Tuesday, August 11, 2020

ரொஜர் பெடரரின் சாதனையை 2021 வரை தக்கவைத்த Covid-19

 

உலகத்தில்  இதுவரைகாலத்தில் தோன்றிய மிகச்சிறந்த டென்னிஸ் வீரராக அறியப்படுபவர் சுவிட்ஸர்லாந்தின் ரொஜர் பெடரர். டென்னிஸ் விளையாட்டின் மிக உயரிய பட்டங்களான  கிராண்ட்ஸ்லாம்  பட்டங்கள் 20ஐ வென்று ஆண்கள் வரிசையில் அதிக கிராண்ட்ஸலாம் பட்டங்களை வென்றவர் என்ற சாதனையை அவர் இன்னமும் தம்வசம்கொண்டிருந்தாலும் அவருடைய மேதாவிலாச டென்னிஸ் நுட்பங்கள், ஆட்ட நகர்வுகள் ,அழகிய தனித்துவமான Shotகள் என பலதும் அவரைத் தனித்தட்டில் வைத்து வியக்கச்செய்வதுடன்  Greatest Player of all Time என அழைக்கவும் காரணமாகின்றது. 

39 வயதுடைய ரொஜர் பெடரர் இன்னமும் தனது ஆற்றலின் உச்சத்தில் இருந்தாலும் அவர் கடைசியாக கிராண்ட்ஸலாம் பட்டமொன்றை வென்றது 2018ம் ஆண்டு அவுஸ்திரேலிய பகிரங்கப் போட்டிகளிலாகும். மறுமுனையில் அவரிற்கு மிகவும் சவாலான போட்டியாளர்களாக திகழும் ரஃபேல் நடால் மற்றும் நொவாக் ஜோகோவிக் ஆகிய இருவரும் கடந்த ஆண்டிலும் இவ்வாண்டு முற்பகுதியிலும் நடைபெற்ற கிராண்ட்ஸ்லாம் கிண்ணங்களை வென்றவர்கள் . அந்தவகையில்  பெடரரை விட ஐந்துவயது குறைந்தவரான நடால் 19 கிராண்ட்ஸ்லாம்களுடனும் ஏழுவயது குறைந்தவரான ஜோகோவிக் 17 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களுடனும்  அருகருகே உள்ளனர். 

வருடமொன்றில் நடைபெறும் நான்கு கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஜனவரியில் அவுஸ்திரேலிய பகிரங்க போட்டிகளே இதுவரை நடைபெற்றுள்ளது. இதிலே வெற்றிபெற்றே ஜோகோவிக் தாம் வென்ற கிராண்ட்ஸலாம்களின் எண்ணிக்கையை 17ஆக உயர்த்திக்கொண்டார். இதனைத் தொடர்ந்து மே மாதத்தில் நடைபெற்றிருக்க வேண்டிய பிரஞ்சு பகிரங்க டென்னிஸ் போட்டிகளோ நடாலுக்காக நிச்சயிக்கப்பட்டமை என்று சொல்லும் அளவிற்கு அவரது சாதனைகள் உள்ளன. 2005ம் ஆண்டு தொடக்கம் 2019 வரையான காலப்பகுதியில் 12 தடவைகள் அவர் பிரஞ்சு சம்பியன்பட்டத்தை தனதாக்கியுள்ளமையில் இருந்து இம்முறையும் அவர் வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு பிரகாசம் எனக்   கூறப்பட்டது.பிரஞ்சுப்போட்டியில் இம்முறை வெற்றிபெற்றிருந்தால் நடால் 20வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றியிருப்பார். Covid-19 செய்த கோலம் பிரஞ்சு போட்டிகளும் நடைபெறவில்லை . 

அதனைத்தொடர்ந்து நடக்க வேண்டிய விம்பிள்டன் போட்டிகளும் நடக்கவில்லை. அமெரிக்காவில் கொரோனாவின் கோரத்தாண்டவம் பெரியளவில் இன்னமும் குறையாத நிலையிலும் தற்போது அமெரிக்க பகிரங்க போட்டிகளை நடத்த ஏற்பாட்டாளர்கள் தீர்மானித்துள்ளனர். ஆனால் இம்முறைபோட்டிகளில் பங்கேற்றப்போவதில்லை என ரொஜர் பெடரரும் ரஃபேல் நடாலும் ஏற்கனவே அறிவித்து விட்டனர்.  நொவாக் ஜோகோவிக் இன்னமும் தனது அறிவிப்பை வெளியிடவில்லை. ஒருவேளை ஜோகோவிக் விளையாடி வென்றாலும் அது அவரது 18வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகவே இருக்கும்.ஆனால் நடால் விளையாடமை அதிகூடிய கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற வீரர் என்ற பெடரின் சாதனையை அடுத்தாண்டு வரையேனும் குறைந்தபட்சம் தக்கவைப்பதற்கு வழிகோலியுள்ளது. 


No comments:

Post a Comment