இலஙகையில் யுத்தம் இன்னமும் முடிவிற்கு கொண்டுவரப்படவில்லை என்ற அறிவிப்பை சாதாரணநபரொருவர் விடுத்திருந்தால் அதனை பொருட்படுத்தாமல் இருந்துவிடலாம். கடந்த 21ம்திகதி தியத்தலாவையில் இடம்பெற்ற இராணுவ பயிற்சிநிறைவு வைபவத்தில் ஜனாதிபதி இவ்வறிவிப்பை விடுத்தமை அனைத்துதரப்பினரதும் கவனத்தை ஈர்த்திருந்தது
ஜனாதிபதி தனது உரையின் போது 'வடக்கில் இடம்பெயர்ந்த மக்களை முழுமையாக மீளக்குடியமர்த்தி அப்பகுதியில் கண்ணிவெடிகளை அகற்றியபின்னரே யுத்தம் முடிவிற்கு கொண்டுவந்ததாக அர்த்தம்' எனவும் சுட்டிக்காட்டியிருந்தார்.
2009ம் ஆண்டு மே 19ம் திகதியன்று யுத்தம் நிறைவிற்கு வந்ததாக பாராளுமன்றத்தில் ஜனாதிபதி விடுத்த அறிவிப்பின் பின்னர் ஆளும் தரப்பினர் முதற்கொண்டு பிரதான எதிர்க்கட்சியினரும் பெரும்பான்மை மக்களும் இவ்விதமான கருத்துக்களையே தெரிவித்துவந்தநிலையில் தியத்தலாவையில் ஜனாதிபதி தெரிவித்த கருத்தில் இருந்து
கண்ணிவெடிகள் எவ்வளவு பாரதூரமானவை என்பது மீளவலியுறுத்தப்பட்டிருக்கின்றது .
சிறிய மிதிவெடிகள் பெரும் கவசத்தாங்கி அழிப்பு மிதிவெடிகள் வெடிக்காத நிலையிலுள்ள குண்டுகள் முதலான பொருட்கள் ஆகியன கண்ணிவெடிகள் என்று பொதுவாக அழைக்கப்படுகின்றன.
இயல்புவாழ்க்கை என அனைத்து விடயங்களிலும் தாக்;;;கம் செலுத்துகின்ற கண்ணிவெடிகள் யுத்தம் நிறைவடைந்து பல்லாண்டு காலங்களுக்கும் ஆபத்துநிறைந்தவிடயமாக இருக்கப்போகின்றன.
அடிப்படைவசதிகளுடன் மீள்குடியேற்றப்பட்டதாக அரசாங்கமும் முகாம்களில் இருந்து கொண்டுபோய் எவ்வித வசதிகளும் இன்றி வெறுமனே கொட்டப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சிகளும் குறைகூறும் மக்களின் நிலை கண்ணிவெடிகளால் கவலைக்குரியதாகவே காணப்படுகின்றது
மோதல்கள் இடம்பெற்ற பகுதிகளில் வாழ்ந்த மக்களுக்கு மட்டுமன்றி வெளியிலிருந்து அப்பகுதிகளுக்கு பல்வேறு தேவைகளின் நிமித்தம் விஜயம் செய்கின்றவர்களுக்கும் கண்ணிவெடிகள் பாரிய அச்சுறுத்தலாக இனிவரும் காலங்களில் இருக்கப்போகின்றன
2009ம் ஆண்டு ஜனவரி 1ம்; திகதியிலிருந்து 2010ம் ஆண்டு நவம்பர் 30ம்திகதி வரையான காலப்பகுதியில் மொத்தமாக 432 சதுரகிலோமீற்றர்கள் நிலப்பரப்பு 'நுஒpடழளiஎந சுநஅயெவெள ழக றுயச(நுசுறு)' தொழில்நுட்பமுறை மூலமான கண்ணிவெடியகற்றல் நடவடிக்கையை அடுத்து மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்டதாக ஐக்கியநாடுகள் சபையின் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட தொழில்நுட்ப மதிப்பீடுகளுக்கு அமைவாக பெரும்பாலும் வடக்கிலும் கிழக்கில் ஆங்காங்கே விடப்பட்ட சிலபகுதிகளிலுமாக 536சதுரகிலோமீற்றர் பிரதேசம் கண்ணிவெடிகளால் நிறைந்த பிரதேசமாக அடையாளங்காணப்பட்டுள்ளது .
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்திலுள்ள பல கிராமசேவகர் பிரிவுகளில் இன்னமும் மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படவேண்டியுள்ளமை இங்கே சுட்டிக்காட்டத்தக்கதாகும்.
