விடைபெற்ற 2010ம் ஆண்டு என்றுமில்லாத வகையில் உலகம் காட்டுமிராட்டித்தனம் நிறைந்ததாக போய்விட்டதற்கு சான்றுபகர்கின்றதென்றால் மனிதராகிய எம்மத்தியில் சந்தேகம் தோன்றுவதற்கு பதிலாக சங்கடம் தோன்றுவதற்குத்தான் இடமுண்டு
ஏனென்றால் ஐந்தறிவு மிருகங்களில் இருந்து மனிதர்களை வேறுபடுத்திய முக்கிய காரணிகளிலொன்றான மனிதாபிமானம் தொலைந்து மனிதர்கள் மனிதத்தன்மையை வேகமாக இல்லாதொழித்துக்கொண்டிருப்பது ஒருபுறம் நடக்க இயற்கையும் தன் கோரமுகத்தைக் காண்பித்து ருத்ரதாண்டவம் ஆடிக்கொண்டிருப்பதே இதற்கு காரணமாகும்.
இயற்கையின் சீற்றத்திற்கும் மனிதர்களின் நடவடிக்கைகளே மூலகாரணமாக இருப்பது நிருபணமாகியிருப்பதே சங்கடத்திற்கு வழிகோலுகின்றது
இன்றைய நிலையில் நாடுகள் தமது பொருளாதாரத்தை வளப்படுத்திக்கொள்வதற்காக மனிதர்களைக் காவுகொடுக்கவே தயங்காத நிலையில் இயற்கையின் கதியை எண்ணினால் கவலைகொள்வதைத்தவிர வேறுவழியில்லை
ஆனால் இயற்கையை மனிதன் தன்செயற்பாடுகளால் அழிக்க முனையும் போது மனிதர்களது வேகத்திற்கு மேலாக பன்மடங்கு அசூரத்தனமாக இயற்கை பதிலடி கொடுத்துவருவதற்கு ஆதாரம் தேடுவதற்கு வரலாற்றில் நாம் பலவருடகாலத்திற்கு பின்னோக்கி பயணிக்க வேண்டியதில்லை
எம்மிடமிருந்து அண்மையில் விடைபெற்ற 2010ம் ஆண்டிலேயே இதற்கான பதிலைத் தேடிவிடமுடியும்
பூமி அதிர்ச்சிகள்- வெப்ப கதிர்வீச்சுக்கள் -வெள்ள அனர்த்தங்கள் -எரிமலை சீற்றங்கள்- அசூர சுறாவளிகள் -கடும்பனிப்புயல் -நிலச்சரிவுகள் -வரட்சிகள் என இயற்கையின் கோரத்தாண்டவத்தில் 2010ம் ஆண்டில் ஆகக்குறைந்தது 5லட்சம் மக்கள் கொல்லப்பட்டதான உறுதிப்படுத்தப்பட்ட சான்றுகள் வெளியாகியுள்ளன.
கடந்த ஒருதசாப்ததிற்கு மேலான காலப்பகுதியில் கடந்தாண்டே மிகவும் பயங்கரமான ஆண்டாக அமைந்ததுடன் கடந்த 40வருடங்களில் இடம்பெற்ற பயங்கரவாத நடவடிக்கைகளில் கொல்லப்பட்ட மக்களின் ஒட்டுமொத்த தொகையிலும் பார்க்க அதிமான மக்கள் 2010ம் ஆண்டிலே இயற்கை அனர்த்தத்தினால் கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது
இயற்கை அனர்த்தங்கள் எதிர்பாராத வகையில் நிகழும் போதிலும் அதனால் ஏற்படும் மோசமான அழிவுகளுக்கு அனேக சந்தர்ப்பங்களில் மனிதர்களையே குறைகூறவேண்டும் என விஞ்ஞானிகளும் அனர்த்த நிபுணர்களும் சுட்டிக்காட்டுகின்றனர்
இதற்கு உதாரணமாக ஹெய்டி மற்றும் சிலி ஆகிய நாடுகளில் கடந்தாண்டு இடம்பெற்ற பூகம்பங்கள் ஒப்புநோக்கப்படுகின்றன
ஹெய்டியில் கடந்தாண்டு ஜனவரி மாதத்தில் இடம்பெற்ற பூகம்பத்தில் இரண்டு லட்சத்து 20 ஆயிரத்திற்கும் அதிகமமானவர்கள் கொல்லப்பட்டனர் .ஆனால் அதைவிடவும் அளவில் 500 மடங்கிற்கும் அதிகமான பெரிய பூகம்பம் சிலியில் இடம்பெற்றபோது அதில் 1000ற்கும் குறைவானவர்களே கொல்லப்பட்டிருந்தனர் .
ஹெய்டியில் திட்டமிடப்படாத வகையில் அமைந்திருந்த அடர்த்திமிக்க மக்கள் குடியிருப்புக்களும் மிகவும் மோசமான முறையில் நிர்மாணிக்கப்பட்டிருந்த கட்டிடங்களும் குடியிருப்புகளுமே ஹெய்டியின் பயங்கர அழிவுகளுக்கு வித்திட்டதாக சுட்டிக்காட்டப்படும் அதேவேளையில் சிலியில் மக்கள் தொகை அடர்த்தி குறைவாக காணப்பட்டமையும் பாதுகாப்பான முறையில் நேர்த்தியாக அமைக்கப்பட்டிருந்த கட்டிடங்களுமே மிகக்குறைவான இழப்புக்களுக்கு காரணமென விஞ்ஞானிகளும் அனர்த்த நிபுணர்களும் குறிப்பிடுகின்றனர்.
