Tuesday, August 17, 2010

கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழு :ஓர் பார்வை


                                                               அருண் ஆரோக்கியநாதர் 

                    

நல்லிணக்கம் என்பது யுத்தம் முடிவிற்கு வந்ததாக அறிவிக்கப்பட்ட பின்னர் இலங்கையிலே அடிக்கடி உச்சரிக்கப்படுகின்ற வார்த்தையாக இருக்கின்றது .

நல்லிணக்கம் என்பதன் உண்மையான அர்த்தம் என்ன என்று  இணையத்தளத்தில் தேடிப்பார்த்த போது அதற்கு ஏராளமான அர்த்தங்கள் இருந்தன.

 அவற்றை பொதுப்படுத்தி பார்த்த போது நல்லிணக்கம் என்பதற்கு 'ஏற்கனவே மோதலில் ஈடுபட்டிருந்த இரு தரப்பினருக்கிடையில் சமாதானமான அன்றேல் இணக்கப்பாடான உறவுகளை மீள ஸ்தாபித்தல்' என அர்த்தம் வழங்கப்படுகின்றது 

நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான காத்திரமான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என சர்வதேச சமூகத்தை சேர்ந்தவர்களடங்கலாக பல்வேறு தரப்பினரும் சுட்டிக்காட்டிய நிலையில்   நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக தாம் எடுத்துள்ள முக்கிய நடவடிக்கையாக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் நியமனத்தை இலங்கை அரசாங்கம் குறிப்பிட்டிருந்தது 

இந்த ஆணைக்குழுவின் அமர்வுகள் ஆரம்பமாவதற்கு முன்னரே இதன் நம்பகத்தன்மை குறித்து பல்வேறு தரப்பினராலும் சந்தேகங்கள் வெளியிடப்பட்டன

இலங்கையில் இதற்கு முன்பாக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் செயற்பாடுகள் அவற்றின் நடவடிக்கைகள் முடிவிற்கு கொண்டுவரப்பட்ட விதம் தொடர்பில் இருந்த அனுபவங்கள் மற்றும் கசப்புணர்வுகள் காரணமாகவே இவ்வாறான சந்தேகங்கள் வெளியிடப்பட்டன.


நல்லிணக்கம் என்பது ஒரு நீண்ட பயணம் அது ஏதேனும் ஒரிடத்தில் ஆரம்பித்தாகவேண்டும் என்பதற்கமைவாக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் நியமனத்தை அனேகரைப்போன்று முன்கூட்டியே கொள்கை அளவில் எதிர்க்காமல் சந்தேகிக்காமல் இதிலாவது நன்மை நடக்காதா என எதிர்பார்த்திருப்பர்கள் பலருள்ளனர் .

இந்த ஆணைக்குழு கடந்த 11ம்திகதி அதன் அமர்வுகளை ஆரம்பித்திருந்த போதிலும்


இன்று 
செவ்வாய்க்கிழமை சர்வதேச கற்கைகளுக்கான லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் இடம்பெற்ற அமர்வு ரொய்டர்ஸ பிபிஸி ஏபி போன்ற சர்வதேச ஊடகங்கள் இராஜதந்திரிகள் உட்பட பலரது கவனத்தையும் ஈர்த்திருந்தது

அன்றையதினம் பிற்பகல் இடம்பெற்ற அமர்வில் கலந்துகொள்வதற்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஸ வருகைதந்திருந்தமை காரணமாகும்.

பாதுகாப்பு செயலாளர் முதலில் வந்தமர்ந்த பின்னர் ஆணைக்குழுவின் தலைவர் முன்னாள் சட்டமா அதிபர் சித்திராஞ்சன் டி சில்வா உள்ளிட்ட ஆணைக்குழு அங்கத்தவர்கள் அமர்வு நடைபெற்ற மண்டபத்திற்குள் நுழைந்தபோது பாதுகாப்பு செயலாளர் எழுந்து அவர்களுக்கு மரியாதை செலுத்தினார் .

