகையா? என்ற வாதம் எழுந்தது. இந்நிலையில், அரசின் அபிவிருத்தி வலைக்குள் சிக்காது, உரிமையை முன்னிறுத்தி தேர்தலில் களமிறங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து தமது ஆணித்தரமான நிலைப்பாட்டை தமிழ் மக்கள் வெளிப்படுத்தினர்.

இவ்வாறு வடக்குத்தேர்தல் முடிவடைந்து அதாவது அரசு படுதோல்வியைச் சந்தித்து சரியாக ஒருவருடம் கழிந்துள்ள நிலையிலேயே ஊவா மாகாண சபைத் தேர்தலும் நடைபெற்று முடிந்துள்ளது. மேல் மற்றும் தென்மாகாண சபைத் தேர்தல்களின்போது 17 ஆசனங் களைப் பறிகொடுத்த கூட்டணி அரசுக்கு ஊவாத் தேர்தல் முடிவுகளும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றே சுட்டிக்காட்டப்படுகின்றது.



போர் வெற்றியின் உச்சச் செல்வாக்கைப் பயன்படுத்தி 2009ஆம் ஆண்டு ஊவாத் தேர்தலில் 68.32 சதவீத வாக்குகளைப் பெற்று மூன்றில் இரண்டு அறுதிப் பெரும்பா ன்மையை பெற்ற ஆளுங்கட்சி, இம் முறைத் தேர்தலில் 48.79 சதவீத வாக்குகளையே பெற்றமையானது அதன் வீழ்ச்சியைத் தெளிவாகப் புலப் படுத்துகின்றது.

மேல் மாகாண சபைத் தேர்தலின்போது ஏற்பட்ட பின்னடைவை ஓர் எச்சரிக்கையாக கருதி தனது போக்கை கூட்டணி அரசு மறுபரிசீலனை செய்யாத தாலேயே ஊவா மக்களின் செல்வாக்கையும் இன்று வெகுமாக இழந்துள்ளது.

போருக்குப் பின்னர் எதிர்பார்த்த பொருளாதார பிரதிலாபங்கள் சாதாரண மக்களுக்கு கிடைக்காத நிலை யில், அன்றாட வாழ்க்கையைக் கொண்டுநடத்துவதே பெரும் திண்டாட்டமாக மாறிவருவது அரசின் வீழ்ச்சியில் தாக்கம் செலுத்திய முக்கிய காரணிகளில் ஒன்றாக இருந்தாலும் அரசின் அணுகுமுறைகளில் மக்கள் கணிசமான அளவில் நம்பிக்கை இழக்கத்தொடங் கியிருப்பதன் வெளிப்பாடே இந்தத் தேர்தல் முடிவு களாகும்.

ஒட்டுமொத்த அரச இயந்திரத்தை ஊவாவில் குவித்தும், அரச வளங்களை கட்டுக்கடங்காது பயன் படுத்தியும் ஜனாதிபதி உட்பட அமைச்சர்கள் மையமிட்டும் கடைசி நேரத்தில் வறட்சி நிவாரணங்கள், வாழ்வா தாரக்கடன்கள் அரச நியமனங்களை அள்ளிக்கொடுத்தும் மக்களின் அமோக ஆதரவைப் பெற முடியவில்லை என்கிறபோது மக்கள் மத்தியில் அரசின் செயற்பாடுகள் தொடர்பில் எந்தளவிற்கு வெறுப்புணர்வு தலை தூங்கியுள்ளதென்பதைப் புரிந்துகொள்ளமுடிகின்றது.

போர் வெற்றியைக் காண்பித்தே காலங்கடத் திவிடலாம் என்ற கனவு இருந்தால் இனிமேல் அது பலிக் காது என்பதை இந்தத் தேர்தல் நன்கு வெளிப் படுத்தியுள்ளது.

முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவும் மக்கள் மத்தியில் போரில் தாம் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பை நினைவூட்டுவதற்காக தன்னை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தற்கொலைத்தாக்குதலின் போது தான் பயணித்த குண்டுகள் துளைத்த காரையே பிரசார மேடைகளுக்கு கொண்டு சென்று கடும் பிரசாரங்களை முன்னெடுத்தும் ஊவா மாகாணத்தில் அவரது ஜன நாயகக் கட்சிக்கு ஒட்டுமொத்தமாக வெறுமனே ஆறாயிரம் வாக்கு களே அளிக்கப்பட்டுள்ளமை இதற்கு ஒரு சான்றாகும்.




