Saturday, February 27, 2021

இலங்கை – பாகிஸ்தான் நட்புறவு: இந்தியாவிற்கு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் ?

 




பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பிப்ரவரி 23, 24 திகதிகளில் இலங்கைக்கு விஜயம் செய்த நேரத்தில் அவரின் நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கான அழைப்பை ரத்து செய்ததால் சர்ச்சைகள் கிளம்பியது. ஆனால் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு முன்பை காட்டிலும் அதிக வலுவுடையதாகவே இருக்கிறது. எனவே இந்த ரத்து அவர்களின் நீண்ட, நிலையான உறவில் எந்த பாதிப்பினையும் ஏற்படுத்தவில்லை.

தெற்காசியாவில் பாகிஸ்தான் இலங்கையின் இரண்டாவது மிகப்பெரிய வர்த்தக கூட்டாளி நாடாகும். பிப்ரவரி 18ஆம் திகதி அன்று இம்ரான்கான் வருகைக்கு முன்பு வர்த்தகச் செயலாளர்கள் மட்ட பேச்சுவார்த்தைகளின் போது இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகத்தில் உள்ள தொழில்நுட்ப சிக்கல்களை தீர்க்க ஒரு கூட்டு செயற்குழுவை மீண்டும் செயல்படுத்த முடிவு செய்துள்ளதாக டான் (Dawn) பத்திரிக்கை செய்தி வெளியிட்டிருந்தது.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான சுதந்திரமான வர்த்தக ஒப்பந்தம் 2005ஆம் ஆண்டிலிருந்து நடைமுறையில் உள்ளது. இலங்கைக்கு பாகிஸ்தான் ஜவுளி மற்றும் சிமெண்ட் பொருட்களை ஏற்றுமதி செய்கிறது. அதேபோன்று இலங்கை பாகிஸ்தானுக்கு தேயிலை, இரப்பர் மற்றும் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி செய்கிறது. கடந்த காலங்களில் பாகிஸ்தான் அதனுடைய பண்டைய புத்த தொடர்புகளையும் தளங்களையும் முன்னிலைப்படுத்தி இலங்கையுடன் ஒரு கலாச்சார இணைப்பில் பணியாற்ற முயன்றது.



இலங்கை மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான இருதரப்பு உறவுக்கு மிகவும் வலுவான தூணாக அமைந்தது பாதுகாப்பு. ஐ.பி.கே.ஃஎப் பணியில் இருந்து இந்தியா 1990ல் வெளியேறிய பிறகு இலங்கை ராணுவத்திற்கு எந்த விதமான பாதுகாப்பு ஆதரவினையும் வழங்க வில்லை. இருப்பினும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் உளவுத்துறை உதவிகளை வழங்கியது. இறுதிகட்ட போரின்போது தேவைப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் போன்றவற்றிற்காக இலங்கை பாகிஸ்தானை நாடியது. போர் விமான விமானிகளுக்கு பயிற்சி அளிக்கவும் பாகிஸ்தானின் ஆதரவை நாடியது. அப்போது இலங்கையின் பாதுகாப்புச் செயலாளராக இருந்த அன்றைய அதிபர் கோத்தபாய ராஜபக்‌ஷே 2008ஆம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு வருகை புரிந்து போருக்கான ராணுவ பொருட்கள் வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

உதகை வெலிங்டனில் உள்ள தேசிய பாதுகாப்பு  மற்றும் பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரியில் பயிற்சிக்காக இலங்கை ராணுவ அதிகாரிகள் இந்தியாவுக்கு வருவது போல (ஜனாதிபதி ராஜபக்‌ஷே ஒரு பழைய மாணவர்)இ அவர்கள் பாகிஸ்தான் ராணுவ கல்விக்கூடங்களுக்கு செல்கிறார்கள். இந்த மாத தொடக்கத்தில்இ பாகிஸ்தானின் பல நாடுகளின் கடற்படைப் பயிற்சியான அமன் -21 இல் இலங்கை பங்கேற்றது.

