யுத்தத்தில் எத்தனை உயிர்கள் காவுகொள்ளப்பட்டன என்பது குறித்த தெளிவான தரவுகள் இல்லாமை போன்றே மக்களின் உடமைகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்த தெளிவான தரவுகள் காணப்படவில்லை
யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டதாக அறிவிக்கப்பட்டு ஒன்றரை வருடங்கள் கடந்து விட்ட நிலையிலும் இதுபற்றிய உத்தியோகபூர்வமான மதிப்பீடுகளை மேற்கொள்வதற்கான எத்தனிப்புக்கள் மேற்கொள்ளப்படுவதாக அறியக்கிடைக்கவில்லை .
யுத்தம் நிறைவடைந்த பின்னர் ஐபிஎஸ் எனப்படும் கொள்கை கற்றலுக்கான நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின் பிரகாரம் 1984ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் யுத்தத்திற்காக செலவிடப்பட்ட தொகையானது ஏறத்தாழ இலங்கையின் வருடாந்த மொத்த தேசிய உற்பத்தியின் நான்கு மடங்கிற்கு சமனானவை என இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் கலாநிதி அநுர ஏக்கநாயக்க கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிற்கு முன்பாக தெரிவித்திருந்தார்.
யுத்தத்திற்காக செலவிடப்பட்ட இந்தத்தொகை அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டிருக்குமாக இருந்தால் இலங்கை தற்போது மலேசியாவின் அபிவிருத்தி நிலையை அடைந்திருக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
யுத்தத்தினால் அசையாச் சொத்துக்களுக்கும் நிலப்பகுதிகளுக்கும் ஏற்பட்ட நேரடித்தாக்களுக்கு மேலாக யுத்தத்தினால் ஏற்பட்ட நேர்மறைச் செலவு புரிந்துகொள்ளப்பட்டதிலும் பார்க்க மிக மிக அதிகமானதெனவும் வர்த்தக சம்மேளனத்தலைவர் கூறியிருந்தார்.
அவரது கூற்றில் பல உண்மைகள் புதைந்துகிடக்கின்றன. உதாரணமாக யுத்தம் கடந்தாண்டுடன் நிறைவடைந்து விட்டதாக பிரகடனப்படுத்தப்பட்ட போதிலும் அது ஏற்படுத்திய தாக்கம் தற்போதும் பெருமளவில் உணரப்படுகின்றது .இதற்கு அண்மையில் நிறைவேற்றப்பட்ட வரவுசெலவுத்திட்டம் சான்று பகர்கின்றது .
யுத்தம் நிறைவுபெற்ற பின்னரும் கூட பாதுகாப்பிற்கான செலவீனத்தை இன்னமும் குறைக்க முடியாத யதார்த்த நிலை காணப்படுகின்றது .
பாதுகாப்பு அமைச்சிற்கென இம்முறை வரவு செலவுத்திட்டத்தில் 21521 கோடியே 96லட்சத்து 40 ஆயிரம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது .இது கடந்த முறையைவிடவும் 1300 கோடி ருபா அதிகமானதாகும்.
யுத்தம் நிறைவடைந்த பின்னரும் நாட்டின் பாதுகாப்புக்கு ஏன் இவ்வளவு நிதி என்கின்ற கேள்விகள் கேட்பதற்கும்; அதற்குப் பதிலளிப்பதற்குமான கடப்பாடுகளை அரசியல் வாதிகளுக்கும் அரச அதிகாரிகளுக்கும் ஒதுக்கிவிட்டு பாதுகாப்பு என்ற விடயத்திற்காக செலவிடப்படுகின்ற நிதியானது நாட்டு மக்களிற்காகவும் அபிவிருத்திக்காகவும் செலவிடப்பட்டிருக்குமேயானால் எவற்றைச் செய்திருக்கமுடியும் என இங்கே ஆராய்ந்துபார்க்கின்றோம் .
