Thursday, August 12, 2010
நியாயமாக கிடைத்த விருதை கொச்சைப்படுத்திய காழ்ப்புணர்ச்சி நிறைந்தவர்களுக்காக எழுதியது
இவ்வுலகில் அனைத்து மனிதர்களுமே (அன்னை திரேசா போன்ற அபூர்வமான மனிதரில் புனிதர் தவிர) அங்கீகாரத்திற்காக ஏங்குபவர்கள் தாம் நான் அதில் விதிவிலக்கில்லை என்பதை முதலில் கூறிக்கொள்கின்றேன்
திருக்குறள் உலகப்பொதுமறை அந்தக் குறளில் வள்ளுவன் கூறிய இரு குறள்களை எடுத்து வைத்துக்கொண்டு என்வாதத்தை முன்வைக்கின்றேன்
'தோன்றாயத் தோற்றி துறைபல முடிப்பினும் தான் தற்புகழ்தல் தாகாது புலவர்க்கே'
'மன்னுடை மன்றத்து ஓலை தூங்கினும் தன்னுடை பெற்றி அறியார் இடையினும் தான் தற்புகழ்தல் தகும் புலவர்க்கே'
முதலில் குறிப்பிட்ட குறள் எதைச்செப்புகின்றதென்றால் எத்தகைய ஆற்றல் படைத்தவராயினும் அவர்கள் தம்மைப்பற்றி தம்பட்டம் அடிப்பது அது ஏற்புடையதாகாது எனக்கூறுகின்றது
அடுத்த குறள் எதைப்பறைசாற்றுகின்றதெனில் ஒருவனது திறமையை அறியா மூடர்கள் மத்தியில் தமது திறமை பற்றி புகழ்தல் சரி எனக்கூறுகின்றது
தற்போதைய நிலையில் பேனா எடுத்தவர்கள் எல்லாம் ஊடகவியலாளர் என்று ஆகிவிட்டது களத்தில் சென்று ஒரு வசனம் கூட எழுதமுடியாதவர்கள் எல்லாம் தற்போது ஊடகவியலாளர்கள் என்ற போர்வைக்குள் புகழ்தேட முனைவதைக் கண்கூடாக காணமுடிகின்றது
வானொலியில் பாட்டுப்போடுபவர்கள் தம்மை ஊடகவியலாளர் என்றும் செய்தித்துறையில் எவ்வித அனுபவ அறிவும் இல்லாத சிறுவர் நிகழ்ச்சித்தொகுப்பாளர்களெல்லாம் தம்மை இலத்திரனியல் ஊடக விரிவுரையாளர்கள் என்று சொல்லிக்கொள்வதைப் போன்ற கேவலமான செயல் பத்திரிகைத்துறையிலும் காணப்படுவதை நீங்களும் உணர்ந்திருப்பீர்கள்
கடந்த வருடம் இலங்கையில் போர் உச்சக்கட்டத்தை அடைந்திருந்த வருடம் ஊடகவியலாளர்களுக்கு நெருக்கடியான வருடம் கொழும்பிலிருந்து தொலைபேசியூடாகவே செய்திசேகரிக்க அஞ்சிய காலம்
ஊடகத்துறையை விட்டு பலர் வேறுதுறைகளையும் வேறு நாடுகளையும் நோக்கி நகர்ந்த காலம் இப்படியான காலப்பகுதியில் நாட்டை விட்டு ஓடி விடாது (இத்தனைக்கும் அமெரிக்கா கனடா பிரித்தானியா) ஆகிய நாடுகளுக்கு சென்றுவந்தபோதும் ) களத்திலே நின்று புலம்பெயர் தமிழ் மக்களுக்கும் இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கும் உண்மையை உள்ளவாறே உரைத்த ஊடகவியலாளர் என்ற வகையில் கடந்தாண்டு நெருக்கடி மிக்க சூழலில் செய்திசேகரித்தமைக்கான பேராசிரியர் கைலாசபதி சிறப்பு விருது எனக்கு கிடைத்திருந்தது குறிப்பாக போர் உக்கிரம் பெற்றிருந்தவேளையில் புதுமத்தளான் பகுதிக்கு சென்று சேகரித்த செய்திக்காகவே அது கிடைத்திருந்தது
இதனைப்பொறுக்காத சிலர் நான் சான்றிதழை பேஸ்புக்கில் பிரசுரித்திருந்ததை கொச்சையாக விமர்சித்திருந்தனர் அது என்னை வேதனையில் ஆழ்த்தியது உண்மையே
இன்னொருவருக்குரிய சாதனையை தமது சாதனையாக வரிந்துகொள்வதும் இன்னொருவருக்கு கிடைக்கவேண்டிய புகழைத் தட்டிப்பறிப்பதும் இன்னொருவர் முன்னேற விடாது குழிபறித்து குளிர்காய நினைக்கும் இந்த உலகில் எனக்கு உண்மையாகவே கிடைத்த சான்றிதழை நான் ஏன் காண்பிக்க கூடாது என்பதே என்தரப்பு நியாயப்படுத்தலாக முன்வைக்கின்றேன்
தம்மைத்தாமே ஊடகவியலாளர்கள் என்று சொல்லிக்கொண்டு மனச்சாட்சியை மறைத்து எதிர்கால சந்தியினரையும் மக்களையும் ஏமாற்றிக்கொண்டிருக்கின்றவர்கள் காழ்ப்புணர்ச்சி மேலிட கூறியகருத்துக்களை நான் கடிந்துகொள்கின்றேன்
தமிழ் ஊடகத்துறையில் சிவராம் போன்ற மாமனிதர்கள் ஊடகவியலாளர்களாக கிடைப்பார்களா என்பது கேள்விக்குரியது
ஆனால் தற்போது இலங்கையிலுள்ள இளம் ஊடகவியலாளர்களில் களத்திலே நடப்பவற்றை கண்ணாடி அறைக்குள் இருந்து பார்க்காமல் நேரடியாக களத்திற்கே சென்று செய்திசேகரிக்கும் ஊடகவியலாளர்களில் மூன்று மொழியிலும் செய்திசேகரிக்க கூடிய ஆற்றல் உள்ளவர்கள் எத்தனை பேர் இருக்கின்றனர் என்றால் அதனை விரல் விட்டு எண்ணிவிடலாம் அந்த ஊடகவியலாளர்கள் மத்தியில் ஆய்ந்தறிந்தால் கூட அருண் யார் என்பதைப் புரிந்துகொள்ளலாம்
கருத்துச்சுதந்திரம் இருக்கின்ற காரணத்தினால் பிறர் கூறுகின்ற கயமைமிக்க காழ்ப்புணர்ச்சிநிறைந்த கருத்துக்களை எல்லாம் கேட்டுச் சகித்துக்கொண்டிருக்க வேண்டும் என்ற நியதி கிடையாது
ஆகவே போற்றுவோர் போற்றட்டும் புழுதிவாரித் தூற்றுவோர் தூற்றட்டும் ஏற்றதொரு கருத்தை எனதுள்ளம் எடுத்துரைப்பின் எவர்வரினும் அஞ்சேன் நில்லேன் முன்செல்வேன் எனக் கூறிவைக்க விரும்புகின்றேன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment