Thursday, August 12, 2010
வெற்றியைக் கொண்டுவருமா மெஸிடோனா கூட்டணி?
தென் ஆபிரிக்காவில் உலகக்கிண்ண கால்பந்தாட்டப்போட்டிகள் ஆரம்பமாகவதற்கு இன்னமும் ஒருவார காலத்திற்கு அதிகமான காலப்பகுதி உள்ள போதிலும் போட்டிகள் தொடர்பான எதிர்பார்ப்புக்கள் கடந்த பலமாதங்களாகவே வலுக்கத் தொடங்கிவிட்டன
ரசிகர்களது எதிர்பார்ப்புகளுக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் கால்பந்தாட்ட உலகம் கண்ட மிகச்சிறந்த வீரர்கள் இருவர் ஓரணியில் இணைந்திருப்பது பிரதானமானதாக அமைந்துள்ளது
ஆர்ஜன்டின அணி இறுதியாக 1986ல் உலகக்கிண்ணத்தை வென்ற போது அவ்வணிக்கு தலைமைதாங்கி முக்கிய பாத்திரத்தை வகித்திருந்த வீரரும் அதற்கடுத்த ஆண்டில் பிறந்து கால்பந்தாட்ட உலகையே தன்காலடியில் கட்டிப்போட்டுள்ள வீரரும் ஆர்ஜன்டின அணியில் இணைந்திருப்பதே இதற்கு காரணமாகும்.
முன்னதாக குறிப்பிட்ட வீரர் பற்றிய அறிமுகத்திற்கு அவசியமில்லை அவர்தான் டியாகோ மரடோனா தற்போது ஆர்ஜன்டின கால்ப்பந்தாட்ட அணியின் பயிற்சியாளராக திகழ்பவர் மற்றையவர் லயனல் மெஸி
லயனல் மெஸியின் திறமைகள் ஸ்பெயின் நாட்டின் கழக மட்டப்போட்டிகளிலும் ஐரோப்பிய கழகங்களுக்கிடையிலான சம்பியன்ஸ் லீக் போட்டிகளிலுமே அதிகமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது
உலகக்கிண்ண அரங்கில் மெஸியின் திறமைகள் இன்னமும் நிருபிக்கப்படவில்லை இருந்தபோதிலும் கடந்த சில வருடங்களாக ஸ்பெயின் பார்சிலோனா கழகத்திற்காக மெஸி விளையாடியுள்ள போட்டிகளையும் அவர் அடித்துள்ள அட்டகாசமான கோல்களையும் பார்த்தவர்கள் இந்த 22வயதுப் பயல் சாதாரண வீரன் கிடையாது விண்ணில் இருந்து குதித்திட்ட அசாதாரண வீரன் அபரீத ஆற்றல் படைத்தவன் கால்பந்தாட்ட உலகம் இதுபோன்ற வீரனை இதற்கு முன் கண்டதில்லை என்றெல்லாம் புகழாரங்களைச் சூடியிருப்பதிலிருந்து ரசிகர்களின் கவனமெல்லாம் மெஸியின் மீது குவிந்திருக்கின்றது
தற்போது ஆர்ஜன்டின அணியின் பயிற்சியாளராக விளங்கும் டியாகோ மரடோனா கடந்த நூற்றாண்டின் சிறந்த கால்பந்தாட்ட வீரர் யார் என சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் ரசிகர்கள் மத்தியில் நடத்திய இணையத்தளமூலமான வாக்கெடுப்பில் முதலிடத்தைப்பெற்றவர்
.இதுதொடர்பில் சர்ச்சைகளும் எழுந்தன.ஆர்ஜன்டின ரசிகர்கள் இணைய ஆக்கிரமிப்புச் செய்து அதிகளவான வாக்குகளை அளித்தமையாலேயே மரடோனா இணையத்தளவாக்கெடுப்பில் முதலிடம் பெற்றார் என பிரேஸில் ரசிகர்கள் முறையிடவே பின்னர் சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் முன்னாள் வீரர்கள் நடுவர்கள் விற்பன்னர்கள் மத்தியில் கடந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த வீரர் யார் என்ற மற்றுமொரு வாக்கெடுப்பை நடத்தியிருந்தது
அதிலே பிரேசில் வீரர் பீலே முதலிடத்திற்கு தெரிவாகியிருந்தார்
இவ்வாறு இணையத்தளம் மூலமாக ரசிகர்களிடையே நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் முதலிடம் பெற்ற ஆர்ஜன்டின வீரர் டியாகோ மரடோனாவையும் முன்னாள் வீரர்கள் நடுவர்கள் மத்தியில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் முதலிடம் பெற்ற பிரேசிலிய வீரர் பீலேயையும் கடந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த கால்பந்தாட்டவீரர்களாக அறிவித்து சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் இந்த சர்ச்சைக்கு முடிவுகண்டது .