ஐக்கிய தேசியக் கட்சியினுடைய மீளெழுச்சி ஒன்று பட்டால் சாத்தியமே என்பதை இந்தத் தேர்தல் முடிவுகள் வெள்ளிடைமலையாக்கியுள்ளன.
கடந்த ஊவாத் தேர்தலில் மிகவும் குறைவாக 21.06 சதவீத வாக்குகளையே பெற்றிருந்த ஐக்கிய தேசிக்கட்சி இம்முறை அரசுக்கு சவாலாக 38.31 சதவீத வாக்கு களைப் பெற்றுள்ளதிலிருந்து மீண்டுமாக ஆட்சிப் பலத்தைப் பெறும் அதன் கனவு நடைமுறைச் சாத்திய மானதே என்ற நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது.

சரியான திட்டமிடலும் உண்மையான ஒற்றுமையும் கட்சியில் நிலவும் இடத்து அடுத்துவரும் தேர்தல்களில் அரசுக்கு சவால் விடுப்பதுடன் நின்றுவிடாது மாற்றத் தையும் நிகழ்த்திக்காட்டலாம் என்பது நிதர்சனம்.
இந்தத் தேர்தல் ஐக்கிய தேசிக் கட்சியின் எழுச்சி மட்டுமன்றி, அநுர குமார திஸாநாயக்கவின் தலைமை யிலான ஜே.வி.பியின் எழுச்சியாகவும் பார்க்கப்பட வேண்டும்.

 ஊவாவின் மொத்த ஆசனங்கள் 34இல் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசு பெற்ற 19 ஆசனங்களையும் ஐக்கிய தேசியக் கட்சி பெற்ற 13 ஆசனங்களுடனும் ஜேவிபி பெற்ற 2 ஆசனங்கள் குறைவாக தெரிந்தாலும் கடந்த தேர்தல்களில் அந்தக் கட்சி அடைந்த பின்னடைவுகளுடன ஒப்பிட்டுப்பார்க் கையில் உண்மையிலேயே ஜே.வி.பி. எழுச்சிபெற் றுள்ளதை உணர்ந்துகொள்ளமுடியும்.



ஐக்கியக் தேசியக் கட்சியும் ஜேவிபியும் இணைந்து கொண்டால் எதிர்காலத்தில் வரும் தேர்தல்களில் அரசுக்கு சிம்மசொர்ப்பமான விளங்கமுடியும் என்ற செய்தியையும் இத்தேர்தல் முடிவுகள் எடுத்துரைக்கின்றன.

Friday, August 29, 2014

ஊவா தேர்தல் அவலம்


 
 
 
 
 
இலங்கையில் தேர்தல் காலப்பகுதியில் வன்முறைகள் அரங்கேறுவதொன்றும் புதிய விடயமல்ல என்றாலும் ஊவாவில் இருந்து கடந்த சில நாட்களாக வந்துகொண்டிருக்கும் செய்திகள் ஜனநாயகத்தை நேசிப்பவர்களுக்கு மனவேதனையைத் தருவது மட்டுமன்றி ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை சிதறடிப்பதாக அமைந்துள்ளன.

மாகாணசபைத் தேர்தலுக்கு இன்னமும் சில வாரங்களே உள்ளநிலையில் மொனராகலை மாவட்டத்திலுள்ள எதிர்க்கட்சிகளுக்கு சொந்தமான 18 பிரசார அலுவலகங்கள் 24மணிநேர காலப்பகுதிக்குள் அடித்துநொருக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி எதிரணியின் பிரசாரக் கூட்டங்களுக்கு இடையூறுகள் விளைவிக்கப்பட்டும் எதிரணியின் ஆதரவாளர்கள் அச்சுறுத்தப்பட்டும் அடாவடித்தனம் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றது.

சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கமான “கபே’ அமைப்பு விடுத்துள்ள கடுந்தொனியிலான அறிக்கையில் இருபத்திநான்கு மணிநேர காலப்பகுதியில் 18 தேர்தல் பிரசார அலுவலகங்கள் மீது ஆயுதம் தரித்த குழுக்களால் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளமை காரணமாக மொனராகலை மாவட்டத்தில் எதிரணி வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் தமது உயிருக்கு அஞ்சுவதாக சுட்டிக்காட்டியுள்ளது.

பிபிலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலேயே மிகவும் மோசமான தேர்தல் வன்முறைச்சம்ப வங்களில் சில கடந்த 24ஆம்திகதி அதிகாலை தொடக் கம் அடுத்துவந்த ஆறுமணி நேரத்திற்கு தொடர்ச்சியான முறையில் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. நினைத்த தெதனையும் செய்யலாம் தண்டனை வழங்கப்படமாட்டாது என்ற ரீதியில் தாக்குதல்களை நடத்தியோர் காடைத்தனத்தை அரங்கேற்றியிருப்பதனையும் அதை உறுதிப்படுத்தும் வகையில் அவர்களைக் கைது செய்வதற்கு பொலிஸார் எவ்வித நடவடிக்கையையும் எடுக்காமையையும் “கபே’ கண்காணிப்பாளர்கள் தமது அறிக்கையிலே சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலா ளரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த நேற் றையதினம் வெளியிட்ட கருத்துக்கள் அமைந்துள் ளன.
திங்களன்று படல்கும்புர பிரதேசத்தில் வெடித்த வன்முறைகளைக் கட்டுப்படுத்த பொலிஸார் உரிய நடவடிக்கையும் மேற்கொள்ளத் தவறிவிட்டதாக சுட்டிக்காட்டிய அவர் பொலிஸார் உரிய வகையில் செயற்பட்டிருந்தால் நிலைமையை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்திருக்க முடியும் எனக் குறிப்பிட்டிருந்தார். வன்முறைக்கும்பலொன்று அப்பிரதேசத்திலேயே தரித்துநின்றபடியால் தாக்குதலில் காயமுற்றோரை மருத்துவமனைகளுக்குக்கூட எடுத்துச்செல்ல முடியவில்லை என்பதையும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.

எதிர்க்கட்சிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் ஆளுங்கட்சியின் முக்கியஸ்தரொருவரே இவ் வாறு கூறியிருப்பது யார் இந்தத் தாக்குதல்களை உண்மையில் நடத்தினார்கள் என்பதைத் சாதாரண மக்களாலும் விளங்கிக்கொள்ள வழிகோலியிருக்கின்றது.

வெற்றிலைச் சின்னத்தின் கீழ் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டு தான்தோன் றித்தனமாக செயற்படுவது தொடர்பில் எதிர்க்கட்சிகள் ஏற்கனவே தேர்தல் ஆணையாளர் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோரை கடுமையாகச் சாடியுள்ளதுடன் அதிகாரிகளின் கையாலாகாதத் தன்மையே மோசமடையும் சூழலுக்கு காரணம் எனக் குற்றஞ்சாட்டியுள்ளன.
வடமாகாண தேர்தலைத் தொடர்ந்து பொதுநலவாய தேர்தல் கண்காணிப்புக்குழு அதன் அறிக்கையில் 2010ஆம் ஆண்டில் அரசியல்சாசனத்துக்குள் இணைத்துக்கொள்ளப்பட்ட 18வது திருத்தமானது நம்பகத்தன்மைமிக்கதும் போட்டித்தன்மையுடனானதுமான தேர்தலை நடத்துவதற்கான அரசியல்சாசன மற்றும் சட்டகட்டமைப்பினை மலினப்படுத்திவிட்டதாக சுட்டிக்காட்டியிருந்ததுடன் சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவுக்கான நிபந்தனைகளையும் இல்லாமற் செய்துவிட்டதாக குறிப்பிட் டிருந்தது.

திங்களன்று வரையில் தேர்தல்வன்முறைகள் தொடர்பான 74முறைப்பாடுகள் பதிவுசெய்யப் பட்டுள்ளன. வன்முறைகள் மூலம் எதிரணியின் செயற்பாடுகளை முடக்கி தேர்தல் வெற்றியை உறுதிப்படுத்துவதே தமது நோக்கம் என்று செயற்படுகின்ற தரப்பினர் சட்டத்துக்கு அப்பாற்பட்டு செயற்படுகின்றமையால் தேர்தல் நெருங்க நெருங்க முறைப்பாடுகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளதென்பதைக் கணிக்க மேதைகள் தேவையில்லை.

Wednesday, August 20, 2014

பேர்குஸன் கலவரங்கள் உணர்த்துவதென்ன?


அமெரிக்காவின் மிஸோரி மாநிலத்தின் பேர்குஸன் நகரில் தொடரும் கலவரங்கள் அந்நாட்டில் மட்டுமல்ல உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளன. இந்தப்பகுதி தற்போது ஒரு யுத்த பூமி போன்று காட்சியளிக்கும் அளவிற்கு நிலைமைகள் மோசமடைந்துள்ளன.

இம்மாதம் ஒன்பதாம் திகதி மைக்கல் பிரவுண் என்ற பதின்ம வயது கறுப்பின இளைஞர் பொலிஸாரினால் காட்டுமிராண்டித்தனமாக சுட்டிக்கொல்லப்பட்டதையடுத்து அதற்கு அடுத்த தினத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நடத்தப்பட்ட மெழுகுதிரி ஏந்திய திருவிழிப்பு நிகழ்ச்சியயான்றின் போது கார்க் கண்ணாடிகளை உடைத்தும் கடைகளைக் கொள்ளையிட்டும் ஆரம்பமான கலவரங்கள் தற்போது இரண்டாவது வாரமாக தொடர்கின்றன.