2008ம் ஆண்டு பெப்ரவரி மாதம் வெளியான மொன்டாஜ்(MONTAGE) சஞ்சீகைக்காக காலஞ்சென்ற முன்னாள் விமானப்படைத்தளபதி எயார் சீப் மார்ஷல் ஹரி குணதிலக்க எழுதியிருந்த கட்டுரையொன்றிலிருந்து மேற்கோள் காட்டுவது இதனை விளக்குவதற்கு பெருந்துணையாக அமையும் எனக்காண்கின்றேன்.
யுத்தம் ஆரம்பமான 1983ம் ஆண்டு காலப்பகுதியில் பாதுகாப்பிற்கான செலவு 1.75 பில்லியன் ரூபா அதாவது 175 கோடி ருபா மாத்திரமே இதன் படி நாளொன்றிற்கான பாதுகாப்பு செலவீனம் 4.79மில்லியன் ரூபா என சுட்டிக்காட்டியிருந்த முன்னாள் விமானப்படைத்தளபதி 24வருடகாலப்பகுதியில் (கட்டுரை 2008ல் வெளியாகியபோது) இந்த தொகை 110 மடங்கிற்கு அதிகமாக அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டியிருந்தார் .
2008ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட வரவுசெலவுத்திட்டத்தில் பாதுகாப்பிற்காக ஒதுக்கப்பட்டிருந்த தொகை 166பில்லியன் ரூபா ( நாளொன்றிற்கு 456.4மில்லியன் ரூபா) இந்தக்கட்டுரை வெளியான போது வரவுசெலவுத்திட்டத்தில் பாதுகாப்பிற்கு ஒதுக்கப்பட்ட தொகையானது வருடமுடிவில் 200பில்லியன் ரூபாவைத்தாண்டும் (நாளொன்றிற்கு 550மில்லியன் ரூபா) என முன்னாள் விமானப்படைத்தளபதி எதிர்வுகூறியிருந்தார் .அதன்படியே இறுதியில் நடந்தேறியது
பாதுகாப்பு படைத்தரப்பைச் சேர்ந்தவராக இருந்தபோதும் அவர் சுட்டிக்காட்டிய விடயமே அந்தக்கட்டுரையில் அவதானத்தை மிகவும் ஈர்த்திருந்தது .யுத்தத்திற்கு செலவிடப்படும் தொகையை இந்நாட்டிலுள்ள வறியவர்களுக்கு வீடுகளைக் கட்டிக்கொடுப்பதற்கு செலவிட்டிருந்தால் (500சதுர அடிX ரூபா 2000) என்ற அளவில் நாளொன்றுக்கு 300வீடுகள் அன்றேல் மொத்தமாக 109500 வீட்டு அலகுகளை 2006ம் ஆண்டில் அமைத்திருக்க முடியும் .நாளொன்றுக்கு 400 வீடுகள் என்ற அடிப்படையில் 2007ம் ஆண்டில் 146000 வீடுகளை அமைத்திருக்க முடியும் .
நாளொன்றிற்கு கிட்டத்தட்ட 550 வீடுகள் என்ற அடிப்படையில் 2008ம் ஆண்டில் 200750 வீடுகளை அமைத்திருக்க முடியும் . 2006 2007 மற்றும் 2008ம் ஆண்டுகளுக்காக பாதுகாப்பிற்கு ஒதுக்கப்பட்ட தொகையைக் கொண்டு மொத்தமாக 456250 வீடுகளை அமைத்திருக்க முடியும் என முன்னாள் விமானப்படைத்தளபதி ஏயார் சீப் மார்ஷல் ஹரி குணதிலக்க சுட்டிக்காட்டியிருந்தார். இதனை இன்னுமொரு விதத்தில் குறிப்பிடுவதாயின் 2006 முதல் 2008ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் யுத்தத்திற்காக செலவிடப்பட்ட (467பில்லியன் ரூபா)தொகையைக் கொண்டு ஏறத்தாழ 9 மகாவலி அபிவிருத்தித்திட்டங்களை (1978ம் ஆண்டு காணப்பட்ட செலவில்) அமைத்திருக்க முடியும் எனவும் உதாரணம் காண்பித்திருந்தார் .
