Monday, February 15, 2021

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை பின்னணி தொடர்பான சர்ச்சைகள்…?



பொத்துவில் தொடங்கி பொலிகண்டிரை பேரணி, சற்றும் எதிர்பாராத வகையில் பெருந்திரளான மக்கள் ஒன்றுதிரள்வதற்கு காரணமானது. பொத்துவிலில் விரல்விட்டு எண்ணக் கூடிய நிலையிலிருந்த பேரணி, பொலிகண்டியில் பல்லாயிரக்கணக்கானவர்களோடு நிறைவுற்றது. 2009இற்கு பின்னர் இடம்பெற்ற ஜனநாயக எதிர்ப்பு நடவடிக்கைகளோடு ஒப்பிட்டால் இது உச்சமானது. ஆனால் பேரணி மெதுவாக நகரத் தொடங்கிய போது  கூடவே, இதன் உரிமையாளர்கள் தொடர்பான கேள்விகளும் சர்ச்சைகளும் இணைந்துகொண்டது. இவ்வாறான நிகழ்வுகள் இடம்பெறும் போது இது ஓரளவு எதிர்பார்க்கக் கூடிய ஒன்றும்தான். 

இந்த ஏற்பாட்டிற்கு பின்னால் சிவில் சமூக அமைப்புக்கள் இருப்பதாக கூறிக்கொண்டாலும் கூட, ஒரு குறிப்பிட்ட கட்டம் வரைக்கும், சிவில் சமூக தலைவர்களின் பெயர்களே வெளியில் வரவில்லை. இந்த இடத்தில்தான் பிரச்சினை கருக்கொண்டது. திருகோணமலையில் பிரச்சினை வெளியில் முகம்காட்டியது. திருகோணமலை சிவின் கோவிலடியில் இடம்பெற்ற ஆதரவுக் கூட்டத்தின் போது, சிவில் சமூக அமைப்புக்களின் சார்பில் பேசிய கத்தோலிக்க மதகுரு எழில் - பேரணியுடன் நிழலாக தொடரும் பிரச்சினைகளை போட்டுடைத்தார். தமிழ் இனம் காலம்காலமாக வரலாற்றில் எட்டப்பர்களை சந்தித்து வருவதாகவும் நேற்றைய தினம் (முதல் நாள் பேரணியில்)  ஒரு கட்சியின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள், போராட்டத்தை திசைதிருப்ப முற்பட்டதை வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இதன் போது, அங்கு நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்தின், சாணக்கியன் ஆகியோர் பிரச்சன்னமாகியிருந்தனர். 

குறித்த மதகுருவின் கருத்து மறைமுகமாக சுமந்திரனும் சாணக்கியனும் புதிய எட்டப்பர்களாக தொழிற்படுவதான ஒரு காட்சியை உருவாக்கியது. உண்மையில் இவ்வாறான அபிப்பிராயங்கள்; அவ்வாறானதொரு இடத்திற்கு பொருத்தமானதல்ல. அவை பொறுப்பற்ற வார்த்தைகள்தான்.  இதனைத் தொடர்ந்தே பொத்துவில் தொடங்கி பொலிகண்டிவரை – பேரணியின் உரிமையாளர்கள் யார்? என்னும் சர்ச்சைகள் எட்டிப்பார்த்தன. அதாவது, சிவில் சமூகமென்று கூறிக்கொண்டாலும் கூட, உண்மையில் கூட்டமைப்பே இதற்கு பின்னால் இருப்பதாக, குறிப்பாக சுமந்திரன் இருப்பதான ஒரு அபிப்பிராயம் வெளியில் வந்தது. இதன் உண்மை பொய்க்கு அப்பால், நிகழ்வின் முடிவில், பேசுகின்ற போது, பொத்துவிலில் இந்த நிகழ்வை ஆரம்பித்தவர்கள் முடித்துவைக்கின்றோம். இடையில் வந்தவர்கள் போய்விட்டார்கள் ஆனாலும் நாங்கள் ஒற்றுமையை பேணிப்பாதுகாக்க வேண்டுமென்று, சுமந்திரன் பேசியிருந்தார். இதன் பொருள் என்னவென்பதில் தெளிவில்லை. ஏற்பாட்டாளர்கள் என்போரும் இது தொடர்பில் இதுவரையில் வாய்திறக்கவில்லை. 