கலவரங்களால் பாதிக்கப்பட்ட பேர்குஸன் நகரின் மொத்த சனத்தொகை 21,205 என் பதுடன் மொத்த சனத்தொகையில் 65 சத வீதமானோர் கறுப்பினத்தவர்களாவர். ஆனால் அந்த நகரிலுள்ள ஒட்டுமொத்த பொலிஸாரில் 6 சதவீதமானோர் மட்டுமே கறுப்பினத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நடக்கின்ற சம்பவங்களைப் பார்க்கின்ற போது மைக்கல் பிரவுண் என்ற இளைஞர் கொல்லப்பட்ட சம்பவம் ஏற்கனவே அந்தச் சமூகத்தில் காணப்பட்ட பாரிய வேறுபாட்டையும் அநீதிகளையும் கோடிட்டுக்காட்டுகின்றன.
இலங்கை, மலேசியா போன்ற நாடுகளில் சிறுபான்மையினரான தமிழ் மக்கள் அரசியல் ரீதியிலும் நிர்வாக ரீதியிலும் பாரபட்சத்திற்கு உட்படுத்தப்படுவதைப் போன்றே உலகின் முன்னணி ஜனநாயக நாடாக பார்க்கப்படும் அமெரிக்காவில் சிறுபான்மையினரான கறுப்பினத்தவர்களின் நிலைமை இன்னமும் இருக்கின்றதா என்ற கேள்வியை எழுப்பிநிற்கின்றது.

அமெரிக்காவின் சிவில் உரிமைகளுக்கான செயற்பாட்டாளரான மார்டின் லூதர் கிங் ஜுனியர் 1963 ஆம் ஆண்டு ஓகஸ்ற் 28ஆம் திகதியன்று – எனக்கு ஒரு கனவுள்ளது என்ற உலகப்புகழ் பெற்ற உரையை ஆற்றியிருந்தார்.
அவ்வுரையிலே தனது பிள்ளைகள் – வருங்கால சந்ததியினர் தமது தோலின் நிறத்தினை அடிப்படையாகக்கொண்டன்று மாறாக அவர்களது குணாம்சங்களின் அடிப்படையில் – செயல்களில் அடிப்படையில் எடைபோடப்படும் காலம் உருவாகவேண்டும் என்பதே தனது கனவு என்ற அடிப்படைக் கருத்தை வலியுறுத்தியிருந்தார்.

அவரது உரை இடம்பெற்று ஐம்பதாண்டுகள் கடந்துவிட்ட பின்னரும் அமெரிக்காவில் நிற பேதம் என்பது இன்னமும் முழுமையாக அகன்றுவிடவில்லை. அது புரையோடிப்போய்க் கிடக்கின்றது என்ற செய்தியே தற்போது பேர்குஸனில் இடம்பெறும் கலவரங்களூடாக உணர்த்தப்படுகின்றது. இத்தனைக்கும் அமெ ரிக்காவில் கறுப்பினத்தவர் ஜனாதிபதியாக தேர்வாகி எத்தனையோ பல கறுப்பினத்தவர்கள் அரசியலிலும் நிர்வாகப் பொறுப்பிலும் முன்னிலையில் திகழ்கின்ற நிலையிலும் அடிமட்டத்தில் நிலவும் வேறுபாடுகள் பெருமளவில் மாறவில்லை என்ற உண்மை புலனாகின்றது. பேர்குஸன் விடயத்தை விதிவிலக்காகப் பார்த்தாலும் பாரபட்சங்களால் இழைக்கப்படும் அநீதிகளுக்கு சட்டத்தின் ஆட்சி மூலமாக எப்படியேனும் விடைதேடலாம் என்ற நம்பிக் கையேனும் அமெரிக்காவில் பொதுவாக காணப்படுகின்றது.

ஆனால் எமது நாட்டில் அரசியல் மற்றும் நிர்வாக ரீதியிலான பாரபட்சங்கள் மட்டுமன்றி சட்டத்தின் ஆட்சியில் காணப்படும் வெற்றிடமானது சிறுபான்மை மக்களை நம்பிக்கையற்ற நடைபிணங்களாக மாற்றிக்கொண்டிருக்கின்றது. இந்த விடயத்தில் அரசாங்கம் தூரதரி சனத்துடன் செயற்படாவிடின் விளைவுகள் விரும்பத்தகாதவையாகவே அமைந்துவிடும் அபாயம் உண்டு!