முன்னாள் விமானப்படைத்தளபதியின் கட்டுரை 2008ம் ஆண்டில் வெளியான பின்னர் இதுவரையில் மூன்று வரவுசெலவுத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுவிட்டன .ஒவ்வொரு முறையும் பாதுகாப்பு செலவு முன்னையதிலும் அதிகரித்திருப்பதை வைத்து நோக்கும் போது இந்தத்தொகையைக் கொண்டு எத்தனை வீடுகளைக் கட்டிமுடித்திருக்க முடியும் என ஊகிக்கமுடியும் .இது நிச்சயமாக ஒரு மில்லியன் இலக்கை தாண்டும் என்பது புலனாகின்றது.
இம்முறை வரவு செலவுத்திட்டத்தை சமர்பித்து உரையாற்றிய ஜனாதிபதி அடுத்த 06 வருடங்களில் ஒரு மில்லியன் வீடமைப்பு அலகுகளை அபிவிருத்தி செய்வதற்கு உறுதியெடுத்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார் .
வடபகுதியில் மாத்திரம் 160000 வீடுகள் புனரமைப்பிற்குட்படுத்தப்படவோ அன்றேல் மீளக்கட்டப்படவோ வேண்டியுள்ளதாக இவ்வருடத்தின் முற்பகுதியில் வெளியாகியிருந்த ஐக்கியநாடுகள் சபையின் மதிப்பீடுகளில் இருந்து சுட்டிக்காட்டப்பட்டிருந்தது
.
வடக்கில் மட்டுமன்றி நாடெங்கிலுமுள்ள வீடற்றவர்களுக்கும் வீடுகள் அவசியமானவர்களுக்கும் புதிதாக வீடுகளை அமைத்துக்கொடுப்பதற்கு பாதுகாப்பிற்கொதுக்கப்படும் நிதி தாராளமாக போதும் என்பதை முன்னாள் விமானப்படைத்தளபதியின் மதிப்பீடுகளின் அடிப்படையில் ஒப்புநோக்குகையில் புரிந்துகொள்ளமுடியும்.
அதனையும் தாண்டி யுத்தத்திற்கு செலவிடப்பட்ட தொகை அபிவிருத்திக்கு செலவிடப்பட்டிருக்குமானால் மலேசியாவின் நிலையை அடைந்திருக்க முடியும் என இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் சுட்டிக்காட்டியிருந்தமையை நோக்குகின்றபோது இன்னுமொரு விடயத்தை புரிந்துகொள்ளலாம் .
தற்போதைய நிலையில் இலங்கையின் பொருளாதாரத்தை 42பில்லியன் அமெரிக்க டொலர்கள் எனவும் இலங்கையர்களின் தலாவருமானம் சராசரியாக 2000 அமெரிக்க டொலர்கள் எனவும் குறிப்பிடப்படுகின்றது .இதனை வைத்துக்கொண்டு மலேசியாவின் நிலைமையை நோக்கமுடியும்
.தென்கிழக்காசியாவின் 3வது பெரும்பொருளாதாரமாக விளங்கும் மலேசியாவின் பொருளாதாரம் 188பில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்படுவதுடன் தலாவருமானம் 7000 அமெரிக்க டொலர்களாக அமைந்துள்ளது அந்தளவில் நாம் யுத்தம் காரணமாக எந்தளவிற்கு பின்தங்கியிருக்கின்றோம் என்பது தெளிவாகின்றது .
இனிவருங்காலத்திலேனும் சந்தேகங்களைக் களைந்து நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதன் மூலமாக இதுவரை இழந்த அபிவிருத்தியைக் காண்பதற்கு சாதாரண மக்கள் முதற்கொண்டு அதிகாரத்தில் இருக்கின்றவர்கள் வரையில் முழுமனத்தோடு செயற்படவேண்டும்
No comments:
Post a Comment