ஆனால் ஒரு விடயம் வெள்ளிடைமலை. அதாவது, பொத்துவிலில் பேரணி ஆரம்பிக்கும் போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சாணக்கியன் ராஜபுத்திர ராசமாணிக்கம் ஆகியோர் அங்கு பிரசன்னமாகியிருந்தனர். அதே போன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினரான சட்டத்தரணி சுகாசும் பங்குகொண்டிருந்தார். பேரணி, கிழக்கின் நகரங்களை ஊடறுத்துச் சென்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சுமந்திரன் மற்றும் சாணக்கியன் ஆகியோர், முக்கிய பங்கு வகித்ததாகவே கூறப்படுகின்றது. குறிப்பாக பொத்துவிலில் இந்த பேரணியை ஆரம்பித்த போது, பொலிசார் சில தடைகளை ஏற்படுத்த முயற்சித்திருந்தனர். பொலிசாரின் தடையுத்தரவை மீறியும் செல்லலாம் என்பதற்கான வழியை அவர்களே திறந்துவிட்டதாகவும் ஒரு வேளை அவர்கள் அந்த இடத்தில் பின்வாங்கியிருந்தால் இந்தப் பேரணியின் முடிவு வேறுவிதமாகவும் அமைந்திருக்கலாம் என்றும் ஒரு கருத்துண்டு. தான் வரும்வரையில் பேரணியை ஆரம்பிக்காமல் காத்திருந்ததா சில தினங்களுக்கு முன்னர் ஒரு நேர்காணலில் சுமந்திரன் குறிப்பிட்டிருந்தார். இவ்வாறானதொரு பின்னணியில்தான், குறித்த சூழலில், பேரணியை முழுமையாக வழிடந்தும் பொறுப்பும் அவர்களிடம் சென்றது. இது இயல்பான ஒன்றுதான்.  ஒரு குறிப்பிட்ட நெருக்கடியின் போது, எவர் நெருக்கடியை எதிர்கொள்ளும் பொறுப்பை ஏற்கின்றாரோ அல்லது அதற்கான ஆத்மபலத்தை வழங்குகின்றாரோ – அவர்களிடம் இயல்பாகவே தலைமை சென்றுவிடும்.  பேரணி, கிழக்கின் பல நகரங்களை ஊடறுத்துச் சென்ற ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும், சுமந்திரனும் சாணக்கியனுமே முன்னிலையில் தெரிந்தனர். குறிப்பாக முஸ்லிம்களின் ஆதரவை பெறுவதில் இவர்களின் பங்களிப்பே முதன்மையானது. ஏனெனில் சிவில் சமூகமாக தங்களை அடையாளப்படுத்தியிருந்த எவருமே முஸ்லிம்களின் ஆதரவை பெறக் கூடிய தகுதிநிலையில் இருந்திருக்கவில்லை. மேலும் வடக்கு கிழக்கு சிவில் சமூகம் என்பதில் முஸ்லிம் சிவில் சமூக அமைப்புக்களோ அல்லது மதத் தலைவர்களோ உள்வாங்கப்பட்டிருக்கவுமில்லை. ஆரம்பத்தில் பேரணி தொடர்பில் பல்வேறு இடங்களிலும் சுமந்திரனே உரையாற்றியிருந்தார்.

இது ஒருவிதமான சர்ச்சையென்றால் இந்தப் பேரணி மெதுவாக நகர்ந்துகொண்டிந்த போதுஇ பறிதொரு சர்ச்சையும் மெதுவாக கண்சிமிட்டியது. இது மிகவும் பழகிப்போன சர்ச்சைதான். இதுவும் எதிர்பார்க்கக் கூடிய ஒற்றே! இப்போதும் இந்த சர்ச்சை ஆங்காங்கே எட்டிப்பார்ப்பதால் இந்த முடிச்சையும் அவிழ்ப்பது நல்லதே! 

இந்த நிகழ்விற்காக வடக்கு மற்றும் கிழக்கிற்கான இணைப்பாளர்களாக இருவர் நியமிக்கப்பட்டிருந்தனர். வடக்கிற்கு இணைப்பாளராக நியமிக்கப்பட்டவர் எஸ்.சி.சி.இளங்கோவன். கிழக்கிற்கான இணைப்பாளராக நியமிக்கப்பட்டவர் சீலன் என்று அழைக்கப்படும் எஸ்.சிவயோகநாதன். இது ஏற்கனவே ஊடகங்களிலும் வெளியாகிருந்தது. 

இந்த இடத்திலிருந்துதான் சர்ச்சையும் கருக்கொண்டது.  இளங்கோவன்  சந்திரகாசனின் புதல்வர். அதாவது, தமிழரசு கட்சியின் தந்தையான எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் பேரன். சந்திரகாசனின் ஆரம்பகாலம் தொடர்பில் ஒரு சர்ச்சையுண்டு. தமிழ் இயக்கங்களுக்கு இந்தியா பயிற்சி வழங்கிய காலத்தில்இ இந்திய உளவுத்துறையான றோவிற்கும் தமிழ் இயக்கங்களுக்கும் இடையிலான தொடர்பாளராக,அவர் செயற்பட்டதாக கூறப்படுவதுண்டு. இது தொடர்பில் அன்ரன் பாலசிங்கம் தனது போரும் சமாதானமும் நூலிலும் பதிவு செய்திருக்கின்றார்.  ஆனால் அண்மையில் பேராசிரியர் சூரியநாராயணன் வெளியிட்டிருக்கும் ஹக்சர் : இந்தியாவின் இலங்கை தொடர்பான கொள்கை என்னும் நூலில் - பலரும் வெளியில் கூறுவதுபோன்று, சந்திரகாசனுக்கும் றோவிற்கும் எவ்வித தொடர்புமில்லை - உயர்மட்ட தகவல்களின்படி இவ்வாறான ஒருவர் தொடர்பில் இருந்ததாக எவ்வித தகவல்களும் இல்லையென்று வாதிட்டிருக்கின்றார். ஆனால் ஒரு தகவல் பொதுவெளியில் பதிவு செய்யப்பட்டுவிட்டால் பின்னர் அதனையே பலரும் நம்புவதுண்டு. இதில் பிறிதொரு நெருடலான பக்கமும் சிலரிடமுண்டு. அதாவதுஇ குறித்த இளங்கோவனும் சிவயோகநாதனும் ஏற்கனவே தொடர்பிலிருப்பவர்கள்.  கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது, இளங்கோவன் கூட்டமைப்பு சார்பில், திருகோணமலையில் போட்டியிடுவதற்கு முயற்சித்திருந்தார். ஆனாலும் சம்பந்தன் போட்டியிடும் முடிவை அறிவித்த நிலையில் ஒதுங்கிக்கொண்டார். 



இளங்கோவன் வடக்கிற்கான இணைப்பாளராக செயற்பட்டதை அடிப்படையாகக் கொண்டுதான்இ இதற்கு பின்னால் இந்தியா இருப்பதான ஒரு அப்பிராயத்தையும் சிலர் கூறமுற்பட்டனர். என்னுடன், ஒரு புலம்பெயர் நன்பர் இது தொடர்பில் வாதிட்டார். நான் அதற்கான வாய்ப்புக்கள் இல்லையென்றேன். ஆனால் அவரோ இல்லை - இதற்கு பின்னால் அவர்கள்தான் இருக்கின்றனர். இருந்தாலும் உங்களை போன்றவர்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றார். பொதுவாக வடக்கு கிழக்கில் இடம்பெறும் பல்வேறு விடயங்களையும் இந்திய உளவுத்துறையோடு தொடர்புபடுத்தும் ஒரு போக்கொன்று நீண்டகாலாகவே இருந்து வருகின்றது. இதற்கு யாழ்ப்பாணத்தை மையப்படுத்தி இயங்கும் சில அரசியல்வாதிகளின் பிரச்சாரங்களும் ஒரு காரணம். ஏற்கனவே இவ்வாறான கட்டுக்கதைகளுக்கு பழக்கப்பட்டவர்கள்இ கிழக்கு கொள்கலன் முனைய விவகாரத்தில் ஏற்பட்ட நெருக்கடியை மனதில்கொண்டே, இவ்வாறானதொரு ஊகத்தை விழுங்கியிருக்கின்றனர்.  