இராணுவப்பேச்சாளர் மேஜர் ஜெனரல் உதய மெதவெலவின் தரவுளுக்கு அமைவாக இராணுவத்தினரின் மனிதாபிமான கண்ணிவெடியகற்றல் பிரிவு(ர்னுரு) இதுவரையில் 306300 கண்ணிவெடிகளை அகற்றி அழித்துள்ளதாகவும் 1866சதுர கிலோமீற்றர் பிரதேசம் இயந்திர மற்றும் மனித முறைகளைப்பயன்படுத்தி துப்பரவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடப்படுகின்றது.
இலங்கை இராணுவத்தினரின் மனிதாபிமான கண்ணிவெடியகற்றல் பிரிவுடன் ஹலோ டிரஸ்ற் இ மெக் எனும் மிதிவெடி ஆலோசனைக்குழு உட்பட 6 சர்வதேச நிறுவனங்களும் 2 உள்ளுர் நிறுவனங்களும் தற்போது இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளன
இவற்றில் மொத்தமாக 2000ற்கு அதிகமான பணியாளர்கள் சேவையில் ஈடுபட்டுள்ளனர்
கண்ணிவெடியகற்றல் என்பது மிகவும் செலவுமிக்க நடவடிக்கையாகும் . கண்ணிவெடியொன்றை புதைப்பதற்கு 3முதல் 10 அமெரிக்க டொலர்கள் வரை செல்லும் அதேவேளை ஒரு கண்ணிவெடியை அகற்றுவதற்கு 1000 அமெரிக்க டொலர்கள் வரை செலவாவதாக உலகளவில் ஏற்கப்பட்ட மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
இம்மாதம் 7ம்திகதியன்று ஹொட்டல் கலதாரியில் இடம்பெற்ற நிதி நிறுவனங்களின் பணிப்பாளர்கள் மாநாட்டில் உரையாற்றிய இலங்கை மத்தியவங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் கண்ணிவெடி அகற்றுகின்ற செயற்பாட்டை அரசசார்பற்ற நிறுவனங்களிடம் ஒப்படைத்திருந்தால் ஆகக்குறைந்தது 2பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை செலவிட்டிருக்க வேண்டியேற்பட்டிருக்கும் என்றும் ஒரு கண்ணிவெடியை அகற்ற சுமார் 2000 அமெரிக்க டொலர்களைச் செலவிட்டிருக்க வேண்டியேற்பட்டிருக்கும் எனவும் கூறியிருந்தார் .
இறுதியுத்தம் என்றும் நான்காவது ஈழப்போர் என்றும் அழைக்கப்பட்ட கடைசியுத்தத்திற்கு 2006ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டுவரையில் 6பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு குறைவான தொகை செலவிடப்பட்டிருந்ததாகவும் இதன்போது மத்திய வங்கியின் ஆளுநர் சுட்டிக்காட்டியிருந்தார்.
கண்ணிவெடியகற்றல் செலவுமிக்க நடவடிக்கை என்பதை விடவும் இலங்கையைப் பொறுத்தவiரையில் கண்ணிவெடியகற்றுபவர்கள் முகங்கொடுக்கின்ற சவால்கள் ஏராளம்.
ஒழுங்கமைவின்றி அங்கொன்றுமிங்கொன்றுமாக புதைக்கப்பட்டுள்ளமை புதைத்துவைக்கப்பட்ட கண்ணிவெடிகள் தொடர்பான தரவுகள் ஆவணப்படுத்தப்படாமை போதியகண்ணிவெடியகற்றும் இயந்திரங்கள் இன்மை என்பனவும் இவற்றில் அடங்கும்
தற்போதைய நிலையில் இலங்கையில் மூன்று விதமான கண்ணிவெடியகற்றல் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. இதில்
1)மனிதவலுவைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படுகின்ற கண்ணிவெடியகற்றல் செயற்பாடு
2) கண்ணிவெடிகளை கண்டறியும் நாய்களின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் மனித வலுவுடனான கண்ணிவெடியகற்றல் செயற்பாடு
3) இயந்திரங்களின் உதவியுடன் மேற்கொள்ளப்படுகின்ற கண்ணிவெடிகயகற்றல் செயற்பாடு என்பனவே இவையாகும்
சீரிய நிலமாக இருந்தால் மனிதர்கள் நாளொன்றிற்கு 25சதுர மீற்றர்கள் வரையான பகுதியில் கண்ணிவெடியகற்றலை மேற்கொள்ளமுடியும். பொஸினா மெஸின் ஃபிளெய்ல் மெஸின் என அழைக்கப்படுகின்ற கண்ணிவெடியகற்றும் இயந்திரங்களால் நாளொன்றிற்கு 2000 சதுர மீற்றர் பகுதியை சுத்திகரிக்கமுடியும்