பாதுகாப்பு செயலாளர் வழங்கிய அந்த மரியாதையைத் தவிர ஆணைக்குழுவில் அங்கம் வகிப்பவர்களது செயற்பாடுகளில் பெரும்பாலானவை நகைக்கும்படியாகவே இருந்தன

பெருந்தொகையான ஆவணக்கோவைகளுடன் வந்திருந்த பாதுகாப்புச்செயலாளர் தனது மிகக் கொடூரமான பயங்கரவாத இயக்கத்தையே அரசாங்கம் தோற்கடித்தது என்பதை பலரும் மறந்து போயுள்ளனர் .அதுதான் வரலாறாகும் என்று கூறி தனது இரண்டரை மணிநேர சாட்சியத்தை தொடங்கினார் .

மிகப்பலம் பொருந்திய இராணுவபலத்தைக் கொண்டிருந்த விடுதலைப்புலிகளையே தோற்கடித்ததாக தெரிவித்த பாதுகாப்புச்செயலாளர் ஒருகட்டத்தில் விடுதலைப்புலிகளிடம் 30 ஆயிரம் நிரந்த போராளிகள் இருந்தமை உள்ளிட்ட விபரங்களை விபரித்தார் .

விடுதலைப்புலிகள் மோசமான அட்டூழியங்களை இழைத்தாக குறிப்பிட்ட பாதுகாப்புச்செயலாளர் அதுதொடர்பான ஆவணக்கோப்புக்களை ஒவ்வொன்றாக எடுத்துவைத்தபோது அதிலுள்ள விடயங்கள் இதுவரை வெளிவராத புதிய அம்சங்களை உள்ளடக்கிவை என்ற பாங்கில் ஆணைக்குழுவின் தலைவர் அந்த ஆவணக்கோப்புக்களைத் தரமுடியுமா என பாதுகாப்புச்செயலாளரிடம் கேட்க அவரும் ஒவ்வொரு ஆவணக்கோப்புக்களாக கையளித்தார்.

விடுதலைப்புலிகளுக்கெதிரான யுத்தத்தை தொடங்கியபோது எவ்வாறு தம்மிடம் தெளிவான இராணுவத்திட்டம் இருந்ததோ அவ்வாறே பொதுமக்களைப் பாதுகாப்பதற்கான திட்டமும் இருந்ததென அவர் குறிப்பிட்டிருந்தார். இதன் காரணமாகவே கடந்த காலங்களைப் போன்று இராணுவ நடவடிக்கைகளுக்கு தனியான பெயர்களை இடாமல் இது மக்களை விடுவிக்கும் நடவடிக்;கையாதலால் இதனை மனிதநேய நடவடிக்கை என்றே அழைக்க வேண்டும் என ஜனாதிபதி பணித்ததாக கூறிப்பிட்டார்.

 இது பார்ப்பதற்கு சிறு விடயமாக இருக்கும் போதும் முக்கியமான ஒன்றாகும் என அவர் சுட்டிக்காட்டினார்.

