Sunday, January 16, 2011

வேகம் வேகம் வேகம் ............. ரசிகர்களை மயிர்க்கூச்செறியவைக்கும் 100M ஓட்டம்வேகம்

மனித இனம் தோன்றிய காலம் முதல் வேகத்தின் மீதான நாட்டம் என்றென்றுமே அதிகரித்தே சென்று கொண்டிருக்கின்றது என்றால் மிகையல்ல
.
அனைத்திலும மனித மனம் வேகத்தை விரும்பியதன் பிரதிபலிப்பே இன்று உலகில் ஏற்பட்டுள்ள அனேக முன்னேற்றங்களுக்கு அடிநாதமாக விளங்குகின்றது

வேகம் என்பது விளையாட்டிற்கும் விதிவிலக்கல்ல .விளையாட்டுலகில் அனைத்துவிதமான விளையாட்டுக்களும் இன்னோரன்ன வகையில் வேகம் பெற்றுவந்தாலும் 100 மீற்றர் ஓட்டப்போட்டிகளுக்கிருக்கும் இடம் தனித்துவமானது .

இதன் காரணமாகத்தான் சாதாரண பாடசாலைப்போட்டிகள் முதற்கொண்டு சர்வதேசப் புகழ்மிக்க ஒலிம்பிக் வரையிலும் 100 மீற்றர் போட்டிகள் என்று வந்துவிட்டால் ரசிகர்கள் மத்தியில் பீறிட்டெழுகின்ற உற்சாகத்தையும் பரவச உணர்வையும் வர்ணிப்பதற்கு வார்த்தைகளே கிடையாதென்றவகையில் விளையாட்டு நிகழ்ச்சிகளில் 100 மீற்றர் ஓட்டம் என்பது தனித்துவமானதாக திகழ்கின்றது

100 மீற்றர் ஓட்டப்போட்டியில் வெற்றிபெறுகின்ற வீரரை அன்றேல் வீராங்கனையை உலகின் வேகமான மனிதராக கருதுகின்ற காரணத்தால் அதன் மீதான ஆர்வம் அனைத்துத்தரப்பினர் மத்தியிலும் அதிகமாக இருப்பதற்கு காரணமாகின்றது

இலத்திரனியல் முறையிலான நேரக்கணிப்பு (Electronic Timing)  1968ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது முதலாக இதுவரையில் 100மீற்றர் ஓட்டப்போட்டிகளில் ஆண்களுக்கான உலக சாதனை 12 தடவைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன . ஆண்களுக்கான 100மீற்றர் ஓட்டத்தில் முதன் முறையாக 10செக்கன்கள் என்ற வரம்பை முறியடித்து அதற்கு குறைவான நேரத்தில் ஓட்டத்தை நிறைவுசெய்த வீரராக அமெரிக்காவைச் சேர்ந்த ஜிம்  ஹினஸ் திகழ்கின்றார் .

1968ம் ஆண்டு மெக்ஸிகோவில் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளின் போதே அவர் இந்த உலக சாதனையை ஏற்படுத்தியிருந்தார்
தற்போது ஆண்களுக்கான 100மீற்றர் உலக சாதனை ஜமெய்க்கா வீரர் உசெயின் போல்ட் வசமுள்ளது .2009ம் ஆண்டு ஒகஸ்ற் 16ம்திகதி போல்ட் தனது முன்னைய சாதனையை 0.11 செக்கன்களால் குறைத்து 9.58 செக்கன்களில் ஓடி புதிய உலக சாதனையை நிலைநாட்டியிருந்தார்

1.   உசெய்ன் போல்ட்(ஜமெய்க்கா) -9.58 செக்கன்கள் -  16.08.2009 –பேர்லின்

2.   டைஸன் கே (அமெரிக்கா)-9.69 செக்கன்கள் -            20.09.2009- ஷங்காய்

3.   அஸாபா பவல்(ஜமெய்க்கா) -9.72 செக்கன்கள் -       02.09.2008- -லுஸான்

4.   நெஸ்டா கார்டர்(ஜமெய்ககா)-9.78 செக்கன்கள்-       29.08.2010  -ரீடி

5.   மொரிஸ் கிறீன்(அமெரிக்கா)-9.79 செக்கன்கள் -      16.06.1999 – ஏதென்ஸ்



பெண்களுக்கான 100மீற்றர் உலக சாதனை கடந்த 20 வருடங்களுக்கு மேலாக முறியடிக்கப்படாமலேயே உள்ளது
1988ம் ஆண்டு ஜுலை 16ம்திகதி அமெரிக்காவின் இந்தியானா மாநிலத்தில் இடம்பெற்ற போட்டியொன்றில்100மீற்றர் தூரத்தை 10.49 செக்கன்களில் ஓடிமுடித்து அமெரிக்க வீராங்கனை ஃபுளொரன்ஸ் கிரிபித் ஜொய்னர் நிலைநாட்டிய சாதனையே இன்னமும் பெண்கள் பிரிவில் உலக சாதனையாகவுள்ளது .

