Monday, April 20, 2015

உள்நாட்டு அரசியலில் பந்தாடப்படும் பொறுப்புக்கூறல்

இலங்கையின் புதிய அரசு வலிந்து கேட்டுக் கொண்டதன்பேரில் இலங்கையில் இடம்பெற்ற இறுதிப்போரில் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மீதான விசாரணை அறிக் கையை வெளியிடும் நடவடிக்கையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரையில் ஒத்திவைத்தது.

நாட்டிலே சீர்குலைந்துபோயுள்ள நல்லாட்சியை மேம்படுத்தி மனித உரிமைகளை நிலைநாட்டவும், பொறுப்புக்கூறல் விடயத்தில் நம்பகரமான செயற்பாடு களை முன்னெடுக்கவும் ஏற்கனவே நடவடிக்கைகளை ஆரம்பித்துவிட்டதாகவும் இனிவரும் காலங்களில் அது வீச்சுப்பெறும் என்றும் இலங்கை அரச தரப்பில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அளித்த வாக்குறுதியின் பிரகாரமே ஐ.நா. மனித உரிமைகள் பேரவை இந்தக் காலஅவகாசத்தை வழங்கியது.

இதற்கு அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகளும் ஆதரவளித்தன. நாடாளுமன்றம் ஏப்ரல் 23ஆம் திகதி யின் பின்னர் கலைக்கப்பட்டு, பொதுத்தேர்தல் ஜூனில் நடத்தப்படலாம் என்ற நிலையில், ஐ.நாவின் விசா ரணை அறிக்கை தற்போதைய அரசை எவ்விதத்திலும் பாதித்துவிடக்கூடாது என்ற கரிசனையும் விசாரணை அறிக்கையை ஒத்திப்போடுவதில் தாக்கம் செலுத்தி யிருந்தது. ஆனால், தற்போதைய நிலையில் நாடாளு மன்றக் கலைப்பு என்பது நூறு நாள் திட்டத்தில் கூறப் பட்டதுபோன்று ஏப்ரல் 23ஆம் திகதி இடம்பெறப் போவதில்லை என்பது நிச்சயமாகத் தெரிகின்றது.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்றையதினம் நடை பெற்ற அனைத்துக் கட்சித் தலைவர்களினதும் விசேட கூட்டத்தில் உயர்நீதிமன்றம் அங்கீகரித்துள்ளதான 19ஆவது திருத்த சரத்துகள் தொடர்பில் நாளையும், நாளை மறுதினமும் விவாதித்து வாக்கெடுப்பை நடத்துவதற்கும், தேர்தல் சீர்திருத்தம் நிறைவேற்றப்படும் வரையில் நாடாளுமன்றைக் கலைக்காதிருக்கவும் இணக்கம் காணப்பட்டுள்ளது. தேர்தல் சீர்த்திருத்தம் என்ற விடயத்தை நினைத்த மாத்திரத்தில் ஒருசில தினங்களில் முன்னெடுக்க முடியாது என்ற நிலையில், அதனை நிறைவேற்றுவதற்கு இன்னமும் சில மாதங் களேனும் செல்லக்கூடும். இந்நிலையில், நாடாளுமன் றக் கலைப்பும் அதன் பின்னர் பொதுத்தேர்தலும் வருவதற்கு ஓகஸ்ட் அன்றேல் செப்டெம்பர் மாதம் கூட ஆகிவிடலாம்.

இந்த அரசை சங்கடப்படுத்தி மஹிந்த தரப்பினருக்கு மீண்டும் அரசியல் அதிகாரத்தைப் பெறுவதற்கு வாய்ப்பளிக் கக்கூடாது என்ற நோக்கில் ஐ.நா. விசாரணை அறிக்கை வெளியாவதைத் தள்ளிவைத்த தரப்பினர், தேர்த லொன்று இடம்பெறும் காலப்பகுதியில் மீண்டும் அதனை வெளியிடுவார்களா என்ற கேள்வி ஒருபுறம் இருந்தாலும், அரசு வாக்களித்த நம்பகரமான உள்நாட் டுப் பொறிமுறை தேர்தல் காலப்பகுதியில் ஸ்தாபிக்கப் படுமா, நம்பகரமான முறையில் விசாரணைகளை முன்னெடுத்துச் செல்லுமா என்ற கேள்விகள் தற்போது எழுகின்றன.

