Wednesday, August 12, 2020

அமைச்சுப்பதவி கிடைக்காத முக்கியஸ்தர்கள் யார்?

 

இன்று காலை கண்டி தலதா மாளிகையில் இடம்பெற்ற புதிய அமைச்சரவை நியமனங்களின் போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட சில சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு அமைச்சுப்பதவிகள் வழங்கப்படாமை பலரது கவனத்தையும் பெற்றுள்ளது. 

இதில்  முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேனவிற்கு அமைச்சுப்பதவியேதும்வழங்கப்படாமை  பரவலாக சமூக வலைத்தளங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பொலநறுவை மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற மைத்திரி தமக்கு மகாவலி அமைச்சு வழங்கப்படவேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன. 

மைத்திரியைத் தவிர விஜயதாஸ ராஜபக்ஸ, சுசில் பிரேமஜயந்த ,அநுர பிரியதர்ஸன யாப்பா, ரஞ்சித் சியம்பலாபிட்டிய ,எஸ்.பி. திஸாநாயக்க, ஏ.எல்.எம். அதாவுல்லா,டிலான் பெரேரா, மஹிந்த சமரசிங்க, சந்திம வீரக்கொடி போன்றோருக்கும் எவ்வித அமைச்சுக்களும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

அதாவுல்லா, அங்கஜனுக்கு அமைச்சுக்கள் இல்லை! சிறுபான்மையினர் சமூகத்திலிருந்து குறைந்த அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவை

 


இன்று காலை இடம்பெற்ற அமைச்சரவை நியமனத்தின் போது தமிழ் பேசும் சமூகத்தில் இருந்து  டக்ளஸ் தேவானந்தா மற்றும் அலி சப்றி ஆகியோர் மாத்திரமே அமைச்சரவை அந்தஸ்துள்ள கபினற் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

 தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும் ராஜபக்ஸ அரசாங்கத்தின் தீவிர ஆதரவாளருமான ஏ.எல்.எம்.அதாவுல்லாவிற்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப்பதவி வழங்கப்படவில்லை என்பது மட்டுமன்றி இராஜாங்க அமைச்சராகவும் அவர் நியமிக்கப்படாமை பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றன. 

இதனைத்தவிர யாழ் மாவட்டத்தில் எந்தக்கட்சியின் சார்பாகவும் அதிகூடிய விருப்பு வாக்குகளைப்பெற்ற அங்கஜன் ராமநாதனுக்கு இராஜாங்க அமைச்சுக்கூட வழங்கப்படவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது

இராஜாங்க அமைச்சர்கள் பட்டியலில் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்தில் இருந்து எவரும் இடம்பெறவில்லை என்பதுடன் தமிழர்களில் ஜீவன் தொண்டமான் மற்றும் சதாசிவம் வியாழேந்திரன் ஆகியோர் இராஜாங்க அமைச்சர்களாக இடம்பெற்றுள்ளனர். 

இந்த அமைச்சரவை நியமனம் தொடர்பாக முஸ்லிம் மீடியா போரம் அமைப்பின் தலைவரும் நவமணி பத்திரிகையின் ஆசிரியருமான எம்.என். அமீனிடம் வினவியபோது ' சிறுபான்மையினரை இன்னமும் அதிகமாக உள்ளவாங்கியிருப்பின் நன்றாக இருந்திருக்கும் ' எனக்குறிப்பிட்டதுடன் அபிவிருத்திப்பாதையை இலக்காகக்கொண்டு அமைச்சரவையை வடிவமைத்துள்ளது போன்று தெரிவதாக சுட்டிக்காட்டினார். 

அமைச்சரவை தொடர்பாக அரசியல் விமர்சகர் எஸ்.யோதிலிங்கத்திடம் வினவியபோது ' இம்முறை தேர்தலில் தமிழ் மக்கள் தமக்குமுன்பை விடவும் அதிக ஆதரவை வழங்கியதாக உணர்ந்திருந்தால் தேசிய அரசியலை தமிழ் மக்கள் விரும்புவதாக எண்ணியிருப்பின் ஒரு நல்லெண்ண அடையாளமாக அங்கஜன் ராமநாதன் ,வியாழேந்திரன் அன்றேல் பிள்ளையானுக்கு கபினற் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவியை வழங்கியிருக்க வேண்டும் .  என்னதான் தமிழ் மக்கள் வாக்களித்தாலும் நாம் இனவாத அரசாங்கமாகவே இருப்போம் என்பதனையே இந்த நியமனங்கள் மூலம் தற்போதைய ஆட்சியாளர்கள் உணர்த்தியுள்ளதாக  தெரிவித்தார்.


அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் நியமனம்: 




நீதித் துறை - அலி சப்ரி 


இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் - நாமல் ராஜபக்ஸ 


துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் - ரோஹித அபேகுணவர்தன 


சுற்றுலாத் துறை அமைச்சர் - பிரசன்ன ரணதுங்க 


பெருந்தோட்டத் துறை அமைச்சர் - ரமேஷ் பத்திரண


எரிசக்தி அமைச்சர் - உதய பிரபாத் கம்மன்பில 


நீர்வழங்கல் துறை அமைச்சர் - வாசுதேவ நாணாயக்கார 


கமத்தொழில் துறை அமைச்சர் - மஹிந்தானந்த அளுத்கமகே 


காணி அமைச்சர் - எஸ். எம். சந்திரசேன 


சுற்றாடல் துறை அமைச்சர் - மஹிந்த அமரவீர 


கைத்தொழில் துறை அமைச்சர் - விமல் வீரவங்க 


நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் - ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ 


மின்சக்தித் துறை அமைச்சர் - டலஸ் அழகப்பெரும 


நீர்ப்பாசனத்துறை அமைச்சர் - சமல் ராஜபக்ஸ


வெகுசன ஊடக அமைச்சர் - கெஹெலிய ரம்புக்வெல்ல 

அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் - ஜனக்க பண்டார தென்னகோன் 


வன ஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சர் - சு.ஆ.ஊ.டீ. ரத்நாயக்க 


வர்த்தகத்துறை அமைச்சர் - பந்துல குணவர்தன 


போக்குவரத்து துறை அமைச்சர் - காமினி லொக்குகே 


கடற்றொழில் துறை அமைச்சர் - டக்ளஸ் தேவாநந்தா 


வௌிவிவகார அமைச்சர் - தினேஷ் குணவர்தன  


சுகாதார அமைச்சர் - பவித்ராதேவி வன்னியாரச்சி 


கல்வி அமைச்சர் - ஜீ.எல். பீரிஸ்


தொழில் அமைச்சர் - நிமல் சிறிபால டி சில்வா  


நிதி, புத்தசாசனம் - மத விவகாரம் மற்றும் கலாசார அலுவல்கள் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் - மஹிந்த ராஜபக்ஸ 


பாதுகாப்பு அமைச்சர் - கோட்டாபய ராஜபக்ஸ 

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சராக சரத் வீரசேகர நியமிக்கப்பட்டுள்ளதை எப்படி அர்த்தப்படுத்துவது?

 


மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சராக சரத் வீரசேகர நியமிக்கப்பட்டிருப்பது தமிழ் பேசும் மக்களுக்கு முக்கியமான ஒரு செய்தியைக்  கூறுவதாக மூத்த ஊடகவியலாளர் வீரகத்தி தனபாலசிங்கம் சுட்டிக்காட்டுகின்றார்.

இந்த நியமனம் தொடர்பாக அவரிடம் வினவியபோது, "இந்த நாட்டில்   இனப்பிரச்சனையென்று ஒன்றும் இல்லை எனவும் எந்தவிதமான அதிகாரப்பகிர்விற்கும் ஆதரவளிக்காத 13வது திருத்தத்தை இல்லாதொழிக்க வேண்டும் என கடந்த காலத்தில் சரத் வீரசேகர வலியுறுத்திவந்துள்ளார். அத்தகைய ஒருவரை மாகாண சபைகளுக்கும் உள்ளூராட்சிக்கும் பொறுப்பான இராஜாங்க அமைச்சராக நியமித்துள்ளதன் மூலம் ஆட்சியாளர்கள் எதிர்காலம் எப்படி அமையப்போகின்றது' என்ற முக்கியமான செய்தியைக் கூறுவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார். 

