Wednesday, September 30, 2020

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட ஊடகவியலாளருக்கு பிணை

 


நீதி மன்ற நடைமுறைகளை விமர்சித்து நீதிமன்றங்களுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையிலான ஆக்கங்களை  இணையத்தளத்தில் பிரசுரித்த குற்றச்சாட்டில் இம்மாதம் முதலாம் திகதி கைது செய்யப்பட்ட, இணையத்தள ஊடகவியலாளர் டெஸ்மன் சத்துரங்க டி அல்விஸுக்கு பிணை வழங்கி, கொழும்பு பிரதம நீதவான் மொஹமட் மிஹார் இன்று (30) உத்தரவிட்டுள்ளார்.

25,000 ரூபா ரொக்கப்பிணை மற்றும் தலா 05 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராக வேண்டும் என சந்தேக நபருக்கு பிரதம நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சந்தேக நபர் வௌிநாடு செல்வதற்கும் பிரதம நீதவான் தடை விதித்துள்ளார்.

விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படும் விதத்தில் செயற்படும் பட்சத்தில் பிணை இரத்து செய்யப்படும் என சந்தேக நபருக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதுடன்இ வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து எதிர்வரும் 29 ஆம் திகதி மன்றிற்கு அறிக்கையிடுமாறு பிரதம நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

நீதிமன்ற செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படும் விதத்தில் செய்தி வௌியிட்ட குற்றச்சாட்டில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கடந்த முதலாம் திகதி சந்தேக நபர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


இந்து சமுத்திரம் திறந்த மற்றும் சுதந்திர வலயமாக அமைய வேண்டும்: ஜனாதிபதி

 



இந்து சமுத்திரம் அனைத்து நாடுகளுக்கும் திறந்த மற்றும் சுதந்திர வலயமாக அமைய வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இந்து சமுத்திரத்தை சமாதான வலயமாக மாற்ற வேண்டும் என ஐந்து தசாப்தங்களுக்கு முன்னர் முதன்முதலில் இலங்கையே பிரேரணை முன்வைத்ததாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

கொரியா, ஜேர்மன், வத்திக்கான் மற்றும் சுவிட்சர்லாந்திற்கான புதிய தூதுவர்கள் இன்று ஜனாதிபதியிடம் நற்சான்றுப் பத்திரங்களைக் கையளித்தனர்.

இலங்கையில் COVID-19-ஐ வெற்றிகரமாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தமை தொடர்பில் புதிய ஐந்து தூதுவர்களும் இதன்போது ஜனாதிபதிக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

சினேகபூர்வு உறவுகளுடன் அபிவிருத்திக்கான ஒத்துழைப்புகளுக்கு முன்னுரிமை வழங்குவதாக இதன்போது குறிப்பிட்டுள்ள ஜனாபதி கோட்டாபய ராஜபக்ஸ, மூலோபாய பெறுமதியான இடத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள இலங்கை, மத்தியஸ்த வௌிநாட்டுக் கொள்கையை பின்பற்றுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அதனால் இலங்கை மீது பல இராச்சியங்களின் கவனம் ஈர்க்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மேலும் கூறியுள்ளார்.

Tuesday, September 29, 2020

மோடி அரசாங்கத்தின் அச்சுறுத்தல்களையடுத்து இந்தியாவில் செயற்பாடுகளை முடிவுறுத்துவதாக சர்வதேச மன்னிப்புச்சபை அதிர்ச்சி அறிவிப்பு

 



இந்தியாவில் மனித உரிமைகளை உறுதிப்படுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டுவந்த  சர்வதேச மன்னிப்புச்சபையின் இந்திய கிளையானது அதன் செயற்பாடுகளை இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளது. இந்திய அரசாங்கம் தொடர்ச்சியாக அதன் செயற்பாடுகளுக்கு தடைகளை ஏற்படுத்தி அச்சுறுத்தல்களை விடுத்துவந்த நிலையிலும் வங்கிக்கணக்குகளை  முற்றிலுமாக முடக்கியுள்ள நிலையிலும் இந்த தீர்மானத்தை எடுக்க நேர்ந்ததாக சர்வதேச மன்னிப்புச்சபை அறிவித்துள்ளது. 




உலகளவில் பத்து லட்சத்தை தாண்டியது கொரோனா மரணங்கள்

 




உலகில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை தற்போது பத்து லட்சத்தை தாண்டியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை பல பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று அதிகளவில் வேகமாக பரவிவருவதான அதிர்ச்சிகரமான தகவலும் வெளியிடப்பட்டுள்ளது. 

ஏழு மில்லியனுக்கு அதிகமான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள அமெரிக்காவில் 205,000 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அதற்கடுத்த நிலையில் பிரேஸிலில் 141,700 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அதிவேகமாக பரவிவரும் இந்தியாவில் இதுவரை 6 மில்லியனுக்கு அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதுடன் 95,000 பேர் இதுவரை பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 



அமெரிக்காவின் ஜோன் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தரவுகளுக்கு அமைய அமெரிக்கா, இந்தியா மற்றும் பிரேஸில் நாடுகளில் கொரோனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒட்டுமொத்த எண்ணிக்கை ஏறத்தாழ அரைவாசியாகும்.

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உண்மையான எண்ணிக்கை அதிகமாக இருக்கக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இது ஒரு மிகவும் துன்பகரமான மைல்கல் என  ஒரு மில்லியனைத் தாண்டிய உயிரிழப்புக்களின் எண்ணிக்கையை ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அன்டோனியோ பூட்டரஸ் வர்ணித்துள்ளார்..



சீனாவின் வூகான் மாகாணத்தில் கொரோனா தொற்று நோய் குறித்த தகவல் முதலில் வெளியாகிய கடந்த டிசம்பர் மாதம்  முதல் ஏறத்தாழ பத்துமாத காலப்பகுதியில் இறப்புக்களின் மொத்த எண்ணிக்கை பத்து லட்சத்தை தாண்டியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

தற்போது உலகிலுள்ள 188 நாடுகளைச் சேர்ந்த 32 மில்லியன் மக்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

20ஆவது திருத்தம் "எதிர்காலச் சந்ததிக்கு விலங்கிடும்"-எச்சரிக்கின்றார் மனித உரிமை செயற்பாட்டாளர் ஷரீன் ஷரூர்

 


20ஆவது திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணைகள் ஆரம்பமாகவுள்ளன.

ஐந்து பேரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த விசாரணைகள் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகவுள்ளன.

அதனடிப்படையில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனேக அலுவிகாரஇ பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் சிசிர த ஆப்ரோ ஆகியவர்கள் குறித்த குழுவில் உள்ளடங்குகின்றனர்.

இதுவரையில் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக 39 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன்,  குறித்த மனுக்களின் பிரதிவாதியாக சட்டமா அதிபரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி, தேர்தல்கள் ஆணைக்குழு அங்கத்தவர் ரத்னஜீவன் ஹூல், சட்டத்தரணிகள், அமைப்புக்கள் அடங்கலாக இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, 20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பாக ஆராய்வதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 10 பேர் கொண்ட குழுவொன்றை நியமித்துள்ளது.

20ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் எதிர்க்கட்சியின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் 22 ஆம் திகதி நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியினால் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த 20வது திருத்தச் சட்டமூலம் தொடர்பாக மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ஷரீன் ஷரூர் எழுதியுள்ள கட்டுரை இதோ...

நாடாளுமன்றத் தேர்தல்களைத் தொடர்ந்து இலங்கையின் 1978ஆம் ஆண்டின் அரசியலமைப்பிற்கு உத்தேச 20ஆவது திருத்தத்தினைக் கொண்டுவருவதற்காக அமைச்சரவை அங்கீகாரத்தினைப் பெற்று அதனை வர்த்தமானியில் வெளியிட ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ அவசர அவசரமாக நடவடிக்கை எடுத்துள்ளார். உத்தேசிக்கப்பட்டுள்ளவாறாக 20ஆவது திருத்தம் எவ்வாறு நாடாளுமன்ற அதிகாரங்களைக் குறைத்து நீதித்துறையின் சுயாதீனத்தினைச் சீரழித்து சுயாதீன ஆணைக்குழுக்களைப் பலவீனப்படுத்தும் என்பதை விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.ஆனால் எதிர்காலச் சந்ததிக்கு விலங்கிடும் கட்டற்ற ஊழல் நிறைந்த யுகத்திற்கு 20ஆவது திருத்தம் கட்டியம் கூறும் என்பதை வெகுமக்கள், குறிப்பாக நடப்பு அரசாங்கத்தினை ஆட்சிக்கட்டிலேற்றியவர்கள் அறிந்துகொள்வது இன்றியமையாததாகும். பொருளாதார அபிவிருத்திக்கு 19ஆவது திருத்தத்தினை அகற்றுவது அவசியமானது என ஜனாதிபதியும் பிரதமரும் எம்மிடம் வற்புறுத்திவருகின்றனர். ஆனால், பொருளாதார அபிவிருத்திக்கு நாம் விலையாகக் கொடுப்பதோ வெளிப்படைத்தன்மையும் மேற்பார்வையும் என்பது அவர்கள் எம்மிடம் சொல்ல மறுக்கும் கதையாகும். நாம் வாக்களித்துத் தேர்வுசெய்த தலைவர்களிடமிருந்து நாம் அதிகமதிகம் கோரமுடியும் மேலும் அவ்வாறு கட்டாயம் கோரவேண்டும்.

2015இல் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்புக்கான 19ஆவது திருத்தம், தகைமை பெற்ற கணக்காய்வாளர் ஒருவரைச் சுயாதீனமான கணக்காய்வாளர் தலைமையதிபதியாக நியமிக்குமாறு அரசியலமைப்புச் சபையினைத் தேவைப்படுத்துகின்றது. ஜனாதிபதி அவரின் முற்றுமுழுவதுமான தற்றுணிபின் பேரில் எந்தவொரு நபரினையும் இப்பதவிக்கு நியமிப்பதற்கு 20ஆவது திருத்தம் அவரை இயலுமாக்குகின்றது. இதனால், கணக்காய்வுச் சேவை ஆணைக்குழுவிற்கான அரசியலமைப்பு ரீதியான பாதுகாப்பு மறைந்துவிடும். மேலும், ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இனிமேலும் கணக்காய்வுகள் தேவைப்படாது.அதேவேளை, ஊழல் மற்றும் இலஞ்சம் பற்றிய விடயங்களைப் புலன்விசாரணை செய்வதற்காக ஆணைக்குழு அதன் சொந்த விசாரணைகளை முன்னெடுக்க 19ஆவது திருத்தம் ஆணைக்குழுவினை வலுப்படுத்திய அதேவேளை, உத்தேச 20ஆவது திருத்தமானது அரசியலமைப்பு ரீதியான பாதுகாப்பினை ஒரேயடியாகவே அகற்றுகின்றது. இதன் அர்த்தமாவது நாடாளுமன்றத்தின் எளிய பெரும்பான்மை வாக்கினைக் கொண்டு ஆணைக்குழுவினைக் கலைக்க முடியும் என்பதேயாகும்.இலஞ்ச ஆணைக்குழு தொடர்ந்திருந்தாலும், உத்தேச 20ஆவது திருத்தமானது ஆணைக்குழு அதன் சொந்த விசாரணைகளை முன்னெடுப்பதற்கான அதன் அதிகாரங்களை அகற்றிவிடும். இறுதியாக, உத்தேச 20ஆவது திருத்தமானது தேசிய பெறுகை ஆணைக்குழுவினையும் உடனடியாகக் கலைத்துவிடும்.


இந்த மாற்றங்களினால் யார் நன்மையடைகின்றனர்?


