சகல அதிகாரங்களையும் கொண்ட நிறைவேற்று அதிகார ஜனாதிபதிப்பதவிக்குத் திரும்புதல் சிறுபான்மை இனத்தவர்களுடனான உடன்பாடுகளுக்கு ஆபத்தை விளைவிக்கும்
• நிறைவேற்று அதிகார ஜனாதிபதிப்பதவி அதிகாரங்களை ஒருமுகப்படுத்துவதனாலும் ஜனநாயகத்தின் மீது முறைகேடான செல்வாக்கைச் செலுத்துவதனாலும் தமிழ் மக்கள் அதை எதிர்க்கிறார்கள்
-எம்.ஏ.சுமந்திரன் (எம்.பி)
இந்திய உச்சநீதிமன்றத்தினால் வரையறுக்கப்பட்டவாறான அடிப்படைக் கட்டமைப்புக்கோட்பாட்டிற்குப் பொருத்தமானதாக இலங்கையின் அரசியலமைப்புச் சட்டம் இருக்கவில்லை. ஆனால் அரசியலமைப்பை எவ்வாறு மாற்றமுடியும் என்பது தொடர்பில் தெளிவான ஏற்பாடுகளை இலங்கையின் அரசியலமைப்பு (1978 இரண்டாவது குடியரசு அரசியலமைப்பு) வழங்குகிறது. இதுவிடயத்தில் அரசியலமைப்பு இரண்டு வகையான சரத்துக்களைஃ ஏற்பாடுகளை அங்கீகரிக்கிறது - அதாவது முதலாவது பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினரின் ஆதரவுடன் அரசியலமைப்பைத் திருத்தமுடியும், மற்றையது மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்படுவதற்கு மேலதிகமாக சர்வஜன வாக்கெடுப்பொன்றில் மக்களின் அங்கீகாரத்தைப் பெற்று அரசியலமைப்பை நிறைவேற்றுவதாகும். இந்த இரண்டாவது ஏற்பாடு அரசியலமைப்பில் பதிக்கப்பட்டுள்ள அடிப்படை ஏற்பாடுகள் என்று அடிக்கடி குறிப்பிடப்படுகின்றன. அரசியலமைப்புத் திருத்தமொன்று பிரேரிக்கப்படும் போது இந்த அடிப்படை ஏற்பாடுகள் அதிக முக்கியத்துவத்தைப் பெறுகின்றன. இந்த அடிப்படை ஏற்பாடுகளின் அர்த்தத்தையும் வீச்சையும் உச்சநீதிமன்றம் எவ்வாறு வியாக்கியானம் செய்கிறது என்பதே இந்த அரசியலமைப்புத் திருத்தத்தின் கதியைத் தீர்மானிக்கின்றது.
இன்றைய அரசியலமைப்பு நடைமுறையில் இருக்கின்ற 42 வருடகாலத்திலும் சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்தியே அங்கீகாரம் பெறவேண்டும் என்று எந்தவொரு அரசியலமைப்புத் திருத்தத்திற்கோ அல்லது பாராளுமன்றத்தின் சட்டமூலமொன்றுக்கோ உச்சநீதிமன்றம் விதந்துரைக்கவில்லை. பதிலாக அரசாங்கங்கள் உச்சநீதிமன்றத்தின் தீர்மானத்திற்கு இணங்கி எந்தவொரு அரசியலமைப்புத் திருத்தத்தையோ அல்லது சட்ட வரைவுகளையோ மாற்றத்திற்கு உட்படுத்துவதைத் தவிர்த்தே வந்திருக்கிறது. உச்சநீதிமன்றமும் அதன் வியாக்கியானத்தின் ஊடாக இந்த அடிப்படை ஏற்பாடுகளுக்கு அர்த்தத்தையும் சாராம்சத்தையும் கொடுத்திருக்கின்றன. அத்தகைய அடிப்படை ஏற்பாடுகளில் அரசியலமைப்பிற்கான மூன்றாவது சரத்தே அடிக்கடி நீதிமன்றங்களில் வழக்குகளை எதிர்நோக்கி வந்திருக்கிறது. அதாவது இந்த ஏற்பாடு அரசாங்கத்தின் அதிகாரங்கள், அடிப்படை உரிமைகள் மற்றும் வாக்குரிமை உட்பட இலங்கை மக்கள் மீது ஒப்படைக்கப்பட்டுள்ள பராதீனப்படுத்த முடியாத இறையாண்மையையும் அங்கீகரிக்கறது.