மைத்திரி- ரணில் அரசாங்கத்தில் நிறைவேற்றப்பட்ட 19வது திருத்ததத்திற்கு எதிராக வாக்களித்த ஒரே பாராளுமன்ற உறுப்பினரான சரத் வீரசேகர இம்முறை கொழும்பு மாவட்டத்தில் பொதுஜன பெரமுனவின் சார்பாக போட்டியிட்டு 3லட்சத்திற்கும் அதிகமான விருப்புவாக்குகளைப் பெற்று முதலாவதாக தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

மைத்திரி-ரணில் அரசாங்கத்தில் கபினற் அமைச்சர்களாக இருந்து இம்முறை குறைந்த பதவிக்கு நியமிக்கப்பட்ட அமைச்சர்கள்




மைத்திரி -ரணில் அரசாங்கத்தில் முக்கியமான கபினற் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக இருந்த தயாசிறி ஜயசேகர மற்றும் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கும் அமைச்சரவை நியமனத்தில் இராஜாங்க அமைச்சர்களாக மாத்திரமே நியமிக்கப்பட்டுள்ளனர். 

 பத்திக் கைத்தரி துறைகள் மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சராக தயாசிறி ஜயசேகர நியமிக்கப்பட்டுள்ள அதேவேளை சூரிய சக்தி காற்று மற்றும் நீர் உற்பத்தி இராஜாங்க அமைச்சராக துமிந்த திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். 

 இதுவரை நியமிக்கப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர்கள் விபரம் வருமாறு: 



உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ச


வௌிநாட்டு தொழில்வாய்ப்பு மேம்பாடு மற்றும் சந்தை இராஜாங்க அமைச்சர் - பிரியங்கர ஜயரத்ன


சூரிய சக்தி காற்று மற்றும் நீர் உற்பத்தி இராஜாங்க அமைச்சர் - துமிந்த திசாநாயக்க 


பத்திக் கைத்தரி துறைகள் மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சர் - தயாசிறி ஜயசேகர 


கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங் அமைச்சர் - நிமல் லன்சா 


காணி முகாமைத்துவ அலுவல்கள், அரச தொழில்முயற்சி, காணி மற்றும் சொத்துக்கள் அபிவிருத்தி மற்றும் சொத்துக்கள் இராஜாங்க அமைச்சர் - ரொஷான் ரணசிங்க 


சிறைச்சாலைகள் மறுசீரமைச்சு மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் - சுதர்சனி பெர்னாண்டோபுள்ளை 


தெங்கு, கித்துல், பனை மற்றும் இறப்பர் செய்கை ஊக்குவிப்பு மற்றும் அது சார்ந்த கைத்தொழில், உற்பத்தி மற்றும் ஏற்றுமதி வகைப்படுத்தும் இராஜாங்க அமைச்சர் - அருந்திக்க பெர்னாண்டோ 


சந்தைப்படுத்தல் கூட்டுறவு சேவைகள் சந்தை அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் - லசந்த அழகியவன்ன 


கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் - நிமல் லன்சா 


குத வசதிகள், கொள்கலன் முனையங்கள், துறைமுக வசதிகள், படகுகள் மற்றும் கப்பல் கைத்தொழில் அபிவிருத்தி துறைமுக கப்பல்துறை இராஜாங்க அமைச்சர் - ஜயந்த சமரவீர 


காணி முகாமைத்துவ விவகாரம், அரச தொழில்முயற்சி, காணி மற்றும் சொத்துக்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் - ரொஷான் ரணசிங்க 


கம்பனி தோட்டங்களை சீர்திருத்தல், தேயிலை தோட்டங்கள் சார்ந்த பயிர்ச்செய்கை, தேயிலை தொழிற்சாலைகளை நவீனமயப்படுத்தல் மற்றும் ஏற்றுமதி மேம்பாடு இராஜாங்க அமைச்சர் - கனக ஹேரத் 


தேசிய மரபுரிமை அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் - விதுர விக்ரமநாயக்க 