1971ம் ஆண்டு போரின் போது பாகிஸ்தானின் போர் விமானங்கள் எரிபொருளை இலங்கையில் நிரப்பின. இலங்கைக்கான பாகிஸ்தானின் தூதர்கள் பெரும்பாலும் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் தான். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பாகிஸ்தானுக்கான இலங்கை உயர் ஆணையர்களும் ராணுவ வீரர்களாகவே இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

2006 ஆம் ஆண்டு கொழும்புவில் இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஆணையர் முகமது வாலி அலுவலகம் விடுதலைப்புலிகளால் தாக்கப்பட்டது. அவர் முன்னாள் உளவுத் துறை தலைவரும் கூட. அவர் அந்த தாக்குதலில் இருந்து உயிர் தப்பினார் இருப்பினும் அந்த தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர்.  இம்ரான் கானின் வருகை பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு வழி வகுத்தது. பாதுகாப்பு துறையில் 50 மில்லியன் அமெரிக்க டாலர்கள் உதவி என்பது தலைப்பு செய்திகளாக இருந்தன.



கண்டியின் பேராதெனியபல்கலைக்கழகத்தில் ஆசிய கலாச்சாரம் மற்றும் நாகரீகம் தொடர்பாக பாகிஸ்தான் ஒரு மையத்தை உருவாக்க உள்ளது. நாடாளுமன்ற உரை ரத்து செய்யப்பட்ட பின்பும் கூட, அங்கிருக்கும் ஒரு விளையாட்டு அரங்கிற்கு இம்ரான் கானின் பெயர் சூட்டப்பட்டு இரு நாடுகளுக்கும் இடையேயான கிரிக்கெட் தொடர்பை வெளிப்படுத்தினர்.

உறுதியான விளைவுகளை தவிர பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இந்த வருகை மிகவும் முக்கியமானது. இம்ரான் கான் பிரதமராக பதவியேற்ற பிறகு இது இரண்டாவது சுற்றுப்பயணம் ஆகும்.  கடந்த நவம்பர் மாதத்தில் அவர் ஆப்கானிஸ்தானுக்கு சென்றார். இறுதியாக இலங்கைக்கு வந்த பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப். பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் முயற்சியில் இந்தியாவின் பங்கு சிறப்பாக இருந்தபோதிலும் இஸ்லாமாபாத்திற்கு அண்டை நாடுகளின் நட்புறவு இருக்கிறது என்பதை உறுதி செய்தது அந்த வருகை. தொற்று நோய் பரவலுக்கு பிறகு இலங்கைக்கு விஜயம் செய்த முதல் அரசாங்க தலைவர் இம்ரான்கான். அவர் கொழும்பு பொறுத்தவரையில் இந்த வருகை சர்வதேச அரங்கில் முக்கியமான நிகழ்வாக கருதப்படுகிறது.

கொரோனா வைரஸால் உயிரிழந்த இஸ்லாமியர்களின் உடல்களை இலங்கை அரசு அப்புறப்படுத்திய விதம் இஸ்லாமிய நாடுகளை திகைப்பிற்கு ஆளாக்கியது. அடக்கம் நடைபெறவில்லை. ஆனால் அனைத்து உடல்களும் தகனம் செய்யப்பட்டன. இந்த விதி இலங்கையில் பெரும் புயலை உருவாக்கியது. இஸ்லாமியர்களை துன்புறுத்த அரசு இந்த முறையை பயன்படுத்துகிறது என்று தலைவர்கள் நம்பினார்கள்.