அரசாங்கச் செயற்பாடுகள் பற்றிய சுயாதீனமான கணக்காய்வுகளை நடத்துவதே கணக்காய்வாளர் தலையமைதிபதியின் வகிபாத்திரமாகும். 'அரசாங்கச் செலவீனங்களைப் பரிசோதிப்பதற்கு இந்தக் கணக்காய்வுகள் நாடாளுமன்றத்தினை அனுமதிப்பதுடன் நிலைபேறான அபிவிருத்தியினைப் பேணுவதற்காக சிறந்த நிதி முகாமைத்துவம் மற்றும் அரச வளங்களின் உச்சப் பாவனை ஆகியவற்றினையும் இக்கணக்காய்வுகள் உறுதிப்படுத்துகின்றன'. தேசிய கணக்காய்வு ஆணைக்குழு கலைக்கப்பட்டால் அதன் மேலதிக அதிகாரங்களும் கலைக்கப்பட்டுவிடும். அதாவதுஇ பொது நிதிகளைக் கையாடும் தனிநபர்களைத் தனிப்பட்ட ரீதியில் இனிமேலும் வகைப்பொறுப்புக் கூறவைக்க முடியாது என்பதே இதன் அர்த்தமாகும். பொது நிதிகளை அரசாங்கம் பயன்படுத்துவது தொடர்பான வெளிப்படைத்தன்மையினையும் வகைப்பொறுப்பினையும் குறைப்பதன் மூலம் சாதாரண இலங்கையர்கள் எவ்வாறு நன்மையடைகின்றனர்?

இதேபோன்றுஇ உத்தேச 20ஆவது திருத்தம், அரசாங்கத்தின் கொள்வனவுகளுக்காக நியாயமானதும் ஒப்புரவானதும் வெளிப்படைத்தன்மை மிக்கதும் போட்டித்தன்மை மிக்கதும் செலவுச் சிக்கனம் மிக்கதுமான செயல்விதிகளையும் வழிகாட்டல்களையும் உருவாக்குவதற்கும் நேர்மைஇ வெளிப்படைத்தன்மை மற்றும் வகைப்பொறுப்பினை உறுதிப்படுத்துவதற்கும் சேவையாற்றும் தேசிய கொள்முதல் சேவை ஆணைக்குழுவினைக் கலைத்துவிடும்.ஜ8ஸ பெரிய வரவு-செலவுத்திட்ட அரசாங்க கொள்முதலில் குறைந்த அளவான வெளிப்படைத்தன்மை எவ்வாறு சாதாரண மக்களுக்கு நன்மையான விடயமாக இருக்க முடியும்?


சுருக்கமான பதில்? இல்லை.


19ஆவது திருத்தத்தில் உள்ளடங்கியுள்ள மேம்படுத்தப்பட்ட ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் நம் அனைவருக்கும் நன்மை பயக்கின்றன. மஹிந்த ராஜபக்‌ஷ ஜனாதிபதியாக இருந்தபோது ஹம்பாந்தோட்டையில் துறைமுகக் கருத்திட்டத்தினை ஆரம்பித்துவைத்தார். அதற்கு சீனாவிடமிருந்து கடனாகப் பெற்ற 1.1 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியிடப்பட்டது. கருத்திட்டம் சீன ஒப்பந்தக்காரர்களினாலேயே நிறைவேற்றப்பட்டதுடன் கருத்திட்டப் பணிகளில் உள்நாட்டுத் தொழிலாளர்கள் பணியாற்றவில்லை. 2010 இல் துறைமுகப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து துறைமுகம் நட்டத்திலேயே இயங்கிவந்தது. 2015 இல் மஹிந்த மூன்றாவது தடவையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டபோது அவரது பிரச்சாரத்திற்கு சீனத் துறைமுக நிதியத்தில் இருந்து நிதி பெறப்பட்டது என்பதாக அப்போது ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. பில்லியன் டொலர் கடனிற்கு இலங்கையினால் வட்டியினைக் கூட மீளச் செலுத்த முடியாத நிலை காணப்பட்டபோதுஇ அப்போதைய சிறிசேன அரசாங்கம் கடன் தவணை தவற நிர்ப்பந்திக்கப்பட்டு துறைமுகத்தினதும் அதனைச் சுற்றியுள்ள 15,000 ஏக்கர் காணியினதும் கட்டுப்பாட்டினைச் சீனாவுக்கு 99 வருடங்களுக்கு வழங்கியது. தற்போது ஹம்பாந்தோட்டையில் சீனக் கைத்தொழில் பேட்டைக்கு இடம் வழங்குவதற்காக உள்ளூர் விவசாயிகளை அவர்களின் காணிகளை விற்குமாறு சீனத் துறைமுக அதிகாரிகள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். உள்ளூர்க் குடியிருப்பாளர்கள் தங்களின் பரம்பரைக்கு உரித்தான சொத்தினை விற்காதிருப்பதற்காகப் போராடிவருகின்றனர். ஆனால், சுயாதீனமான கணக்காய்வுகள் மற்றும் வலுவான இலஞ்ச ஆணைக்குழு இல்லாமல் ஹம்பாந்தோட்டை அனர்த்தம் போன்றவை மீண்டும் நிகழவே வாய்ப்புள்ளது.

ஹம்பாந்தோட்டை துறைமுக விடயம் போன்ற பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ மிதக்கும் ஆயுதக் களஞ்சியத்தினை உருவாக்குவதற்காக அவன்ட் கார்ட் எனும் தனியார் பாதுகாப்பு நிறுவனத்திற்கு அரசுக்குச் சொந்தமான 75 மில்லியன் டொலர் ஆயுதங்களை மாற்றினார் என்று 2016ஆம் ஆண்டில் குற்றஞ்சாட்டப்பட்டார்.மேலும் தனது பெற்றோருக்காக ஞாபகார்த்த அருங்காட்சியகத்தினை நிர்மானிப்பதற்காக 33.9 மில்லியன் ரூபாவினைக் கையாடினார் என்று வேறு ஒரு குற்றச்சாட்டும் அவர் மீது சுமத்தப்பட்டது.இந்த வழக்குகளை முன்னெடுத்துச் செல்வதை ஜனாதிபதி சட்டக் காப்புத் தடுக்கின்ற அதேவேளைஇ அரச நிதிகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கு சுயாதீனமான கணக்காய்வும் சுயாதீனமான பெறுகைச் செயற்பாடுகளும் அவசியமாகின்றன.

பாரிய அபிவிருத்திக் கருத்திட்டங்களை ஆரம்பிக்கும் பணியில் அரசாங்கம் தற்போது இறங்கியுள்ளது. இதனால் அதிகமான அரசாங்க நிறுவனங்கள் ராஜபக்‌ஷ குடும்ப உறுப்பினர்களின் கீழும் இராணுவ உத்தியோகத்தர்களின் கீழும் கொண்டுவரப்படுகின்றன. சுயாதீனமான கணக்காய்வுகளும் கொள்முதல் ஆணைக்குழுவும் இல்லாத சூழ்நிலையில் உறவினர்களுக்கும் அடிவருடிகளுக்கும் வாய்ப்பு வசதிகள் வழங்குவதும் ஊழலும் கட்டின்றிப் பெருகும் என்றால் அது மிகையாகாது. கணக்காய்வு ஆணைக்குழுவினைக் கலைத்து ஜனாதிபதியின் அலுவலகத்தினையும் பிரதமரின் அலுவலகத்தினையும் கணக்காய்வினில் இருந்து விதிவிலக்குப் பெறவைத்த காரணத்தினால் அரச நிதிகள் பகற்கொள்ளையடிக்கப்படுவதற்கு 20ஆவது திருத்தம் அனுமதி வழங்குகின்றது. உயர் பதவி வகிக்கும் இந்த அதிகாரிகள் வழக்கு விசாரணைக்குள்ளாவதில் இருந்தும் சட்டக் காப்பினைக் கொண்டுள்ள காரணத்தினால் ஊழலுக்கு எதிராக யாரும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க முடியாத நிலையே காணப்படுகின்றது.

எனவே, இவற்றால் எல்லாம் யார் நன்மை பெறப்போகின்றனர்? ராஜபக்‌ஷாக்கள்தான் என்பது தெட்டத்தெளிவானதாகும். அவ்வாறாயின் அதில் எமக்கு என்னதான் கிடைக்கப்போகின்றது? அதீத சுமை கொண்ட பெருங் கடன் உதவியுடன் பாரிய பணச் செலவில் அமையப்போகும் அபிவிருத்திக் கருத்திட்டத்திற்காக அனைத்து இயற்கை வளங்களையும் பயன்படுத்துவது என்றோ அல்லது தனியார் சொத்துக்களைக் கையகப்படுத்துவது என்றோ நாளை ஜனாதிபதி தீர்மானித்தால் அவரை யாரால் தடுத்து நிறுத்த முடியும்? அரசாங்க உத்தியோகத்தர்கள் எமது நம்பிக்கைப் பொறுப்புக்களைக் கபளீகரம் செய்யும்போது எமக்கு என்ன மேற்பார்வை இருக்கப்போகின்றது, எமக்கு என்ன மாற்றீடுதான் இருக்கப் போகின்றது? ஆனால் இபொருளாதார அபிவிருத்தியினை மேம்படுத்துவதற்கு மேற்குறிப்பிடப்பட்ட அனைத்து மறுசீரமைப்புக்களுடனும் 20ஆவது திருத்தம் இன்றியமையாதது என்று ராஜபக்‌ஷ உடன்பிறப்புக்கள் எம் காதில் ஓதி வருகின்றனர். ஆனால்இ உலக வங்கியோ இதற்கு எதிரான கருத்தையினையே . 'ஊழல் அபிவிருத்திக்கு முட்டுக்கட்டை போட்டு வளர்ச்சியிலும் தொழில்களிலும் அதன் விளைவாகத் தாக்கங்களை ஏற்படுத்துகின்றது. ஊழலை எதிர்க்கும் ஆற்றல் உள்ள நாடுகள் தங்களின் மனித வளங்களையும் நிதி வளங்களையும் மிகவும் வினைத்திறனுடன் பயன்படுத்தி வருவதுடன் அதிக முதலீடுகளைக் கவர்ந்து மிகத் துரிதமாக வளர்ச்சியடைந்து வருகின்றன.

உத்தேச மறுசீரமைப்புக்கள் எமக்கு நன்மையாக அமையுமா அல்லது தீமையாக அமையுமா என்பதைத் திறனாய்வுடன் சிந்திக்கவேண்டியது பிரஜைகள் என்ற ரீதியில் எம் கடமையாகும். மேற்பார்வையினைக் குறைத்தமை ராஜபக்‌ஷாக்களுக்கு நிச்சயம் நன்மைதான் என்றபோதிலும் இது அவர்களைப் பற்றியதே அல்ல. எந்த ஓர் அரசாங்கத்தினதும் மையமாக இருப்பது பொது நம்பிக்கைப் பொறுப்பு ஆகும். நாம் அரும்பாடுபட்டு தேடிச் சேர்த்த செல்வத்தினையும் எம் உரிமைகளையும் அரசாங்கத்தின் கரங்களில் நம்பி ஒப்படைத்துவிட்டு அதற்கு பதிலாக அரசாங்கத்திடமிருந்து கேட்பதெல்லாம்இ எம் கூட்டு நலனிற்காகச் செயற்படுகின்றதா என்பது மட்டுமே. இந்த நம்பிக்கைக்கு அவசியமானது அரசாங்கம் சரியான தடத்திலேயே தொடர்ந்தும் செல்கின்றதா என்பதை அறிந்துகொள்வதற்காக சுயாதீனக் கணக்காய்வாளர்களிடம் இருந்தும் சுயாதீன ஆணைக்குழுக்களிடம் இருந்தும் பிரஜைகள் என்கின்ற ரீதியில் நாம் முன்னேற்ற அறிக்கைகளைப் பெற்றுக்கொள்வது எமது ஆற்றலாகும். சுயாதீன கணக்காய்வாளர் தலைமையதிபதிஇ கொள்முதல் ஆணைக்குழு மற்றும் அரசியலமைப்பு ரீதியாகப் பாதுகாக்கப்படும் ஆணைக்குழுக்கள் கணக்காய்வுகளை மேற்கொண்டு ஊழலை ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பது அரசாங்கம் எமக்காகப் பணியாற்றுகின்றதேயன்றி எம்மை அரசாங்கம் விலையாகக் கொடுக்கவில்லை என்பதை உறுதிப்படுத்த அவசியமானவையாகும். கணக்காய்வு, பெறுகை மற்றும் ஊழலுக்கெதிரான செயற்பாடுகளை 20ஆவது திருத்தம் பலவீனமாக்காமல் அவற்றினை வலுப்படுத்தி அவற்றின் சுயாதீனத்தினை எவ்விதமான அரசியல் தலையீட்டிலும் இருந்து பாதுகாக்கவேண்டும் என்பதை இலங்கையர்களாகிய நாம் கோரவேண்டும்.