பெண்களுக்கான 100 ஓட்டத்தில்; அதி சிறந்த பெறுதிகள்

1.   ஃபுளொரன்ஸ் கிரிபித் ஜொய்னர்(அமெரிக்கா)  10.49 செக்கன்கள் 16.07.1988-  இன்டியானாபொலிஸ்

2.  கார்மலிடா ஜீற்றர் (அமெரிக்கா)   10.64 செக்கன்கள் 20.09.2009 -ஷங்காய்

3.  மேரியன் ஜோன்ஸ்( அமெரிக்கா)10.65செக்கன்கள் 12.09.1998-ஜொகனஸ்பேர்க்

4.  ஷெலி ஆன்ஃபிரேசர்(ஜமெய்க்கா) 10.73செக்கன்கள் 17.08.2009- பேர்லின்

5.  கிறிஸ்ரின் ஆரோன் (பிரான்ஸ்) 10.73 செக்கன்கள் 19.08.1998- புடாபெஸ்ற்

 100 மீற்றர் ஓட்டத்தைப் பொறுத்தவரையில் சில தருணங்கள் ரசிகர்களால் என்றென்றுமே மறக்க முடியாதவையாக மனதைவிட்டு நீங்காதவையாக நிலைத்திருப்பதை இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும்

அப்படியான தருணத்திற்கு சொந்தக்காரர் தற்போதுள்ள உசெய்ன் போல்ட்டோ அன்றேல் அஸாபா பவலோ அல்ல மாறாக ஊக்கமருந்துபாவித்தமைக்காக அபகீர்த்திக்குள்ளான கனடா நாட்டைச் சேர்ந்த வீரர் பென் ஜோன்ஸன் என்றால் பார்க்காதவர்களுக்கு சந்தேகம் தோன்றலாம்

 1988ம் ஆண்டு தென்கொரியாவின் சோல் நகரில் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டியில் அவர் ஓடிய ஓட்டம் அப்பப்பா இன்று நினைத்தாலும் பரவசத்தின் உச்சத்திற்கு ரசிகர்களைக் கொண்டுசென்றுவிடும் . பென் ஜோன்ஸனின் உருண்டுதிரண்ட கட்டுமஸ்தான உடல்வாகு மிரட்டும் விழிகள் அசூர வேகம் என்பன இன்றும் என் கண்களுக்கு முன்னால் நிழலாடுகின்றது

 ஊக்க மருந்து பாவித்தமை பெருங்குற்றம் என்பதை நானும் ஒத்துக்கொள்கின்றேன் ஆனால் எத்தனை பேர் பாவித்தும் தப்பித்துக்கொண்டார்கள் என்று எண்ணுகையில் இது தெரிந்து தான் நடந்ததா இல்லை சூழ்ச்சியால் நடந்ததா என்பது இன்னமும் புரியாமலேயே உள்ளது

 1988ல் பென் ஜோன்ஸன் ஊக்கமருந்து பாவித்ததாக கண்டுபிடித்தவர்களால் ஏன் 2000ம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக் போட்டிகளில் மேரியன் ஜோன்ஸ் ஊக்க மருந்து பாவித்ததை கண்டுபிடிக்க முடியவில்லை .இறுதியில் மேரியன் ஜோன்ஸே ஒப்புக்கொண்ட பின்னர் தானே அவர் பாவித்தமை தெரியவந்தது

 இப்படியாக எத்தனை வீர வீராங்கனைகள் ஒத்துக்கொள்ளாமலேயே சாதனைக்கு சொந்தங்கொண்டாடியிருப்பர் என்று நினைத்தால் விளையாட்டின் மீதான அபிமானமே இல்லாமல் போய்விடும்

   யார் செய்தாலும் தவறு தவறுதான் .பென் ஜோன்ஸனின் பெயரைக் குறிப்பிட்டது அவர் செய்தது சரியென்று சொல்லவல்ல மாறாக வேகத்தின் அடையாளமாக அபகீர்த்திக்குள்ளான நிலையிலும் என் நினைவலைகளில் வந்துசெல்கின்றமை காரணமாகவே !

உலகத்தில் ஏதேதோ காரியத்திற்காகவெல்லாம் எவ்வளவோ விலை கொடுக்கின்றனர் . ஆனால் வேகத்திற்கான தம் வாழ்வையே விலையாக கொடுக்க நேரிடுவது வீரவீராங்கனைகளைப் பொறுத்தமட்டில் மிகமிக அதிகமானது என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும்

No comments:

Post a Comment