எது எப்படியிருந்தாலும் டியாகோ மரடோனாவின் ஆட்டத்தை பார்த்தவர்கள் அவர் தனித்துவ திறமைகொண்ட அசாதாரண வீரர் என்பதை சந்தேகத்திற்கிடமில்லாது ஒப்புக்கொண்டிருந்தனர் இதற்கு அவர் கழகமட்டப்போட்டிகளில் மட்டுமன்றி உலக அரங்கில் தனது தாயக அணியான ஆர்ஜன்டினாவிற்காக காண்பித்த ஆற்றல் வெளிப்பாடுகளே முக்கிய காரணமாக விளங்கியது
1986ம் ஆண்டில் மெக்ஸிகோவில் இடம்பெற்ற உலகக்கிண்ணப் போட்டியில் மரடோனாவின் ஆற்றல் வெளிப்பாடுகள் ரசிகர்களால் மறக்க முடியாதவை அணிக்கு தலைவராக விளங்கிய மரடோனா தாமே முன்னுதாரணமாக விளையாடி மைதானத்தில் அபரிமிதமான ஆற்றல் வெளிப்பாடுகளைக் காண்பித்து ஆர்ஜன்டின அணிக்கு இரண்டாவது உலகக்கிண்ணத்தை பெற்றுக்கொடுத்திருந்தார்
அதற்குப் பின்னர் மரடோனா உலகெங்கிலும் புகழ்பெற்றதுடன் கால்பந்தாட்ட வரலாற்றின் பிரிக்கப்படமுடியாத அங்கமானார் கால்பந்தாட்டத்தின் மீது அதீத மோகம் கொண்ட ஆர்ஜன்டின நாட்டவர்களோ மரடோனாவை தம்நாட்டின் யுகபுருஷராக ஜாம்பவானாக இதயசிம்மாசனத்தில் ஏற்றிவைத்தனர்
தடைசெய்த ஊக்கமருந்தைப் பாவித்து விளையாடியமை பல குற்றச்சாட்டுக்கள் மரடோனா மீது சுமத்தப்பட்டும் அவற்றில் சில உண்மையென்று நிருபிக்கப்பட்டபோதிலும் மரடோனாவின் மகத்துவம் ஒருதுளியும் குறைந்துவிடவில்லை
தம் தாய்நாட்டிற்காக உலக அரங்கில் அற்புதமான ஆற்றலைவெளிப்படுத்தி உலகக்கிண்ணத்தை பெற்றுக்கொடுத்த ஒரே காரணத்திற்காக எத்தனை தவறுகள் செய்தாலும் அதனை மறந்துவிட ஆர்ஜன்டினா தயங்கியதில்லை
குறையாத மக்கள் செல்வாக்கு மரடோனாவிற்கு ஆஜன்டின அணியின் பயிற்றுவிப்பாளர் பதவியையும் தேடிந்தந்தது
ஆனால் களத்தில் வீரராக இருந்தபோது காண்பித்த ஆற்றல் வெளிப்பாடுகளை மரடோனா பயிற்றுவிப்பாளர் பதவியேற்று இருவருடங்கள் கழிந்துள்ள நிலையிலும் காண்பிக்கவில்லை என்பதே கால்பந்தாட்ட விமர்சகர்களதுறு கணிப்பாகவுள்ளது
2010ம் ஆண்டு உலகக்கிண்ண தகுதிகாண் போட்டிகளில் ஆர்ஜன்டின அணியின் பெறுபேறுகள் பெரிதாக பாராட்டும் படியாக அமைந்திருக்கவில்லை என்பதை கால்பந்தாட்ட ரசிகர்களும் ஆமோதிப்பர்
பலம்குறைந்த அணியாக கருதப்பட்ட பொலிவிய அணிக்கெதிரான போட்டியில் ஆறுக்கு ஒன்று என்ற கோல்கள் வித்தியாசத்தில் தழுவிய தோல்வியுட்பட தகுதிகாண் போட்டிகளில் தட்டுத்தடு மாறி மொத்தமாக விளையாடிய 18 போட்டிகளில் 8ல் மாத்திரமே வெற்றிபெற்று 28புள்ளிகளுடன் தென் அமெரிக்க பிராந்தியத்தில் இருந்து இறுதியாகவே உலகக்கிண்ணபோட்டிகளில் விளையாடுவதற்கான தகைமையை ஈட்டிக்கொண்டது .