நன்றி

இந்தக்கட்டுரையை எழுதியவர் ஷரீன் ஷரூர்

கட்டுரை மூலம்- கொழும்பு டெலிகிராப்

தமிழாக்கம் - மாற்றம் 

சுற்றாடல் அழிப்பு பற்றிய செய்திகள் போலிச் செய்திகளா?

 



சுற்றாடல் அழிப்பு தொடர்பான பல பதிவுகள் அண்மைக்காலமாக வெளிவரும் நிலையில் தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் முன்னொருபோதும் இடம்பெறாத வகையில் சுற்றாடல் அழிக்கப்படுவதாக பொய் வதந்திகள், கட்டுக் கதைகளை சமூகமயப்படுத்தும் நடவடிக்கை கண்டறியப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.



காடுகளை தீயிட்டு அழிப்பதாகவும் இயற்கையாக காடுகளில் உள்ள மரங்களை வெட்டுவதாகவும் இந்த பொய்யான செய்திகளினால் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் எக்காலத்திலும் இவ்வாறான சுற்றாடல் அழிவுகள் நடைபெறவில்லை எனவும் அரசாங்கம் அவ்வாறன சட்டவிரோத செயல்களில் கண்டும் மௌனம் காப்பதாகவும் குறிப்பிட்டு செய்திகளை பரப்ப முயற்சிக்கப்படுவதாக ஊடகப்பிரிவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றாடல் அழிவுகள் தொடர்பாக கூறப்படுகின்ற பொய்யான செய்திகள் விசேடமாக சமூக ஊடகங்களில் மற்றும் ஒரு சில அச்சு ஊடகம், தொலைக்காட்சி மற்றும் வானொலிகளிலும் பிரசாரம் செய்யப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறாக வெளியிடப்படுகின்ற செய்திகள் பொய்யானவை என்பது தகுந்த ஆதாரங்களுடன் உறுதிப்படுத்தப்படும்போது அவை சமூக ஊடகங்களிலிருந்து நீக்கப்படுவதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சியினர் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் பொய்யான செய்திகளை பரப்புவதாகவும் அவர்களின் கூட்டங்கள் ஊடக அறிக்கைகள் மற்றும் நேர்காணல்களின் போது பொய்யான செய்திகளுக்கு மிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மகாவலி அதிகார சபைக்கு உட்பட்ட 'H' வலயத்தின் அனுராதபுரம் – இஹலதலாவ குளத்தை புனர்நிர்மாணம் செய்யும்போது பாரிய காடழிப்பு இடம்பெறுவதாக குற்றஞ்சுமத்தி கடந்த செப்டெம்பர் 15ஆம் திகதி ஔிபரப்பு செய்யப்பட்ட செய்தி உண்மைக்கு புறம்பானது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Monday, September 28, 2020

பாடும் நிலாவிற்கு பாரத ரத்னா ? தகுதிகள் என்ன?

 




பாடும் நிலா என ரசிகர்களால் பேரன்போடு அழைக்கப்படும் மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்று ஆந்திர பிரதேச முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி வலியுறுத்தியுள்ளார்.


இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோதிக்கு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி திங்கட்கிழமை அனுப்பியுள்ள கடிதத்தில், 'எஸ்.பி. பாசுப்ரமணியம் எங்களுடைய மாவட்டமான நெல்லூரில் பிறந்ததில் எங்களுடைய மாநிலம் அதிர்ஷ்டம் அடைகிறது. அவரது அகால மரணம், உலகளாவிய அவரது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியிருக்கிறது. 50 ஆண்டுகளுக்கும் மேலான திரை இசை பாரம்பரியத்தில் எஸ்.பி.பி ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திச் சென்றிருக்கிறார்' என்று கூறியுள்ளார்.



தனது தாய்மொழியான தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம்,ஹிந்தி உட்பட பல மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை எஸ்.பி.பி பாடியிருக்கிறார். சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய திரைப்பட விருதுகளை ஆறு முறை அவர் பெற்றிருக்கிறார். ஆந்திர பிரதேசத்தின் மாநில நந்தி விருதுகளை ஆறு முறையும், தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிங்களில் எண்ணற்ற விருதுகளையும் அவர் அம்மாநில அரசுகளிடம் இருந்து பெற்றிருக்கிறார். இது தவிர ஃபிலிம்ஃபேர் விருது, தென் மாநிலத்தின் சிறந்த பாடகருக்கான ஃபிலிம்ஃபேர் விருது ஆகியவற்றை பெற்றுள்ள எஸ்.பி.பி, 2016இல் சிறந்த திரைப்பிரபலங்களுக்கு வழங்கப்படும் வெள்ளி மயில் பதக்கத்தையும் பெற்றிருக்கிறார். 2001ஆம் ஆண்டில் அவர் பத்ம ஸ்ரீ விருதும், 2011ஆம் ஆண்டில் பத்ம பூஷண் விருதும் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளன என்று தனது கடிதத்தில் ஜெகன் மோகன் ரெட்டி கூறியுள்ளார்.















இந்திய இசை உலகில் இதற்கு முன்பு லதா மங்கேஷ்கர், புபேன் ஹசாரிகா, எம்.எஸ். சுப்புலட்சுமி, பிஸ்மில்லா கான், பீம்சென் ஜோஷி ஆகியோருக்கு ஏற்கெனவே பாரத ரத்னா விருதை இந்திய அரசு வழங்கியுருப்பதை சுட்டிக்காட்டிய அவர்இ இசை மற்றும் கலை உலகில் எஸ்.பி.பி ஆற்றிய தன்னிகரற்ற பங்களிப்பை கெளரவிக்கும் வகையில் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்றும் ஐந்து தசாப்தத்துக்கும் மேலாக அவர் வழங்கிய பங்களிப்பை அங்கீகரித்து நமது நினைவில் அவர் என்னும் நிலைத்திருக்க இந்த உயரிய அங்கீகாரம் அவருக்கு வழங்கப்பட வேண்டும் என்று ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

யாருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும்?

இந்தியாவில் சிறந்த குடிமக்களுக்கு அரசு அங்கீகாரம் தரும் வகையில், மூன்று பிரிவுகளில் பத்மஸ்ரீஇ பத்ம பூஷண், பத்ம விபூஷண் ஆகிய பத்ம விருதுகள் வழங்கி கெளரவிக்கப்படுகிறது.


இது மட்டுமின்றிஇ இனம், தொழில், பதவி, பாலினம் உள்ளிட்ட வேற்றுமையை பார்க்காமல், சமூகத்துக்கு வழங்கி வரும் சிறப்பான சேவையை வழங்குவோருக்கு பாரத ரத்னா என்ற உயரிய விருது வழங்கப்படுகிறது.


1954இல் இதற்கான விதிகள் முதல் முறையாக வகுக்கப்பட்டபோது, கலை, இலக்கியம், அறிவியல், பொது சேவைகள் ஆகியவற்றில் இருப்பவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டது.


மேலும் இந்த விருதுக்கு தகுதி வாய்ந்தவர் கிடைக்காவிட்டால் அதை ஒவ்வொரு ஆண்டும் வழங்குவது கட்டாயமில்லை என்றும் அதே விதி கூறியது. மேலும் ஒரே ஆண்டில் அதிகபட்சமாக மூன்று பேருக்கு பாரத ரத்னா விருது வழங்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.


அதன்படி முதலாவது பாரத ரத்னா விருது 1954ஆம் ஆண்டில் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி, சர்வேபள்ளி ராதாகிருஷ்ணன், இந்திய விஞ்ஞானி சி.வி. ராமன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழக்கப்பட்டது.

1997இல் இந்த விருது இந்திய குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் வழங்கப்பட்டது. பாரத ரத்னா விருதை இந்திய குடிமக்களுக்குத்தான் வழங்க வேண்டும் என்று பிரத்யேக விதிமுறை ஏதுமில்லை. இதனால் வேறு நாட்டில் பிறந்து, இந்திய குடியுரிமையை பெற்ற சிலருக்கும் இந்த விருது வழங்கப்பட்டிருப்பதை வரலாறு பதிவு செய்திருக்கிறது.

தனது கருணையால் உலகம் முழுவதும் அங்கீகாரம் பெற்ற அன்னை தெரசா (பூர்விக பெயர் ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ) அதில் ஒருவர்.


இவர் தவிர, பாஷ்தூனிய இயக்கத்தை வழிநடத்திய இந்தியர் அல்லாத அப்துல் கஃபார் கான், தென்னாப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராக போராடி அந்நாட்டின் முதலாவது குடியரசு தலைவராக இருந்த நெல்சன் மண்டேலா ஆகியோருக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டிருக்கிறது.


2009இல் இந்திய குரலிசைப் பாடகரும் கர்நாடகாவைச் சேர்ந்தவருமான பீம்சென் ஜோஷி, இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர், சர்வதேச புகழ் பெற்ற வேதியியல் சி.என். ராவ் என்றழைக்கப்படுஞம் விஞ்ஞானி சிந்தாமணி நாகேச ராமச்சந்திர ராவ், இந்திய கல்வியாளர் மதன் மோகன் மாளவியா, மறைந்த இந்திய முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பேயி, மறைந்த இந்திய குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆகியோருக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது.

2019இல் சமூக சீர்திருத்தவாதியும் அரசியல் தலைவராகவும் திகழ்ந்த மகாராஷ்டிராவைச் சேர்ந்த நானாஜி தேஷ்முக், கல்வி, சுகாதாரம், கிராமப்புற தற்சார்பு ஆகியவற்றுக்கு வழங்கிய பங்களிப்புக்காக பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இதுவரை மொத்தம் 48 பேருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது.


அடிப்படையில் பாரத ரத்னா விருது, இலை வடிவில் காணப்படும். இதன் முன்பக்கம், ஹிந்தி மொழியில் பாரத ரத்னா என்ற எழுத்து பொறிக்கப்பட்டிருக்கும். பின்புறம், அசோக சின்னம் இடம்பெற்றிருக்கும். விதிகளின்படி இந்த விருதை வெள்ளை நிற ரிப்பனில் அணிய வேண்டும்.

இந்த விருதுடன் இந்திய குடியரசு தலைவர் கையொப்பமிட்ட ஒரு சான்றிதழ், வழங்கப்படும். இந்த விருதுடன் எந்தவொரு நிதி மானியம் வழங்கப்படாது.

அதேபோல, இந்திய அரசியலமைப்பின் விதியின் 18(1)-இல், பாரத ரத்னா விருது பெறுவோர் தனது அடைமொழியாக இந்த விருதை பெயருக்கு முன்னாள் போட்டுக் கொள்ளக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது. அதே சமயம், விருது பெற்றவர் விரும்பினால், தனது லெட்டர்பேட், விசிட்டிங் கார்டு, தற்குறிப்பு ஆகியவற்றில் அவசியம் என கருதினால், 'குடியரசு தலைவரால் பாரத ரத்னா விருது பெற்றவர்' அல்லது 'பாரத ரத்னா விருது பெற்றவர்' என்ற வார்த்தைகளை அவர் போட்டுக் கொள்ளலாம் என்று அந்த விதிகள் கூறுகின்றன.


மூலம்  -பிபிசி செய்திச் சேவை



முன்னெப்போதுமில்லா வகையில் 20வது திருத்தத்திற்கு எதிராக 39 மனுக்கள் தாக்கல்



உத்தேச 20வது திருத்தத்திற்கு எதிராக மொத்தமாக 39 மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இலங்கையின் வரலாற்றில் அரசியல்யாப்புத் திருத்தமொன்றிற்கு எதிராக  அதிகூடிய எண்ணிக்கையிலான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டமை இம்முறையே இடம்பெற்றுள்ளது. 