உண்மையில் எந்தவொரு வெளித்தரப்பும் இலகுவில் அடையாளம் காணக் கூடியவர்களை முன்னிலைப்படுத்தி, ஒரு போதுமே இவ்வாறான நடவடிக்கைகளை திட்டமிடாது. உண்மையில் இந்தப் பேரணி நன்கு திட்டமிட்டுஇ குறுகிய கால, நீண்டகால நோக்கங்களை துல்லியமாக ஆராய்ந்து மேற்கொண்டதொரு நடவடிக்கையுமல்ல. இந்தப் பேரணியை பொறுத்தவரையில்இ இது நாங்களும் ஒன்றை செய்ய வேண்டுமென்னும் உத்வேகத்தில் மேலெழுந்த விடயமேயன்றி, இதற்கு வேறு பரிமாணங்கள் இல்லை. இதில் புலம்பெயர் குழுக்கள் சிலவற்றின் தலையீடுகளும் இருந்திருக்கலாம். ஏனெனில் பொலிகண்டியில் வாசிக்கப்பட்ட பிரகடனத்தில் சர்வதேச கண்காணிப்புடன் கூடிய பொதுசன வாக்கெடுப்பு தொடர்பிலும் வலியுறுத்தப்பட்டிருக்கின்றது. இவ்வாறான கோரிக்கைகள் சிவில் சமூகமென்று தங்களை அடையாளப்படுத்துபவர்களின் சொந்த புத்தியின் வெளிப்பாடாக இருக்க வாய்ப்பில்லை. ஒரு வேளை சிலர் கூறுவது போன்று இந்தியா இதற்கு பின்னாலிருப்பது உண்மையெனின் இவ்வாறான விடயங்கள் நிச்சயம் இதில் இடம்பெற்றிருக்காது. உண்மையில் பொதுசன வாக்கெடுப்பு தொடர்பான கோரிக்கை நாடுகடந்த தமிழீழ அரசாங்கமாக தங்களை அடையாளப்படுத்துபவர்கள் நீண்டகாலமாக முன்வைத்துவரும் கோரிக்கையாகும். சுமந்திரன் தனது நாடாளுமன்ற உரையில் இந்தக் கோரிக்கையை தவிர்த்திருந்தார் இதனடிப்படையிலேயே கஜேந்திரகுமார் போராட்டத்தை சுமந்திரன் கொச்சைப்படுத்திவிட்டதாக குற்றம் சாட்டியிருக்கின்றார். ஆனால் இது தொடர்பிலும் சிவில் சமூகமென்பவர்கள் வாய்திறக்கவில்லை. 