இலங்கையில் இடம்பெறும் ஆட்சிமாற்றங்களின் போது ஆட்களே வெறுமனே மாறுகின்றார்களே தவிர, ஆட்சிபீடம் ஏறும் அரசுகள் தமிழருக்கு நியாயம் வழங்க இதயசுத்தியுடன் செயலில் ஈடுபடுவதில்லை; சர்வதே சத்தை ஏமாற்றிக் காலங்கடத்துவதற்கும் தமது சொந்தக் கட்சி அரசியல் அதிகாரத்தை அடைந்துகொள்வதற்குமே முயற்சிக்கின்றன என்ற விமர்சனங்களை மெய்ப்பிக் கும் வகையில் தற்போதைய நிலைமை காணப்படு கின்றது.

எதிர்வரும் ஜூன் மாதத்திலேயே பொறுப்புக்கூறல் விடயத்தைக் கையாள்வதற்கான உள்நாட்டுப் பொறிமுறை நிறுவப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்திருந்தார். ஆனால், தன்னைப் பொதுவேட்பாளராக அறிவிக்கும் முதலாவது கூட்டத்திலேயே யுத்தத்தில் ஈடுபட்ட அனைத்துப் படை யினரையும் பாதுகாப்பேன் என உத்தரவாதம் வழங் கிய ஜனாதிபதியிடமிருந்து எப்படித் தமிழர்கள் நம்பக ரமான பொறுப்புக்கூறலை எதிர்பார்க்கமுடியும்? ‡ என்ற கேள்வி எழுகின்றது.

பொறுப்புக்கூறல் விடயத்தில் வெற்று வாக்குறு திகளோடு மாத்திரம் நின்றுவிடாது, செயலிலும் காத்திர மான நடவடிக்கையை மேற்கொள்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்ற செய்தியை மே மாத முற்பகுதியில் இலங்கை வரவுள்ள அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி ஆணித்தரமாக இலங்கை அரசுக்குத் தெரிவிப்பதுடன், என்னதான் உள்நாட்டு அரசியல் அதிகா ரப்போட்டிகள் இடம்பெற்றாலும் சர்வதேசம் பொறுப்புக் கூறல், நல்லிணக்கம் ஆகிய விடயங்களில் இலங்கை யிடமிருந்து அர்த்தபூர்வமான செயற்பாட்டை எதிர்பார்த்து உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருக்கின்றதென்ற செய்தியையும் தெரிவித்துச் செல்வது மிகவும் அவசிய மாகும்.

சுடர் ஒளியின் 20.04.2015 ஆசிரியர் தலையங்கம் 

Thursday, April 16, 2015

சர்ச்சையைக் கிளப்பியுள்ள இனவழிப்பு சொற்பதம்



இனவழிப்பு என்ற சொற்பதத்தைக் கேட்டாலே இலங்கையில் மட்டுமன்றி சர்வதேசத்திலும் பெரும் அதிர்வலைகள் ஏற்படுகின்றதை செய்திகளின் காத்திரத்தன்மையிலிருந்து புரிந்துகொள்ளமுடிகின்றது.
கடந்த பெப்ரவரி 10ம்திகதி வடமாகாண சபையில்  இனவழிப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது இலங்கையில் அது பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை வத்திக்கானில் இடம்பெற்ற திருப்பலி நிகழ்வில் ஆற்றிய பிரசங்கத்தின் போது கருத்துரைத்த பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் 1915ம் ஆண்டில் 15லட்சம் வரையிலான ஆர்மேனியர்கள்  படுகொலைசெய்யப்பட்டமை 20ம் நூற்றாண்டில் முதலாவது இனவழிப்பாக அமைந்துள்ளதுடன் அதனை சர்வதேச சமூகம் உரியவகையில் அங்கீகரிக்கவேண்டும் என கோரியிருந்தார்.

ஒட்டோமன் சாம்ராஜியத்தின் கீழ் ஒட்டோமன் துருக்கியர்களால் ஆர்மேனிய மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட படுபாதகச்செயலை கண்டிக்கும் வகையிலே பாப்பரசர் வெளியிட்ட கருத்து துருக்கியத்தரப்பிலிருந்து கடுமையான விமர்சனங்களுக்கு வழிகோலியுள்ளது. துருக்கி ஜனாதிபதி ரிஸப் டையீக் எர்கோடன் பாப்பரசரின் கருத்தை அர்த்தமற்றதென நிராகரித்துள்ளதுடன் இதுபோன்ற தவறுகளை மீண்டும் இழைக்கமுற்படக்கூடாது என பாப்பரசரை எச்சரித்திருந்தார்.