இன்று (திங்கட்கிழமை) 20 ஆவது திருத்த வரைபினை எதிர்த்து மேலும் 19 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இன்று நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்க உட்பட மேலும் இரண்டு மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

நாடாளுமன்றில் தாக்கல் செய்யப்பட்ட 20 ஆவது திருத்த வரைபினை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றில் இதுவரை 39 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்கள் மீதான பரிசீலனை செப்டெம்பர் 29 ஆம் திகதி உயர் நீதிமன்ற நீதியரசர்கள் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இதற்காக பிரதம நீதியரசரினால் ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர்களான புவனேக அலுவிஹாரே, சிசிர டி ஆப்ரூ, பிரியந்த ஜயவர்தன மற்றும் விஜித் மலல்கொட ஆகியோர் இந்த குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

20 ஆவது அரசியலமைப்பு திருத்த வரைபு எதிர்க்கட்சியின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் கடந்த 22 ஆம் திகதி நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியினால் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் ஒரு வார காலத்தினுள் இதற்கு எதிராக யாரேனும் உயர் நீதிமன்றத்தை நாடினால் 21 நாட்களுக்கு 20வது திருத்தம் தொடர்பாக எந்த முன்னெடுப்பையும் நாடாளுமன்றத்துக்குள் முன்னெடுக்க முடியாது.

நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பான சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி நாளை வரை உயர் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்ய முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அங்கிலிக்கன் திருச்சபையின் புதிய கொழும்பு பேராயர் நியமனம் !

 



அங்கிலிக்கன் திருச்சபையின் கொழும்பு பேராயராக அருட்தந்தை டுசாந்த ரொட்றிகோ நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்தின் கன்டபெரி அதிமேற்றாணியார் ஜஸ்ரின் வெல்பி இன்றைய தினம் இதனை அறிவித்தார்.

புதிய ஆயரைத் தேர்ந்தெடுக்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில் கடந்த மாதத்தில் கொழும்பிலுள்ள அங்கிலிக்கன் திருச்சபையின் பேரவை அதன் யாப்பிற்கு அமைய புதிய ஆயரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை  இங்கிலாந்திலுள்ள  கன்டபெரி பேராயரிடத்தில் ஒப்படைத்திருந்தது. 

இலங்கை அங்கிலிக்கன் திருச்சபையின் போசகர் என்றவகையிலே கன்டபெரி பேராயர் ஜஸ்ரின் வெல்பி இந்த  தெரிவை மேற்கொண்டுள்ளார்.


Saturday, September 26, 2020

கர்நாடக சங்கீதம் முறைப்படிகற்றிராத எஸ்.பி.பி இசையுலகை யால் கட்டியாளமுடிந்தது எவ்வாறு?

 

கர்நாடக இசையை முறைப்படி கற்காமல் சங்கராபரணத்தில் கர்நாடக இசையில் அமைந்த பாடல்களை கேள்வி ஞானத்தால் பாடி தேசிய விருதையும் தட்டிச் சென்ற பெருமைக்குரியவர் எஸ்பி பாலசுப்பிரமணியம். ஆயிரம் நிலவே வா.. ஓராயிரம் நிலவே வா என தேன் போன்ற குரலால் கோடிக்கணக்கான ரசிகர்களை தன் வசம் கட்டி போட்டு வைத்துள்ளவர் எஸ்பிபி எனப்படும் எஸ் பி பாலசுப்பிரமணியம்! ஆந்திர மாநிலம் நல்லூர் மாவட்டத்தில் 1946-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 4-ஆம் தேதி பிறந்தவர் ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்பிரமணியம். இவர் 1966ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படம் ஒன்றில் முதல்முறையாக பாடத் தொடங்கினார். 


ஆந்திர மாநிலம் நல்லூர் மாவட்டத்தில் 1946-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 4-ஆம் திகதி பிறந்தவர் ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்பிரமணியம். இவர் 1966ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படம் ஒன்றில் முதல்முறையாக பாடத் தொடங்கினார்.

உலக அளவில் அன்று பாட ஆரம்பித்தவர் கடந்த ஆண்டு வெளியான தர்பார் வரை பாடிவிட்டார். பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடி உலக அளவில் அதிக எண்ணிக்கையிலான பாடல்களைப் பாடியதற்கான கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். பாடகர் மட்டுமல்லாமல் இசையமைப்பாளர், தயாரிப்பாளர், நடிகர் பின்னணிக் குரல் தருபவர் என பன்முகத் திறமை கொண்டவர்.

இவருக்கு 2001-ஆம் ஆண்டு பத்மபூஷண் விருது வழங்கப்பட்டது. இவருக்கு 2016-ஆம் ஆண்டு 47 ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய திரைப்பட பிரமுகர் விருது வழங்கப்பட்டது. இசையமைப்பாளர் எம் எஸ் விஸ்வநாதன் முதல் இன்றைய அனிருத் வரை பெரும்பாலான இசையமைப்பாளர்களுடன் சேர்ந்து பணியாற்றியுள்ளார்.

50 ஆண்டுகளாக தொடர்ந்து பின்னணி பாடி வரும் இவர் தமிழில் முதலில் பாடியது ஹோட்டல் ரம்பா திரைப்படத்தில் எம்எஸ்வி இசையில் எல் ஆர் ஈஸ்வரியுடன் இணைந்து 'அத்தானோடு இப்படியிருந்து எத்தனை நாளாச்சு' என்ற பாடலைப் பாடினார். எதிர்பாராத நிலையில் ஹோட்டல் ரம்பா திரைப்படம் வெளியாகவில்லை.

சாந்தி நிலையம் அடுத்தது சாந்தி நிலையம் படத்தில் 'இயற்கையெனும் இளையகன்னி' பாடலை பாடினார். ஆனால் இந்த பாடல் வெளிவரும் முன்பே எம்ஜிஆர் நடித்த அடிமைப் பெண் திரைப்படத்தில் பாடிய ஆயிரம் நிலவே வா பாடல் வெளியானது. இதுவரை 40 ஆயிரம் பாடல்களை பாடியுள்ளார். 6 முறை சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருதுகளை பெற்றுள்ளார்..

இவர் 1981-ஆம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றிருக்கிறார். 1980 களில் ஒரே நாளில் 21 கன்னட பாடல்களை பாடியுள்ளார்.தமிழ் மொழியில் ஒரே நாளில் 19 பாடல்களையும் இந்தியில் 6 மணி நேரத்தில் 16 பாடல்களையும் பாடி சாதனை செய்தார். இவரது தந்தை எஸ் பி சம்பமூர்த்தி ஹரிஹத கலைஞராவார். எஸ்பிபிக்கு எஸ்பி சைலஜா, கிரிஜா உள்பட 5 சகோதரிகள், இரு சகோதரிகள் உள்ளனர். சைலஜாவும் 5000க்கும் மேற்பட்ட பாடல்களை தென்னிந்திய மொழிகளில் பாடியுள்ளார்.


இந்தி திரையுலகில் எஸ்பிபி-யின் பயணம் பற்றி அதிகம் தெரியாத தகவல்கள்

 


கோடானுகோடிப்பேரை சோகத்தில் ஆழ்த்திவிட்டுள்ள மறைந்த பிரபல பாடகர் எஸ்;.பி. பாலசுப்பிரமணியம் அவர்கள் தமிழ் உட்பட தென்னிந்திய மொழிகளில் பாடிய பாடல்களையே அதிகமாக கேள்ளியுற்றுள்ளோம். ஆனால் பொலிவுட் என்ற இந்தித்திரையுலகிலும் அவர் தனது முத்திரையை பதிக்கத்தவறவில்லை

1981 ல் கமல்ஹாசன் நடித்த ஏக் துஜே கேலியே படம் மூலம் பொலிவுட் உலகில் நுழைந்த எஸ். பி. பாலசுப்ரமணியம், பின் அங்கும் தவிர்க்க முடியாத பாடகராகிவிட்டார். தெலுங்கில் இருந்து ரீமேக் செய்யப்பட்ட படமான இதில் எஸ்பிபி-யை பாட வைப்பதில் ஆரம்பத்தில், இதன் இசையமைப்பாளர்கள் தயங்கினார்கள். ஆனால் டைரக்டர் பாலசந்தர் உறுதியோடு இருந்ததால்  எஸ்பிபி-யின் அறிமுகம் சாத்தியமானது.

அப்படி ஒலிப்பதிவு செய்யப்பட்ட இந்த பாடல் பயங்கர ஹிட்டானது மட்டுமல்லாமல், அவருக்கு இரண்டாவது தேசிய விருதையும்வாங்கி கொடுத்தது.

அதை தொடர்ந்த வருடங்களில், அவர் பொலிவுட்டில் பாடிய பல பாடல்கள் காலத்தால் அழியாதவையாக ரசிகர்கள் மனதில் நின்றது. லதா மங்கேஸ்கருடன் அவர் பாடிய டூயட் பாடல்கள் எல்லாமே சூப்பர் ஹிட் தான். இஸ்கா நாம் ஹை ஜீவன் தாரா, ஓ மரி தில்ருபா, பாஹோன் மேன் பார்கே பாடல்கள் இன்றளவும் ரசிகர்களால் விரும்பப்படுகிறது.

நவ்ஷாத் கல்யான்-ஆனந்த், ஆர். டி. பர்மன் என எல்லா இசை ஜாம்பவான்களுடனும் இணைந்து பணியாற்றிய எஸ்பிபி , ராஜேஷ் கண்ணா, தர்மேந்திரா, ஏன்??!! சல்மான், ஷாரூக் என கிட்டத்தட்ட எல்லா டாப் ஹீரோக்கள் உடனும் பணியாற்றியுள்ளார்.


ஒரு காலகட்டத்தில் சல்மான் கானின் ஆஸ்தான பாடகராக எஸ்பிபி இருந்தார் என கூறினால் மறுப்பதற்கில்லை. 1980-90 க்கு இடைப்பட்ட காலத்தில் ரொமான்ஸ் ஹீரோவாக திகழ்ந்த சல்மான் நடித்த பல பாடல்கள் சூப்பர் ஹிட்டானதற்கு காரணம் அருமையான இசையமைப்பும் காதல் சொட்ட சொட்ட எஸ்பிபி பாடியதும் தான் என்றால் மிகையாகாது.

பின் கொஞ்சம் நாள்கள் இடைவெளி எடுத்த எஸ் பி பி, 2013 ல் ஷாரூக்கான் நடிப்பில் வெளிவந்த சென்னை எக்ஸ்பிரஸ் படத்தின் டைட்டில் பாடல் மூலம் மறுபடியும் பாலிவுட்டில் தனது முத்திரையை பதித்தார். இந்த பாடலும் சூப்பர் ஹிட் தான்.

இத்தனை சாதனைகள் புரிந்த எஸ்பிபி இப்போது நம்முடன் இல்லை என்பதை நம்ப முடியவில்லை. அவரின் பாடல்களும் சரி, அவரும் சரி மறக்கப்படாமல் ரசிகர்கள் மனதில் என்றும் அழியாமல் நிற்பார்கள்.

நன்றி:தமிழ் சமயம்


Friday, September 25, 2020

மிலிந்த மொரகொட, பாலித கோகண உட்பட எட்டு புதிய தூதுவர்களின் நியமனம் உறுதி!




 இந்தியாவிற்கான புதியதூதுவராக மிலிந்த மொரகொட, சீனாவிற்கான புதிய தூதுவராக கலாநிதி பாலித கோகண உட்பட எட்டு புதிய தூதுவர்களின் நியமனங்களை உயர் பதவிகளுக்கான பாராளுமன்றக்குழு இன்றைய தினம் உறுதிப்படுத்தியுள்ளது. 

இதன் படி  பின்வரும் நியமனங்கள் உறுதிசெய்யப்பட்டுள்ளன.