படையினர் துப்பாக்கிகளை ஒருகையிலும் மனித உரிமைகள் சாசனத்தையும் மறுகையிலும் ஏந்திக்கொண்டே தமது பணியை முன்னெடுத்தாக குறிப்பிட்ட பாதுகாப்பு செயலாளர் மனித உரிமைகள் பற்றி இராணுவத்தினருக்கான பயிற்சிகள் 2003ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டதாகவும் இதற்காக பிரத்தியேகமான இராணுவ பணியகம் ஸ்தாபிக்கப்பட்டிருந்ததாக கூறினார் .
தமக்கு முன்பாக இருப்பவர் அதிகாரம் மிக்கவர் பெருமதிப்பிற்குரியவர் என்பதை ஆமோதிக்கும் பாங்கிலேயே ஆரம்பமுதலாக ஆணைக்குழுவின் அங்கத்தவர்கள் நடந்துகொண்டனர் . மனித உரிமைகள் விடயத்தில் இராணுவத்தினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டமை தொடர்பாக பாதுகாப்புச் செயலாளர் கூறும் போது ஆணைக்குழுவின் தலைவரோ ' இது உலகத்திற்கே முன்மாதிரியானதொன்று என ஐசிஆர்சி தெரிவித்திருந்ததென தனது தரப்பில் எடுத்துக்கொடுத்தார் . அப்போது பாதுகாப்புச் செயலாளர் ஆம் என்று கூறியதுடன் ஐசிஆர்சி உதவியதாக குறிப்பிட்டு மற்றுமொரு ஆவணக்கோப்பை சமர்பித்தார் .அதில் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இராணுவத்தில் நடத்தப்பட்ட உள்ளக விசாரணைகள் தொடர்பான சான்றுகள் என உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இராணுவரீதியாக நோக்கும் போது பயங்கரவாதத்தை தோற்கடித்த விடயத்தில் இலங்கை பின்பற்றிய அணுகுமுறைகளை முன்மாதிரியாக கொள்ளவேண்டும் என மக்கள் பேசுகின்றனர் ஆனாலும் மனித நேய உதவிகளை வழங்குவதற்காகவும் பொதுமக்கள் இழப்புக்களை குறைப்பதற்காகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காகவும் அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் திட்டங்கள் என்பனவற்றில் இலங்கையின் முன்மாதிரியை எடுத்துப் பயன்படுத்துவது முக்கியமானதென பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஸ தெரிவித்தார் . 

பாதுகாப்புச் செயலாளர் தனது சாட்சியத்தில் பொதுமக்களின் இழப்பைத்தவிர்ப்பதற்காக யுத்த சூனியப்பிரதேத்தை பிரகடனப்படுத்தியமை அதனை மக்கள் நலனுக்காக நகர்த்தியமை ஆகாயத்தில் இருந்து துண்டுப்பிரசுரங்களை வீசியமை கனரக ஆயுதங்கள் பாவிப்பதை தவிர்த்தமை மக்களை மீட்டு பாதுகாப்பான வழியமைத்துக்கொண்டுவந்தமை பற்றியெல்லாம் குறிப்பிட்டார்.

பாதுகாப்பு செயலாளர் தனது சாட்சியத்தை தொடங்கிய ஆரம்பத்தில் இராணுவ நடவடிக்கை தொடர்பான வீடியோ காட்சிகள் இருக்குமா என அவரிடம் முதலாவது கேள்வியை ஆணைக்குழுவின் தலைவர் தொடுத்திருந்தாலும் பாதுகாப்பு செயலாளர் தனது சாட்சியத்தை முடித்துக்கொண்டபின்னர் ஆணைக்குழுவின் தலைவரான சி ஆர் டி சில்வா தொடுத்த கேள்வி அந்த மண்டபத்தில் இருந்தவர்களை ஒருவர் மற்றவரை பார்த்து சிரித்துக்கொள்ளும் வகையில் இருந்தது 

முன்னாள் சட்டமா அதிபராக இருந்தவரது கேள்வி இவ்வாறு அமைந்தது ' கடந்த வாரம் எமக்கு முன்பாக சாட்சியமளித்த  விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகள் சிலர் மிதிவெடிகளை தவிர்க்கும் வகையில் இராணுவத்தினர் தமக்கு வழிகாட்டிக்கொண்டுவந்ததாக கூறினர். 

அவ்வாறு மக்களை வழிநடத்திக்கொண்டுவருவதற்கு நீங்கள் ஏதேனும் விசேட உத்தரவுகளை வழங்கியிருந்தீர்களா ? என வினவினார். இந்தக் கேள்வி பதிலுக்கு வழிசமைக்கின்ற கேள்வி என்பதை சராசரி அறிவுள்ளவர்கள் கூட விளங்கியிருப்பர் 

இந்தக்கேள்விக்கு பதிலளித்த பாதுகாப்புச்செயலாளர் ' ஆம் நாங்கள் பாதுகாப்பான பயணத்திற்கு வழிவிடுமாறு உத்தரவு வழங்கியிருந்தோம் இதன் காரணமாக நாம் இழப்புக்களையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது' எனக் குறிப்பிட்டார் .

