Saturday, January 1, 2011

மீள்குடியேற்றம் முழுமைபெறுவது எப்போது?


இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் எப்போது முழுமைபெறும் என்பது பல்வேறுதரப்பட்டவர்களதும் கரிசனைக்குள்ளான விடயமாக தொடர்ந்தும் இருந்துகொண்டிருக்கின்றது
.
யுத்தம் நிறைவுபெற்றதாக பிரகடனப்படுத்தப்பட்டு 18மாதங்கள் உருண்டோடிவிட்ட நிலையிலும் அரசியல் மனிதாபிமான களங்களில் ஓங்கியொலிக்கின்ற விடயமாக மீள்குடியேற்றம் காணப்படுவதை ஏற்றுக்கொள்ளவேண்டும்.

வடக்கில் யுத்தம் தீவிரமடையத்ததொடங்கிய 2008ம் ஆண்டு ஒக்டோபர் மாதத்திற்கு பின்னர் அரசசாங்க கட்டுப்பாட்டுப்பகுதிக்கு இடம்பெயர்ந்த மக்களில் இன்னமும் சுமார் 15 ஆயிரம் பேர் மாத்திரமே மீள்குடியமர்த்தப்பட வேண்டியுள்ளதாகவும் இவர்கள் இவ்வருட இறுதிக்குள்ளாக மீள்குடியமர்த்தப்படுவர் என இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோது தெரிவிக்கப்பட்ட கருத்துக்களில் நம்பிக்கை வெளியிடப்பட்டிருந்தது

எனினும் இதனை இடம்பெயர்ந்தவர்களை மீளக்குடியமர்த்துவதற்கான திட்டவட்டமான காலக்கெடுவென எந்தத்தரப்பினரும் அறிவிக்கவில்லை.
இடம்பெயர்ந்த மக்கள் இன்னமும் ழுழுமையாக மீள்குடியமர்த்தப்படவில்லை

 மீள்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு உரிய வசதிகளோ நிவாரணங்கள் வழங்கப்படவில்லை அவர்கள் சொல்லோணா துன்பங்களை எதிர்நோக்கிவருகின்றனர் என எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தரப்பினர் தெரிவித்துவருகின்ற அதேவேளை வடக்கில் மீள் குடியேற்றம் என்பது சுலபமானதல்ல .சகல கட்டமைப்புக்களும் அழிக்கப்பட்ட நிலையில் பெரும் தொகையான கண்ணிவெடிகள் புகைக்கப்பட்ட சூழ்நிலையில் இந்தப்பணிகளை மேற்கொள்வதாக அரச தரப்பில் பதிலளிக்கப்படுகின்றது

.

பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இருந்தாலும் கடந்த மே மாதத்தில் பின்னர் காணப்பட்ட நிலையில் இன்று பாரிய முன்னேற்றம் காணப்பட்டுள்ளதை புள்ளிவிபரங்கள் உணர்த்திநிற்கின்றன.

கடந்த வருடத்தின் மே மாத இறுதிப்பகுதியில் வவுனியா முகாம்களில் சுமார் மூன்று லட்சமாக காணப்பட்ட இடம்பெயர்ந்த மக்களின் எண்ணிக்கை தற்போது பத்திலொரு பங்கைவிடவும் குறைந்திருக்கின்றது
.
வுன்னியுத்தத்தின் போது இடம்பெயர்ந்த மக்களுக்காக அமைக்கப்பட்ட மற்றும் முகாம்களாக மாற்றப்பட்ட ஆனந்த குமாரசுவாமி நிவாரணகிராம் கதிர்காமர் நிவாரணகிராமம் அருணாச்சலம் நிவாரணகிராமம் ராமநாதன் நிவாரண கிராமம் ஆண்டியாபுளியங்குளம் முஸ்லிம் மகாவித்தியாலம் அருவித்தோட்டம் சிவானந்தா வித்தியாலயம் செட்டிகுளம் மகாவித்தியாலயம் கோமரசன் குளம் மகா வித்தியாலயம் பூந்தோட்டம் கல்வியியல் கல்லூரி நெலுங்குளம் கலைமகள் மகா வித்தியாலயம் தாண்டிக்குளம் மகா வித்தியாலயம் சூடுவெந்தபுலவு சுமதிபுர வீரபுரம் நலன்புரி நிலையம் ஷோன் 4(வலயம் 4) அமைக்கப்பட்ட 16 முகாம்களில் தற்போது கதிர்காமர் ஆனந்த குமாரசுவாமி மற்றும் அருணாச்சலம் ஆகிய மூன்று முகாம்கள் மாத்திரமே எஞ்சியுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

 இந்த முகாம்களில் அனுமதிப்பத்திரத்தடன் வெளியே சென்றுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கையையும் சேர்த்துப்பார்க்கின்றபோது 30.11.2010 காலப்பகுதியில் மொத்தமாக (17977103331) 21308  பேர் மீளக் குடியேற்றப்பட வேண்டியுள்ளமை புலனாகின்றது

கடந்தவருடத்தில் வன்னி யுத்ததத்தால் இடம்பெயர்ந்தவர் பொதுமக்களின் மொத்த எண்ணிக்கை கிட்டத்தட்ட மூன்று லட்சம் என பல்வேறு தரப்பினரும் சுட்டிக்காட்டியிருந்தனர் .