என்னதான் இயந்திரங்களால் விரைவாக சுத்திகரிக்கமுடிந்தாலும் மனிதர்களாலேயே கண்ணிவெடியகற்றலை நேர்த்தியாக சாதுரியமாக மேற்கொள்ளமுடியும் என நிருபிக்கப்பட்டுள்ளது இயந்திரங்கள் கண்ணிவெடியகற்றலை மேற்கொள்ளும் போது கண்ணிவெடிகள் முற்றிலுமாக அகற்றப்படுவதற்கான வாய்ப்புக்கள் குறைவாக காணப்படுவதே இதற்கு காரணமாகும்
கண்ணிவெடி அபாயமும் விழிப்புணர்வுக் கல்வியும்
யுத்தங்கள் ஓய்ந்து பன்னெடுங்காலம் கண்ணிவெடிகள் இயங்குநிலையில் காணப்படும் தன்மை கொண்டவை என்பதால் அதன் ஆபத்துக்கள் குறித்து என்றென்றும் அவதானமாக இருக்கவேண்டும்
ஓரிடத்தில் கண்ணிவெடி முழுமையாக அகற்றப்பட்டுவிட்டதென கண்ணிவெடி நிபுணர்களாலேயே உறுதிபடக்கூறிவிடமுடியாது கண்ணிவெடியகற்றல் செயற்பாடுகளை மேற்கொள்ளும் பகுதிக்கு நேரிலே அண்மையில் சென்றிருந்தபோது கண்ணிவெடியகற்றுகின்றவர்கள் நிலமட்டத்தில் இருந்து 15சென்ரிமீற்றர்கள் வரையான ஆழப்பகுதியிலேயே அவர்களின் செயற்பாடுகளை மேற்கொள்வதை அவதானித்தேன் .
மழை உட்பட காலநிலை மாற்றம் மனிதரின் செயற்பாடுகள் காரணமாக 15 சென்ரீமீற்றர் ஆழத்திற்கு கீழுள்ள பகுதிக்குள் கண்ணிவெடிகள் சென்றுவிட்டால் அவற்றை அகற்றும் வாய்ப்பு இல்லாது போய்விடுகின்றது .பின்னர் ஒரு காலத்தில் அக்கண்ணிவெடிகள் வெளிக்கிளம்புகின்றபோது அதனால் ஆபத்துக்கள் காத்திருக்கின்றன என்பது தெளிவாகியது
கண்ணிவெடிகள் எத்தகைய ஆபத்தைக்கொண்டவை என கண்ணிவெடி விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள தொண்டரான வின்சன்ற் ஜேசுதாசன் என்பவரிடம் வினவியபோது முதலில் கண்ணிவெடிகள் சாகாவரம் பெற்றவை என்பதை விளங்கிக்கொள்ளவேண்டும் .அவை ஒரு குடும்பத்தையோ சமூகத்தையே நிர்மூலமாக்கக்கூடிய பயங்கரமானவை .இதனால் தான் சமூகத்திற்கு உதவும் நோக்குடன் கண்ணிவெடி விழிப்புணர்வு பணியில் தாம் ஈடுபடுவதாக அவர் கூறினார்
பாடல்கள் மூலமும் கிராமிய மணம் கமிழ்ந்த கதைகள் மூலமும் மன்னார் வவுனியா மாவட்டங்களில் கண்ணிவெடி விழிப்புணர்வை மேற்கொண்டுவரும் இவர் மக்கள் மனங்களில் நின்றுநிலைக்கும் தமிழ் சினிமா பாடல்களின் இசையையும் தனது வரிகளையும் கொண்டு பாட்டிசைக்கும் பாங்கு அலாதியானது
'மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணுகேளு' என்ற பாடலை மைன்ஸ் இருக்கு; ஷெல் இருக்கு என்றும் 'ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம் அம்மாவ வாங்கமுடியுமா' என்ற பாடலை ஆசைப்பட்ட திசைகளெல்லாம் காலிருந்தா போகலாம் இல்லாட்டி போகமுடியுமா என்றும் இப்படியாக பல பாடல்களை பாடி விழிப்புணர்வை ஊட்டிவருவது பார்ப்பவர்களுக்கும் கேட்பவர்களுக்கும் மெய்சிலிர்க்கவைக்கின்றது
வின்சன்ற் ஜேசுதாசன் போன்றவர்களின் நோக்கம் இலங்கையைப் பொறுத்தவரையில் நிறைவேறிவருவதை அண்மையில் வெளியிடப்பட்ட புள்ளிவிபரங்கள் கோடிட்டுக்காட்டுகின்றன
கண்ணிவெடி அபாய விழிப்புணர்வுக் கல்வி காரணமாக இலங்கையில் இவ்வருடத்தில் கண்ணிவெடி இழப்புக்கள் குறைவடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது .இவ்வருடத்தில் கண்ணிவெடிகளில் சிக்கி 18 சிறுவர்கள் அடங்கலாக 38பேர் காயமுற்றுள்ளதாகவும் இவர்களில் 4சிறுவர்கள் உட்பட 7பேர் பலியானதாகவும் ஒக்டோபர் மாத இறுதியில் வெளியான யுனிசெவ் புள்ளிவிபரத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது .
ஆயுதமோதல் நிறைவடைந்தபின்னர் கடந்தபோன 12மாதகாலப்பகுதியில் கண்ணிவெடிகாரணமாக மாதமொன்றிற்கு 3பேர் இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .இது மோதல்களால் பாதிக்கப்பட்ட ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் பெரிதும் குறைவானதென சுட்டிக்காட்டப்படுகின்றது
2001ம் ஆண்டில் ஆப்கானிஸ்தானில் 172பேர் அளிவில் மாதமொன்றிற்கு கண்ணிவெடியால் பாதிக்கப்பட்டிருந்த அதேவேளையில் கம்போடியாவில் மாதமொன்றிற்கு 65பேர் அளவில் கண்ணிவெடிப்பாதிப்பிற்குள்ளாகினர் .
இவ்வாண்டில் முதற்பத்து மாதங்களிலும் யுத்தம் இடம்பெற்ற பகுதிகளைச் சேர்ந்த 308000 பேருக்கும் கண்ணிவெடி விழிப்புணர்வுகல்வி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
இலங்கையில் மோதல் இடம்பெற்ற பகுதியைச் சேர்ந்த மக்களில் 80 சதவீதத்திற்கு அதிகமானவர்கள் கண்ணிவெடி அபாய சமிஞ்கைகளை அறிந்துவைத்திருப்பது அண்மையில் மிதிவெடி ஆலோசனைக்குழுவால் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பில் இருந்து வெளியாகியிருந்தது
என்னதான் விழிப்புணர்வு வழங்கப்பட்டாலும் மக்கள் அறிவுபெற்றாலும் அபாயம் என்றே தெரிந்துகொண்டே செயற்பாடுகளில் ஈடுபடுவதே கண்ணிவெடி அபாய கல்வியை மேற்கொள்பவர்களுக்கு முன்பாகவுள்ள மிகப்பெரிய சவாலாக உள்ளதென சுட்டிக்காட்டப்படுகின்றது
விவசாயத்திற்காகவும் இன்னோரன்ன தேவைகளுக்காகவும் நிலத்திலுள்ள காடுபற்றிய பகுதிகளை அன்றேல் குப்பைகளை எரித்தல் இரும்புபொருட்களை சேகரித்தல் குழி தோண்டுதல் காடுகளில் விறகு சேகரித்தல் பழங்கள் காய்கறிகள் தேன் சேகரித்தல் போன்றவற்றுடன் குளங்கள் ஏரிகளில் மீன்பிடித்தல் என்பனவும் கண்ணிவெடி அபாயத்தை அதிகரிக்கின்ற விடயங்களாக காணப்படுகின்றன
18வயதுமுதல் 45வயதுடையவர்களே கண்ணிவெடிகளால் அதிகபாதிப்புக்களை எதிர்கொள்வதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது மொத்த இழப்புக்களில் 20வீதமானவை இந்தப்பிரிவைச் சேர்ந்தவர்களாக காணப்படுகின்றனர்
இலங்கையைப் பொறுத்தளவில் ஏனைய துறைகளைப் போன்றே போதிய நேர்த்தியான தரவுகள் இன்மை கண்ணிவெடியகற்றல் துறையிலும் காணப்படுகின்றது இருப்பினும் கிடைக்கப்பெற்ற தரவுகளுக்கு அமைவாக 1999ம் ஆண்டுமுதல் 2008ம் ஆண்டுவரையான காலப்பகுதியில் 1272 கண்ணிவெடி விபத்துசம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன் இதில் 117பேர் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
கடந்தாண்டுகளுடன் ஒப்பிடுகையில் 2009ம் மற்றும் 2010ம் ஆண்டுகளில் கண்ணிவெடி விபத்து சம்பவங்களில் குறைவுகள் ஏற்படுவதை புள்ளிவிபரங்கள் கூறினாலும் நடைபெறும் அனைத்துசம்பவங்களும் பதிவுசெய்யப்படுகின்றனவா என்ற ஆதங்கங்களும் மக்கள் மத்தியில் காணப்படுவதை இங்கே குறிப்பிட்டாகவேண்டும்
கண்ணிவெடி ஆபத்து என்பது இலகுவில் புறக்கணித்துவிடமுடியாததொன்று என்பதை மீண்டுமாக அழுத்திக்கூறுவதுடன் இதுபற்றிய விழிப்புணர்வு ஒரிரு நாட்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல் காலாகாலத்திற்கும் தீவிரமாக முன்னெடுக்கப்படவேண்டும்
My article on Landmines has been published in Virakesari News Paper on 29th December 2010
ReplyDelete