1.சீ.ஏ. சந்திரப்பிரேம - ஜெனிவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான நிரந்தர வதிவிடப்பிரதிநிதி

2. மிலிந்த மொரகொட- இந்தியாவிற்கான இலங்கைத் தூதுவர் 

3.ரவிநாத ஆரிய சிங்க - அமெரிக்காவிற்கான இலங்கைத்தூதுவர்

4. எஸ்.அமரசேகர- தென் ஆபிரிக்காவிற்கான இலங்கைத்தூதுவர்

5. ரியல் அட்மிரல் - ஹரிஸ்சந்திர சில்வா- ஆப்கானிஸ்தானிற்கான இலங்கைத்தூதுவர்.

6. விஸ்ராமல் எஸ்.குணசேகர - ஜப்பானிற்கான இலங்கைத்தூதுவர்

7. பேராசிரியர் ஷனிகா ஹிரிபுரேகம- பிரான்ஸிற்கான இலங்கைத்தூதுவர்

8. கலாநிதி பாலித் கோகண- சீனாவிற்கான இலங்கைத்தூதுவர்


இவர்களது பெயர்கள் உயர்பதவிகளுக்கான பாராளுமன்ற குழுவின் அங்கீகாரத்திற்காக அனுப்பிவைக்கப்பட்டபின்னரே நியுயோர்க்கிலுள்ள ஐக்கியநாடுகள் தலைமையகத்திற்கான நிரந்திர வதிவிடப்பிரதிநிதியாக முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸின் பெயர் முன்மொழியப்பட்டது. அந்தவகையில் இன்னமும் அவரது நியமனம் உறுதிப்படுத்தப்படவில்லை. 

கொழும்பு துறைமுகத்திற்கு விஜயம் செய்த ஜப்பானிய கப்பல்கள்




 இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் வலுத்துவரும் நிலையில் இந்தோ-பசுபிக்  சமுத்திர பிராந்தியமானது எப்போதும் சுதந்திரமானதாக அனைவரும் பயன்படுத்தத்தக்கதாக இருக்க வேண்டும் என வலியுறுத்திவரும்  ஜப்பான் கடற்படையின் பாரிய கப்பல்களில் ஒன்றான ககா (“KAGA (DDH-184)”)
 
மற்றும் இகாசுச்சி (“IKAZUCHI (DD-107)”)ஆகியன கொழும்பு துறைமுகத்துக்கு நட்பு விஜயமொன்றை செப்டெம்பர் 23 மற்றும் 24ஆம் திகதிகளில் மேற்கொண்டிருந்தன. 



நீண்ட காலமாக நட்புறவைப் பேணும் இலங்கை மற்றும் ஜப்பான் ஆகியன, இந்தியப் பெருங்கடலில் இலங்கை கேந்திர ஸ்தானத்தில் அமைந்துள்ள நிலையில், அப்பிராந்தியத்தில் சமாதானம், உறுதித்தன்மை மற்றும் சுபீட்சத்தை ஊக்குவிப்பதற்கு நெருக்கமாக செயலாற்றி வருகின்றன. 

இந்த கப்பல்களின் நட்பு விஜயத்தினூடாக, இலங்கை கடற்படை மற்றும் ஜப்பானிய கடற்படை இடையே நீண்ட காலமாக பேணப்படும் நட்புறவு மேலும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பரஸ்பர தேசிய இணைந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் இரு படைகளும் கொண்டுள்ள பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் நம்பிக்கை ஆகியவற்றை உறுதி செய்யும் வகையிலும் அமைந்துள்ளது.

Wednesday, September 23, 2020

காலநிலை பேரழிவின் விளிம்பில் உலகம்-ஆய்வில் தகவல்

 



ஒக்ஸ்பாம் மற்றும் ஸ்டாக்ஹோம் சுற்றுச்சூழல் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில், பணக்கார நாடுகளால் அதிகரித்த கார்பன் உமிழ்வு உலகத்தை காலநிலை பேரழிவின் விளிம்பிற்கு கொண்டு சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.

கடந்த 25 ஆண்டுகளில் உலகின் பணக்கார நாடுகளால் வளிமண்டலத்தில் வெளியிடப்பட்ட கார்பன் உமிழ்வு 60மூ அதிகரித்துள்ளதாக இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றம் தீர்க்க முடியாத சிக்கலாக உருமாறி வருகிறது. நாளுக்குநாள் வளிமண்டலத்தில் வெளியிடப்படும் அதிகப்படியான கார்பன் வாயுவின் அளவு பூதாகரமாக உயர்ந்துள்ளது.

உலகில் கடந்த 1990 முதல் 2015 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வளிமண்டலத்தில் கார்பன் வாயுவின் அளவு 60ம% அதிகரித்துள்ளமை தற்போது தெரியவந்துள்ளது. உலக மொத்த மக்கள் தொகையில் பணக்காரர்களாக உள்ள 1 சதவிகிதத்தினரால் ஏழ்மையில் உள்ளவர்களைக் காட்டிலும் இரு மடங்கு அதிகமாக கார்பன் வெளியிடப்பட்டுள்ளது.

உலகளாவிய கார்பன் வெளியீட்டுத் திட்டம் மனிதகுலத்தை மேம்படுத்துவதற்கு பதிலாகஇ ஏற்கனவே உள்ள பணக்காரர்களின் நுகர்வை விரிவாக்கம் செய்துள்ளது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில்இ பசுமை இல்ல வாயு வெளியேற்றம் (Greenhouse Gas)தொடர்ந்தால் கிரீன்லாந்து மற்றும் அண்டார்டிகாவில் பனிக்கட்டிகள் உருகி 2100 ஆம் ஆண்டிற்குள் உலக கடல் மட்டம் 38 சென்டிமீட்டருக்கும் அதிகமான அளவு உயரும் என நாசா தலைமையிலான ஆய்வில் தெரிய வந்துள்ளது.

உலக வெப்பமயமாதலால்  (Global Warming) பனிக்கட்டிகளின் மேற்பரப்பு உருகும் என்பதால் அவை கடல் நீரில் கலந்து அதன் மட்டம் உயர பங்களிப்புச் செய்யும்.

அமெரிக்காவின் பல்லோ பல்கலைக்கழகத்தின் திட்ட தலைவர் நோவிக்கி பனிக்கட்டிகள் எவ்வளவு உருகும் என்பதை பொறுத்து தான் எதிர்காலத்தில் கடல் மட்டம் எவ்வளவு உயரும் என்பது தெரியவரும் என குறிப்பிட்டுள்ளார்.

Tuesday, September 22, 2020

உயர் மட்டத்தின் அலட்சியத்தால் பலியான உயிர்கள்; ஈஸ்டர் தாக்குதல் குறித்த சாட்சியங்கள் புலப்படுத்துவது என்ன?

 


கடந்தாண்டு ஈஸ்டர் தினத்தன்று இடம்பெற்ற தாக்குதில் 300 வரையான அப்பாவி உயிர்கள் ஆலயங்களில் பலியானமைக்கு அதிகாரத்தில் இருந்தவர்களின் அலட்சியமும் பொறுப்பற்ற செயற்பாடுமே முக்கியமான காரணம் என்பதை தாக்குதல் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்பாக அளிக்கப்படும் சாட்சியங்கள் மேலும் உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளன. 

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் கிடைத்த எச்சரிக்கைகள் பாரதூரமானவை என அப்போதைய அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர் நிலந்த ஜயவர்தன முக்கியமாக அறிவித்திருக்க வேண்டும் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று மீண்டும் சாட்சியமளித்தபோது அவர் இதனைக் கூறினார்.



வௌிநாட்டு புலனாய்வுப் பிரிவின் எச்சரிக்கை ஊடாகஇ நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் காணப்பட்டது எனவும்இ தாக்குதல் நடத்தப்படும் என உறுதியாகக் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை எனவும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ நேற்று ஆணைக்குழுவில் தெரிவித்தார்.

இந்த எச்சரிக்கைகளின் பாரதூரத்தன்மை தொடர்பில் ஆராய்ந்து உறுதியான தகவல்களை வழங்காது எச்சரிக்கை உள்ளதென மாத்திரம் குறிப்பிட்டமை அப்போதைய அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர் செய்த தவறென ஹேமசிறி பெர்ணான்டோ கூறினார்.

சரியான நடவடிக்கைகளை எடுப்பதற்கு புலனாய்வுப் பிரிவின் தலைவர் அதன் பாரதூரத்தன்மை தொடர்பில் அறிவித்திருக்க வேண்டும் எனவும் ஹேமசிறி பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார்.

தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் உள்ளதெனக் கூறப்படும் தகவல் தாம் பதவி வகித்த காலப்பகுதியில் உள்நாட்டு புலனாய்வுப் பிரிவுகளிடமிருந்து கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மாவனெல்லவில் புத்தல் சிலை சேதமாக்கப்பட்டமை வண்ணாத்திவில்லு பகுதியில் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டமை மற்றும் காத்தான்குடி மோட்டார் சைக்கிள் வெடிப்புச் சம்பவம் ஆகியவற்றுக்கு இடையிலான தொடர்பு குறித்து தாம் கண்காணிக்கவில்லை எனவும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஆணைக்குழுவில் தெரிவித்தார்.

உள்நாட்டிலேயே வெடிபொருட்களை உற்பத்தி செய்ய முடியும் என்பதை இந்த சம்பவங்களின் மூலம், தாம் ஏற்றுக்கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

அது நாட்டிற்கே ஆபத்தான நிலைமை எனவும் ஹேமசிறி பெர்ணான்டோ ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஏற்றுக்கொண்டார்.

ஏப்பர் 21 தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக அடையாளங் காணப்பட்ட சஹரான் ஹாஷிம் தொடர்பில் தேசிய பாதுகாப்புப் பேரவை, எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கவில்லை எனவும், அந்தக் கூட்டங்களின்போது வௌிநாட்டு எச்சரிக்கை குறித்து கலந்துரையாடுவதற்கு முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர் தயக்கம் காட்டியதாகவும் ஹேமசிறி பெர்ணான்டோ சாட்சியமளித்தார்.

இதேவேளை, தாம் ஜனாதிபதி ஆணைக்குழுவில் பொய் குற்றச்சாட்டுக்களைச் சுமத்தியதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்த கருத்தை நிராகரிப்பதாகவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ நேற்று  குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஹேமசிறி பெர்ணான்டோ தெரிவித்த கருத்தை நிராகரித்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று அறிக்கையொன்றை வௌியிட்டிருந்தார்.

அந்த அறிக்கை மூலம் தமது சேவை பெறுநர் அச்சமடைந்துள்ளதாக ஹேமசிறி பெர்ணான்டோவின் சட்டத்தரணி டில்ஷான் ஜயசூரிய ஜனாதிபதி ஆணைக்குழுவில் தெரிவித்துள்ளார்.

ஆணைக்குழுவில் சாட்சியாளரிடம் குறுக்குக் கேள்வி கேட்பதற்கு சந்தர்ப்பத்தைக் கோராமல்இ அறிக்கை மூலம் குற்றச்சாட்டை நிராகரிப்பது ஆணைக்குழுவின் அதிகாரத்தைப் பொருட்படுத்தாத நிலைமையாகும் என ஹேமசிறி பெர்ணான்டோவின் சட்டத்தரணி கூறினார்.

அறிக்கையை வௌியிட்டஇ முன்னாள் ஜனாதிபதியின் தனிப்பட்ட செயலாளரை ஆணைக்குழுவிற்கு அழைத்து நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபடவில்லை என்பதை தௌிவுபடுத்துவதற்கான காரணத்தை வினவுமாறு சட்டத்தரணி டில்ஷான் ஜயசூரிய கோரிக்கை விடுத்தார்.

அந்த அறிக்கை தொடர்பில் தாம் அறியவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சரித் குணரத்ன தெரிவித்தார்.