வடக்கு கிழக்கை பொறுத்தவரையில் சிவில் சமூக அமைப்புக்கள் என்று தெளிவாக வரையறுக்கக் கூடிய நிலையில் எந்தவொரு அமைப்போ அல்லது அமைப்புக்களின் ஒன்றியமோ இல்லை. இந்த நிகழ்விற்கு வடக்கு கிழக்கு சிவில் சமூகம் தலைமையேற்றிருப்பதாக கூறிக்கொண்டாலும் கூட, உண்மையில் அவ்வாறானதொரு கட்டமைக்கப்பட்ட அமைப்பு வடிவமொன்று இல்லை. ஒவ்வொரு மாவட்டங்களிலும் அரசுசாரா நிறுவன செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள், அரசியல் விடயங்களில் ஆர்வமுள்ள தனிநபர்கள், அவ்வாறான தனிநபர்களோடு இணைந்திருக்கும் சிறிய குழுவினர் என்னும் அடிப்படையில்தான் இவ்வாறான சிவில் சமூக செயற்பாடுகள் அடையாளப்படுத்தப்படுகின்றன. இந்த பேரணிக்கான ஏற்பாட்டின் போதும் இதுதான் நடந்திருக்கின்றது. இந்த நிகழ்விற்கான ஏற்பாடுகளில் முன்னின்று செயற்பட்டவர்களாக கூறப்படும் எவருமே குறித்த மாவட்டங்களின் வலுவான அமைப்புக்களை கொண்டிருப்பவர்கள் அல்லர். உதாரணமாக சிவில் சமூக அமைப்புக்களின் ஒன்றியம் என்னும் பெயரிலேயே திருகோணமலையில் ஒரு அறிக்கை வாசிக்கப்பட்டது. ஆனால் ஒழுங்குபடுத்தப்பட்ட அவ்வாறானதொரு சிவில் சமூக அமைப்பு திருகோணமலையில் இல்லை. இறுதியாக இடம்பெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் போது, சிவில் சமூக அமைப்புக்களின் கூட்டமைப்பு என்னும் பெயரிலேயே ஒரு குழுவினர் தேர்தலில் போட்டியிட்டிருந்தனர். உண்மையில் தமிழ் சூழலை பொறுத்தவரையில்இ சிவில் சமூகம் என்னும் சொல் ஒரு உடனடி உணவு போன்றது. எவர் வேண்டுமானாலும் தங்களை உடனடியாகவே சிவில் சமூகமாக்கிக்கொள்ளலாம். வடக்கு கிழக்கை பொறுத்தவரையில், அரசியல் கட்சிகளை ஒரு புள்ளியில் இணைப்பது, கல்லில் நாருரிக்கும் செயற்பாடு என்பதாலேயே, வெளியில் காண்பிப்பதற்கு ஒரு முகம் தேவைப்படுகின்றது. அந்த முகம்தான். சிவில் சமூகம். 2009இற்கு பின்னர் இடம்பெற்ற இவ்வாறான அனைத்து நிகழ்வுகளின் போதும் அரசியல்வாதிகளின் பங்களிப்பே முதன்மையாக இருந்தது. இந்த யதார்த்தத்தை புறம்தள்ளி எந்தவொரு நிகழ்வையும் முன்னெடுக்க முடியாது. சிவில் சமூகக் குழுக்கள் என்போரும், அரசியல் கட்சிகளும் இணைந்து சில விடயங்களை முன்னெடுக்கும் போது, அரசியல்வாதிகள் சில இடங்களில் அதிகம் தலைநீட்டுவதற்கான வாய்ப்புக்கள் உண்டு. அதனை முற்றிலுமாக தவிர்ப்பதும் கடினமானது. ஏனெனில் இவ்வாறான நிகழ்வுகளின் போது அரசியல்வாதிகளே சிவில் சமூகமென்று அழைக்கப்படுவர்களுக்கான பாதுகாப்ப கவசமாக இருக்கின்றனர். 

இந்த சர்ச்சைகளுக்கெல்லாம் அப்பால்இ தமிழ் மக்கள் தங்களுக்குள் அடங்கிக்கிடந்த உணர்வை வெளிப்படுத்துவதற்கான ஒரு களமாக இதனை பயன்படுத்திக்கொண்டனர் என்பதில் எந்தவொரு சர்ச்சையுமில்லை. தமிழ் மக்களை பொறுத்தவரையில் இயல்பாகவே ராஜபக்சக்களின் அரசாங்கத்தை எதிர்க்கின்றனர். அண்மைக்காலமாக அரசாங்கம் கடைப்பிடித்துவருகின்ற மேலாதிக்க போக்குகள் அவர்கள் மத்தியில் மேலும் எதிர்புணர்வை ஏற்படுத்தியிருக்கின்றது. இவ்வாறான சூழலில்தான் இந்த நிகழ்வு திட்டமிடப்பட்டிருந்தது. அதிலும் பொத்துவிலில் கடும் மழையையும் பொருட்படுத்தாது. பொலிசாரின் தடைகளையும் உடைத்துக் கொண்டு பேரணி முன்னேறிவருகின்றது – அதனுடன் மக்கள் அணிதிரளுகின்றனர் - என்னும் செய்தியும் அடித்தள மக்களை தூண்டியது. ஏதிர்பாராத வகையில் மக்கள் அணிதிரண்டனர். கவனிக்க அர உத்தியோக மத்தியதர வர்க்கமல்ல.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில்இ இலங்கையின் மீது மீண்டுமொரு புதிய பிரேரணையொன்றை கொண்டுவரவுள்ளதாக கூறப்படும் நிலையிலேயேஇ இந்த எதிர்ப்பு பேரணி இடம்பெற்றிருக்கின்றது. இந்த ஏற்பாட்டில் பிரதான பங்குவகித்தவராக கருதப்படும் வேலன் சுவாமி என்பவர் இதனை வெளிப்படையாகவே தெரிவித்திருக்கின்றார். அதாவது, கடந்த மாதம் பிரதான மூன்று கட்சிகளும் இணைந்து மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளருக்கு அனுப்பிய அறிக்கைக்கு வலுச்சேர்க்கும் வகையிலேயே தாம் இதனை திட்டமிட்டதாகவும் ஆனால் தாங்கள் இந்தளவு மக்கள் திரளுவார்களென்று உண்மையிலேயே எதிர்பார்க்கவில்லையென்றும் அவர் தெரிவித்திருக்கின்றார். இந்த நிகழ்வை உற்று நோக்கும் ஒருவருக்கு இது தெளிவாகவே விளங்கும். ஆனால் இவ்வாறான எதிர்ப்பு பேரணிகளால் குறித்த பிரேரணையின் உள்ளடக்கத்தில் மாற்றங்களை ஏற்படுத்த முடியுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் நீதிக்கான பயணத்தில் தமிழ் மக்கள் நம்பிக்கையிழந்துவிடவில்லை - இப்போதும் உறுதியுடன்தான் இருக்கின்றனர் என்பதை காண்பிப்பதில், இந்தப் பேரணிக்கு  ஒரு முக்கியத்துவம் உண்டு.  