ஒட்டோமன் சாம்ராஜத்தின் இறுதிநாட்களில் 15 லட்சம் முதல் 17லட்சம் வரையிலான ஆர்மேனியர்கள் 1915 ம் ஆண்டுமுதல் 1917ம் ஆண்டுவரையான காலப்பகுதியில் திட்டமிட்டரீதியில் இலக்குவைக்கப்பட்டு படுகொலைசெய்யப்பட்டதாக ஆர்மேனியர்கள் குற்றஞ்சாட்டிவருகின்றனர். துருக்கியோ தாம் ஆர்மேனியர்களுக்கு எதிராக ஒருபோதும் இனவழிப்;பை மேற்கொள்ளவில்லை எனவும் ஒட்டோமன் ஆட்சியாளருக்கு எதிராக அன்றைய காலத்தில் படையெடுத்துவந்த ரஸ்யத் துருப்பினருடன் இணைந்துகொண்டு கிளர்ச்சியில் ஈடுபட்டதாகவும் அப்போது ஏற்பட்ட யுத்தகால நெருக்கடிச் சூழலால் மூன்று லட்சம் முதல் ஐந்து லட்சம் வரையான ஆர்மேனியர்களும் அதே அளவான துருக்கியர்களும் பலியானதாகவும் காரணம் கற்பிக்கும் துருக்கி அதனை இனவழிப்பு என அடையாளப்படுத்தும் முயற்சிகளை தொடர்ச்சியாக கடுமையாக எதிர்த்துவருகின்றது.

தென் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த சுமார் இரண்டு டஸின் நாடுகள் ஆர்மேனியர்களுக்கு எதிராக இழைக்கப்பட்டது இனவழிப்புத்தான் என ஏற்றுக்கொண்டுள்ளபோதும் அமெரிக்கா ஜேர்மனி உள்ளிட்ட நாடுகள் துருக்கியுடனான கேந்திர உறவு பாதிக்கப்படும் என்ற அச்சத்தில் இன்னமும் இவ்விடயத்தில் தீர்மானமெடுக்காது நழுவல் போக்கை கடைப்பிடித்துவருகின்றன. இத்தனை லட்சம் மக்களைக் கொல்லும் போது காட்டாத அக்கறையை இனவழிப்பு என்ற சொற்பதத்தை அதுவிடயத்தில் பயன்படுத்திவிடக்கூடாது என்று பிரயத்தனமெடுக்கும் துருக்கிய அரச தரப்பின் செயற்பாடு மக்களை ஈவிரக்கமின்றிக் கொல்லும் ஏனைய அரசுகளின் இரட்டைவேடத்தை அம்பலப்படுத்திநிற்கின்றது.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்றது இனவழிப்பா இல்லையா என்பதை முறையான நீதிவிசாரணையின் மூலமே உறுதிசெய்யமுடியும் என்றபோதும் இலங்கையில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கடந்த ஆறுதசாப்தகாலத்தில் திட்டமிட்ட ரீதியில் கொல்லப்பட்டதை மறுதலிக்கமுடியாது.

தனது மக்களின் உயிர்களைக் காப்பாற்றுவதே ஒரு நாட்டினது அரசின் தலையாய கடமை. அதனைச் சரிவரச் செய்தால் இனவழிப்பு போன்ற சொற்பதற்களுக்கு அஞ்சவேண்டிய அவசியம் ஏற்படாது.

சுடர் ஒளி ஆசிரியர் தலையங்கம்: 16-04-2015

தமிழ் புத்தாண்டு விடிவைத்தருமா?



தமது உரிமையைப் பெற்றுக்கொள்வதற்காக அஹிம்சை ரீதியிலும் ஆயுதரீதியிலும் பல தசாப்தகாலமாக போராடிய தமிழர்கள் இலட்சக்கணக்கான உயிர்களையும் பெறுமதிக்க முடியாத உடமைகளை இழந்த நிலையிலும் தன்மானத்துடன் ஏனைய இனத்தவர்களுடன் சரிசமமாக வாழும் எதிர்பார்ப்புடன் அரசியல் போராட்டத்தை முன்நகர்த்திக்கொண்டு இன்னுமொரு தமிழர் புத்தாண்டிற்குள் காலடியெடுத்துவைக்கின்றனர்.