கரும்பு, சோளம், மர முந்திரிகை, மிளகு, கறுவா, கராம்பு, வெற்றிலை உள்ளிட்ட சிறு - பெருந்தோட்டம் சார்ந்த உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்புக்கான இராஜாங்க அமைச்சர் - ஜானுக்க வகும்பர 


அறநெறி பாடசாலைகள், பிக்கு கல்வி, பிரிவெனா மற்றும் பௌத்த பல்கலைக்கழக இராஜாங்க அமைச்சர் - விஜித்த பேருகொட 


சமுர்த்தி, வதிவிட பொருளாதார, நுண் நிதிய, சுயதொழில், வியாபார அபிவிருத்தி மற்றும் கீழ் உழைப்பு பயன்பாட்டு அரச வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் - ஷெஹான் சேமசிங்க  


உர உற்பத்தி மற்றும் வழங்கல்கள் இரசாயன உரங்கள் மற்றும் கிருமிநாசினி பாவனை இராஜாங்க அமைச்சர் - மொஹான் டி சில்வா 


தங்காபரணங்கள் மற்றும் கனியவளங்கள் சார்ந்த கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் - லொஹான் ரத்வத்த  


வாகன ஒழுங்குபடுத்தல், பஸ் போக்குவரத்து சேவைகள், ரயில் பெட்டிகள் மற்றும் மோட்டார் வாகன கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் - திலும் அமுனுகம  


வன ஜீவராசிகள் பாதுகாப்பு, யானைவேலி மற்றும் அகழிகளை நிர்மாணித்தல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சர் - விமலவீர திசாநாயக்க 


பிராந்திய உறவுகள் நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சர் - தாரக்க பாலசூரிய 


கிராமிய வீடமைப்பு பிராந்திய உறவுகள் நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சர் - இந்திக்க அனுருத்த


அலங்கார மீன்கள், நன்னீர் மீன்கள், இறால் வளர்ப்பு, கடற்றொழில், துறைமுகங்கள் அபிவிருத்தி, பலநாள் கடற்றொழில் அலுவல்கள் மற்றும் மீன் ஏற்றுமதி இராஜாங்க அமைச்சர் - கஞ்சன விஜேசேகர

 

கிராமிய மற்றும் பிரதேச நீர் கருத்திட்ட அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் - சனத் நிஷாந்த  


மகாவலி வலயங்களை அண்டியுள்ள கால்வாய்களின் அகழிகள் மற்றும் குடியிருப்புக்கள் மற்றும் பொது உட்பட்டமைப்பு வசதிகள்  இராஜாங்க அமைச்சர் - சிறிபால கம்லத் 


மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் - சரத் வீரசேகர 


கிராமிய வயல் நிலங்கள் மற்றும் அண்டியுள்ள குளங்கள், நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர்ப்பாசன அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் - அனுராத ஜயரத்ன  


தபால் சேவைகள் மற்றும் வெகுசன ஊடக தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் - சதாசிவம் வியாழேந்திரன் 


கிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் - தேனுக விதானகமகே 

அமெரிக்காவின் உப ஜனாதிபதி வேட்பாளராக தெரிவுசெய்யப்பட்டுள்ள கமலா ஹரிஸ் தமிழரா?

 

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுகின்றார் முன்னாள் உபஜனாதிபதி ஜோ பைடன். தனது உப ஜனாதிபதி வேட்பாளராக கலிபோர்னியா மாநிலத்தின் செனட்டராக இருக்கும் கமலா ஹரிஸ் என்பவரை நேற்று  அறிவித்துள்ளார்.  ஜோ பைடன். கலிபோர்னியா மாநிலத்தின் முன்னாள் சட்டமா அதிபராக 2011ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டுவரை விளங்கிய கமலா ஹரிஸ் சிறந்த சட்டப்புலமை கொண்டவர் .

2017ம் ஆண்டில் கலிபோர்னியா மாநிலத்தின் செனட்டராக  தேர்ந்தெடுக்கப்பட்டபோது அப்பதவிக்கு தெரிவான  முதலாவது கறுப்பின பெண் என்ற பெருமையைத்தனதாக்கியிருந்தார்.  