தமது சேவை பெறுநரால் அது குறித்து தமக்கு அறிவிக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஆணைக்குழுவில் இன்று செவ்வாய்க்கிழமை விடயங்களைத் தெளிவுபடுத்துமாறு முன்னாள் ஜனாதிபதியின் சட்டத்தரணிக்கு ஆணைக்குழு  நேற்று உத்தரவிட்டது.

ஹரினின் கூற்றுக்கு மெல்கம் ரஞ்சித் கண்டனம்

இதேவேளை ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெனாண்டோ வழங்கிய வாக்கு மூலத்தை பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்  ஆண்டகை உட்பட அனைத்து ஆயர்களும் வன்மையாகக் கண்டித்துள்ளனர்.

ஹரின் பெர்னாண்டோ ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் வழங்கிய சாட்சியம் தொடர்பான செய்தி ஊடகங்கள் மூலம் அறிய வந்தபோது தாமும் ஆயர் பேரவையின் அனைத்து ஆயர்களும் ஆழ்ந்த வருத்தம் அடைந்ததாக பேராயர் மெல்கம் ரஞ்சித்ஆண்டகை தெரிவித்துள்ளார்.

குண்டுத் தாக்குதல் இடம்பெற்ற ஈஸ்டர் தினத்தன்று காலையில் முக்கியமான ஆலயங்களில் திருப்பலி பூஜைகள் நடத்தப்படவில்லை என்றும் அதற்கு காரணம் ஏற்கனவே மேற்படி தாக்குதல் தொடர்பில் பேராயர் அறிந்திருந்தமையே என்றும் ஹரின் பெர்னாண்டோ தன்னிச்சையாக விசாரணைக் குழுவில் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

அந்த வாக்குமூலமானது பேராயர் மீது சுமத்தப்படும் அநீதியான குற்றச்சாட்டு என்றும் கொழும்பு உயர்மறைமாவட்டம் தெரிவித்துள்ளது.

பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையால் வழமைபோன்று ஈஸ்டர் இரவு அதாவதுஇ ஏப்ரல் இருபதாம் திகதி சனிக்கிழமை கொழும்பு கொட்டாஞ்சேனை புனித லூசியாள் பேராலயத்தில் திருப்பலி பூசை ஒப்புக்கொடுக்கப்பட்டதாகவும் அந்த திருப்பலி பூசை விடியற்காலை 2 மணி வரையும் தொடர்ந்ததாகவும் அதனையடுத்து மறுநாள் காலை பேராயர் இல்லத்தில் அவரால் திருப்பலி பூசை ஒப்புக் கொடுக்கப்பட்டதாகவும் கொழும்பு உயர் மறைமாவட்டம் தெரிவிக்கின்றது.

அந்த வகையில்ஹரின் பெர்னாண்டோ எம்பி வழங்கியுள்ள வாக்கு மூலம் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்றும் பேராயரோ அல்லது எந்த ஒரு கத்தோலிக்க குழுக்களோ ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் எந்த விதத்திலும் ஏற்கனவே அறிந்திருக்கவில்லை என்றும் கொழும்பு உயர்மறைமாவட்டம் தெரிவித்துள்ளது. 


Monday, September 21, 2020

பிரதமர் மஹிந்தவுடன் செப்.-26ல் இந்தியப் பிரதமர் மோடி 'வீடியோ கொன்ஃபரன்ஸ்' ஊடாக பேச்சுவார்த்தை !

 


 பிரதமர் மகிந்த ராஜபக் ஷவுடன்  செப்டம்பர் 26-ந் திகதி இந்தியப்பிரதமர் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கொன்ஃபரன்ஸ் (Video Conference) மூலம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக இந்திய ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியப் பிரதமருடன் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக என இலங்கை பிரதமர் ஊடகப்பிரிவின் முக்கியஸ்தரொருவரிடம் வினவியபோது , "இன்னமும் உறுதிப்படுத்தப்படாத போதிலும் கூட ,பேச்சுவார்த்தை இடம்பெறுவதற்கான வாய்ப்பு அனேகமாக உள்ளது .தற்போது ஏற்பாடுகளை மேற்கொண்டுவருகின்றோம்"எனத் தெரிவித்தார். 


இந்தியாவின் பிரபலமான இணைய ஊடகமான https://tamil.oneindia.com/ல் வெளியாகியுள்ள செய்தி பின்வருமாறு:

நாட்டின் அண்டை நாடுகளுடனான நட்புறவை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதில் முதல் கட்டமாக, இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவுடன் பிரதமர் மோடி வரும் 26-ந் தேதி வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் உரையாடுகிறார்.

இலங்கை ராஜபக்சே சகோதரர்கள் 

இலங்கையைப் பொறுத்தவரையில் சீனாவுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வரும் நாடு. இலங்கையில் அதிபராக கோத்தபாய ராஜபக்சேவும், பிரதமராக மகிந்த ராஜபக்சேவும் உள்ளனர்.

சீனா- இந்தியா 

இருவருமே சீனா சார்பு கொள்கை உடையவர்கள். இருந்த போதும் இம்முறை இலங்கையில் புதிய அரசு பதவியேற்ற நிலையில், இந்தியாவுக்குதான் முக்கியத்துவம் கொடுப்போம் என வாக்குறுதி அளித்துள்ளனர். இன்னொரு பக்கம் சீனாவுடனான உறவை வலுப்படுத்துவதில் ராஜபக்சே சகோதரர்கள் கவனம் செலுத்திவருகின்றனர்.

மகிந்தவுடன் மோடி பேச்சுவார்த்தை இதற்கு செக் வைக்கும் வகையில் பிரதமர் மோடி வரும் 26-ந் தேதி இந்த வீடியோ கான்ஃபரன்ஸ் உரையாடலை மேற்கொள்கிறார். வங்கதேசத்துடன் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இம்மாத இறுதியில் பேச்சுவார்த்தைகளை நடத்த திட்டமிட்டிருக்கிறார். அதேபோல் மியான்மருக்கு வெளியுறவுத் துறை செயலாளர் ஹர்ஷ் ஷிரிங்கலா, ராணுவ தளபதி நரவனே இருவரும் பயணம் மேற்கொள்ள இருக்கின்றனர்.

மியான்மருக்கு ராணுவ தளபதி பயணம்

 மியான்மர் பயணம் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் லடாக் கிழக்கு எல்லையில் சீனாவின் ஊடுருவல் நடவடிக்கைகள் பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. இதனால் வெளியுறவுத் துறை செயலாளர் மற்றும் ராணுவ தளபதியின் மியான்மர் பயணம் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. மாலத்தீவுக்கு 250 மில்லியன் அமெரிக்கா டாலர் நிதி உதவியை மத்திய அரசு ஞாயிற்றுக்கிழமை வழங்கியது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாலத்தீவு பொருளாதாரத்தை மீட்பதற்கு இந்த நிதி உதவி வழங்கப்படுகிறது.

நேபாளத்துடன் பேச்சு இல்லை 

ஆனால் நேபாளத்துடன் எந்தவித பேச்சுவார்த்தையும் திட்டமிடப்படவில்லை. இந்திய பகுதிகளை நேபாளம் தமது வரைபடத்தில் சேர்த்திருக்கிறது. அத்துடன் புதிய வரைபடத்தை நாணயங்கள் உள்ளிட்டவற்றிலும் நேபாளம் இணைத்துள்ளது. சீனாவின் தூண்டுதலால் நேபாளம் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் நேபாளம் மீது மத்திய அரசு அதிருப்தியில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Sunday, September 20, 2020

கண்டி கட்டிட இடிபாட்டு அனர்த்தத்தில் உயிரிழந்த குடும்பத்தின் மனதை உருக்கும் புகைப்படம்

 

எவ்வளவோ எதிர்பார்ப்புக்களுடன் எதிர்காலக் கனவுகளுடன் சிறுகச்சிறுக கட்டியெழுப்பப்படும் வாழ்க்கை ஒரே கணத்தில் முடிந்துபோகும் போது அந்த வேதனையை தாங்கிக்கொள்ளமுடியாது. இன்று அதிகாலை கண்டியில் இடம்பெற்ற கட்டிட இடிபாடு அனர்த்தத்தில் மூன்று பேரைக்கொண்ட இளம் குடும்பம் பலியான சம்பவத்தை பற்றிக் கேள்விப்பட்டபோதே மனது வலித்தது. ஆனால் அவர்கள் மூவரும் உள்ள புகைப்படத்தை பார்த்தபோது வேதனையின் அளவு பன்மடங்காகியது . 



இன்று (20) அதிகாலை 5.00 மணியளவில் ,கண்டி, பூவெலிக்கடை, சங்கமித்தா மாவத்தயிலுள்ள ஐந்து மாடிக் கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில்  அதன் இடிபாடுகள்  காரணமாக அதற்கு அருகில் இருந்த ஹோட்டலொன்றின் உரிமையாளர், அவரது மனைவி மற்றும் ஒன்றரை மாத குழந்தை ஆகியோர் மிகவும் பரிதாபகரமான வகையில் உயிரிந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த கட்டடம், முன்னாள் பஸ்நாயக்க நிலமேவுக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து சம்பவம் தொடர்பாக அவரிடமிருந்து  பொலிஸார் வாக்குமூலமொன்றை பெற்றுள்ளனர்.

குறித்த ஐந்து மாடி கட்டிடம் இடிந்து வீழ்ந்த போது  இடிபாடுகள் காரணமாக அதற்கு அருகிலே இருந்த மற்றும் இரு கட்டடங்களும் இடிந்து வீழ்ந்துள்ளது. உயிரிந்த தம்பதியினர் மற்றும் குழந்தை ஆகிய மூவரும் இதில் ஒரு கட்டடத்தில் வசிப்பவர்கள் என, கண்டி பொலிஸ்  நிலைய சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி சுதத் மாரசிங்க தெரிவித்தார்.

உயிரிழந்தவர், சரிந்து வீழ்ந்த 5 மாடி கட்டடத்திற்கு அருகில் ஹோட்டலொன்றை நடாத்தி வந்துள்ளதோடு, அந்த நபர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் ஒரு  அறையிலும்  மனைவியின் தாய் மற்றும் மற்றுமொரு பெண்ணொருவரும் மற்றொரு அறையிலும் தங்கியிருந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில், மற்றைய அறையில் தங்கியிருந்த மரணமடைந்த பெண்ணின் தாய் மற்றும் அங்கு பணி புரிந்த பெண் ஒருவர் ஆகியோர் மீட்கப்பட்டுள்ளனர்.

மேலும்  இடிபாடுகளில் சிக்கிய சடலங்களைத் தேடும் பணியில் சுமார் 50  இராணுவம் விமானப்படை வீரர்கள் கண்டி மாநகர தீயணைக்கும் பிரிவுவைச்  சேர்ந்த அதிகாரிகள்  அடங்கிய குழு ஈடுபட்டிருந்தது.



இச்சம்பவத்தில் சமில பிரசாத் (35), அச்சலா ஏகநாயக்க (32) மற்றும் அவர்களது ஒன்றரை மாத குழந்தை ஆகியோர்களே இடர்பாடுக்குள் சிக்குண்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார்  தெரிவித்தனர்.

இறந்தவர் அச்சலா ஏகநாயக்கஒரு வழக்கறிஞரும் திறந்த பல்கலைக்கழக விரிவுரையாளருமாவார் எனவும் தெரியவருகிறது.  இந்த சம்பவத்திற்குப் பிறகு மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே சம்பவ இடத்திற்குச் வந்ததோடு, கட்டடம் அங்கீகாரத்துடன் கட்டப்பட்டதா என்பது தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகக் கூறினார்.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தில் கண்டி மாவட்டத்திற்கு பொறுப்பான புவியியலாளர் சமந்த போகாஹபிட்டி இது தொடர்பில் தெரிவிக்கையில், இடிந்து வீழ்ந்த கட்டடம் ஒரு பள்ளமான பகுதியில்  அமைந்துள்ளது என்றும் இது இயற்கையான நிலச்சரிவினாலா அல்லது கட்டுமானத் தரத்தில் குறைபாட்டினாலா இடிந்து வீழ்ந்ததா என்பது குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

உயிரிழந்த கணவன், மனைவி ஆகியோர் கட்டடத்தினுள், கொன்கிரீட் தூண் மற்றும் சுவரின் உயிரிழந்துள்ள நிலையில் காணப்பட்டுள்ளதோடு, குறித்த கொன்கிரீட் தூண் வெட்டப்பட்டு உடல்கள் வெளியே எடுத்ததாக, கண்டி மாநகர தீயணைப்பு படையின் பொறுப்பதிகாரி  சி.எஸ். பெரேரா கூறினார்.