சுதந்திரத்திற்கு பின்னரான காலப்பகுதியில் ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு அரசுகளும் தமக்கு நியாயமான தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பில் தமிழர் தரப்பு நல்லெண்ணக் சமிக்ஞைகளைக் காண்பித்து ஒத்துழைத்துச் செயற்பட்டபோதும் ஈற்றிலே ஏமாற்றமே மிஞ்சியதை வரலாறு நமக்கு உணர்த்தி நிற்கின்றது

கடந்த ஜனவரியில் இடம்பெற்ற தேர்தலில் போட்டியிட்ட இரு பிரதான வேட்பாளர்களுமே சிங்கள பௌத்த பெரும்பான்மையின சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற போதும் இந்த நாடு சர்வாதிகாரப்போக்கில் முன்நகர்ந்து ஒட்டுமொத்த மக்களுக்கும் ஜனநாயகம் மறுக்கப்படுவதை தடுப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வித வற்புறுத்தல்களுமில்லாத நிலையில் கூட மஹிந்வை தோற்கடிப்பதில் பங்களித்ததை மறந்துவிடக்கூடாது. 

              தமிழர் தரப்பின் பிரச்சனைகள் தீர்க்கப்படும் என்பது தொடர்பான தெளிவான                               வாக்குறுதிகள் அரசின் 100நாள் திட்டத்தில் உள்ளடக்கப்படாத நிலையிலும்              ஒட்டுமொத்த இலங்கை மக்களின் ஜனநாயக இருப்பை உறுதிசெய்துகொள்வதற்காக தமிழர்கள் சர்வாதிகாரத்தின் விளிம்புநிலைக்கு சென்றிருந்த மஹிந்த அரசை வீட்டுக்கு அனுப்புவதற்காக தமது வாக்குப்பலத்தை பயன்படுத்தியதற்கான நன்றிக்கடனை இந்த அரசு மறந்து விடக்கூடாது. 

100 நாட்களை நெருங்கிக்கொண்டிருக்கும் இந்த அரசு தமிழர்கள் தொடர்பான பிரச்சனைகள் விடயத்தில் ஒரு சில நம்பிக்கை தரும் அறிவிப்புக்களை விடுத்துள்ள போதும் அவை இன்னமும் நடைமுறைச்சாத்தியமாகவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது. இனிமேலும் காலத்தை வீணடிக்காது கௌரவமான அரசியல் தீர்வு நம்பகரமான பொறுப்புக்கூறல் உட்பட முக்கியமான விடயங்களில் காத்திரமான தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க அரசு முன்வரவேண்டும். 

நிறைவேறாமற் போகுமா நிறைவேற்று ஜனாதிபதி முறைமை ஒழிப்பு?



இந்த நாட்டின் சாபக் கேடாக பார்க்கப்படும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நடப்பு ஜனாதிபதியின் பதவிக்காலத்திலும் இல்லாதொழிக்கப்படும் என்ற நம்பி;க்கை விரைவாக அருகிவருகின்றது. கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிக்கவேண்டும் என்ற நோக்கை முதன்மைப்படுத்தி ஒன்றுபட்ட பல்வேறு தரப்பட்ட சக்திகளும் மூன்று மாதகாலத்திற்குள்ளாக தத்தம் அரசியல் தேவைப்பாடுகளுக்காக பிரிந்து நிற்பதனால் நிறைவேற்று அதிகார ஒழிப்பு கானால் நீராகவே போய்விடுமோ என்ற ஐயப்பாடுகள் தலைதூக்கியுள்ளன.

நூறு நாட்கள் திட்டத்தில் அளித்த வாக்குறுதிகளில் முதன்மையானதாக கருதப்படும் நிறைவேற்று அதிகார முறைமை ஒழிப்பை நிறைவேற்றுவது கடுமையான தேர்தலில் பல்வேறு சவால்களையும் தாண்டி  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வெற்றிபெறச் செய்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் புதிய அரசையும் ஆட்சிக்குக் கொண்டுவர வழிகோலிய தரப்பினர் நம்பிக்கைகளை எதிர்வரும் பொதுத் தேர்தலில் தக்க வைப்பதற்கு இன்றியமையாததாகும்.  இதன்காரணகவே நிறைவேற்று ஜனாதிபதி முறைமையிலுள்ள அபாயகரமான அம்சங்கள் நீக்கப்படாத நிலையிலும் 19வது திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு அரச தரப்பு முனைந்துள்ளது. 

தற்போது உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்;ப்பையடுத்து நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட உத்தேசிக்கப்பட்டுள்ள 19வது திருத்தம் என்பது தற்போதுள்ள அரசியலமைப்பில் மஹி;ந்த ராஜபக்ஸ தரப்பினரால் திணிக்கப்பட்ட 18வது திருத்தத்தை நீக்கிவிட்டு 17வது திருத்தத்தை உள்வாங்குகின்ற செயற்பாடு என்றே பார்;க்க முடிகின்றது. 

ஜனாதிபதி பதவிக்காலத்தின் வரையறைகளை இல்லாமல் செய்த 18வது திருத்தம் இல்லாமல் போவதும்  சுயாதீன ஆணைக்குழுக்களைத் கொண்டுவரும் 17வது திருத்தம் உள்வாங்கப்படுவதும் நல்ல விடயங்களே. ஆனால் நிறைவேற்று அதிகார ஒழிப்பு என்ற வழங்கிய வாக்குறுதியை 19வது திருத்தம் மூலம் நிறைவேற்ற முடியாது என்பதே வெள்ளிடை மலையாகும். 

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையானது உலகில் 32 நாடுகளில் உள்ளன. அமெரிக்கா பிரான்ஸ் உட்பட அபிவிருத்தியடைந்த நாடுகளில் இதனை நேர்த்தியாக கையாண்டு அவை முன்னேற்றமடைந்தன. ஆனால் ஆபிரிக்கா ஆசியா போன்ற பிந்தங்கிய கண்டங்களிலுள்ள நாடுகளில் இந்த முறைமை நாடுகளில் சீரழிவிற்கே வழிகோலியதற்கு சான்றுகளுள்ளன. தெற்காசியாவில் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை கொண்டுள்ள பாகிஸ்தான் மாலைதீவு மற்றும் இலங்கை ஆகிய மூன்று நாடுகளில் ஜனநாயகத்தின் வீழ்ச்சிக்கே அது வழிகோலியுள்ளது. 

இதனைப் பார்க்கும் போது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையில்;; பிழையில்லை மாறாக அதனை பயன்படுத்தும் நபரின் ஆளுமைக்கு அமைவாகவே அது நல்லநோக்கிற்காகவா அன்றேல் தீய நோக்கிற்காகவா பயன்படுத்தப்படும் என்பது தீர்மானிக்கப்படும் என்ற கருத்து நிலைப்பாடும் உள்ளது. இலங்கை போன்ற நாடுகளில் உள்ள அதிகார வேட்கை பிடித்த அரசியல் வாதிகள் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையிலு;ள்ள அபரீதமான அதிகாரங்களைப் பயன்படுத்தி அதனைத் துஸ்பிரயோகம் செய்வதற்கான சாத்தியமே அதிகம் என்பதற்கு வரலாறு சான்று பகர்கின்றது.

 நிறைவேற்று அதிகார முறைமையை இலங்கையில் அறிமுகப்படுத்திய ஜே. ஆர் ஜெயவர்த்தன முதற்கொண்டு மஹிந்த ராஜபக்ஸவரை உதாரணங்களை அடுக்கமுடியு;ம். பிரேமதாசவின் அகால மரணத்தைத் தொடர்ந்து பதவிக்கு வந்த டீ.பி. விஜயதுங்க ஒரு கனவான நடந்தார் என்று சுட்டிக்காட்டப்படுகின்றபோதும் அவர் மக்களின் ஆணையைப் பெற்று அந்தப்பதவிக்கு வரவில்லை என்பது நினைவுகூரப்படவேண்டும். புதவி மோகம் பிடித்தவர்கள் மக்களின் ஆணையையும் சாதகமாக பயன்படுத்திக்கொண்டு பண்ணிய  அட்டூழியங்களும் அடாவடித்தனங்களும் கொஞ்சநஞ்சமல்ல. சர்வதிகாரத்தின் விளிம்பு நிலைக்கு சென்ற நலையிலேயே தெய்வாதீனமாக கடந்த தேர்தலில் இலங்கையின் ஜனநாயகம் காப்பாற்றப்பட்டது. 

மஹிந்தவுடன் ஒப்பிடும் போது நிறைவேற்று அதிகாரத்தை தற்போது தன்வசம் கொண்டுள்ள மைத்திரிபால நல்லவராக இருப்பதால் அது இருந்துவிட்டுப் போகட்டும் என்ற கருத்துநிலையும் எழுச்சிபெறுவதைக் காணமுடிகின்றது. ஆனால் இந்த நிறைவேற்று ஜனாதிபதி முறைமை நல்ல புத்திசாலித்தனமான அரசியல் வாதிகளையும் மோசமானவர்களாக மாற்றக்கூடியதென்பதையும்  அடுத்த நிலையில் சர்வாதிகாரிகளாகவும் மாற்றக்கூடியதென்பதையும் உணர்ந்துகொண்டு செயற்படுவது இன்றியமையாததாகும். 

நல்லிணக்கத்தின் முக்கியத்துவம்

நல்லிணக்கம் இல்லாதவிடத்தில் தேசிய ஒற்று மையை ஊக்குவிக்கின்ற அரசின் முயற்சிகள் சீர் குலைந்து போகும் என இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளமையை அனைத்து தரப்பினரும் மிக வும் கவனமாகக் கருத்தில் கொள்ளவேண்டியது அவசி யமாகும்.

கடந்த 9 ஆண்டுகளாக அரசியலில் இருந்து ஒதுங்கி யிருந்து விட்டு கடந்த ஜனாதிபதித் தேர்தலுடன் மீண்டும் பொது அரங்கிற்குத் திரும்பியிருந்த சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க ஆட்சியிலிருந்த ஜனாதிபதிகளில் இனப்பிரச் சினைக்குத் தீர்வு காண்பதற்கு ஓரளவேனும் அர்ப்பணிப்புடன் முயற்சியயடுத்த ஒரு தலைவராகப் பார்க்கப்படுபவர். 

கடந்த சில ஆண்டுகளில் முதற்றடவையாக சர்வதேச ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியாக சில தினங் களுக்கு முன்பாக இந்துப் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியிலேயே நல்லிணக்கமானது இலங்கையின் நலன்களுக்கு மிகவும் அத்தியாவசியமானது என்ற கருத்தை வலியுறுத்தியிருக்கின்றார். 

தனது காலத்திலே இலங்கையின் இனப்பிரச்சினை யைத் தீர்ப்பதற்கு முடியாமற்போனமை தொடர்பில் பலமுறை கவலைகளை வெளிப்படுத்தியிருந்த சந்திரிகா, சில ஆண்டுகளுக்கு முன்பாக இலங்கை மன்றக் கல்லுரியின் கேட்போர் கூடத்தில் நீதியரசர் பாலகிட்ணர் நினைவுப் பேருரையை ஆற்றியபோது சனல் 4 தொலைக் காட்சியில் ஒளிபரப்பப்பட்ட இறுதிப் போர் அவலங்களைப் பார்த்துவிட்டு தனது மகன் விமுக்தி இலங்கையர் என்று சொல்வதற்கு வேதனைப்படுவதாகக் கண்ணீர் மல்கக் கூறியிருந்தார்.

சிங்களத் தலைவர்களில் முக்கியமான ஒருவராகப் பார்க்கப்படுபவரான சந்திரிகாவின் வாயிலிருந்து இத்தகைய வார்த்தைகள் வெளிவந்தபோது அப்போது ஆட்சியிலிருந்த மஹிந்த ராஜபக்­ அரசின் அடிவருடி களும் ஊடகங்களும் சந்திரிகாவை கடுமையாகச் சாடியிருந்தமை சுட்டிக்காட்டத் தக்கவை. நல்லிணக்கம் தொடர்பான ஜனாதிபதியின் விசேட செயலணிக் குழுவிற்குத் தலைமைதாங்குவதற்காக விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்றுச் செயற்படும் சந்திரிகா, இந்தத் தடவையேனும் உண்மையான நல்லிணக் கத்தைக் காண்பதை உறுதிசெய்வாரா என்பதற்குக் காலம்தான் பதில்சொல்ல வேண்டும்.முன்னைய மஹிந்த அரசின் காலத்தில் நல்லிணக் கம் என்பது ஏதோ ஒரு கண்ணாம்பூச்சி விளையாட் டுப்போன்றே கையாளப்பட்டது. 

சர்வதேச மட்டத்தில் இலங்கை பற்றிப் பேசுகின்றபோதோ அன்றேல் சர்வ தேச பிரதிநிதிகள் இலங்கைக்கு வருகைதரும்போதோ மூலையில் கிடப்பில் போடப்பட்டிருந்த நல்லிணக்கத் தைத் தூசுதட்டி முன்னுரிமைப்படுத்திப் பேசுவதும் கவனம் திசைமாறியதாக உணரும்போது கிடப்பில் போடப்படுவதுமாகவே இருந்துவந்துள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஈட்டிய அசாத்திய போர் வெற்றி மஹிந்த அரசின் கண்களைக் குருடாக்கி யிருந்ததுடன் இந்த நாட்டில் பிரச்சினையயான்று உள்ளது, அதற்கு அரசியல் தீர்வுடன் கூடிய நல்லிணக் கமே அவசியம் என்ற உண்மையை மறைத்து அபி விருத்தியால் எல்லாப்பிரச்சினைக்கும் தீர்வுகண்டுவிடமுடி யும் என்ற மாயத்திரையை விரித்திருந்தது. ஆனால், இலங்கையில் தமிழ் பேசும் மக்கள் பொருளாதார நெருக்கடிகளைத் தாண்டி பல்வேறு அடக்குமுறைகளை எதிர்நோக்கியிருக்கின்றனர். இதற்குத் தீர்வுகாணப்படு வது நாட்டின் நலனுக்கு அவசியமானது என்பதை கடந்த தேர்தலில் வாக்குகள் மூலமாக தமிழ்பேசும் மக்கள் எடுத்துணர்த்தியிருந் தனர்.