அதே வேளை, இந்த பேரணி புலம்பெயர் நாடுகளிலுள்ள செயற்பாட்டாளர்கள் மத்தியில் ஒரு வகையான உற்சாக மனோநிலையை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்த இடத்தில்தான் ஆபத்தும் வந்து சேர்கின்றது. இந்த பேரணிக்கு ஆதரவு தெரிவித்திருக்கும் புலம்பெயர் குழுக்கள் - தங்களின் ஆதரவை காட்சிப்படுத்தும் போது புலிக்கொடிகளுடன் தங்களை அடையாளப்படுத்தியிருக்கின்றனர். இது எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும். உண்மையில் இதனால் தென்னிலங்கையே நன்மையடையும். அதே வேளை பேரணியின் போதும் சில விடயங்கள்  இடம்பெற்றிருக்கின்றன. அவை தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். இந்தப் பேரணிஇ கிழக்கில் ஒரு விதமாகவும் வடக்கில் வேறொரு விதமாகவும் இடம்பெற்றிருக்கின்றது. இந்தப் பேரணியின் போதுஇ யாழ்ப்பாணத்தில் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டிருக்கின்றது. அதே போன்று விடுதலைப் புலிகளின் முதலாவது கரும்புலி உறுப்பினரான மில்லருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டிருக்கின்றது. இவைகள் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான களம் இதுவல்ல. சிவில் சமூகத்தின் ஏற்பாட்டில்இ மக்கள் தன்னிச்சையாக எழுச்சியுற்றனர் - என்னும் செய்தியை சொல்வதே ஏற்பாட்டாளர்களின் நோக்கமெனின், இவ்வாறான அடையாளப்படுத்தல்கள் தவிர்க்கப்பட்டிக்க வேண்டும். கிழக்கில் முஸ்லிம் மக்கள் பெருமளவிற்கு இதற்கு ஆதரவு வழங்கியிருந்தனர். அதே போன்று வவுணியா மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளிலும் முஸ்லிம் மக்கள் பெருமளவில் ஆதரவு வழங்கியிருந்தனர். எதிர்காலத்தில்இ இவ்வாறான ஜனநாயக எதிர்ப்புக்களின் போது, முஸ்லிம்களையும் இணைத்துக் கொண்டு செல்லும் நோக்கம் இருப்பின், சுலோகங்களிலும் அடையாளப்படுத்தல்களிலும் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும். வெளிப்படுத்த முயலும் செய்தியில் கவனம் செலுத்த வேண்டுமேயன்றி, சுய அடயாளப்படுத்தல்களில் அல்ல. முதல் பார்வையில் பொத்துவில் தொடங்கி பொலிகண்டிவரை – மக்களை பெருந்திரளாக்கியதில், எதிர்பாராத வெற்றியை கொடுத்திருக்கின்றது. இரண்டாவது பார்வையில் பேரணியின் போது இடம்பெற்ற சில விடயங்கள் அதன் தோல்வியாகவும் இருக்கின்றது. எந்தவொரு எழுச்சியினதும்இ முழுமையான வெற்றியானது, அதன் இறுதி அடைவினால்தான் தங்கியிருக்கின்றது. 

கட்டுரை ஆக்கம் யதீந்திரா 

No comments:

Post a Comment