சரத்து 4 அரசியலமைப்பின் ஒரு அடிப்படை ஏற்பாடாக இல்லாவிட்டாலும் மக்களின் இறையாண்மை எவ்வாறு செயற்படுத்தப்படுகிறது என்பதை விளக்குகிறது. அத்துடன் அது மக்களின் இறையாண்மை மீது நேர்மறையான தாக்கத்தைக் கொண்டிருக்கக்கூடியதும் ஆகும். அதனால் சரத்து 4 இல் செய்யப்படக்கூடிய மாற்றங்களும் கூட சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று கூறியதன் மூலம் நீதிமன்றம் சரத்து 3 இன் வீச்செல்லையை விரிவுபடுத்தியும் இருக்கிறது. உச்சநீதிமன்றத்தினால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானமொன்றின்படி, மாகாணசபைத் தேர்தல்களில் வாக்களிப்பதற்கு நாட்டின் பிரஜைகளுக்கு உள்ள தகுதியும் சரத்து மூன்றிலுள்ள உள்ளடக்கத்துடன் சேர்க்கப்பட்டிருக்கிறது. எனவே அரசியலமைப்பிற்கான 13 வது திருத்தம் நிறைவேற்றப்பட்ட போது சர்வஜன வாக்கெடுப்பு தேவைப்படவில்லை. ஆனால் மேற்கூறப்பட்ட ஏற்பாட்டை இல்லாதொழிப்பதற்கோ அல்லது மாகாணசபைகளுக்கான தேர்தலொன்றைத் தவிர்ப்பதற்கோ சர்வஜன வாக்குரிமையொன்று தேவைப்படும். தற்போது அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டிருக்கும் அரசியலமைப்புத் திருத்தச்சட்டமூலத்தின் எந்தவொரு ஏற்பாடும் சர்வஜன வாக்கெடுப்பொன்றினால் நிறைவேற்றப்பட வேண்டுமா இல்லையா என்பது தொடர்பில் நீதிமன்றத்தின் வழக்கிற்கு உட்பட வேண்டியிருக்கும். இந்த 20 வது திருத்தச்சட்டமூலம் 2015 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தின் 225 உறுப்பினர்களில் 210 இற்கும் அதிகமான உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பிற்கான 19 வது திருத்தத்தை இல்லாதொழிப்பதை விதந்துரைக்கிறது. ஜனாதிபதியின் செயற்பாடொன்று அரசியலமைப்பு மீறலுக்கு சமனானதா என்பதை உச்சநீதிமன்றம் கூட பரிசீலனைக்கு எடுப்பதைத் தடுக்கும் வகையில் ஜனாதிபதிக்கான முற்றுமுழுதான விலக்கீட்டு உரிமையை 20 வது திருத்தம் மீண்டும் அறிமுகப்படுத்த உத்தேசிக்கிறது. இது ஜனாதிபதி தனது விருப்பு, வெறுப்பின் பேரில் செயற்படுவதற்கு அனுமதிக்கும் என்பதுடன் அரசாங்கத்தின் எந்தவொரு பிரிவிற்கும் அவர் பொறுப்புக்கூற வேண்டிய தேவையையும் இல்லாமல் செய்கிறது.
இவ்வாறாக ஜனாதிபதிக்கு அனுகூலமான முறையில் அரசாங்கத்தின் அதிகாரங்களை மீள சமநிலைப்படுத்துவது மக்களின் இறையாண்மை மீது பாதிப்பைக் கொண்டிருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது. அரசாங்கத்தின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் என்னதான் கூறப்பட்டதோ அல்லது எதுதான் கூறப்படவில்லையோ அல்லது அதற்கு அப்பால் தற்போது பிரேரிக்கப்பட்டிருக்கும் மாற்றங்களுக்கு அரசியல் நியாயப்பாட்டையும் அரசியலமைப்பின் ஏற்புடைமையையும் பெறும்முகமாக சர்வஜன வாக்கெடுப்பொன்றில் மக்களினால் அவை அங்கீகரிக்கப்பட வேண்டியிருக்கும். ஆனால் சட்டமூலத்தில் பிரேரிக்கப்பட்டிருக்கும் மாற்றங்களின் முக்கியத்துவம் அந்தக் கேள்விக்கு அப்பாலானதாக இருப்பதுடன் இலங்கை ஜனநாயகத்தின் படிமுறை வளர்ச்சியின் அடிப்படை அம்சத்தைப் பாதிப்பதாகும்.
20 வது அரசியலமைப்புத் திருத்தத்தினால் பிரேரிக்கப்பட்டுள்ள மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்படுமானால் ஜனாதிபதிப்பதவி 1978 அரசியலமைப்பின் உள்ளவாறு அதன் மூலமுதல் நிலைக்குத் திரும்பிச்செல்லும். ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் அந்த அரசியலமைப்பை நிறைவேற்றிய போது பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் வகித்த வேறெந்த அரசியல் கட்சிகளுடனுமோ, குறிப்பாக சிறுபான்மை சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளுடனுமோ கலந்தாலோசிக்கவே இல்லை. முற்றுமுழுதான விலக்கீட்டு உரிமையுடன் முற்றுமுழுதாக பாராளுமன்றத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய, மேல்நிலை நீதிமன்றங்கள் மற்றும் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பதவிகளுக்கான முக்கிய நியமனங்களைச் செய்யக்கூடிய சகல அதிகாரங்களும் பொருந்திய ஜனாதிபதிப்பதவி ஒன்று இதன்மூலம் இலங்கை மக்களுக்குத் திணிக்கப்படுகிறது.