இந்நிலையில், மஹிந்தவைத் தோற்கடித்து புதிய அரசை அமைப்பதில் முக்கிய பாத்திரங்களை வகித்த சந்திரிகா, ரணில், மைத்திரி ஆகியோர் இலங்கை முன்னோக்கிச் செல்வதற்கு அவசியமான தேசிய ஒற்றுமையைக் கட்டியயழுப்புவதற்கு நல்லிணக்கம் மிகவும் இன்றியமையாதது என்பதை உணர்ந்து கருத்துகளைவெளியிட்டு அதற்கமைவாக சில நடவடிக் கைகளையும் எடுத்துள்ளமை ஆரம்பகட்ட நம்பிக் கையை அளிப்பதாக அமைந்துள்ளபோதும் இன்னமும் காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டியது மிகவும் அவசியமாகும். 

ஒவ்வொரு அரசியல் தலை வர்களும் தேர்தல் வெற்றியை மாத்திரம் குறிவைத்து காய்நகர்த்துவார்களாக இருப்பின், ஒருசில நல் லெண்ண சமிக்ஞைகளுடன் நல்லிணக்கம் பற்றிய எதிர்பார்ப்பு மருகிவிடலாம். அரசியல்வாதிகள் என்ற நிலையில் இருந்து சிங்கப்பூரின் லீ குவான் யூ போன் றும் தென்னாபிரிக்காவின் நெல்சன் மண்டேலா போன் றும் தேசத் தலைவர்கள் என்று தம்மை உயர்த்திக் கொண்டு தூரதரிசனத்துடன் தீர்மானங்களை எடுக் கும்போதே உண்மையான நல்லிணக்கம் என்பது நடைமுறைச் சாத்தியமாகும்.

Thursday, April 2, 2015

உலகக்கிண்ணம் உணர்த்தும் பாடம்



மெல்பேர்ண் மைதானத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற உலகக்கிண்ண கிரிக்கட் இறுதிப்போட்டியில் நியூஸிலாந்து அணியை எழு விக்கட்டுக்களால் தோற்கடித்து ஆஸ்திரேலிய அணி சம்பியனாகியது.

பதினோராவது முறையாக இடம்பெற்ற சர்வதேச ஒருநாள் உலகக்கிண்ண கிரிக்கட் போட்டித் தொடரில் ஐந்தாவது முறையாக சம்பியனாகியதன் மூலம் கிரிக்கட் உலகில் தனது ஆதிக்கத்தை ஆஸ்திரேலிய அணி மீண்டுமாக நிரூபித்துக்கொண்டதென்றால் மிகையாகாது.  இந்த அணியின் தொடர்ச்சியான ஆதிக்கத்திற்கு பின்னால் அந்த நாட்டில் கிரிக்கட் வீரர்களின் வளர்ச்சிக்காக இருக்கின்ற மிக உயர்தரமான கட்டுமானம் முக்கியமானது. ஒரு சில வீரர்களின் திறமையில் தங்கியிராது ஒட்டுமொத்த அணியாக இடைவிடாது தொடர்ச்சியாக வெளிப்படுத்தும்  ஆற்றல் வெளிப்பாடுகளின் பிரதிபலனே ஆஸ்;திரேலிய அணியின் ஆதிக்கத்திற்கு வலுச்சேர்த்துநிற்கின்ற மற்றுமொரு முக்கிய விடயமாகும்.

வெற்றிபெற்ற ஆஸ்திரேலிய அணியினரும் அதன் ரசிகர்களும் அளவில்லா மகிழ்ச்சியில் ஆழ்ந்திருப்பதை செய்திகளும் புகைப்படங்களும் புலப்படுத்துகின்றன. வெற்றிபெறும் போது ஏற்படுகின்ற மகிழ்ச்சியுணர்வு அலாதியானது. அதனை அனுபவிக்கும் போதுதான் அதன் மகத்துவம் புரியும். ஆனால் போட்டியில் தோல்வியுற்ற நியுஸிலாந்து அணிக்கும் அதன் ரசிகர்களுக்கும் இதுவே வாழ்வின் முடிவல்ல. இறுதிப் போட்டியில் தோற்றமை வருத்தமளிக்க கூடியது தான் என்றாலும் அதனையே நினைத்துக்கொண்டு வாழ்நாளை முடித்துக்கொண்டுவிடமுடியாது. இறுதிப்போட்டியைத் தாண்டியும் வாழ்க்கையொன்று இருக்கின்றது என்பதே யதார்த்தம். உலகக்கிண்ண இறுதிப்போட்டிக்கு மூன்றுமுறை முன்னேறியும் கிண்ணத்தை வெல்லமுடியாமல் போன இங்கிலாந்து கிரிக்கட் வீரர்களும் ரசிகர்களும் அதற்குப்பிறகும் வாழ்க்கையைத் தொடரவில்லையா? தொடர்ந்துமே முயற்சித்துக்கொண்டிருக்கவில்லையா?