இதன்போது கடைசி யுத்தத்தில் ஏற்பட்ட பாரிய இழப்புக்கள் தொடர்பான ஓர் உள் உணர்வை பெற்றுக்கொள்ளமுடிந்தது 

பாதுகாப்பு செயலாளர் தனது பதிலின் போது 'இராணுவத்தரப்பில் மனிதநேய யுத்தகாலத்தில் ஏறத்தாழ 6000 பேர் கொல்லப்பட்டதுடன் 30 000 வரையில் காயமுற்றிருந்தனர்.படையினர் தரப்பில் இழப்புக்களின் எண்ணிக்கை இவ்வளவாக இருக்கின்றவிடத்தில் நடைபெற்ற மோதல்களின் உக்கிரத்தன்மையை உங்களால் கற்பனைசெய்துகொள்ள முடியும் .ஏனென்றால் அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள் சாதனங்களே இதற்கு காரணமாகும். இது சிலரால் மறக்கப்பட்டுள்ள மற்றுமொரு விடயம் என்றவகையிலேயே இந்த உண்மையை நான் முன்வைக்கின்றேன்.

 சிலர் பொதுமக்களுக்கு ஏற்பட்ட இழப்பு தொடர்பாக பேசுகின்றனர் .பொதுமக்களின் இழப்பை அடையாளம் காண்பது கடினமான விடயமாகும் ஆனால் படையினர் தரப்பிலேயே இழப்புக்களின் எண்ணிக்கை இவ்வளவாக இருக்கும் என்றால் விடுதலைப்புலிகள் தரப்பில் ஏற்பட்ட இழப்புக்களை நீங்கள் கற்பனை செய்து பார்க்க முடியும் எவரும் விடுதலைப்புலிகளுக்கு ஏற்பட்ட இழப்புக்கள் தொடர்பாக பேசுவதில்லை .இவையனைத்தையும் பொதுமக்களின் இழப்புக்களுடனேயே சேர்த்துப்பார்க்கின்றனர் .இராணுவமே அந்தளவு இழப்பை எதிர்கொண்டதென்றால் ஆகக் குறைந்தபட்சம் அதே அளவான இழப்புக்களை விடுதலைப்புலிகள் சந்தித்திருப்பர் .ஆனால் அது (விடுதலைப்புலிகளின் இழப்புக்கள்) அதிகமானதாகவே இருக்கும் என்பது எனக்கு நிச்சயம் ஏனென்றால் அரச படையினரின் சூட்டுப்பலம் அதிகமாக இருந்தமையே இதற்கு காரணமாகும்.இது எவ்வளவென்பது யாருக்கும் தெரியவும் மாட்டாது யாரும் இதைப்பற்றி பேசுவதுமில்லை'  எனத் தெரிவித்தார்.


பொதுமக்களின் உயிரிழப்புக்கள் ஏற்படவில்லை என்ற விடயத்தினை ஆரம்பமுதலே ஒரேதொனியில் பாதுகாப்புச் செயலாளர் வலியுறுத்தியிருந்தபோதும் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் பொதுமக்களின் உடையில் இருந்ததாக அவர் குறிப்பிட்ட விடயங்களைப் பார்க்கையில் பெரும் ஆளிழப்பு ஏற்பட்டுள்ளமை துலாம்பரமாகின்றது 
நல்லிணக்க ஆணைக்குழுவின் அங்கத்தவர்களில் ஒருவரான இலங்கையின் சிரேஷ்ட இராஜதந்திரி எச் எம் ஜி எஸ் பலிக்கார பாதுகாப்பு செயலாளரைப்பார்த்து ' நீங்கள் மனித நேய செயற்பாடுகள் குறித்து சிறப்பான விபரிப்பை வழங்கியுள்ளீர்கள் .நாங்கள் ஓமந்தையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள வர்களை சென்று சந்தித்தோம் அவர்கள உண்மையில் விடுதலைப்புலிகளின் கடும் போக்கு உறுப்பினர்கள் அவர்கள் விசாரணைக்கு முகங்கொடுத்தும் சிலர் புனர்வாழ்வளிக்கப்பட்டும் வருகின்றனர் .அபாயங்களையும் மிதிவெடிகளையும் தவிர்த்து தாம் சரணடைவதற்கான வழிமுறையில் பாதுகாப்பு படையினர் எங்கனம் உதவினர் என அவர்கள் குறிப்பிட்டனர். இந்த விடயத்தில் நிறைய ஊகங்கள் இருக்கின்ற காரணத்தால் அந்த சரணடையும் படிமுறை குறித்து எமக்கு விபரிக்க முடியுமா  ? இவ்விடயத்தில் ஏற்கனவே தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் விலாவாரியாக தகவல் வழங்கியுள்ளதுடன் தாம் முன்சென்ற கிரமமான படிமுறை குறித்து அவர்களே விபரித்துள்ளதால் இது விடயத்தில் நீங்களும் உங்களது களநிலை தளபதிகளும் ஏதேனும் சிரமங்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டதா ? எனக் கேள்வி எழுப்பினார் 

