Saturday, September 5, 2020

20வது திருத்தம் சர்வாதிகாரத்தை நோக்கிய முதற்படி- கடுமையாக எதிர்க்க ஒன்றுசேருமாறு எதிர்க்கட்சி அழைப்பு

 


இலங்கையின் அரசியல்யாப்பில்  முன்மொழியப்பட்டுள்ள 20வது திருத்தம் சர்வாதிகாரத்தை நோக்கிய முதற்படியாகும் என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி ( சமகி ஜன பலவேகய) தெரிவித்துள்ளது. 

 நேற்று முன்தினம் 20வது திருத்தம் தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்ட பின்னர் முதன்முறையாக அதுபற்றி கருத்துவெளியிடும் போது ஐக்கிய மக்கள் சக்தி இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.

 தமக்கிடையிலான கருத்துவேறுபாடுகளை மறந்துவிட்டு நாட்டிலுள்ள அனைத்து முற்போக்கு சக்திகளும் அரசியல் யாப்பின் 19வது திருத்தத்தை பாதுகாப்பதற்கு ஒன்றிணைய வேண்டும் எனவும் பிரதான எதிர்க்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. 

நேற்றையதினம் விடுத்த அறிக்கையில் விரைவில் 20வது திருத்தத்தினூடாக மாற்றியமைக்கப்பட எதிர்பார்க்கப்படும் 19வது திருத்தத்தை பாதுகாப்பதற்கும் மேலும் வலுப்படுத்துவதற்கும் நிபந்தனையேதுமின்றி எந்தவொரு கட்சியுடனும் குழுக்களுடனும் இணைவதற்கு தயாராகவுள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தி சுட்டிக்காட்டியுள்ளது .

இதேவேளை அரசியலமைப்பில் கொண்டுவரப்பட்டுள்ள 20ஆவது திருத்தச்சட்டம் ஜனநாயகத்துக்கான மரணப்பொறி' என ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.  19ஆவது திருத்தம் மாற்றியமைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் தாக்கத்தை நிச்சயம் அரசாங்கம் எதிர்கொள்ளும் என ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சிறிகொத்தவில்  கட்சி உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

  "தனிநபருக்கான அதிகாரத்தை  நாடாளுமன்றத்துக்கும் மக்களுக்கும் 19 ஆவது திருத்தம் பகிர்ந்தளித்து இருந்தது. அதாவது வேறொரு வழியில் நிறைவேற்று அதிகாரம் இல்லாது ஒழிக்கப்பட்டிருப்பின் 19 ஆவது திருத்தம் குறித்து கவலைப்பட்டிருக்க வேண்டிய அவசியமில்லை.ஆனால் தற்போது தனிநபருக்கு நிறைவேற்று அதிகாரம் தடையின்றி முழுமையாக கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக மாத்திரமே  குறித்த 20ஆவது திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதிக்குரிய அதிகாரம் மற்றும் அந்த முறைமையை முழுமையாகக் கட்டுப்படுத்த முயற்சித்தோம்.  ஆனால் அதற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என்று உயர் நீதிமன்றம் விதித்த தடையால்  மேற்கொள்ள முடியாமல் போனது.' .எனவும் ரணில் தெரிவித்துள்ளார்.  


உத்தேச 20வது திருத்தச் சட்டம் தொடர்பாக சிவில் சமூக பிரதிநிதிகள் சிலர் தெரிவித்த கருத்துக்களை இந்தக்காணொயினூடாக பார்க்கலாம்






No comments:

Post a Comment