அமெரிக்க ஜனநாயக்கட்சியில் இருந்து ஜனாதிபதி வேட்பாளர்களைத் தெரிவுசெய்வதற்கான போட்டியில் 2019ம் ஆண்டின் ஆரம்பத்தில் தனது பெயரையும் பதிவுசெய்து ஆரம்பத்தில் சிறப்பாகச் செயற்பட்ட கமலா ஹரிஸ் பின்னர் குறைவான ஆதரவுகாரணமாகவும் விமர்ச்சனங்கள் காரணமாகவும் அதிலிருந்து விலகிருந்தார். 

55 வயதுடைய கமலா ஹரிஸின் தந்தை ஜமெய்க்காவைச் சேர்ந்த கறுப்பினத்தவர் என்பதுடன் அவரது தாயார் இந்தியாவைச் சேர்ந்த தமிழர். .1964ம் ஆண்டு ஒக்டோபர் 20ம் திகதி பிறந்த கமலா ஹரிஸின் முழுப்பெயர்  கமலா தேவி ஹரிஸ் என்பதாகும். 

மாயா என்ற தங்கையும் கமலாவிற்கு உள்ளார். https://twitter.com/mayaharris_/status/1293342255089168390  


 தந்தையின் பெப்டிஸ்ற் கிறிஸ்தவ மதப்பின்புலத்திலும் தாயின் இந்துமதப்பின்புலத்திலும் தனது இளமைக்காலத்தில் வளர்க்கப்பட்ட கமலா ஹரிஸ் தந்தை டொனால்ட் ஹரிஸ் அமெரிக்காவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்றான ஸ்டான்பேர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்துறை பேராசிரியராக விளங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

கமலாவின் தாயாருடைய பெயர் சியாமளா கோபாலன் . மார்பக புற்றுநோய் பற்றிய விஞ்ஞானியான அவர் 1960ம்ஆண்டுகளில் இந்தியாவில் இருந்து மேற்படிப்பிற்காக அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 


தாய்வழி உறவினர்கள் இப்போதும் சென்னையில் வசித்துவருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது. 



இலங்கையின் நீதி அமைச்சராக அலி சப்றி ?

 

இலங்கையின் புதிய அமைச்சரவை கண்டி ஸ்ரீதலதா மாளிகையில் இன்று காலை பதவியேற்கின்றது. இந்த நிலையில் யார் யாருக்கு என்ன அமைச்சுப்பதவிகள் வழங்கப்படும் என்பது இன்னமும் உறுதிசெய்யப்பப்படவில்லை. இருந்தபோதும் தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளவரும் ஜனாதிபதியின் சட்ட ஆலோசகருமான ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்றிக்கு நீதி அமைச்சு வழங்கப்படும் என்பதை சூசகமாக தமது ஃபேஸ்புக் பக்கத்தினூடாக அறிவித்துள்ள நிலையில் அவருக்கு பலரும் வாழ்த்துக்களைக் கூறிவருகின்றனர். 

தனது உத்தியோகபூர்வ ஃபேஸ்புக் தளத்தில் இந்தப்படத்தைப் பகிர்ந்துகொண்டு அதற்கு தலைப்பாக 'My Passion'என அவர் குறிப்பிட்டுள்ளார். தாம் சட்டத்துறையுடன் மிக விருப்புக்கொண்டவர் என்பதை வெளிப்படுத்துவதாக இந்தப்பதிவு அமைந்திருக்கின்றது. 


Tuesday, August 11, 2020

ரொஜர் பெடரரின் சாதனையை 2021 வரை தக்கவைத்த Covid-19

 

உலகத்தில்  இதுவரைகாலத்தில் தோன்றிய மிகச்சிறந்த டென்னிஸ் வீரராக அறியப்படுபவர் சுவிட்ஸர்லாந்தின் ரொஜர் பெடரர். டென்னிஸ் விளையாட்டின் மிக உயரிய பட்டங்களான  கிராண்ட்ஸ்லாம்  பட்டங்கள் 20ஐ வென்று ஆண்கள் வரிசையில் அதிக கிராண்ட்ஸலாம் பட்டங்களை வென்றவர் என்ற சாதனையை அவர் இன்னமும் தம்வசம்கொண்டிருந்தாலும் அவருடைய மேதாவிலாச டென்னிஸ் நுட்பங்கள், ஆட்ட நகர்வுகள் ,அழகிய தனித்துவமான Shotகள் என பலதும் அவரைத் தனித்தட்டில் வைத்து வியக்கச்செய்வதுடன்  Greatest Player of all Time என அழைக்கவும் காரணமாகின்றது. 

39 வயதுடைய ரொஜர் பெடரர் இன்னமும் தனது ஆற்றலின் உச்சத்தில் இருந்தாலும் அவர் கடைசியாக கிராண்ட்ஸலாம் பட்டமொன்றை வென்றது 2018ம் ஆண்டு அவுஸ்திரேலிய பகிரங்கப் போட்டிகளிலாகும். மறுமுனையில் அவரிற்கு மிகவும் சவாலான போட்டியாளர்களாக திகழும் ரஃபேல் நடால் மற்றும் நொவாக் ஜோகோவிக் ஆகிய இருவரும் கடந்த ஆண்டிலும் இவ்வாண்டு முற்பகுதியிலும் நடைபெற்ற கிராண்ட்ஸ்லாம் கிண்ணங்களை வென்றவர்கள் . அந்தவகையில்  பெடரரை விட ஐந்துவயது குறைந்தவரான நடால் 19 கிராண்ட்ஸ்லாம்களுடனும் ஏழுவயது குறைந்தவரான ஜோகோவிக் 17 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களுடனும்  அருகருகே உள்ளனர். 

வருடமொன்றில் நடைபெறும் நான்கு கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஜனவரியில் அவுஸ்திரேலிய பகிரங்க போட்டிகளே இதுவரை நடைபெற்றுள்ளது. இதிலே வெற்றிபெற்றே ஜோகோவிக் தாம் வென்ற கிராண்ட்ஸலாம்களின் எண்ணிக்கையை 17ஆக உயர்த்திக்கொண்டார். இதனைத் தொடர்ந்து மே மாதத்தில் நடைபெற்றிருக்க வேண்டிய பிரஞ்சு பகிரங்க டென்னிஸ் போட்டிகளோ நடாலுக்காக நிச்சயிக்கப்பட்டமை என்று சொல்லும் அளவிற்கு அவரது சாதனைகள் உள்ளன. 2005ம் ஆண்டு தொடக்கம் 2019 வரையான காலப்பகுதியில் 12 தடவைகள் அவர் பிரஞ்சு சம்பியன்பட்டத்தை தனதாக்கியுள்ளமையில் இருந்து இம்முறையும் அவர் வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு பிரகாசம் எனக்   கூறப்பட்டது.பிரஞ்சுப்போட்டியில் இம்முறை வெற்றிபெற்றிருந்தால் நடால் 20வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றியிருப்பார். Covid-19 செய்த கோலம் பிரஞ்சு போட்டிகளும் நடைபெறவில்லை . 

அதனைத்தொடர்ந்து நடக்க வேண்டிய விம்பிள்டன் போட்டிகளும் நடக்கவில்லை. அமெரிக்காவில் கொரோனாவின் கோரத்தாண்டவம் பெரியளவில் இன்னமும் குறையாத நிலையிலும் தற்போது அமெரிக்க பகிரங்க போட்டிகளை நடத்த ஏற்பாட்டாளர்கள் தீர்மானித்துள்ளனர். ஆனால் இம்முறைபோட்டிகளில் பங்கேற்றப்போவதில்லை என ரொஜர் பெடரரும் ரஃபேல் நடாலும் ஏற்கனவே அறிவித்து விட்டனர்.  நொவாக் ஜோகோவிக் இன்னமும் தனது அறிவிப்பை வெளியிடவில்லை. ஒருவேளை ஜோகோவிக் விளையாடி வென்றாலும் அது அவரது 18வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகவே இருக்கும்.ஆனால் நடால் விளையாடமை அதிகூடிய கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற வீரர் என்ற பெடரின் சாதனையை அடுத்தாண்டு வரையேனும் குறைந்தபட்சம் தக்கவைப்பதற்கு வழிகோலியுள்ளது.