மறுதலிப்புக்களால் நல்லிணக்கத்தை அடையமுடியாது




இம்மாத இறுதியில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமையாளர் பதவியிலிருந்து விடைபெற்றுச்செல்லும்  நவநீதம்பிள்ளை அம்மையார் கடந்த வார முற்பகுதியில் ரொய்டர்ஸ் செய்திஸ்தாபனத்திற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்த விடயங்கள் இலங்கை அரசிற்கு பெரும் அசௌகரியத்தைக் கொடுத்துள்ளமை வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட அறிக்கை கோடிட்டுக்காண்பிக்கின்றது.

' இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான ஏராளமான விடயங்கள் இலங்கைக்கு வெளியே உள்ளன. இதனால் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளாமலேயே ஐ.நா.விசாரணைக்குழுவால் சிறப்பான முறையில் விசாரணைகளை முன்னெடுக்க முடியும்.' என விடைபெறவுள்ள மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை ரொய்டர்ஸுக்கு வழங்கிய நேர்காணலில் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதற்கு பதிலடியாக வெளிவிவகார அமைச்சு விடுத்த அறிக்கையில் விசாரணைகள் ஆரம்பக்கட்டத்திலுள்ள நிலையில் நவநீதம்பிள்ளை முன்கூட்டியே இலங்கை தொடர்பில் நடுத்தீர்ப்பு வழங்கிவிட்டதாகவும் விசாரணையின் போக்கை தனக்கு விருப்பமான போக்கிலேயே மாற்றமுனைவதாகவும் கடுமையாக குற்றஞ்சாட்டியிருந்தது. நவநீதம்பிள்ளை ஆரம்பமுதலே இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டிருந்தாக தெரிவித்திருந்த வெளிவிவகார அமைச்சு புதிய ஆணையாளராக பொறுப்பேற்கவிருக்கும் இளவரசர் செயீத் மீது நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

ஆனால் இலங்கை அரசாங்கம் இன்னமும் சில மாதங்களில் புதிய ஆணையாளர் செயீத் மீதும் 'பக்கச்சார்பாக பாரபட்டமாக செயற்படுகின்றார், ஒருதலைப்பட்டமாக நடந்துகொள்கின்றார், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கண்டுகொள்ளாமல் செயற்படுகின்றார், ஒரு இனவாதி' போன்ற இன்னோரன்ன விமர்சனங்களையும் குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்தால் ஆச்சரிப்படுவதற்கில்லை.

நவநீதம்பிள்ளைக்கு முன்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளராக இருந்த லூயிஸ் ஆர்பர் அம்மையாரும் இலங்கை அரசாங்கத்தின் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்த நிலையில் புதிய ஆணையாளர் செயீத்தும் இலங்கை அரசின் கடுஞ்சொற்கணைகளை எதிர்கொள்ளும் நாள் வெகுதூரத்திலில்லை.

' 'உலகில் பயங்கரவாத்திற்கு முடிவுகட்டிய ஒரேநாடு இலங்கை, 'பயங்கரவாதத்திலிருந்து இந்த நாட்டிற்கு விடுதலைபெற்றுத்தந்தது ராஜபக்ஸ அரசாங்கமே' 'மக்களெல்லாம் யுத்த பயமின்றி சுதந்திரமாக வாழ்கின்றனர்' 'நாட்டில் அபிவிருத்தி சிறப்பாக நடக்கின்றது' 'இலங்கையின்  புதிய நெடுஞ்சாலைகள் விமானநிலையம் துறைமுகம் அற்புதமாகவுள்ளன' 'சட்டத்தின் ஆட்சியில் ஆசியாவிலேயே இலங்கை முன்னிலையில் திகழ்கின்றது' 'ஊடக சுதந்திரம் இந்த நாட்டில் சிறப்பாகவுள்ளது' போன்ற வார்த்தைகளையே அரசாங்கம் கேட்கவிரும்புகின்றது. அதற்கு மாற்றாக கருத்துக்களை வெளியிடுபவர்கள் நாட்டின் முன்னேற்றத்தை தாங்கிக்கொள்ள முடியாதவர்கள் என்பதுடன் நின்றுவிடாது துரோகிகளாவும் அடையாளப்படுத்தப்படும் நிலை உள்ளது.

அரசு தான் கேட்க விரும்பும் விடயங்களையே காலங்கடந்து நியமித்துள்ள விசாரணைக்குழுவிலும் எதிர்பார்கின்றதா? அப்படி எதிர்பார்க்கும் இடத்து உண்மைகள் உள்நாட்டுப்பொறிமுறையிலிருந்து வெளிவர வாய்ப்பில்லை.  இதனையே காணமல்போனோர் விசாரணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம ' காணமல்போனோரின் எண்ணிக்கை மிகைப்படுத்தப்பட்டுள்ளது' எனத் தெரிவித்த கருத்தும் உறுதிப்படுத்திநிற்கின்றது. உண்மைகளை முறையாக தேடிக்கண்டறியும்  அக்கறையோ ஆர்வமோ இல்லாத நிலையிலும் பிறர் வெளியிடும் கருத்துக்களில் பொதிந்துள்ள உண்மைகளை ஏற்றுக்கொள்ளாமல் மறுதலிப்பதாலும் நிரந்தர நல்லிணக்கத்தை அடைந்துவிடமுடியாது

Monday, August 4, 2014

அரசியல் தீர்வை அடைய முடியும்.–பிரித்தானிய தூதுவர் உறுதிபடத் தெரிவிப்பு







மாற்றமா?

ஆசிரியர் தலையங்கம் -04-08-2014


இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோரை அவதூறுக்குட்படுத்தும் வகையில் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் வெளியாகியிருந்த கட்டுரை இந்திய அரசு தரப்பிலிருந்தும் தமிழ் நாட்டு அரசியல் தளத்திலிருந்தும் வந்த கடும் எதிர்ப்புக்களையும் கண்டனங்களையும் அடுத்து பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்திலிருந்து அவசரமாக நீக்கப்பட்டதுடன், இந்தச் செயலுக்காக என்றுமில்லாதவாறு விழுந்தடித்துக்கொண்டு மன்னிப்புக் கோரப்பட்டுள்ள விவகாரமானது இலங்கையில் மட்டுமன்றி இந்தியாவிலும் முக்கியதொரு விடயமாக பேசப்பட்டுக்கொண்டிருக்கின்றது.


கொடூர ஆயுத மோதல்கள் முடிவிற்குக் கொண்டுவரப்பட்ட போதும் இலங்கையில் உண்மையான நல்லிணக்கம் இன்னமும் அடையப்படவில்லை. அதற்கான அர்த்தபூர்வமான அடிப்படை நடவடிக்கைகளே எடுக்கப்படவில்லை என அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டுகின்ற மற்றும் அரசின் குறைகளை எடுத்துரைக்கின்ற அரச சார்பற்ற நிறுவனங்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் சிவில் சமூக அமைப்புக்கள் மீதும் நல்லெண்ணம் கொண்ட தனிப்பட்டோர் மீதும் அவப்பழிகளை சுமத்தியும் எவ்வளவிற்கு முடியுமோ அவ்வளவிற்கு அசிங்கப்படுத்தியும் இலங்கையின் அரச சார்பு ஊடகங்களில் ஆக்கங்களும் விவரணங்களும் பிரசுரிக்கப்படுகின்றமையும் ஒளி ஒலி பரப்பப்படுகின்றமையும் வழமையானதொருவிடயமாகிவிட்டுள்ளது. இதனை சுட்டிக்காட்டினால் அன்றேல் இது தொடர்பில் விளக்கம் கோரினால் தவறு சரி செய்யப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றதோ இல்லையோ நிச்சயமாக சம்பந்தப்பட்டவர்கள் மென்மேலும் அசிங்கப்படுத்தப்படும் ஏதுநிலையே இதுவரையில் நிலவிவந்துள்ளது.


இலங்கையில் இடம்பெற்ற இறுதிப்போரின் போது பொதுமக்கள் கொல்லப்பட்டமை தொடர்பாக தனது ஆவணப்படங்கள் மூலம்  உலகின் கவனத்தை ஈர்த்து நீதித் தேடலுக்கான பெரும் முயற்சிகளை மேற்கொண்டவரான சனல் 4 ஊடகவியலாளர் கெலும் மக்ரேயும் அவரது குழுவினருக்கும் எதிராக இலங்கையின் அரச ஊடகங்களில் மிகவும் கீழ்த்தரமான முறையில் ஆக்கங்கள் வெளியிடப்பட்டதையும் பொதுநல வாயப் மாநாடு தொடர்பாக கடந்த நவம்பரில் சனல் 4 குழுவினர் இங்கு வந்தபோது அவர்களது குழுவினர் பல தடவைகள் நேரிலே அவமானப்படுத்தப்பட்டமையும் மக்கள் மறந்திருக்கமாட்டார்கள். இதுபோன்று இன்னும் பல வெளிநாட்டு  மற்று உள்நாட்டு ஊடகவிலயாளர்களுக்கு எதிராகவும் மிகவும் கீழ்த்தரமான வகையில் ஆக்கங்கள் அரச  ஆதரவு ஊடகங்களில் வெளியாகியுள்ளன. உண்மைகளைச் சுட்டிக்காட்டுகின்ற  அரச சார்ப்பற்ற நிறுவனப்பிரதிநிதிகள், சிவில் சமூக அங்கத்தவர்களும் அரச சார்பு ஊடகங்களில் அவமானப்படுத்தப்படுவது வாடிக்கையாகிவிட்டது.



தாம் செய்வதெல்லாம் சரி மற்றவர்கள் எதைச் சுட்டிக்காட்டினாலும் அவர்கள் நாட்டுக்கு எதிராகத் துரோகம் செய்கின்றனர், விடுதலைப்புலிகளின் அடிவருடிகளாச் செயற்படுகின்றவனர் என வறட்டுத் தனமான வாதத்தை முன்வைத்து விறாப்புடன் நடந்து வந்த இலங்கை அரசு தனது போக்கை மாற்றிக்கொள்ளும் செயற்பாட்டின்  ஒரு கட்டமாகவா அன்றேல் எதிர்பார்த்திராத அளவிற்கு ஏற்பட்டுள்ள பாரிய அழுத்தங்களிலிருந்து விடுபடுவதற்கான தற்காலிக நடவடிக்கையாகவா இவ்வாறான ஒரு பகிரங்க மன்னிப்பை இந்தக் கட்டுரைவிடயத்தில் கோரியிருக்கின்றது என்பதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.

Sunday, August 3, 2014

காஸாவும் முள்ளிவாய்க்காலும்

ஆசிரியர் தலையங்கம் 03-08-2014



இன்றைய நாட்களில் காஸாவில் இஸ்ரேல் அரங்கேற்றிக்கொண்டிருக்கும் அட்டூழியங்கள் ஐந்துவருடகாலங்களுக்கு முன்னர் முள்ளிவாய்க்காலில் என்னவெல்லாம் நடைபெற்றிருக்கும் என்பதை மீண்டுமாக மனக்கண் முன்கொண்டுவந்து நிறுத்துகின்றன. தினம் தினம் வருகின்ற செய்திகளும் புகைப்படங்களும்  இரும்பான மனங்களிலும் கண்ணீரைச் சிந்தவைக்கும் அளவிற்கு நிலைமைகள் மோசமாகிக்கொண்டிருப்பதை துல்லியமாக உணர்த்துகின்றன.

குறிப்பாக உயிரற்ற நிலையில் சடலங்களாக்கிடக்கும் பாவமறியா பச்சிளம் குழந்தைகளினதும் குற்றுயிராக உயிராக ஜீவ மரணப்போராட்டத்தில் சிக்குண்டிருக்கும் சிறார்களினதும் புகைப்படங்களைப் பார்க்கையில் மனதை உருக்கும் வேதனையின் பரிமாணத்தை வார்த்தைகளால் விவரித்துவிடமுடியாது.

காஸா மீது காட்டுமிராண்டித்தனமாக இஸ்ரேல் கட்டவிழ்துவிட்டுள்ள புதிய கட்டத்தாக்குதல்கள் இன்றுடன் 27வது நாட்களை எட்டியிருக்கின்ற நிலையில் நேற்று வரையில் 1600ற்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 8000ற்கு அதிகமானோர் காயமுற்றுள்ளனர். உயிரிழந்த மற்றும் காயமுற்றோரில் அனேகமானோர் பொதுமக்களாக அதிலும் குறிப்பாக சிறுவர்களும் பெண்களுமாக இருப்பதில் இருந்து போரென்பது உண்மையில் யாரை அதிகமாக பாதிக்கின்றதென்பதை புரிந்துகொண்டுவிடலாம்.

மத்தியதரைக்கடலைக் மேற்கு எல்லையாகக் கொண்டுள்ள காஸா மொத்தமாக கொண்டுள்ள 360 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ள சிறிய நிலப்பிரதேசமாகும். 41 கிலோ மீற்றர் நீளத்தையும் 6 முதல் 12 கிலோ மீற்றர் வரையான அகலத்தையும் கொண்டுள்ள காஸா நிலப்பரப்பில் 18 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வாழ்வதாக பரவலாக தகவல்கள் பதியப்பட்டுள்ளன. இந்தச் சிறிய நிலப்பரப்பிற்குள் இவ்வளவு தொகையான மக்கள் வாழ்வதையும் பொருட்படுத்தாது இஸ்ரேலிய படைகள் முன்னெடுத்துவரும் மிலேச்சத்தனமான தாக்குதல்களால் காஸா இன்றொரு கொலைக்களமாக மாற்றம்பெற்றிருக்கின்றது.

ஐந்துவருடங்களுக்கு முன்னர் காஸாவிலும் பார்க்க பன்மடங்கு சிறிதான முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் ஏறத்தாழ அரைமில்லியன் மக்கள் அடர்த்தியாக குவிந்திருந்த பிரதேசத்தில் தாக்குதல் நடத்தப்பட்டபோது மக்கள் பட்ட துன்ப துயரங்களை எண்ணிப்பார்க்கும் ஒவ்வொரு தருணத்திலும் இதயத்தில் ஆறாத வலிகள் பெருக்கெடுப்பதை மறுத்துவிடமுடியாது.