இந்தக் கேள்வியும் பதிலுக்கு வழிசமைக்கும் கேள்வியாகவே அமைந்திருந்தது ஆணைக்குழு உறுப்பினர்கள் சாட்சியை குறுக்கு விசாரணைக்கு உட்படுத்தும் வகையிலான கேள்விகளைக் கேட்பதை விடுத்து சாட்சிகள் கூறுவதை ஆமோதிக்கும் பாணியிலேயே கேள்விகளை வடிவமைக்கின்றமை தெளிவாக தெரிந்தது.


இந்த கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழு நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்துகின்ற பணியைச் செய்யாமல் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பான விபரிப்புக்களை பதிவுசெய்கின்ற ஒன்றாக அமைந்துவிடுமோ என்ற ஐயப்பாடுகள் அங்கு வந்திருந்தோரிடையே எழுந்தன .

இந்த ஆணைக்குழு அதன் விசாரணைகளை நிறைவுசெய்வதற்கு முன்னதாகவே முடிவுகளை தீர்மானித்து விட்டதாகவே எண்ணத்தோன்றுகின்றது யுத்த நிறுத்த ஒப்பந்தம் விடுதலைப்புலிகள இயக்கம் ஐக்கிய தேசியக்கட்சி நோர்வே அனுசரணை யாவுமே தவறுகளாக அறிவிக்கப்படப்போகின்றன என்பதற்கான தெளிவான அடையாளங்கள் தென்படுகின்றன.

 ஒரு தரப்பு சரியென்றும் மற்றத்தரப்பு தவறென்றும் முன்கூட்டியே நிலையெடுத்துக்கொண்டு நல்லிணக்கத்தை நோக்கிய பாதையில் பயணித்துவிடமுடியாது அப்படிப்பயணிப்பின் அது உண்மையான நல்லிணக்கத்திற்கு வழிவிடாது என்பதை வரலாறுகள் உணர்த்திநிற்கின்றன 
நல்லிணக்கம் சாத்தியமாவதற்கு அதனை அடைவதற்கு எடுக்கப்படும் முயற்சிகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு போதிய நம்பிக்கை இருக்க வேண்டும் அன்றேல் அந்த நம்பிக்கையை கட்டி எழுப்புவதற்கான முயற்சிகள் எடுக்கப்படவேண்டும் .

ஆனாலும் இலங்கையில் அவ்வாறான மற்றுமொரு சந்தர்ப்பமும் கைநழுவிச் சென்று விடுமோ என்ற சந்தேகத்தை வலுப்படுத்துவதாக தற்போது இடம்பெறும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் ஆரம்பகட்ட அமர்வுகள் கோடிட்டுக்காட்டுகின்றன .

இறுதியாக இந்த கட்டுரையை முடிக்கு முன்னர் நல்லிணக்கம் தொடர்பாக பிலிப்பைன்ஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி கொரஸோன் அக்கியுனோ கூறிய கூற்றை மீட்டிப்பார்க்கின்றேன் .

