இந்த நாட்டின் சாபக் கேடாக பார்க்கப்படும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நடப்பு ஜனாதிபதியின் பதவிக்காலத்திலும் இல்லாதொழிக்கப்படும் என்ற நம்பி;க்கை விரைவாக அருகிவருகின்றது. கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிக்கவேண்டும் என்ற நோக்கை முதன்மைப்படுத்தி ஒன்றுபட்ட பல்வேறு தரப்பட்ட சக்திகளும் மூன்று மாதகாலத்திற்குள்ளாக தத்தம் அரசியல் தேவைப்பாடுகளுக்காக பிரிந்து நிற்பதனால் நிறைவேற்று அதிகார ஒழிப்பு கானால் நீராகவே போய்விடுமோ என்ற ஐயப்பாடுகள் தலைதூக்கியுள்ளன.
நூறு நாட்கள் திட்டத்தில் அளித்த வாக்குறுதிகளில் முதன்மையானதாக கருதப்படும் நிறைவேற்று அதிகார முறைமை ஒழிப்பை நிறைவேற்றுவது கடுமையான தேர்தலில் பல்வேறு சவால்களையும் தாண்டி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வெற்றிபெறச் செய்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் புதிய அரசையும் ஆட்சிக்குக் கொண்டுவர வழிகோலிய தரப்பினர் நம்பிக்கைகளை எதிர்வரும் பொதுத் தேர்தலில் தக்க வைப்பதற்கு இன்றியமையாததாகும். இதன்காரணகவே நிறைவேற்று ஜனாதிபதி முறைமையிலுள்ள அபாயகரமான அம்சங்கள் நீக்கப்படாத நிலையிலும் 19வது திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு அரச தரப்பு முனைந்துள்ளது.
தற்போது உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்;ப்பையடுத்து நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட உத்தேசிக்கப்பட்டுள்ள 19வது திருத்தம் என்பது தற்போதுள்ள அரசியலமைப்பில் மஹி;ந்த ராஜபக்ஸ தரப்பினரால் திணிக்கப்பட்ட 18வது திருத்தத்தை நீக்கிவிட்டு 17வது திருத்தத்தை உள்வாங்குகின்ற செயற்பாடு என்றே பார்;க்க முடிகின்றது.
ஜனாதிபதி பதவிக்காலத்தின் வரையறைகளை இல்லாமல் செய்த 18வது திருத்தம் இல்லாமல் போவதும் சுயாதீன ஆணைக்குழுக்களைத் கொண்டுவரும் 17வது திருத்தம் உள்வாங்கப்படுவதும் நல்ல விடயங்களே. ஆனால் நிறைவேற்று அதிகார ஒழிப்பு என்ற வழங்கிய வாக்குறுதியை 19வது திருத்தம் மூலம் நிறைவேற்ற முடியாது என்பதே வெள்ளிடை மலையாகும்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையானது உலகில் 32 நாடுகளில் உள்ளன. அமெரிக்கா பிரான்ஸ் உட்பட அபிவிருத்தியடைந்த நாடுகளில் இதனை நேர்த்தியாக கையாண்டு அவை முன்னேற்றமடைந்தன. ஆனால் ஆபிரிக்கா ஆசியா போன்ற பிந்தங்கிய கண்டங்களிலுள்ள நாடுகளில் இந்த முறைமை நாடுகளில் சீரழிவிற்கே வழிகோலியதற்கு சான்றுகளுள்ளன. தெற்காசியாவில் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை கொண்டுள்ள பாகிஸ்தான் மாலைதீவு மற்றும் இலங்கை ஆகிய மூன்று நாடுகளில் ஜனநாயகத்தின் வீழ்ச்சிக்கே அது வழிகோலியுள்ளது.
இதனைப் பார்க்கும் போது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையில்;; பிழையில்லை மாறாக அதனை பயன்படுத்தும் நபரின் ஆளுமைக்கு அமைவாகவே அது நல்லநோக்கிற்காகவா அன்றேல் தீய நோக்கிற்காகவா பயன்படுத்தப்படும் என்பது தீர்மானிக்கப்படும் என்ற கருத்து நிலைப்பாடும் உள்ளது. இலங்கை போன்ற நாடுகளில் உள்ள அதிகார வேட்கை பிடித்த அரசியல் வாதிகள் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையிலு;ள்ள அபரீதமான அதிகாரங்களைப் பயன்படுத்தி அதனைத் துஸ்பிரயோகம் செய்வதற்கான சாத்தியமே அதிகம் என்பதற்கு வரலாறு சான்று பகர்கின்றது.
நிறைவேற்று அதிகார முறைமையை இலங்கையில் அறிமுகப்படுத்திய ஜே. ஆர் ஜெயவர்த்தன முதற்கொண்டு மஹிந்த ராஜபக்ஸவரை உதாரணங்களை அடுக்கமுடியு;ம். பிரேமதாசவின் அகால மரணத்தைத் தொடர்ந்து பதவிக்கு வந்த டீ.பி. விஜயதுங்க ஒரு கனவான நடந்தார் என்று சுட்டிக்காட்டப்படுகின்றபோதும் அவர் மக்களின் ஆணையைப் பெற்று அந்தப்பதவிக்கு வரவில்லை என்பது நினைவுகூரப்படவேண்டும். புதவி மோகம் பிடித்தவர்கள் மக்களின் ஆணையையும் சாதகமாக பயன்படுத்திக்கொண்டு பண்ணிய அட்டூழியங்களும் அடாவடித்தனங்களும் கொஞ்சநஞ்சமல்ல. சர்வதிகாரத்தின் விளிம்பு நிலைக்கு சென்ற நலையிலேயே தெய்வாதீனமாக கடந்த தேர்தலில் இலங்கையின் ஜனநாயகம் காப்பாற்றப்பட்டது.
மஹிந்தவுடன் ஒப்பிடும் போது நிறைவேற்று அதிகாரத்தை தற்போது தன்வசம் கொண்டுள்ள மைத்திரிபால நல்லவராக இருப்பதால் அது இருந்துவிட்டுப் போகட்டும் என்ற கருத்துநிலையும் எழுச்சிபெறுவதைக் காணமுடிகின்றது. ஆனால் இந்த நிறைவேற்று ஜனாதிபதி முறைமை நல்ல புத்திசாலித்தனமான அரசியல் வாதிகளையும் மோசமானவர்களாக மாற்றக்கூடியதென்பதையும் அடுத்த நிலையில் சர்வாதிகாரிகளாகவும் மாற்றக்கூடியதென்பதையும் உணர்ந்துகொண்டு செயற்படுவது இன்றியமையாததாகும்.
No comments:
Post a Comment