ஆனால் இதுவரையில் மீளக்குடியமர்த்தப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டவர்கள் மற்றும் தொடர்ந்தும் முகாம்களின் உள்ளவர்களின் எண்ணிக்கையை அவதானிக்கின்றபோது இந்த எண்ணிக்கை( 252064 1021308) 273372 ஆக இருப்பதை விளங்கிக்கொள்ளமுடியும்
.
இது தொடர்பாக மீள்குடியேற்ற அமைச்சின் உயர் அதிகாரியொருவரிடம் வினவியபோது வன்னியில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்து வந்த ஆரம்பகாலப்பகுதியில் பல இடங்களில் ஒரே ஆட்களை திரும்பத்திரும்ப பதிந்தமை காரணமாக மொத்த எண்ணிக்கை அதிகமாக கூறப்பட்டதாகவும் ஆனால் தற்போது அத்தவறுகள் நிவர்த்திக்கப்பட்ட நிலையில் தற்போதைய எண்ணிக்கையே இறுதியானதாக காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார் .

மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக வழங்கப்பட்ட வாக்குறுதிகள் பல கடந்து போயுள்ள போதிலும் முகாம்களில் எஞ்சியிருக்கின்ற மக்கள் அடுத்துவரும் மாதகாலப்பகுதியில் மீள்குடியமர்த்தப்படக்கூடும் என்ற நம்பிக்கைகள் தற்போது தெரிவிக்கப்படும் கருத்துக்களில் வெளியாகியுள்ளன.
அந்தவகையில் எஞ்சியுள்ள இடம்பெயர்ந்தோருக்கான மூன்று முகாம்களும் மூடப்படும் நாட்கள் அன்றேல் மூடப்பட்டதாக அறிவிப்பு வெளியாகும் நாட்கள் வெகுதொலைவில் இல்லை என்றே கூறவேண்டும் .

                                      காத்திருக்கும் பெரும் சவால்

வன்னியுத்தத்தின் போது இடம்பெயர்ந்த மக்களின் மீள் குடியேற்றம் முற்றுப்பெறுகின்ற காலம் அண்மிக்கும் நிலையில் இலங்கைக்கு முன்பாக பாரிய சவாலகள் காத்திருக்கின்றன .

முகாம்களில் இருந்து மீள் குடியேற்றப்பட்ட மக்கள் மீண்டும் தமது சமூகத்துடன் சேர்ந்துவாழும் சூழலை ஏற்படுத்துதல் அவர்களுக்குத் தேவையான ஆவணங்களை பெற்றுக்கொடுத்தல் தொடர்பான விடயங்கள் உட்கட்டமைப்பு வசதிகளை செய்துகொடுத்தல் சொந்தக்காலில் நிற்கத்தக்கதான வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக்கொடுத்தல் போன்ற உடனடித் தேவைகளுக்கு அப்பால் அம்மக்களின் எதிர்காலம் தொடர்பாக நிலவக்கூடிய அச்சங்களைக் களைதலும் பாதுகாப்புணர்வை ஏற்படுத்தலும் முக்கியமானதாகும்
.
தற்போது மீள் குடியேற்றத்திற்காக தமது கிராமங்களுக்கு செல்கின்ற மக்கள் தமது கிராமசேவகர்களிடமும் உதவி அரசாங்க அதிபரிடமும் பதிவுகளை மேற்கொள்வதற்கு அப்பால் இராணுத்தினரது பதிவுகளுக்கும் உட்படவேண்டியுள்ளதாக கூறுகின்றனர்

.இதன்போது தமக்கென இராணுவத்தினர் வழங்குகின்ற இலக்கத்துடன் புகைப்படமெடுக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர் .இது குறித்த பகுதியின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவற்காகவே மேற்கொள்ளப்படுவதாக இராணுவத்தினர் கூறுகின்றனர்
.
இருந்தபோதிலும் இவ்வாறான ஐயப்பாடுகளை ஆரம்பத்திலேயே களைவது மக்களின் சுமூகமான மீள்குடியேற்றத்திற்கு அவசியமென உணரப்படுகின்றது. தமது சொந்தக் இடங்களில் மீள்குடியேற்றப்பட்டவர்கள் பல்வேறு பிரச்சனைககளுக்கு முகங்கொடுத்துள்ளபோதிலும் அவர்கள் முகாம்களில் இருந்த காலத்தில் கூறியதைப் போன்று தமது சொந்த இடங்களில் ஒரு வித நிம்மதியுடன் வாழ்வதை அத்தகைய மக்களில் பலருடனான உரையாடல்களின் போது உணர்ந்துகொள்ளமுடிந்தது .'

கஞ்சியையோ கூழையோ குடித்தாலும் சொந்த இடத்திற்கு சென்றால் போதும'; 'பச்சைத்தண்ணிய குடித்தாலாவது எங்கட இடத்தில இருக்கணும்' 'வீடு இல்லாட்டாலும் எங்கட இடத்தில மரநிழலிலாவது நிம்மதியா உறங்கலாம்' போன்ற வார்த்தைகளை முகாம்களில் இருந்தபோது மக்கள் திரும்பதிரும்ப கூறியதை கேட்டிருக்கின்றோம்.

தமது சொந்த இடங்களுக்கு சென்றவர்கள் அந்த உணர்வை நிஜத்தில் அனுபவிப்பதை பலர் கூறக் கேட்டேன்
 .
வன்னியில் இடம்பெற்ற யுத்தத்தின் போது இடம்பெயர்ந்த மக்கள் தவிர மீள்குடியேற்றம் செய்யப்படவேண்டியுள்ள மக்கள் குறித்த விடயம் இலங்கைக்கு முன்பாகவுள்ள மற்றுமொரு சவாலாக உள்ளது.
இவர்கள் பழைய இடம்பெயர்ந்தவர்கள் என அழைக்கப்படுகின்ற பிரிவினராவர் .20வருடகாலத்திற்கு முன்னர் தமது சொந்த இடங்களில் இருந்து இடம்பெயர்ந்த ஒருலட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம் மக்கள் .மூன்று தசாப்த காலப்போரின் விளைவாக இந்தியாவிற்கு சென்ற தமிழ் மக்கள் இவர்களின் எண்ணிக்கையும் ஒரு லட்சத்திற்கு அதிகமாகவுள்ளது . உயர்பாதுகாப்பு வலயங்கள் காரணமாக வெளியேற்றப்பட்ட 70 ஆயிரம் வரையிலான மக்கள் என பல்வேறு பிரிவினரும் மீள்குடிமர்த்தப்படவேண்டியுள்ளனர்

மேற்குலக நாடுகளிலும் அவுஸ்திரேலியா நியுஸிலாந்து போன்ற நாடுகளிலும் அரசியல் தஞ்சம் கோரியுள்ளவர்களைத்தவிர அகதிகள் என்ற அந்தஸ்துடன் தற்போது 146098 இலங்கையர்கள் உலகிலுள்ள 64 நாடுகளில் பரந்துவாழ்ந்துகொண்டிருப்பதாக அண்மையில் ஒரு ஆங்கிலப்பத்திரிகையில் வெளியான கட்டுரையில் வாசிக்கமுடிந்தது

அகதிகளுக்கான ஐக்கியநாடுகள் உயர்ஸ்தானிகராலயத்தின் இலங்கைக்கான பிரதி வதிவிடப்பிரதிநிதி ஜெனிபர் பகோனிஸை மேற்கொள்காண்பித்து வெளியிடப்பட்டிருந்த அந்தத்தகவலில் ஒட்மொத்தமான 146098 அகதிகளில் 71சதவீதமானோர் அண்டைநாடான இந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் வாழ்வதாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது

'அகதிகளின் எண்ணிக்கை விடயத்தில் அவதானமாக இருக்கவேண்டும்' என ஜெனிபர் பகோனிஸ் கூறியிருப்பது இந்த எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு காணப்படலாம் என்பதற்கான அறிகுறியாகவே கொள்ளப்படவேண்டும் என அந்தக்கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது

ஆக மொத்தத்தில் மீள் குடியேற்றம் என்பது வவுனியா முகாம்களில் எஞ்சியுள்ளவர்களை மீண்டும் அவர்களது கிராமங்களுக்கு கொண்டுசெல்வதுடன் முற்றுப்பெறுகின்ற விடயமாக அமையமாட்டாது என்பதையே இந்த விடயங்கள் உணர்த்திநிற்கின்றன
.
உண்;மையான நல்லிணக்கத்தை நோக்கியதான நகர்வுகளை முன்னெடுத்துள்ளதாக அரசாங்கத்தரப்பினர் திரும்பத்திரும்ப கூறிவருகின்றநிலையில் தமது சொந்த இடங்களில் இருந்து இடம்பெயர்ந்த அனைத்து மக்களும் மீள்குடியமர்த்தப்படவேண்டியது நல்லிணக்கத்திற்கான இன்றியமையாத அவசியம் என்பதை அனைத்துத்தரப்பினரும் ஆமோதிப்பர் என்பதில் ஐயமில்லை
 




No comments:

Post a Comment