இனவழிப்பு என்ற சொற்பதத்தைக் கேட்டாலே இலங்கையில் மட்டுமன்றி சர்வதேசத்திலும் பெரும் அதிர்வலைகள் ஏற்படுகின்றதை செய்திகளின் காத்திரத்தன்மையிலிருந்து புரிந்துகொள்ளமுடிகின்றது.
கடந்த பெப்ரவரி 10ம்திகதி வடமாகாண சபையில் இனவழிப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது இலங்கையில் அது பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை வத்திக்கானில் இடம்பெற்ற திருப்பலி நிகழ்வில் ஆற்றிய பிரசங்கத்தின் போது கருத்துரைத்த பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் 1915ம் ஆண்டில் 15லட்சம் வரையிலான ஆர்மேனியர்கள் படுகொலைசெய்யப்பட்டமை 20ம் நூற்றாண்டில் முதலாவது இனவழிப்பாக அமைந்துள்ளதுடன் அதனை சர்வதேச சமூகம் உரியவகையில் அங்கீகரிக்கவேண்டும் என கோரியிருந்தார்.
ஒட்டோமன் சாம்ராஜியத்தின் கீழ் ஒட்டோமன் துருக்கியர்களால் ஆர்மேனிய மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட படுபாதகச்செயலை கண்டிக்கும் வகையிலே பாப்பரசர் வெளியிட்ட கருத்து துருக்கியத்தரப்பிலிருந்து கடுமையான விமர்சனங்களுக்கு வழிகோலியுள்ளது. துருக்கி ஜனாதிபதி ரிஸப் டையீக் எர்கோடன் பாப்பரசரின் கருத்தை அர்த்தமற்றதென நிராகரித்துள்ளதுடன் இதுபோன்ற தவறுகளை மீண்டும் இழைக்கமுற்படக்கூடாது என பாப்பரசரை எச்சரித்திருந்தார்.
ஒட்டோமன் சாம்ராஜத்தின் இறுதிநாட்களில் 15 லட்சம் முதல் 17லட்சம் வரையிலான ஆர்மேனியர்கள் 1915 ம் ஆண்டுமுதல் 1917ம் ஆண்டுவரையான காலப்பகுதியில் திட்டமிட்டரீதியில் இலக்குவைக்கப்பட்டு படுகொலைசெய்யப்பட்டதாக ஆர்மேனியர்கள் குற்றஞ்சாட்டிவருகின்றனர். துருக்கியோ தாம் ஆர்மேனியர்களுக்கு எதிராக ஒருபோதும் இனவழிப்;பை மேற்கொள்ளவில்லை எனவும் ஒட்டோமன் ஆட்சியாளருக்கு எதிராக அன்றைய காலத்தில் படையெடுத்துவந்த ரஸ்யத் துருப்பினருடன் இணைந்துகொண்டு கிளர்ச்சியில் ஈடுபட்டதாகவும் அப்போது ஏற்பட்ட யுத்தகால நெருக்கடிச் சூழலால் மூன்று லட்சம் முதல் ஐந்து லட்சம் வரையான ஆர்மேனியர்களும் அதே அளவான துருக்கியர்களும் பலியானதாகவும் காரணம் கற்பிக்கும் துருக்கி அதனை இனவழிப்பு என அடையாளப்படுத்தும் முயற்சிகளை தொடர்ச்சியாக கடுமையாக எதிர்த்துவருகின்றது.
தென் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த சுமார் இரண்டு டஸின் நாடுகள் ஆர்மேனியர்களுக்கு எதிராக இழைக்கப்பட்டது இனவழிப்புத்தான் என ஏற்றுக்கொண்டுள்ளபோதும் அமெரிக்கா ஜேர்மனி உள்ளிட்ட நாடுகள் துருக்கியுடனான கேந்திர உறவு பாதிக்கப்படும் என்ற அச்சத்தில் இன்னமும் இவ்விடயத்தில் தீர்மானமெடுக்காது நழுவல் போக்கை கடைப்பிடித்துவருகின்றன. இத்தனை லட்சம் மக்களைக் கொல்லும் போது காட்டாத அக்கறையை இனவழிப்பு என்ற சொற்பதத்தை அதுவிடயத்தில் பயன்படுத்திவிடக்கூடாது என்று பிரயத்தனமெடுக்கும் துருக்கிய அரச தரப்பின் செயற்பாடு மக்களை ஈவிரக்கமின்றிக் கொல்லும் ஏனைய அரசுகளின் இரட்டைவேடத்தை அம்பலப்படுத்திநிற்கின்றது.
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்றது இனவழிப்பா இல்லையா என்பதை முறையான நீதிவிசாரணையின் மூலமே உறுதிசெய்யமுடியும் என்றபோதும் இலங்கையில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கடந்த ஆறுதசாப்தகாலத்தில் திட்டமிட்ட ரீதியில் கொல்லப்பட்டதை மறுதலிக்கமுடியாது.
தனது மக்களின் உயிர்களைக் காப்பாற்றுவதே ஒரு நாட்டினது அரசின் தலையாய கடமை. அதனைச் சரிவரச் செய்தால் இனவழிப்பு போன்ற சொற்பதற்களுக்கு அஞ்சவேண்டிய அவசியம் ஏற்படாது.
சுடர் ஒளி ஆசிரியர் தலையங்கம்: 16-04-2015
No comments:
Post a Comment