2009ம் ஆண்டின் முதல் அரையாண்டுப் பகுதியுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டின் முதல் அரையாண்டுப்பகுதியில் இலங்கைக்கு கிடைத்துள்ள வெளிநாட்டு நேரடி முதலீடுகள் 16.8வீதத்தால் குறைவடைந்திருக்கின்ற விடயம் பல்வேறு கேள்விகளுக்கு வழிகோலக்கூடும்
2009ம் ஆண்டின் முதல் அரையாண்டுப்பகுதியில் இலங்கைக்கு கிடைத்துள்ள வெளிநாட்டு நேரடி முதலீடுகளின் பெறுமதி 250மில்லியன் அமெரிக்க டொலர்களாகும் இவ்வாண்டில் இதே காலப்பகுதியில் இந்த எண்ணிக்கை 208மில்லியன் அமெரிக்க டொலர்களாக வீழ்ச்சி கண்டுள்ளது .
இறுதிக்கட்ட யுத்தம் நடைபெற்ற கடந்தாண்டை விடவும் இவ்வாண்டில் வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்கும் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாக இருந்திருக்கும் ஆனாலும் கூட ஏன் அவ்வாறு அதிகரிக்க வில்லை என்பது கேள்விக்குரியதாகவே இருக்கின்றது
இது தொடர்பாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பொருளாதார விரிவுரையாளரான சிறிமால் அபேரத்ன கூறுகையில் ' யுத்தம் இந்ப்பிரச்சனையின் ஒரு பகுதி மாத்திரமே நிச்சயமற்ற நிலைமைகள் இன்னமும் காணப்படுகின்றன பொருளாதார கொள்கைகளும் வெளிநாட்டு முதலீடுகளுக்கு சாதகமானதாக காணப்படவில்லை' எனக் குறிப்பிட்டார்
இலங்கையில் மூன்று தசாப்த கால யுத்தம் நிறைவுபெற்ற நிலையில் 2010ம் ஆண்டில் இலங்கை ஒரு பில்லியன் டொலர்களை வெளிநாட்டு நேரடி முதலீடுகளை சாத்தியமான இலக்கென்ற எதிர்பார்ப்பை வெளியிட்டிருந்தது .ஆனபோதிலும் கடந்தாண்டிற்கு ஏறத்தாழ சமானமானதாக 600மில்லியன் அமெரிக்க டொலர்களே இவ்வருடம் கிடைக்ககூடும் என இலங்கை முதலீட்டுச் சபை அதிகாரியொருவர் கருத்துவெளியிட்டிருக்கின்றார்
இவ்வருடத்தின் ஜனவரி முதல் ஜுன் மாதம் வரையிலான காலப்பகுதியில் 2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையிலான வெளிநாட்டு நேரடி முதலீட்டு திட்டங்களுக்கு அனுமதிவழங்கப்பட்டிருந்தபோதும் 208மில்லியன் அமெரிக்க டொலர்கள் மாத்திரமே இலங்கைக்குள் வந்திருப்பதாக இலங்கை முதலீட்டுச் சபையின் பிரதிப்பணிப்பாளர் நாயகம் ஏ எம் சி குலசேகர சுட்டிக்காட்டுகின்றார் .
உலகப்பொருளாதார நெருக்கடி இன்னமும் நிறைவிற்கு வராமையும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என அவர் குறிப்பிடுகின்றபோதும் அதற்கு மேலான ஒருவிடயத்தையும் நாம் நோக்கியே ஆகவேண்டும் . இறுதிக்கட்ட யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் 2008ம் ஆண்டில் இலங்கைக்கு கிடைத்த வெளிநாட்டு நேரடி முதலீடுகள் 889மில்லியன் அமெரிக்க டொலர்களாகயும் கடந்தாண்டில் 602மில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் இருந்தது .யுத்தம் நிறைவடைந்த போதும் உண்மையான நல்லிணக்கம் இன்னமும் ஏற்படாமை அதனால் நிலவுகின்ற நிச்சயமற்ற தன்மை என்பனவும் இந்த வீழ்ச்சிக்கு காரணமாக இருக்கலாம் என ஐயப்பாடுகளை வெளிப்படுத்துகின்றவர்களும் இருக்கவே செய்கின்றனர்
நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான காத்திரமான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என சர்வதேச சமூகத்தை சேர்ந்தவர்களடங்கலாக பல்வேறு தரப்பினரும் சுட்டிக்காட்டிய நிலையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக தாம் எடுத்துள்ள முக்கிய நடவடிக்கையாக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் நியமனத்தை இலங்கை அரசாங்கம் குறிப்பிட்டிருந்தது
இந்த நல்லிணக்க ஆணைக்குழு வெற்றிகரமானதாக அமைவது சமாதானம் பொருளாதார அபிவிருத்தி உட்பட இலங்கையின் எதிர்காலத்திற்கு இன்றியமையாதது என்பதையே மேற்குறிப்பிட்ட புள்ளிவிபரங்கள் உணர்த்திநிற்கின்றன.
நல்லிணக்கம் என்பது அனைத்துதரப்பினருக்கும் நம்பிக்கைகரமானதாக அமைந்திடவேண்டும்
நல்லிணக்கம் என்பதன் உண்மையான அர்த்தம் என்ன என்று இணையத்தளத்தில் தேடிப்பார்த்த போது அதற்கு ஏராளமான அர்த்தங்கள் இருந்தன அவற்றை பொதுப்படுத்தி பார்த்த போது நல்லிணக்கம் என்பதற்கு 'ஏற்கனவே மோதலில் ஈடுபட்டிருந்த இரு தரப்பினருக்கிடையில் சமாதானமான அன்றேல் இணக்கப்பாடான உறவுகளை மீள ஸ்தாபித்தல்' என அர்த்தம் வழங்கப்படுகின்றது .
இந்த நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகள் ஆரம்பமாவதற்கு முன்னரே இதன் நம்பகத்தன்மை குறித்து பல்வேறு தரப்பினராலும் சந்தேகங்கள் வெளியிடப்பட்டன
இலங்கையில் இதற்கு முன்பாக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் செயற்பாடுகள் அவற்றின் நடவடிக்கைகள் முடிவிற்கு கொண்டுவரப்பட்ட விதம் தொடர்பில் இருந்த அனுபவங்கள் மற்றும் கசப்புணர்வுகள் காரணமாகவே இவ்வாறான சந்தேகங்கள் வெளியிடப்பட்டன.
நல்லிணக்கம் என்பது ஒரு நீண்ட பயணம் அது ஏதேனும் ஒரிடத்தில் ஆரம்பித்தாகவேண்டும் என்பதற்கமைவாக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் நியமனத்தை அனேகரைப்போன்று முன்கூட்டியே கொள்கை அளவில் எதிர்க்காமல் சந்தேகிக்காமல் இதிலாவது நன்மை நடக்காதா என எதிர்பார்த்திருப்பர்கள் பலருள்ளனர்
நல்லிணக்கம் சாத்தியமாவதற்கு அதனை அடைவதற்கு எடுக்கப்படும் முயற்சிகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு போதிய நம்பிக்கை இருக்க வேண்டும் அன்றேல் அந்த நம்பிக்கையை கட்டி எழுப்புவதற்கான முயற்சிகள் எடுக்கப்படவேண்டும் .
ஏனென்றால் உண்மையான நல்லிணக்கம் இலங்கையின் எதிர்காலத்திற்கு இன்றியமையாத தொன்றாக இருக்கின்றது
No comments:
Post a Comment