1978 ஆம் ஆண்டில் அரசியலமைப்பு கொண்டுவரப்பட்ட போது எதிர்க்கட்சியில் இருந்த சகலரும் (கோட்பாட்டு ரீதியிலும் அரசியல் ரீதியிலும் இன்றைய அரசாங்கத்தில் உள்ளவர்களின் முன்னோடிகள்) அதை எதிர்த்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதிப் பதவியையும் கடுமையாகக் கண்டித்தார்கள். அவர்களது அந்த எதிர்ப்பிற்கும் கண்டனத்திற்கும் பிரதான காரணமாக இருந்தது அந்த ஜனாதிபதிப்பதவி அரசியலமைப்பு ரீதியான சர்வாதிகாரம் ஒன்றுக்கு வழிவகுத்தமையே ஆகும். எதிர்க்கட்சியின் அன்றைய எதிர்வுகூறல்கள் ஜனாதிபதிப்பதவியின் அதிகாரங்கள் பயன்படுத்தப்பட்டு வந்த விதத்தின் மூலமாகத் திரும்பத் திரும்ப உறுதிப்படுத்தப்படுகிறது. அபிவிருத்தியை மேம்படுத்துவதற்கு பதிலாக மோதல்கள், வன்முறை, அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஊழலின் விளைவாக நாடு பல தசாப்தங்கள் பின்நோக்கி நகர்த்தப்பட்டது. அரசியலமைப்பின் முகப்பு வாசகத்தில் குறித்துரைக்கப்பட்ட சுதந்திரமானதும் சமத்துவமானதுமான சமுதாயத்திற்குப் பதிலாக எமக்குக் கிடைத்தது பெருமளவிற்குப் பிளவுபட்டதும் அசமத்துவமானதுமான சமுதாயமாகும். இவையெல்லாம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சியின் விளைவுகளே.
இத்தகைய வரலாற்றுப் பின்புலத்திலேயே நிறைவேற்று அதிகார ஜனாதிபதிப்பதவியை ஒழிக்கவேண்டும் என்ற ஆணை பிறந்தது. 1994 ஆம் ஆண்டுக்கும் 2019 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிப்பதவியை வகித்த ஒவ்வொருவரும் அந்தப் பதவியை ஒழிப்பதாக நாட்டுமக்களுக்கு வெளிப்படையாக வாக்குறுதியளித்துக் கொண்டே தேர்தல்களில் வெற்றி பெற்றார்கள். தமிழ் மக்களை பொறுத்தவரை நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை அதிகாரங்களை ஒருமையத்தில் ஒருமுகப்படுத்துவதன் காரணத்தினாலும் ஜனநாயகத்தின் மீது முறைகேடான செல்வாக்கைச் செலுத்துவதன் காரணத்தினாலும் அவர்கள் அதை எதிர்த்தார்கள். ஜனநாயகம் மலினப்படுத்தப்படும் போது முதலாவதாகவும் மிகவும் கூடுதலாகவும் அதனால் பாதிக்கப்பட்டு பலியாட்களாக ஆக்கப்படுபவர்கள் சிறுபான்மையின சமூகங்களே என்பது எமது வாழ்நாள் அனுபவமாகும். பெரும்பான்மையின சமூகத்தினர் அனுபவிக்கும் சிறப்புரிமை அல்லது வரப்பிரசாதம் என்பன இந்த அத்துமீறல்களில் இருந்து அவர்களை ஒரு குறுகிய காலத்திற்கே பாதுகாக்கிறது. நாளடைவில் அது அவர்களுக்கு எதிராகவும் கட்டவிழ்த்து விடப்படுகிறது. இதனால் இலங்கையின் நொய்தான அரசியலமைப்பு ஜனநாயகத்திற்கு தெளிவான ஆபத்தொன்றைப் பிரதிபலிக்கின்ற 20 வது அரசியலமைப்புத்திருத்தம் கடந்தகால வன்முறையை மீண்டும் மூளவைக்கும் ஆபத்தை தன்னகத்தே கொண்டிருக்கிறது.
இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்காக தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் எழுதிய இந்தக்கட்டுரை வீரசேகரி ஒன்லைனில் தமிழாக்கம் செய்யப்பட்டது.
No comments:
Post a Comment