தகுதிகாண் போட்டிகளது பெறுபேறுகளின் படி பார்த்தால் வேறுநாடுகள் என்றால் தமது பயிற்றுவிப்பாளரை அவர்கள் நீக்கியிருப்பார்;கள் ஆனால் ஆர்ஜன்டின நாட்டில் மரடோனா கொண்டுள்ள ஸ்தானமே அவரது பதவியைக் காத்துக்கொண்டதாக கூறுபவர்களும் இருக்கவே செய்கின்றனர்
ஒருவழியாக உலகக்கிண்ண போட்டிகளுக்கு ஆர்ஜன்டின அணி தகுதிபெற்றுவிட்டாலும் அவ்வணியில் லயனல் மெஸி உட்பட சிறந்த வீரர்கள் பலர் இருந்தாலும் அணியென்றவகையில் அனைவரும் இணைந்து எதிர்பார்க்கப்படும் ஆற்றலை இதுவரையில் வெளிப்படுத்தவில்லை என்ற குறைபாடு இருக்கவே செய்கின்றது
தகுதிகாண் போட்டிகளின் போது ஆர்ஜன்டின அணியில் மொத்தமாக 80வீரர்களை பயன்படுத்தி வியுகங்களை அமைந்துவிளையாடிய போதிலும் இறுதிவரையில் ஒருநிலையான அணியை அமைக்க முடியவில்லை என்ற குறைபாடும் இருக்கின்றது
அதுமட்டுமன்றி ஸ்பெயினில் இடம்பெறும் (டுய டபைய) கழக மட்டப்போட்டிகளில் வெளிப்படுத்தியுள்ள அபரிமிதமான ஆற்றல் வெளிப்பாடுகளுக்கு இணையான ஆற்றல்வெளிப்பாடுகளை சர்வதேச அரங்கில் லயனல் மெஸி இன்னமும் வெளிப்படுத்தவில்லை என்ற குறையும் ரசிகர்கள் மத்தியில் இருக்கின்றது
தகுதிகாண் போட்டிகளில் பெரிதாக திறமைகளை வெளிப்படுத்த தவறியபோதிலும் தென் ஆபிரிக்காவில் நடைபெறும் உலகக்கிண்ண இறுதிப்போட்டிகளில் தாம் ஆற்றலை வெளிப்படுத்துவோம் என்பதை ஆர்ஜன்டின வீரர்கள் நம்பிக்கையோடு கூறியிருக்கின்றனர்
தகுதிகாண் போட்டிகள் உட்பட ஆரம்பத்திலேயே ஆற்றலின் உச்சத்தில் வெற்றிகளைக் குவிக்கும் அணிகளைவிடவும் படிப்படியாக ஆற்றலை மேம்படுத்தி போட்டிகள் வலுவடையும்போது ஆற்றலில் உச்சத்தினை வெளிப்படுத்தும் அணிகளே உலகக் கிண்ணம் போன்ற பெரும் சுற்றுப்போட்டிகளை வென்றதாக வரலாறு குறிப்பிடுவதாக ஆர்ஜன்டின அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான மஸ்கரனோ தெரிவித்திருக்கின்றார்
உலகக்கிண்ண போட்டிகள் என்று வந்துவிட்டால் உண்மையான அனுபவமும் ஆற்றலும் எந்தத்தடைகளையும் தாண்டிப்பிரகாசிக்கும் என்பதை வரலாறு எடுத்துணர்துகின்றது இந்தநிலையில் ஏற்கனவே
உலகக்கிண்ணப்போட்டிகளில் பிரகாசித்து வரலாறு படைத்த டியாகோ மரடோனாவையும் கால்பந்தாட்ட ரசிகர்களால் வியந்து போற்றப்படும் ஆற்றல்களுக்கு சொந்தக்காரரான லயனல் மெஸியையும் கொண்டுள்ள ஆர்ஜன்டின அணி இம்முறை உலகக்கிண்ணப்போட்டிகளில் முத்திரை பதிக்க வேண்டும் என்பதே ரசிகர்களதும் விருப்பென்றால் மிகையல்லவே
Kesari Sports-02/06/2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment