Thursday, April 16, 2015

தமிழ் புத்தாண்டு விடிவைத்தருமா?



தமது உரிமையைப் பெற்றுக்கொள்வதற்காக அஹிம்சை ரீதியிலும் ஆயுதரீதியிலும் பல தசாப்தகாலமாக போராடிய தமிழர்கள் இலட்சக்கணக்கான உயிர்களையும் பெறுமதிக்க முடியாத உடமைகளை இழந்த நிலையிலும் தன்மானத்துடன் ஏனைய இனத்தவர்களுடன் சரிசமமாக வாழும் எதிர்பார்ப்புடன் அரசியல் போராட்டத்தை முன்நகர்த்திக்கொண்டு இன்னுமொரு தமிழர் புத்தாண்டிற்குள் காலடியெடுத்துவைக்கின்றனர்.

சுதந்திரத்திற்கு பின்னரான காலப்பகுதியில் ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு அரசுகளும் தமக்கு நியாயமான தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பில் தமிழர் தரப்பு நல்லெண்ணக் சமிக்ஞைகளைக் காண்பித்து ஒத்துழைத்துச் செயற்பட்டபோதும் ஈற்றிலே ஏமாற்றமே மிஞ்சியதை வரலாறு நமக்கு உணர்த்தி நிற்கின்றது

கடந்த ஜனவரியில் இடம்பெற்ற தேர்தலில் போட்டியிட்ட இரு பிரதான வேட்பாளர்களுமே சிங்கள பௌத்த பெரும்பான்மையின சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற போதும் இந்த நாடு சர்வாதிகாரப்போக்கில் முன்நகர்ந்து ஒட்டுமொத்த மக்களுக்கும் ஜனநாயகம் மறுக்கப்படுவதை தடுப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வித வற்புறுத்தல்களுமில்லாத நிலையில் கூட மஹிந்வை தோற்கடிப்பதில் பங்களித்ததை மறந்துவிடக்கூடாது. 

              தமிழர் தரப்பின் பிரச்சனைகள் தீர்க்கப்படும் என்பது தொடர்பான தெளிவான                               வாக்குறுதிகள் அரசின் 100நாள் திட்டத்தில் உள்ளடக்கப்படாத நிலையிலும்              ஒட்டுமொத்த இலங்கை மக்களின் ஜனநாயக இருப்பை உறுதிசெய்துகொள்வதற்காக தமிழர்கள் சர்வாதிகாரத்தின் விளிம்புநிலைக்கு சென்றிருந்த மஹிந்த அரசை வீட்டுக்கு அனுப்புவதற்காக தமது வாக்குப்பலத்தை பயன்படுத்தியதற்கான நன்றிக்கடனை இந்த அரசு மறந்து விடக்கூடாது. 

100 நாட்களை நெருங்கிக்கொண்டிருக்கும் இந்த அரசு தமிழர்கள் தொடர்பான பிரச்சனைகள் விடயத்தில் ஒரு சில நம்பிக்கை தரும் அறிவிப்புக்களை விடுத்துள்ள போதும் அவை இன்னமும் நடைமுறைச்சாத்தியமாகவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது. இனிமேலும் காலத்தை வீணடிக்காது கௌரவமான அரசியல் தீர்வு நம்பகரமான பொறுப்புக்கூறல் உட்பட முக்கியமான விடயங்களில் காத்திரமான தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க அரசு முன்வரவேண்டும். 

No comments:

Post a Comment