பொருளாதார வளர்ச்சி என்பதையே மையமாகக்கொண்ட மனிதர்களின் கட்டற்ற வேட்கையின் விளைவால் உருவான பூகோள வெப்பமயமாதல் காரணமாக பூமியின் காலநிலை வழமையிலும் பார்க்க முரணானதாக மாறிக்கொண்டிருப்பதாக பூகோள விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர் இதனால் கடுமையான காலநிலை மாற்றங்கள் கடந்தாண்டில் பதிவுசெய்யப்பட்டன. இதில் வெப்பக்கதிர்வீச்சு மற்றும் வெள்ளப்பெருக்கு என்பவை குறிப்பிடத்தக்கது
கடந்தாண்டு கோடைகாலத்தில் ரஷ்யாவில் ஏற்பட்ட கடுமையான வெப்பக்கதிர்வீச்சில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர் .ரஷ்யாவில் ஏற்பட்ட வெப்பக்கதிர்வீச்சு 111 டிக்கிரி வெப்பம் கொண்டதெனவும் இது ரஷ்யாவின் வரலாற்றில் மிகமோசமானதென்பதுடன் நூறாயிரம் ஆண்டுகளுக்கு ஒருதடவையே இவ்வாறான அசாதாரணமான வெப்பக்கதிர்வீச்சு நிகழ்வதாக வரலாற்றுச்சான்றுகள் குறிப்பிடுகின்றன ஆனால் பூகோள வெப்பமயமாதல் காரணமாக இப்படியான நிகழ்வுகள் அடிக்கடி இடம்பெறும் நிகழ்வுகளாக மாறியிருப்பது கவலைக்கிடமானது .
இது மட்டுமன்றி 18 நாடுகளில் கடந்தாண்டிலேயே அந்நாடுகளின் வரலாற்றில் வெப்பமான நாட்கள் பதிவாகியிருக்கின்றன. கடந்தாண்டில் ஏற்பட்ட தனியொரு வெப்பக்கதிர்வீச்சுபுயல்காரணமாக 17000 பேர் வரையில் கொல்லப்பட்டிருந்தனர் .
இந்த எண்ணிக்கையானவர் கடந்த 15 ஆண்டுகாலத்தில் உலகில் நிகழ்ந்த ஒட்டுமொத்த விமானவிபத்துக்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையைவிடவும் அதிகமென சுட்டிக்காட்டப்படுகின்றது. கடந்தாண்டு ஒரு பக்கம் வெப்பக்கதிர்வீச்சென்றால் மறுபக்கம் பாகிஸ்தானில் இடம்பெற்ற வரலாறுகாணாத வெள்ளப்பெருக்கில் 62000 சதுர மைல்கள் பிரதேசம் மனிதர்கள் பிரவேசிக்கமுடியாதவாறு வெள்ளத்தால் துண்டாடப்பட்டன .இலஙகையின பரப்பளவைவிடவும் இரண்டுமடங்கிற்கு அதிகமான பிரதேசம் பாகிஸ்தானில் வெள்ளத்தால் துண்டாப்பட்டதென்றால் வெள்ளத்தின்
பரிமாணத்தை விளங்கிக்கொள்ளமுடியும் .
மனிதர்கள் ஏற்படுத்தும் அழிவுகளால் இயற்கை சீற்றமெடுத்த மேற்குறிப்பிட்ட நிகழ்வுகள் எமது நாட்டிற்கு வெளியில் இடம்பெற்றவை என்பதால் அவற்றின் தாக்கங்களை விளங்கிக்கொள்ளமுடியாதவர்கள் கடந்தாண்டு நவம்பர் மாதம் 10ம் திகதி இரவுமுதல் அதிகாலை வரையில் கொழும்பில் பெய்த கடும் மழைவீழ்ச்சியையும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் எண்ணிப்பார்த்தால் காத்திருக்கும் அபாயத்தின் பயங்கரம் புரிந்துவிடும்
ஒருநாள் பெய்த மழையிலேயே பாராளுமன்றம் உட்பட தலைநகரின் பலபகுதிகள் மூழ்கிவிட்டதென்றால் பாகிஸ்தானில் போன்று தொடர்ச்சியாக வாரக்கணக்கில் மழைபெய்தால் நிலைமை எவ்வாறு இருக்கும் என்பது புலனாகிவிடும்
தனிமனிதர்களாகிய நாம் பொலித்தின் பாவனையை குறைத்தல் .வீடுகளிலும் நாம் வாழும் சூழலிலுமுள்ள கழிவுநீர் வழிந்தோடும் பகுதிகளை நேர்த்தியாக வைத்திருந்தல் போன்ற சிறிய செயற்பாடுகளுடாகவே சுற்றாடலை சிறப்பாக வைத்திருப்பதற்கு பங்களிக்கமுடியும் .
உலக சுற்றாடல் தினமாகிய இன்றைய நாளில் நாம் வாழும் இந்த உலகம் மனிதர்களின் செயற்பாடுகள் காரணமாக வேகமாக அழிவுப்பாதையை நோக்கி பயணித்துக்கொண்டிருப்பதனை உணர்ந்து அதனைத் தவிர்க்க முடியாவிட்டாலும் தாமதிப்பதற்கு எம்மால் செய்யக்கூடிய சிறிய செயற்பாடுகளையேனும் செய்தாக வேண்டும் என்பதை சிந்தனையில் நிறுத்தி செயற்படவேண்டும்
No comments:
Post a Comment