கிரிக்கட் உட்பட ஓவ்வொரு விளையாட்டிலிருந்தும் வாழ்க்கைக்கு எடுத்துக்கொள்ளவேண்டிய பாடங்கள் நிறைவே இருக்கின்றன.  வெற்றிபெறும் போது கிடைப்பதைவிடவும் தோல்வியடையும் போது தான் நிறைய விடயங்களை ஒரு வீரன் அன்றேல் ஒரு அணி கற்றுக்கொள்ளமுடிகின்றது. தனது பலம் பலவீனம் வீழ்த்துவதற்காக வகுக்கப்பட்ட வியூகம் உட்பட பல விடயங்களை அறிந்துகொண்டு அடுத்தகட்டத்திற்கு தயாராக முடியும். விளையாட்டுப்போட்டியில் பங்கேற்கும் அனைவருமே சம்பியன்கள் ஆவதில்லை. அதுபோன்றே வாழ்க்கையில் அனைவருக்குமே வெற்றிவாய்த்துவிடுவதில்லை. காபொத பரீட்சைகளில் சித்திபெறத்தவறுவர்கள் முதற்கொண்டு காதலில் வெற்றிபெறத்தவறுபவர்கள் என பலரும் தற்கொலையை ஒரு தெரிவாக எடுத்துக்கொண்டு வாழ்க்கையை தொலைத்துக்கொள்கின்ற செய்திகளைப் பார்த்திருக்கின்றோம்;.

அத்தகையவர்கள் விளையாட்டு வீரர்களது வாழ்க்கையை எண்ணிப்பார்த்து வாழ்க்கையின் உண்மையான அர்த்தத்தை உணர்ந்திடவேண்டும். போட்டியில் வெற்றிபெற்றால் மகிழ்ச்சி இல்லாவிட்டால் போட்டியில் பங்கேற்றதற்காகவும் தம்மால் ஆனமட்டும் முயன்றுபார்த்ததற்காகவும் பெருமைப்பட்டுக்கொண்டு வெற்றியை நோக்கி முன்னேறுவதற்காக மேலும் திடசங்கற்பத்துடன் உழைக்கவேண்டும்.
உலகக்கிண்ணத்தை வெல்வது போன்ற பெரிய வெற்றியுணர்வு ஒரு சில அணிகளுக்கே கிடைப்பது போன்று வாழ்க்கையில் ஒரு சிலருக்கே பெரிய வெற்றியுணர்வுதரும் கணங்கள் வாய்க்கப்பெறுகின்றன.

ஆனால் பெரும்பாலான மனிதர்களுக்கே அன்றாடவாழ்வில் எத்தனையே வெற்றிக்குரிய மகிழ்ச்சிகரமான கணங்கள் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. ஒரு பிஞ்சுக்குழந்தையின் மழலைச் சொல்லைக் கேட்கும் பாக்கியமாக இருக்கட்டும் அந்தக்குழந்தை முதன்முறையாக நடக்கும் அழகைப் பார்க்கும் தருணமாக இருக்கட்டும் நல்ல உணவை நான்கு சொந்தங்களுடன் பகிர்ந்து கொள்ளும் தருணமாக இருக்கட்டும் வீதியில் நண்பர்களுடன் விளையாடும் போட்டியில் கிடைக்கின்ற மகிழ்ச்சியாக இருக்கட்டும். நல்ல நிகழ்ச்சியைப்பார்த்த திருப்தியாக இருக்கட்டும் இவை ஒவ்வொன்றுமே ஒருவகையான வெற்றி மகிழ்ச்சியைத் தரும் தருணங்கள் தாம் என்பதை நாம் நினைவிற்கொள்ளவேண்டும். வாழ்க்கையை கணங்களாக தருணங்களாக ரசித்து அனுபதிவத்து மகிழ்ந்திடவேண்டும்.