உயிரிழந்த அச்சலா ஏகநாயக்கவின் தாயார் ஜெயந்தி ஏகநாயக்க (60)  இது தொடர்பில் தெரிவிக்கையில்,

நான் ஹோட்டலில் பணிபுரிந்த பெண் ஒருவருடன், ஹோட்டல் அறையில் தூங்கிக் கொண்டிருந்தேன். மகனும் மகளும் குழந்தையும் மற்ற அறையில் தூங்கிக் கொண்டிருந்தார்கள். அதிகாலை 5.00 மணியளவில் ஒரு பெரிய அதிரும் சத்தம் கேட்டது. எதுவும் தென்படவில்லை. எமது அறையின் சுவர் இடிந்து எமது கட்டிலின் அருகிலேயெ வீழ்ந்தது. நாலா பக்கவும் எதுவும் தெரியவில்லை. தொலைபேசி கையில் சிக்கியது. அதில் 119 ஐ அழைத்து வீடு இடிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவித்தேன். சிறிது நேரத்திலேயே பொலிஸார்  அங்கு வந்தனர்.  ஒரு குழு கயிறுடன் இறங்கி எங்கள் இடத்திற்கு வந்து எங்களை அழைத்துச் சென்றனர். எனது மகளும் அவரது கணவரும் இருந்த அறை முற்றாக தரைமட்டமாக இருந்தது." என அவர் கூறினார்.

ஐநாவிற்கான இலங்கைத்தூதுவராக மொஹான் பீரிஸ்?

 


முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் நியுயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக  நியமிக்கப்படவுள்ளதாக நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. 

தற்போது ஐநாவிற்கான நிரந்தர வதிவிடப்பிரதிநிதியாக  பணியாற்றிவரும் ஷேனுகா செனவிரத்ன இலங்கைக்கு மீள அழைக்கப்பட்டுள்ள நிலையில் அவர் ஒக்டோபர் மாத நடுப்பகுதியில் நாடுதிரும்புவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தொழில்சார் வெளிநாட்டு சேவை பணியாளராக பணியாற்றிவரும் ஷேனுகா செனவிரத்ன கடந்த ஜுன் மாதத்தில் தனது 60வது வயதைப் பூர்த்திசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

வெளிநாட்டுச் சேவையினூடாக தொழில்சார் ரீதியில் இராஜதந்திரிகளாக பணியாற்றிவருபவர்களை 60வயதுடன் ஓய்வுபெறுமாறு வெளிநாட்டு அமைச்சு வலியுறுத்திவரும் போதும் அரசியல் நியமனங்களின் அடிப்படையில் இராஜதந்திரிகளாக பணியாற்றுகின்றவர்கள் 60வயதைக் கடந்தும் பணியாற்றுவதுடன் புதிதாக நியமனங்களையும் பெற்றுவருவது சுட்டிக்காட்டத்தக்கது. 

வெளிநாடுகளிலுள்ள இலங்கைத்தூதரங்களுக்கு பொறுப்பாக நியமிக்கப்படவுள்ள எட்டு பிரமுகர்கள் 18பேரைக் கொண்ட உயர் பதவிகளுக்கான குழுவின் முன்பாக நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இந்தக் குழுவை அண்மையில் சபாநாயகர் நியமித்திருந்தார். இந்தக்குழு வெளிநாட்டுத்தூதுவர் பதவிக்கு பிரேரிக்கப்பட்டவர்களின் தகைமைகளை விபரமாக ஆராய்ந்து அவர்கள் பொருத்தமானவரா? இல்லையா ? என்பதைத்  தீர்மானிக்கும். 

இந்த எட்டுப் பிரமுகர்களின் பெயர்கள் பட்டியலில் முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸின் பெயர் முன்னதாக இடம்பெறவில்லை. அவரது பெயர் பின்னரே பரிந்துரைக்கப்பட்டமையே இதற்கு காரணமாகும். அந்தவகையில் முதலில் பரிந்துரைக்கப்பட்ட எட்டுப்பேரின் விபரங்கள் பின்வருமாறு : அட்மிரல் ( ஓய்வுபெற்ற) கே.கே.வி.பி. ஹரிஸ்சந்திர (ஆப்கானிஸ்தான்), விஸ்ராமல் சஞ்சீவ் குணசேகர (ஜப்பான்) ,மிலிந்த மொரகொட ( இந்தியா), பாலித கோகண ( சீனா) ,ரவிநாத ஆரியசிங்க ( அமெரிக்கா), பேராசிரியர் சேனிகா ஹிரும்புரேகம ( பிரான்ஸ்) ,

போலியான புகைப்படங்களை இனங்காண்பது எப்படி?

 



போலிச் செய்திகள் இன்று உலகில் அதிகமாக பரப்பப்பட்டு வருகின்ற நிலையில் எம்மில் பலரும் போலிச் செய்திகளை உண்மை என நம்பி ஏமாந்த தருணங்களும் இருக்கக்கூடும். போலிச் செய்திகளை இக்காலத்தில் உண்மை என்று நம்புகின்றமைக்கு  உண்மைபோன்று தோற்றமளிக்கும் புகைப்படங்கள் காணொளிகளை அந்தச் செய்திகள் தாங்கிவருவதும் முக்கிய காரணமாகும். 


உதாரணமாக அண்மையில் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸவின் மனைவி லிமினி ஆண்குழந்தையொன்றைப் பெற்றெடுத்திருந்ததையடுத்து அவர்களின் குழந்தை  என சமூக வலைத்தளங்களில் புகைப்படம் பகிரப்பட்டிருந்தது. 


நாமலும் மனைவி லிமினியும் பிள்ளையை கையில் ஏந்தியிருப்பது போன்று ஒரு புகைப்படம் தந்தை மஹிந்த ராஜபக்ஷவும் தாயார் சிரந்தியும் குழந்தையை ஏந்தியிருப்பது போன்று படங்கள் என பல படங்களை தொகுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்திருந்தனர். 



உண்மையைத் தேடிப்பார்த்தோமானால் இது நாமல் ராஜபக்ஸவின் ஆண்குழந்தையின் புகைப்படமல்ல என்பது தெரியவரும் இது அவரது இளைய சகோதரர் ரோஹித ராஜபக்ஸவிற்கும் அவரது மனைவி டட்டியானாவிற்கும் கடந்த வருடத்தில் பிறந்த ஆண்குழந்தையின் புகைப்படமாகும். 


ரோஹித ராஜபக்ஷவின் குழந்தையை நாமல் ராஜபக்ஷவின் குழந்தை என தவறுதலாக புகைப்படங்களை பதிவிடும் போது அதனைப்பார்க்கின்றவர்கள் ஆவலுடன் பிள்ளையைப் பார்த்து ரசித்துவிட்டு கடந்துவிடுவார்கள். உண்மையற்ற புகைப்படமாக இருப்பினும் இந்தச் செய்தியால் மக்கள் பாதிக்கப்படமாட்டார்கள் . ஆனால் இப்படியாக வேறொருவருடைய புகைப்படத்தை அன்றேல் வேறு சம்பவத்தின் புகைப்படத்தை இன்னுமொரு நபருடனோ அன்றேல் வேறு சம்பவத்துடனோ தொடர்புபடுத்தி புகைப்படங்கள் பிரசுரிக்கப்பட்டால் அந்த நபர்களுக்கிடையிலோ சமூகங்களிடையிலோ தவறான புரிந்துணர்வு மட்டுமன்றி மோதல்களும் இடம்பெறவாய்ப்புண்டு. 

ஒரு புகைப்படம் எவ்வாறு மக்கள் மத்தியில் குழப்பத்திற்கு காரணமாக அமைய வழிகோலியது என்பதற்கு பல உதாரணங்கள் எம்மத்தியில் உள்ளன. 


சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் புகைப்படங்கள் உண்மையானவையா அன்றேல் போலியானவையா என்பதை எப்படி கண்டறிவது என்று சிந்திக்கின்றீர்களா?

ஒரு புகைப்படம் உண்மையா போலியா என்பதைக் கண்டறிவதற்கு இப்போது இணையத்தில் பல வழிமுறைகள் உள்ளன. எம்மில் பலரும் எதற்கெடுத்தாலும் தேடலுக்கு பயன்படுத்தும்  Google மூலமாகவே  புகைப்படம் உண்மையா போலியா என்பதை அறிந்துகொள்ளமுடியும்.


முதலிலே உங்களுக்கு வருகின்ற புகைப்படங்களை நீங்கள் Desktopல்  Save செய்துகொள்ள வேண்டும் பின்னர்  Google Reverse Image Search  என்பதை  செய்துகொள்ளவேண்டும். பின்னர் Save பண்ணிய புகைப்படத்தை  Upload செய்ய வேண்டும். உங்களுக்கு வந்த படம் உண்மை என்றால் அது வேறு தளங்களில் காண்பிக்கப்படும். 


இந்தப் படிமுறைகளைப் பாருங்கள்











போலிப் புகைப்படங்கள் காணொளிகள் என்பவற்றில் இருந்த எம்மைப்பாதுகாத்துக்கொள்வதற்கு நாம் பார்க்கும் விடயங்கள் தொடர்பாக எப்போது கேள்விகளைக் கொண்டிருக்க வேண்டும் அத்தோடு ஒவ்வொருநாளும் செய்திகளைப் பார்த்து எம்மை நாம் செய்திகள் தொடர்பான விழிப்புணர்வில் வளர்த்துக்கொள்ளவேண்டும். 

  இதனைத் தவிர முக்கியமாக போலிச் செய்திகளை கண்டறிவதற்கான இந்தப்படிமுறைகளை நினைவில் கொண்டிருக்க வேண்டும்.   

போலிச் செய்திகள் Fake News இன்று தேர்தல் காலத்தில் மட்டுமன்றி மக்களின் அன்றாட வாழ்வியலுடனும் இணைந்து விட்ட நிலையில் போலிச் செய்திகளை இனங்காண்பது எப்படி என்பது இன்று நமக்கு முன்பாக உள்ள சவாலாகும். குறிப்பாக சமூக வலைத்தளங்களில் போலிச் செய்திகளைப் பரப்புவது நாளுக்கு நாள் வளர்ந்து வரும் அச்சுறுத்தலாகவுள்ளது. போலிச் செய்திகள் பரவுவதை நாம் சாதாரணமாகக் கடந்துபோகவும் முடியாத நிலை காணப்படுகின்றது. இன்றுள்ள உயர் தொழில்நுட்பங்கள் மூலமாக புகைப்படங்கள் காணொளிகளை உண்மையேது பொய்யேது என்று தெரியாத அளவிற்கு மிகவும் தத்வரூபமாக வடிவமைக்கக்கூடிய நிலை காணப்படுவதால் போலிச் செய்திகள் தொடர்பாக நாம் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும்.

போலிச் செய்திகள் பரவுவதை அதனால் நாம் ஏமாற்றத்துக்குள்ளாவதைத் தடுப்பதற்காக சில வழிகாட்டுதல்களை உங்களுக்கு இங்கு தருகின்றேன்.

1. தலைப்புக்களை மாத்திரம் வாசிப்பதோடு நிறுத்தாதீர்

பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் வாசகர்கள் நாம் சமூக வலைத்தளத்தில் காணும் ஒரு செய்தி அன்றேல் கட்டுரையின் தலைப்பையோ அன்றேல் அதன் முதலாவது பந்தியையோ மாத்திரம் வாசித்து விட்டு உடனே அதனைப்  Share  பண்ண தீர்மானிப்பது, போலிச் செய்திகள் பரவுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும். போலிச் செய்திகளை பரப்புபவர்கள் சில நேரத்தில் ஆரம்பத்தில் சரியாக தொடங்கிவிட்டு தமது செய்தி அன்றேல் கட்டுரையின் இதர பகுதிகளை பொய்யான தகவல்களால் நிரப்பக்கூடும்.