'நல்லிணக்கமானது நீதியுடன் கூடிவருவதாக இருக்கவேண்டும் .அப்படியில்லாவிட்டால் அது நின்று நிலைக்க மாட்டாது நாம் அனைவரும் சமாதானத்திற்காக நம்பிக்கை வைக்கின்றோம் .ஆனால் அந்த சமாதானம் என்னவிலைகொடுத்தும் பெறப்பட்ட சமாதானமாக இருந்துவிடமுடியாது அந்த சமாதானம் கொள்கையின் அடிப்படையில் நீதியின் அடிப்படையிலானதாக அமைந்திடவேண்டும்'

-------------------------------------------------------------------------------------------------------------


வடக்கில் கணிசமான இராணுவப்பிரசன்னம் இருக்க வேண்டும்
                                                                                  பாதுகாப்பு செயலாளர் 



விடுதலைப்புலிகள் இயக்கத்தினர் மீள ஒருங்கிணையும் சாத்தியக்கூறுகளை தடுத்துநிறுத்துவதற்காக வடக்கில் கணிசமான இராணுவப்பிரசன்னம் இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டைத்தாம் கொண்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஸ தெரிவித்தார்


விடுதலைப்புலிகளது  சர்வதேச வலையமைப்பானது இன்னமும்   கணிசமான அளவிற்கு அப்படியே இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார்
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாக ஆராய்வதற்கான ஆணைக்குழுவின் முன்னிலையில் இன்று கருத்துவெளியிடும் போதே அவர் இந்த விபரங்களைத்தெரிவித்தார்


கொழும்பிலுள்ள சர்வதேச கற்கைகளுக்கான லக்ஸ்மன் கதிர்காமர் நிலையத்தில் இன்று நடைபெற்ற இன்றைய அமர்வில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஸ பங்கேற்பதனை அறிந்து பெருமளவான உள்நாட்டு வெளிநாட்டு செய்தியாளர்கள் அங்கு கூடியிருந்தனர்
சுமார் இரண்டரை மணிநேரங்கள் கருத்துக்களை தெரிவித்ததுடன் கேள்விகளுக்கும் பதிலளித்திருந்தார்


இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் இரண்டு மணிக்கு இந்த அமர்வு ஆரம்பமாகியது இதன் போது கருத்துவெளியிட்ட பாதுகாப்புச்செயலாளர் கோட்டபாய ராஜபக்ஸ
பாரிய இராணுவ பலத்தைக் கொண்டிருந்த விடுதலைப்புலிகளை அமைப்பையே இலங்கை படையினர் தோற்கடித்தனர் என்பதை பலரும் இன்று மறந்துபோயுள்ளனர் எனக்குறிப்பிட்டதுன் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக தாம்; 2005ம் ஆண்டில் பதவியேற்றபோது வன்னியின் பெரும்பகுதியும்; கிழக்குமாகாணத்தின் பலபகுதிகளும் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலேயே இருந்ததாக குறிப்பிட்டார் சிறுவர் போராளிகள் அடங்கலாக விடுதலைப்புலிகள் இயக்கத்தில் 30000 நிரந்தர போராளிகள் இருந்ததாக பாதுகாப்பு செயலாளர் சுட்டிக்காட்டினார் 