இலங்கையின் மக்கள்தொகையில் சுமார் 11 சதவீதத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள், கடந்த பத்தாண்டுகளில் சிங்கள புத்த பெரும்பான்மையினருடன் பதட்டமான உறவைக் கொண்டிருந்தனர். கலவரங்கள் சில வருடங்களுக்கு ஒருமுறை அமைதியைக் குலைக்கும். ஐ.எஸ்.ஐ.எஸ் உறுப்பினர்களாக இருப்பதாகக் கூறும் ஆண்கள் மற்றும் பெண்கள் குழுவினரால் நடத்தப்பட்ட ஈஸ்டர் 2019 குண்டுவெடிப்பின் பின்னர் பதட்டங்கள் அதிகரித்தன. ஒரு இஸ்லாமிய நாட்டின் தலைவர் இலங்கைக்கு வருவது நல்ல விதமாக பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே கொழும்பு துறைமுகத்தில் கிழக்கு கண்டெய்னர் தீர்ப்பாயம் அமைக்கும் முத்தரப்பு ஒப்பந்தத்தில் இருந்து திடீரென இலங்கை, இந்தியா மற்றும் ஜப்பானை வெளியேற்றியது. மேலும் சீன நிறுவனம் ஒன்றுக்கு புதுப்பிக்கத்தக்க ஆற்றலை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் ஒப்பந்தம் ஒன்றை இலங்கை வழங்கியுள்ளது. இதனால் அதிருப்தியில் இருக்கும் இந்தியாவை மேலும் எதிர்க்க இலங்கை விரும்பவில்லை என்பதால் இலங்கை நாடாளுமன்றத்தில் காஷ்மீர் விவகாரம் குறித்து இம்ரான் கான் பேசலாம் என்ற யூகமே அவரின் உரையை ரத்து செய்ய காரணமாக இருந்தது என்று ஒரு தரப்பு தெரிவிக்கின்றது.



இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே நல்ல உறவை சமநிலையில் வைத்துக் கொள்ள இலங்கை கற்றிருக்கிறது. வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதற்காக சீனா பாகிஸ்தான் பொருளாதார அமைப்பை பயன்படுத்திக் கொள்ள கான் தனது வட்டாரத்திற்கு அழைப்பு விடுத்தது எந்தவொரு எதிர்வினையையும் வெளிப்படுத்தவில்லை, குறைந்தபட்சம் பொதுவில் இல்லை எந்தவிதமான எதிர்ப்பும் வெளியாகவில்லை.

இலங்கையின் மிக நெருங்கிய நட்பு நாடாக இருக்கும் நிலையிலும், கொழும்புவில் பாகிஸ்தானை எதிரியாக இந்தியா கருதவில்லை. கானின் விமானம் இந்திய பரப்பில் பறக்க டெல்லி அனுமதி வழங்கியது. சமீபத்தில் எல்.ஓ.சியில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தினால் கூட இந்த அனுமதி வழங்கப்பட்டிருக்கலாம். அல்லது போர்நிறுத்தம் தொடர்பான உடனடி இந்தியா-பாகிஸ்தான் ஒப்பந்தம் இல்லாமல் கூட அனுமதி வழங்கப்பட்டிருக்கலாம்.

அவ்வப்போது, இந்திய பாதுகாப்பு அமைப்பு முஸ்லிம்களை தீவிரமயமாக்குவதில் பாகிஸ்தானின் பங்கு குறித்து கவலை தெரிவித்துள்ளது – குறிப்பாக கிழக்கு இலங்கையில். அங்கு சில புதிய மசூதிகளை எழுப்ப்ப மேற்கு ஆசிய நாடுகளிலிருந்து நிதி வழங்கப்பட்டுள்ளது. இது இந்தியாவிலும் விளைவுகளை ஏற்படுத்தக் கூடும்.


நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ் 

இந்தக் கட்டுரை முதலில் இந்தியன் எக்ஸ்பிரஸில் பிரசுரமானது. மக்களுக்கு  அறிவூட்டும் நன்நோக்குடன் குளோப்தமிழில் மீள்பிரசுரிக்கப்படுகின்றது. 

No comments:

Post a Comment