போலியான செய்திக் கோவைகள் தடித்தெழுத்துக்களையும் ஆச்சரியக் குறிகளையும் உள்ளடக்கிய கவர்ச்சிகரமான தலைப்புக்களை கொண்டிருக்கும் என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

தலைப்புக்கள் சொல்லும் விடயங்கள் நம்ப முடியாதுள்ளதே என உங்கள் உள்ளுணர்வு கூறுமிடத்து அவை உண்மையில் போலியான செய்திகளாக இருப்பதற்கே இடமுண்டு. சில சந்தர்ப்பங்களில் சமூக வலைத்தளத்தில் வரும் செய்திகள் அன்றேல் கட்டுரைகளை கிளிக் பண்ணும் போது அதில் குறிப்பிடப்பட்ட தலைப்பிற்கும் செய்திக்கும் எவ்விதமான தொடர்புமில்லை அன்றேல் தரவுகளை உறுதிப்படுத்துவதற்கு எவ்விதமான மூல ஆதாரமும் இல்லை என்பது புலனாகும்.

2. செய்தித்தளத்தின் மூலத்தை ஆராய்தல் 

பரிச்சயமில்லாத  இணையத்தளம் அன்றேல் செய்தித்தளம் ஒன்றிலிருந்து  செய்தி வெளிவந்திருந்தால்  அவர்களது பக்கத்திற்கு சென்று ' About' பகுதியில் செய்தித்தளம்/ அமைப்பு தொடர்பான மேலதீக விபரங்களைப் பெறுங்கள். பரிச்சயமில்லாத செய்தித்தளங்கள்  கண்ட இடமெல்லாம் விளம்பரங்களை தாங்கியிருப்பதுடன் பெரும் எழுத்துக்களில் தலைப்புக்களைக் கொண்டிருப்பதுண்டு. இது மக்களின் அவதானத்தை உடனே ஈர்க்கும் நோக்கம் கொண்டதாகும். அந்த இணையத்தளத்தின் பெயரை Google கூகுள் பண்ணிப் பார்ப்பதன் மூலமும் அதில் வெளியான ஏனைய செய்திகள் கட்டுரைகளை ஆராய்வதன் மூலமும் அந்த தளம் நம்பகரமானதா என்பதை உறுதிசெய்ய முடியும்.


3. யார் எழுதியவர் என்ற ஆதாரங்களை சரிபாருங்கள்

செய்தியைத் தொகுத்து எழுதியவர் தந்துள்ள செய்தி மூலங்களை சரிபார்த்து அவை உண்மையானவை என்பதை  உறுதி செய்யுங்கள். செய்தியை எழுதியவருடைய பெயர் பல உண்மைகளை வெளிக்கொண்டுவர உதவும். எழுதியவரின் பழைய ஆக்கங்களை பார்ப்பதனுடாக அவர் நம்பத்தகுந்தவரா அன்றேல் போலிகளின் புகலிடமா என்பது துலங்கும். குறித்த செய்தி நம்பத்தகுந்த துல்லியமான தகவல்களை வழங்குவதில் நன்மதிப்பைப் பெற்ற மூலம் ஒன்றினால் எழுதப்பட்டுள்ளதை உறுதி செய்யுங்கள்.  ஆதாரங்கள் போதாமை அல்லது பெயர் குறிப்பிடப்படாத வல்லுனர்களை சார்ந்திருக்கின்றமை என்பன குறித்த செய்தி பொய்யானது என்பதை வெளிப்படுத்தும்.

4. தரப்பட்டுள்ள Link லிங்கை கவனமாக அவதானியுங்கள் 

ஒரு செய்தி அன்றேல் கட்டுரையில் குறைவாக Links லிங் காணப்பட்டால் அது அந்தச் செய்தி போலியாக இருக்கக்கூடும் என்பதற்கான அபாயச் சமிக்ஞையாகும். சில போலித்தளக்களும் links லிங்களை அதிகமாக தரக்கூடும். ஆனால் அவற்றை ஆராய்ந்தால் உண்மை வெளிப்படும்.

போலியான அல்லது ஒரே மாதிரியாகத் தோற்றமளிக்கும் ஒரு link லிங் தவறான செய்தி ஒன்றின் எச்சரிக்கை அடையாளமாகும். அநேகமான போலியான செய்தித் தளங்கள் நேர்மையான செய்தி ஊடகங்களின் செய்திகளைப் பிரதிசெய்து அவற்றில் சிறுசிறு மாற்றங்களை ஏற்படுத்தி மீளவும் வழங்குகின்றன. நீங்கள் தளத்திற்கு சென்று குறித்த Linkகை உறுதி செய்யப்பட்டுள்ள மூலங்களின் செய்திகளுடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியும். நீங்கள் சந்தேகிக்கும்  ஒரு செய்தித்தளத்தின் URL பெயர்களை ஆராய்ந்துபார்க்கவேண்டும்.



5. போட்டோக்களை மேற்கோள் வசனங்களை ஆராயுங்கள்

போலிச் செய்திகளை தயாரிப்பவர்கள் போலியான மேற்கோள் வசனங்களை உருவாக்குவதில் வல்லவர்கள். தாம் தயாரித்த போலி வசனத்தை பிரபலமான ஒருவர் சொன்னதைப் போன்று திணித்துவிடுவார்கள். 

போலியான செய்திக் கோவைகள் அநேகமாக தந்திரமாகப் பயன்படுத்தப்பட்டுள்ள படங்கள் அல்லது வீடியோக்களை உள்ளக்கியதாக இருக்கும். சில நேரங்களில் போட்டோ உண்மையானதான இருப்பினும் அது சார்ந்த விடயங்களில் இருந்து நீக்கப்பட்ட ஒன்றாக இருக்கலாம். போட்டோ அல்லது படம் தொடர்பாக சேர்ச் செய்வதன் மூலம் அதன் மூலத்தை உறுதிப்படுத்த முடியும். கூகுளில் Reverse Image செய்வதன் மூலம் அன்றேல் Tineye மூலம் இதனை உறுதி செய்யலாம்
  
6. திகதி ,நேரம் மற்றும் எழுத்துப் பிழை வடிவங்களை சரிபாருங்கள்

தவறான செய்திகள் சற்றும் தொடர்பற்ற திகதிகளைக் கொண்டமைந்திருக்கும் அல்லது மாற்றம் செய்யப்பட்ட நிகழ்ச்சிகளைக் கொண்டிருக்கும். போலிச் செய்திகளைப் பரப்புவோர் செய்யும் இன்னுமொரு பொதுவான விடயம் பழைய கட்டுரைகள் அன்றேல் நிகழ்ச்சிகளை மக்களை நம்பச் செய்யும் வகையில் சமீபத்தில் நடந்ததைப் போன்ற தோற்றப்பாட்டை கொடுப்பதாகும். அந்தவகையில் செய்தி பிரசுரிக்கப்பட்ட நேரம் மற்றும் திகதியை சரிபார்ப்பது போலிச் செய்திகளால் ஏமாற்றப்படாமல் தடுக்க உதவும். சில நேரங்களில் எப்போது குறிப்பிட்ட நிகழ்ச்சி நடந்தது என்பதை அறிவது நேரமெடுக்கும் விடயமாக இருக்கும் ஆனால் கட்டுரையின் பிரசுர காலம் தற்போது நடந்தது போன்று இருக்கும். அப்போது அதில் தரப்பட்டுள்ள லிங்களை கிளிக் பண்ணி வாசித்து இது உண்மையில் நடந்ததா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

அத்தோடு அநேகமான போலிச் செய்தித் தளங்கள் எழுத்துப் பிழைகள் அல்லது சீரற்ற வடிவங்களைக் கொண்டிருக்கும். இவ்வாறான விடயங்களைக் கண்டால் அவதானமாக இருங்கள்.



7. ஏனைய செய்திதளங்களின் அறிக்கைகளுடன் ஒப்பிடுங்கள்

ஒரு செய்தி சந்தேகத்திற்கிடமாக இருந்தால் அன்றேல் முக்கியமான பெரும் செய்தியாக இருந்தால் அந்தச் செய்தியை ஏனைய செய்தித்தளங்கள் பிரசுரித்திருக்கின்றனவா என ஆராயுங்கள். வேறெந்த செய்தித்தளமும் குறித்த செய்தியை பிரசுரித்திருக்காவிடின் அநேகமாக அந்தச் செய்தி போலியானதாக இருக்க வாய்ப்புண்டு. ஒன்றுக்கு மேற்பட்ட செய்தித்தளங்கள் குறித்த ஒரு செய்தியை வழங்கும் போது அச்செய்தி உண்மையானதாக இருப்பதற்கான சாத்தியம் அதிகமாகும்.

8. செய்தி நகைச்சுவையானதா? கிண்டலா?

சில நேரங்களில் போலியான செய்திக் கோவைகளை நகைச்சுவை, கிண்டல்  அல்லது கேலி என்பவற்றிலிருந்து வேறுபடுத்திப் பார்ப்பதற்கு சிரமமாக இருக்கும் குறித்த தளமானது வேடிக்கை விடயங்களைப் பகிர்தல் தொடர்பாக அறியப்பட்ட ஒன்றாக என்பதை குறித்த செய்திக் கோவையின் விபரங்கள் மற்றும் தொனி என்பன வேடிக்கையாக அமைந்துள்ளனவா என்பதையும் சரி பாருங்கள். Newscurry நியுஸ் கரி என்ற ஆங்கில இணையத்தளம் இவ்வாறான நகைச்சுவை கிண்டல் தளமாக காணப்படுகின்றது.
  
9. சுய விருப்பை தாண்டி செய்தியைப் பாருங்கள்

தேர்தல் நாம் விரும்பும் வேட்பாளர் வெற்றி பெறவேண்டும் விரும்பும் கட்சி வெற்றிபெறவேண்டும் என நினைப்பவர்கள் அதனை சார்ந்த செய்திகள் வரும்போது தரவுகளை ஆராயாது போலிச் செய்திகளையும் உண்மையென எண்ணும் போக்கு காணப்படுகின்றது. போலிச் செய்திகள் மக்களின் உணர்வுகளோடு ஒன்றியதாக அன்றேல் உணர்வுகளை மேலிடச் செய்வதாக வடிவமைக்கப்படுகின்றன.  ஒரு தரப்பின் வாதத்தை முன்னிறுத்துவதாக அன்றேல் முன்கூட்டிக் காணப்பட்ட அரசியல், இன, மத நம்பிக்கைகளை   மீண்டுமாக நிலைநாட்டும் வண்ணம் தந்திரமாக போலிச் செய்திகளை தயாரிப்பவர்கள் அவற்றை வடிவமைப்பதுண்டு. எனவே எமக்குள்ள தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களைத் தாண்டி செய்திகளை உறுதிப்படுத்தும் போது உண்மைத் தரவுகளையும் அர்த்தப்படுத்தல்களையும் அடிப்படையாகக் கொண்டு அவற்றை அணுகவேண்டும்.



10. Share செய்யுமுன்  சிந்தியுங்கள்

போலிச் செய்தித்தளங்கள் அதனை வாசிப்பவர்கள் தமது போலிகளை மற்றவர்களுடன் Share செய்வதில் தங்கியுள்ளன. எனவே நீங்கள் வாசிக்கும் செய்திக் கோவைகள் தொடர்பாக மிகுந்த அவதானத்தோடு இருங்கள் நம்பத்தகுந்தது என நீங்கள் நிச்சயமாக நினைக்கும் செய்திகளை மாத்திரம் Share செய்யுங்கள்.

ஞாயிறு வீரசேகரிக்காக  அருண் ஆரோக்கியநாதன்எழுதிய கட்டுரை