காஸா மீது இஸ்ரேல் அதி நவீன ஆயுதங்களைக் கொண்டு தரைவழியாகவும் வான் வழியாகவும் மேற்கொள்ளும் தாக்குதல்களால் உயிர்களுக்கும் உடைமைகளுக்கு ஏற்பட்டுவருகின்ற சேதங்களின் ஒட்டுமொத்த பரிமாணத்தை விளங்கிக்கொள்ள முடியாவிட்டாலும் கணிசமான அளவிற்கு அங்கு நடைபெறும் அட்டூழியங்களை அங்கு களத்திலே நேரடியாக நின்று செய்திசேகிக்கின்ற செய்தியாளர்களும் புகைப்படப் பிடிப்பாளர்களும் வெளிக்கொண்டுவருகின்றனர். இவர்களில் பலர் சர்வதேசத்திலுள்ள முன்னணி செய்தி ஊடகங்களின் செய்தியாளர்களாகவும் இருப்பதால் அந்த ஊடகங்களுடாக உலகெங்கும் காஸாவின் துயரம் சென்றடையும் சந்தர்ப்பம் இதுவரையில் கிட்டியிருக்கின்றது.

அத்தோடு ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்களும் காஸாவில் இன்னமும் பிரசன்னமாகியிருப்பதனால் அடைக்கலம் தேடி உயிரையேனும் காத்துக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையாவது எஞ்சியிருக்கும். ஆனால் அந்த நம்பிக்கை கூட அருகிப்போவதாக ஐநாவின் பராமரிப்பிலிருக்கும் பாடாசாலை அகதி முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் கடந்த வாரத்தில் 15ற்கு மேற்பட்டோர் கொல்லப்பட்ட தாக்குதல் உணர்த்துகின்றது. இதுபோன்ற சம்பவங்களால் நம்பிக்கை நாளாந்தம் தகர்ந்துபோனாலும் ஐநா போன்ற அமைப்புக்களின் பிரசன்னம் இருக்கும் வரையில் பாதிக்கப்படும் மக்களுக்கு ஏதோ ஒரு நம்பிக்கை மிஞ்சியிருக்கும் என்பதை புரிந்துகொள்ளலாம்.

ஐநா தரப்பினரின் பிரசன்னம் இருக்கின்ற நிலையிலேயே இஸ்ரேலிய படையினர் நடத்தும் தாக்குதல்களின் மிலேச்சத்தனம் இப்படியிருக்கின்றதென்றால் ஐக்கிய நாடுகள் சபைபோன்ற சர்வதேச அமைப்புக்களோ சர்வதேச ஊடகவியலாளர்களோ ஏன் உள்நாட்டு ஊடகவியலாளர்களோ இன்றிய நிலையில்  முள்ளிவாய்க்காலில் நிகழ்த்தப்பட்ட கொடூரங்கள் எந்தளவிற்கு அகோரமானதாக இருந்திருக்கும் என்பதை சிந்தித்துப்பார்க்கவே நெஞ்சம் பதைக்கின்றது.

முப்பதாண்டு கால யுத்தத்தின் வடுக்கள் ஆறக் காலம் எடுக்கும்  என அடிக்கடி கூறுவதனாலோ அதன் படி காலத்தின் ஓட்டத்தாலோ  மக்களுக்கு ஏற்பட்ட இழப்புக்களின் வலிகளை இல்லாமல் செய்து இந்த நாட்டில் நல்லிணக்கத்தை அடைந்துவிடமுடியாது . நடுநிலை ஊடகவியலாளர்களினதோ நடுநிலையான உலக அமைப்புக்களினதோ பிரசன்னமின்றி முன்னெடுக்கப்பட்ட இறுதி யுத்தத்தில் என்ன நடைபெற்றது என்பதை உண்மையாக அறிந்துகொள்வதற்கு ஐநா வின் சர்வதேச விசாரணைக் குழுவுடன் ஒத்துழைப்பதும் தாமாக அமைத்துள்ள விசாரணைக்குழுவை சுதந்திரமாக செயற்பட அனுமதிப்பதும் முக்கியமானதாகும்.

எமது நாட்டில் நிரந்தர நல்லிணக்கத்தை அடைவதற்கான அர்த்தபூர்வமான முதற்படியாக அமையக்கூடிய இந்த விசாரணைகளை அரசு இதயசுத்தியுடன் அணுகுமேயானால் அடுத்தடுத்த படிகளும் தொடர்ந்து நம்பகத்தன்மை கொண்டவையாகவும் ஆக்கபூர்வமாகமானவையாகவும் அமையும் என்பதில் ஐயமில்லை.