Friday, September 4, 2020

நிபுணர்குழுவில் இடம்பெற்றுள்ள சிறுபான்மையினப் பிரதிநிதிகளின் தகைமை பின்னணியை அறிவோமா?

 

 


அரசியல்யாப்பின் 20வது திருத்தத்தை விரைந்து தயாரித்து அனுமதித்து வர்த்தமானியில் அறிவித்த கையுடனேயே புதிய அரசியல்யாப்பு உருவாக்கத்திற்கான நிபுணர் குழுவை நியமித்து அரசாங்கம் விரைவில் புதிய அரசியல் சாதனத்தை கொண்டுவரும்  நோக்கத்தை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது.


ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பை உருவாக்குவது தொடர்பான ஆரம்ப வரைபைத் தயாரிக்கும் நிபுணர் குழுவிற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.


 நேற்று முற்பகல் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் ஒன்பது பேரைக் கொண்ட இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளவர்களின் பெயர்கள் முழுமையாக வெளியிடப்பட்டது.   

1)ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா - தலைவர்


2)ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன

3)ஜனாதிபதி சட்டத்தரணி மனோஹர டி சில்வா

4)ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன

5) பேராசிரியை நஸீமா கமார்தீன் 

6)சிரேஷ்ட விரிவுரையாளர் அருளானந்தம் சர்வேஸ்வரன்

7)ஜனாதிபதி சட்டத்தரணி சமந்த ரத்வத்த 

8)பேராசிரியர் வசந்த செனவிரத்ன

9) பேராசிரியர் ஜி.எல். பீரிஸ்

ஒன்பது பேர் கொண்ட நிபுணர்குழுவில் சிறுபான்மையினத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும்  உறுப்பினர்களாக சிரேஷ்ட சட்ட விரிவுரையாளர் அ. சர்வேஸ்வரன் மற்றும் பேராசிரியை நஸீமா கமார்தீன்  ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக   நேற்று முன்தினம் குளோப் தமிழ் செய்தி வெளியிட்டிருந்தது. இன்று அவர்களது பின்னணியைத் தருகின்றோம்.

சிரேஷ்ட விரிவுரையாளர் அ.சர்வேஸ்வரன்




இவர் கொழும்புப் பல்கலைக்கழக சட்ட பீட சிரேஷ்ட விரிவுரையாளரும் சட்டத்தரணியுமாவார். கொழும்புப் பல்கலைக்கழகத்தில் சட்டமாணிப் பட்டத்தில் விசேட சித்தியையும் சட்ட முதுதத்துவமாணிப் பட்டத்தையும் பெற்ற இவர் சர்வதேச சமாதான கற்கைகளில் முதுமாணிப் பட்டத்தை கோஸ்ரரிக்காவிலுள்ள ஐக்கிய நாடுகள் தாபனத்தின் University of Peace பல்கலைக்கழகத்தில் பெற்றார். இவர் கொழும்புப் பல்கலைக்கழக சட்ட ஆய்வு பிரிவில் பணிப்பாளராகவும் பணியாற்றியவர். ஜப்பானின் இலங்கைக்கான விசேட சமாதான தூதுவராகப் பணியாற்றிய திரு.யசூசி அகாஷி அவர்களைத் தலைவராகக் கொண்ட ஜப்பானின் சர்வதே மன்று மற்றும் ஜப்பான் நிறுவகம் இணைந்து வழங்கிய ஆசிய தலைமைத்துவத்திற்கான விருதினையும் பெற்று ஜப்பானில் தலைமைத்துவ பயிற்சியையும் பெற்றார். ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இயற்கையைப் பாதுகாப்பதற்கான சர்வதேச சங்கம் இணைந்து வழங்கிய ஆசியாவின் சுற்றாடற் சட்ட சம்பியன் என்ற விருதினையும் பெற்றவர். இவர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சட்ட மறுசீரமைப்பிற்கான சிரேஷ்ட ஆலோசகர் ஒருவராகவும் பணியாற்றியவர்.  யாழ்ப்பாணம், காரைநகரைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் இலங்கை சட்டக் கல்லூரி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், மொறொட்டுவைப் பல்கலைக்கழகம், இலங்கை திறந்த பல்கலைக்கழகம் ஆகியவற்றில்  வருகைதரு விரிவுரையாளராகவும் பணியாற்றி வருகின்மை  குறிப்பிடத்தக்கது. 

பேராசிரியை நஸீமா கமார்தீன் 

கொழும்பு பல்கலைக்கழக  சட்ட பீடத்தில் தற்போது பேராசிரியையாக திகழும் நஸீமா கமார்தீன் சட்டத்துறையில் தனது இளமானிப் பட்டத்தை கொழும்பு பல்கலைக்கழகத்திலேயே பெற்றிருந்தார். அதன் பின்னர் அமெரிக்க அரசாங்கத்தினால் வழங்கப்படும் Fulbright  புலமைப்பரிசில் பெற்று  அமெரிக்காவின்  ஜோர்ஜ் டவுண் பல்கலைக்கழகத்தில் சர்வதேச சட்டத்தில் முதுமானி பட்டத்தை பெற்றுள்ளார். பின்னர் இலங்கை திருப்திய அவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் கலாநிதி பட்டத்தையும் பெற்றுள்ளார்.உயர் நீதிமன்ற சட்டத்தரணியான இவர்  உயர் கல்வி கற்பித்தல் தொடர்பான உயர் டிப்ளோமா கற்றை நெறிகளைப் பூர்த்திசெய்துள்ளார்.intellectual property, biopiracy and traditional knowledge, trade and investment, environment, research ethics ஆகியவற்றுடன் முஸ்லிம் தனிநபர் சட்ட மறுசீரமைப்பும்  இவரது ஆய்வுக்குரிய அக்கறையுள்ள விடயங்களில் ஒன்றென  கொழும்பு பல்கலைக்கழக இணையத்தளத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.Plant Variety Protection சட்டத்தை வரைந்த தேசிய குழு உட்பட  பல்வேறு குழுக்களில் இவர் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது  2016ம் ஆண்டில் இவர்  “Global Trade and Sri Lanka: Which Way Forward?”என்ற புத்தகத்தையும் வெளியிட்டிருந்தார். இது புலமைசார் சமூகத்தால் பாராட்டப்படும் நூலாக திகழ்கின்றது. 





No comments:

Post a Comment