விடுதலைப்புலிகளிடம் இராணுவப்பிரிவு கடற்படை விமானப்படை என அனைத்து பிரிவுகளும் இருந்தன அவர்களிடம் தற்கொலைப்படை இருந்தது உலகில் எந்தவொரு அமைப்பிலும் பார்க்க அதிகளவான தற்கொலைக்குண்டுத்தாக்குதல்களை அவர்கள் நடத்தியிருந்தனர் அவர்களிடம் பயங்கர ஆயுதங்கள் இருந்தன ஆட்டிலறிகள் ஏவுகணைகள் யாவும் இருந்தன மக்கள் படையென்ற பெயரில் பொதுமக்களுக்கும் அவர்கள் ஆயுதப்பயிற்சிகளை வழங்கியிருந்தனர் இப்படியாக பாரிய இரர்ணுவப்பலத்தைக்கொண்டிருந்த விடுதலைப்புலிகள் இயக்கத்தையே இலங்கைப்படையினர் தோற்கடித்திருந்தனர் அவர்கள் சிறுகுழுவிற்கு எதிராக போரிடவில்லை விடுதலைப்புலிகளின் இராணுவ பலத்தின் பாரிய தன்மையை விளங்கிக்கொள்ளாதவர்களாக ஏதோ சிறுகுழுவிற்கு எதிராகவே யுத்தம் செய்தது போன்று பலர் கருத்துக்களை வெளியிடுகின்றனர் விடுதலைப்புலிகளைத்தோற்கடிப்பதற்கு இலங்கை அரசாங்கத்திடம் தெளிவான திட்டம் இருந்ததைப்போன்றே மக்களைப்பாதுகாப்பதற்கும் ஆரம்பமுதலே தெளிவான திட்டம் இருந்தது விடுதபை;புலிகள் மிகக்கொடுரமான பயங்கரவாத அமைப்பாக இருந்ததாக குறிப்பிட்ட அவர் விடுதலைப்புலிகள் இழைத்ததாக கூறப்படும் அட்டுழியங்கள் தொடர்பான ஆவணங்களை ஆணைக்குழுவின் முன்பாக கையளித்தார்  விடுதலைப்புலிகளுடனான இறுதியுத்தத்தின் போது முப்படையினரையும் சேர்ந்த 6000பேர் கொல்லப்பட்டிருந்ததுடன் 30 ஆயிரம் பேர் வரை காயமடைந்திருந்தனர் பாதுகாப்பு படையினருக்கும் இத்தகைய அளவில் இழப்புக்கள் ஏற்பட்டிருப்பின் நடைபெற்ற மோதல்களின் உக்கிரத்தன்மையை உணர்ந்துகொள்ளமுடியும் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஸ குறிப்பிட்டார் பொதுமக்களையும் விடுதலைப்புலிகளையும் இனங்காண்பது மிகவும் கடினமானதாக இருந்தது அரச படையினரின் தரப்பில் 6000 பேர் உயிரிழந்தும் 30000 பேர் காயமுற்றுமிருந்தால் விடுதலைப்புலிகளின் தரப்பில் எந்தளவிற்கு இழப்புகள் ஏற்பட்டிருக்க வேண்டும் என அவர் கேள்வி எழுப்பினார் இராணுவத்தினரின் பலம் அதிகமாக இருந்தமைகாரணமாக விடுதலைப்புலிகள் தரப்பில் இழப்புக்கள் அதிகமாகவே ஏற்பட்டிருக்கும் எனக்குறிப்பிட்ட பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்; விடுதலைப்புலிகளது இழப்புக்கள் தொடர்பாக எவருமே கதைப்பதில்லை எனக்குறிப்பிட்ட அவர் பொதுமக்களின் இழப்புக்கள் தொடர்பாக மாத்திரமே பேசுவதாக கூறினார் இது அபாயகரமானவிடயம் எனச் சுட்டிக்காட்டினார் 


வடக்கில் சிவில் நிருவாகத்தை படிப்படியாக பொலிஸாரிடம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுவருகின்றது. ஆனால் வடக்கிலிருந்து இராணுவ முகாம்களை முழுமையாக அகற்ற முடியாது என பாதுகாப்புச்செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்

விடுதலைப்புலிகள் போன்ற அமைப்புக்கள் மீண்டும் எழாதவாறு தடுப்பதற்காக வன்னிப்பகுதிக்காடுகளை இராணுவ ஆதிக்கத்திற்குள் வைத்திருக்க வேண்டிய தேவை உள்ளது அதேபோன்று ஆயுதங்கள் கொண்டுவரப்படாமல் தடுப்பதற்கு கடல்பகுதியை ஆதிக்கத்திற்குள் வைத்திருப்பது அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்

 விடுதலைப்புலிகள் இயக்கத்தினர் மீள ஒருங்கிணையும் சாத்தியக்கூறுகளை தடுத்துநிறுத்துவதற்காக வடக்கில் கணிசமான இராணுவப்பிரசன்னம் இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டைத்தாம் கொண்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஸ தெரிவித்தார்
;
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாக ஆராய்வதற்கான ஆணைக்குழுவின் முன்னிலையில் இன்று எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விபரங்களைத்தெரிவித்தார்

வடக்கில் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகின்றதா என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பாதுகாப்புச்செயலாளர்

வன்னியில் தற்போது சிவில் நிர்வாகம் இடம்பெற்று வருகின்றது. அண்மையில் அமைச்சரவை கூட்டமும் அங்கு நடைபெற்றது. நிர்வாக செயற்பாடுகளை படிப்படியாக பொலிஸாரிடம் கையளிக்க எதிர்பார்க்கின்றோம். எனினும் இராணுவத்தினரை அங்கிருந்து முழுமையாக வெளியேற்ற முடியாது. இராணுவ முகாம்கள் என்பது அம்பாந்தோட்டையிலும் மாத்தறையிலும் உள்ளன. நாட்டின் எப்பகுதியிலும் இராணுவ முகாம்கள் இருக்கும் வன்னியின் கடற்பகுதி மற்றும் காட்டுப்பகுதிகளில் அதிகளவில் பாதுகாப்பு வழங்கவேண்டியுள்ளது. மீண்டும் ஒருமுறை பயங்கரவாத அமைப்பு ஒன்று உருவாவதற்கு இடமளிக்க முடியாது. காரணம் புலிகளின் சர்வதேச வலையமைப்பு இன்னும் செயற்படுகின்றது. எனவே நாங்கள் கவனமாக இருக்கவேண்டும் என கோட்டபாய குறிப்பிட்டார்.

தனியாருக்கு சொந்தமான காணிகள் இராணுவ முகாம்கள் அமைப்பதற்காக எடுக்கப்படுகின்றதா என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த கோட்டபாய ராஜபக்ஸ

வன்னியில் மக்களினதோ தனியாரினதோ காணிகளில் எக்காரணம் கொண்டும் இராணுவ முகாம்களையும் இராணுவ நிலையங்களையும் அமைக்கும் எண்ணம் அரசாங்கத்துக்கு இல்லை ட அரசாங்க காணிகளிலேயே இராணுவ முகாம்களை மீளமைத்துவருகின்றோம்  அரசாங்கத்திற்கு சொந்தமான பாடசாலை கோவில்கள் போன்ற கட்டிடங்களையும் பொதுமக்கள் பாவனைக்காக இராணுவத்தினர் மீளக்கையளித்து வருகின்றனர்இது இன்னமும் முழுமை பெறவில்லை இருந்தபோதும் துரிதமாக அந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது எனினும் யாழ்ப்பாணத்தில் ஒரு விடயம் காணப்படுகின்றது. அதாவது பலாலியிலும் காங்கேசன்துறையிலும் சில இடங்களில் அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் உள்ளன. அது தொடர்பில் தற்போது ஆராய்ந்துவருகின்றோம். அதாவது இராணுவத்துக்கு எந்தளவு காணிகள் தேவை என்பது தொடர்பில் ஆய்வு ஒன்றை நடத்தி வருகின்றோம். அதன்படி தேவையற்ற காணிகள் வழங்கப்படலாம். பாதிக்கப்படுகின்ற மக்களுக்கு நட்டஈடு வழங்கப்படும் என்பதுடன் மாற்றுக்காணிகளும் வழங்கப்படும் எனக் சுட்டிக்காட்டினார்

இராணுவத்தினருக்காக நிரந்தர வீடுகள் அமைத்துக்கொடுக்க நடவடிக்கை ஏதும் வன்னியில் மேற்கொள்ளப்படுகின்றனவா என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில்

. இராணுவத்தினருக்கு நிரந்தர வீடுகள் அமைத்துக்கொடுக்கப்படவில்லை. அங்கு பணிபுரியும் இராணுவத்தினர் தங்குவதற்கே இருப்பிடங்கள் அமைக்கப்படுகின்றன. இதனை புரிந்துகொள்ளவேண்டும். இராணுவத்தினரை அங்கு குடியேற்றும் எண்ணம் கிடையாது எனக்குறிப்பிட்டார்






No comments:

Post a Comment